"ஆனந்த உணர்வு"
திருமந்திரம் ஓர் அருளாளரின் அனுபவக் களஞ்சியம். ஓர் ஒப்பற்ற ஞான நூல். யோக சாதனையைக் கோடிட்டுக் காண்பித்து ஞானத்திற்கான மார்க்கத்தையும் நமக்கு விளக்குகின்றது. திருமந்திரத்தில் யோகம் முக்கியமாகவே காணப்படகிறது. யோகம் செய்வதற்கு நமது உடல் தேவைப்படுகிறது. இந்திரியங்களும் உட்கருவிகளம் யோகத்தில் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, உடலைப் பற்றிய பல்வேறு கூறுகள், பகுதிகள், இவை இயங்கும் தன்மை என்ற செய்திகளெல்லாம் திருமந்திரத்தில் நிறையக் காணப்படுகின்றன. இவற்றையெல்லாம் தற்கால விஞ்ஞான அறிவு பெறுவதற்காக நாம் பயன்படுத்தி வரும் கருவிகளை வைத்து மட்டுமே போதிய அனுபவத்தைப் பெற முடியாது. இந்த அனுபவத்தை நாம் பெற, நமக்கு நேரான வழிகளைக் காட்டிட, அதேபோல அனுபவங்களைப் பெற்ற மெய்யுணர்வாளர்களின் அருளும் தேவைப்படுகின்றது. அதுவே இறையருளுமாகும். ஆகவே எல்லாவற்றிற்கும் மேலாக ஆன்மிக சாதனைக்கு இறையருள் இன்றியமையாததாக உள்ளது.
திருமந்திரம் அருள் அனுபவம் பெற்ற அனுபூதிமான்களின் நிலையைப் பல இடங்களில் விளங்குகின்றது. சில மந்திரங்களை மட்டும் இங்கே சுட்டிக் காண்பிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
திருமூலர் பெருமான் பரம்பொருளைத் தம்முள் உணர்ந்தவர். அதன் விளைவாக இறைவன் திருவாக்கான சிவாகமத்தை எடுத்துரைக்கும் பேறுபெற்றவர். அண்டமெல்லாம் இறைவன் ஆற்றலால் இயங்குகின்றது. அதே இயக்கம் பிண்டத்திலும் நடைபெறுகிறது. பிண்டமென்றால் உடலாகிய தூலப்பொருள் மட்டுமன்று. உடலின் பல கூறுகள் சூக்கும நிலையிலும் இருக்கின்றன. அந்த நிலையில்தான் பரம்பொருளின் பேரறிவும், பேராற்றலும் அனுபவிக்கும் ஒரு வாய்ப்புக் கிடைக்கின்றது. இந்த அனுபவம் ஓர் தொடர் அனுபவம், சூக்கும நிலைக்கு ஒரு அனுபவம். தூல நிலைக்கு ஒரு அனுபவம் என்பதன்று. அருள் அனுபவம் உள்ளத்தின் உணர்வுகளைப் பல நிலைகளிலிருந்து தாக்குகிறது. இதுவே பரம்பொருளின் தரிசனமும் ஆகும். இந்த அனுபவத்திலே ஒன்றிப்போன உயிரானது கால வரம்பிற்கு அப்பால் சென்று விடுகிறது. இந்த நிலையில் திருவருள். ஞானம், ஆற்றல் எல்லாம் ஒன்றே.
திருமூலர் பெருமான் இந்த அனுபவத்தை இரண்டு மந்திரங்களில் எடுத்துக்கூறுகின்றார். தனது உணர்வுகள் பரம்பொருளின் இயக்கத்தோடு ஒன்றிப் போகும்போது, தான் என்கிற நினைவு இழந்து, காலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனுபவங்கள் மறைந்து, நிலையான, ஒளி பெற்ற இடத்தில் தான் பொருந்தியிருந்ததாகவும் திருமூலர் கூறுகிறார்.
"செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில் எழுகோடி யுகம்இருந் தேனே". (திருமந்திரம் - 74)
"இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே". (திருமந்திரம் - 80)
அருவமாகிய பரம்பொருள் மனித உடம்புக்குள் புகுந்து நிற்கின்றது. உடலையும், உடலைச்சார்ந்த கருவிகளையும், புலன்களையும் தத்துவங்களையும் உயிரோடு இணைத்து இயக்குகிறது. உடம்புக்கு உள்ளும் வெளியிலும் பரம்பொருளின் அருளாட்சி நடைபெறுகின்றது. மெய்ப்பொருளைத் தம்முள்ளேயே அனுபவிப்பதைச் சிறந்த யோக சாதனையாகத் திருமூலரைப் போன்ற சித்தர்கள் எடுத்துக்கூறுகின்றனர். இந்தச் சாதனையில் உயிரும், உடலும், உணர்வுகளும் பரம்பொருளின் பேரறிவுடனும், பேராற்றலுடனும், சுருதியும், இலயமும்போல இணைந்து செயல்படுகின்றன. இந்தச் சேர்க்கையைப் பெறுவதே யோகத்தின் நோக்கமாகும். "மூலனை நாடி" என்கிறார் திருமூலர் பெருமான். திருவருளால் பஞ்சபூத இயக்கத்தைப் பற்றிய அறிவினைத் திருமூலர் பெறுகிறார். அந்த அறிவாகவும் மாறுகின்றார். "சதாசிவனாயினேன்". இந்த அறிவின் சேர்க்கையால் மெய்ஞ்ஞானம் கிட்டுகிறது. இந்த மெய்ஞ்ஞானம் பெற்ற திருமூலர் சிவசொரூப தரிசனம் கிடைக்கப்பெற்று, சத்திய ஞானானந்தத்தில் நிலைத்து நிற்கிறார். இந்த உணர்வுகள் எல்லாமே ஞானியின் உள்ளத்தில் ஏற்படக்கூடிய உணர்வுகளே.
"நந்திஅரு ளாலே மூலனை நாடிப்பின்
நந்திஅரு ளாலே சதாசிவ னாயினேன்
நந்திஅரு ளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
நந்திஅரு ளாலே நானிருந் தேனே". (திருமந்திரம் - 92)
உடலின் பொறிகளும், புலன்களும் செயற்படும்பொழுது நமக்குக் கிடைக்கக்கூடிய அனுபவங்கள் உண்மையில் நம் உள்ளேதான் உருவம் பெறுகின்றன. இந்தக் கருவிகளின் செயல்களைக் கட்டுப்படுத்தும்பொழுது நம்முள்ளேயே வேறுசில அனுபவங்களும் தோன்றும். நமது "பார்வை"யை உள்ளே திருப்பும்பொழுது இந்த அனுபவங்கள் கிடைக்கின்றன. பரம்பொருளை ஞானிகள் "ஒளியாகவும்", "ஒலியாகவும்" காண்கிறார்கள். பொறிகளைப் பயன்படுத்தி அனுபவிக்கும் ஒளியும் ஒலியும் ஒருவிதம். பொறிகளைக் கட்டுப்படுத்தி அவற்றைச் செயலழிக்கச் செய்து அனுபவிக்கும் ஒளியும் ஒலியும் வேறுவிதம். புறத்தே உள்ள இருளைப்போல், உள்ளத்திலும் இருள் உண்டு. உள்ளத்தின் இருளை நீக்கி அகப்பொருளை நுகரும்பொழுது கிடைக்கும் அனுபவம் வேறு. அதைப்பிரணவத்தில் அடங்கும் மந்திரமாகத் திருமூலர் பெருமான் விளக்குகின்றார். அந்தப் பிரணவப் பொருளே உள்ளத்தின் இருளை நீக்குகிறது. உள்ளத்திலேயே ஒளி வீசத் தூண்டுகிறது. மயிர்க்கால்தொறும் அருள் ஒளி வீசுகின்றது.
"ஆரழல் வீச உருக்கி ரோமம் ஒளிவிடுந்தானே".
"இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே". (திருமந்திரம் - 93)
இறைவன் அருளோடு கூடி உயிர் சிவமாம் தன்மையைப் பெறுகிறது. யோகத்தாலும், தவத்தாலும், ஞானத்தாலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. சீவத்தன்மை மாறிச் சிவமாம் தன்மை வெளிப்படுகிறது. மலங்களால் கட்டப்பட்ட உயிரானது பல பாச வகைகளில் ஆழ்ந்து, இருளில் நிற்கிறது. இறைவனுடைய அருள் அந்த இருளை நீக்கி ஒளியை நிரப்புகின்றது. சிவனுடைய சார்பால் சீவன் சிவத்தன்மையைப் பெறுகிறது. அப்பொழுது பழமையான மூல மலமாகிய ஆணவ மலமும், அந்த மலத்தை நீக்க இறைவன் புகுத்திய கன்ம மலமும், மாயா மலமும் சூரியன் முன் சந்திரன் போல ஒளி மழுங்கும். "சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட அத்தன்" என்றார் மாணிக்கவாசகர். சூரியனுடைய ஒளி இயல்பாக உள்ளது. சந்திரனுடைய ஒளி சூரியனிடமிருந்து பெற்றது பேரொளியில் சிற்றொளி ஒடுங்கி இருப்பது போலாகும். "அறிவு அறிவுள்ளே அழிந்தது போல" என்பார் திருமூலர். சிவன் அறிவுமயம், சீவனும் அறிவுடையது. அறிவுடைய சீவனுக்கு அறிவுமயமான சிவனைத் தவிர ஒடுங்குவதற்கு வேறு இடம் இல்லை. சிவ ஒளியோடு ஆன்ம ஒளி பொருந்துவதே இயல்பாகும். அது சுத்த வெளியிலே நிகழ்கின்றது. அந்தச் சுத்த வெளியானது சிவமும் சீவனும் பொருந்தும் இடமாகும். இவ்வாறு பொருந்துவதால் சீவ் சிவமாம் தன்மையைப் பெறுகின்றது. "சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ சுத்த வெளியிற் சுடிற் சுடர்சேரும்" (திருமந்திரம் - 135) இந்த நிலையில் பேரறிவின் ஒளி உள்ளத்திலே வீசும் தன்மையுடையதாகி உயிரானது மலங்களின் சேர்க்கையிலிருந்து தன்னை விடுபடுத்திக் கொள்கின்றது. மலங்களின் ஆட்சியின் வலிமை குன்றி சீவன் தன்னொனி பெறுகின்றது. மலங்களும் வியாபகம் இழந்து நிற்கின்றன.
"தானே சிவமான தன்மை தலைப்பட
ஆன மலமு மப்பாச பேதமு
மான குணமும் பரான்மா வுபாதியும்
பானுவின் முன்மதி போற்பட ராவே" (திருமந்திரம் - 2314)
மலம் தன்னைப் பற்றியே கருதிக்கொண்டிருக்கின்றது. தான் ஆகிவிடுகிறது. எதை நினைக்கிறாயோ அது நீயாகிறாய் என்கிறது உபநிடதம். சிவனையே எண்ணி, சிவசமாதியில் கூடியிருந்தால் தான் அவனாகும். சீவன் சிவமாம் தன்மையைப் பெறும். மனதை ஒடுக்கி, குற்றங்களுடைய சம்பந்தத்தைக் குறைத்துக் கொண்டு, புலன்களின் செயல்களைக் கட்டுப்படுத்தி, சிந்தையை ஒருமுகமாக்கி இறைவனுடைய திருவடிகளிலே பதித்து, இறை உணர்விலேயே தன்னைப் பொருத்திக் கொண்டிருப்பது சமாதியாகும். இங்கே யோக சாதனை விளக்கப்படுகின்றத. இந்த யோக சாதனையால் சிவமாம் தன்மை கிட்டுகிறது. அப்போது அநாதியே உயிரைக் கட்டுப்படுத்தும் ஆணவ மலத்தின் சக்தி அகற்றப்படுகிது. பாசங்களால் கட்டுண்ட தன்மை அகலுகிறது. தூல உடல், சூக்கும உடல் மலங்கள் நீக்கி புத்தொளி பெற்று விளங்கும். திருவருளில் ஒன்றுவோர்க்குச் சிவ வாழ்வு கிடைக்கும். பிறப்பினை வளர்க்கும் இயல்பு சக்தி இழந்து, குற்றமிலாத, ஒளி பெற்ற உடலுடன் வாழலாம்.
