திருமூல நாயனார் அருளிச் செய்துள்ள திருமந்திரம் தமிழ் மக்களின் மிக ஆதிநூல் என்று மெய்யுணர்வாளர்கள் போற்றுகின்றனர். சிவபெருமானுக்கு முதற்சீடரான நந்தி தேவரின் எட்டு மாணாக்கர்களில் தானும் ஒருவர் என்று பின்வரும் பாடலால் திருமூலர் கூறுகின்றார்.
"நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்,
நந்திகள் நால்வர், சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி, வியாக்கிரமர்
என்றிவர், என்னோ டெண்மரு மாமே". (திருமந்திரம் - 67)
நந்திகள் நால்வர் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் எனப்படுவர். சிவயோக மாமுனி என்பவரைப் பற்றி விவரம் இருப்பதாகத் தெரியவில்லை. பதஞ்சலியாகும், வியாக்கிரமரும் தமிழ்நாட்டுடன் தொடர்புகொண்டவரென்று கருதப்படுகின்றது.
நந்தி பெருமானது அருளால் தான் ஆசிரியன் எனப்பெயர் பெற்றதாகவும், அவரைச் சேர்த்து எட்டு ஆசிரியர்களும் இறைவனது ஆகம மந்திரங்களை எட்டுத் திக்கிலும் பரப்பினர் என்றும், திருமூலரிடமிருந்து திருமந்திரத்தைப் பெற்று உணர்ந்து அவருடைய சீடர்களும் பல இடங்களிலே திருமந்திரத்தை ஓதி நந்தி மரபினை நிலைபெறச் செய்தனர் என்றும் திருமந்திரம் கூறுகின்றது.
மெய்ப்பொருளை உணரும் சன்மார்க்கத்தை உலக மக்கள் அறிந்து உய்வதற்கு அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நான்கு புருஷார்த்தங்கள் உண்டு. அவற்றை விளக்கும் ஞானக்களஞ்சியமாகத் திருமந்திரம் தொன்றுதொட்டு ஞானிகள், முனிவர்கள் போன்றவர்களுடைய உள்ளங்களைக் கவர்ந்துள்ளது. இவற்றைச் சிவனெறி என்றும், சன்மார்க்கம் என்றும் கூறித் திருமூலர் சைவ சமயத்திற்குத்தனி நாயகன் நந்தியம்பெருமான் எனக் கூறுகின்றார்.
"சைவப் பெருமைத்தனி நாயகன் நந்தி
உய்யவகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையகத்துள்ளார்க்கு வகுத்து வைத்தானே". (திருமந்திரம் - 1478)
நந்தி என்னும் சொல்லைப்பல இடங்களில் திருமூலர் சிவபெருமானைக் குறித்தே உபயோகிக்கின்றனர். ஆயினும், தனக்கு ஆசானாக நந்தி தேவனை அவர் குறிப்பிடும் காரணத்தினால் விடை ரூபமான அமைந்துள்ள நந்தி தேவனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. நந்தி தேவனை விடை ரூபமாகத் தமிழ் மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக வணங்கியுள்ளதாகச் சான்றுகள் உண்டு என்று இலங்கையைச் சேர்ந்த பேரறிஞர் திரு.சி.இராமநாதன் போன்றவர்கள் கருதுகிறார்கள். தாயுமான சுவாமிகள் "நந்திமரபு வாழ்க மூலன் மரபில் வரும் மவுன குருவாழ்க" என்று போற்றியுள்ளார். அவர் மேலும் கூறுகின்றார். "சக்கரவர்த்தி தவராசயோகி எனும் மிக்க திருமூலன் அருள் மேவு நாள் என் நாளோ".
