"அருள் அனுபவம்" பரம்பொருளைப் பற்றிய அறிவு பேரறிவு ஆகும் இறைவனுடைய திருவருளால் அருளாளர்கள் ஒப்பில்லா இறை அனுபவம் உணர்வு நிலையில் பெறப்படுகிறது இந்த அனுபவத்தின் வ

"அருள் அனுபவம்"

பரம்பொருளைப் பற்றிய அறிவு பேரறிவு ஆகும். இறைவனுடைய திருவருளால் அருளாளர்கள் ஒப்பில்லா இறை அனுபவம் உணர்வு நிலையில் பெறப்படுகிறது. இந்த அனுபவத்தின் விளைவாக அருளாளர்கள் பேரறிவைப் பற்றிய விளக்கம் பெறுகின்றார்கள். பேரறிவினுடைய விளக்கம் அவர்களுடைய உள்ளங்களை உருக்கி மலங்களை நீக்கித் தூய்மைப்படுத்திச் சொல்லொணா ஆனந்தத்தைத் தருகிறது. இத்தகைய ஆனந்தம் உடலைச் சார்ந்த கருவி கரணங்களால் நாம் பெறக்கூடிய இன்பத்தைப் போன்றது அன்று. பேரறிவினால் கிடைக்கும் ஆனந்தத்தைப் பெற்றபின் உயிரானது பேரறிவின் நிலையை உணர்ந்து கொள்கின்றது. பேரறிவின் தன்மையைப் பெறுகிறது. பேரறிவாக மாறிவிடுகின்றது. அத்தகைய பேரறிவு பேரறிவுதான். அதற்கு எதிராக நாம் "அறிவு அறிவு" என்று பறைசாற்றி வரும் சிற்றறிவு சிற்றறிவுதான்.

"சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ

சுத்த வெளியிற் சுடரிற் சுடர்சேரும்" (திருமந்திரம் -135)

அருள் அனுபவத்தை அடைய உயிருக்குத்தகுதி ஏற்பட வேண்டும். அந்தத் தகுதி பல பிறவிகள் பெற்று பின்னர்த்தான் கிடைக்கின்றது. ஒவ்வொரு பிறவியிலும் உயிர்கள் புரியும் வினை காரணமாக, உயிரானது பல பிறவிகள் எடுத்து வினைகளின் வலிமையை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. வினைக்கேற்ப உயிருக்கு உடலைக் கூட்டுவிப்பது திருவருள்தான். உடலின் சேர்க்கையாலேதான் உயிருக்கு வினைகளைத் தீர்க்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. பின்னர் தக்க நேரத்தில் அந்த உயிருக்கு அருள் அனுபவத்தை அளித்துத் தனது திருவடிகளிலே உயிரைப் பதித்துக் கொள்வதும் இறைவனுடைய திருவருளே.

"விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு

தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து

உண்ணின்று உருக்கி ஓர் ஒப்பிலா ஆனந்தக்

கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே". (திருமந்திரம் - 113)

"களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி

களிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக்

களிம்பணு காத கதிரொளி காட்டிப்

பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே". (திருமந்திரம் - 114)

பல பிறப்புகள் எடுத்து, இளைத்து உயிர் உலகப் பொருட்களில் நாட்டம்

செலுத்துவதில் தன்மை குன்றி, இறை அனுபவத்தைப் பெற ஏங்கி நிற்பதும் இறைவனுடைய அருளாலேதான் நடைபெறுகிறது. மாணிக்கவாசகப் பெருமான் தான் அனுபவித்ததை -

"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்" (திருவாசகம் - சிவபுராணம்)

