"அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி" "இறைவன் இருக்கின்றானா?" இருக்கின்றான்" "இறைவன் எங்கு இருக்கின்றான்" அவனை எனக்குக் காட்ட முடியுமா?" "ஓ, காட்ட முடியுமே இறைவன் தூணில

"அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி"

"இறைவன் இருக்கின்றானா?"

இருக்கின்றான்"

"இறைவன் எங்கு இருக்கின்றான்" அவனை எனக்குக் காட்ட முடியுமா?"

"ஓ, காட்ட முடியுமே. இறைவன் தூணிலும் இருக்கின்றான். துரும்பிலும் இருக்கின்றான். அவன் உள்ளே சுடர்விட்டுப் பிரகாசிக்கும் சோதியாக அமர்ந்துள்ளான். உள்ளத்தை விட்டு ஓரடி நீங்காமல் நிற்கின்றான்".

"அதெல்லாம் சரி. இதுபோன்ற விளக்கத்தை ஏற்கனவே பலர் தந்திருக்கின்றார்கள். நீங்கள் இப்போது சொல்லுவதில் ஒன்றும் சிறப்பாக இல்லையே. நீரோ இறைவனைப் பார்த்ததில்லை. நானும் பார்த்ததில்லை. இந்த நிலையில் இறைவன் இருக்கின்றான் என்று சொல்லிக் கொண்டே போவதில் என்ன பயன்?"

திருமூலர்பெருமான் இதைக்கேட்டுப் பதட்டப்படவில்லை. இறைவனைப் பற்றிய விளக்கத்தைக் கொடுப்பதற்காகத் தானே யோகியார் மண்ணுலகில் பிறவியை எடுத்திருக்கின்றார் அதுவும் முற்பிறவிகளில் சிறந்த தவத்தைச் செய்து இறைவனைப் பற்றிய உண்மைகளை எடுத்துரைக்கும் தகுதியை முழுமையாகப் பெற்றவராக அல்லவா இருக்கின்றார். அதற்காகவே அல்லவா இறைவன் அவரைப் பூவுலகில் தோன்றச் செய்திருக்கின்றான். முன்னம் பிறவிகளில் தவத்தையும் அறத்தையும் மேற்கொண்ட திருமூலர் பெருமான் போன்ற அருளாளர்கள் இந்த உலகில் பிறவி எடுப்பதின் நோக்கமே, இறைவனுடைய அன்பு, கருணை ஆகியவற்றைப் பற்றிப் பேசுவதற்காகத்தானே!

"பின்னைநின் றென்னே பெறுவது!

முன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர்

என்னைநன் றாக இறைவன் படைத்தனன்

தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே". (திருமந்திரம் - 81)

திருமூலர்பெருமான் தொடருகின்றார்.

"களிமண்ணை எடுத்துக்கொண்டு அதிலிருந்து பல அழகான பாண்டங்களைக் குயவன் செய்து தருகின்றான். தங்கம் ஒன்றுதான். தங்கத்திலிருந்து பல ஆபரணங்களை ஆசாரி செய்து கொடுக்கவில்லையா? மரம் ஒன்றுதான். அதிலிருந்து நமக்குத் தேவையான பல மரச் சாமான்கள் செய்யப்படலாமல்லவா!கண் ஒன்றுதான். அது பலவற்றைக் காண்கின்றதே. உலகில் பிறந்த சாதாரண உயிர்கள் இவற்றையெல்லாம் செய்ய முடியுமென்றால் பேராற்றல் மிக்க இறைவன் தனது மனதில் எண்ணியவற்றையெல்லாம் செய்து கொண்டே போகலாமல்லவா?"

"குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்

குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்

குசவனைப் போல்எங்கள் கோள்நந்தி வேண்டில்

அசைவில் உலகம் அதுஇது வாமே". (திருமந்திரம் - 443)

உலகம் இயங்குவது திருவருளாலே. நாம் பெறும் அனுபவங்களெல்லாம் இறைவனின் திருவருளால்தான். இறைவனைப் பார்க்க வேண்டுமென்பதில்லை. அவனுடைய அருளைப் பற்றிய சிந்தனையே இறைவனை நமது அகக்கண்முன் வைக்கும். இதை உணர்ந்துகொள்வது கடினமல்ல. நமது மனதை நேரான பாதையில் செலுத்தினாலேயே இறைவன் அருளை எங்கும், எதிலும் காணலாம். கவிஞன் ஒருவன் இயற்கையின் எழிலைக் கண்டு ரசித்து கவிதை பாடுகின்றான். விஞ்ஞானி இயற்கையின் தன்மையை அறிந்து கொள்வதற்காக விஞ்ஞான ரீதியில் பல பரிசோதனைகளைச் செய்கின்றான். தன் அறிவிற்குப் புலப்பட்ட உண்மைகளை இயற்கையின் நியதிகளாகக் கருதுகின்றான். இறையுணர்வாளன் இயற்கையில் இறைவனின் அருளைக் காண்கின்றான். இறைவனையே காண்கின்றான். அவ்வாறே திருமூலர் பெருமானும் சுற்றிப்பார்க்கும் இடமெல்லாம் இறைவன் அருள்உருவாக நிற்பதைக் காண்கின்றார். உடலாய், உயிராய், உலகமதாய், கடலாய், கார்முகில் நீர்பொழிவானாய் நிற்கும் இறைவன் தனது அருளைப்பல நிலைகளில் வெளிக்காட்டி வருவதைக்கண்டு அந்தப் பேரானந்த அனுபவததில் மூழ்கி நிற்கின்றார். அவனுடைய அருளாலே எட்டுத்திசைகளிலும் காற்று வீசுகின்றது. ஐம்பூதங்கள் ஒன்று சேருகின்றன. உடல் உருவாகிறது. இந்த உடலுடன் உயிரைச் சேர்த்து வைப்பதும் அவனுடைய அருளேதான். பின்னர் அந்த அருளே உடலிடமிருந்து உயிரைத்தக்க நேரத்தில் பிரித்தும் வைக்கின்றது. இவற்றையெல்லாம் தனது அகக்கண்களால் கண்டு, அனுபவித்த திருமூலர் பெருமான் இறை அருளின் தன்மையை எண்ணி, எண்ணி வியப்படைகின்றார்.

"எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு

வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்

ஒட்டி உயிர்நிலை என்னும்இக் காயப்பை

கட்டி அவிழ்ப்பான் கண்ணுதல் காணுமே". (திருமந்திரம் - 441)

நாமும் திருமூலர் வழிச்செல்வோம். பிரபஞ்சத்தை நோக்கினால் எண்ணற்ற தாரகைகளும், கோள்களும் தங்கள் பாதை தவறாது நீதியுள் நின்று ஒரு பேரியக்கத்தில் ஈடுபட்டு வருவதைப் பார்க்கின்றோம். அவற்றைப் படைப்பதும் இறைவனுடைய திருவருளாகும். படைத்தவற்றைக் காப்பதும், காத்தவற்றைத் தகுந்த நேரத்தில் ஒடுக்குவதும், ஒடுக்கி அவற்றிற்கு ஓய்வு கொடுப்பதும், பின்னர் மீண்டும் அவை தலைப்படச் செய்வதும் இறைவனுடைய அருளேயாகும்.

"தானே படைத்திடுந் தானே அளித்திடுந்

தானே துடைத்திடுந் தானே மறைத்திடுந்

தானே யிவைசெய்து தான்முத்தி தந்திடுந்

தானே வியாபித் தலைவனு மாமே". (திருமந்திரம் - 1809)

