மனிதன் ஆறறிவு பெற்றவன். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தனது அறிவாற்றலைப் பயன்படுத்தித் தான் வாழும் நிலையை உயர்த்திக் கொள்ளப் பல்வேறு முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வெற்றியும் கண்டுள்ளான். இயற்கை ஆற்றலின் தன்மையையும், விதிமுறைகளையும் கண்டறிந்து அவற்றைத்தனது வாழ்க்கையின் வளத்திற்காக நன்றாகப் பயன்படுத்தியுள்ளான். "இயற்கையின் குணாதிசயங்களைக் கண்டுகொண்டு அவற்றை ஆளுக" என்னும் கோட்பாடே நமது நாகரிகத்தின் வியப்புமிக்க சாதனைகளுக்கு மையமாக இருந்து வருகிறது.
விஞ்ஞானத் துறையில் மனிதன் புரிந்துள்ள சாதனைகள் பகுத்தறிவின் அடிப்படையில் அமைந்துள்ளன. இந்த அறிவினைப் பெற நாம், நமது உடல், அதைச் சார்ந்த கருவிகள், உட்கருவிகள், ஐம்புலன்கள் போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். இக்கருவிகள் புறத்தோற்றத்தை நோக்கி இயல்பாகவே செல்கின்றன. புறத்தோற்றத்தின் விஷய அனுபவத்தில் ஈடுபடுகின்றன. ஒவ்வொரு விநாடியும் இந்த விஷய அனுபவங்கள் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய கருவிகளைத் தாக்குகின்றன. ஐம்பொறிகள் வழியாக அனுபவங்களைச் சேகரிக்க, புத்தி அவற்றைப் பாகுபடுத்த, அகங்காரம் அவற்றிற்கு ஒரு எழுச்சியைக் கொடுக்க, சித்தம் அவற்றிற்கு ஒரு விளக்கம் கொடுத்துக் கிடைத்த அனுபவத்தை அறிவாக்க, அந்த அறிவு நமக்கு "நாம்" "நமது" என்கிற உணர்வினைக் கொடுத்து நம்மை ஒருவிதமான மாயையிலே ஆழ்த்துகின்றது. நமது அன்றாட வாழ்வில் நாம் ஏதாவது ஒரு சிறிய சாதனையைப் புரிந்திருந்தாலும் அது நமது சாதனை, அதை நாம் புரிந்தோம் என்று எண்ணி, மகிழ்ச்சியடைந்து, பெருமிதம் கொண்டு நம்மைப் பிறரிடமிருந்து பிரித்துக் கொண்டு, வேற்றுமை காட்டி நமக்கென்று ஒரு தனித்தன்மையை நாம் சதா வலியுறுத்தி வருவதும் இந்தக் கருவி, கரண இயக்கத்தின் அடிப்படையில்தான். இந்த இயக்கம் நமது உடலில் நடைபெறுகிறது. நமது உடல் ஐம்பூதங்களால் ஆகியது. அங்கே ஞான இந்திரியங்களாகிய ஐந்து பறவைகள் தங்குகின்றன. அவை ஐம்புலன்கள் வழி சதா செல்லுகின்றன. இத்துடன் நமது உடலில் ஐந்து கன்மேந்திரியங்கள் உள்ளள. அவை புரியும் செயல்களும் உடலுக்கு அனுபவத்தைச் சேர்க்கின்றன. இவ்வாறு ஒரு இயக்கம் நடைபெறுகின்றதென்றால் அதை நடத்த ஒருவன் வேண்டும். அதுவே உடலை இருப்பிடமாகக் கொண்ட உயிராகும். உயிரானது உடலின் பல்வகைக் கருவிகளைத் தனது இயக்கத்திற்குப் பயன்படுத்தி வருகின்றது. இதைத் திருமந்திரம் அழகாக எடுத்துக்காட்டுகிறது.
