அருளாளர்களின் மந்திரமொழி திருவருளில் நிற்பவர்கள் அருளாளர்கள் அவர்களுடைய வாக்கு இறைவனுடைய திருவாக்காகும் அவர்கள் நிறைமொழி மாந்தர் அவர்களுடைய உள்ளத்திலிருந்த

அருளாளர்களின் மந்திரமொழி

திருவருளில் நிற்பவர்கள் அருளாளர்கள். அவர்களுடைய வாக்கு இறைவனுடைய திருவாக்காகும். அவர்கள் நிறைமொழி மாந்தர். அவர்களுடைய உள்ளத்திலிருந்து வெளிப்படும் மறைமொழியே மந்திரமாகும். வேதங்களும், ஆகமங்களும், திருமுறைகளும், பிரபந்தங்களும் அவ்வாறே அருளாளர்களுடைய உள்ளங்களிலிருந்து வெளிப்பட்ட இறைவனுடைய வாக்காகும். அவை "இறைவன் நூல்". நாதன் உரை அவை" (திருமந்திரம்) .

திருஞானசம்பந்தர் ஓர் ஒப்பற்ற அருளாளர். உலகம் கடந்த சிவஞானத்தை உணர்த்தப்பெற்றவர். எனினும், வேத விதிகளின்படி அவருக்கு உபநயனம் செய்வதற்குரிய சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு பிறப்பும் வராத நிலைமையை உடையவர் ஆளுடையபிள்ளையார். உபநயன நிகழ்ச்சியில் ஆயிரம் ஆயிரமாகிய வேதங்களை அங்கு வருகை தந்த பெரியோர்கள் முன்னிலையில் ஓதி அருளுகின்றார். அவர்களுடைய ஐயங்களைப் போக்கும்வகையில் சிந்தையில் கூடிய ஐயப்பாடுகளைத் தெளிய வைக்கின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக முதன்மை பெற்ற எல்லா மந்திரங்களும் தோன்றுவதற்குக் காரணமாகிய சிவபெருமானது ஐந்தெழுத்தே என்று எடுத்து உபதேசிக்கின்றார்.

சிவஞானம் உணரப்பெற்ற காரணத்தினால் திருஞானசம்பந்தர் அந்தவகையில் உலகோருக்கு மந்திரத்தின் வடிவான நிலையை விளக்க முடிகின்றது. சேக்கிழார்பெருமான் இதை அழகாக எடுத்துக்கூறுகின்றார்.

"மந்திரங்க ளானவெலா மருளிச் செய்து

மற்றவற்றின் வைதிகநூற் சடங்கின் வந்த

சிந்தைமயக் குறுமையந் தெளிய வெல்லாஞ்

செழுமறையோர்க் கருளியவர் தெருளு மாற்றான்

முந்தைமுதன் மந்திரங்க ளெல்லாந் தோன்று

முதலாகு முதல்வனா ரெழுத்தஞ் சென்பார்

"அந்தியினுள் மந்திரமஞ் செழுத்து மே"யென்

றஞ்செழுத்தின் றிருப்பதிக மருளிச் செய்தார்"

(பெரிய புராணம் - திருஞானசம்பந்த நாயனார் - 2164)

அருளாளர்களின் திருவாக்கின் தன்மையைப் பற்றி மேலும் சிந்திக்கலாம். அவர்கள் தாம் பெற்ற இறை அனுபவத்தை நமக்குத் தெரிந்த மொழிகளில் சொல்கின்றார்கள். அவர்களுடைய இறை உணர்வு முழுமையும் மொழிகளின் வாயிலாக வெளிக்கொணர வேண்டும். நாம் பேசும் மொழிகள் பல ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்து மாறி வந்துள்ளன. இந்த மொழிகள் நம்முடைய புலன்கள் கருவிகளோடு இணைந்துள்ளன. புலன்களும் கருவிகளும் பொருட்கள்பால் சென்று பொருள் சம்பந்தப்பட்ட அறிவை நமக்குத் தருகின்றன. அந்த அறிவு

