"அடியார் உள்ளம்"
சுந்தரமூர்த்தி நாயனாருக்குத் திருமணம் செய்ய வேண்டிய நேரம் வந்தது. எல்லா ஏற்பாடுகளும் விமரிசையாக நடந்தன. நம்பி ஆரூரர் தனது திருமணத்திற்காக ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு கிழவர் எதிர்ப்பட்டார். ஊர் மக்களுக்கு ஒரு ஓலையைக் காட்டி நம்பி ஆரூரராகிய சுந்தரமூர்த்தி தனது அடிமை என்று வாதிட்டார். பல தலைமுறைகளாகச் சுந்தரமூர்த்தியைத் தனக்கு அடிமையாக்கி அவருடைய பாட்டனார் எழுதி வைத்துவிட்டதாகச் சொன்னார். நாயனாருக்குப் பெரும் கோபம் வந்தது. கிழவர் கையிலிருந்த ஓலையைப் பிடுங்கி அதைக் கிழித்து விட்டார். ஆனால், அந்த கிழவர் விடுவதாக இல்லை. மூல ஆவணம் தன்னிடம் இருப்பதாக ஊராருக்குத் தெரிவித்தார். ஊர்த்தலைவர்கள் அந்த ஓலையைக் கிழவரிடமிருந்து பெற்றுப் படித்தார்கள். சுந்தரருடைய பாட்டனார் திருவெண்ணெய் நல்லூர்ப்பித்தனுக்குத் தானும் தன்னுடைய பரம்பரையில் வரும் அனைத்துப் பேரும் அடிமை என்று அதில் எழுதியிருந்ததை ஊர் மக்கள் படித்தனர். அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று ஏற்றுக் கொண்டனர். இதுவரை அந்த ஊரில் கிழவரை எவரும் சந்தித்ததில்லை. திகைப்பு மேலிட்டு அந்தக் கிழவரைப் பார்த்து அவருடைய இருப்பிடத்தைப் பற்றிக் கேட்டனர். "என்ன, இதுகூடத் தெரியாதா?" என்று கூறிக்கொண்டு அந்தக் கிழவனார் வெண்ணெய்நல்லூர் திருக்கோவிலுக்குள் சென்று அங்கே மறைந்தார். பின்னர் இறைவனாகக் காட்சியளித்தார். சுந்தரரைத் தடுத்தாட்கொண்டதாக அறிவித்தார். சுந்தரருக்கு வன்தொண்டன் என்றும் பெயர் வழங்கினர். தனக்கு மிகவும் விருப்பமான தீந்தமிழ்ப் பாடலால் தன்னை மகிழ்விக்க வேண்டுமென்று இறைவன் சுந்தரரைக் கேட்டுக் கொண்டார்.
அப்போது சுந்தரருடைய உள்ளம் எப்படி இருந்தது? குழந்தை தாயை மறக்குமா? அல்லது தாய் குழந்தையை மறப்பாளா? பல பிறவிகளாகச் சுந்தரருடைய உள்ளத்திலே தோய்ந்து நிற்கின்ற இறை உணர்வு ஒரு பிறவியில் மட்டும் அகன்றுவிடுமா? அகலாதே! கருவி கரணங்களுடன் பொருந்தியிருக்கும் இவ்வுடலிலே சில காலம் தங்குவதற்காக மட்டும் வந்துள்ள அந்த உயிருக்கு இறைவனுடைய நினைப்புச் சற்று நீங்கியிருக்கலாம். ஆனால், இறைவனுக்கு உயிரைப் பற்றிய நினைப்பு நீங்கவே நீங்காது. ஏனென்றால் இறைவன் உள்ளத்து ஒருவன். உள்ளுறு சோதி. உள்ளத்தைவிட்டு ஒரடி நீங்காதவன். உள்ளமும் தானும் சேர்ந்தே நிற்கும் தன்மை உடையவன். ஆகவே, சுந்தரருடைய உள்ளத்திலே அன்பு ஆற்றுப் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு விநாடியில் இறைவனை விட்டு அகன்று தனிக்கோலம் பூண்டு நாடகத்திலே நடித்து, அதுவே உண்மை என்று எண்ணிக் கொண்டிருப்பது எவ்வளவு மடத்தனம் என்கின்ற மெய்யுணர்வு ஏற்பட்டது. "பித்தா, அருளாளா" என்றெல்லாம் இறைவனை அழைக்கத் தோன்றியது. உண்மை நிலையைத் தன்னிடமிருந்து மறைத்து வைத்ததும், மீண்டும் நினைவுப்படுத்தியதும் இறைவனுடைய அருளே என்கின்ற உணர்வு சுந்தரருடைய உள்ளத்தில் தலைதூக்கி நின்றது. "இறைவா! உனக்கும் எனக்கும் உள்ள தொடர்பு அநாதிகாலமாக வந்து கொண்டிருக்கின்றது. நான் மறந்தாலும் c மறவாமல் உன்னை எனது மனதிலே வைத்தாய். எல்லையற்ற பரம்பொருளாகிய உனக்கு நான் காலமெல்லாம் அடிமையாயிற்றே. இப்பொழுது நான் உனது அடிமையில்லை என்று சொல்லலாகுமா?" என்று பாடுகின்றார்.