இலங்கையைச் சேர்ந்த பேரறிஞர் திரு சி.இராமநாதன் அவர்கள் திருமந்திரத்தில் மிக்க ஈடுபாடு உடையவர். திருமந்திரத்தில் பல நுட்பமான கருத்துகளைத் தெளிவாக விளக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றவர். தன்னுடைய கருத்துகளை அவர்கள் இன்றும் எனக்குக் கடிதங்கள் வாயிலாகத் தெரிவித்து வருகின்றார்கள். அதற்கு நான் அவருக்கு மிக்க கடமைப்பட்டிருக்கிறேன். இங்கு அவருடைய சில கருத்துகளை மட்டும் எடுத்துக்கூறிட விரும்புகின்றேன்.
"ஆதியில் பிரபஞ்ச உற்பத்திக்கு முன் இருந்த ஒரே அழியாத அனாதியான மெய்ப்பொருள் விந்து என்று திருமந்திரம் கூறுகின்றது. (NASA) நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் இநத உண்மையையே மின்சார காந்த அணுசக்தி () என்று கூறுகின்றது. இச்சக்தி, தன் அமுக்கம் தாங்க முடியாமல் வெடித்துப் பெருமுழுக்கம் (Electro - Magnetic Weak and Strong Atomic Energy) உண்டாகிப்பிரபஞ்சமும் உயிர்களும், அசைவு அசைவற்ற பொருள்களும், 50 கோடி சூரியன்களும், சந்திரர்களும், நட்சித்திர மண்டலங்களும், அண்டங்களும், பஞ்ச பூதங்களும் வெளிப்பட்டதாகக் கூறுகின்றது.
Big Bang Theory
The universe arose fron a region millions of times smaller than a proton of an atom
திருமூலரும் தன் ஞான திருஷ்டியால் உணர்ந்ததைக் கீழ்க்காணும் திருமந்திரங்களால் விவரிக்கின்றார்.
"மேல்வரும் விந்துவும் அவ்வெழுத்தாய் விடும்
மேல்வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
மேல்வரும் அப்பதி அவ்வெழுத்தே வரின்
மேல்வரும் சக்கரமாய் வரும் ஞாலமே". (திருமந்திரம் - 1258)
"ஞால மதாக விரிந்தது சக்கரம்
ஞால மதாய் விடும் விந்துவும் நாதமும்
ஞால மதாய் விடும் அப்பதி யோசனை
ஞால மதாக விரிந்தது எழுத்தே". (திருமந்திரம் - 1259)
"விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும்
விரிந்த எழுத்தது சக்கரமாக
விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி
விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே". (திருமந்திரம் - 1260)
"அப்பதுவாக விரிந்தது சக்கரம்
அப்பினில் அப்புறம் அவ் அனலாய் விடும்
அப்பினில் அப்புறம் மாருதமா யெழ
அப்பினில் அப்புறம் ஆகாசமாமே". (திருமந்திரம் - 1261)
"விரையது விந்து விளைந்தன எல்லாம்
விரையது விந்து விளைந்த உயிரும்
விரையது விந்து விளைந்த விஞ்ஞானம்
விரையது விந்து விளைந்த அவன்தாளே" (திருமந்திரம் - 1279)
"விளைந்த எழுத்தது விந்துவும் நாதமும்
விளைந்த எழுத்தது சக்கரமாகும்
விளைந்த எழுத்தவை மெய்யினில் நிற்கும்
விளைந்த எழுத்தவை மந்திரமாமே". (திருமந்திரம் - 1280)
அருணகிரி நாதரும் திருப்புகழில் நாத, விந்து கலாதி நமோ நமோ வென்றும், திருவள்ளுவரும்
கற்றதனலாய பயனென் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாரெவனின்.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
எனக் கூறுகின்றார்.
கருவில் மிதித்த கமலப்பாதமான விந்துவிலிருந்து விரிந்த உயிராய் நிற்கின்றது. இந்த ஆத்ம சக்கரத்தை நந்தி கருவில் மிதித்த கமலப்பாதத்தை அகாரமாயும், அதிலிருந்து இகாரம், உகாரம், ஓங்காரம், மகாரம் ஐந்து எழுத்துக்களாய்ப் பிரித்து விளக்கியுள்ளார். பதஞ்சலியும் தனது யோக சூத்திரத்தில் பஞ்ச அக்கரமாய் (ஐந்து எழுத்து) பிரித்து பஞ்சாக்கர மந்திரமென்று விளக்கியுள்ளார்.