நம்முடைய உடலில் ஏற்படும் அனுபவத்தின் அடிப்படையில் அமைகின்றது. இந்த அறிவினை ஒருவரோடு ஒருவர் பரிமாறிக் கொள்ள மொழியினைப் பயன்படுத்துகின்றோம். ஆகவே, பொதுவாக நம்முடைய மொழிகள் புலனறிவு சம்பந்தப்பட்ட அளவே நிற்கின்றன. மொழியைப் பயன்படுத்தி நமது அனுபவங்களை விளக்க முற்படுகின்றோம். மொழி என்பது எழுத்துக்கள், அவற்றின் ஒலி ஆகியவற்றின் சேர்க்கையாகும். ஒலியானது நம் உள்ளிருந்து வெளிவருவதாகும். எனவே, மொழிக்கு இருப்பிடம் நமது உள்ளமாகும். வார்த்தைகளை வாய் வழியாக உச்சரிக்கின்றோம். மொழிக்கு இருப்பிடம் நமது மூளையின் ஒரு பகுதியென்றும், அந்தப் பகுதியில்தான் நமது எண்ணங்கள் எழுத்து வடிவம் பெறுகின்றன என்றும், பிறகு வாய் வழியாக அதற்கான ஒலியை எழுப்புகின்றோம் என்றும், இவ்வாறாக மொழியாற்றல், பேசும் திறன் ஆகியவை உடம்பின் கூறுகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ளன என்றும், மூளையின் இயக்கமே எழுத்து ஒலி வடிவம் பெறுகிறது என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இப்பொழுதுள்ள சொற்களின் அமைப்பையும், அவற்றின் வரலாற்றலையும் ஆராய்ந்து பார்த்தால் விஞ்ஞானிகள் கொடுக்கும் விளக்கம் ஏறக்குறைய சரியானது என்றே கருதத் தோன்றும். புலன்களையும், கருவிகளையும் நாம் பயன்படுத்தி செய்கைகளில் ஈடுபடும்பொழுது தேவையான சொற்றொடர்கள் காலப்போக்கில் இந்தச் செயல்களை விளக்க உருவகம் பெற்றுள்ளன என்பது உண்மைதான் அதாவது, அன்றாட அனுபவத்தை விளக்குவதற்கு நம்மிடையே தேவையான சொற்கள் இருக்கின்றன. அந்தச் சொற்கள் காலக்கிரமத்தில் தேவைக்கேற்ப பல மாறுதல்களையும் பெறுகின்றன. நாம் பொருள்களைப் பற்றிய அனுபவம் பெறப்பெற புதிய சொற்களை உருவாக்கும் ஆற்றலும் நமக்கு உண்டு என்பதால் புதிய சொற்களும் அகராதியில் இடம் பெறுகின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது மொழியமைப்பு மனிதனின் ஆற்றலுக்கு உட்படுகிறது. அந்த ஆற்றலால் மொழி வளருகிறது. பரிணமிக்கின்றது என்றெல்லாம் கருதுவது இயற்கை என்றே தோன்றுகிறது.

மெய்யுணர்வாளர்கள் விஞ்ஞானிகள் விளக்கத்தை முடிவான ஒன்றாக ஏற்பதில்லை. விஞ்ஞானிகளுடைய விளக்கத்திற்கும் அடிப்படையான விளக்கத்தை மெய்ஞ்ஞானிகள் தருகின்றார்கள். அதை நமக்கு அவர்களுடைய அனுபவத்தில் கிடைத்த விளக்கமாகத் தருகின்றார்கள். அருளாளர்கள் நாம் பேசும் மொழியை, சொற்களை மனிதனின் மூளைப் பகுதியிலே உருப்பெற்று அங்கேயே மறைந்துவிடும். பொருட்களாகக் கருதுவதில்லை. மனிதனின் உணர்வுகளுக்கெல்லாம் ஆதாரமாக ஒரு சக்தி உண்டென்றும், அந்தச் சக்தி இறைவனுடைய அச்சமென்றும், அந்தச் சக்தி உடலில் பல நிலைகளில் ஆதார சக்தியாக நின்று, தேவைக்கேற்ப பரிணாமம் பெற்று சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய ஆதாரங்களிலே பொருந்தி நின்று எழுத்தாகவும், ஒலியாகவும், ஓசையாகவும் பரிணமிக்கின்றது என்ற உண்மையை அருளாளர்கள் அனுபவபூர்வமாக நமக்குத் தெரிவிக்கின்றார்கள்.