என்று எடுத்துக் கூறுவார். அறியாமையால் கட்டுண்டு நிற்கும் உயிரைத் திருமூலர் ஒரு குருட்டுக் கிழவனுக்கு ஒப்பிடுகிறார். வயோதிகத்துடன் குருட்டு நிலையும் சேர்ந்தால் அந்த உயிர்படும் பாட்டைச் சொல்ல முடியாது. உயிரானது சோர்ந்து, இளைத்து, தன்னம்பிக்கை இழந்து நிற்கும் நிலையாகும். தனது குறைபாடுகளைத் தெரிந்து கொண்டு "இறைவனே, அறியாமையால் மயங்குகின்றேன். உன்னைத்தவிர புகலிடம் வேறான்றும் இல்லை. இறைவனே என்னைத் தாங்கிக்கொள்ளே" என்று மணிவாசகப் பெருமான் தான் துணையற்று அல்லல்படுவதை இறைவன்முன் எடுத்து வைத்தது போன்ற நிலையை ஒவ்வொரு உயிரும் பல பிறவிகள் எடுத்த பின்னர் அடையும்பொழுது, அதுவரை தனது ஆற்றலை உயிர் பக்குவப்படுத்த வேண்டிய வழிகளிலே செலுத்திய இறைவனின் அருட்சக்தி பின்னர் உயிருடைய அறியாமையைப் போக்கி ஆட்கொள்கிறது.

"இருட்டறை மூலை யிருந்த குமரி

குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்

குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி

மருட்டி யவனை மணம்புரிந் தாளே". (திருமந்திரம் - 1514)

அறியாமையாவது தன்னைப் பற்றியும், தன்னை ஆட்கொண்ட பரம்பொருளைப் பற்றியும் தன்னுள் உணர்ந்து கொள்ளாமல் பிற பொருள்களை அறிய வேண்டும் என்கி நாட்டத்துடன் கருவி கரணங்களைப் பயன்படுத்தி ஒருவித மயக்க அறிவிலே தன்னை ஈடுபடுத்திக் கொள்வதாகும். அறிவாவது திருவருளை உணர்ந்து, திருவருளில் மூழ்கி, திருவருளுக்கு அப்பால் வேறொன்றுமில்லை என்கிற முடிந்த முடிவிற்கு வந்து, அந்தத் திருவருளே தன்னை ஆட்டுவிக்கின்றது என்கிற உண்மையைக் கண்டறிந்து, அதனால் ஏற்படும் தெளிவாக ஞானத்தில், ஆழ்ந்த அமைதியில், சிறந்த மன நிறைவில், மாறாத ஆனந்தத்தில் தனித்து நிற்பதாகும்.

"அருளால் எவையும்பார் என்றான் - அத்தை

அறியாதே சுட்டிஎன் அறிவாலே பார்த்தேன்;

இருளான பொருள்கண்ட தல்லால் - கண்ட

என்னையும் கண்டிலன் என்னேடி தோழி"

என்பார் தாயுமானவர். அருள் அனுபவம் உயிருக்கு இறை உணர்வைத் தருகிறது. ஒரு உயிருக்கு அருள் அனுபவம் திடீரென்று வருவது போலத் தோன்றலாம். ஆனால் அது தோற்றமே. உண்மையில் எங்கும் பரவி நிற்கும் திருவருள் எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கிறது. உயிரைப்பாசத்தில் பொருத்துகிறது. பாசத்தைப் பற்றாகக் கொண்ட உயிரை அதனிடமிருந்து வேறுபடுத்துகின்றது. அந்தப் பாசத்தில் உள்ள பற்று நீங்கியவுடன் உயிரை இயல்பாகவே பரம்பொருளுடன் பொருந்தும்படி செய்கின்றது. இறைத் தன்மையைத் தருகின்றது. இந்த உணர்வினைப் பெற்ற அருளாளர்கள் அருளின் நிலைபெற்ற தன்மையையும், உயிரைப் படிப்படியாக பக்குவமடையச் செய்யும் ஆற்றலையும் அருளிலிருந்து நம்மைப்பிரித்து வைப்பது நமது அறியாமையே என்றும் உணர்ந்து கொள்கிறார்கள். திருவருளை நம்முடன் சேர்த்துக் கொள்வது நம்முடைய முயற்சியை ஒட்டியே உள்ளது என்பதும் தெளிவாகும்.