"அருளே உலகெலாம் ஆள்விப்பது" என்கின்றார் காரைக்கால் அம்மையார். உயிரானது உடல், ஐம்பொறிகள், ஐம்புலன்கள், மனம், போன்றவைகளுடன் சேராமல் தனித்து நிற்பது கேவல நிலையாகும். இது இருள் நிலை எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் தன்னைப் பற்றியும், தனது தலைவனைப் பற்றியும், தன்னை மாய இருளில் மூடியுள்ள ஆணவத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள இயலவில்லை. இருந்தாலும், தன்னிலை விளக்கம் பெற்று, இறைநிலையை உணர்ந்து இறைவனின் திருவடிகளைச் சேர்வத உயிரினுடைய முடிவான நோக்கமாகும். இந்த முயற்சியில் உயிரை ஈடுபடுத்துவதற்காக அதற்கு உடலையும் கருவிகளையும் கொடுத்து, உயிரை வாழ்க்கைப் பாதையில் உயிரோடு உயிராக நின்று நடத்திச் செல்வதும் திருவருளாகும். இதனால் உயிர் பல சாதனைகைளப் புரிகின்றது. எனினும், தான் என்கிற உணர்வு ஒங்கியிருப்பதாலும், நிலையற்றவற்றை நிலையானதாக எண்ணி அடைய முற்படுவதாலும், உயிரினுடைய இந்த நிலை மருள் நிலை எனப்படும். பல பிறவிகளுக்குப் பிறகு உயிர் பக்குவம் அடைகிறது. சிறிது சிறிதாகத் தெளிவு பெறுகிறது. இவையெல்லாம் திருவருளின் காரியமே. உயிரைப் பாசத்தில் பொருத்தி அனுபவிக்கச் செய்வதும் அருளாகும். அந்தப் பாசத்திலிருந்து உயிரை வேறுபடுத்துவதும் அருளாகும். உலகத்தில் உயிர் வைத்துள்ள பற்றினைக் குறைத்துச் சிவத்துடன் பொருந்தும்படிச் செய்வதும் அருளாகும். இறைவனுடன் உயிரினைச் சேர்த்து, உள்ளத்திலே நிலைநாட்டி, ஒளிமயமான காட்சியினைக் காண்பிப்பதும் அருளாகும். அருளிள் விளைவாக உயிரானது ஒப்பற்ற ஆனந்தத்தைப் பெறுகின்றது.

"அருளிற் பிறந்திட் டருளில் வளர்ந்திட்

டருளில் அழிந்திளைப் பாறி மறைந்திட்

டருளான ஆனந்தத் தாரமு தூட்டி

அருளால் என்நந்தி யகம்புகுந் தானே". (திருமந்திரம் - 1800)

"பாசத்தி லிட்ட தருளந்தப் பாசத்தின்

நேசத்தை விட்ட தருளந்த நேசத்திற்

கூசற்ற முத்தி யருளந்தக் கூட்டத்தின்

நேசத்துத் தோன்றா நிலையரு ளாமே". (திருமந்திரம் - 1802)

இறைவன் சுந்தரமூர்த்தி நாயனாரைத் திருவெண்ணெய் நல்லூரில் ஆட்கெள்கின்றான். நாயனார் தனக்கு அடிமையென்று உலகுக்கு அறிவிக்கின்றான். உலகில் பிறந்த எல்லா உயிர்களும் அவனுக்கு அடிமைகள்தானே? உண்மையான சுதந்திரம் அந்த அடிமை உணர்வில் அல்லவா இருக்கின்றது!"என் தாயடு என்னப்பன் ஏழேழு பிறவியும் அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்" என்கிறார் திருமூலர். முதலிலே சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனுடன் சண்டை பிடிக்கின்றார். அதற்காக இறைவன் அவருக்கு வன்றொண்டன் என்னும் பெயர் வழங்குகின்றான். தெரியாமல் தான் செய்த பிழையையும் ஏற்று இறைவன் தன்னை ஆட்கொண்டதை எண்ணிப் பார்த்த சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனுடைய அருள்நிலையை நினைத்து வியக்கின்றார். "பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா!" என்று மனம் உருகப் பாடுகின்றார். இறைவனுடைய திருவருளால் சுந்தரருக்குச் சிவஞானம் தோன்றுகின்றது. "எல்லாம் உனது அருள், c நினைக்கின்றாய், c முடிக்கின்றாய், எனது மனதில் உன்னை வைத்தாய்" என்கின்ற வகையில் பாடுகின்றார்.

"பித்தா!பிறை சூடி!பெரு மானே!அரு ளாளா!