"பரம்பொருளின் விளக்கங்கள் எத்துனையோ அத்துனை சொற்கள் உள்ளன" என்கிறது ரிக் வேதம்.

"வாக்கு பிரம்மமாகும்" என்கிறது பிரகதாரண்யக உபநிடதம்.

"ஓசை ஒலியெலாம் ஆனாய் நியே" என் திருநாவுக்கரசு நாயனார் அருளிச் செய்தார்.

"பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்

அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே". (திருமந்திரம் - 59)

"தானே அகார உகாரம தாய்நிற்கும்" (திருமந்திரம் - 901)

அருளாளர்களின் அனுபவப்படி மொழியின் தோற்றமும் பிரபஞ்சத்தின் தோற்றமும் இணைந்தே காணப்படுகின்றன. பரம்பொருளே இவற்றின் தோற்றத்திற்கு மூல காரணமாகும். இறைவன் உயிர்கள்பால் அன்பு மேலிட்டு ஐந்தொழில்களை நடத்துவதற்காகப் பிரபஞ்சத்தையும், மொழியையும் அருளிச் செய்கின்றான். உயிர்கள் அறிவு விளக்கம் பெற்று இறைவன் திருவடி சேர வேண்டும். அதுவே பிறப்பின் நோக்கமாகும். அதற்குத் தேவை மலநீக்கம். மலநீக்கத்திற்காக தனு, கரண, புவன போகங்கள் இறைவனால் தந்தருளப்பட்டுள்ளன. அவற்றை உயிர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு வழி செய்யும் வகையில் இறைவன் மொழியையும் அருளிச் செய்கின்றான். மொழிக்கு ஒலியுண்டு, பொருளுண்டு, சொற்பிரபஞ்சம் என்றும், பொருட்பிரபஞ்சம் என்றும் கூறுவார்கள். ஒலியின் மூலமானது நாதம் எனப்படும். நாதம் என்பது எழுத்தோசைக்கு முதன்மையாக நிற்பது. இறைவியின் அம்சமாக விளங்குகிறது. சிவம் தோன்றுவதற்கு முதல் நிலைக்களமாகிய ஓசையே நாதம் எனக் கூறப்படும். நாதமும் விந்துவும் முறையே பேரறிவும், பேராற்றலும் வெளிப்படுவதற்கான தத்துவங்களாகும். சக்தியின் ஆர்வத்தால் தோன்றுவது நாதம். இதனை "சோதி யதனில் பரந்தோன்றத் தோன்றுமாம் தீதில் பரை;அதன் பால்திகழ் நாதமே" என்று திருமந்திர வரிகள் உணர்த்துகின்றன.

உயிரைப் பந்திக்கும் மூல மலம் ஆணவ மலமாகும். ஆணவத்தின் வன்மை தணிந்து அறிவின் விளக்கம் உள்ளத்தில் எழ வேண்டும். இதற்கு உதவுவது மொழி. கலைகளும்ட கூட நின்று உதவுகின்றன. அருளாளர்கள் மொழியையும் வாக்குகளையும் தூய உலகு என்பர். பரம்பொருள் பேரறிவும் பேராற்றலும் கொண்டதாகும். உயிரோ சிற்றறிவும் சிறு ஆற்றலும் கொண்டது. மலத்தில் அழுந்திக் கிடப்பது. மலம் அகல உயிர் கருவி கரணங்களோடு செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட வாக்கும் தேவையாகும். பரம்பொருள் அசையாது. அறிவுப்பிழம்பாகி நிற்கும் அமைதி நிலை சலனமற்றது பிரபஞ்சத் தோற்றம் தொடங்கும்பொழுது மொழியின் இயக்கமும் தொடங்குகின்றது. வாக்குகள் பிறக்கின்றன. ஓம் எனும் மூல மந்திரம் ஒலிக்கத் தொடங்குகின்றது. மற்ற பீஜ மந்திரங்கள் எழும்புகின்றன. ஐம்பத்தோரு எழுத்துக்களும் வடிவம் கொள்கின்றன. திருவருளின் ஆற்றலே இவ்வழுத்துக்களை இயக்குகின்றது. ஐப்த்தோரு எழுத்துக்களும் சக்தியின் வடிவாகக் கொள்ள வேண்டுமென்பார் திருமூலர். வேதங்களும், ஆகமங்களும் இந்த ஐம்பத்தோரு எழுத்தக்களால் ஆகியவை.

