"ஒன்றவன் தானே" உலகில் பல அருளாளர்கள் தொன்று தொட்டு இறைவனை நாடி அடைவதற்கான முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இறைவனைப் பற்றிய பேரறிவைத் தாம் பெற்று, அந்த அனுபவத்

"ஒன்றவன் தானே"

உலகில் பல அருளாளர்கள் தொன்று தொட்டு இறைவனை நாடி அடைவதற்கான முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இறைவனைப் பற்றிய பேரறிவைத் தாம் பெற்று, அந்த அனுபவத்தின் அடிப்படையில் பரம்பொருளின் தன்மையைப் பற்றியும், உயிர்களுடைய நிலையைப் பற்றியும், பரம்பொருளுக்கும் உயிர்களுக்கு இடையே உள்ள உறவைப் பற்றியும் தோத்திரங்கள் மூலமாகவும், சாத்திரங்கள் மூலமாகவும் பல நுட்பமான உண்மைகளை அருளாளர்கள் சொல்லக் கேட்டு நாம் தெரிந்து கொள்கின்றோம். தத்துவ மேதைகளும், அறிஞர்களும், அவர்களுடைய அறிவாற்றல் அடிப்படையில் இந்த உண்மைகளைத் தத்துவரீதியாக நமக்கு எடுத்துச் சொல்லும் போதும், அந்த உண்மைகளின் தன்மை, ஆழம் முதலியவ்றைறப் பற்றிக் கற்றுணர்ந்து பிரமித்து விடுகின்றோம். ஆச்சரியப்படுகிறோம். அறிவு மட்டத்தில் பரம்பொருளைப் பற்றித் தெரிந்து கொள்வது ஒரு படியாகும். உணர்வு ரீதியாகப் பரம்பொருள் உண்மையைத் தெரிந்து கொள்வது மற்றொரு நிலையாகும். சாத்திரங்களும் தோத்திரங்களும் நமக்குப் பரம்பொருளைக் கோடிட்டுக் காண்பித்து, அதை அடைவதற்கான மார்க்கங்களைத் தெரிவித்துத் தங்கள் பணியை முடித்துக் கொள்கின்றன. சாதகன் இறை உண்மையை அனுபவரீதியாகப் பெற்றுக்கொள்வதே முடிவான முடிவு என்று அருளாளர்கள் நமக்குத் தெரிவிக்கின்றார்கள். இந்த அனுபவம் உயிரை இறைவனுடன் இணைக்கின்றது. இதை உயிர் அனுபவம் என்றும் சொல்லலாம். திருவருளால் மட்டுமே நிகழக்கூடிய நிகழ்ச்சி இதுவாகையால் இதை அருள் அனுபவம் என்றும் கூறலாம். இந்த அனுபவத்தில் கிடைக்கக்கூடியத பேரறிவாகும். இறைவனாகிய பேரறிவில் உயிராகிய சிற்றறிவு ஐக்கியம் அடைவதே ஆன்மிகச் சாதனையின் முடிவாகும். நமது அருளாளர்கள் இந்தத் துறையில் தலையாய அனுபவம் பெற்றவர்கள். அவர்களுடைய அனுபவமும், எடுத்துக்காட்டலும் ஆன்மிகச் அடிப்படையில் முடிவான முடிவாகும். ஏனென்றால், அவை உயிருக்குச் சொல்லொணா இன்பத்தையும், அமைதியையும், மன நிறைவையும் தருகின்றன.

இந்த இடத்தில் நாம் நம்முடைய அனுபவங்களைப் பற்றிச் சற்று சிந்திப்பது நல்லது. நாம், நம்முடைய பொறிகள், புலன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, நம்மைச் சுற்றியுள்ள பொருள்களைப் பற்றிய அறிவையும் அனுபவத்தையும் பெறுகிறோம். இதை விஷய அனுபவம் என்பார்கள். நம்முடைய ஆற்றல் எல்லாம் இந்த விஷய அனுபவத்தைப் பெறுவதிலேயே பயன்படுத்தப்படுகின்றது. கடந்த சில நூற்றாண்டுகளில் அறிஞர்கள் பலர் மனிதனைப் பற்றியும், இந்தப் பூமியைப் பற்றியும், பிரபஞ்சத்தைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டு, பல நவீன கருவிகளை இதற்காக உற்பத்தி செய்து, அவற்றைப் பயன்படுத்தி, பௌதிக ரசாயன அடிப்படையில், நமது அறிவு வியக்கத்தக்க வகையில் வளரும் வகையில் பல சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள். இதனால் பெற்ற அறிவை விஞ்ஞான அறிவு எனலாம்.

பல விஞ்ஞான மேதைகளுடைய முயற்சியின் விளைவாக நமக்கு ஏராளமான விஞ்ஞான அறிவு கிடைத்திருக்கின்றது. இருந்தாலும் விஞ்ஞானிகள் திருப்தி அடைவதில்லை. தாங்கள் பெற்றுள்ள அறிவு முடிவான அறிவில்லை என்று கருதுகின்றார்கள். மேலும், மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆவலினால் உந்தப்பட்டு, மேலும் பற்பல புதிய கருவிகளை உருவாக்கி அவற்றின் மூலமாகத் தங்களுடைய அறிவையும் அனுபவத்தையும் விரிவாக்கிக் கொள்கிறார்கள். ஆழப்படுத்திக் கொள்கிறார்கள்.

இருந்தாலும், இயற்கையைப் பற்றிய அறிவை நாம் முழுமையாகப் பெற்றுவிட்டோம் என்று ஒருவராலும் சொல்ல முடியாது. பல கோடி சீவராசிகளையும், தாவர இனங்களையும், இயற்கையின் இயக்கம், நியதி ஆகியவற்றையும் நாம் கண்டு அனுபவிக்கும்போதெல்லாம் இயற்கையின் விரிந்த ஆழ்ந்த தன்மை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொருளைக் கூறிட்டுக் கொண்டே போனல் கடைசியில் கிடைப்பது எல்லவாற்றையும் விட நுண்ணியமான அணு என்கின்ற பொருள் என்று விஞ்ஞானிகள் கூறினார்கள். ஆனால், இப்பொழுது அந்த அணுவையும் பிளந்து பார்க்கும்போது அதற்குள்ளும் பல பொருள்கள் இருப்பதைத் தத்துவ ரீதியாகவும், பரிசோதனைகள் மூலமாகவும் விஞ்ஞானிகள் நிரூபதித்துள்ளார்கள். இவ்வாறு சொல்லக்கூடிய அணுவின் உட்பொருட்களில் ஒன்று எலக்ட்ரான் என்பதாகும். இந்த அணுவையோ அல்லது எலக்ட்ரான் போன்ற அணுவின் உட்பொருட்களையோ நாம் கண்களால் காண முடியாது. எனினும் அவை இல்லையென்று ஒருவரும் மறுத்துச் சொல்வதில்லை. ஒரு காலத்தில் அணுவுக்குள் இந்த எலக்ட்ரான் என்பது வட்டமாக நடுவில் இருக்கும் புரோட்டான், நியூட்ரான் போன்ற உட்பொருட்களைச் சுற்றி வந்ததாகக் கருதப்பட்டது. ஆனால், இப்பொழுது அந்த எலக்ட்ரான் என்னும் உட்பொருளுடைய தன்மையை மேலும் மேலும் ஆராய்ந்து பார்க்கும்பொழுது அதைக் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் இருப்பதாக நிர்ணயிக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். ஓரளவு அதை யூகிக்கலாமென்றும் மற்றபடி தெளிவாக அதனுடைய நிலையை நிர்ணயிப்பது கடினம் என்றும் இப்பொழுது கருதப்பட்டு வருகின்றது. அணுவின் உட்பொருட்களுக்குள் ஏராளமான பலவிதத் தன்மை வாய்ந்த உட்பொருள்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஆகவே, இயற்கையின் தன்மையை முடிவாகப் புரிந்துகொண்டு விட்டோமென்று கூற முடியாது.

வேறு உதாரணத்தையும் கொடுக்கலாம். சென்ற நூற்றாண்டில் விஞ்ஞானிகள் பொருள் என்றும் ஆற்றல் என்றும் பேசி வந்தார்கள். இன்று இவ்வாறு இவ்விதமாகப் பாகுபாடு செய்யப்படுவதில்லை. பொருளுக்கும் ஆற்றல் நிறைந்திருப்பதாகவும், பொருளையே ஆற்றலாக்கி விடலாமென்றும், ஆற்றலைப் பொருளாக்கி விடலாமென்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.

இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது இயற்கையின் உண்மையான தன்மையை அறிவதென்பது மிகக் கடினமென்றே புலப்படுகிறது. ஆனால், விஞ்ஞானிகள் சளைத்துவிடாமல் மேலும் மேலும் பரிசோதனைகள் மூலம் அறிவை வளர்த்துக்கொண்டே போகின்றார்கள். அறிவு வளர வளர நாகரீகமும் வளர்கிறது. எந்தக் கொள்கையை முன்வைத்து அறிவை அடைய முற்படுகின்றோமோ அந்தக் கொள்கை மறக்கப்பட்டு அறிவினால் கிடைக்கக்கூடிய ஆற்றலை இக வாழ்விற்குப் பயன்படுத்தவே தொடங்கி விடுகின்றோம். இதுவும் திருவருளின் விளையாட்டுப் போலும்! அருளாளர்கள் உணர்வு நிலையிலிருந்து கொண்டு பிரபஞ்சங்களின் எல்லா உண்மைகளையும் திருவருளால் தம்முள் உணர்ந்து கொள்கின்றார்கள். உதாரணமாக, அண்டங்களிலுள்ள கோள்கள், புவனங்கள் அனைத்தும் உருண்டை வடிவமாகவே உள்ளன என்றும், அவை எந்த அளவையானாலும் அளந்து காண முடியாதவை எனவும், அவற்றின் அற்புதங்கள் சொல்லில் அடங்கா எனவும், இவ்வண்டங்கள் விரிந்தவண்ணம் உள்ளன எனவும், வீட்டுச் சாளரத்தின் வழியே புகும் சூரியனின் கதிர்களில் மிதக்கும் நுண்ணிய அணுப்போன்ற துகள்கள் போல எண்ணிறந்த உலகங்கள் மிதந்து கொண்டிருக்கின்றன எனவும், கூறியுள்ள மாணிக்கவாசகப் பெருமானின் திருவாக்கினை நினைத்துப் பார்க்கும்பொழுது அருளாளர்கள் மெய்ஞ்ஞான வழியில் பல உண்மைகளைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தெரிந்து கொண்டு விட்டார்கள் என்பது நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது.

"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்

அளப்பரும் தன்மை வளப்பரும் காட்சி

ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில்பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

இல்நுழை கதிரின் நுண் அணுப் புரையச்

சிறியவாகப் பெரியோன் தெரியின்" (திருவண்டப்பகுதி - திருவாசகம்)

நம்மால் பொருளிலுள்ள அணுவை ஐம்பொறிகளின் மூலம் உணர முடிவதில்லை. ஆனால், அணுவின் தன்மையைப் பற்றி விஞ்ஞானிகள் கூறுவதை ஒப்புக்கொள்கின்றோம். ஆகாயத்தைப் பார்க்கின்றோம். ஆனால் ஆகாயம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள முடிவதில்லை. அவ்வளவு தூரம் போகத் தேவையில்லை. நம்மைச் சுற்றிப் பற்பல ஜீவராசிகளைப் பார்க்கின்றோம். ஆனால், அவை எவ்வாறு இயங்குகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளவில்லை. தெரிந்த சில விஷயங்களை வைத்துக் கொண்டு பெருமையாகப் பேசிக் கொள்கின்றோம். ஆனால், தெரியாதவற்றை நினைக்க வேண்டிய சந்தர்ப்பம் வரும்பொழுது புரியாத நிலையில் தட்டிக் கழித்து விடுகின்றோம். விஞ்ஞானிகள் சொல்லுவதை ஒப்புக்கொள்ளும் நாம் ஆன்மிக அனுபவம் பெற்ற அருளாளர்கள் கூறுவதை ஒப்புக்கொள்ளத் தயங்குகின்றோம். இறைவன் இல்லை என்கிற நிலையிலிருந்து வாதத்தைத் தொடங்கும் பெரியவர்கள், விஞ்ஞானத்தின் உண்மைகளை ஒப்புக் கொண்டவர்கள். விஞ்ஞானிகளும் முடிவான உண்மையைக் கண்டுபிடிக்கவில்லை என்பதையும் சற்று புரிந்து கொள்ள வேண்டும். சிறிது அடக்கத்துடன் இந்தப்

பிரச்சினையை அணுகிச் சிந்தித்துப் பார்க்கும்பொழுது நாம் "அறிவு அறிவு" என்று பறைசாற்றி வரும் நிலை முடிவான நிலை அன்று என்பதைப் புரிந்து கொள்ள இயலும். இதையே திருமந்திரத்தில் திருமூலர் அழகாப் பின்வருமாறு பாடுகின்றார்.

"எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு

எல்லாம் அறிந்தும் இலாபமங் கில்லை

எல்லாம் அறிந்த அறிவினை நானெனில்

எல்லாம் அறிந்த இறையென வாமே". (திருமந்திரம் - 2596)

நாம் பெறும் அறிவு சுட்டிக்காட்டுவது என்ன என்பதைப்பற்றிச் சற்று சிந்திக்க வேண்டும். நாம் அறிவு பெறுகின்றோம் என்றால் நாம் யார்? நாம், நமது உடல், அத்தோடு சேர்ந்திருக்கும் கருவிகள், மனம், புத்தி, சித்தம் போன்ற உட்கருவிகள் அல்ல என்பது தெரியும். நாம் யார் என்பதைப் பற்றிய சிந்தனையை வேறொரு கட்டுரையில் தொடருகின்றோம். இங்கே நாம் என்பது உயிர். உயிர் என்பது அறியும் அற்றல் பெற்ற ஒரு பொருள் என்கிற அளவுக்குத் தெரிந்து கொள்ளலாம். நாம் அறியும் பொருளாக இருந்தாலும், நம்முடைய அறிவாற்றலுக்கு குறைபாடுகள் உண்டு. நம்முடைய அறிவுச் சக்தி தானாக இயங்குவதில்லை. அறிவோடு அறிவாக பேராற்றல் ஒன்று நமது அறிவை இயக்கி வருவதால்தான் நமது அறிவு இயங்குகின்றது. இல்லாவிட்டால் இயங்காது. மேலும், நம்முடைய அறிவு தான் சார்ந்த பொருளின் தன்மையைப் பெறும் இயல்புடையது. அதாவது எந்த ஒரு நேரமும், எந்தப் பொருளைப் பற்றிச் சார்ந்து இருக்கின்றதோ, அந்தப் பொருளைப் பற்றிய அறிவை மட்டும் பெறும். இவையெல்லாம் நம்முடைய அறிவின் குறைபாடுகள். அதே நேரத்தில் நம்முடைய அறிவாற்றல் நமக்கு இறைவனால் அருளிச் செய்யப்பட்டிருப்பதால், இறைவனுடைய அருளாற்றலின் தன்மையைக் குறிப்பிட்ட அளவு பெற்றிருக்கின்றது என்பதை உணர வேண்டும். இதுவே உயிர் என்று சொல்லி இயங்கி வருகின்றதை நாம் பெற்ற பெரும் புண்ணியம். இறைவன் பேரருளாளன். எல்லையற்ற அறிவொளி பெற்றவன். பேராற்றல் பெற்றவன். அவனுடைய அறிவும் அருளுமே நம்மை இயக்கி வருகின்றன. இதை அருளாளர் பெருமக்கள் நன்கு அறிந்து, உணர்ந்து, அவர்களுடைய அனுபவத்தை நமக்குத் தந்துள்ளார்கள். அவர்களுடைய அறிவாற்றல் புறத்தே சென்று விஷய அனுபவத்தைப் பெறுவதற்குப் பதிலாக நம்முள்ளேயே கிடக்கும் பரம்பொருள் உண்மையை உணர்ந்து கொண்டிருக்கின்றது. அந்த உணர்வை அருளாளர் பெருமக்கள் தோத்திரங்கள், சாத்திரங்கள் மூலமாக நம்முன் வைத்துள்ளார்கள்.

திருமூலர் பெருமான் அருளிச் செய்துள்ள திருமந்திரமாலை ஓர் சிறந்த அனுபவ நூல். அவருடைய திருவாக்கு தெளிவாகவும், ஆழமாகவும் இறை உண்மையை வெளிப்படுத்துகின்றது. எல்லாவற்றிற்கும் சிகரமாக விளக்குவது பாயிரப் பகுதிகயிலுள்ள முதல் மந்திரம்ட, அது பின்வருமாறு -

"ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்

நின்றவன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து

வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்

சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே". (திருமந்திரம் - 1)

அதே நிலையை விவரிக்கும் திருஞானசம்பந்தருடைய பாசுரம் வருமாறு -

"ஈறாய்முதல் ஒன்றாய்இரு பெண் ஆண்குணம் மூன்றாய்

மாறாமறை நான்காய்வரு பூதம் அவை ஐந்தாய்

ஆறார்சுவை எழோசையோ டெட்டுத்திசை தானாய்

வேறாய்உடன் ஆனான் இடம் வீழிம்மிழ லையே".