"புலம் ஐந்து புள் ஐந்து புட்சென்று மேயும்
நிலம் ஐந்து நீர் ஐந்து நீர்மையும் ஐந்து
குலமொன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலம்வந்து போம்வழி யன்பது தானே". (திருமந்திரம் - 2025)
கருவிகள் கருவிகளே, அவை சடப்பொருள்கள். தானாக இயங்கமாட்டா. உயிரின் அறிவாற்றலால் அவை இயங்குகின்றன. எனினும், கருவி கரணங்களோடு உயிரானது இணைந்து செயல்படும்பொழுது, கருவி கரணங்களே தானாகவே இயங்குவது போன்ற ஒரு பிரமை நமக்குத் தோன்றுகிறது. உயிர் வேறு. கருவி கரணங்கள் வேறு என்கிற நிலை அறியப்படாதபொழுது கருவி கரணங்களே தன்னிச்சையாக செயல்படுகின்றன என்கிற மயக்கம் நம்முன் எழுகிறது. உயிருக்குக்கருவி கரணங்கள் தேவை. கருவி கரணங்கள் இல்லாதபொழுது உயிர் இருளில் மூழ்கிக் கிடக்கும். இறைவன் அருளால் உயிருடன் உடலும், கருவி கரணங்களும் பிறப்பின்போது சேருவதால் உயிருக்கு விளக்கம் பெறக்கூடிய வாய்ப்புக் கிட்டுகிறது. விஷய அனுபவங்களைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கும் தகுதி கிடைக்கின்றது. விஷய அனுபவங்களையே உண்மையானவை என்றும், அவற்றைப்பெற வசதி செய்து கொடுக்கும் உடம்பும் கருவிகளுமே உண்மையானவை என்றும் ஒரு வித விபரீத உணர்வும் உயிருக்குத் தோன்றத் தொடங்குகின்றது. நாய் வாலாட்டும். வால் நாயை ஆட்டுமா? உடம்பைப் பற்றி நம்முடைய மனத்திலே தோன்றும் விபரீத எண்ணம் வால் நாயை ஆட்டுவது போல் உள்ளது.
கருவி கரணங்கள் வழியாக நாம் பெறும் அறிவு உயிரைச் சேர்ந்த அறிவாகும். உயிருக்கு அறியும் தன்மை உண்டு. உயிரே அறிவுமயம் எனவும் கொள்ளலாம். ஆனால், உயிரானது எத்தகைய அறிவினைப் பெறுகிறது என்பது உயிரின் பக்குவ நிலயைப் பொறுத்திருக்கின்றது.
ஆகவே, நாம் பெறும் விஷய அனுபவங்களைப் பற்றிய அறிவு உயிரின் திறனுக்கேற்ப நிற்கும். இந்த அறிவு நமது கல்வி கேள்விகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. மனிதனின் ஆக்கபூர்வமான சக்தி இந்த அறிவைப் பயன்படுத்திக் கொண்டு மனிதன் பல துறைகளில் முன்னேற வழிவகை செய்கிறது. சமுதாய வளர்ச்சிக்கு இந்த அறிவே மையமாகிறது. விஷய அனுபவங்களின் அறிவு விஞ்ஞானம், கலை, பண்பாடு ஆகிய துறைகளில் மனிதன் பல பிரமிக்கத்தக்க சாதனைகளைப் புரிய பயன்பட்டுள்ளது. அறிவே ஆற்றல் என்று மேலை நாட்டு அறிஞர்கள் கூறும் அளவுக்கு ஐம்பொறிகள் வாயிலாகக் கிடைக்கக்கூடிய அனுபவ அறிவு மனிதனின் சிநத்னையில் பெருமைக்குரிய இடத்தைப் பெற்றிருக்கிறது.