ஐம்பத்தோரு அக்கரங்கள் மாறி மாறிப்பதங்களாகின்றன. அவை மாறி மாறி வாக்கியங்களாகின்றன. இறைவன் வேத ஆகமங்களை அவ்வாறே அருளிச் செய்வார். வேத ஆகம வாக்கியங்கள் அல்லது திருமுறைத் திருமொழி நாம் காதினால் கேட்கின்ற ஓசை மட்டும் ஆகாது. அந்த ஓசையின் வழியே எழுந்து நம்முள் ஒரு தெய்வீக உணர்வை உண்டாக்குகின்ற ஆற்றலும் ஆகும். இந்த ஆற்றல் எழுத்துக்கள் மறைந்தாலும், ஓசை நின்றாலும் தொடர்ந்து நமது உள்ளத்திலும், உடலிலும் சில சலனங்களை எழுப்புகின்றன. இந்தச் சலனங்கள் உயிரினைப் பரம்பொருளுடன் இணைந்து போகச் செய்யும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. இந்த ஆற்றல்தான் அருளாளர்களுடைய திருவாக்கிற்கு அடிப்படையாகும்.

விஞ்ஞானரீதியாக நாம் கண்களால் பொருட்களைப் பார்க்கிறோம். காதுகளால் ஓசையைக் கேட்கின்றோம். இது பரு உடம்பிலுள்ள கருவி கரணங்களின் இயக்கத்தால் நடைபெறுகிறது. விஞ்ஞானம் இதனைத் தூல நிலையிலேயே கண்டு ஆராய்ச்சி செய்கிறது.

ஆனால், எந்தவொரு பொருளுக்கும் நுட்ப நிலை உண்டு. அந்தப் பொருளின் உண்மையைக் குறிப்பது அந்த நுட்பநிலை. எழுத்துக்களுக்கும் நுட்ப நிலை உண்டு. நமது காதுகளால் கேட்க முடியாத ஓர் உணர்வினை எழுத்துக்களின் நுட்ப நிலையில் நாம் தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு தெரிந்து கொள்வதற்கு இறையருளுடன் கூடிய பயிற்சி தேவை. ஆழமாகப் பார்க்கும்பொழுது பரு நிலையை விட நுட்ப நிலையே வாக்கினுடைய வலிமையைக் காட்டுகிறது.

விஞ்ஞானிகள் ஒரு பொருளினுடைய பருத் தன்மையிலிருந்து அதனுடைய நுட்பத் தன்மைக்குச் செல்கின்றார்கள். மெய்ஞ்ஞானிகள் நுட்பத்திலிருந்து பருத் தன்மைக்குப் போகிறார்கள். அணுவைப் பிளந்தால் அபாரமான சக்தி வெளிப்படுவதுபோல, நுட்பத்தை உணர்ந்தால் இறைத் தன்மை பெறலாம் என்பது அருளாளர்களுடைய அனுபவமாகும். மொழியைப் பொறுத்தவரையிலும் இதே நிலைதான். நமது உயிரின் மையமாகிய இறை நிலை எழுத்து வடிவமாகவும், ஒலி வடிவமாகவும் பொதிந்து கிடக்கின்றது. நம்முடைய அறிவுக்கும் எட்டாத நிலையில் இருக்கின்றது. பின்னர் சூக்கும நிலையிலிருந்து தூல நிலைக்கு வருகிறது. இவ்வாறு வாக்குத் தன்மை மாறி வருவது உயிரினுடைய தூல அறிவை விளக்கம் பெற உதவுவதற்கேயாகும். அகவே, வாக்கு என்பது இறை அம்சமாயினும், பகுத்துணர்வு நிலை பெற பயன்படுகிறது. இத்தகைய வாக்கு இல்லையெனில் உயிர் ஞானம் பெறமாட்டாது. இப்படிப்பட்ட வாக்குத் தோன்றுவதற்கு முதலோசையாக நாதம் உள்ளடக்கிக் கொண்டிருக்கும். மிக சூக்குமமான நிலையில் இது மேலும் இறைவனால் தூண்டப்படுகின்றது.