கருவில் மிதித்த கமலப்பாதத்திலிருந்து உதித்த உயிர், சீவன் சிவனென்று எல்லா ஞானிகளும் கூறுகின்றார்கள். பின்வரும் திருமந்திரங்கள் அவற்றை விளக்குகின்றன.
"வித்தானிலன்றி முளையில்லை அம்முளை
வித்தினிலன்றி வெளிப்படு மாறில்லை
வித்தும் முளையும் உடனன்றி வேறில்லை
அத்தன்மை யாகும் அரன்நெறி காணுமே". (திருமந்திரம் - 1932)
"சீவனென்ன சிவனென்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட் டிருப்பரே". (திருமந்திரம் - 2017)
"தானென்று அவனென்று இரண்டென்பர் தத்துவம்
தானென்று அவனென்று இரண்டற்ற தன்மையைத்
தானென்றிரண்டுள்ளார் கேவலத் தானவர்
தானின்றித் தானாக தத்துவ சுத்தமே". (திருமந்திரம் - 2348)
"ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக
நின்று சமய நிராகாரம் நீங்கியே
நின்று பராபரை ஞேயத்தை பாதத்தாற்
சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே". (திருமந்திரம் - 1437)
கருவில் மிதித்த கமலப் பாதத்திலிருந்து எழும் சக்தியை, பிராணவாயுவை உணர்வால் ஓதுவதே இறைவனின் நாமம். திருமந்திரம் விளக்கமாகக் கூறுகின்றது.
"மருவும் துடியுடன் மன்னிய வீச்சு
மருவிய அப்பு மன்னுடன் இசையும்
கருவில் மிதித்த கமலப் பதமும்
உருவில் சிவாய நமவென ஓதே". (திருமந்திரம் - 2798)
"நாட்டமிரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமுமில்லை மனைக்கும் அழிவில்லை.
ஓட்டமுமில்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமுமில்லை சிவனவனாமே". (திருமந்திரம் - 604) தாயுமானவரும்,
"சைவ சமயமே சமயம் சமயாதீதப்பழம் பொருளைக்
கைவந்திடவே மன்றுள் வெளிகாட்டும் இக்கருத்தை விட்டு
பொய் வந்துழலும் சமயநெறி புகுதவேண்டாம் முத்தி தரும்
தெய்வசபையைக் காண்பதற்குச் சேரவாரும் ஜெகத்தீரே"
எனக் கூறுகின்றார்.
மேலும், பேரறிஞர் சி.இராமநாதன் அவர்கள் பிரணவத்தைப் பற்றி கூறும் சில கருத்துக்களைப் பின்வருமாறு காண்போம்.
"ஆகாரம், இகாரம், உகாரம், ஓங்காரம், மகாரமாகிய ஐந்தெழுத்தில் இயங்கும் ஆத்மா குரு தீட்சை பெற்ற ஞானிகளுக்கு அகாரம், உகாரம், மகாரமாகிய முப்பதங்களில் இயங்கி ஓம் என்னும் நாதத்தை, இறைவனின் நாமத்தை ஓதிச்சித்தாகாசத்தில் சோதியாய் வெளிப்படும் எனத் திருமந்திரம் விளக்குகின்றது.
"ஒரெழுத்தாலே உலகெங்கும் தானாகி
ஈரெழுத்தாலே இசைந்தங் கிருவராய்
மூவெழுத்தாலே முளைத்தோங்கும் சோதியை
மாவெழுத்தாலே மயக்கமே உற்றதே". (திருமந்திரம் - 885)
அழியாத மெய்ப்பொருளான சீவன் 'ஓம்' என்னும் திருநாமத்தைக் கூறிக்கொண்டு சிதாகாசப் பர வெளிக்கு ஏறித் தன் பசுத்தன்மை மாறிச் சிவனாகும் தத்துவத்தைக் கீழ்க்காணும் திருமந்திரம் கூறுகின்றது.