ஆனால், இந்த அறிவு ஒரு சிறிய வட்டத்திற்குள்தான் இயங்கும். விஷய அனுபவங்கள் புலன், பொறிகளின் செயல்களுக்கேற்ப உயிரை வந்து சேரும். பொறி, புலன்கள் உடலைச் சார்ந்த கருவிகளாதலால் அவற்றின் செயல்கள் உடலின் நிலையைப் பொறுத்திருக்கும். உடலை உயிர் இயக்கும் காரணத்தினால் உயிரின் நிலை கருவி கரணங்களின் செய்கைகளை வெகுவாகப்பாதிக்கும். உடலும், அதன் கருவி கரணங்களும் நிலையற்றவை. அழியும் தன்மை பெற்றவை. ஆக, அவற்றின் வழியாகப் பெறக்கூடிய அனுபவமும், அறிவும் நிலைத்து நிற்காது. அவை காலத்தின் போக்கால் கட்டுப்படுத்தப்படும். காலம் என்பது நிகழ்வதையும், நிகழ்ந்ததையும், நிகழப்போவதையும் வேறுபடுத்தி நமது சித்தத்திற்கு அளிக்கும்பொழுது விஷய அறிவும் காலத்தின் கட்டுப்பாட்டால் பாதிக்கப்படும். விஷய அனுபவங்களுக்கு கலை எழுச்சியூட்டும். அனுபவங்களின்
தன்மை உயிரின் கன்ம பலத்தின் அடிப்படையில் அமையும். கலையும் நியதியும் உயிரானது பல பிறவிகளில் பெற்ற வினைக்கூட்டங்களும் பொறிபுலன்களின், காட்சி அனுபவங்களின் உண்மைத் தன்மையை மாற்றியும் விடும். விஷய அறிவு, பொதுவாக, பொருட்களைப் பற்றியதாக இருக்கும். ஏனென்றால், ஐம்பொறிகளும், ஐம்புலன்களும் புறத்தேயுள்ள பொருட்களின் மீது இயல்பாகவே கூடுதலாகத் தங்களுடைய நாட்டத்தைச் செலுத்தும். கருவி கரணங்கள் பொருட்களைப் பற்றிய அறிவினைப் பெறுவது நேரிடையாகவும் இருக்கலாம். மறைமுகமாகவும் இருக்கலாம். கண்ணால் பார்த்தும், காதால் கேட்டும் பொருட்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். அத்துடன் சூக்குமமாக இருக்கும் பொருட்களைப் பற்றியும் யூகித்தல், அனுமானித்தல் போன்ற வழிகளில் அறிந்து கொள்ளலாம். ஒரு பொருளைப் பார்க்கிறோம். நேராகத் தெரிந்து கொள்கிறோம். அப்பொருளிலுள்ள கோடிக்கணக்கான அணுக்களை நாம் பார்க்க முடிவதில்லை. ஆனால், அதற்காக நிறுவப்பட்ட கருவிகளை வைத்து அவற்றைப் பார்த்துக் கொள்கின்றோம். இல்லாவிட்டால் அவற்றினுடைய தன்மையைப் பற்றி மறைமுகமாகத் தெரிந்து கொள்கின்றோம். பௌதிகம், இரசாயனம், தொழில்நுட்பக் கல்வி போன்ற பலவிதமான துறைகளில் நாம் இன்று பெற்றுள்ள அறிவு நமது பொறிகள், புலன்கள், மனம், புத்தி, சித்தம், அகங்காரங்கள் ஆகிய உட்கருவிகள் இணைந்து செயல்பட்டதன் விளைவே ஆகும். பொறி, புலன்களிலிருந்து வெளிப்படும் அறிவு மீண்டும் மீண்டும் அவற்றையே வலுப்படுத்த முயலும். அதனால் கிடைக்கக்கூடிய இன்பங்களை வளர்த்தும், துன்பங்களைத் தவிர்த்தும் வாழ்க்கையைப்புலன் அனுபவப் பாதையிலே செலுத்துவது உயிருக்கு இயல்பாகி விடுகிறது. இந்த அறிவினால் உயிருக்கு உடல் மீது உள்ள பாசம் வளரும்.
மேற்கூறிய அறிவைத் தவிர வேறு எத்தகைய அறிவும் இல்லை என்று நமது உள்ளத்திலே ஓர் எண்ணம் எழுவதும், அந்த அறிவின் விளைவே என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் வேறு ஒரு அறிவு உள்ளது. நாம் இப்பொழுது பெற்றுள்ள அறிவைச் சிற்றறிவு என்றும், பெற்றிராத அறிவைப் பேரறிவு என்றும் குறிப்பிடுவது வழக்கம். சாந்தோக்கிய உபநிடத்தில் ஒரு நிகழ்ச்சியில் இதைப் பற்றிய உரையாடல் ஒன்று வருகிறது. சனத்குமார முனிவரிடம் நாதரதர் சென்று தனக்குத் தக்க அறிவினைப்புகட்ட வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றார். "உனக்குத் தெரிந்ததைப் பற்றிச் சொல், தெரியாததைப் பற்றிப் பின்னர் விளக்குகின்றேன்" என்கிறார் சனத்குமாரர்.