இந்த நாதத்தைச் சுத்த மாயையின் நுட்ப நிலை என்று அருளாளர்கள் கருதுகின்றனர். ஆக, சிவசக்தியின் அம்சமாகிய நாதத்தால் வாக்கும், வாக்கினால், உணர்வும், உணர்வினால் பல்வேறு மனோநிலைகளும், அந்த மனோநிலைகளினால் பலதரப்பட்ட அறிவும் நமக்கு விளங்கத் தொடங்ககுகின்றன. ஆகவே, அறிவின் உற்பத்திக்கு நாதமே காரணம் என்பது அருளாளர்களுடைய அனுபவம். நாதம் சூக்கும வாக்காகப் பரிணமிக்கின்றது. சூக்கும வாக்கிலிருந்து

பைசந்தி வாக்கு வந்தடைகிறன்றது. சூக்குமத்தில் உள்ள வாக்கு ஓரளவு தூலமடைகின்றது. மயிலின் முட்டைக்குள் முழுமையான மயிலுக்கு இருக்க வேண்டிய எல்லா நிறங்களுக்குமான கரு அமைந்திருக்கின்றது. அந்த முட்டை பக்குவப்படும்பொழுது இந்த நிறங்கள் யாவும் பிரகாசம் பெறுகின்றன. பைசந்தி வாக்கு சித்தத்தில் உணர்வாய் நிற்கும் என்கிறது சிவப்பிரகாசம்.

"வந்தடைந்து பின்னமாய் வண்ணங்கள் தோற்றம்

வரும் அடைவு படஒடுக்கி மயிலண்ட சலம்நேர்"

என்கிறது சிவப்பிரகாசம். சூக்கும நிலைக்கு அடுத்து பைசந்தி நிலை, அதைத் தொடர்ந்து வாக்கு மத்திமை நிலைக்கு வருகிறது. பேசுபவருடைய உள்ளத்திலே எழும்பும் நுண்ணிய உணர்வுகளுக்கு இந்த வாக்கு ஒரு வாகனமாகின்றது. செவியில் கேட்கப்படாதது. கழுத்திலே எழும்புவது. ஞானிகளால் உள்ளத்திலே உணரப்படும் ஓசையாக உள்ளது. சூக்குமமான நிலையில் அக்ரங்களுடைய வடிவு பிரிந்து தோன்றி விளங்குதலுக்கு இடமாவது.

"உள்உணர் ஓசைஆகி, செவியினில் உறுதல் செய்யாது -

ஒள்ளிய பிராண வாயு விருத்தியை உடையது அன்றி,

தெள்ளிய அக்கரங்கள் சிந்திடும் செயலது இன்றி -

மெள்ளவே எழுவது, ஆகும் மத்திமை, வேறதாயே,"

(சிவஞான சித்தியார் - 41)

வாக்குகளில் நான்காவது வைகரியாகும். தனது செவிக்கு மட்டும் கேட்கப்படுவது சூக்கும வைகரியாகும். தன் செவிக்கும், பிறர் செவிக்கும் கேட்கப்படுவது தூல வைகரியாகும். இது மனத்தில் எழும்பும் சொல்லுக்கு ஒலி வடிவம் கொடுப்பதாகும். பேசுபவனுக்கும் கேட்பவனுக்கும் இடையே பகுத்தறிவிற்கான உணர்வினைத் தோற்றுவிப்பதாகும். கழுத்திலிருந்து எழும்பி வாயில் நின்று வெளிவருவது. வைகரி நிலையில் அகங்காரமும் புத்தியும் சேர்ந்து செயல்படுகின்றன.