எத்தால்மற வாதேநினைக் கின்றேன் மனத்துஉன்னை

வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்

நல்லூர்அருட் டுறையுள் அத்தா!உனக்கு ஆளாய்இனி அல்லேன் எனல்ஆமே?"

உயிரைப் பந்திப்பது பாசமாகும். அந்தப் பாசத்திலிருந்து தன்னை விலக்கிக் கொள்வது உயிரின் குறிக்கோளாகும். அந்த உணர்வு உள்ளத்தில் ஏற்படுவதே திருவருளின் செய்கையாகும். பேரருளாளனாகிய இறைவன் இவ்வுலகில் பிறவாமை என்கின்ற குறிக்கோளை நம்முள் வைத்து, அதற்கான நெறியையும் தந்தருளுகின்றான். கற்பகம் போன்ற, என்றும் குறையாத கருணைக்கடலாகிய இறைவன் உலக இன்பத்திலே ஈடுபட்டு, அருளை மறந்து, வினைக் கடலிலேயே என்றும் மூழ்கி இருக்கா வண்ணம் தக்க நேரத்தில் உயிரினைத் தனதாக்கிக் கொள்கின்றான். ஆட்கொள்கின்றான். திருமூலர் பெருமான் சொல்லுவதைக் கேளுங்கள்.

"பிறவா நெறிதந்த பேரரு ளாளன்

மறவா அருள்தந்த மாதவன் நந்தி

அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன்

உறவாகி வந்தென் உளம்புகுந் தானே". (திருமந்திரம் - 1803)

காரைக்கால் அம்மையார் தன்னை இறைவனுக்கு அர்ப்பணித்த நேரத்திலேயே பேயுருவம் பெறுகிறார். இறைவன் ஐம்பொறிகளை அடக்கியவன். அதற்கு எடுத்துக்காட்டாக யானைத் தோலைப் போர்த்தியிருக்கின்றான். நெற்றியிலே கண்ணை உடையவன். கண்ணுதலான். நெற்றிக்கண் ஞானக்கண் ஆகும். ஞானம் பெற்றவர்கள் அருளாளர் ஆவார்கள். இறைவன் எல்லாவற்றையும் துறந்தவன். அழிவற்றவன். இந்த இரண்டையும திருநீறு காட்டுகின்றது. இறைவன் திருநீற்றைப் பூசியுள்ளான். அத்தகைய அம்மானுக்கு ஆளாயினேன் என்கிறார் காரைக்கால் அம்மையார்.

"யானேஅக் கைம்மா உரிபோர்த்த கண்ணுதலான்,

வெண்ணீற்ற அம்மானுக் (கு) ஆளாயினேன்." (அற்புதத் திருவந்தாதி)

இறைவனின் அருளின் தன்மையைக் காரைக்கால் அம்மையார் மேலும் விளக்குகின்றார். "இறைவனுக்கு நான் அடிமையாகி விட்டேன். அதனால் எனக்குப் பிறவித் துன்பம் ஒழிந்து விட்டது. நான் இறைவனுக்கு அடிமையாவது பெரிதல்ல. அதனால் மீண்டும் பிறவாத தன்மையைப் பெற்று விட்டேனே. அதல்லவா இறைவனுடைய அருள்!" என்று கூறுகின்றார்.

"ஆயினேன் ஆள்அவனுக் (கு) , அன்றே பெறற்கரியன்

ஆயினேன், அஃதன்றே ஆமாறு" (அற்புதத் திருவந்தாதி)