அப்பர் சுவாமிகள் பின்வருமாறு அருளுகின்றார்.

"இரு நிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய்

எறியும் காற்று மாகி

அருநிலையதிங் களாய் ஞாயிறாகி ஆகாசமாய்

அட்ட மூர்ததியாகிப்

பெருநலமும் குற்றமும், பெண்ணும் ஆணும்

பிறர்உருவும், தம்முருவும் தாமேயாகி,

நெருநலையாய் இன்றாகி நாளையாகி

நிமிர்புன் சடை அடிகள் நின்றவாறே".

இரத்தினச் சுருக்கமாக மாணிக்கவாசகர் "ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க" என்று வாழ்த்தினார்.

அருட்பிரகாச வள்ளலார் இந்த உண்மையை மேலும் பின்வரும் அடிகளில் தெளிவாக்குகின்றார்.

"மந்திரமாய்ப் பதமாகி, வண்ண மாகி,

வளர்க லையாய்த் தத்துவமாய்ப் புவன மாகி,

சந்திரனாய், இந்திரனாய், இரவி யாகித்

தானவராய், வானவராய்த் தயங்கா நின்ற

தந்திரமாய், இவையன்றும் அல்ல வாகித்

தானாகித் தனதாகித் 'தான்நான்' காட்டா

அந்தரமாய் அப்பாலாய், அதற்கப் பாலாய்,

அப்பாலுக் கப்பலாய் அமர்ந்த தேவே".

இவற்றையெல்லாம் பார்த்தால் இறை உணர்வாளார்களுடைய அனுபவம் ஒன்றேதான் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியும். தங்களுடைய யோகத்தின்

ஆற்றலாலும், தவத்தின் வலிமையாலும், தியானத்தின் ஆழத்தினாலும், உண்மையை உணர்ந்த அருளாளர்கள் தங்கள் உள்ளத்தில் எழும் அனுபவங்களை மந்திரமாக நமக்குத் தரும்பொழுது, உன்மை ஒன்றே என்கின்ற காரணத்தினால் அவர்களுடைய மொழியில் ஒற்றுமை தோன்றுகிறது.

அருளாளர்கள் தரும் பரம்பொருள் விளக்கம் அவர்களுடைய அனுபவத்திலே தோன்றியதாகும். இறைவனைச் சிற்றறிவினால் அறிந்து கொள்ள முடியாது. நமது அறிவுக்கு அப்பாற்பட்டு இருக்கும் ஓர் உண்மையை இறைவனுடைய திருவருளாலே நாம் அறிந்து கொள்ள முடியும். திருவருளைப் பெற்ற அருளாளர்களுடைய திருவாக்கு மந்திர சக்தியைப் பெற்றது. அவர்களுடைய பரம்பொருள் விளக்கம் முழுமையானது. எல்லா அனுபவங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது. ஒன்று அவன்தானே என்று கூறிவிட்டார் திருமூலர் பெருமான்.

இறைவன் ஒருவனே என்பது அதற்குப் பொருள். உலகெலாம் வியாபித்திருப்பதும் ஒரே பொருளே. மற்றவையெல்லாம் தெய்வங்கள், பரம்பொருளின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் உட்பட்டு இயங்குகின்றன. மெய்ப்பொருள் ஒன்றாகத்தான் இருக்க முடியும். உள்ளது ஒன்றே. அதுவே உண்மை என்பது வேத வாக்கு. இறைவன் பரிபூரணன். பரம்பொருளுக்குப் பல பெயர்கள் கொடுத்து வழிபட்டாலும் உள்ளது ஒன்றே. ஒரு நேரத்தில் அல்லது ஒரு இடத்தில் இருந்து மறைந்து, மற்றொரு நேரத்தில் அல்லது மற்றொரு இடத்தில் அழிந்து மறைவது மெய்ப்பொருள் ஆகாது. இடத்தாலும், காலத்தாலும் கட்டுப்படாதவை மெய்ப்பொருள். தோன்றி அழியக்கூடிய பொருளை மெய்ப்பொருள் என்று கூற முடியாது. "நித்தியமாய், நிர்மலமாய், நிட்கலமாய், நிராமயமாய், நிறைவாய், நீங்காச் சுத்தமுமாய், தூரமுமாய், சமீபமுமாய், துரிய நிறைச்சுடராய்" விளங்கும் என்று பரம்பொருளின் தன்மையைத் தாயுமானார் பெருமான் கூறுகின்றார்.

பரம்பொருளின் தன்மையைப் பலவாறாகப் பிரித்துச் சொன்னாலும் எல்லாவற்றிற்கும் மேலாகப் பரம்பொருள் என்பது "சத், சித், ஆனந்தம்" என்றே அழைக்கப்படுகிறது. இந்த மூன்று நிலைகளையும் உணர்ந்தே அனுபவிக்க இயலும். எனவேதான் சமயத்தின் குறிக்கோள் இந்த மூன்று நிலைகளையும் அனுபவித்துத் தனதாக்கிக் கொள்வது என்பதாகும். சமயங்களும் மக்களும் பரம்பொருள் எங்கும் வியாபித்திருக்கின்ற நிலையில் அதுவே நிலையான பொருள் என்று எடுத்துரைக்கின்றனர். "சுத்த சிவம் எங்கும் தோய்ந்து நிற்கின்றாள்" என்கின்றார் திருமூலர். "எங்கும் சிவனடிக்கே செல்வம்" என்பதும் திருமூலர் வாக்கு. இப்பரம்பொருள் "நெஞ்சு நிறைந்தங் கிருந்த நெடுங்சுடர்" (திருமூலர்) ஆகும்.

எல்லா வுயிர்க்கும் இறைவனே யாயினும்

கல்லாதார் நெஞ்சத்துக் காண வொண்ணாதே.

(திருமந்திரம் - 312)

எல்லாவற்றிற்கும் காரணமான எங்கும் பரவியுள்ள பரம்பொருளின் தன்மையை

விளக்க இயலாத நிலையைப் பிரம்மனும் திருமாலும் அடிமுடி காணாத நிலை என்று கூறப்படுகின்றது. இந்த மெய்ப்பொருள் ஒன்றைத்தான் பலர் பலவாறாகத் துதிக்கின்றனர். இதையே

"ஏகம் ஸத் விப்ரா பஹ§தா வதந்தி"

என்று ருக் வேதம் கூறுகின்றது.

"ஆரறி வார்எங்கள் அண்ணல் பெருமையை

யாரறி வார்இந்த அகலமும் நீளமும்

பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்

வேரறி யாமை விளம்புகின் றேனே". (திருமந்திரம் - 95)

பரம்பொருளைச் சுட்டறிவினால் மட்டும் அறிந்து கொள்ள முடியாது. அவனருளாலே நம்முடைய உணர்வுகள் தூய்மைப்பட்டிருக்கும் நேரத்தில் உள்ளத்திலே தோன்றும் ஞான ஒளி வாயிலாக உணர்ந்து கொள்ள முடியும். அப்படி அனுபவிக்கப்படும் பரம்பொருளைச் சத்தியம், ஞானம், ஆனந்தம் என்று மறைகள் கூறுகின்றன. பரம்பொருள் அறிவுப் பெருவழி. ஆனந்தத்தின் இருப்பிடம். இங்கே பயன்படுத்தப்படும் சொல் ஆனந்தம். இன்பம் என்று கூறுகின்றபொழுது அதற்கெதிராகத் துன்பம் என்கிற அனுபவம் உடனேயே வருகின்றது. ஆனால், ஆனந்தம் என்கின்ற நிலைக்கு எதிராகவோ மேலாகவே ஒரு நிலை கிடையாது. ஆனந்தத்திலிருந்து உயிர்கள் தோன்றின. தோன்றிய உயிர்களெல்லாம் ஆனந்தத்தில் வாழ்கின்றன. இறுதியில் ஆனந்தத்தில் லயமடைகின்றன என்று உபநிடதங்கள் கூறுகின்றன. பரம்பொருளோடு வேறொரு தெய்வத்தையும் ஒப்பிட முடியாது. "சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை" என்பார் திருமூலர் பெருமான். அவனுக்கு உவமை அவனே. அவனின்றி வேறு தேவர்களும் இல்லை. அவனல்லாது செய்கின்ற தவங்களும் இல்லை. பரம்பொருளின்றிப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள் புரிதல் போன்ற தொழில்கள் நடைபெறா உயிர்களுக்குத் தலைவன் ஈசன், அவனின்றி ஒரு அணுவும அசையாது. அவனுக்கு அப்பாற்பட்டு வேறு ஒன்றும் இல்லை. எங்கும் வியாபித்திருக்கும் பரமபொருள் எதிலும், எல்லாவற்றிலும் அடங்கி நிற்கும். "படம் கொண்டு நின்ற பல்லுயிர்க்கெல்லாம் அடங்கலும் தாமுமாய் நின்றான்" என்பார் திருமூலர் பெருமான். உயிருக்கு உயிராக நிற்கும் ஈசன், அணுவிற்கு அணுவாக அடங்கி நிற்கும். இன்று விஞ்ஞானிகள் அணுவுக்குள்ளேயே மாபெரும் சக்தியை கண்டுபிடித்துள்ளார்கள். சக்தி என்பது இறைவனுடைய அம்சமாகும். அணுவுக்குள்ளேயே ஈசன் இருப்பதைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே திருமூலர் பெருமான் சொல்லிவிட்டார்.

"அணுவில் அணுவினை ஆதிப் பிரானை

அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்

டணுவில் அணுவை அணுக வல்லார்கட்

கணுவில் அணுவை அணுகலுமாமே". (திருமந்திரம் - 2003)

அணுவைத் துளைத்துப் பார்க்கும் பொழுது அந்த அணுவிலே தெரியக் கூடிய சக்தியை இறைவனுடைய சக்தியாகவே திருமூலர் பெருமான் பார்க்கின்றார். அருளாளர்கள் கண்ட உண்மை அணுவை எவ்வளவு கூறிட்டுப் பார்த்தாலும் அகக் கண்கட்குத் தோன்றும் காட்சி அந்த இறைவனுடைய தன்மையேயாகும். இறைவன் அணுவிற்குள் அணுவாக இருக்கின்றான். பரம்பொருளை அனுபவிக்க முயல்பவர்கள் சிந்தனையில் இது முதற்கட்டமாகத் தோன்ற வேண்டும். அணுவுக்குள் அவனும், அவனுள் அணுவும் வேற்றுமையற்ற நிலையில் கலந்திருக்கக் கூடிய உண்மை நன்கு தெரிந்து விடும்.

"அணுவுள் அவனும் அவனுள் அணுவுங்

கணுவற நின்ற கலப்ப துணரர்

இணையிலி யீச னவனெங்கு மாகித்

தணிவற நின்றான் சராசரந் தானே". (திருமந்திரம் - 2010)

"அணுத் தரும் தன்மையில் ஐயோன் காண்க" என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார். அணுவில் இருக்கும் இறைவன் அண்டமெல்லாம் நிறைந்தவனாகவும அதற்கும் அப்பாற்பட்டும் நிற்கின்றான். எல்லையற்ற பரம்பொருள் மண்ணிலும் விண்ணிலும், தீயிலும் நீரிலும், நிற்பது மட்டுமல்லாமல் அவற்றிற்கெல்லாம ஆதாரமாகவும் விளங்குகிறது. சொற்பதம் கடந்த தொல்லோனுடைய அருளினால், ஆணையால், சராசரங்கள் யாவும் சுழன்றும் இயங்கியும் வருகின்றன. இறைவனுடைய தாண்டவம் எப்போதும் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது. "எங்கும் திருமேனி, எங்கும் சிவசக்தி", எண்ணிலா அண்டங்களுக்கும் இறைவன் ஆதாரமாக விளங்குகின்றான். பல்வகைச் சீவராசிகளுக்கு அடிப்படைத் தத்துவமாக விளங்குகின்றான். பல திசைகளிலும் சூழ்ந்துள்ள இறைவனுக்கு எண்ணற்ற பிரபஞ்சங்களே நடஞ்செய்யும் ஆலயமாக அமைகின்றன.

"அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி

தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி

எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி

அண்ட நடஞ்செயும் ஆலயந் தானே". (திருமந்திரம் - 2773)

அருவமாக இருக்கும் பரம்பொருள் உயிர்களின் உணவுக்காக அரு உருவமாகவும், உருவமாகவும், அனுபவப் பொருளாகவும் உயிர்களோடு கலந்துள்ள நிலையில் உணர்வுகளால் அறிந்து கொள்ளக்கூடிய தன்மையிலும் நிற்கின்றது. பரம்பொருள் எண்ணற்ற அண்டங்களோடு கலந்து நிற்கின்றது. உள்ளும் புறமும் தோய்ந்து நிற்கிறது. நீரினில் பால் போல் குணமும், மணமும் இணைந்து நிற்கின்றது. இதை உணர்ந்தால் கிடைக்கக்கூடிய ஆனந்தம் விவரிக்க இயலாத ஒன்று.

"ஆரும் அறியாத அண்டத் திருவுருப்

பார்முத லாகப் பயிலுங் கடத்திலே

நீரின்றிப் பால்போல் நிற்கின்ற நேர்மையைச்

சோராமற் காணுஞ் சுகம் அறிந்தேனே." (திருமந்திரம் - 450)

இறைவன் படைத்தலுக்கும், காத்தலுக்கும், ஒடுக்கத்திற்கும் காரணமாக இருக்கின்றான். அவனே உயிர்களுக்கு அருள்புரிந்து, தக்க நேரத்தில் பல பரிபாகம் செய்து அவற்றைத் தன்னுடன் கலக்கச் செய்கின்றான். விரும்பிய மாத்திரத்திலேயே பல ஊழிகளையும், உலகங்களையும், உடலையும் படைத்து அருள் புரிபவன் அவனே.

"ஒருவனுமே உலகேழும் படைத்தான்

ஒருவனுமே உலகேழும் அளித்தான்

ஒருவனுமே உலகேழும் துடைத்தான்

ஒருவனுமே உலகோடு உயிர்தானே." (திருமந்திரம் - 404)

இறைவன் உடலிலும், உயிரிலும், அசையும் பொருளிலும், அசையாப் பொருளிலும் இரண்டறக் கலந்துள்ளான். தண்ணீரில் உப்புக் கரைந்திருக்கும் பொழுது உப்பினைத் தனியாகப் பார்க்க முடிவதில்லை. ஆனால், கதிரவனின் வெப்பத்தால் நீர் ஆவியாகும் பொழுது உப்பானது தனியே தங்குகின்றது. அதேபோல இறைவன் தான் படைத்த உயிரினங்களுடன் வேற்றுமையின்றிக் கலந்துள்ளான்.

இதனையே மாணிக்கவாசகர் "எள்ளும் எண்ணெயும் போல் நின்ற எந்தையே" என்கின்றார்.

எல்லாப் பொருள்களிலும் வியாபித்துள்ள இறைவன் இப்பூவுலகத்தைத் தாங்கிக் கொண்டு ஆகாய வடிவினனாய் இருக்கின்றான். அவனே சுடுகின்ற தீயாகவும், கதிரவனாகவும், திங்களாகவும் உள்ளான். அவனே அருள் மழை பொழியும் ஆற்றலாகவும் நிறடகின்றான். அவனே பரந்து உயர்ந்த மலையாகவும், குளிர்ச்சியான கடலாகவும் நிற்கின்றான். இந்த மந்திரத்தின் உட்பொருள் அவனன்றி வேறில்லை என்பதேயாகும். அவனாலேயே அசைவில்லாத சடபொருள்கள் அசைகின்றன. அவனன்றி ஓர் அணுவும் அசையாது.

"தானே இருநிலந் தாங்கிவிண் ணாய் நிற்குந்

தானே சுடும் அங்கி ஞாயிறுந் திங்களூந்

தானே மழைமொழி தையலு மாய் நிற்குந்

தானே தடவரை தண்கட லாமே". (திருமந்திரம் - 10)

அருளாளர்கள் இறைவனைத் தூய சோதியாக, நந்தா விளக்காக, மாசற்ற சுடராகத் தங்களுடைய உள்ளத்தில் அனுபவிக்கின்றார்கள். சூரியனும் சந்திரனும், விண்மீன்களும் அவனது ஓளியாலேயே பிரகாசிக்கின்றன. அவற்றின் இயக்கங்களில் அவன் வெளிப்பட்டு நிற்கின்றான். இறையெனும் அணையா விளக்கைத்தவிர வேறு விளக்கு இருக்க முடியாது. நம்முள் விளக்கினை ஏற்றி, வெளியை, அம்பலத்தை அறிய வேண்டும்.