"பித்தா!பிறை சூடீ!பெரு மானே!அரு!ளாளா
எத்தால்மற வாதேநினைக் கின்றேன் மனத்துஉன்னை
வைத்தாய்;பெண்ணைத தென்பால் வெண்ணெய் நல்லூர்அருட் டுறையுள்
அத்தா!உனக்கு ஆளாய்இனி அல்லேன் எனல் ஆமே?"
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையவர்கள் உள்ளத்தில் தோன்றும் முதல் உணர்வு இதுதான். உடைமை, உடல், உள்ளம் எல்லாம் இறைவனுக்கு ஆட்பட்ட உணர்வு முன்நிற்கின்றது. "அன்றே உனக்கு ஆளானேன்" என்றார் காரைக்கால் அம்மையார். "ஒன்றே நினைந்திருந்தேன்;ஒன்றே துணிந்தொழிந்தேன்;ஒன்றே என் உள்ளத்தின் உள்அடைத்தேன்" என்றார். அந்த ஒன்று யாராக இருக்க முடியும்? அது "கங்கையான், திங்கட்கதிர்முடியான், பொங்குஒளிசேர் அங்கையானா"கத்தான் இருக்க முடியும் அல்லவா?
இதே கருத்துடன் திருமூலர் கூறுகின்றார் - "என்னுடைய தாயும், என்னுடைய அப்பனும் நான் பிறந்த உடனேயே என்னை ஒருவனுக்கு அடிமையாக ஒலை எழுதிக் கொடுத்தார்கள். இந்த அடிமைப் பதவி ஒரு நாளைக்கன்று, பல நாளைக்கன்று. இந்தஅ டிமைப்பதவி பல பிறப்பு களிலும் தொடரும். என்னுடைய பெற்றோர்கள் இந்த ஆவணத்தை எழுதும்பொழுது நன்றாக யோசித்துத்தான் செய்தார்கள். இதை மற்றவர்கள் மாற்றமுடியாத அளவுக்குச் செய்தார்கள். எப்படித் தெரியுமா? வேறொருவரை வைத்து எழுத வைத்தார்கள். அவன் யார்? இந்த உலகம் அனைத்தையும் படித்த பிரம்மன் அல்லவா இதை எனது பெற்றோர்களுக்காக எழுதினான். அதுமட்டுமன்று, என் பெற்றோர்கள் வேறு சாட்சியையும் வைத்தார்கள்.