"பாசத்தி லிட்ட தருணந்தப் பாசத்தின்

நேசத்தை விட்ட தருளந்த நேசத்தில்

கூசற்ற முத்தி யருளந்தக் கூட்டத்தின்

நேசத்துத் தோன்றா நிலையரு ளாமே". (திருமந்திரம் -1802)

எனவேதான் அருளிலும் மேம்பட்டது யாதுமில்லை என்கிறது திருவருட்பயன்.

"அருளின் பெரிய (து) அகிலத்து வேண்டும்

பொருளின் தலைஇலது போல்" (செய்யுள் - 31)

ஒரு நல்ல பாற்கடலில் வசிக்கும் மீன் அந்தப் பாலைக் குடித்துத் தனது பசியைத் தீர்த்துக் கொள்ளாமல் அதனினும் சிறிய பிராணிகளை உண்டு மகிழ்வது போல உயிர்கள் உடலுடன் சேர்ந்து, உடல் இன்பத்தில் மூழ்கித்தாம் அருள் எல்லைக்குள் இருந்தும் அந்த அருளை அனுபவிக்காமல் நிற்குமாயின் அது அருளுக்கு இழப்பன்று. உயிருக்கே இழப்பாகும்.

"பால்ஆழி மீன்ஆளும் பான்மைத் (து) அருள் உயிர்கள்

மால்ஆழி ஆளும் மறித்து". (திருவருட்பயன் - செய்யுள் 34)

அருளாளர்கள் தாங்கள் பெற்ற இறை அனுபவத்தைப் பலவாறாக விளக்குகின்றார். "இறைவனைக் கண்டுகொண்டேனே" என்று கூறுவது அவர்களுடைய இயல்பாகும். அவர்கள் காண்பது புறக்காட்சியாகவும் இருக்கலாம். அகக்காட்சியாகவும் இருக்கலாம். அண்டமெலாம் பரந்து நிற்கும் இறைவனைக் கருவி கரணங்கள் காணும் வகையில் அவர்கள் அனுபவித்ததுண்டு அல்லது சீரிய தவத்தால், நோன்பால், யோகத்தால் தங்களுடைய உள்ளங்களிலே அவர்கள் இறை உணர்வினைப் பெற்று அனுபவிப்பதும் உண்டு. திருமூலர் பல மந்திரங்களில் தான் பெற்ற அனுபவத்தைக் கோடிட்டுக் காண்பிக்கின்றார். அவர் அனுபவித்த காட்சிகள் பெரும்பாலும் அகக்காட்சிகளாக இருந்துள்ளன. அதாவது, திருமூலர் இறைவனைத் தம்முள் தரிசித்துள்ளார். யோக சாதனையால் இறைவன் அருள்பெற்ற திருமூலர் திருவடிப் பேற்றினைத் தம்முள்ளேயே பெறுகிறார்.

"செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்

அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்

தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்

ஒப்பில் எழுகோடி யுகம்இருந் தேனே". (திருமந்திரம் - 74)

தன்னுள் இருக்கும் எல்லா ஆற்றலையும் குவித்து, சீவ கரணங்களுக்கு இடம் கொடுக்காமல், பார்வதி தேவியோடு கூடிய பரமேஸ்வரனை இடைவிடாமல் தியானித்து, உடலைச் சார்ந்த கரணங்களைக் கடந்து, மறைந்து நிற்கும் பரம்பொருளைக் கண்டுகொண்டேனே என்கிறார் திருமூலர். இதிலும் அகக்காட்சியின் தொடர்பையே காணலாம்.

"தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து

முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்

புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து

கலைநின்ற கள்வனைக் கண்டுகொண் டேனே". (திருமந்திரம் - 2597)

"இந்திரியங்களின் வயப்பட்டிருந்தேன். அவைகளால் தாக்கப்பட்டு கட்டுண்டு கிடந்தேன். என் மனத்தை என்னால் அடக்க இயலவில்லை. அப்போது இறைவன் என்னை அடங்கும்படியாக என் மீது தனது திருவடியைப் பதிப்பித்தான். எனது உள்ளளியைப் பெருக்கி என்னைப் பேரின்பத்தில் திளைக்கச் செய்தான். நன்மைதரும் ஞான நடனத்தைப் புரியும் சிவபெருமான் என் உள்ளத்தில் நிலைபெற்று விளங்கி என்னை அசைவற்ற, ஒடுங்கிய நிலையில் இருக்கச் செய்தான்" என்ற திருமந்திர அனுபவம் அகக்காட்சியின் அடிப்படையில் அமைந்துள்ளது.

"அடங்காத என்னை அடக்கி அடிவைத்

திடங்கான் பரானந்தத் தேஎன்னை இட்டு

நடந்தான் செயும்நந்தி நன்ஞானக் கூத்தன்

படந்தான்செய் துள்ளுட் படிந்திருந் தானே". (திருமந்திரம் - 2741)

இறைவனும் சக்தியும் இணைபிரியாமல் நின்று ஊழிதோறும் வழி உயிர்களெல்லாம் உய்யும்பொருட்டுப்படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் போன்ற தொழில்களை நடத்தும் மேன்மையை என்னுடைய ஒளிமயமான அறிவில் உணர்ந்து கொண்டேனே என்கிறார் திருமூலர். இதுவும் ஒரு அகக்காட்சிக்கு சான்றாகும்.

"இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்

நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்

படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்

அடங்கலுந் தாமாய்நின் றாடுகின் றாரே". (திருமந்திரம் - 2768)

யோக மார்க்கத்தில் சென்று முழுமையகைக் கண்டவர் திருமூலர். இதுவும் ஒரு அகக்காட்சிக்குச் சான்றாகும்.

"இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்

நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்

படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்

அடங்கலுந் தாமாய்நின் றாடுகின் றாரே". (திருமந்திரம் - 2768)

யோக மார்க்கத்தில் சென்று முழுமையைக் கண்டவர் திருமூலர். சிவமும் சக்தியும் நம்முள்ளே நடமாடுகின்றன. நமது ஆற்றலைப் புறப்பொருட்களில் வீண் செய்யாமல், தட்டி எழுப்பி யோக சாதனை வழியாகச் சிவத்துடன் இணைத்துக் கொள்ளுவது சிவானுபவம் பெறுவதாகும். சிவமாகிய மந்திரம் ஒளிவிடும் மந்திரம். சீவனும் ஒளிதன்மை வாய்ந்ததே. சீவ ஒளியும், சிவ ஒளியும் பொருந்தி நிற்பது யோகத்தின் முடிவாகும். எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் நமது உள்ளத்திலும் வீற்றிருக்கின்றது. எந்த அருளானது உடலையும் உயிரையும் சேர்த்து, உயிரின் இயக்கத்திற்கு உதவி புரிகிறதோ அந்த அருளும் நமது உள்ளத்தில் வீற்றிருக்கின்றது. அந்த அருளின் தன்மையை நம்முள் விளக்கிக் கொள்வது இறைவன் இருக்கும் இடத்தை அறிந்து கொள்வதாகும். அந்த இறைவன் நமது உயிரில் உயிருக்கு உயிராக நிற்கிறான். நமது உயிரும் அறிவுமயம் என்று நமக்கு அறிவிக்கின்றான். அறிவுமயமான உயிர் பேரறிவான இறைவனுடன் இணைந்து கொள்வது நம்முடைய சூக்கும உடலாகிய சிற்றம்பலத்தில் நடைபெறுகிறது. இதை நான் அனுபவத்தால் கண்டுகொண்டேனே என்கிறார் திருமூலர்.

"நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி

உற்றுற்றுப் பார்க்க வொளிவிடு மந்திரம்

பற்றுக்குப் பற்றாய்ப் பரம னிருந்திடஞ்

சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே". (திருமந்திரம் - 2770)

"பல காலம் எனது கருவி கரணங்கள் தங்களுடைய இயல்பான பணியைச் செய்து வந்தன. இறைவனுடைய அருள் கிட்டியது. புறக்கண்கள் மூடின. அகக்கண்கள் விழித்துக் கொண்டன. அகக்ண்களால் நான் பார்க்கும்பொழுது என்னுடைய தலைவனை, ஒப்பற்றவனைப் பொன்போன்ற திருமேனியை உடைய, சடைபொருந்திய சிவபெருமானை என்னிடம் பொருந்தக் கண்டேன். 'நீயே அறிவுமயமானவன்' என்று சிவபெருமான் என்னுள் உணர்த்தி அருளுவதையும் கண்டேனே" என்கிறார் திருமூலர்.

"மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தனுந்

தன்னுற்ற சோதி தலைவன் இணையிலி

பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்

என்னுற் றறிவனான் என்விழித் தானே". (திருமந்திரம் - 2859)

"பரம்பொருளாகிய இறைவன் அருள்மயமாக நின்று உயிர்களுக்கு நன்மையைத் தருகின்றான். அத்தகைய பராபரம் என் உள்ளத்தோடு ஒன்றி நிற்பதை நான் உணர்வுபூர்வமாக அறிந்து கொண்டேன். அத்தகைய சிவபெருமானை அடைவதாகிய வழியையும் நான் என்னுள் உணர்ந்தேன். பசு பாச ஞானத்திற்கு அப்பால் அடைய வேண்டிய பதி ஞானமே உயிரையும், இறைவனையும் ஒன்றாக்குகிறது என்றும் உணர்ந்து கொண்டேன். அந்த உணர்வு நிலையில் சிவனும் சீவனும் ஒன்றி நிற்பதை நான் அறிந்தேன். அவ்வாறு அறிந்ததன் காரணமாகச் சிவமயமான உணர்வினைப் பெற்று, சிவமயமாய் எங்கும் தானாகிச் சிவன் செயல் யாவையும் நோக்கி முக்காலத்து இயல்பையும் குறித்து, இழவு வந்த சோம்பல் நிலையில் நின்றேன்." இதுவும் திருமூலர் பெற்ற அனுபவமாகும்.

"ஒன்றிநின் றுள்ளே யுணர்ந்தேன் பராபரம்

ஒன்றிநின் றுள்ளே யுணர்ந்தேன் சிவகதி

ஒன்றிநின் றுள்ளே யுணர்ந்தேன் உணர்வினை

ஒன்றிநின் றேபல வூழிகண் டேனே". (திருமந்திரம் - 2953)

அருளாளர்கள் பெறும் அருள் அனுபவம் அறிவின் அடிப்படையில் அமைந்ததன்று. அவர்களுடைய கருவி கரணங்கள் இந்த அனுபவத்தில் ஈடுபடுகின்றன. ஆனால், இந்தக் கருவி கரணங்கள்தான் இந்த அனுபவத்தைப் பெற்றன என்று கூறிவிட முடியாது. உண்மையில் கருவி கரணங்கள் ஆற்றல் என்ற நிலையில் நிற்கின்றன. அறிவின் எல்லைக்குள் தங்காத ஒன்று கருவி கரணங்களைத் தாக்குகின்றது. அவற்றைச் செயலற்ற நிலைக்குக் கொண்டு போகின்றது. மீந்த உயிரெல்லாம் உணர்வெல்லாம் எல்லையற்ற பரம்பொருளில் மூழ்கி நிற்கின்ற அனுபவமாகும். அருளாளர்கள் கண்டேன் என்பார்கள். கேட்டேன் என்பார்கள், தொட்டேன் என்பார்கள், கடித்தேன், விழுங்கினேன் என்றும் கூறிக்கொள்வார்கள். இதுபோன்ற சொற்கள் அவர்கள் பெற்ற அனுபவத்தின் அளவையும், ஆழத்தையும் எடுத்துக்காட்டுகிறது. நாம் இந்த அனுபவத்தைப் பெறவில்லை. எனவே, அவர்கள் பயன்படுத்தும் சொற்கள்