எல்லாம் அருளே என்கின்ற உணர்வினைப் பெற்றவர் காரைக்கால் அம்மையார். உலகத்தில் எல்லா இயக்கங்களும் திரு அருளாலேயே நடைபெறுகின்றன. திருவருளே பிறவித் துன்பத்திற்குக் காரணமாகிய வினைக்கடலைத் தாண்டிச் செல்ல உதவும் தோணியாகவும அமைகின்றது. இன்பத்திலும் துன்பத்திலும் இறைவனின் அருளைக் காணுபவர் காரைக்கால் அம்மையார். அம்மையார் ஒருபடி மேல் செல்கின்றார். இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணமாக அருள் இருப்பது என்பது ஒரு பக்கம். ஆனால் உலக அனுபவங்களில் ஈடுபட்டு, இன்பத் துன்ப நிலைகளில் மூழ்கி நிற்கும் வேளையிலும், இறைவனுடைய திருவருளைப் பற்றிச் சிந்திப்பது, ஆக மகிழ்வது போன்றவை பக்குவமடைந்த ஆன்மாக்களுக்கு இயல்பாகவே நிகழும். எனக்கு எக்காலுத்தும், எல்லாப் பொருளும் ஆவது அந்த அருளே என்கின்ற தெளிவு அம்மையாரைப் போன்ற அருளாளர்களுக்குத் தான் கிட்டும்.

"அருளே உலகெலாம் ஆள்விப்ப (து) , ஈசன்

அருளே பிறப்பறுப்பது, ஆனால் - அருளாலே

மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன், எஞ்ஞான்றும்

எப்பொருளும் ஆவ (து) எனக்கு" (அற்புதத் திருவந்தாதி)

திருவருள் எங்கும், எல்லாவற்றிலும் கலந்து நிற்கிறது. குறிப்பாக சீவராசிகளிடையே இறைவனுடைய அருள்மழை பொழிந்து கொண்டே இருக்கின்றது. ஆனால், அதை மக்கள் உணருவாரில்லை. ஏனென்றால் அவர்கள் அந்த கண்களுடன் பார்ப்பதில்லை. அருட்செல்வத்தை உணர்ந்து கொள்ளத் தனி முயற்சி தேவை. பொருட்செல்வத்தை உயிரும், உடலும் சதா நாடிக்கொண்டே செல்கின்றன. பொருளிலுள்ள ஈடுபாட்டின் காரணமாக அருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. மேலும், நாம் நினைப்பதும், பேசுவதும் அவனருளாலேயே என்று உணர்த்துவதற்கும் ஒருவருமில்லை. ஆகவே, நமக்குக் கண்ணிருந்தாலும் கண்ணற்றவர்கள் போல வாழ்க்கையை நடத்திச் செல்லுகின்றோம். அப்பொழுதும் இறைவன் தன்னுடைய பணியைச் செய்யத் தவறுவதில்லை. சரியான நேரத்தில் நமது உள்ளத்தில் வந்து புகுந்து கொள்கின்றான். குளிர்ச்சி பொருந்திய தனது திருவடியை நமக்குப் பாதுகாவலாக முன் வைக்கின்றான். உள்ளே இருந்த கொண்டு ஊனுடம்பினை உருகச் செய்கின்றான். ஒப்பற்ற ஆனந்தத்தை நமது உடலிலும், உயிரிலும் பாய்ச்சுகின்றான். அதுமட்டுமன்று, நம்முடைய மலங்களை நீக்கி அருளுகின்றான். அதை எப்படிச் செய்கின்றான் தெரியுமா? நம்முள்ளேயே மூடிக்கிடக்கின்ற அருட்கண்ணை விழிப்பித்து நம்முடைய குற்றம், குறைகளைப் போக்குகின்றான். இறைவனுடைய அருள்பட்ட மாத்திரத்திலேயே நமது அகக்கண் திறந்து விடுகின்றது. இறைவனுடைய தூய ஒளி உயிரில் பதிந்து கொள்கின்றது. உலக நாட்டம் உள்ள வரையில் அருட்கண் விழிப்பதில்லை. அருட்கண் திறக்கும்போது புலன்களின் இயக்கம் மாறி விடுகின்றது. ஐம்புலனறிவின் தன்மை மாறுகிறது. புலன்கள் தம் வழியே செல்வதில்லை. அருட்கண்ணின் நோக்கிலேயே செல்லும் பளிங்கு இருக்கின்றது. எப்போதும் பளிங்கில் அருகில் உள்ள பொருட்களின் நிறத்தைப் பாய்ச்சுகின்றோமோ அதனை அது பிரதிபலிக்கும். இறைவன் தனது ஒப்பற்ற அருளாகிய பவளத்தை உயிராகிய பளிங்கில் பதிக்கும்போது சீவகரணங்கள், சிவகரணங்களாக மாறிவிடும்.

"விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு

தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து

உண்ணின் றுருக்கிய ரொப்பிலா ஆனந்தக்

கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே". (திருமந்திரம் - 113)

"களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி

களிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக்

களிம்பணு காத கதிரொளி காட்டிப்

பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே". (திருமந்திரம் - 114)

இவையெல்லாம் இறைவனுடைய அருளாலேயே நடக்கின்றன. சுந்தரமூர்த்தி நாயனார் எண்ணி எண்ணிப் பார்த்து வியக்கின்றார். உயிர்களுக்கு இறைவன் இன்பத், துன்பங்களைத் தருகின்றான். அவற்றை அனுபவித்து மக்கள் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டுமென்பதே திருவருள் இயக்கத்தின் நோக்கமாகும். மாசு மறைந்து தூய்மை வர வேண்டும். அதற்காக இறைவன் உயிர்களை ஒறுக்குகின்றான். பொறுத்துக் கொள்கின்றான். எத்தனை பிழைகள் செய்தாலும் அவற்றைச் சட்டை செய்வதில்லை. நாம் செய்கின்ற தீங்குகளை மறந்து நம்மைத் திருத்திக் கொள்வதற்காக வாய்ப்புகளைக் கொடுத்துக் கொண்டே வருகின்றான். நாய் போன்ற நம்மையும் பொறுத்து ஆளாக்கி அவனுடைய அருளுக்கு உரிய பொருளாக நினைத்து அவ்வப்போது நமக்குத் தண்டனையும் கொடுத்து, நமது உயிரினைத் தீயிலிட்ட தங்கமாக்குகின்றான். என்னே அவனுடைய கருணை

"ஒறுத்தாய் நின் அருளில்; அடியேன் பிழைத்தனகள்

பொறுத்தாய் எத்தனையும்;நாயேனைப் பொருட்படுத்திச்

செறுத்தாய்;வேலைவிடம் அறியாமல் உண்டுகண்டம்

கறுத்தாய்;தண்கழனிக் கழிப்பாலை மேயானே!"

இந்த உணர்வினை வேறொரு விதத்தில் திருமூலர் விளக்குகின்றார். குற்றம் உடையவர்களை இருட்கண்ணினோர் என்று அழைக்கின்றார். அவர்கள் மீது இறைவன் அருள்படவில்லை. எனவே, அவர்களுக்கு அந்த அருளின் தன்மை தெரியாது. கண்ணற்றவர்கள் சூரிய ஒளியைப் பார்க்க முடியாது. கண்ணுடையவர்கள் சூரிய ஒளியைப் பார்க்கின்றார்கள். அதேபோல, அருட்கண் இல்லாதவர்களுக்கு மெய்யுண்மை தோன்றாது. அதன் காரணமாகப் பிறவிப் பெருங்கடலை நீந்த மாட்டாமல் பல பிறவிகள் பெற்று இன்னலடைவார்கள். ஆனால், தனக்குள்ளேயே இருக்கும் அருட்கண் திறந்த மாத்திரத்தில் இறைவனே அவர்கள் முன் தோன்றி அருள்புரியும் நிலையை அவர்கள் உணருவார்கள். திருவருள் காரணமாக உள்ளத்திலேயே ஒரு ஒப்பற்ற ஒளி தோன்றிடும்.