அந்த சாட்சி யார் என்று நினைக்கிறீர்கள்? இந்தப்பிரபஞ்சத்தைக் காத்து அருளுகின்ற முகில்வண்ணனாகிய திருமால் அல்லவா சாட்சியாக நின்றான்!யாருக்கு அடிமை என்று எழுதினார்கள்? அந்தச் சிவமாகிய பரம்பொருளுக்கு அல்லவா நான் அடிமை என்று எழுதி வைத்தார்கள்." இத்ந அடிமை உணர்வில் அல்லவா சுதந்திரம் இருக்கின்றது. இந்த அடிமை உணர்வு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
"என்தாயோடு என்னப்பன் ஏழேழ் பிறவியும்
அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்
ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில்வண்ணன் நேரெழுத்தாயே" (திருமந்திரம் - 1876)
இறைவனுக்குத் தான் அடிமை என்கிற உணர்வு வந்த பின்பு உள்ளத்தில் ஒப்பற்ற அன்பு தோன்றுகின்றது. இது சாதாரணக் காதல் அன்று. இது ஒரு தெய்வீகக் காதலாகும். உள்ளும் புறமும் தன்னைப் பற்றிய நினைப்பு ஒழிந்து விடுகின்றது. இது சீவபோதம் குறைந்து சிவபோதம் மிகுந்த நிலையாகும். இறைவன் மீது ஏற்பட்ட அன்பால் உடலைப் பற்றிய அறிவு மறைந்தொழிகிறது. இறைவனுடைய திருவடியைப் போற்றும் அன்பே அன்பாகும் என்கிற எண்ணம் ஏற்படுகிறது. இந்த அன்பிலே பேச்சுக்கு இடமில்லை. செயலுக்குத்தான் இடமுண்டு. அந்தச் செயலும் இறைவனைப் பற்றியதாகவே இருக்கும். "நினைத்தொறும், காண்தொறும், பேசுந்தொறும், எப்போதும் அனைத்தெலும்பு உள்நெக ஆனந்தத்தேன் சொரியும்" என்கிற திருவாசகப் பாடல் இந்த அன்பினை உணர்த்தும். அத்தகைய அன்புடைய பக்தன், அன்பில் உருகி அழுவன், அரற்றிக் கொண்டே இருப்பான். இறைவனைத் தனதாக்கிக் கொள்கின்ற நினைப்பிலேயே தன்னுடைய உடலையும், உள்ளத்தையும் வருத்திக் கொண்டிருப்பான். அழுதலும், அரற்றலும், அதனால் அறிவு கெடுதலும், அதன் விளைவாக முக்திப்பேறு கிடைத்தலும், இத்தகைய அன்பின் தன்மைகளாகும். இந்த அன்பும் தியாகமும் ஒன்றே. இறைவனுடைய பெருமையை உணர்ந்து, அதைக் கண்டு வியந்து, மெய்சோர்ந்து, உடல் தளர்ச்சி பெற்றுத் தங்களடைய இந்திரிய அறிவு அறவே போய், நினைவு கெட்டு, இறைவனைத் தவிர வேறொன்றும் இல்லை என்கின்ற பேரானந்த நிலைமையை அடியார்கள் பெறுகின்றனர். இந்த இன்ப அன்பு அனுபவத்தைத் திருமூலர் பின்வரும் திருமந்திரப் பாடல்களில் சிறப்பாக விளக்கிக் காட்டுகின்றார்.
"விம்மும் வெருவும் விழும்எழும் மெய்சோருந்
தம்மையுந் தாமறி யார்கள் சதுர்கெடுஞ்
செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்
அம்மலர்ப் பொற்பாதத் தன்புவைப் பார்கட்கே" (திருமந்திரம் - 2744)
"அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே" (திருமந்திரம் - 2980)
இத்தகைய அன்பு அயரா அன்பு எனப்படும். இந்த அன்பு மெய்யுணர்வு பெற்று உயிர் அடைந்த முதிர்ந்த நிலையைச் சுட்டிக்காட்டும். இந்த அன்பின் முதிர்ச்சி பிஞ்சு முதிர்ந்து, பழமாகி இனிப்பது போலாகும். "ஆன்போடுருகி அகங்குழைவார்க்கன்றி என் பொன்மணியை எய்தவொண்ணாதே" என்று திருமந்திரம் கூறுகின்றது. இந்த அன்பின் நிலையைச் "சாற்றும்பழம்" என்று திருக்களிற்றுப்படியார் கூறுகிறது. அத்தகைய அன்பின்றிச் செய்யும் சரியை, கிரியை போன்றவை பயனற்றது என்றும் திருக்களிற்றுப்படியார் கூறுகின்றது.