நமக்குப் புரிவதில்லை. அவர்கள் உள்ளத்திலே தோன்றும் திருவுருவும் நமது கண்களுக்குப் புலப்படுவதில்லை. இறைக்காட்சியை அவர்கள் காணும்பொழுது அவர்களுடைய உடலின் இயக்கத்தைப் பற்றிய நினைப்பு மறைந்துவிடுகின்றது. ஆனால், உடலின் சேட்டைகளிலேயே எப்போதும் ஈடுபட்டிருக்கும் நமக்கு உள்ளத்தின் நிலை மறைந்து நிற்கிறது.

நமது ஊரிலிருக்கும் திருக்கோயிலில் ஆண்டுத் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. சிவபெருமான் பார்வதி தேவியோடு விடையேறித் திருவுலா வருகிறார். ஏராளமான பூக்களாலும், ஆபரணங்களாலும், பட்டாடைகளாலும் அலங்கரிக்கப்பட்டு இறைவன் திருவுலா வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் காட்சியைப் பார்க்கிறார்கள். அவர்களுடைய உள்ளங்களில் பலவிதமான எண்ணங்கள் தோன்றுகின்றன.பலர் பூ வேலையையும் நகை உடை அலங்கார எழிலைக் கூறிக் கொள்கின்றார்கள். அவர்களுடைய கண்களுக்குச் சிற்பங்களின் எழிலும் அலங்காரத்தின் அழகும் மட்டுமே தென்படுகிறது. வேறு சிலர் திருவுலாக் காட்சியைக் காண்கிறார்கள். திருக்கோலத்தைக் கண்டு மகிழ்கிறார்கள். ஆனால், அவர்கள் அத்துடன் நிற்கவில்லை. அவர்களுடைய பார்வையில் வடிவழகு மட்டும் நிற்கவில்லை. "நமக்கெல்லாம் இறைவன் நம்மை ஆண்டு கொண்டவன். அவனைத் தொழுவோம்" என்று அவர்கள் கருதுகிறார்கள். கருதலுடன் அவர்களுடைய கைகள் இறைவனைக் கும்பிடுகின்றன. வேறு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் இறை வடிவத்தைப் பார்க்கின்றார்கள். அலங்காரத்தைப் பார்க்கிறார்கள், இறைவனைப் பார்க்கிறார்கள். அதற்கு மேலும் அவர்கள் உள்ளம் செல்கிறது. இறைவன் மீது அழிவிலாத அன்பினால், காதலினால் உந்தப்பட்டவர்கள் அவர்கள், அவர்கள் வெறும் கண்களால் மட்டும் காண வேண்டியதில்லை. கண்களை மூடிக்கொண்டாலும் அவர்களுடைய மனத்திலே, சிந்தையிலே, உள்ளத்திலே இறைவன் நிறைந்து நிற்கின்றான். எப்படி நிற்கின்றான்? காரைக்கால் அம்மையார் விடை அளிக்கின்றார். அவர் இறைவனின் திருவுலாவைக் காண வந்த மூன்றாவது வகையினைச் சேர்ந்தவர். இறைவனைத் தம்முள்ளேயே கண்டவர். அவருடைய உள்ளத்திலே இறைவன் சோதிப் பிழம்பாகத் தோன்றுகின்றான். திருமாலும் அயனும் சென்று, முயன்று கண்டறியாத பிரபஞ்சத்தின் முதன்மைப் பொருளை காரைக்கால் அம்மையார் தனது சிந்தையுளே சோதியாகக் காண்கிறார்.

"காண்பார்க்கும் காணலாம் தன்மையனே;கைதொழுது

காண்பார்க்கும் காணல்ஆம்;காதலால் - காண்பார்க்குச்

சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே, தொல்உலகுக்கு

ஆதியாய் நின்ற அரன்". (அற்புதத் திருவந்தாதி)

நமது நாயன்மார்கள் அனைவருமே இத்தகைய அனுபவத்தைப் பெற்றவர்கள். இறைவன் அவர்களுடைய உள்ளங்களிலே குடிபுகுந்திருப்பதும், அதை அவர்கள் உணர்ந்திருப்பதும் அல்லாமல் அவர்களுடைய செய்கைகளுக்கு, அவர்களுடைய இயல்பான அணுகுமுறைகளுக்கு விளக்கம் காண்பது கடினம்.