"வைகரி செவியில் கேட்ப தாய், அத்த வசனம் ஆகி,

மெய்தரும்"

என்கிறது சிவஞான சித்தியார். வாக்கிற்கு மூலம் பிரணவம். "எம்பிரான் ஓர் எழுத்தே", "ஓரெழுத்தாலே உலகெங்கும் தானாகி" என்பது திருமந்திரம். பிரணவமே திருவைந்தெழுத்தாகும். மொழியினுடைய ஐம்பது எழுத்துக்களும் திருவைந்தெழுத்தில் அடங்கும். வேதங்களும் ஆகமங்களும் ஐம்பது எழுத்துக்களில் அடங்கும். பிரபஞ்சத்திற்குக் காரணமான பரம்பொருள் மிக நுட்பமான நிலையில், பிரணவத்திலும் ஐந்தெழுத்திலும் உள்ளத்திலே சதா ஒலித்துக் கொண்டிருக்கும்.

"ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்

ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும்

ஐம்ப தெழுத்தின் அடைவை யறிந்தபின்

ஐம்ப தெழுத்தே அஞ்செழுத் தாமே". (திருமந்திரம் - 2698)

ஒரு பொருளுக்கு உருவம் உண்ட என்கிறபோது அதற்கான நுட்ப நிலை அருவமாய் இருப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் அணுக்கள் நிரம்பியுள்ளன என்பது விஞ்ஞானம். அதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனாலும், அணுக்களை நம் கண்களால் காண முடிவதில்லை. அதேபோல, நாம் பேசும் தூல வாக்கிற்குச் சூக்கும நிலை உண்டு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அத்தகைய உணர்வும் சூக்கும நிலை வாக்கும் இணைந்தே நிற்கின்றன. எல்லாவிதமான சூக்கும வாக்குகளுக்கும் மூலமாகிய பொருள் ஓங்காரமாகும். ஓங்காரத்தில் எல்லாம் அடங்கி நிற்பது. இதை உணரும் வகையில் பயிற்சி பெற வேண்டும். ஓங்காரத்தில் பலவகையான எழுத்துக்களும், நூல்களும் அடங்கியுள்ளன. அதன் இயல்பு அறிந்து பயிற்சி பெறுவோர்க்கு நல்ல பேறுகளும், வீட்டுப் பேறும் கிடைக்கும் என்பார் திருமூலர்.

"ஓமெனும் ஓங்காரத் துள்ளே யருமொழி

ஓமெனும் ஓங்காரத் துள்ளே யுருவரு

ஓமெனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்

ஓமெனும் ஓங்காரம் ஓண்முத்தி சித்தியே". (திருமந்திரம் - 2676)

அருளாளர்களுடைய திருவாக்கு. அருள்வாக்கு, உள்ளத்தின் மையத்திலிருந்து இறையுணர்வின் தொடக்கமாகிய நாத அனுபவத்திலிருந்து வெளிக் கிளம்புகின்றது. மொழி மொழியாக மட்டும் பயன்படுத்தப் படவில்லை. அந்த மொழியில் இறை சக்தி, ஆன்மிக ஆற்றல் இணைந்து நிற்கின்றது. அந்த மொழியினுடைய ஒலி கேட்போருடைய உள்ளத்தை நேரடியாகத் தாக்கவல்லது. சிற்றறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வு நிலையிலிருந்து அது பேரருவி போல வெளிக்கிளம்பிக் கேட்போர் மனதையெல்லாம் புனிதப்படுத்துகிறது. அதே நேரத்தில் அருளாளர்களுடைய திருவாக்கு எளிமையும், தெளிவும் மிக்கது. அறிவு நிலையைத் தாண்டி உணர்வு நிலையில் இயங்குவதால் அவர்களுடைய திருவாக்கு சொற்கள் தாங்கி நிற்கின்ற கருத்துக்களுக்கு அப்பால் ஆழம் கொண்டதாக அமைகின்றது. எளிமை, தெளிவு, தூய்மை, ஆழம் இத்துணை இயல்பு கொண்டது அருளாளர்களுடைய திருவாக்கு.