அறிவு வழியாகப் பரம்பொருளின் தன்மையை விளக்கிக் கொண்டே போனாலும், அதை உணர்வு ரீதியாக அனுபவித்தாலன்றி உண்மை விளக்கம் கிடைக்காது. அருளாளர்கள் இந்த உண்மை விளக்கத்தைப் பெற்றவர்கள். பரிசோதனை மூலமாகவும் விஞ்ஞான வழிகளினாலும் ஐம்பொறிகளைப் பயன்படுத்தி அவர்கள் இந்த உண்மையைக் கண்டுகொள்ளவில்லை. இந்த உண்மையை உணர்வதற்கான வழிகள் வேறு என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்கள் கடைப்பிடித்த மார்க்கம், வழி நடந்து சென்ற பாதை, மற்ற மார்க்கங்கள் ,பாதைகள் போல் அல்ல. இறைவனை அவர்கள் எங்கெல்லாமோ தேடிச் செல்லவில்லை. புண்ணிய நதிகளில் நீராடுவதும், திருத்தலங்களுக்குச் சென்று அங்குள்ள இறைவனை வணங்குவதும், ஆன்மிகத்தில் பக்குவமடைந்த பெரியோர்கள் உபதேசங்களைக் கேட்பதும் ஒரளவிற்குப் பயன்படுகின்றன. நமது மனதைத் குவித்து, ஒருங்கமைத்து தான் என்கின்ற நினைவை சற்று அகற்றி வைப்பதற்கு இந்த மார்க்கங்கள் பயன்படுகின்றன. அவற்றின் எல்லையை அடைந்த அருளாளர்கள் தாங்கள் வீற்றிருந்த இடங்களிலேயே இறைவனைக் காண்கின்றார்கள். வணங்குகின்றார்கள், வழிபடுகிறார்கள். எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருக்கக்கூடிய பரம்பொருள் ஊனிலும் உயிரிலும் உள்ளது என்று அனுபவித்த அருளாளர்களின் திருவாக்கு மந்திரமாகும். அது நிலை பெற்றது. மாறாத தன்மையை உடையது. இது புறவழிச் சாதனையன்று. இது அகவழிச் சாதனையாகும்.

"என்ஒன்றி நினைந்தவர் தம்பால்

உள்நின்று மகிழ்ந்தவன் ஊர்ஆம்"

என்கிறார் திருஞானசம்பந்தர்.

அறிவுக்கு அப்பாற்பட்ட இறைவனை அனுபவப் பொருளாக்கிய சாதனை நம்முடைய அருளாளர்களைச் சாரும். நமது சுட்டறிவுக்கு எட்டாத இறைவனைத் தனது உள்ளம் கவர் கள்வன் என்று கூறித் தன்னுடைய குழந்தை விரலால் சீர்காழிப் பெருமானைச் சுட்டிக்காட்டி "பிரம்மாபுரம் மேவிய பெம்மான்" என்று உலகோருக்கு உணர்த்திய பெருமை உலகின் முதல் ஞான கருவான திருஞானசம்பந்தப் பெருமானைச் சேரும். புறத்தே இறைக்காட்சியை தந்து அனுபவிக்கும் மெய்யுணர்வாளர்கள் அகத்தேயும் இக்காட்சியிலே ஊறி நிற்பதை அருளாளர்களுடைய திருவாக்கின் வாயிலாக அறிந்து கொள்கின்றோம். இதைப் பற்றிச் சற்று மேலும் சிந்திக்க வேண்டும். இறைவன் நமது உடலிலும் தங்குகின்றான் என்று கூறுவுதைப் பலர் ஏற்பதில்லை. நமது உடல் ஒரு சடப்பொருள். அழியும் தன்மையுடையது. இத எவ்வாறு இறைவனுடைய இருப்பிடமாகும் என்று பகுத்தறிவாளர்கள் ஐயம் எழுப்புகின்றார்கள். இதற்கு அறிவு ரீதியான விளக்கம் கொடுப்பது கடினம். அருளாளர்களுடைய அனுபவத்தைச் சுட்டிக் காட்டி அதை விளக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதை பகுத்தறிவாளர்கள் ஏற்றக் கொள்ள மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை இதுபோன்ற அனுபவத்தை விஞ்ஞானரீதியாக விளக்க முடியாது என்பதே அவர்களுடைய நிலையாகும்.

மனிதன் தோன்றின நாள் முதற்றே பரம்பொருள் என்று ஒன்று உள்ளதா இல்லையா என்கின்ற கேள்வியைக் கேட்டுக்கேட்டு அதற்குப் பலவாறாகப் பதில் அளிக்கச் சிந்தனையாளர்கள் முயற்சி செய்திருக்கின்றார்கள். இறைவனைப் புறத்திலே காண முடியும் என்கின்ற கோட்பாடு உடைய சமயங்கள் நம் நாட்டில் மட்டுமன்று, மேல்நாடுகளிலும் இருந்து வந்துள்ளன. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலான நிலையான இறைவனைத் தம்முள் உணர முடியும் என்னும் எண்ணத்தை, நம்பிக்கையை உலகிற்கு அருளாளர்கள் தங்களுடைய அனுபவம் மூலமாக எடுத்துக் காட்டியுள்ளார்கள். இந்த உணர்வு நிலையைப் பற்றிச் சற்று சிந்திக்க வேண்டும். நம்முடைய ஐம்பொறிகள் இயங்கும் பொழுது அவை தாண்டி விடுவது நம்முடைய உள் உணர்வைத்தான் என்பதை முதலில் யாவரும் ஒபபுக்கொள்வார்கள். கண்கள் பார்க்கின்றன, காதுகள் கேட்கின்றன, வாய் பேசுகிறது, மூக்கு நகர்கிறது. நாம் வேறு ஒரு பொருளைத் தொடும்பொழுது அதனாலும் பற்று உணர்வு ஏற்படுகிறது. இந்த ஐம்பொறிகள் புறத்தே உள்ள பொருட்கள் பற்றிய அறிவினை நம்முள் இருக்கும் மனதுக்குள் சேர்க்கின்றன. மனமானது விஷய அனுபவங்களில் சேர்க்கையாகின்றது. அவற்றால் எழும்பக்கூடிய எண்ண அலைகள் மனத்தின் அமைப்பிற்கு உரு அளிக்கின்றன. இந்த விஷய அனுபவங்களையும், எண்ண அலைகளையும் பாகுபடுத்தி அவற்றிற்கெனப் பொருளையும் நெறியையும் தருகின்றது புத்தி. இந்தப் பக்கம் எலலாம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் நான் என்கின்ற எழுச்சி தோன்ற வேண்டும். நான் என்கிற முனைப்பின்றி விஷய அனுபவங்களுக்கும் எண்ணங்களுக்கும் பொருளே இருக்காது. மனம், புத்தி, அகங்காரம் ஆகியவற்றை உட்கருவிகள் என்று சொல்லுவார்கள். இந்த உட்கரணங்களின் பணியே மற்ற உயிர்களிடத்தே தம் நிலையை வலுப்படுத்திக் கொள்வதுதான். இவ்வாறு வலுப்படுத்திக் கொள்வதன் வாயிலாகவே பிரபஞ்ச இயக்கம் நடைபெறுகிறது. படைப்புத் தொழில் தொடங்குகிறது.

உடலையும், உடலில் கருவிகளையும் கொண்டு புறத்தை மையமாக வைத்து வாழும் வாழ்க்கை நான், எனது என்கிற பற்றின் அடிப்படையில் அமைகின்றது. வேற்றுமைகள் வளருகின்றன. புறக்காட்சி உடலையும், உள்ளத்தையும் நிரப்புகின்றது. அக்காட்சி மறைகின்றது. சாதாரணமாகச் சொல்லப் போனால் வாழ்வின் நிர்ப்பந்தங்களில் மூழ்கி உலகத் தத்துவங்களிலே ஈடுபட்டு சமூகத்தின் கட்டுப்பாட்டுகளுக்குள் வாழ்ந்து குடும்பம் என்றும், மனைவி மக்கள் என்றும், சொத்தென்றும், செல்வமென்றும் சூழலில் அகப்பட்டுக் கொண்ட அத்தகைய சூழலில் வீழ்ந்து நிற்கின்றோம் என்றும் அறிந்து கொள்ளாமல் ஒருவித மாயையில் நாம் இருக்கும்போது, நமது மனதை உட்புறம் செலுத்தி, அக்காட்சி பெரும் முயற்சியில் இயங்குவது மிகமிகக்கடினமாகும். அக்காட்சி என்கிற உணர்வே, அனுபவமே இருக்க முடியாது என்றுகூடச் சொல்லத் தோன்றும். இந்தி நிலையை மாற்றி வெற்றி கண்டவர்கள் அருளாளர் பெருமக்கள். மனம், புத்தி, அகங்காரம் போன்றவைகள் வெறும் கருவிகள் என்று அவர்கள் உணர்ந்தவர்கள். அவற்றை முதற்கண் அவர்கள் அடக்க முற்படுகிறார்கள். சதா வெளியே தாவி ஒடத் தயாராக இருக்கும் ஐம்பொறிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். மனமும், எண்ண அலைகளும் விஷய அனுபவத் துடிப்பும் சிறிது சிறிதாகத்

தங்கள் இயக்கத்தைக் குறைந்து ஒடுங்கிய நிலையில் வரும் பொழுது சொல்லொணா அமைதி தோன்ற ஆரம்பிக்கின்றது. அகண்ட, ஆழ்ந்த கடலின் கரையோரத்தில் நின்று இயற்கை காட்சியை அனுபவிக்கும் ஒருவனுக்கு, என்றும் ஓயாத கடலலைகளின் படமும், அவ்வலைகளின் ஒசையுமே மனதில் நிற்கின்றது. கடலின் அகண்ட, விரிந்த, ஆழ்ந்த தன்மையை அவன் அப்பொழுது அறிந்து கொள்வதில்லை. அதே மனிதன் ஒரு கப்பலில் நடுக்கடலில் பிராயணம் செய்யும் பொழுது நான்கு பக்கங்களிலமுள்ள நீரின் கரையற்ற நிலையை உணருகிறான். கடலின் ஆழத்தையும் அவன் ஓரளவு புரிந்து கொள்ள முடிகின்றது. அலையற்ற அக்கடலின் மத்தியில் பிராயணம் செய்யும் அவனுக்குச் சிந்தை தெளிகின்றது. மனம் அமைதி அடைகின்றது. அந்த நிலையில் கடலின் உண்மையான தன்மையை உணர்ந்து கொள்கின்றான்.

"திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்

புரையற் றிருந்தான் புரிசடை யோனே". (திருமந்திரம் - 2955)

மனதிலே சஞ்சலங்கள் நிற்கின்ற பொழுது கிடைக்கும் அனுபவத்தில் ஞானிகள் இறைவனைக் காண்கின்றார்கள். அதாவது இறைவனுடைய ஆற்றலை உணர்கின்றார்கள். அவர்களுடைய அறிவு பெரும் மாறுதலை அடைகிறது. எங்கும் வியாபித்து நிற்கும் பேரறிவைப் பேரொளியாகக் காண்கிறார்கள். இந்தப் பேரறிவே உயிருக்கு உயிராக நின்று உயிரை, உடலை இயக்குகின்றது என்று தெரிந்து கொள்கிறார்கள். இதுவே அவர்கள் பரம்பொருளை உணர்ந்த நிலையாகும். அந்த நிலைக்கு வந்தவர்கள் இறைவனை வேறெங்கும் தேடப் போவதில்லை. சாதாரண மக்கள் உண்மையில் இறைவனை வழிபட வேண்டுமென்கிற ஆவலுடன் மனம் என்கிற தேரிலேறி நாடு முழுவதும் அலைந்து திரிகின்றார்கள். அந்த மனம் என்னும் தேருடன் கட்டப்பட்டுள்ள ஐங்குதிரைகளும் ஐம்பொறிகளாகும். ஐம்பொறிகளும் மனமும் போகும் வழியே அவர்கள் சென்று கொண்டிருந்தால் இறைவனை எப்படி அடைவது? மெய்யுணர்வாளர்கள் ஐம்பொறிகளையும் உட்கருவிகளையும் தம்முள் அடக்கித் தானென்கின்ற நிலையை மறந்து இறை அனுவத்தைப் பெறுகின்றார்கள். எங்கும் வியாபித்துள்ள இறைவன் தம்முள் இருப்பதையும் உணர்கின்றார்கள். இதைத் திருமூலர் அழகாக எடுத்துரைக்கின்றார்.

"மாயனை நாடி மனநெடுந் தேரேறிப்

போயனி நாடறி யாதே புலம்பனர்

தேயமும் நாடுந் திரிந்தெங்கள் செல்வனைக்

காயமின் னாட்டிடைக் கண்டு கொண்டேனே". (திருமந்திரம் - 2983)

சமய நெறி இறைவனை அடையப் பல வழிகளைச் சுட்டிக் காண்பிக்கின்றது. சிறப்புமிக்க சரியை கிரியை, யோகம், ஞானம் போன்றவை சைவ சமயம் காண்பிக்கும் பாதைகளாகும். சமய நெறிக்கட்டுப்பட்டு வாழ்க்கையை இறை வழிபாட்டுக் களமாக எண்ணித் தாம் மேற்கொள்ளும் எல்லாவிதப் பணிகளும் இறைவனுக்குச் செய்யும் தொண்டு என்கின்ற வகையில் வாழ்க்கையை வாழ்ந்து, அதிலே ஒரு மகிழ்ச்சியும் அமைதியையும் பெற்று, கர்மங்களின் வலிமையை உணர்ந்த வண்ணம், அந்த வலிமையைக் குறைக்கும் முகத்தான் தனது மனம், வாக்கு, காயம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்வதை ஒரு முழுமையான சமய வாழ்வாகக் கருதலாம்.

அதே நேரத்தில் இதுபற்றி அருளாளர்கள் வேறு கருத்தினையும் நமக்கு வழங்குவார்கள். திருக்கோயில்களுக்குச் செல்லலாம். அங்குள்ள புனித நீரில் நீராடலாம். இறைவனைப் பல வழிகளில் வழிபாடு செய்யலாம். இவற்றையெல்லாம் செய்த பிறகும் இறைவனைக் காணவில்லை அல்லது உணரவில்லை என்று அங்கலாய்த்துக் கொண்டால் அதற்குப் பொறுப்பு இறைவனாகுமா? ஆணவம் என்கின்ற தனித்தன்மையில் தொடர்ந்து நின்று கொண்டு நானும் திருக்கோயிலுக்குச் சென்றேன். பெரிய செலவில் இறைவனுக்கு அபிஷேகம் செய்தேன். பார்த்து மகிழ்ந்தேன். அத்துடன் என் பணி முற்றிற்று என்று சொல்லிக் கொண்டிருப்பவர் அதை செய்யாமலேயே இருந்தாலும் அவர்களுக்குப் பெருத்த இழப்பு ஒன்றும் ஏற்படாது.

மனத்தின் தன்மையை மாற்றுவதன் மூலமாகவே ஆன்மிக அனுபவத்தைப் பெற முடியம். ஆன்மிக அனுபவம் கிட்டும்போது உள்ளத்தினுள்ளேயே தீர்த்தங்களில் நீராடலாம். திருக்கோயில்களிலுள்ள இறைவனைச் சந்திக்கலாம். எம பாசத்தை அகற்றலாம். மனத்திலுளள மாசும், மறுவும் நீக்கப்பட்ட பின் தீர்த்தங்கள் தெளிவாகத் தெரிகின்றன. இந்த அனுபவத்தை உதறிவிட்டுப் பள்ளமும் மேடும் திரிந்து என்ன பயன்? திருமூலர் பெருமான் கூறுவதைக் கேளுங்கள்.

"உன்னத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்

மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்

பள்ளமும் மேடும் பரந்து திரிவாரே

கள்ள மனமுடைக் கல்வியி லோரே". (திருமந்திரம் - 509)

உலகில் பரவி நிற்கும் பரம்பொருளே ஊனில் நிறைந்த ஆன்மாவாக விளங்குகின்றது என்பது வேதவாக்காகும். உபநிடதங்கள் இதைப் பல உவமானங்கள் வழியாக விளங்குகின்றன. குடத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் இருப்பது ஒரே ஆகாய வெளி. குடம் உடைந்ததும் உள்ளும் புறமும் நிற்கின்ற ஆகாய வெளி ஒன்றாகி விடுகின்றது. திருமூலர் பெருமான் இதை வேறு ஒரு உவமானத்தினாலும் எடுத்துரைக்கின்றார். மண் ஒன்று என்றாலும் அதே மண்ணினால் பல பாத்திரங்கள் செய்யப்படுகின்றன. பரம்பொருள் ஒன்றே. அவனே உயிருக்கு உயிராக எல்லா உயிர்களிலும் தோய்ந்து நிற்கின்றான். ஒரே பொருள் எல்லா உயிர்களிடமும் பரவி நிற்கின்றது. நம்முடைய ஐம்பொறிகளில் ஒன்றாகிய கண் புறப்பொருள்களைக் காண்கின்றது. ஆனால், தன்னுடைய இயக்கத்திற்கே காரணமாகியுள்ள உயிரையும், அந்த உயிராய் நிற்கும் பரம்பொருளையும் காண்பதில்லை. மனிதன் தன்னுடைய உண்மைச் சொரூபத்தை அறியாமையில் வைத்திருப்பது மாயையாகும். இதுவும் இறைவனுடைய செயல்தான். கண் பிற பொருள்களைக் காணும். அகக்காட்சியைக் காணாது. ஊனக் கண் குறைந்த

அறிவைக் கொண்டது. ஞானக்கண் அல்லது அருட்கண்ணாலேதான் இறைவனைக் காண முடியும். அது அருள் நிலை. அது நமக்குக் கிடைக்கும்வரை, நாம் மருள் நிலையில் இருப்போம். அதுவும் இறைவனின் ஆற்றலே. இதை இறைவனின் திரோதான சக்தி என்று சொல்வார்கள்.

"மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்

உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே

கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா

அண்ணலும் இவ்வண்ண மாகிநின் றானே". (திருமந்திரம் - 440)

ஆகவேதான் எங்கும் நிறைந்த பரம்பொருள் ஒவ்வொர் உயிரினிடமும் அவரவர் உள்ளத்தில் இருப்பதாகச் சித்தர்கள் உணர்கிறார்கள். "உள்ளத்துளேதான் கரந்தெங்கும் நின்றவன்" என்கின்றார் திருமூலர் பெருமான். உடலுக்குள் புகுந்து உயிருக்குயிராய் நிற்கும் இறைவனை மக்கள் எளிதில் உணராத காரணத்தினால் இறைவனைக் கள்ளத் தலைவன் என்று அழைக்கின்றார். உள்ளமும், அதிலுள்ள பொருளும் எல்லோருக்கும் பொது. அந்த நிலையை அறியாத மக்கள் மாயக்குழியில் விழுந்து பாசத்தில் பதறுகின்றனர். மக்களுடைய மனநிலையை ஒட்டியவாறு இறைவன் அவரவருடைய மனதில் தென்படுகின்றான். உள்ளமாகிய மனமண்டலத்தில் ஒன்றி நிற்பவவனாகவும் உள்ளான். சீவராசிகள் இறைவனைப் புறத்தில் வழிபட முற்படும்பொழுது புறத்திலும் எங்கும் வியாபித்த தன்மை பெற்றவனாக நிற்கின்றான். உண்மையில் எங்கும் உள்ளான். ஆனால், நாம் முகத்தின் கண்களால் பார்க்க முற்படும் பொழுது காணப்படுபவனல்லன். ஆகவேதான், "கமழ்கடை நந்தி கள்ளத்தலைவன்" என்று திருமூலதேவநாயனார் குறிப்பிடுகின்றார்.

இந்த உண்மையை முற்றிலும் உணர்ந்தவர்கள் சித்தர்கள். உடலிலேயே இறைவனின் ஆலயத்தையும், கர்ப்பகிரகத்தையும் கண்டவர்கள். நமது நாட்டிலுள்ள கோயில்களின் அமைப்பைப் பற்றிச் சிந்தித்தால் வியக்கத்தக்க உண்மை வெளிப்படும். ஆலயத்தில் நம் கண் முன் தோன்றுவது முதலில் கோபுரமாகும், இந்த கோபுர வாயில் வழியாகக் கோவிலிலுள்ள பல பிரகாரங்களைச் சுற்றி இறைவனிருக்கும் மூலஸ்தானத்திற்குச் செல்கின்றோம். நமது உடல் திருக்கோயிலின் ஞாபக மூட்டுகிறது என்கிறார் திருமூலர் பெருமான். நமது உடல் இறைவனிருக்கும் இருப்பிடம் மட்டுமன்று. அவ்வாறு இறைவன் இருப்பதை நினைப்பூட்டும் சின்னமுமாகும். மனிதன் கட்டிய கோயிலைவிட நுட்பமான தன்மை வாய்ந்தது இறைவன் தனக்கெனக் கட்டிக் கொண்ட உடலாகிய திருக்கோயில், இந்த உடலுக்குள்ளும் நடுவில் இருதயமாகின்ற மூலஸ்தானம் இருக்கின்றது. உள்ளமாகிய இந்த இருப்பிடத்தில் இறைவன் தங்கியுள்ளான். இலிங்க வடிவாகச் சிவபெருமானைத் திருக்கோயில்களில் சிந்திக்கின்றோம். மனித உடம்பே சிவலிங்க உருவமுடையது ஆகும். திருமந்திரம் இதைத் தெளிவாகச் சொல்கிறது.

"மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்

மானுட ராக்கை வடிவு சிதம்பரம்

மானுட ராக்கை வடிவு சதாசிவம்

மானுட ராக்கை வடிவு திருக்கூத்தே". (திருமந்திரம் -1726)

இந்த மனித யாக்கைக்குள் உயிர் நிற்கின்றது. உயிரினால் உடம்பு இயங்குகின்றது. இறைவன் உயிருக்குயிராக உடலில் நிற்கின்றான். ஆகவே, சிவனே சிவசொரூபமாகும். உடம்பாகிய இக்கோயிலுக்கு வாயும் மற்ற பொறிகளும் கோபுர வால்களாக அமைகின்றன. உடலின் கருவிகளைச் சரியாகக் கட்டுப்படுத்தாமல் அவ்வழியே செல்லும் மக்களுக்கு இறைவனுடைய திருக்கோலம் தெரிவதில்லை. ஆனால், தெளிந்த சித்தர்களுக்குச் சீவன் சிவலிங்கமாகத் தெரிகின்றது. அப்பொழுது நமது உடல் தீயிலிட்ட செம்பொன்னாக மாறிவிடுகின்றது. ஐம்புலன்களும் தீய குணங்களிலிருந்து விடுபட்டவைகளாயத் தூயநிலயை எய்துகின்றன. இந்தத் திருமந்திரத்தைப் பாருங்கள்.

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே". (திருமந்திரம் - 1823)

இந்த மந்திரத்தைப் பற்றிக் கயிலாய சித்தர் கூறுவதைத் தெரிந்து கொள்ளுதல் பொருத்தமாயிருக்கும்.

"பாலின்கண் நெய் இருந்தாற் போலவே பூரண சிவலிங்கம் உள்ளமாகிய சீவாத்மாவை இடங்கொண்டிருக்கையினாலே, 'உள்ளம் பெருங்கோயில்' .. உள்ளப் பெருங்கோயிலாகிய சீவாத்மாவுக்கு ஐம்பூத வடிவு வளையமாகையினாலே, 'ஊனுடம்பு சுற்றாலை'... வைகரி வாக்குச் சுற்றாலாகிய வடிவுக்கு முன்னிலையாகையினாலே, 'வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்' ... காரணகுரு கைகாட்டும் படியே உள்ளமாகிய சீவாத்மா கர்ப்பூரமும் சோதியும் கலந்தாற்போலவே பூரணமாகிய சிவலிங்கத்தில் ஐக்கிய பதம் பெற்ற படியினாலே, 'தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்'... தெளிந்தபின் புலன் ஐந்தும் சிவாம்சமாகத் தோற்றுகையினாலே, கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே'...."

இதே கருத்து உபநிடதங்களிலும் காணப்படுகின்றது. இந்த அனுபவம் யாவருக்கும் பொது. அதை விவரிப்பதில் வித்தியாசமிருக்கலாம். தன்னுள் இருக்கும் இறைவனை உணர்ந்து கொள்ளுபவர்கள் சித்தர்கள். அந்த அனுபவத்தின் அடிப்படையில் அவர்கள் ஜீவன் முக்தர்களாகின்றார்கள் என்று உபநிடதங்களும் விளங்குகின்றன.

"ஏஷ தேவோ விச்வகர்மா மஹாத்மா ஸதா

ஜனானாம் உற்ருதயே ஸந்நிவிஷ்ட :

உற்ருதா மனீஷா மனஸாஅபிக்லுப்தோ ய

ஏதத் விதுரம்ருதாஸ்தே பவந்தி" (ஸ்வேதாச்வதரோபநிஷதம் 4-17)

"பிரபஞ்சத்தைப் படைத்து எங்கும் நிறைந்திருக்கும் தெய்வம் அன்பினாலும், அறிவினாலும், எண்ணத்தினாலும் வரையறுக்கப் பட்டவனாய் சீவராசியின் உள்ளத்தில் வீற்றிருக்கிறான். அதை அனுபூதியில் அறிகிறவர்கள் அமிர்த சொரூபமாகிறார்கள்."

"பராஞ்சி கானி வ்யத்ருணத் ஸ்வயம்பூ :

தஸ்மாத் பராங் பச்யதி நாந்தராத்மன்

கஸ்சித்தீர : ப்ரத்யகாத்மானம் ஐஷத் ஆன்ருத்த

சஷ§ : அம்ருதத்வம் இச்சன்." (கடோபநிஷதம் 4-1)

"தானாகத் தோன்றுகின்ற பிரம்மதேவன் இந்திரியங்களைப் புறத்தில் போகும்படி சிருஷ்டித்தான். ஆகையினால் புறத்தில் இருப்பவைகளையே அவன் காண்கின்றான். உள்ளிருக்கும் ஆத்மனை அவன் காண்பதில்லை. மரணமின்மையை விரும்புகிற யாரோ ஒரு பேரறிஞன் இந்திரியங்களைச் சேர்த்தெடுத்து உள்முகமாகாத் திருப்பி ஆத்மதரிசனம் பெறுகிறான்."

ஆகவே, எங்கும் நிறைந்த இறைவன் நம்முள்ளும் இருக்கின்றான். இதற்குச் சான்று அருளாளர்களின் அனுபவம். எவ்வாறு தேனின் தன்மை இன்பமாகுமோ அவ்வாறே ஊனின் தன்மை இறைமையாகும். இதை ஏட்டளவில் மட்டும் அறிந்து கொள்ளாத தூய்மையான மனத்தின்வழி உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த உணர்வு வரவில்லையென்றால் இறைவன் இல்லையென்கின்ற நினைப்பேதான் மனதில் எழுந்து மனமும் குழம்பி நிற்கும். மனித உள்ளத்திற்குள்ளும் வெளியேயும் இறைவன் எங்குமாகி நிற்கின்றான் என்கின்ற உணர்வுடையவர்களுக்கு இறைவன் அவ்வண்ணமே உள்ளத்தின் உணர்விலும் உள்ளத்திற்கு வெளியேயுள்ள பொருள்களிலும் தோற்றமளிக்கின்றான். நிறங்கள் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன். ஆனால், இறைவன் உள்ளத்திலும் இல்லை வெளியிலும் இல்லை என்பவர்களுக்கு அந்த இறையின்பம் கிடைக்க நியாயம் இல்லை. அவர்களும் கொடுத்து வைக்கவில்லை இந்த முடிவு ஆரய்ச்சியின் விளைவாக நமக்குக் கிடைத்த முடிவன்று. தெய்வப் பேரின்பம் இறைவன் அருள் பெற்று இறை நிலையில் உள்ளம் தோய்ந்து அனுபவிக்கப்பட்ட பேரின்பமே.

ஒன்றவன்தானே. பரம்பொருள் ஒன்றே. பேரறிவும் பேராற்றலும் பேரருளும் கொண்டது. ஆயினும் பரம்பொருள் பரம்பொருளாக வீற்றிருக்க முடியாது. வீற்றிருப்பதும் ஏதுமில்லை. சீவராசிகள் உய்வடைவதற்குப் பரம்பொருள் தனது ஆற்றலைப் பலவாறு வெளிப்படுத்துகிறது. அவ்வாறு செய்வதால் உயிரானது தனது குற்றங்களை நீக்கிக் கொள்ள வாய்ப்பினைப் பெறுகிறது. அந்த இயக்கமே பரம்பொருளின் அருள் இயக்கமாகும்.

இரண்டவன் இன்னருள் - அருள் என்றாலே உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி தோன்றுகிறது. அருட்கண்கள் இறைவனைக் காணும் கண்கள். இறைவனுடைய அருளை நாம் அனுபவிக்கும்

பொழுது இறைவனாகிய உண்மையை உணருகின்றோம். அருளாளர்கள் இறைவனின் அருளாட்சியில் மூழ்கி நிற்பவர்கள். எங்கும் எதிலும் இறைவனுடைய அருளைக் காண்பார்கள். தங்களுக்கு நேரிடும் இன்பங்களையும், துன்பங்களையும் இறைவனுடைய அருள் வீழ்ச்சியாகவே கருதுவார்கள். அறியாமை என்னும் இருளில் நாம் கிடக்கும்போது நம்மை அவ்வாறு கிடத்தி, உடலின் கருவிகள், கலை, கல்வி ஆகியவற்றின் மூலம் நமக்குச் சிறிது விளக்கத்தைக் கொடுத்து கிடைக்கும் அனுபவமெல்லாம் நான் என்கிற நிலையில் பெறுகிறேன் என்கிற உணர்வை வழங்குவதும் அருட்சக்தியே. இதைத் திரோதான சக்தி என்று சொல்லுவார்கள்.

இறைவன் ஒன்றவனாக இருந்தாலும், தனது அருட்சக்தியைப் பல வகைகளில் வெளிப்படுத்துகின்றான். அரு உள் என்பது அருளாகிறது. சீவ ராசிகளில் உடலில் இறைவன் "உள்" ஆயும் "அரு" ஆயும் மறைந்து கிடக்கின்றான். இறைவன் பேரறிவும் பேராற்றலும் கொண்டவன். பேரறிவுடைய பரம்பொருள் பிரபஞ்ச இயக்கத்தைத் தொடங்கி அருளால் சீவராசிகள் உய்வடையச் செய்ய வேண்டும். பேரறிவாக மட்டும் இருக்கின்ற நிலையில் இதைச் செய்ய இயலாது. ஆகவேதான் பரம்பொருள் அருள் மழை பொழிவதற்காகப் பேராற்றல் மிக்க இயக்கமாகத் தன்னை மாறிக் கொள்கின்றது. சிவம் அல்லது பரம்பொருள் பிரபஞ்சத்தைத் தோற்றுவிப்பதற்கான சக்தியென்னும் நிலைக்குப் பிரதானம் கொடுக்கின்றது. பராபரம் என்பது சிவமும் சக்தியும் பிரிக்கவொண்ணாத ஆதி நிலை. எல்லாச் சீவன்களும் சக்தியும் உட்படப் பரம்பொருளில் ஓடுங்கியிருந்த நிலை. இது ஒரு பேரொளியாக விளங்கும் நிலை. இது ஆதி அந்தம் இல்லாத ஒன்றாகும். இந்த நிலையில் ஒன்றைத் தொடங்குவது அல்லது முடிப்பது என்பதில்லை. பராபரமாய் நிற்கும் பரம்பொருளின் அம்சமான சக்தி பராபரியென வழங்கப்படும். இதுவே இறைவனின் இயற்கைத் தன்மை அல்லது சொரூப நிலை. இந்த இயற்கை நிலையில் பராபரமும் பராபரியும் ஒன்றி நிற்கும் நிலை பேரறிவான நிலையாகும். ஆகவேதான். இந்த நிலையைச் சிவஞான சித்தியார் "சித்தியின் வடிவே தென்னில் தடையிலா ஞானமாகும்" என்றது.

இந்த இயற்கை நிலையில் இறைவனுடைய விருப்பம் மாத்திரம் உயிர்களை உய்விக்க வேண்டும் என்பதாம். அந்த நிலை உலகத் தோற்றத்திற்குத் தொடங்கும் காரணமாக அமைகின்றது. ஆதி சிவனான பரமசிவன், ஆதி சக்தியாகிய பராசக்தியுடன் இணைந்து நிற்கும் நிலையாகும்.

சொல்லொணா ஆற்றல் படைத்த முழுமுதற் பொருளுக்கு இப்பிரபஞ்சத்தைத் துவக்குவதற்குத் தேவையான ஆற்றல் மிகச்சிறியதாகும். ஆகவே, இறைவனே திருவுளம் கொண்ட மாத்திரம் சக்தியென்னும் இறைவனின் பேராற்றல் வெளிப்படுகின்றது. இயற்கை நிலையில் பேரறிவுள்ள நிலையிலிருக்கும் சக்தி படைப்புத் தொழிலுக்காகத் தனது பேராற்றலின் சிறு பகுதியை வெளிப்படுத்தத் தொடங்குகின்றது. இதிலிருந்து தெரிவது இறைவனின் ஒரு அம்சமே சக்தி வடிவாக பிரபஞ்சத் தோற்றத்திற்குக் காரணமாக இருக்கின்றது என்பதுதான். திருமந்திர வாக்கு பின்வருமாறு -

"ஆதியோ டந்தம் இலாத பராபரம்

போதம தாகப் புணரும் பராபரை

சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்

தீதில் பரையதன் பால்திகழ் நாதமே". (திருமந்திரம் - 381)

பரம்பொருள் தனது பேராற்றலைச் சக்தி வடிவாக வெளிக்காட்டத் தொடங்கும் நிலையில் நாதம் என்று அழைக்கப்படுவன். இந்தப் பொதுவாகத் தோன்றும் நாதம் தனது சக்தியில் ஒரு பகுதியை வெளிக்காட்ட எழும்பும்பொழுது அநத் ஆற்றலானது விந்து என்னும் சக்தியாகின்றது. ஆகவே சிவன் என்றும், சக்தியென்றும், தோன்றுவர் நாதம் என்றும், விந்து என்றும் அழைக்கப்படுவர். இந்த நிலையில் சிவமும் சக்தியும், நாதமும் விந்துவும், அருவ நிலையிலே காணப்படுவர். இவற்றிலிருந்து மாயை தோற்றுவிக்கப்படுவதும், உலக இயக்கத்திற்கு இந்த மாயையே முதல் காரணமாக இருப்பதும் இந்த மாயை ஆணவ மலத்துடன் கலவாது தூய்மையான நிலையில் இருப்பதும் ஆணவ மலத்துடன் கலந்து அசுத்த நிலையில் இருப்பதும், இந்தப் பல்வேறு நிலைகள் காரணமாக உலக இயக்கங்கள் தோன்றுவதும் பற்றிய விவரங்கள் சிவாகமங்களிலும், சைவ சித்தாந்த சாத்திர நூல்களிலும்ட விளக்கப்பட்டுள்ளன.