"அருட்கண்ணி லாதார்க் கரும்பொருள் தோன்றா

அருட்கண்ணு ளோர்க்கெதிர் தோன்றும் அரனே

இருட்கண்ணி னோர்க்கங் கிரவியுந் தோன்றாத்

தெருட்கண்ணி வோர்க்கெங்குஞ் சீரொளி யாமே". (திருமந்திரம் - 1808)

அறுபத்து முன்று நாயன்மார்களும் இறைவனின் அருள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பவர்கள். இறைவன் தங்களை ஆட்கொண்டதைப் பற்றி வியந்து தங்களுடைய உடலையும், உயிரையும், இறைவனுக்கே அர்ப்பணித்தவர்கள். அவனுடைய அருளை நெஞ்சையள்ளும் பாடல்கள் மூலமாகப் போற்றி அவர்கள் பெற்ற இன்ப அனுபவத்தை நாமும் பெறலாம் என்று உலகுக்குப் பறை சாற்றுகின்றார்கள். அவர்கள் அருளனுபவம் பெற்றுப்பேரின்பம் பெற்றதன் காரணமாக மேலும் மேலும் திருவருளைப் பெற வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் வாழ்க்கை நெறியை வகுத்துக் கொண்டார்கள். இறைவனுடைய குணங்களையெல்லாம் தெரிந்தும் தன்னகத்தில் இறைவன் இன்னும் காலடி வைக்கவில்லையே என்று ஏங்குவார்கள். திருவருள் அமுதத்தை முழுமையாகப் பருகி அதிலே தன்னை மறந்து கொள்ள வேண்டுமென்பதே அவர்களுடைய விருப்பமாக அமைகின்றது. இத்தகைய வேட்கையைக் காரைக்கால் அம்மையார் பின்வரும் பாடலில் பாடுகின்றார்.

"தனக்கே அடியனாய்த் தன்அடைந்து வாழும்

எனக்கே அருளாவாறு என்கொல்? - மனக்குஇனிய

சீரளான், கங்கை மணவாளர், செம்மேனிப்

பேராளன், வானோர் பிரான்". (அற்புதத் திருவந்தாதி)

இறைவனுடைய அருளை நன்கு தெரிந்து கொண்டவர் ஆளுடைய பிள்ளையார். திருஞானசம்பந்தர் பெருமான். எத்தகைய இடர்ப்பாடு வந்தாலும், எத்தகைய இன்னல் நேர்ந்தாலும், இறைவனுடைய திருவடியே தனக்கு இன்பம் தருவது என்கின்ற உறுதிப்பாடு கொண்டவர். ஒருநாள் அவருடைய தந்தையார் வேள்வி செய்வதற்காகப் பொருள் வேண்டுமென்று ஞானசம்பந்தர் பெருமானிடம் கேட்ட போது, சம்பந்தர் பெருமான் தன்னிடம் பொருள் ஒன்றும் இல்லாத நிலையைக் கண்டு இறைவனிடம் பொருள் கேட்கின்றார். அருட்செல்வர் தனது தந்தைக்காக இறைவனிடம் பொருட்செல்வத்தைக் கேட்கின்றார். எப்படிக் கேட்கின்றார்? "எனக்குத் தேவையானவற்றை எல்லாம் c கேட்காமலேயே கொடுத்து வருபவன். இப்போது என் தந்தையாருக்குப் பொருள் வேண்டும். என்னிடம் பொருள் இல்லை. பொருள் இல்லாமல் நான் வாடுவது உனது அருளுக்கு அழகில்லையே. என்னைப் போன்றவர்களுக்கு வேண்டாமலேயே குறிப்பறிந்து கொடுப்பதற்கான அருள் செய்ய வேண்டாமா" என்று வருந்துகிறார். அந்தக் குறிப்புடன் பதிகம் பாடுகின்றார். அவர் வேண்டியவாறே இறைவனும் ஆயிரம் பொற்கிழியை அவருக்கு அளித்தருளுகின்றான்.

"இடரினும் தளரினும் எனதுறுநோய்

தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்;

கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை

மிடறினி லடக்கிய வேதியனே!

இதுவோஎமை ஆளுமாறு? ஈவதொன்று எமக்கு இல்லையேல்

அதுவோஉனது இன்னருள்? ஆவடு துறைஅரனே!"