அறிவுரீதியில் அவர்களுடைய அருள்வாக்கை ஆய்வு செய்தால் அவற்றிலே பொதிந்து கிடக்கும் உண்மைகள் புலப்படாது. பகுத்தறிவினைத் தள்ளி வைத்துவிட்டு அந்தத் திருவாக்குகளுக்கு நம்மையே அர்ப்பணம் செய்து கொண்டால் அவற்றின் உண்மைக் கருத்துக்கள் நம்முடைய உள்ளத்திலே படியப்படிய அறியாமையாகிய இருள் நீங்கி ஓர் புத்தொளி தோன்றும். இந்த

புத்தொளியில் மூழ்கி நிற்கும் உயிரானது தன்னை மறந்து உணர்வு நிலையில், சலனமின்றி அருள்வாக்கின் நுண்ணிய நிலையில் அமைதியடையும். "பெற்றார் உலகில் பேசாப் பெருமையே" என்கிறது திருமந்திரம்.

பரம்பொருளின் இயல்பான நிலை மௌனம் என்று அருளாளர்கள் கூறுகின்றனர். தற்போதும் இழந்து இறையுணர்வோடு கலந்து நிற்கும் நிலையை மோன சமாதி என்று அருளாளர்கள் குறிப்பிடுகின்றனர். மோன சமாதி பரம்பொருளின் இயல்பான நிலை என்றால், வாக்கு பரம்பொருளின் தோற்ற நிலையாகும். தோற்றம், உற்பத்தி, வளர்ச்சி, ஓடுக்கம் இவையெல்லாம் வாக்கின் பல்வேறு இயக்க நிலைகளாகும்.

மொழியின் உண்மை நிலையை நன்கு உணர்ந்தவர்கள் அருளாளர்கள். மொழியிலே இறைவனைக் காண்பதால் அவர்களுடைய அருள்வாக்கு இறை உணர்வை பிரதிபலிக்கின்றது.

சேக்கிழார் பெருமான் ஆனாய நாயனார் புராணத்தில் நாயனார் குழலூதிச் சிவபெருமானது திருவைந்தெழுத்தை இசைப்படுத்தி வாசிக்கும்பொழுது அகில சராசரங்கள் மட்டமல்ல இறைவனாரே கேட்டு இன்புற்றதாகக் கூறுகின்றனர். ஆனாய நாயனார் ஓர் மெய்யன்பர். அவருடைய சூழலில் எழும்பிய இசை அன்புநிறைந்த மனத்தால் விளைந்தது. அது திருவைந்தெழுத்தை மையமாகக் கொண்டது. திருவைந்தெழுத்திற்கு மலம் நீக்கும் வலிமையுண்டு. அதனுடைய இசை உயிர்களின் உண்மையான இன்பத்தைப் பெருக்கம். அத்தகைய இன்பம் உயிர் வகைகள் எல்லாவற்றையும் தொட்டது. அதுமட்டுமல்ல உலகத்தையும் நிறைவித்து, வானுலகத்தையும் தன் வசம் கொண்டது. இறைவனுடைய திருச்செவியின் பக்கத்தில் அணையும்படி பெருகிற்று. இது ஓர் அருளாளருடைய பெருமைமிக்க இசை நிலையாகும்.

"மெய்யன்பர் மனத்தன்பின் விளைந்தவிசைக் குழலோசை

வையந்தன் னையுநிறைத்து வானுந்தன் வயமாக்கிப்

பொய்யன்புக் கெட்டாத பொற்பொதுவி னடம்புரியும்

ஐயன்றன் றிருச்செவியி னருகணையப் பெருகியதால்".

(பெரிய புராணம் - ஆனாய நாயனார் புராணம் - 962)