"அன்பேஎன் அன்பேஎன் றன்பா லழுதரற்றி
அன்பேயன் பாக,அறிவு அழியும் - அன்பன்றித்
தீர்த்தம்தி யானம் சிவார்ச்சனைகள் செய்யுமவை
சாற்றும் பழமன்றே தான்" (திருக்களிற்றுப்படியார் - 55)
அன்பின் சிகரம் கண்ணப்ப நாயனார், ஒருநாள் கானகத்தில் வேட்டையாடச் செல்லும்போது உடல் இளைப்பாற வேண்டி ஒரு குன்றின் பக்க்திலுள்ள நீரோடைக்குச் செல்லும்போது அருகிலுள்ள திருக்காளத்தி மலையில் ஒரு இறைவனுடைய கோவிலுக்குச் செல்லலாம் என்று கண்ணப்பநாயனாருடைய தோழன் கூறினான். அதை நினைத்த மாத்திரத்திலேயே கண்ணப்பர் உள்ளத்தில் முந்தைய தவத்தின் பயனாக வெளிவர துடித்துக் கொண்டிருக்கும் இறை அன்பு பொங்கிப் பெருக ஆரம்பித்தது. அவர் உள்ளத்தில் இருந்த பாரம் குறைவது போன்ற அனுபவம் ஏற்பட்டது. நெஞ்சம் தன்னை இறைவனுடைன் மேலும் மேலும் பொருத்திக் கொண்டது. முன்செய்த தவத்தின் விளைவால் முடிவிலா இன்ப அன்பினைப் பெற்று, ஆர்வம் பொங்கி, கண்ணப்பனார் கோவிலைச் சென்றடைய, இறைவனுடைய அருள்நிரம்பிய திருவிழிகள் கண்ணப்பனார் மீது பட்டபொழுது கண்ணப்பரின் முன்னைய வினைகள் இவரை விட்டு அகல, ஒப்பற்ற அன்பே தமது உருவமாக ஆயினார் என்று சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர்புராணத்தில் கூறுகின்றார்.
"திங்கள்சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னே
அங்கணர் கருணை கூர்ந்து அருள்திரு நோக்க மெய்தத்
தங்கிய பவத்தின் முன்னைச் சார்புவிட் டகல நீங்கிப்
பொங்கிய வொளியின் நீழற் பொருவில்அன்புருவ மானார்" (பெரியபுராணம் - 753)
மணிவாசகப் பெருமான் இறைவன் மீது கொண்ட அன்பின் தன்மை யாவருக்கும் தெரிந்த ஒன்றே. பக்தி வெள்ளத்தில் படிந்த அந்த பெரியாரே கண்ணப்பரைப் பற்றி நினைக்கும்பொழுது அவருடைய அன்பின் அளவு தனக்கில்லையே என்று கூறிக் கொள்கின்றார். "கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்" என்பது அந்த வாசகம். அத்தகைய அன்பினை யார் அறிவர்? மணிவாசகப் பெருமான் போன்ற மெய்யுணர்வு பெற்ற பெரியார்களுக்கே அன்பின் நிலைமை புலப்படும். திருக்களிற்றுப்படியார் இதனைக் "கண்ணப்பர் தாமறிதல்" என்பர். வேறு யாருக்கு இது தெரியும்? கண்ணப்பருக்கு ஞானக்கண் அளித்த காளத்தி மலை இறைவனுக்கு அல்லவா அது தெரியும். அவ்வாறு அறிதலின்றி மற்றவர் மட்டும் அறியும் அன்பு அன்பன்று என்று திருக்களிற்றுப்படியார் கூறுகின்றது.