ஞானசம்பந்தப் பிள்ளையார் திருக்குளத்தின் கரையில் நின்று அருள் அனுபவ நேரம் வந்தடைந்தமையால் "அம்மே!அப்பா!" என்று அழத்தொடங்கியபோது சிவபெருமான் தேவியாருடன் அங்கே வந்து ஞானப்பால் அளித்தது சேக்கிழார் பெருமானின் வரலாற்றுக் காட்சியாகும். திருக்குளத்தில் நீராடி வீட்டுப் பிள்ளையாரின் தந்தையாகிய சிவபாத இருதயர் "யாவர் அளித்த பால் அமுதினை c உண்டாய்?" என்று கோபிக்கும்போது ஞானப்பிள்ளையார் உணர்வறிய மெய்ஞ்ஞானத்தைத் தாம் உணர்ந்து நிலையில், ஆனந்தக் கண்ணீர் கண்களிலிருந்து பாய, தனது சிறு திருவிரலைச் சுட்டிக்காட்டித் திருக்கோயிலில் அமர்ந்துள்ள இறைவனை எதிரில் காட்டி, தனது சொல்லொணா அனுபவத்தைக் கேட்டுப்பல உயிர்கள் உய்யும்பொருட்டு "தோடுடைய செவியன்" என்னும் திருப்பதிகம் பாடி "எம்மை இதுசெய்தவன் பிரான் இவன் அன்றே" என்று தந்தையாருக்கு அறிவிக்கின்றார். தனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் இவன் என்று கூறும் ஞானப்பால் உண்ட பிள்ளையார் தான் கண்ட பிள்ளையார் தான் கண்ட புறக்காட்சிக்கு மேலாகத் தான் பெற்ற மெய் அனுபத்தைச் சிறப்பித்துப் பேசுவது பிள்ளையாருடைய ஒப்புயர்வற்ற ஆன்மிக அனுபவத்தை நன்கு விளக்கிக் காட்டுகிறது.

"விண்ணிறைத் பெருகொளியால் விளங்குமழ விடைமேலே

பண்ணிறைந்த வருமுறைகள் பணிந்தேத்தப் பாவையுடன்

எண்ணிறைந்த கருணையினா னின்றாரை யெதிர்காட்டி

யுண்ணிறைந்து பொழிந்தெழுந்த வுயர்ஞானத் திருமொழியால்"

(பெரிய புராணம் - 1972)

"செம்மைபெற வெடுத்ததிருத் "தோடுடைய செவிய" னெனும்

மெய்ம்மைமொழித் திருப்பதிகம் பிரமபுர மேவினார்

தம்மையடை யாளங்க ளுடன்சாற்றித் தாதையார்க்

"கெம்மையிது செய்தபிரா னிவனன்றே" யெனவிசைத்தார்"

(பெரிய புராணம் -1974)