இறைவன் உலகத்தைத் தோற்றுவித்து நடத்தக் கருதும்பொழுது அருவமாகவும், அரு உருவமாகவும், உருவமாகவும் விளங்குபவன். இயற்கை நிலையிலிருந்து பரிணமித்த, இறைவன் உருவம் கொள்ளும் நிலையில் உயிர்களை உய்விக்க வேண்டுமென்கின்ற அவனுடைய அளவற்ற கருணையும் அருளும் வெளிப்படுகின்றது. சிவம் என்றும் சக்தியென்றும் பேதம் ஏற்படும் பொழுது பிரபஞ்சம் படைப்பதற்கான பணிகள் துவங்கி அப்பணிகளுக்கான அதிகாரிகளும் தோன்றுகின்றனர். பேதம் என்பது உண்மையில் பேதமான நிலைமை அன்று. உயிர்கள் தோன்றவுதற்கான கிரியை என்னும் சக்தியினுடைய தன்மை மிகுந்திருப்பதால் இந்த நிலையைப் பேதநிலையாகக் கருதலாமேயழிய உண்மையில் பரம்பொருளில் பேத நிலையென்பது கிடையாது. இந்தக் கருத்தையே சிவஞான சித்தியாரில் காண்கின்றோம்.

"சிவம் சத்தி தன்னை ஈன்றும்

சத்திதான் சிவத்தை யீன்றும்

உவந்து இருவரும் புணர்ந்து,

இங்கு உலகு, உயிர் எல்லாம் ஈன்றும்

பவன் பிரம்மச் சாரியாகும்

பான்மொழி கன்னி யாகும்

தவம் தரும் ஞானத் தோர்க்கு

இத்தன்மைதான் தெரியு மன்றே."

சக்தி தனது ஆற்றலை வெளிப்படுத்தி பிரபஞ்சத் தோற்றத்திற்குக் காரணமாக இருக்கும் பொழுதும், இறைவனுடைய முழுமை குறைந்து விடாது. முழுமையாகவும், என்றும், எங்கும் உளதாய் உள்ள பரம்பொருள் படைப்பு போன்ற காரியங்களுக்காகச் சக்தி நிலையில் விளங்குகின்றதே தவிர இதனால் முழுமை

குறைந்து விடாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பரம்பொருளின் ஒளியாகிய சக்தி ஆனந்த வடிவமாக இருப்பதுடன் சிவமெங்குள்ளதோ அங்கும் நிரம்பியதாக ஊனுக்கும் உயிருக்கும் அடிப்படையாகச் சிவனுடன் இணைந்தே தொழில்படுகின்றது. இநத் உண்மையை ஆராய்ந்து பார்த்தால் நன்கு விளங்கும். இதனைத் திருமந்திரம் பின்வருமாறு கூறுகின்றது.

"தானெங் குளனங் குவதையன் மாதேவி

ஊனெங் குளதங் குளளுயிர்க் காவலன்

வானெங் குள தங் குளே வந்து மப்பாலாம்

கோளெங்கும் நின்ற குறிபல பாரே." (திருமந்திரம் - 1055)

பேராற்றலினால் இயக்கம் நடைபெறும்போதும் பரம்பொருள் முழுமையானதாகவே இருக்கின்றது என்பதைப் பிரஹதாரண்ய கோபனிஷத்தில் பின்வருமாறு விவரிக்கப்படுகின்றது.

"ஒம் பூர்ணமதஹ, பூர்ணமிதம்

பூர்ணாத் பூர்ணம் உதச்யதே

பூரணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வதிசிஷ்யதி".

அதாவது, அதுவும் பூரணம், இதுவும் பூரணம், பூரணத்திலிருந்து பூரணம் தோன்றிற்று. பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்துவிட்டால் மிகுந்திருப்பதும் பூரணமே என்பதாம்.

உதாரணமாக எத்தனை பூஜ்யங்களைக் கூட்டினும் மொத்தம் பூஜ்யமே. ஒரு பூஜ்யத்திலிருந்து எத்தனை பூஜ்யங்களைக் கழித்தாலும் மிகுந்திருப்பது பூஜ்யமே. இஃது ஓர் உதாரணம்தான். பரம்பொருள் பூஜ்யம் அன்று. உள்பொருள். ஆனாலும் ஓர் உருவும் இல்லாதது. ஆகாசம் சரீரம் பிரம்ம, ஆகாசம் பிரம்ம, என உபநிடதம், பிரம்ம சூத்திரம் கூறுகின்றன.

ஆகவே, சிவமும் சக்தியும் இருநிலையில் நின்று எண்ணற்ற உயிர்களுக்குப் பக்குவத்தை அளிப்பதற்காகவும் பிறப்பின் நோக்கத்தை அடையச் செய்வதற்காகவும் வேறு பல பயன்களைத் தருவதற்காகவும் படைத்தல் என்னும் தொழிலாகிய விளையாட்டை மேற்கொள்கிறார்கள். உயிர்களுக்கு அறிவையும், ஆற்றலையும், மற்ற தத்துவங்களையும் இந்திரியக் கூட்டங்களையும் பொருத்தி அருள்புரிகின்றான். மாணிக்கவாசகர் பெருமான் "காத்தும் படைத்தும், கரந்தும் விளையாடி" என்றார். இறைவன் உலக இயக்கத்தை நடத்திச் செல்லுதல் விளையாட்டென வழங்கப்படுகிறது. "ஐயா, c ஆட்கொண்டருளும் விளையாட்டின் - உய்வார்கள் உய்யும் வகையெல்லா உய்ந்தொழிந்தோம்" என்பது திருவாசகம். இந்த விளையாட்டு என்பது பரம்பொருளின் பொழுது போக்கிற்காக ஏற்பட்டதன்று. உயிரினங்கள் தங்களுடைய வினையினைத் தீர்த்துக்கொள்ளும் வகையில் அனுபவங்களைப் பெறுவதற்காக தனு, கரண, புவன போகங்களை இறைவன் செய்து வைத்தான் என்பதே பொருள். ஆகவேதான், திருமந்திரத்தில் சிவனும், சத்தியும் விளையாடலுற்றார் எனக் கூறப்படுகின்றது. அந்த மந்திரம் பின்வருமாறு -

"ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்

இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்

பருவங்கள் தோறம் பயன்பல வான

திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே." (திருமந்திரம் - 396)

இந்த விளையாட்டினைப் புரியும் இறைவன் தானே சக்தியோடு கூடி ஐந்தொழிலைச் செய்யும் தலைவர்களுக்குத் தலைவனாக விளங்குகின்றான். படைப்பதும் அவனே, காப்பதும் அவனே, ஒடுக்கிக்கொள்வதும் அவனே, உயிரினங்களுக்கு வீட்டுப் பேற்றினை அளிப்பதும் அவனே.

"தானே படைத்திருந் தானே அளித்திடுந்

தானே துடைத்திடுந் தானே மறைந்திடுந்

தானே யிவை செய்து தான்முத்தி தந்திடுந்

தானே வியாபித் தலைவனு மாமே" (திருமந்திரம் - 1809)

ஆகவே, சிவமும், சக்தியும் சேர்ந்த பரம்பொருளே நமக்குத் தந்தையும் தாயுமாவர். அவர்களே ஊழித்தலைவர்கள். கால இட தத்துவங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். நாதமாயும், விந்துவாயும், ஒலியாயும், ஒளியாயும் அமர்ந்தவர்கள். இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளும் நிலையில் அருளின் தன்மை விளங்குகின்றது. இதைத் திருமூலர் பெருமான் அனுபவித்த நிலை பின்வரும் திருமந்திரத்தில் காணப்படுகிறது.

"என்னம்மை என்னப்பன் என்னுஞ் செருக்கற்று

உன்னம்மை ஊழித் தலைவனும் அங்குளன்

மன்னம்மை யாகி மருளி யுரைசெய்யும்

பின்னம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே." (திருமந்திரம் - 1129)

திருவருள் இறைவனிடமிருந்து தோன்றி, பிரபஞ்சத்தின் இயக்கத்திற்குக் காரணமாக இருந்து, சீவராசிகள் உய்வடைவதற்குத் தனு, சுரண, புவன போகங்கள் ஆகியவற்றை அளித்து, சீவராசிகள் உலகத்தில் ஈடுபட்டுத் தங்கள் வினைப்பயனை அனுபவிப்பதற்காக திரோதான சக்தியாகத் திகழ்ந்து, கடைசியாக வீடு பேறு நல்கும் நிலையில் அருட்சக்தியாக உயிரிலும், உள்ளத்திலும், உடலிலும் நிரம்பி நிற்கும் தன்மையினை அருளாளர்கள் அனுபவத்தில் காண்கின்றார்கள். நமக்கு எடுத்துச் சொல்கின்றார்கள். நாம் காணும் படைப்பெல்லாம் இறைவனின் ஆற்றல் சக்தியே என்பதை நாம் அறிந்து கொள்வதில்லை மலப்பிணைப்பு நம்மை மயங்கச் செய்கின்றது.

இறைவனின் திருவருள் தோன்றும் நிலை அதுவே. சீவராசிகளுடைய குறைந்த அறிவு நீங்கிப் பேரறிவு என்கின்ற உணர்வினை ஊட்டுவதற்காகவும், பக்குவத்தை அளிப்பதற்காகவும் இறைவனுடைய ஆற்றல் இயக்கம் பெற்று, அருளில் நிறைவு பெறுகிறது. உயிரினங்களின் மலங்களை நீக்குவதற்காகவே ஏற்பட்ட படைப்பு இது. ஆயினும் ஆருயிர்கள் அதனை அறிந்து கொள்ளாது மலப்பிணிப்பால் மாயையின்கண் மயங்கிக் கிடக்கின்றன. உயிர்களைப் பாசத்தில்

பொருத்தி அனுபவிக்கச் செய்வது இறைவனின் அருட்சக்தி. சில காலம் உடலில் தங்கி உயிர்கள் வினைப்பயன்களை அனுபவிக்கும்போது, அந்தப் பாசத்திலிருந்து உயிரினங்களை வேறுபடுத்திச் செய்வதும் அதே அருட்சக்தியாகும். வேறுபட்ட உயிரினங்கள் சீவன் என்றும், சிவன் என்றும் அதுவரை மனதின்கண் வைத்திருந்த மருள் நிரைந்த நிலையை நீக்கி உண்மை ஞான ஒளி பெறச் செய்வதும் அதுவே. அறிவானும், அறியப்படும் பொருளும் ஒன்றாகச் சேர்வதும் அருட்சக்தியால்தான். திருவருளை எல்லா உயிர்களும் அடையும் பொருட்டு பரம்பொருள் தன்னையே சிவமாகவும், சக்தியாகவும் பிரித்துக் கொள்கின்றது. இதைக் கூறும் திருமந்திரம் பின்வருமாறு -

"பாசத்தி லிட்ட தருளந்தப் பாசத்தின்

நேசத்தை விட்ட தருளந்த நேசத்திற்

கூசற்ற முத்தி யருளந்தக் கூட்டத்தின்

நேசத்துத் தோன்றா நிலையரு ளாமே." (திருமந்திரம் - 1802)

எல்லாவற்றிற்கும் ஒருவனே காரணமாய் இருப்பதால் "அவனருளாலே அவன்தாள் வணங்கி" என்று மாணிக்கவாசகர் பெருமான் வாழ்த்துகின்றார்.

நின்றனன் மூன்றினுள் - பரம்பொருளின் அருள் இயக்கம் படைத்தல், காத்தல், ஒடுக்குதல் ஆகிய மூன்று நிலைகளில் வெளிப்படுகின்றன. இவற்றுடன் மறைத்தல், அருளுதல் ஆகிய இரண்டு நிலைகளையும் சேர்த்துக் கொள்வார்கள். மறைத்தலும், அருளுதலும் சீவராசிகள் உய்வடைவதற்காக இறைவன் மேற்கொள்ளும் தொழில் ஆகும். இது சக்தியின் வெளிப்பாடு. உயிர்களுக்காக இறைவன் எல்லையற்ற கருணையுடன் மற்றைய அதிகாரிகளைக் கொண்டு இந்த இயக்கத்தை மேற்கொள்கிறான். இயற்கையின் நியதியில் முத்தொழில்களின் பிரதிபலிப்பை பார்க்கலாம். அழிவின்றி ஆக்கமில்லை, ஆக்கமின்றிக் காத்தல் இல்லை. ஒரு விதையைப் பூமியில் நடும்பொழுது அந்த விதை அழிகின்றது. பிறகு முளையாகி, செடியாகி, மரமாகி, பூவாகி, காயாகி, கனிந்து உலருகின்றது. இறைவனுடைய படைப்பிலும் ஆக்கமும், காத்தலும், ஒடுக்குதலும் ஒன்றோடொன்று தொடர்புடையனவாகவே இருக்கின்றன. அவற்றிற்குத் தலைவனாக உள்ள இறைவன் ஒருவனே ஆகிலும் மாயையின் அம்சமான மும்மூர்த்திகள் இப்பணிகளைச் செய்கின்றனர். இந்தப் பணிகளுக்குத் தலைவர்களாக இருக்கும் பிரம்மனும், திருமாலும், உருத்ரனும் இறைவனுடைய அம்சங்களேயாவார்கள். அவர், இவர், தனித்தனி என்றும், ஒருவருக்கொருவர் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்றும் நினைப்பதும் பேசிக் கொள்வதும் அறியாமையாகும். அருள் எல்லோருக்கும் மேலானவனும் அவருடைய பணிகளுக்குப் பெருமை கொடுப்பவனும் ஆவன் இறைவன். மற்ற தேவர்கள் உயர்ந்த உயிர்கள் என்கின்ற நிலையிலிருந்தாலும், இறைவன் இருவினைக்கு அப்புறம் இருந்து கொண்டு மூவருக்கும் முதல்வனாகத் திகழ்கின்றான். இதைத் தெரிந்து கொள்ளாத மக்கள் இவர்களைப் பிரித்து வைத்துப் பேசி வருவது

பேதைமையாகும் என்கிறார் திருமூலர் பெருமான்.

"ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்

ஆதிக் கமலத் தலர்மிசை யானுஞ்

சோதிக்கல் மூன்றுந் தொடர்ச்சியில் ஒன்றெனார்

பேதித் துலகம் பிணங்குகின் றார்களே". (திருமந்திரம் - 104)

இறைவன் முத்தொழிலைச் செய்கின்றான் என்கிறபோது அது உயிர்களுக்காகச் செய்யப்படுகின்றது என்பதும், அப்படியென்றால் உயிர்கள் பாச நீக்கம் பெற்று, வீடு பேறு அடைவதற்காக இந்தத் தொழில் நடக்கின்றது என்பதும், இதற்காகவே இறைவன் உயிருக்கு உயிராகவும், உயிருக்கு வேறாகவும், உயிரை நடத்திச் செல்லும் நாயகனாகவும் இயங்குகின்றான் என்பது புலனாகும். ஆக, இறைவன் பதி, பசு, பாசம் என்கிற மூன்று பொருள்களிலும் நின்றான் என்றும் எடுத்துக் கொள்ளலாம். "பதி, பசு, பாசம் எனப் பகர்" என்பார் திருமூலர் பெருமான். எல்லாவற்றிற்கும் காரணமான பதியினுடைய இயல்புகள் சத்து, சித்து, ஆனந்தம் ஆகும். இந்த மூன்று இயல்புகளையுடைய இறைவன் உடலுக்குள்ளே உயிருக்கு உயிராகப் பொருந்தி நிற்கிறான். பசுவாகிய மலத்தால் கட்டுண்ட உயிர் உடலில் நின்று, இன்பத் துன்பங்களை அனுபவித்துப் பின்னர் உடலை விடுகின்றது. உயிரை வினைப்பயனை நுகரச் செய்து, மேலும் வினைகளைப் புரிய வைத்து மீண்டும் மீண்டும் பிறப்பிற்குக் காரணமாகிறது. உயிர் பல்வேறு நிலைகளில் பிறப்புகளைப் பெற்று உய்வதற்கான வழிகளைத் தேடிக் கொள்ளவே பாசத்தின் ஆட்டத்திற்கு ஆளாக்கிக் கொள்கிறது. உண்மை நிலை மறைக்கப்பட்டுள்ள போது பதியாகவும், பசுவாகும், பாசமாகவும் கருதுகிறோம். அறிவு பெற்ற நிலையில் உயிர் தன்மையற்ற தத்துவங்களிலிருந்து பிரித்துக் கொண்டு பாசத்தளையை அகற்றியதாய்ப் பதியினைச் சேருகிறது. பதியென்பது அறிவும், ஒளியும் நிரம்பிய நிலையாகும். படைப்பின் நோக்கமே பதி, பசு, பாசம் என்கின்ற தத்துவங்களை வேற்றுமை நிலையில் நிறுத்திப் பிறகு அந்த வேற்றுமையை அகற்றுவதாகும். இதை விளக்கும் திருமந்திரம் பின்வருமாறு -

"பதிபசு பாசம் எனப்பகர் மூன்றிற்

பதியினைப் போற்பசு பாசம் அனாதி

பதியினைச் சென்றணு காப்பசுபாசம்

பதியணு கிற்பசு பாசம் நிலாவே." (திருமந்திரம் - 115)

இறைவன் படைப்பிலுள்ள உயிர்கள் எண்ணற்றவை. பிரம்மன் முதலிய பெருந்தேவர்களையும் பசுவினத்தில் இந்தப் படைப்பு உள்ளடக்கும். பாசத்தால் கட்டப்பட்டது உயிர். பாசமானது ஆணவம், கன்மம், மாயை என்கிற மூன்று வகையான மலங்களைக் கொண்டதாகும். இந்த மலங்கள் நீக்கப்பட்டபொழுது பாசத் தளைகள் அறுக்கப்படுகின்றன. தூய்மையான நிலையில் உயிர்கள் இறைவனைப் பற்றி விடாது நிற்கும்.

"பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்

பசுக்களைக் கட்டிய பாசமூன் றுண்டு

பசுத்தன்மை நீக்கியப் பாசம் அறுத்தாற்

பசுக்கள் தலைவனைப் பற்றிவிடாவே". (திருமந்திரம் - 2406)

பதியினைப் போல் பசு, பாசம் அநாதி என்றார் திருமூலர் பெருமான். உயிர் ஒரு அறிவுப் பொருள். பாசத்தின் கூறுகளாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகியவை உயிரைப் பந்தித்தாலும், அதன் விளைவாக உயிருக்குக் கிடைக்கக்கூடிய அனுபவங்கள் இறைவன் காட்டிய நெறியின் அடிப்படையிலேயே நடத்திச் செல்வதும் இறைவன் ஆவன். படிப்படியாக உயிர்களைத் தூய்மைப்படுத்தி, பாசத்தின் வேகத்தைக் குறைத்துத் தருபவனும் இறைவன் அவன். "வேகம் கெடுத்து ஆண்ட வேந்தனடி வெல்க" என்றார் மாணிக்கவாசகர் பெருமான்.

மலங்கள் மூன்றாகிய காரணத்தால் உயிர்களும் மூன்று வகைப்படுவர். அவர்கள் விஞ்ஞான கலர், பிரளயா கலர், சகலர் எனப்படுவர். இம்மூவகையினருள் விஞ்ஞான கலர் நான்கு வகையினர். பிரளாய கலரும் சகலரும் தனித்தனியே மூன்று வகையினர். ஆக மொத்தம் உயிர்கள் அனைத்தும் பத்து வகையினர் ஆவர்.

விஞ்ஞானம் என்பது மெய்யுணர்வு அல்லது உண்மை உணர்வாகும். உண்மை உணர்வு கொண்டு மாயையின் பிரதிபலிப்பாகிய கலைகளிலிருந்து விடுபட்டவர் விஞ்ஞான கலர் ஆவர். இறைவனால் விசேஷ ஞானம் அளிக்கப்படுபவர்கள். தவத்தாலும், யோகத்தாலும் இறைவனுடைய அருள் பெற்று உண்மை அறிவு பெற்றவர்களும் விஞ்ஞான கலர் ஆவர். இந்த ஞானத்தில் விளைவாக கன்மம், மாயை இவைகளிடமிருந்து பிரிக்கப்பட்டவர்களாக ஆணவ மலத்துடன் மட்டுமே கலந்து நிற்கின்றனர். ஆணவ மலமும் மென்மையாகப் பற்றியிருக்கும்.

பிரளய காலத்தில் எல்லாச் சீவராசிகளும் இறைவனுடன் ஒடுங்கும் நேரத்தில் பிரபஞ்சத்தை நடத்துகின்ற தத்துவங்களும் கலைகளும் நீங்கும் பொழுது ஆணவம், கன்மம் ஆகிய இரண்டு மலங்களுடன் கூடி நிற்பவர் பிரளயா கலர் ஆவர்.

சகலர் பாசப்பற்று நீங்காதவர். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களும் அவர்களைத் தெய்வத் தன்மையிலிருந்து தடுத்து நிறுத்தி வைக்கின்றன. இவர்களுக்கு ஆணவ மலப் பிணிப்பு மிக வன்மையாக உண்டு அறியாமை என்னும் நிலையில் மாயையால் கட்டப்பட்டு வினைப்பயனை அனுபவிப்பவர்கள்.

மூவகைச் சீவராசிகளும் தத்தம் நிலையில் பக்குவமற்றும், பக்குவமல்லாமலும் இரு தரத்தினராய் இருப்பர். இறைவனை அடைய வேண்டுமென்கின்ற ஆர்வத்தால் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இறைவனை அடைபவர்கள் பக்குவர்கள் ஆவார்கள். இறைவனைப் பெற வேண்டுமென்கின்ற ஆர்வமின்றி உலகத்தில் வாழ்ந்து போகங்களை நுகர்ந்து வினைப்பயன்களைத் தொடர்ந்து அனுபவிப்பவர்கள் பக்குவமற்றவர்கள் ஆவார்கள். இந்த ஆர்வத்தை அளிப்பது இறைவனுடைய அருளாகும். விஞ்ஞான கலரிலும் பக்குவத்தை எய்தி ஞானத்தைப் பெற்றவரும் அந்த அளவு பக்குவத்தைப் பெறாதவர்களும் இருப்பார்கள்.

அதேபோல பிரளயா கலரும் இயற்கையிலேயே ஆணவத்தைத் தவிர eF இரண்டு மலங்களை விட்டவர்களாகவும் அல்லது செயற்கையாக முயற்சிகள் எடுத்து அவற்றின் பயனாக இந்த இரண்டு வினைகளை விட்டவர்களாகவும் இருக்கக்கூடும்.

சகலர்களைப் பொறுத்தவரை மூன்று மலங்களால் பிணைக்கப்பட்ட நிலையிலிருந்தாலும், அவர்களும் பக்குவம் பெற்றுச் சாதகம் செய்து, வீடு பேற்றினை அடையக்கூடிய ஆற்றலைப் பெற்றவர்கள்தான். தவத்தாலும், யோகத்தாலும் இவர்களும் பிரளயாகலர், விஞ்ஞான கலர் ஆகியவைகளுடைய நிலையை எய்திச் சிவமாம் தன்மையைப் பெறக்கூடியவர்கள்.

உயிர்களுக்குச் சார்பாக உள்ள நிலைகள் மூன்றாகும். அவை முறையே இருள், மருள், அருள் என்று கூறப்படுகின்றன. இவற்றின் அடிப்படை அறிவாகும். இருளில் அழுந்தி இருக்கக்கூடிய நிலை உயிரினுடைய அறியாமை நிலையாகும். இதைக் கேவல நிலை என்று கூறுவார்கள். திருமூலர் பெருமான் இதைத் தொல்பதம் என்கிறார்.

கருணைக்கு இருப்பிடமான இறைவன் உயிர்களை மலப்பிடிப்பிலிருந்து விடுவிக்கும் பொருட்டு, அவைகளுக்குத் தனு, கரணம், புவனம், போகம் ஆகியவற்றை அளிக்கின்றான். அவற்றின் வாயிலாகச் சிறிது அறிவு விளக்கம் பெற்ற உயிர்கள், ஐம்பொறிகள், நான்கு உட்கருவிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தான் என்கிற முனைப்போடு, வினைகளைப் புரிந்தும், வினைப் பயன்களை அனுபவித்தும், பல பிறவிகள் எடுத்த அனுபவங்களால் இளைத்து "இறைவா தாங்கிக் கொள்" என்கிற உணர்வோடு மேலும் வினைகளைப் புரியும் விருப்பங்கள் அற்றவர்களாக, ஞானவாழ்விலே தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, கடைசியாக ஏதோ ஒரு பிறவியில் முத்திப் பேற்றினைத் தரும் தகுதியை முழுமையாகப் பெறுவதெல்லாம் இறைவன் உயிர்களின் உய்வுக்காகப் புரியும் திருவிளையாடலாகும். பாச மறைப்பு ஆகலுகின்றது. அருள் வாழ்க்கை தொடங்குகிறது. தத்துவங்கள் நீக்கித் கொள்ளப்படுகின்றன. உயிர் சிவமாம் தன்மையைப் பெறுகின்றது.

"சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்

அவமாகாச் சித்தர், முத் தாந்தத்து வாழ்வார்

பவமான தீர்வோர், பசுபாசம் அற்றோர்

நவமான தத்துவம் நாடிக்கண் டோரே." (திருமந்திரம் - 497)

தத்துவங்களுடனும் கலைகளுடனும் பொருந்தி, மும்மலங்களுக்கும் ஆட்பட்டு, உலகில் வாழ்க்கை நடத்திச் செல்லும் சகலருடைய நிலையைக் குறைவாக எண்ணக்கூடாது. ஏனென்றால், இந்த நிலையில்தான் மலங்களின் தடையைச் சிறிது சிறிதாக நீக்கி இறைவன் உயிர்களிடையே மிகுந்துள்ள ஆணவத்தின் வலிமையைக் குறைத்து, உள்ளத்தில் அறிவு விளக்கத்தைச் சற்றே எடுத்து வைக்கின்றான். மலப்பிணிக்கு மருந்துபோல அமைவது சகல நிலை. பொதுவாக உயிர்கள் இதைத் தெரிந்து கொள்வதில்லை. சகல நிலையில் திருவருளுக்காக ஏங்கும் ஒரு இன்பமயமான வாய்ப்புக் கிட்டுகிறது. இதை நாம்

பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்து கொள்வதில்லை. ஆகவேதான், சகல நிலையைத் திருமூலர் பெருமான் நற்பதம் என்கிறார். இந்தச் சகல நிலையில் திருவருளின் ஒளியை நாடி, சற்றுப் பெற்று, அந்த ஒளியில் தூய ஆன்ம நெறியினைக் கடைப்பிடித்து இவ்வுடலில் வாழும் வரை உயிர்களிடம் அன்பையும், கருணையுயும் காட்டி, தான் என்கிற உணர்வைக் குறைத்துக் கொண்ட விருப்பும், வெறுப்பும் இல்லாதவாறு, ஒருவகையான பற்றற்ற வாழ்வினை மேற்கொள்வதைப் பிற்பதம் என்று திருமூலர் பெருமான் குறிப்பிடுகிறார்.

இறைவன் புரியும் முத்தொழில் உயிர்கள் தத்துவங்களோடு தங்களைச் சேர்த்துக் கொண்ட பின்னர் அவைகளிடமிருந்து விடுபட்டு இறைவனுடைய திருவடியைச் சேரும் நெறியினைத் தெளிவுபடுத்துவற்குத்தான். உயிர்களுடைய வினைக்கேற்ப, பக்குவத்திற்கேற்ப சீவராசிகள் மூவகை நிலைகளையும் அடையக்கூடிய தகுதி பெற்று, இப்பிறிவியிலேயே உயிர்கள் சிவமாம் தன்மையைப் பெறக்கூடிய வாய்ப்புகளை இறைவனுடைய திருவருள் அளிக்கின்றது. ஒரு வகையில் இறைவனே பாசத்திற்குக் காரணமாக இருப்பதால் , மும்மலங்களும் அவன் உயிர்களுக்குத் தந்த குறைபாடுகள் என்றே எடுத்துக் கொள்வதில் தவறில்லை உணர்ந்து கொள்வோர் வாழ்க்கையில் கன்மமும், மாயையும் உயிர்கள் வீடு பேற்றை அடையக்கூடிய மார்க்கமாக அமைகின்றன. இந்த வழியைப் பின்பற்றி செல்பவர்கள் முக்குற்றமாகிய காமம், வெகுளி, மயக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபடுவர். இவ்வாறு சோபான ரீதியாக தத்துவங்களைக் களைந்து, தூய்மையை அடைந்து வரும் சீவர்கள், சீவ முக்தி, பர முக்தி ,சிவ முக்தி ஆகிய மும்முக்திகைள அடைகின்றனர். உயிர் தன்னிலை விளக்கத்தைத் தன்னுள் உணர்ந்த சீவ முக்தியை அடைகின்றது. பிறப்பின் நோக்கத்தைத் தெரிந்து கொள்கின்றது. தன்னைப் பற்றிய அறிவைப் பெற்று வைராக்கியத்துடன் பிரபஞ்சத்தை விட்டுத் தள்ளி நிற்கும். இத்தோடு நிற்காமல் மேலும் சென்று இறைவனுடைய பேரறிவு, பேராற்றல் ஆகியவற்றை உணர்ந்தவைகளாகப் பேரின்பம் பெற்று இறை எனும் பெரும் சுடரில் அந்த உண்மையில் தன்மையைத் தெரிந்து கொள்வது பரமுக்தி நிலையாகும். பெருஞ்சுடராகிய பேரறிவில் சிறிய சுடரான உயிரானது ஒன்றிக் கொண்டு கிடைக்கும் பேரானந்ததில் திளைப்பது சிவமுத்தி என்று கூறப்படுகின்றது. தத்துவங்கள் நழுவி விடுகின்றன. எஞ்சி நிற்பது உயிரும், சிவமாகிய பரம்பொருளும்தான். மும்முலங்களோடு கூடியிருக்கும்போது சீவன் மருள் நிலையில் நிற்கின்றது. தத்துவங்களைக் கடக்கும்பொழுது பரசொரூபம் பெறுகிறது. இறைவனுடன் பொருந்தி இறைத் தன்மையைப் பெற்றிருக்கும்போது உயிர் சிவசொருபத்தை அடைகின்றது பளிங்கு ஒன்றைப் பாருங்கள். அதற்கு எதிரே ஒளி வீசும் மாணிக்கக்கல் ஒன்றை வையுங்கள். அந்த வெண்மையான பளிங்கானது மாணிக்கத்தின் வண்ணத்தையும், அழகையும், பூரிப்பையும் வெளிப்படுத்தும். சிவசொரூபமாக இருக்கும் உயிர்கள் சிவபரம்பொருளின் தன்மையை வெளிப்படுத்துகின்றன.

"மணியளி சோபை யிலக்கணம் வாய்த்து

மணியென லாய்நின்ற லாறது போலத்

துணிமுச் சொருபாதி சத்தியாதி சாரப்

பணிவித்த பேர்நந்தி பாதம் பற் றாயே." (திருமந்திரம் - 2482)

நான்கு உணர்ந்தான் -

எல்லோராலும் உணரப்பட வேண்டிய இறைவன் நான்குணர்ந்தான் என்று திருமூலர் பெருமான் கூறும்பொழுது சற்று வியப்பாகவே இருக்கும். இதற்குப் பொதுவாக அறிஞர்கள் பொருள் கூறுவது இறைவன் நான்கு வேதங்களையும் முற்றிலும் உணர்ந்தவன் என்பதாகும். உண்மையில் நான்கு வேதங்களின் முடிவான பொருளே இறைவனல்லவா? வேதங்கள், யோகிகள் மேற்கொண்ட ஆழ்ந்த தியானத்தின் விளைவாகத் தெளிந்த உள்ளங்களிலிருந்து எழுந்த உண்மையாகும். வேதங்கள் வெளிப்படையாகப் பல தெய்வங்களைப் போற்றி, வாழ்த்தி வணங்குகின்றன. தெயவங்கள் பலவானாலும் இறைவன் ஒருவனே என்று வேதங்கள் கூறுகின்றன. வேதங்கள் அறத்தை வலியுறத்துகின்றன. இறை வழிபாட்டிற்கான நெறிகளை விளக்கித் தருகின்றன. வேதங்களின் ஆழ்ந்த உண்மைகளைப் புரிந்து கொண்டவர்கள். வேதங்கள் போற்றும் இறைவனைத் தம்முள்ளேயே உணர்ந்து கொள்கின்றார்கள். வேதங்களால் உணரப்படும் பொருளாகிய இறைவனை நாமும் உணர வேண்டும் என்பதே வேதங்களுடைய மேற்கோளாகும்.