"கூறும் பொருளிது அகார உகாரங்கள்
ஏறும் பொருளிது சிந்தையுள் நின்றிட
கூறும் அகாரம் குழல் வழி ஓடிட
மாறும அமர்ந்திடும் அண்ணலு மாமே." (திருமந்திரம் - 765)
யோகிகள் பிரணவ சொரூபத்தில் மனத்தைப் பதித்துத்துவம் செய்து மண்ணுலகம் கடந்து விண்ணுலகப் பெருவெளியில் ஏறும் வழியில் பல நிலையங்களைக்கண்டு பலவாறாகப் பெயர்கள் சூட்டி விளக்கியுள்ளார்கள். திருமூலர் அவ்விடங்களை இலங்கை, தில்லை, சிற்றம்பலம், சிதம்பரம், அருளம்பலம், பேரம்பலம், சிவலோகம், சிவபூமியென்று பல பாடல்களில் கூறியுள்ளார்.
"மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூரும் இவ்வானில் இலங்கைக் குறியுறுஞ்
சாருந்திலை வனத் தன் மாமலயத்து
ஏறுஞ் சுழுனை இவை சிவபூமியே". (திருமந்திரம் - 2747)
பிராண வாயவு¬ அகார உகாரத்தில் கழுனை நாடியில் இயங்கச் செய்வதே தவம்.
"இடைபிங்கலை இமவானோடு இலங்கை
நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை
கடவுந் திலைவனம், கைகண்ட மூலம்
படர்வொன்றி யென்னும் பரமாம்பரமே". (திருமந்திரம் - 2754)
இமவான் சித்தாகாசப் பரவெளியைக் குறிக்கும்.
"அறம் அறியார் அண்ணல் பாதம் நினையுந்
திறம் அறியார் சிவலோக நகர்க்குப்
புறம் அறியார் பலர் பொய்ம்மொழி கேட்டு
மறம் அறிவார் பகை மன்னி நின்றாரே" (திருமந்திரம் - 262)
"அறம் - பிராணாயாமம் ஓதும் தவநெறி
அண்ணல் பாதம் - கருவில் மிதித்த இறைவனின் பாதம் ஆத்ம சக்கரத்தின் முதலெழுத்தான அகார எழுத்து சிவலோக நகர் - விண்ணுலகில் தில்லை நகரம் பொய்ம்மொழி - அஞ்ஞானம் மறம் - பாவ வழி"
மேலும் சில சிந்தனைகள், மந்திரம் என்னும் சொல்லுக்கு விளக்கமாகப் பொருள் கூறுவது. சுலபமில்லை. தொல்காப்பயிம் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டது. பட்டினத்துப் பிள்ளையார் "பேசாத மந்திரம்" என்கிற சொற்றொடரை உபயோகிக்கின்றனர்.
"வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்கு
எட்டாதபுட்பம் இறையாத தீர்த்தம் இனி முடிந்து
கட்டாதலிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தினிலே
முட்டாத பூசையன்றோ குருநாதன் மொழிந்ததுவே".
"விந்து நாதத்தில் இயங்கும் சக்கரத்தை வெட்ட முடியுமோ வாயால் பேசி உரைக்க முடியுமோ? எமக்குள் பிராணவாயுவோடு நீர் வழங்கு வதையும், தேன் ஊறுவதையும், சீவன் சிவலிங்கமாய் மாறுவதையும் பஞ்சாக்கர மந்திரம் ஓதுபவர்களே அறிவார்கள். இது ஒரு பெரும் விந்தை, அற்புதம்".