அன்பு மிகும்பொழுது ஐம்புலன்கள், நான்கு கரணங்கள் ஆகியவை தான் என்ற ஆணவ மலைப்பை விட்டுவிடுகின்றன. எல்லாமே பரம், எல்லாம் சிவம் என்ற உணர்வு தோன்றுகின்றது. சிவ ஒளியில் சீவ ஒளி அடங்குகின்றது. சீவன் என்ன, சிவன் என்ன வேறில்லை என்ற நிலைமை தெளிவாகிறது. எல்லாம் அவனது அரங்கம், எல்லாம் அவனது செயல் என்று தெள்ளத் தெரிந்தவர்களுக்கு நான் என்கிற நினைப்பு ஒழிந்துவிடுவதில் வியப்பு ஏதேனும் உண்டா? இல்லையே!
"நானென்றுந் தானென்றும் நாடினேன் நாடலும்
நானென்றுந் தானென் றிரண்டில்லை யென்பது
நானென்ற ஞான முதல்வனே நல்கினான்
நானென்று நானும் நினைப்பொழிந் தேனே" (திருமந்திரம் - 2320)
இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நம்மைப் போலவே திருமூலரும் முதலில் ஆன்மீக அனுபவத்திற்கு எல்லா முயற்சிகளும் எடுத்துக் கொண்டதாகத் தெரிவிப்பது போல இந்த மந்திரம் அமைந்துள்ளது. முதலில் மற்றவர்களைப் போல நான் என்றும், தான் என்றும் நினைத்து வேறுபாடு உள்ள நிலையில் இருந்ததைப்போலக் கூறுகின்றார். பின்னர், சரியை, கிரியை, யோகம், தவம் போனற் மார்க்கங்களால் அவருடைய உள்ளத்தில் ஞான ஒளி எழும்யிது. அவர் மெய்யுணர்வு பெற்றார். இறைவனுடைய அருளால் வேறுபாடு உள்ள நிலைமை அவரைவிட்டு அகன்றது. இதைப் பார்க்கும்போது அவரைப்போலவே நாமெல்லோரும் படிப்படியாக உயர்ந்து சிறந்த ஆன்மிக நிலைமைய அடைய முடியும் என்பது விளங்குகிறதல்லவா. மேலும், ஆன்மீக பாதையில் நாம் முதலில் காலடி வைக்கும்பொழுது இறைவனை ஒரு புறப்பொருளாக நினைத்து வழிபட முற்படுகின்றோம். பின்னர்ப்படிப்படியாக நம்முடைய உள்ளம் பக்குவம் அடைய அடைய நம்முள் கிடக்கும் அறிவு ஒளியானது தூண்டப்படுகின்றது. அப்போது இறைவனை வெளியில் காணத்தேடிச் செல்லத் தேவையில்லை என்கின்ற எண்ணமும் நமக்கு வருகிறது. நம்முள்ளேயே இறைவன் இருக்கின்றான் என்ற நினைப்பில் வேறுபாடுகள் மறைகின்றன. இதையும் இந்தத் திருமந்திரம் தெளிவாக்குகின்றது.
அந்த நிலையில் மணிவாசகப் பெருமான் "ஊன்கெட்டு உயிர்கெட்டு உணர்வு கெட்டு என் உள்ளமும் போய் நான் கெட்டவா" என்று உருகுகின்றார். தான் என்கின்ற நினைப்புப் போய் விடுகின்றது. உலகப் பொருள்கள், செல்வம், மனைவி மக்கள், அந்தஸ்து போன்றவை மீதுள்ள பற்று மறைந்து விடுகின்றது. உடலும் உடலைப் பற்றிய கரணங்களும் நான் என்கின்ற உணர்வைத் தூண்டுவதில்லை. செயலற்று நின்றுவிடுகின்றன. இயற்கையால் உந்தப்பட்டு எண்ண அலைகள் மோத, கொந்தளிக்கும் கடலிலே மேலும் கீழுமாக ஆடி வரும் கப்பலைப் போன்ற மனம், ஆசாபாசங்களுக்கு உட்பட்ட மனம், இதுவரை உள்ளத்தைத் தன்வசம் ஆக்கி வைத்த மனம் இப்போது வலிவற்று விடுகின்றது. ஆறு கடலிலே கலந்து விடுவதைப் போல சிறிய மனம் பெரிய மனத்தில் ஆழ்ந்து விடுகின்றது. வேட்கைகள் அழிந்து விடுகின்றன. தூல உடலைப் பற்றிய நினைப்பு நின்று விடுகின்றது. தன்னைப் பற்றிய நினைப்பும் அழிந்து விடுகின்றது. இது ஆன்மீகத்தின் உயர்ந்த அனுபவ நிலையாகும். இதைப் பெற்றவர்கள் இறையுணர்வாளர் ஆவர்.