"எனக்கு வேதங்கள் தெரியும். இதிகாசப் புராணங்கள் தெரியும். இலக்கணம் கற்றுள்ளேன். கணிதம், தத்துவம், விஞ்ஞானம், பௌதிகம், கலைகள் ஆகியவெல்லாம் நன்கு தெரியும். இவற்றையெல்லாம் நான் கற்றிருந்தும் எனது உள்ளத்திலே ஒரு குறை உண்டு. எல்லாவற்றையும் நான் முழுமையாகத் தெரிந்து கொண்டதாக ஒர் உணர்வனைப் பெறவில்லை" என்கிறார் நாதரதர்.
"c கற்றதெல்லாம் பெயரளவில்" என்று சனத்குமாரர் பதிலளிக்கிறார்.
ஒளவையார் கற்றதெல்லாம கைம்மண் அளவு என்றார். சனத்குமாரர் கற்றதெல்லாம் பெயரளவில் என்கிறார்.
ஒவ்வொரு பொருளுக்கும் உருவம் உண்டு. பெயரும் உண்டு. பெயரையும் உருவத்தையும் வைத்து அப்பொருளின் தன்மையை, இடத்தை, காலத்தை நிர்ணயித்துக் கொள்ளுகின்றோம். பெயரும் உருவமும் ஒரு பொருளைச் சுட்டிக் காண்பிக்கின்றன. அதாவது, அவற்றால் ஒரு பொருள் உண்டு என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நாரதர் கற்ற கல்வி பெயரளவில்தான் என்று சனத்குமாரர் கூறும்பொழுது அந்தக் கல்விக்கு அப்பால் வேறொரு கல்வி உள்ளது. வேறொரு அறவி உள்ளது. அந்த அறிவே இந்தக் கல்விக்கு அதனுடைய விசேஷத் தன்மையைக் கொடுக்கின்றது என்கிற உணர்வு நம்முள் தோன்றுகிறது. பெயர், பெயரிலிருந்து வாக்கு, வாக்கிலிருந்து மனம், புத்தி, சித்தம், தியானம், ஞானம், வலிமை, உணவு, நீர், நெருப்பு, ஆகாயம், நினைவாற்றல், இச்சை, பிராணன், வாய்மை, சிரத்தை, தவம் என்றெல்லாம் படிப்படியாகச் சனத்குமாரர் நாரதருக்கு அவர் பெற்ற அறிவின் தன்மையை விளக்கி, பரம்பொருள் விளக்கத்திற்கு அழைத்துச் சென்று பரம்பொருளைப் பற்றிய அறிவே, பரம்பொருளே எல்லாவற்றிற்கும் மேலான அறிவென உள்ளத்தில் பதிய வைக்கின்றார்.
பரம்பொருளைப் பற்றிய அறிவு முழுமையான அறிவு எனப்படும். நாம் கருவி கரணங்களைப் பயன்படுத்திப் பெறும் அறிவு பகுதி அறிவாகும். விஞ்ஞான அறிவு நமக்குக் கொடுக்கும் அறிவு பகுதி அறிவுதான். ஒரு பொருளைப் பற்றி நாம் தொடர்ந்து விசாரித்துக் கொண்டே போனால் அந்த விசாரணையின் வழியாக நமக்குப்பற்பல அறிவு கிட்டலாம். ஆனால், இத்தகைய அறிவு உடலுடன் இயங்கும் கருவி கரணங்களின் வழியாகப் பெறப்படும் அறிவாகையால் இது இடம், காலம் முதலியவற்றால் கட்டுப்படுத்தப்பட்டது. நான் என்கிற முனைப்பின் அழுத்தத்தால் வெளிப்படும் அறிவின் திறம் நம்முடைய குறைந்த ஆற்றலையே பிரதிபலிக்கும் தன்மையுடையது. முழு அறிவு என்பது ஒரு மிகப்பெரிய வட்டமாகும். பகுதி அறிவு இந்த வட்டத்தில் எங்கோ ஒரு சிறிய பகுதியை இடம் கொண்டதாகும்.