"வழுதலை வித்திட்டேன் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுது கொண்டு ஓடினர் தோட்டக் குடிகள்
முழுதம் பழுத்தது வாழைக்கனியே" (திருமந்திரம் - 2869)
கத்தரி வித்தை நாட்ட பாக கொடி முளைத்தது. மண்ணைத் தோண்ட பூசணிப்பூ வெளிப்பட்டது. என் மனத்தில் குடிகொண்டிருக்கும் பல கற்பனைகளும் நாங்கள் போகிறோம் போகிறோமென்று தொழுது கொண்டு ஓடினர். மெய்ப்பொருளைப் பற்றிய அறிவு ஞானம் பழுத்து அமிர்தம் விளைந்தது.
"தத்துவமானது தன்வழி நின்றிடில்
வித்தகனாகி விளங்கி இருக்கலாம்
பொய்த் தவமாம் அவை போயிடும் அவ்வழி
தத்துவமாவது அகார எழுத்தே". (திருமந்திரம் - 2180)
தன் ஆத்மா இயங்கும் ஐந்தெழுத்து வழியான பஞ்சாக்சர மந்திரத்தை ஒதி நின்றிடில் மெய்ப்பொருளை உணர்ந்த ஞானி உலகில் வாழலாம். உலக மாயைச் சிக்குகள் கழன்றுவிடும். மெய்ப்பொருளாவது கருவில் மிதித்த கமலப் பாதமான அகார எழுத்து, அகார எழுத்தே விரிந்து பிரபஞ்சத்தில் சகல தோற்றங்களையும் படைத்துக் காத்து நிற்கும் மெய்ப்பொருள். அவனே இறைவன். திருமந்திரம் கூறுகின்றது.
"ஆரும் அறியார் அகாரம் அலனென்று
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
தாரம் இரண்டும் தரணி முழுதுமாய்
மாறி எழுந்திடுந் ஓசைய தாமே". (திருமந்திரம் - 1751)
அகாரத்தை இறைவனாகவும், அதிலிருந்து எழுந்த உகாரத்தை இறைவி, சத்தி சத்தியாகவும், இரண்டும் சேர்ந்து பிரபஞ்சத்தைப் படைத்த ஓமெனும் ஓசையெனக் கூறுகின்றது.
"அகாரமுதலாய் அனைத்துமாய் நிற்கும்
உகாரமுதலாய் உயிர்ப்பு எய்தி நிற்கும்
அகாரம் உகாரம் இரண்டும் அறியில்
அகார உகாரம் இலிங்கம தாமே". (திருமந்திரம் - 1753)
திருவள்ளுவரும் அகர எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்ட ஐந்து எழுத்துக்களுமே ஆதிபகவன் முதல் உலகமென்று கூறுகின்றார்.
"அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு".
திருமூலரும் பின்வரும் திருமந்திரத்தால் இந்த உண்மையையே வலியுறுத்துகின்றார்.
"அஞ்செழுத்தால் ஐந்து பூதம படைத்தனன்
அஞ்செழுத்தாற் பல யோனி படைத்தனன்
அஞ்செழுத்தால் இவ் அகலிடம் தாங்கினன்
அஞ்செழுத்தாலே அமர்ந்து நின்றானே". (திருமந்திரம் - 966)
அகாரம், இகாரம், உகாரம், ஓங்காரம், மகாரமாகிய ஐந்து எழுத்துக்களில் இயங்கும் ஆத்மா "ஓம்" என்னும் இறை நாமத்தை, பஞ்சாக்கர மந்திரத்தை ஒலிக்கின்றது. இம்மந்திரத்தைப் பற்றி ஓதினால் இவ்வுலக வாழ்வில் பேரின்பமும் ஆத்ம விமோசனமும் உண்டாகுமென்று எல்லா ஞானிகளும், முனிவர்களும், ரிஷிகளும் விளக்கமாகக் கூறியுள்ளார்கள். நாமும் இந்த உபதேசத்தை அனுட்டித்து உய்வோமாக.