வேத மந்திரங்களில் தலையாய் நிற்பது பிரணவ மந்திரம் ஆகும். "ஓமிதி பிரம்மா" என்கிறது வேதம். "ஒம் என்பதே பிரம்மமாகும்" என்பது பொருளாகும். "ஒம் இதி ஏதத் அட்சரம் இதம் சர்வம்" என்கிறது மண்டுக்கியா உபநிடதம். அதாவது ஓம் என்னும் சொல்லே எல்லாம் ஆகும் என்பது இதற்குப் பொருளாகும். இதைத் தெரிந்து கொண்டவர்கள் இறைவனை அனுபவிக்கின்றார்கள் என்று வேதங்கள் கூறுகின்றன. ஓம் என்பது முதல் ஒலி. அது இறைவனுடைய ஆற்றலின் வெளிப்பாடாகிய நாதத்திற்கே காரணமானது. ஓம் என்ற சொல்லே நாதமாக வெளிப்பட்டு, ஓசை அலைகளை உருவாக்கி இறைவனுடைய உலக இயக்கத்திற்குத் தொடக்கமாக அமைகின்றது. ஓம் என்னும் ஒலியே யோகிகள் தங்களுடைய சித்தத்திலே இறையாற்றலின் பிரதிபலிப்பாகத் தெரிந்து கொள்கின்றார்கள். பிரபஞ்சத்தின் இயக்கத்தில் வெவ்வேறு அணுக்களின் அசைவுகள் ஓம் எனும் ஒலியால் ஏற்படுகின்றன. ஐம்பூதங்களும், ஐம்புலன்களும், பிரபஞ்சமும் ஓம் எனும் ஆதி மந்திரத்திலிருந்து தோன்றியவை. யோகிகள் ஓம் என்கின்ற பொருளின் உண்மையை நமக்கு எடுத்துக் கூறும் போது, அதை உணர்ந்தவர்கள் இறைவனைத தம்முள் கண்ட கொள்கின்றார்கள் என்று சொல்கின்றார்கள். ஓட்ம என்கின்ற சொல்லின் விளக்கத்தைப் பெறும் வேதங்களின் உண்மையையும் தெரிந்து கொள்கின்றோம்.

நான்கு வேதங்களையும் நன்கு கற்றுணர்ந்தவர்கள் தெளிவான சிந்தனை உடையவர்களாகி இறையுண்மையை அறிகின்றார்கள். வேதத்தை உணர விரும்புபவர்கள் மந்திரங்களைக் கற்றால் மட்டும் போதாது. வேதங்களின் முடிவான பொருள் பற்றற்ற நிலையே ஆகும். ஆகவே, பரம்பொருளை உணர்ந்தவர்கள் பற்றற்றவர்களாய் நிற்கின்றார்கள். எனவேதான் திருமூலர் பெருமான் "பற்று

அற்றவர்கள பற்றி நின்ற பரம்பொருளே" என்கின்றார். வேதங்களைப் படித்து, தொடர்ந்து வேட்கை மிகுந்தவர்களாய் இருப்பவர்கள் வேதங்கள் கண்ட இறைவனை உணர மாட்டார்கள். இது பற்றிய திருமந்திரத்தைக் கீழே காணுங்களேன்.

"வேதாந்தம் கேட்க விரும்பிய வேதியர்

வேதாந்தம் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்

வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்

வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டாரே." (திருமந்திரம் - 229)

ஆகவே, வேதங்கள் கூறும் பரம்பொருளை உணர உண்மை ஒழுக்கம் வேண்டும். அறிவு பக்குவமடைய வேண்டும். பொருட்கள் மீது விருப்பு வெறுப்பின்றி நிற்க வேண்டும். பரம்பொருள் மீது உன்மையான அன்பும் பக்தியும், நம்பிக்கையும் இருக்க வேண்டும். ஐம்பொறிகளையும் புலன்வழி செல்லாது தடுத்து, பாச பந்தங்களை அகற்ற வேண்டும். கடைசியில் தான் என்கின்ற நினைப்பையும் இழத்தல் வேண்டும். இறைவன் விருப்பு வெறுப்பு அற்ற இடம். ஆசாபாசங்களை வைத்துக் கொண்டிருப்பவன் இறைவனாக முடியாது. அவற்றிற்கு அப்பால் சென்றவன்தான் எல்லா உயிர்களிடமும் ஒற்றுமை உணர்வு பெற்ற இறை நிலையை அடைய முடியும். இதைத் திருமந்திரம் பின்வருமாறு கூறுகிறது.

"சத்திய முந்தவம்தான் அவன் ஆதலும்

எய்த்தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்

ஒத்த உயிர்கள் உண்டா யுணர்வுற்றுப்

பெத்தம் அறுத்தலு மாகும் பிரமமே". (திருமந்திரம் - 226)

"மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா என ஒங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே

... ... ... ..."

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே."

என்பது திருவாசகம். பரம்பொருள் என்பது பேரறிவு. வேதங்களும் பேரறிவு என்பதும் ஒன்றே. வேதங்கள் இடைவிடாது சொல்லிக் கொண்டிருக்கும் பரம்பொருளை நினைத்தமாத்திரத்திலும் அறியலாம்.

"உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்

பன்னு மறைகள் பயிலும் பரமனை

... ... ... ...

... ... ... ..."

என்பது திருமந்திரம்.

ஆகவே, இறைவன் வேதங்களை உணர்ந்தவனாகத்தான் இருக்க முடியும்.

வேறொரு கருத்தையும் சொல்லலாம். வேதங்களை உணர்ந்த இறைவன் வேத நெறியை நமக்குப் போதிக்கின்றான். திருஞானசம்பந்தர் பெருமானுடைய பிறப்பிற்குக் காரணம் "வேத நெறி தழைத்தோங்க" என்கிறார் சேக்கிழார் பெருமான். வேதங்களை ஓதுவதிலும், சடங்குகளைச் செய்வதிலும் மட்டுமே வேத நெறி இல்லை. வேத நெறி அவற்றிற்கு அப்பாலும் செல்கின்றது என்பதைத் தெரிவிக்கவே திருஞானசம்பந்தர் பெருமான் இந்தப் பூவுலகில் திரு அவதாரம் செய்தார் என்பது ஆளுடைய பிள்ளையாருடைய வாழ்க்கையிலிருந்து நன்கு தெளிவாகின்றது. காதலாகிக் கசிந்து, கண்ணீர் மல்கி ஓத வேண்டும் என்கிறார் சீர்காழிப் பிள்ளையார். அதாவது உயிரையும், உடலையும், பொருளையும் சிவபரம்பொருளிடம் ஒப்படைத்துவிட்டு எல்லாம் அவன் செயல் என்று அவனை நினைப்பதிலும், துதிப்பதிலும் வாழ்க்கையை நடத்துவது வேத நெறியாகின்றது என்று பொருள் கொள்ளலாம். வேத நெறி சரியை, கிரயை, யோகம், ஞானம் என்கிற நான்கு நிலைகளில் வெளிப்படுகின்றது. வேதங்களை உணர்ந்த இறைவன் இந்த நான்கு நெறிகள் மூலமாகவும் உலக மக்களை உணர்விக்கின்றான்.

ஐந்து வென்றனன்

ஐம்புலன்களையும் வென்றவன் இறைவன். அவற்றிற்குக் காரணமானவனே இறைவன். உடலில் ஐம்பொறிகளையும், ஐம்புலன்களையும் பொருத்தி அவற்றுடன் இணைந்தும் இணையாமலும் நிற்பவன் இறைவன். உடலின் தத்தவங்கள் இயங்க ஐம்பொறிகள் பலவாறாகப் பணியாற்றுகின்றன. இந்த ஐந்து இந்திரியங்களும் மிக்க மதம் கொண்ட யானைகள் போன்றவை. அவற்றை அடக்கச் சாதாரண பாகன் போதாது. உடல் வலிமையும், மனத் தூய்மையும் பெற்ற உயிரே ஐம்பொறிகளை அடக்கும் தகுதி பெற்றுள்ளவை. ஐம்பொறிகளும் பறவைகள் போல வானில் உயர்ந்து பறந்து உணவைத் தேடி வருபவன். திருமூலர் பெருமான் அவற்றை உடம்பாகிய காட்டிலிருக்கும் ஐந்து சிங்கங்களுக்கும் ஒப்பிடுகின்றார். குகையிலிருந்து கிளம்பிய ஐந்து சிங்கங்கள் காட்டில் சென்று இரையுடன் திரும்பி வருவதுபோல ஐம்பொறிகள் வழியாக விஷய அனுபவங்கள் சதா காலமும் மனதைத் தாக்குகின்றன. சிவஞானபோதம் இவைகளை ஐந்து வேடர்களுக்கு ஒப்பிடுகின்றது. இந்த வேடர்கள் எல்லாப் பக்கமும் பார்த்துக் கொண்டு அம்பும் வில்லும் பொருந்தியவர்களாக விலங்குகளைத் தேடி நிற்பது போல் உள்ளனர். உடலாகிய அரசுக்கு அமைச்சர்களாகிய ஐந்து இந்திரியங்களும் ஏவலாளர்களாகிய தத்தவங்களும் உள்ளன. இந்த ஐந்து அமைச்சர்களும் நல்ல முறையில் செயல்படுவதற்கு மனமாகிய அரசன் முயலாவிடில் ஐந்து அமைச்சர்களும் தத்துவங்களும் தாம் போன போக்கிலேயே போய் விடுவார்கள். திருமூலநாயனார் இத்துடன் நிற்கவில்லை. இந்திரியங்களை மதயானைகளுக்கு ஒப்பிட்டவர் அந்த மதயானைகள் எவ்வாறு கோட்டையிலிருந்து தப்பி ஓடிக் காடுகளிலே புகுந்து உடம்பாகிய கரும்புப் பயிரினை அழித்து அலைகின்றன என்று அழகாக விவரிக்கின்றார்.

விஷய அறிவு மனதில் பதிந்தவுடன் புத்தி, சித்தம் போன்றவை செயல்பட ஆரம்பிக்கின்றன. அவற்றிற்கு எழுச்சியை கங்காரம் கொடுக்கின்றது. ஆகவே, இந்த அனுபவங்களைக் குறைப்பதற்காக ஐம்புலன்களைக் கட்டுப்படுத்துவது மிக அவசியமாகின்றது. இதைச் சாதாரணமாகச் சொல்லி விடலாம். ஆனால்,

நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம். தேவர்கள் கூட ஐம்புலன்களை முழுதும் அடக்கக்கூடிய நிலையில் இல்லை. ஆனால், அவற்றை ஒடுக்கி, வென்று ஞானத்தறியினில் பூட்டிச் சிந்தையை ஒரே வழியாக எடுத்துச் செல்லும் மக்கள் இறைவனை உணர்வார்கள். ஏனென்றால், இறைவன் ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்டவன். ஐம்புலன்களை வென்ற நீங்களும் இறைத்தன்மையைப் பெறுகிறீர்கள். இறைவன் பொறிகளையும், புலன்களையும் தோற்றுவித்து அவற்றின் மூலமாக மக்களுக்கு நல்லது என்றும் தீயதென்றம் விளக்கி வினையை எடுத்து வைத்து வினையினை மூலமாகத் தன்னுடைய தொழிலை நடத்திக் கடைசியில் சீவராசிகளுக்குத் தனது அருளை அளித்து, தன்னுடன் சேர்த்துக் கொள்ளக்கூடிய ஓர் நிலையை உருவாக்குகின்றான். ஆகவேதான், சகஜ நிலையில் மக்கள் உலகத்தில் பிறந்தவர்கள் விருப்பினாலும் வெறுப்பினாலும் பிணக்கப்படுவர். தங்களுடைய ஆவலைப் பூர்த்தி செய்ய முற்படுகின்றனர். ஆனால், நாம் முக்கியமாகத் தெரிந்த கொள்ளவேண்டியது அந்த ஆவலை நல்ல வழியில் பூர்ததி செய்து கொள்ள வேண்டியது பற்றிதான். பிறிவிப் பயனைப்பெற வேண்டுமென்கிற அறிவை அடைவதற்கான தடைகளிலே முக்கியமாக ஒன்று இந்த ஐம்புலன்களால் ஏற்படும் அனுபவங்கள். ஆனால், இந்த அனுபவங்களை இறைவன் அளித்த அனுபவங்களாக எடுத்துக்கொண்டு உலகிலே அற வழியாக நடப்பவர்கள் ஆசையையும், அன்பையும் அறுப்பதற்கான வழிகளைக் கண்டுகொள்கிறார்கள் இந்த ஐம்புலன்களால் வரக்கூடிய வினையை அவ்வாறு தீர்த்துக்கொள்ள முயல வேண்டும். இதைத் திருமந்திரம் விளக்குகின்றது.

"இன்பம் இடரென் றிரண்டுற வைத்தது

முன்பவர் செய்கையி னாலே முடிந்தது

இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்

அன்பிலார் சிந்தை அறம் அறி யாரே".¢ (திருமந்திரம் - 257)

அன்பு, அறம், தவம், ஈதல் ஆகிய நெறிகளை மேற்கொண்டு தூய்மையான வாழ்க்கை நடத்தி, ஆசைகளைக் குறைத்துக் கொண்டு வாழ்ந்தோமானால் எது நிலையானது. எது நிலையற்றது என்பது பற்றித் தெளிவு பிறக்கிறது. ஆசைகளை நீக்கிக் கொள்ள வேண்டும் என்கிற உணர்வு வளர்கிறது. அதுவே பக்குவமான நிலை. இதுவே இறை நிலை. உறவின்றியே நிற்கின்ற மாயப்பிரான் ஐம்புலன்களை வென்றவன். செங்கற் சுவரால் கட்டப்பட்ட வீடுகளில் இருப்பவனல்லன். தனியாக மண்டபங்களில் அமர்ந்திருப்பவனும் அல்லன். வீடுகளில் உள்ள அறைகளில் வீற்றிருப்பவனும் அல்லன். அவன் ஆலயங்களில் அமர்ந்து கொண்டிருக்கின்றான் என்று கூட நினைக்கத் தேவையில்லை. சமய இலக்கணங்களைப் பின்பற்றி சமய வழிகளிலேயே நிற்பவர்களுடைய மனத்தில் தங்குபவனும் அல்லன். ஆனால், வேட்கை விட்டவர் இதயத்தில் நின்று உள்ளிருந்தபடியே அவர்களுடைய உயிரைத் தூய்மை செய்து தன்னுடன் சேர்த்துக் கொள்கின்றான். ஏனென்றால், அதுவே அவனுடைய தன்மையாகும். இந்தத் திருமந்திரத்தைப் பாருங்கள்.

"மாடத்து ளானலன் மண்டபத் தானலன்

கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன்

வேடத்து ளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில்

மூடத்து ளேநின்று முத்திதந் தானே". (திருமந்திரம் - 2614)

ஆறு விரிந்தனன்

தவத்திரு சுத்தானந்த பாரதியார் அவர்கள் தனது திருமந்திர விளக்க நூலில் இதற்குப் பொருளாக இறைவன் ஆறுவிதமான சமயங்களிலும் விரிந்து நின்றவன் என்று கூறுகிறார். இந்த ஆறு சமயங்களும், பொதுவாக அகச்சமயம், அகப்புறச்சமயம், புறச்சமயம், புறப்புறச்சமயம் என்கிற நான்கு உட்பிரிவுகளில் தங்குகின்றன என்றும், சமயங்கள் எத்தகைய கொள்கைகளைப் பெற்றிருந்தாலும் அல்லது தெய்வங்களை வணங்கினாலும், ஆழ்ந்து நோக்கினால், இறைவன் ஒருவனே என்கின்ற அடிப்படையில் இறைவனே ஆறு சமயங்களாக அவற்றிலுள்ள தத்துவங்களாக மக்களுடைய மனத்திற்குத் தக்கபடி காட்சியளிக்கின்றான் என்கிற பொருளைத் தருகின்றார்.

இந்தக் கருத்தைத் தவிர வேறு சில விளக்கங்களையும் அளிப்பதற்கான ஆதாரங்களைத் திருமந்திரத்திலேயே காணலாம். பல ஆயிரமாண்டுகளாக நம்முடைய யோகிகள் இறைவனைத் தம்முள் நன்கு உணர்ந்த நிலையில் உடம்பைப் பற்றியும், உயிரைப் பற்றியும் பலவிதமான நுண்ணிய ஆராய்சிகளைச் செய்திருக்கின்றார்கள். மனித உடம்பிலே தங்கி இயங்கும் ஆற்றலைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள். இந்த ஆற்றல்கள் இயங்கும் தன்மையைப் பற்றி விரிவாக யோக சாஸ்திர நூல்கள் எடுத்துரைக்கின்றன. பரம்பொருளின் ஆற்றலின் ஒரு அம்சமே இவ்வாறு உடலில் நிற்கின்றது என்று யோகிகள் கூறுகிறார்கள். இந்த ஆற்றல்கள் இருக்குமிடங்களை ஆதாரங்கள் என்று அழைப்பார்கள். இவ்வாறு உடம்பில் ஆறு ஆதாரங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இவை முறையே மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதரம், விசுத்தி, ஆக்ஞை என்பதாகும். இவற்றின் மூலம் என்னும் அடி நிலை முதல் ஆதாரமாகும். இந்த ஆதார சக்திகள் பூவிதழ்களின் அமைப்பைக் கொண்டவை என்றும், பல நிறங்களைக் கொண்டவை என்றும், ஒவ்வொரு ஆதாரத்திற்கும் காரணமாய் உள்ள சக்தியை எழுத்துக்களால் குறிப்பிடலாம் என்றும் யோக நூல்களில் கூறப்பட்டுள்ளது. மூலாதாரம், நான்கு இதழ்களையும், நான்கு எழுத்துக்களையும் கொண்டது. செவ்வொளி நிறமுடையது. நாற்கோணத்தில் முக்கோண வடிவமுடையது. குதத்திற்கும் குய்யத்திற்கும் இடையில் உள்ளதாகச் கூறுவர். இறைவன் பெரும் ஆற்றலாகச் சீவராசிகளிடையே சக்தி என்னும் வடிவில் தோன்றி எழும்போது அடிப்படையான குண்டலினி சக்தி என்கிற பெயருடன் விளங்கும் இடம் இந்த இடமே. யோகிகள் "அனைத்து மந்திரங்களுக்கும் மூலமாகிய ஓங்காரமே குண்டலினி சக்தி என்கின்ற பெயருடன் விளங்கும் இடம் இந்த இடமே. யோகிகள் "அனைத்து மந்திரங்களுக்கும் மூலமாகிய ஓங்காரமே குண்டலினி சக்தி என்பர். இதிலிருந்தே இந்த சக்தி இறை சக்தி என்று நன்கு தெரிகின்றது. எனினும், மாயையால் உலகமும், பொருளும் உருவாக்கப்பட்ட அவற்றைப் பற்றிய அனுபவங்களைப் பெறுவதற்கென சீவராசிகளுக்குத் சக்தியை வழங்கும் இறைவன் முதற்கட்டமாக பொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மூலாதார நிலையில்

சாதாரணமாகத் தூங்கிக் கிடக்கின்ற சக்தியாக வெளிப்படுகின்றான். இதைக் குண்டலினி தூங்குகின்றது என்பார்கள். உள்ளுணர்வற்ற அறியாமை நிலையையும் இது குறிக்கின்றது. எவ்வாறாயினும் பிரபஞ்சம் இயங்குவதற்கு அடிப்படையாக உள்ள நிலை மூலாதாரம்.