சிற்றறிவு என்றுமே முழுமையான அறிவாகாது. அதே நேரத்தில் முழு அறிவாகிய பெரிய வட்டம் சிற்றறிவுப் பகுதிகளைத் தன்னுள் அடக்கி நிற்கும். முழு அறிவாகிய பெரிய வட்டத்தின் தன்மையை மாற்ற முடியாது. அது நிலையான தன்மை பெற்றது. சிற்றறிவுப் பகுதிகளின் தன்மை மாறிக் கொண்டே இருக்கும். அதையே விஞ்ஞான வளர்ச்சி என்கிறோம். விஞ்ஞான அறிவு வளர வளர நாம் முன்பு பெற்றிருந்த அறிவை ஆழப்படுத்தியும், அகலப்படுத்தியும் புதிய உண்மைகளைச் சேகரித்துக் கொள்கின்றோம். ஆனாலும் இவ்வாறு நாம் பெறும் அறிவு முழுயைமான அறிவாகாது. நம்மை ஒரு மயக்கத்திலே ஆழ்த்தும். அத்தகைய அறிவின் வளர்ச்சி ஆற்று வெள்ளத்தோடு போகும் பொருட்களைப்போல நம்மைக் கட்டுக்கடங்காத நிலைக்கு அழைத்துச் செல்லும்.
இதனை
"அறிவு ஐம்புலனுட னேநன்ற தாகி
நெறியறி யாது உற்ற நீராழம் போல" (திருமந்திரம் - 119)
என்பார் திருமூலர்.
இந்த அறிவைப் பெறுவதும், இந்த அறிவினால் இன்பத் துன்பங்களை அநாதி காலம் முதல் தாங்கி அனுபவிப்பதும் உயிராகும். உயிர் அறிவுடைய பொருள்தான். ஆனால், அதனுடைய அறிவாற்றல் சிறியது. ஐந்து இந்திரியங்கள், ஐம்புலன்கள் உட்கருவிகள் போன்றவை இல்லாத இடத்தில் உயிரின் அறிவாற்றல் இயங்குவதற்கு வழியே இல்லை. உயிரினுடைய அறிவாற்றல் வட்டம் சிறியது. பேரறிவாகிய இறைவனின் வட்டம் நமது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு பெரியது. இதை உணரும்பொழுது நாமே அறிவு, நமது அறிவின் சாதனையே சாதனை என்றெல்லாம் நாம் இறுமாப்படைவது நமது சிறுமையை எடுத்துக் காட்டுகின்றது. நாமே எல்லா அறிவுக்கும் சொந்தக்காரர்கள் என்பது ஒரு பெரிய வேடிக்கை அல்லவா என்கிறது திருவருட்பயன்.
"பொறிஇன்றி ஒன்றும் புணராத புந்திக் (கு)
அறி (வு) என்ற பேர்நன் (று) அற".
பேரறிவினைப் பற்றித்தம்முள் உணர்ந்துகொண்ட அருளாளர்கள் இத்துடன் நிற்பதில்லை. முழுமையான அறிவே உண்மையான அறிவென்றும் மற்றதெல்லாம் அறியாமை என்றும் கூறுகிறார்கள். ஏனெனில், உடலின் கருவி கரணங்களைப் பற்றி நாம் பெறும் அறிவு உடலையே சார்ந்திருக்கும். ஆகையால் உடலைப் பற்றிய அறிவு பரம்பொருளைப் பற்றிய ஒரு அறியாமை நிலையில் நம்மைத் தள்ளி விடும். ஒன்றைப் பார்க்கும்பொழுது மற்றதைப் பார்க்க உள்ளத்திலே ஆவல் எழும்பாது. அந்த அறிவு பாசத்தோடு சம்பந்தப்பட்ட அறிவாகும். அதாவது உயிரைச் சார்ந்த ஆணவம், கன்மம், மாயை போன்ற மலங்கள் அந்த அறிவுக்கு ஒரு உருவத்தைக் கொடுக்கின்றன. நமது மனம் அந்த உருவத்திலே ஈடுபட்டு விடுகின்றது. உருவம் எத்தகைய மூலப்பொருளினால் செய்யப்பட்டிருக்கின்றது என்று அறிந்துகொள்ள நமக்கு ஆவல் எழுவதில்லை. ஆகவே, உருவத்தைப் பற்றிய அறிவு உண்மையிலேயே ஒரு அறியாமையாகும். யானைப் பொம்மையைப் பார்க்கும் ஒரு குழந்தைக்கு அது மரத்தால் செய்யப்பட்டுள்ளது என்கிற உணர்வு தோன்றுவதில்லை. பல தங்க ஆபரணங்களைப் பார்த்து அதிசயப்பட்டு