"தானவ னாகுஞ் சமாதிகை கூடினால்
ஆன மலமறும் அப்பசுத் தன்மைபோம்
ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்
தூனங்கள் எட்டு மொழித்தொன்று வோர்கட்கே". (திருமந்திரம் - 2320)
ஆணவம், கன்மம், மயை ஆகியவற்றால் கட்டுண்ட உயிரானது தன்னை ஒரு விசேஷத் தன்மை பெற்றதாகக் கருதி, பிற உயிர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக்கொண்டு, ஒருவித கலக்கத்தில் நிற்கும். இந்த நிலையில் உடலும், உடலைச் சார்ந்த கருவிகளும் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படும். கருவிகளின் இயக்கங்கள் உயிரைப் புறத்தேயுள்ள அனுபவங்களில் ஈடுபடுத்தி முழுமையை மறைக்கும். இதுவே பிறப்பிற்கு வித்திடும். ஆன்மாவின் உண்மைச் சொரூபம் மறைக்கப்படும். இதற்கு மாறாகத் திருவருளால் ஞானம் பெற்ற உயிர் புலன், பொறிகளின் இயக்கத்திற்கு அப்பாற்பட்டு நிற்கும். அதே நேரத்தில், அந்த இயக்கத்தைத் தன்னுள் ஒடுங்கி நிற்கும். அதே நேரத்தில், அந்த இயக்கத்தைத் தன்னுள் ஒடுக்கிக் கொள்ளும். விருப்பம், வெறுப்பு ஆகியவை நீங்க, ஆன்மாவானது இதுவென்றும், அதுவென்றும் வேற்றுமை பாராது உண்மை அறிவைப் பெற்று, அந்த உண்மை அறிவினில் தன்னை ஒடுக்கிக் கொண்ட நிற்கும்பொழுது சிவத்துடன் கலந்திருக்கும். அப்பொழுது உடல்கூறுகளின் வட்டத்திற்கப்பால் வியாபகமாக நின்று, சிவகதி பெற்று ஞான சொரூபியாக நிற்கும். இதுவே உயிரின் சொரூப இலக்கணமாகும்.
"எல்லாந்தன் னுட்புக யாவுளுந் தானாகி
நல்லாந் துரியம் புரிந்தக்கா னல்லுயிர்
பொல்லாத வாறாறுட் போகாது போதமாய்ச்
செல்லாச் சிவகதி சென்றெய்து மன்றே". (திருமந்திரம் - 2308)
எது ஆனந்த அனுபவமாகும்? திருவருளிலே முடிவாகத் தோய்ந்து நிற்கும் நிலையே இந்த அனுபவமாகும். இதில் தியானம் கைகூடிடும். ஞானமே வடிவாக உள்ளுணர்வுகளெல்லாம் சிவதியானத்தில் நிற்கும். சிவனறிவே தம்மறிவாகப் பொருத்தி, உடலையும், உடலைச் சார்ந்த உணர்வுகளையும் கடந்து உயிரானது தன்னிலையில் நிற்கும். கருவி கரணங்களின் இயக்கம் இல்லாமையால் இது சமாதி நிலையாகும். அதாவது, தனது தன்மை கெட்டு அருளின் தன்மை தானே வெளிப்படும் காட்சியாகும். இத்தன்மையை எய்துவது உபநிடத மகாவாக்கியமான தத்துவமசி நிலையாகும் என்பார் திருமூலர். அதாவது, சிவசக்தியினிடையில் உயிரானது தற்போதமற்ற ஒடுங்கிக் கிடக்கும் அனுபவமாகும். இறைவனின் அருள் அணைப்பிலே ஆன்மா செயலற்று தாயிடம் ஒர் குழந்தை இருப்பதுபோல் இருக்கும். உயிர் தன்னையே சிவம் என்று கருதிக்கொள்வதில்லை. ஆனால், சிவ ஒளியில் சீவ ஒளி கலந்து தனித்தன்மை இழந்து சிவவியாபகத்தில் நிற்கும். இதைத் திருமூலர் "தூங்கிக் கண்டார் சிவயோகம் தம்முள்ளே" என்பார்.
"ஆனந்த மாகு மரனருட் சத்தியிற்
றானந்த மாமுயிர் தானே சமாதிசெய்
தூனந்த மாயவணர் வாயுள் ளுணர்வுறிற்
கோனந்த வாய்க்கு மகாவாக்கிய மாமே". (திருமந்திரம் - 2326)