"தானும் அழிந்து தனமும் அழிந்துநீ
டூனும் அழிந்து உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து மனமும் அழிந்துபின்
நானும் அழிந்தமை நானறி யேனே" (திருமந்திரம் - 2951)
இங்கே அழிவதாவது ஆசைகளும் பாசங்களும். "ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள்" என்பார் திருமூலர். ஆசைகள் பிறப்பிற்கு வித்திடுகின்றன. வினைகளுக்குக் காரணமாக இருக்கின்றன. வினைகளை விட்டு ஒழிந்தாலன்றிப் பிறவிச் சூழலிலிருந்து மாற இயலாது. வினைக்கு ஈடாய் இறைவனுடைய பேரருளால் நமக்குக் கிடைத்துள்ள இந்த வாழ்க்கையை நல்ல முறையில் பயன்படுத்தி இறைவன் என்கின்ற ஒரே குறிக்கோளை அடைவதற்கான எல்லா வழிகளையும் மேற்கொண்டு இறை அனுபவத்தை முற்றிலும் பெற்றவர்கள் அடியார்கள் ஆவர். அவர்களுடைய வாழ்ககையில் பாசங்கள் கழிந்து விடுகின்றன. பின்னம் வினைகள் தோன்றுவதில்லை. இவற்றையெல்லாம் சாதிக்க உதவுவது இறைவனுடைய பேரருளாகும். அந்தப் பேரருளினால் இறை உணர்வை முற்றும் பெற்றதால் சீவன் சிவத்தில் இரண்டறக் கலக்கின்றது. இத்தகைய பெரும் பதவியை அடியார்கள் இந்தப் பிறப்பிலேயே பெற்று விடுகின்றார்கள். அதை அழகாகத் திருமூலர் பின்வரும் பாடலில் எடுத்துரைக்கின்றார்.
"ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும் ஒன்றானேன்
அழிந்தாங்கு இனிவரும் ஆக்கமும் வேண்டேன்
செழுஞ்சார் புடைய சிவனைக்கண் டேனே" (திருமந்திரம் - 2958 )
பாசங்களின் சேர்க்கையிலிருந்து விடுபட்டவர்கள் அடியார்கள். சிந்தை தெளிந்தவர்கள். தன் நிலையை முற்றும் உணர்ந்தவர்கள். அவர்களுக்கு உலகின் மீது வெறுப்போ, விருப்போ கிடையாது. வேண்டுதல், வேண்டாமை இவற்றிற்கு அப்பாற்பட்ட நடுநிலைமையில் வாழ்வார்கள். அவர்கள் விரும்புவதற்கென பொருளும் இல்லை. சேருவதற்கென உறவும் இல்லை. பற்று அற்றவர்கள் இறைவன் மீது மட்டுமே பற்றினை வைக்கின்றார்கள். கடைசியில் அந்தப் பற்றினையும் விட்டுவிடுகின்றார்கள். அந்த நிலையில் அவர்களுக்கு உலகப் பொருள்கள் மீது கவர்ச்சி எண்ணங்கள் தோன்றத் தேவையில்லை. ஒன்றை விரும்பி வேண்டி அதைப் பற்றிச் சிந்தித்து, அதை அடைய எல்லா முயற்சிகளும் செய்து, ஏமாற்றமோ, பெருமையோ அல்லது இறுமாப்போ அடைவதற்கான மனநிலையும் அவர்களிடம் இல்லை. திருமந்திரம் இந்த நிலையைப் பின்வருமாறு எடுத்துக் கூறுகின்றது.