நிற்கும் பெண்மணிக்கு அவற்றின் மூலப்பொருள் தங்கமே என்கிற உண்மை தோன்றுவதில்லை. அந்த அளவுக்கு அவள் அந்த ஆபரணங்களின் அழகில், வேலைப்பாட்டில் தனது மனத்தைப் பறிகொடுத்து விடுகிறாள். உண்மை அறிவின் முன் நாம் பெற்றுள்ள அறிவெல்லாம் அறியாமைதான் என்கிறார் திருமூலர். இந்த அறிவு, அறியாமை ஆகிய நிலைகளுக்கு அப்பால் ஒரு நிலை உள்ளது. அதுவே ஒரு பேரறிவு நிலை. பேரனுபவ நிலையுமாகும். அந்தப் பேரறிவு நிலை கதிரவனின் ஒளி போல மற்ற எல்லா அறிவு நிலைகளையும் இருளிலிருந்து மீட்டு பிரகாசப்படுத்துகிறது. அந்த அறிவு நிலைக்குச் சமானம் வேறொன்றுமில்லை. அது பேரானந்தத்தைக் கொடுக்கும். திருமூலர் கூறுவது போலவே அது ஓர் அழகிய நிலையாகும். தன்னிலை விளங்கும். பிற உயிர்களுடைய நிலையும் தெளிவாகும். நமது உயிரின் இயக்கத்திற்கான சுத்தமான விளக்கம் கிடைக்கும்.
"அறிவு அறிவுஎன்று அங்கு அரற்றும் உலகம்
அறிவு அறியாமை யாரும் அறியார்
அறிவு அறியாமை கடந்தறி வானால்
அறிவு அறியாமை யழகிய வாறே". (திருமந்திரம் - 2362)
இன்றைய உலகில் கல்விக்கு ஒரு பெரிய இடத்தை நாம் கொடுத்திருக்கின்றோம். கல்விக் கூடங்களில் விஞ்ஞானத்தைப் பற்றிய கல்வி முதலிடம் பெறுகிறது. விஞ்ஞானத்தை மேலும் மேலும் கற்று, விஞ்ஞான கல்வியை வாழ்க்கை இன்பத்திற்காகப் பயன்படுத்தி, வசதிகளைப் பெருக்கிக் கொள்வதே ஒரு சிறந்த குறிக்கோளாக வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய கல்வியால் ஒழுக்கமோ, அடக்கமோ, நேர்மையோ, சீலமோ கற்பவர்களுக்குக் கிடைக்குமா என்று நாம் பெரிதும் கவலைப்படுவதில்லை. அதற்கு மேலாக நம்முடைய உள்ளங்களிலே பரம்பொருளைப் பற்றிய விளக்கம் கிடைக்குமா என்றும், நாம் கற்கும் கல்வியின் பயனாக அமைய வேண்டுமென்றும் நினைத்துக் கொள்வதில்லை. ஆனால், நமது முன்னோர்கள் கல்வியின் பயன் இறை உணர்வு என்றும், அந்த உணர்வின் விளைவு ஒழுக்கம் என்றும், அந்த ஒழுக்கத்தைப் பெற்றவர்கள் நற்கல்வி கற்றவர்கள் என்றும் அறிவுறுத்தினர். "கரிப்பு (உவர்ப்பு) அறியா மிகும் கல்வி கற்றேனே" என்றார் திருமூலர். "துணையது வாய்வருந் தூயநற் கல்வியே" என்பதும் அவரது திருவாக்காகும். அத்தகைய கல்வியைப் பெறுவதே நமது குறிக்கோளாக அமைய வேண்டும். அத்தகைய அறிவினைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் சிற்றறிவினைப் பெருக்கிக் கொண்டு போவதில் பயனில்லை என்கிறார் திருமூலர். மாறாக நம்முடைய முயற்சிகள் இறை அறிவைப் பெறுவதில் செலுத்தப்பட வேண்டும். நம்முடைய முயற்சிகளின் பலனாக, இறைவனுடைய திருவருளால் பரம்பொருளைப் பற்றிய ஞானத்தை நாம் பெற்றோமாகில் எல்லாவற்றையும் அறிந்த ஒரு நிலையை நாமும் பெற்றுவிடலாமே என்கிறார் திருமூலர். இந்த அறிவே பரஞானமாகும். திருவருள் வைப்பினால் நிகழ்கின்றது. இந்த அறிவினை நாம் உள்ளுணர்வாகப் பெறுகின்றோம். இந்த அறிவு நமக்கு அனுபவத்தால் கிடைக்கின்றது.
"எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு
எல்லாம் அறிந்தும் இலாபமங் கில்லை
எல்லாம் அறிந்த அறிவினை நானென்னில்
எல்லாம் அறிந்த இறையென லாமே". (திருமந்திரம் - 2596)
அருளாளர்கள், இறை உணர்வாளர்கள் இந்த அனுபவத்தைப் பெற்றிருந்தனர். புறக்கண்களால் காண முடியாத ஒன்றை அகக்கண்களால் கண்டு பேரின்பம் பெற்றார்கள். புறக்கருவிகளால் இந்த அனுபவத்தைப் பெறுவது இயலாது. சிற்றறிவு வட்டத்திற்கு அப்பால் நிற்கும் ஒன்றைச் சிற்றறிவினால் பிடித்துவிட முடியாது.
"முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்"
என்பது திருமந்திரம் (2944)
பரம்பொருளைப் பற்றிய ஞானக்கல்வி அருளாளர்களுக்கு உள் அனுபவமாகக் கிடைக்கின்றது. இது திருவருளால் கிடைத்த காரணத்தால் அருள் அனுபவமாகவும் உள்ளத்துள்ளே நின்று ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்றது. திருவருளால் அந்த அனுபவத்திற்கான தகுதியும் பக்குவமும் பெற்றவர்கள் அந்த அனுபவத்தைப் பெறுகின்றனர்.
"திருவருளால் விளக்கம் பெற்ற அகக்கண்ணைத் திறந்து பார்த்தேன் - அவ்வாறு திறந்து பார்க்கும்பொழுது ஒப்பற்ற தலைவன் சிவமாகிய பரம்பொருள் என் உள்ளத்தில் சோதிமயமாக நிறைந்திருந்து என்னை அறிவுமயமானவன் என்று உணர்த்தி அருளினான்" எனத் திருமூலர் தனது அனுபவத்தைச் சொல்லுகின்றார்.
"மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலுந்
தன்னுற்ற சோதி தலைவன் இணையிலி
பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்
என்னுற் றறிவனான என்விழித் தானே".
அருள் அனுபவம் வாக்கிற்கும் ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்டது. பரம்பொருளை அழியும் பொருள்களால் அளக்க முடியாது. அருள் அனுபவம் பெற்ற பெரியோர்கள் வியப்புண்டு. அன்பு மேலிட்டு, பேச்சற்ற நிலைக்கு வந்து விடுகின்றனர். அந்த நிலையையே அவர்கள் பேரின்ப நிலையாகக் கருதுகிறார்கள். "பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே" என்பார் திருமூலர். அருள் அனுபவத்தை வெறும் சொற்களாலும், மொழிகளாலும் மட்டும் விளக்கிவிட முடியாது. இறைவனைத் தம்முள் உணர்ந்தபின்னர் பேரின்ப வெள்ளத்தில் திளைத்து நிற்கும் இறை உணர்வாளர்கள் தங்களுடைய அனுபவத்தைச் சம்பிரதாய முறையில் மொழியைப் பயன்படுத்தி மக்களுக்குத் தெளிவாக்க முற்பட்டாலும், அவர்களுடைய உள்ளக்கிடக்கை, பண்பட்ட உணர்வினை மொழிகள் முழுமையாகப் பிரதிபலிக்காது என்பது அறிவாளர்கள் நமக்குக் கூறும் உண்மையாகும். எனினும் மக்களுக்குத் தங்களது உணர்வைப் பகிர்ந்து கொடுக்க வேண்டிய காரணத்தினால் அவர்கள் மொழியினைக் கையாளுகிறார்கள். உண்மையில் "சும்மா இருக்கும் சுகம்" மொழிக்கு அப்பாற்பட்டது. இந்த நிலையில் அருள் அனுபவத்தைச் சாத்திரங்களிடமிருந்தும், நூல்களிடமிருந்தும் பெற்றுக் கொள்ள முடியாது. சாத்திர நூல்கள் ஒரு வழியை, பாதையைக் காண்பித்துக் கொடுக்கலாம். ஆனால், சென்று அடைய வேண்டிய இடம் சாதகனுடைய சாதனையைப் பொறுத்திருக்கின்றது. நூல் அறிவு பெற்று மட்டும் இறைவனை அடைய முடியாது என்பது அருளாளர்களுடைய அனுபவமாகும். தவம், சீலம், நோன்பு போன்றவற்றின் அடிப்படையில் இறைவனை அடைய வேண்டிய பல