மூன்றாவதாக மணிபூரகம் பத்து இதழ்களைக் கொண்டதாய்ப் பத்து எழுத்துக்களைக் கொண்டதாய் இருதயத்தானத்திற்கும் நாபிக்கும் இடையில் அமைந்துள்ளது மூன்று வட்டங்களையுடையது.

அடுத்து அதாகதம் என்பது பன்னிரண்டு இதழ்களையும், பன்னிரண்டு எழுத்துக்களையும் கொண்டது. இருதய ஸ்தானத்தில் அமைந்துள்ளது மனத்தின் இடம் இதுவே என்பதும் ஒரு கருத்து.

இந்த நான்கு நிலைகளுக்கும் மேலுள்ளது. விசுத்தியாகும். பதினாறு இதழ்களிலும், பதினாறு உயிரெழுத்துக்களிலும் புகை போன்ற நிறமுடன் இது அமைந்துள்ளது. இது கண்டம் அல்லது கழுத்து என்கின்ற இடத்தில் உள்ளதாகக் கூறுவர். இருதயத்திற்கு மேலுள்ள நிலையானதால் சீவராசிகளின் சாதாரண உணர்ச்சிகள் இவ்விடத்தில் குறைக்கப்பட்டு அறிவு தோன்றும் இடமாக உள்ளது. ஆகவேதான். ஞான நெறியில் செல்லும் ஒருவனுக்கு இது முதல் இடமாக விளங்குகின்றது.

அடுத்து இருப்பது ஆக்ஞை. இரண்டு எழுத்துக்களையும் இரண்டு இதழ்களையும் கொண்டுள்ளது. இது புருவத்தின் நடுவில் உள்ள இடம். அறிவிற்கு நிலைக்களமாக அமைந்துள்ளது. "வேலொத்த கண்னை வெளியில் விழித்திரு" என்பார் திருமூலர். இங்கு உலக அறிவு மங்கி இறை அறிவு தோன்றுகிறது. இங்கிருந்து மேற்செல்லும் நிலையில் இறையுணர்வும், இறையளியும், மேலும் மேலும் பிரகாசித்து யோக சாதகன் பெருநிலையை அடையக்கூடிய வாய்ப்பினைப் பெறுகின்றான் என்று சொல்லப்படுகிறது.

இந்த விளக்கங்களுக்குச் சான்றாக பின்வரும் திருமந்திரத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

"நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறுங்

கோலிமேல் நின்ற குறிகள் பதினாறும்

மூலங்கண் டாங்கே முடிந்து முதல்இரண்டுங்

காலங்கண் டானடி காணலு மாமே" (திருமந்திரம் - 1704)

ஞானசம்பந்தர் பெருமானும்

"ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண்சுடர்

ஞான விளக்கினை ஏற்றி, நன்புலத் (து)

ஏனை வழிதிறந் (து) ஏத்துவார்க் (கு) இட

ரான கெடுப்பன அஞ்செழுத்துமே"

என்று அருளிச் செய்கின்றார்.

இந்த ஆறு ஆதாரங்களிலுட்ம இறைசக்தியே பொருந்தியுள்ளது. உயிரின் இயக்கம் நடந்து கொண்டிருக்கும்பொழுது சக்தியின் பெருக்கம் மனிதனின் எல்லாப் பாகங்களிலும் மூலாதாரத்திலிருந்து உச்சியை நோக்கியும், உச்சியிலிருந்து

கீழ்நோக்கியும் மிக நுண்ணியதான நிலையில் நடந்து கொண்டே இருக்கின்றது. அண்டமெல்லாம் வியாபித்திருக்கும் சக்தியின் அணுக்கள் இந்த ஆதாரங்களில் உள்ளிழுக்கப்பட்டு சஞ்சரித்துக்கொண்டே இருக்கின்றன. தங்கள் தன்மைக்கேற்ப இந்த ஆதாரங்கள் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் மனிதனுக்குக் குணங்களையும், குணச்சேர்க்கைகளையும், விருப்புகளையும், வெறுப்புகளையும் அளித்துக் கொண்டிருக்கின்றன. ஆகவே, பிரபஞ்சத்தில் உள்ள இறை சக்தியே இவ்வாறு செயல்பட்டு வருகிறது. விசத்திக்குக்கீழ் உள்ள நான்கு ஆதாரங்களில் தேவர்கள் ஆகிய சதாசிவர், மகேஸ்வரர், உருத்திரர், திருமால் என்பவர் வீற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. இவர்கள் முறையே ஆகாயம், வாயு, தேயு, அப்பு, அதாவது, ஆகாயம், காற்று, நீர், நிலம் என்னும் பூதங்கட்குத் தலைவர்களென எண்ணப்படுவதால் இந்த நான்கு ஆதார நிலைகளிலும் உள்ள சக்திகள் உயிரை உடலுடன் பொருந்திய வகையில் உடலுக்கான இன்பத் துன்பங்களைப் பெறுவதற்கான அமைப்பில் வைக்கப்பட்டிருக்கின்றது எனவும் எடுத்துக் கொள்ளலாம். அந்த நிலையில் உயிர் உலகமயமாக குறைந்த ஒளியுடன் குண மாற்றங்களுக்கு உட்பட்டதாய்ப் பாசங்களுடன் பிணைக்கப்பட்டதாய் நிற்கின்றது. இந்த நிலையிலிருந்து விடுபட்டு ஆதார சக்திகளின் தன்மையைப் படிப்படியாக மாற்றி யோக சாதனைகளின் மூலமாக இறைவனின் திருவடி உணர்வைப் பெறுவது எல்லாச் சீவராசிகளுடைய நோக்கமாக இருக்க வேண்டுமென்பது சித்தர்கள் வாக்காகும். இந்த நிலையை ஆனந்த யோகம் என்று பெயரிட்டுள்ளார்கள். இவற்றைப் பற்றிய விவரங்களை நன்க கற்றுணர்ந்தவர்களிடம்ட இருந்து தெரிந்து கொள்வது நல்லது. இறைவனை அடையப் பல வழிகள் உண்டு என்பதை யாவரும் உணருகின்றார்கள் அந்த ஆர்வத்தால் இறைவனைக் காணுதல் பொருட்டுக் கடல் சூழ்ந்த உலகம் முழுவதும் கால்கள் நோவ நோவ சுற்றிவரினும் பயன் கிட்டாது என்பது திருமூலர் பெருமானுடைய வாக்கு. தம்முள்ளேயே யோக சாதனை மூலம் இறைவனை அறிந்து கொள்ள வாய்ப்பு உண்டு என்பதைத் திருமந்திரம் பின்வருமாறு தெரிவிக்கின்றது.

"ஓதம் ஒலிக்கும் உலகை வலம் வந்து

பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை

காதலில் அண்ணலைக் காண இனியவர்

நாதன் இருந்த நகரறி வாரே". (திருமந்திரம் - 707)

பேரறிவாகிய இறைவன் பேராற்றலாகச் சீவராசிகளிடம் வியாபித்துள்ளபோழுது சக்தி என்னும் பெயருடன் இயங்குகின்றான். இச்சக்தியானவள் சிவனுடைய சொரூபமே. இச்சக்தி உடலிலுள்ள ஆதாரங்களில் பொருந்தி இருப்பதை உணர்ந்தவர்கள் இறைவன் உடலினுள் வியாபித்திருக்கின்றான் என்பதைத் தெரிந்து கொள்கின்றார்கள். இச்சக்தியைத் திருமூலர் பூரண சக்தி என்றழைக்கின்றார்.

ஏழுஉம்பர்ச் சென்றனன் யோகிகள் உடலைக் கோயிலாகக் கருதுகிறார்கள். உடலில் இறைவன் வீற்றிருக்கின்றான் என்பார்கள். உடலையும் உடலைச் சார்ந்த கருவிகளையும் அன்றாடத் தேவைகளை அடைய நாம் பயன்படுத்தி வரும்பொழுது உடலிலே பொருந்தியுள்ள நுட்பமான சக்திகளை நாம் உணர்ந்து கொள்வதில்லை. ஆனால், இறைவன் உடலின் கூறுகளாகிய அத்துணை அணுக்களிலும் நிரம்பியிருக்கின்றான் என்பது யோகிகளின் அனுபவம். உடலின் கீழ்நோக்கும் சக்திகளின் இயக்கத்தைச் சிறிது சிறிதாகக் குறைத்துப் பொறிவழிச் செல்லாமல் மனத்தைத் தூய்மைப்படுத்தி, மேல்நோக்க வேண்டும் என்பதே உடலிலுள்ள அடிப்படை ஆற்றலை ஆதாரங்கள் வழியாக மேலேற்றுவது என்று சித்தர்களுடைய சித்தாந்தம் நமக்கு எடுத்துச் சொல்லுகிறது. கீழுள்ள சக்திகள் மேலே எழும்போது தலை உச்சியில் பன்னிரண்டு அங்குல அளவு அடைந்து, அங்கே பரவி நிற்கும் நிலையை யோகத்தின் முடிவு என்பார்கள். அப்பொழுது சாதகன் பலவிதமான நுட்பமான அனுபவங்களைப் பெறுகிறான் என்று யோகியர் நமக்கு எடுத்துச் சொல்கின்றனர். யோக நூல்கள் சகஸ்தர தலம் என்று குறிப்பிடும் இந்த இடம் இறைவனின் திருவடி பொருந்திய நிலையாகக் கருதப்படுகிறது. பேரறிவு உள்ளத்திலே தோன்றிச் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் உணர்வினைத் தருவதாகவும் யோகிகள் கூறுகின்றனர். இறைவன் ஏழாவது நிலையில் வீற்றிருக்கும் அனுபவ உண்மையைக் கண்டுள்ள பெரியோர்களைச் "சிவனார்" என்று யோகிகள் கூறிக்கொள்வது வழக்கம். இந்த நிலையை அருள் விளக்கம் பெறுகின்ற நிலை. அருள் நலம் கனிந்து எழுகின்ற நிலை என்று சொல்வார்கள். இறைவன் ஏழு உம்பர்ச் சென்றனன் என்றால் உடலின் நுட்பமான பகுதிகளிலும், உடலோடு உடலாகக் கலந்து சாதகர்கள் அடையக்கூடிய ஒரு அனுபவபூர்வமான உண்மையாக இறைவன் வீற்றிருக்கின்றான் என்பது பொருள்.

தானிருந் தானுணர்ந் தெட்டே தான் இருந்தான். தானான நிலையில் சக்தியோடு கூடி, எல்லாமாகி ஒன்றானான் என்கிற உண்மை நிலையில், சொரூப நிலையில் இறைவன் இருப்பதைத்தான் இருந்தான் என்று எடுத்துக் கொள்ளலாம். அவனே உணரப்படுவதற்கும், அடையப்படுவதற்கும் உரியவனாவான். மனித உடலில் உள்ள ஏழு நிலைகளையும் கடந்து, எட்டாவது நிலையான பரவெளியில் மனத்திற்கு எட்டாதவாறு வீற்றிருக்கின்றான் என்றும் பொருள் கொள்ளலாம். மும்மலங்களைக் கழிக்க உயிரானது இந்த நிலையை அடையும் பொழுது சிவமாம் தன்மையைப் பெறுகின்றது. இந்த நிலையை உணர்ந்து பார்த்து அனுபவிக்க வேண்டும் என்று அருளாளர்கள் கூறுவார்கள். இதையே திருமூலர்பெருமான் " உணர்ந்து எட்டே" என்கிறார்.

இறைவன் தனது சக்தியை வெளிப்படுத்தி, ஐம்பூதங்களைத் தாங்கி, விண்ணாகி, பரவெளியாகி நிற்கின்றான். சுடுகின்ற தீயாகவும், ஒளி வீசும் சூரியனாகவும், சந்தினாகவும் காட்சி தருகின்றான். கருணை மழை பொழிகின்ற உயிர்த் தெய்வமாக விளங்குகின்றான். நம்முடைய தலையில் அவனுடைய திருவடியை வைத்து வினைப் போகங்களைத் துய்க்கும் ஆற்றலையும் நமக்குத் தந்து, அந்த அனுபவங்களுக்கு முடிவான இடமாகவும் நம்முடைய உள்ளத்திலே வீற்றிருக்கின்றான்.

"தானே இரு நிலந் தாங்கிவிண் ணாய்நிற்குந்

தானே சுடும்அங்கி ஞாயிறுந்திங்களுந்

தானே மழைபொழி தையலு மாய்நிற்குந்

தானே வடவரைத் தண்கடற் கண்ணே". (திருமந்திரம் - 1165)

ஒரு காலத்தில் பிரம்மனும் திருமாலும் தங்களுடைய அறியாத் தன்மையால் இறைவனைத் தங்களுடைய ஆற்றலால் அடைந்துவிட முடியும் என்று கர்வப்பட்டார்கள். அக்கினிப் பிழம்பாய் நின்று கொண்டிருந்த இறைவனை மேலும் கீழும் சென்று காணாது தோல்வியுற்றனர். அண்டங்களுக்கு அப்பால் நிற்கும் இறைவனை ஆணவத்தோடும், கர்வத்தோடும் காண முயல்வது அறியாமையாகும். அதே நேரத்தில் அருளாளர்கள் இறைவனை உடலாயும், உயிராயும், உணர்வாயும், சோதியாயும், எல்லாப் பொருள்களிலும் காண்கின்றார்கள்.

"ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய் முன்னஞ்

சேனாய்வா னோங்கித் திருவுருவாய் அண்டத்

தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந்

தான் முழு தண்டமு மாகி நின்றானே". (திருமந்திரம் - 374)

அதே நேரத்தில், தூய்மையான மனதில் அன்பும், அடக்கமும் நிறைந்த இதயத்தில் இறைவனை ஒர் இன்பப் பொருளாகவும், அறிவுப் பொருளாகவும், அன்பைப் பொழிகின்ற தயாளனாகவும், உயிர்களை உய்விக்க ஐந்தொழில்களைப் புரிகின்றவனாகவும், காலமாகவும், காலத்திற்கு அப்பாற்பட்டவனாகவும் உணரலாம். இந்த உணர்வினை எட்டுவதற்கும், எட்டிப் பிடிப்பதற்கும் நாம் எல்லோரும் முயற்சி செய்ய வேண்டும்.

"அன்பும் அறிவும் அடக்கமு மாய் நிற்கும்

இன்பமும் இன்பக் கல்வியு மாய்நிற்கும்

முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்

அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே".

திருமூலதேவ நாயனார் 'ஒன்றவன்தானே' என்று தொடங்கும் மந்திரத்தில் பல நுட்பமான கருத்துக்களை எடுத்துச் சொல்லுகிறார். பரம்பொருள் கல்விக்கும், கேள்விக்கும் அப்பாற்பட்ட நிலையில் இருக்கின்றது என்பது ஒரு பக்கம். அதே பரம்பொருளை நம்முடைய உள்ளத்திலே அனுபவிக்கலாம். அனுபவித்துப் பேரானந்தத்தை அடையலாம் என்பது மற்றொரு பக்கம். பரம்பொருள் ஒன்றே என்று கூறி, அந்தப் பரம்பொருளை நம் உள்ளத்திலே வீற்றிருக்கக்கூடிய ஒரு பொருளாகப் படிப்படியாகத் தெளிவாக்கி, அந்தப் பரம்பொருளை அடைவதே எல்லாவற்றிற்கும் மேலான இன்பம் என்று திருமூலர் பெருமான் நமக்கெல்லாட்ம உபதேசிக்கின்றார். திருமந்திரமணிமாலைக்கு ஓர் சிறந்த தொடக்கமாக இந்த முதல் மந்திரம் அமைகின்றது.