பிரான் அருள் உண்டெனில் உண்டு நற்செல்வம். பிரான் அருள் உண்டெனில் உண்டு நல்ஞானம் என்கிறார் திருமூலர். உலகத்திற்கு வேண்டியது பொருட்செல்வம். கிடைக்கும் பொருட்செல்வத்தை நல்ல முறையில் பயன்படுத்திப்பெற வேண்டியது அருட்செல்வம். அருட்செல்வத்தால் கிடைப்பது ஞானம். உயிர் தன்னுள் இறைவனிடமிருந்து கிடைக்கப்பெறும் அருளினால் அந்தப் பேரறிவின் இயக்கத்தை உணர்ந்து கொள்ளும் தன்மையைப் பெறும்போது பெரும் தெய்வமும் ஆகிறது என்பதும் திருமூலருடைய வாக்காகும். இவ்வுலகத்தில் கேட்பவர்கள், கொடுப்பவர்கள் என்று இரண்டு பெரிய கூட்டங்கள் உண்டு. நாமெல்லாரும் கேட்பவர்கள். நம்மில் பலர் பொருட் செல்வத்திற்காகப் பாடுபடுகின்றோம். சிலர் அருட்செல்வத்தின் பெருமை உணர்ந்தவர்கள். கொடுப்பதற்கு மனம் வர வேண்டும். ஒரு சிலரே பிறருக்குக் கொடுக்கும் தன்மையைப் பெற்றிருக்கின்றார்கள். அவர்களுக்கு அந்த எண்ணம் தோன்றுவதே இறைவனுடைய அருளால்தான். "ஈபவர்க்கு அருளும் வைத்தார்" என்கிறார் திருநாவுக்கரசர். அதேசமயத்தில் ஈவதற்குச் செல்வம் இருந்தும் அதைப் பிறருக்குக் கொடுக்காமல், அது தங்களுக்கு இறைவனால் கிடைத்தது என்கிற உணர்வும் பெறாமல் வாழ்பவர்களுக்கு இறைவன் இம்மையிலும், மறுமையிலும் துன்பங்களை வைப்பான். மிக்க அருளுடன் கங்கையாளை இறைவன் தனது தலையில் வைத்துக் கொண்டான். கைலை மலையில் இராவணன் அகப்பட்டுத் தவிக்கும்போது சாம வேதத்தைப் பாடி இரந்தான். உடனே இறைவனும் அதற்கு இரங்கிப் பேரருளுடன் இராவணனுக்கு உடைவாளும், முக்கோடி வாழ்நாளும் வழங்கினான். என்னே

இறைவனுடைய அருள் என்று திருநாவுக்கரசர் திருவையாற்றில் பாடுகின்றார்.

"இரப்பவர்க்கு ஈய வைத்தார் ¢

ஈபவர்க்கு அருளும் வைத்தார்;

கரப்பவர் தங்கட் கெல்லாம்

கடுநர கங்கள் வைத்தார்;

பரப்புநீர்க் கங்கை தன்னைப்;

படர்சடைப் பாகம் வைத்தார்;

அரக்கனுக்கு அருளும் வைத்தார்;

ஐயன்ஐ யாற னாரே".

இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல், தொழில்களை மட்டும் செய்யவில்லை. இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக இருந்து கொண்டு அருள் வடிவாக அகத்திலும், புறத்திலும் காட்சி அளிக்கின்றான். தேவர்களுக்கு அமுதம் தேவைப்பட்டபோது பெருங்கடலைக் கடையச் செய்வித்து அவர்களுக்கு அமுதத்தைக் கொடுத்தருளினான். அதே நேரத்தில் விஷமும் வந்தது. தேவர்களைக் காக்கும்பொருட்டு அந்த விஷத்தைத்தானே உண்டான். அவர்கள் கேட்காமலேயே தனது திருவடிகளை அவர்களுக்குப் பாதுகாவலாக வைத்தான். உள்ளத்தில் அருள் புகும்போதே ஆர்வம் ஏற்படுகின்றது. ஆனந்தம் ஏற்படுகின்றது. தாயூட்டும் உணவைவிடப் பதினமடங்கு ருசியுடன் உள்ளது இந்த அருளமுது.

"அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி

அருளால் அடிபுனைந் தார்வமுந் தந்திட்

டருளான ஆனந்தத் தாரமு தூட்டி

அருளால் என்நந்தி யகம்புகுந் தானே". (திருமந்திரம் - 1801)