கோட்பாடுகளையும் நெறிமுறைகளையும், நேர்மையுடனும், முழுமனதுடனும் கையாளும்போது வந்தடையக்கூடிய இன்பம் இறை இன்பமாகும் என்பது காரைக்கால் அம்மையாருடைய அனுபவமாகும். அந்த நிலையில் இறைவனை எந்தக் கோலத்தில், எந்த வடிவாக எண்ணியும், பார்த்தும் எத்தகைய தவம் செய்தாலும் அந்தக் கோலத்தில், அந்த வடிவிலேயே வந்து இறைவன் அருள் புரிவான் என்கிற உண்மையை நமக்குத் தெளிவாக்குகின்றார் காரைக்கால் அம்மையார்.
"நூல்அறிவு பேசி நுழைவுஇலா தார்திரிக!
நீல மணிமிற்றான் நீர்மையே - மேல்உவந்து
எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வோர்க்கும்
அக்கோலத்து அவ்வுருவே ஆம்". (அற்புதத் திருவந்தாதி)
"ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா. சுடர் விட்டுளன் எங்கள் சோதி" என்றார் திருஞானசம்பந்தர். இறை அனுபவம் இறை அருளால்தான் கிட்டும். இறை அருள் ஆசான் உருவமாக எழுந்தருளி, உபதேசித்தருளி பக்குவப்பட்ட உயிருக்கு இறை அனுபவத்தைக் கூட்டி வைக்கும். எல்லாவற்றிற்கும் காரணமான பொருளை ஏடுகள், சுவடிகள் மூலமாக மட்டும் அனுபவித்துவிட முடியாது.
"காட்டுங் குறியும் கடந்தவர் காரணம்
ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன்
கூட்டுங் குருநந்தி கூட்டிடி னல்லது
ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே". (திருமந்திரம் - 2937)
எழுத்தில் அடங்கி நிற்காத பரம்பொருளை விரிவுபடுத்திப்பேசவும், உரை செய்யவும் முயலுகின்றோம். இந்த முயற்சி வெற்றி பெறுமா? பெறாது. வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஒரு கரையில் நின்றுகொண்டு வெள்ளத்தைப் பார்க்கலாம். மறுகரை நமது கண்ணுக்கு எட்டாத அளவுக்கு வெள்ளம் ஓடுகிறது. அதேபோல உரையற்ற பரம்பொருளுக்கு உரை காண முயலுவது வீணான முயற்சியாகும். ஆனால், ஒன்று, இறைவன் நம்முடைய சிந்தைக்கு அகப்படக்கூடியவன்தான். ஆனால், அந்த சிந்தை எவ்வாறு இருக்க வேண்டும்? அது தெளிந்த சிந்தையாக இருக்க வேண்டும். திரையற்ற நீர்போல் சிந்தை தெளிந்திருக்கும்பொழுது அந்தச் சிந்தையில் இறைவன் வெளிப்படுவான். அதுவே உயர்ந்த தியான நிலையாகும். மோன சமாதியுமாகும். பேரின்பம் சுரக்கும் அனுபவ நிலையாகும்.
"உரையற்றது ஒன்றை உணரைசெய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாண லாகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவோர்க்குப்
புரையற் றிருந்தான் புரிசடை யோனே". (திருமந்திரம் - 2955)