"தான்வரை வற்றபின் ஆரை வரைவது
தான் அவன் ஆனபின் ஆரை நினைவது
காமனை வென்றகண் ஆரை உகப்பது
தூ மொழி வாசகஞ் சொல்லுமின் நீரே" (திருமந்திரம் - 2954)
உடலின் மீது பற்று இருக்கும்பொழுது மனத்தில் மரண பயம் எப்போதும் நிற்கும். சீவன் சிவமயமான உணர்வினைப் பெற்ற பின் இறப்பைப் பற்றி அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. மெய்யுணர்வு பெற்ற அடியார்கள் எப்போதும் இறைவனுடைய திருவடியிலேயே சரணடைந்தவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே, மீண்டும் மீண்டும் பிறப்பினைத் தரும் வினைகளை அவர்கள் முன்பே களைந்துவிட்டவர்கள் ஆவார்கள். தவத்தினாலும், யோகத்தினாலும் முழுமையான ஞான சாதனையை அடைந்தவர்கள். தம்முள் ஒளியைக் கண்டவர்கள் அறியாமை இருளுக்கு அவர்கள் பயப்படப்போவதில்லை. உள்ளத்தில் சுடர்விட்டு எரியும் ஞான விளக்கின்முன் அறியாமை இருள் என்ன செய்யும்?
"நமன்வரின் ஞானாவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நானுடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன்
தவம்வருஞ் சிந்தைக்குத் தானெதி ராரே" (திருமந்திரம் - 2968)
இறையடியார்கள் பரிபூரண சித்திக்கு வழிகாட்டும் இறையுணர்வாளர்கள் ஆவார்கள். அவர்கள் வெறுமனே அறிவை வளர்த்து, தத்துவங்களிலே மூழ்கியவர்களாக, ஆன்மீகத்தை ஏட்டளவிலே புரிந்து கொண்டு, அதைப் பேசிப் பேசி பிறரை மயக்குபவர்கள் அல்லர். அவர்கள் பேரறிவு பெற்றவர்கள். இவ்வுலகிலும் இறையுணர்வோடு கலந்து வாழ்வார்கள். அவர்களுடைய உள்ளத்தில் சுத்தசிவம் எங்கும், எப்போதும் தோய்ந்து நிற்கின்றான். அதன் காரணமாக அன்பும் அருளும் ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது போல மக்களிடையே ஒன்றிப் பாமரர்களாகக் கலந்து திரிவார்கள். சித்து, அசித்து, உண்மை, இன்மை, வித்தை, அவித்தை, அறிவு அறியாமை, இன்பம், துன்பம் போன்றவற்றை நன்குணர்ந்து உள்தெளிந்து இறைவனுடைய திருவடியே தஞ்சமாகிப் பிறப்பை வளர்க்கும் மலக்கூட்டங்களிலிருந்து விடுபட்டு என்றும் இறைவனுடன் இரண்டறக் கலந்து வாழ்வார்கள். தம்முள் சிவத்தை அவர்கள் கொண்டிருப்பதாலும், சிவமெனும் பரம்பொருள் எங்கும் நிறைந்திருப்பதாலும், இவர்களும் எங்கும் இருப்பர். காலத்திற்கு அப்பாற்பட்ட இறைவனுடனேயே அவர்கள் கலந்து இருப்பதால் முக்காலத்து இயல்பையும் நன்கு உணர்ந்தவர்களாகிறார்கள். இந்த நிலையைத் திருமூலர் "இழவு வந்து எய்திய சோம்பே" என்று அழைக்கின்றார். தன் நினைவு இழந்த நிலை இழவாகும். சோம்பல் என்பது பந்த பாசங்களை விலக்கி, மனத்தை ஓடுக்கி, இறைவனுடன் முழுதும் கலந்த நிலையில் சும்மா இருத்தலும் ஆகும். இந்த அரிய கருத்தை விளக்கும் திருமந்திரம் நமக்கு எத்துணை நிறைவைத் தருகின்றது என்று பாருங்கள்.
"இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்தங்
கிருந்தார் இழவுந் தெய்திய சோம்பே" (திருமந்திரம் - 127)
உள்ளத்தில் சிவத்தை அறிந்த அடியார்கள் எதற்கும் அஞ்சமாட்டார்கள். அவர்களைக்கூரிய வாள் கொண்டு செதுக்கலாம், சீவலாம் மற்றும் பல வகைகளில் துன்புறுத்தலாம். திருநாவுக்கரசர் பெருமானுக்கு எத்தனையோ தீங்குகள் செய்யப்பட்டன. அவற்றையெல்லாட்ம அவர் மகிழ்ச்சியுடன் தாங்கிக் கொண்டார். "மாசில் வீணையும் மாலை மதியமும்" என்று பாடினார். "நாமார்க்கும் குடியல்லோம்" என்று பறைசாற்றினார். அதேநேரத்தில், அடியார்களுக்குப் புகழ் மாலைகளையும் சூட்டிப் பாருங்கள். இவை அனைத்தும் அவர்களைப் பாதிக்காது. இறைவனுடைய நியதிப்படியே எல்லாம் நடக்கின்றது என்கின்ற உண்மைணை உணர்ந்த இப்பெரியோர்கள் எதற்கும் கலங்கமாட்டார்கள். தங்களுடைய கோட்பாடுகளையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். நாள்தோறும் இறைவனுடைய திருவடிகளையே வாழ்த்தி, துன்பங்களை விட்டொழிந்து, நீங்காத இன்பம் பெற்று தனக்கு "சூழ் உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்ன?" என்ற திருநாவுக்கரசர் கேட்கின்றார். இந்தக் கருத்தைப் பின்வரும் திருமந்திரத்தில் காணலாம்.
"செற்றில்என் சீவில்என் செஞ்சாந்து அணியில்என்
மத்தகத்தே உளிநாட்டி மறிக்கில்என்
வித்தகன் நந்தி விதிவழி யல்லது
தத்துவ ஞானிகள் தன்மை குன்றாரே" (திருமந்திரம் - 2847)
திருநாவுக்கரசர் பெருமான் இதே உணர்வுடன் பின்வருமாறு பாடுகின்றார்.
"வானந் துளங்கிலென்!மண்கம்ப மாகிலென்!மால்வரையும்
தானந் துளங்கித் தலைதடு மாறிலென்!தண்கடலும்
மீனம் படிலென்!விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண்
டூனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே"
ஐம்பூதங்கள் கலங்கலாம். தடுமாறலாம். ஆனால் அடியார்கள் இறைவனுடைய அன்பு வழியிலே தம்மை நிலையாக நிறுத்தி வைத்துக் கொண்டு, மலை போன்ற நெறியினை மேற்கொண்ட காரணத்தினால் அவர்களும் அசைவற்று நிற்பார்கள். அடியார்களுடைய திருக்கூட்டச் சிறப்பை விளக்கும் சேக்கிழார் பெருமான் அவருடைய மனநிலையைப் பின்வருமாறு குறிக்கின்றார்.
"பூத மைந்து நிலையிற் கலங்கினும்
மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்
ஓது காத லுறைப்பி னெறிநின்றார்
கோதி லாத குணப்பெருங் குன்றனார்"
இந்தப் பெருநெறியை உலகில் பிரியாப் பெருநெறி என்று திருமூலர் அழைக்கின்றார். அவர்களுக்குக் கிடைத்த பெறு இறைவனிடமிருந்து என்றும் பிரியாப் பேறு. அத்தகைய பேறு பெற்ற பின் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய பயன் பிறப்பை அறுத்தலாகும். மற்றவர்கள் வாக்கினாலும்ட, மனத்தினாலும் அறிய இயலாத பரம்பொருள் ஒன்றை அவர்கள் தம உள்ளத்தில் கண்டு அறிய இயலாத பரம்பொருள் ஒன்றை அவர்கள் தம் உள்ளத்தில் கண்டு கொண்டபிறகு, அவர்கள் அடையக்கூடிய நிலை பேச்சற்ற பெருமையாகும்.
"பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார்அம் மன்றிற் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே" (திருமந்திரம் - 132)