அப்பர் பெருமான் வாழ்க்கையிலும் அருள் அனுபவக் காட்சி நிகழ்கிறது. திருவையாற்றில் பெருமான் திருக்கயிலாயக் காட்சி பெறுகின்றார். சேக்கிழார் பெருமானின் திருவாக்குப்படி திருவையாற்றுத் திருக்கோயில் கயிலை மலையாக மாறுகிறது. சித்தர்களும், ஞானிகளும் நெருங்கி நிற்க, கணங்கள் போற்ற நந்தி தேவர் நடுவில் நிற்க, வெள்ளி மாமலையின் மீது பார்வதி தேவி அருகில் நிற்கச் சிவபெருமான் கயிலைக்காட்சி அருளினார். இந்தப் பெரும் காட்சியை அப்பர் அடிகள் கண்களால் பருகினார், பாடினார், ஆடினார், அழுதார், திருத்தாண்டங்களால் போற்றித் துதித்தார். இவ்வாறு அப்பர் அடிகள் இறைவனை அனுபவித்துக் கொண்டு நின்றார். சிறிது நேரம் கழித்துத் திருக்காட்சி இறையருளால் மறைந்தது. காட்சி மறைந்ததால் அப்பர் அடிகள் மிக்க வருந்துகிறார். இதுவும் இறைவனுடைய திருவருளோ என்று வியந்து அப்பர் பெருமான் பதிகம் பாடுகின்றார். திருக்கயிலாயக் காட்சியின் தெளிவில் திருநாவுக்கரசர் சராசரங்களின் ஒருமைப்பாட்டினையும் அவற்றில் முழுமையாக இறையருள் பதிந்து இருந்த தன்மையையும் காண்கிறார். பரம்பொருளையே பற்றுக்கோடாகக் கொண்ட அப்பருக்கு இந்த உணர்வு ஏற்பட்டதில் வியப்பொன்றுமில்லையே.

மணிவாசகப் பெருமானுக்குக் அருளிய காட்சி திருப்பெருந்துறையில் குருந்த மர நிழலில் வாய்த்த செய்தியைத் திருவாசகத்தில் பல இடங்களில் அகச்சான்றாகக் காணலாம். "கண்ணால் யானும் கண்டேன் காண்க" என்கிறார் மணிவாசகப் பெருமான். "உந்தன் வண்ணம்தான் அதுகாட்டி, வடிவு காட்டி, மலர்க்கழல்கள் அவை காட்டி... ஆட்கொண்டாய்" என்று கூறுகிறார். புறக்காட்சி பெருமானது உள்ளத்தில் ஒரு ஒப்பற்ற அனுபவத்தைப் பதித்தது. அதுவரை காணாத காட்சி இறைவன் அருளாலேதான் தனக்குக் கிட்டியிருக்க வேண்டும் என்கிற உணர்வு பெருமானுடைய சிந்தையை நிரப்புகின்றது. "காட்டாதன எல்லாம் காட்டி" என்றும், "பின்னும் கேளாதன எல்லாம் கேட்பித்து" என்றும் பெருமான் கூறித் தனது அருள் அனுபவத்தின் பெருமையை விளக்குகின்றார். அவர்கள் கண்டது ஒரு உண்மைக்காட்சி என்பதற்கு "மெய்யே உன் பொன்னடிகள் கண்டு" என்னும் திருவாக்குச் சான்றாகும். மணிவாசகரும் பரம்பொருளைச் சோதியாகக் கண்டதும், உருவத்திருமேனியாகக் கண்டதும்,

"செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்

திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி

அந்தண னாவதும் காட்டிவந் தாண்டாய்"

என்பதிலிருந்து தெளிவாகிறது.

இவ்வாறு அருளாளர்களுடைய அருள் அனுபவங்களை, அவர்கள் கண்ட காட்சியைத் தொகுத்துக்கொண்டே போகலாம். அனுபவங்கள் எத்தன்மையின் ஆயினும் அடியார்களின் உள்ளங்கள் விதிவிலக்கில்லாமல் அருளே உலகை ஆட்டுவிக்கின்றது என்றும், அருளன்றி வேறொன்றுமில்லை என்றும், அருளாலேதான் மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையோர் என்றும் நினைந்து மகிழும் தன்மையைப் பெறுகின்றன. காரைக்கால் அம்மையாரின் திருவாக்கு இதை நமக்கு அப்பட்டமாக அறிவிக்கின்றது.

"அருளே உலகெலாம் ஆள்விப்ப (து) , ஈசன்

அருளே பிறப்பறுப்பது;ஆனால் - அருளாலே

மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன், எஞ்ஞான்றும்

எப்பொருளும் ஆவ (து) எனக்கு". (அற்புதத் திருவந்தாதி)