"பேச்சற்ற பேரின்பம்"
இறைவன் சத்திய ஞான தனிப்பொருள் ஆகும். அதுவே ஆனந்தம். வற்றாத இன்பக் கடல். இறைவனை அனுபவித்த அருளாளர்கள் இந்தப் பேரின்பக் கடலிலே மூழ்கித் திளைத்து நிற்பர். அருளாளர்கள் இறைவனுடன் ஒன்றி நிற்பதால் இந்த ஆனந்தம் தோன்றுகிறது. ஒன்றி நிற்பதாவது தனது உடல், பொருள், ஆவி, கருவி, கரணங்கள் அனைத்தையும் பரத்திலே ஈடுபடுத்தி, மெய்மறந்து, அகண்டமான வியாபகத்தில் தன்னைச் சேர்ப்பித்து, அதனால் கிடைக்கும் இன்பத்தை இடையறாது பருகுதலாகும். இதையே "நான் பெற்ற இன்பம்" என்றார் திருமூலர். எந்த உயிருக்கும் இன்பத்தின் மேல் விருப்பம் இயல்பாகவே உண்டாகும். நாமும் பலவகையான இன்பங்களை விரும்பி அவற்றை அடைய முயன்று அந்த இன்பங்களுக்காகவே வாழ்ந்து வருகின்றோம். இன்பம் என்று ஒன்று இல்லையென்றால் வாழ்வும் கலந்துபோய் விடும். இன்பம் பெறுவதே வாழ்வின் குறிக்கோள் என்னும் ஒருவித மாயையில் உயிரானது உடலையும், அதன் கருவிகளையும் பல துறைகளில் பயன்படுத்துகிறது. நமது மனம் ஒரு குரங்குபோல. ஒரு பொருளில் அதை நுகர்ந்து, இன்பம் பெற்றுத் திருப்தி அடைந்தவுடன் வேறொரு பொருளுக்குத் தாவுகின்றது. இவ்வுலகிலே நமக்குப் பல பொருள்களை அனுபவிக்க வாய்ப்பினைத் திருவருளால் நாம் பெற்றிருப்பதன் காரணத்தால் நமது இன்ப வேட்டை ஓர் முடிவிலாத பாதையாக அமைந்து விடுகிறது. இதுவும் இறைவனுடைய திருவருளேயாகும். உடலையும், கருவிகளையும் அனுபவிப்பதற்குப் பல பொருட்களையும் இந்த உலகிலே நமக்கு இறைவன் தந்தருளி, குழந்தைகளைப் படிப்பிலே ஊக்குவிக்கத் தின்பண்டங்களைத் தருவதுபோல, பொருட்களுடன் இன்ப அனுபவத்தைக் கலந்து அவற்றின் மீது மேலும் மேலும் இன்ப நாட்டம் கொள்ளுமாறு நம்மை ஊக்குவித்து, நம்முடைய கர்ம பலன்களை அனுபவிக்கத் திருவருள் புரிவதும் இறைவனேயாகும். இதனையே "இன்பமும் இன்பக் கலவையுமாய் நிற்கும்" என்றார் திருமூலர்.
ஆனால், இப்பூவுலகில் பொருட்களைக் கொண்டு நாம் பெறும் எல்லாவிதமான இன்பங்களுக்கும் ஒரு முடிவு உண்டு. நிலையற்ற பொருட்கள் மீது நாம் நாட்டம் செலுத்தி, அவற்றை நுகர்ந்து, கருவி கரணங்கள் வழியாக நாம் இன்பம் நுகரும்போது அந்த இன்பத்திற்கு மாறாகத் துன்பம் நேருவதும் இறைவனுடைய பேரருளாகும்.
இன்பத் துறையிலே நாம் ஈடுபடும்போதே அதன் வழிவரும் இடர்களைச் சந்திக்க நாமே வித்திடுகின்றோம். இப்பிறவியிலே நாம் பெறும் இன்பங்கள், துன்பங்கள், நாம் நமது முற்பிறவிகளில் செய்த வினைகளின் பயனே என்பது திருவருள் அமைத்துள்ள நீதியாகும்.
"இன்பப் பிறவி படைத்த இறைவனுந்
துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன்" (திருமந்திரம் - 432)
"இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது
முன்பவம் செய்கையி னாலே முடிந்தது" (திருமந்திரம் - 267)
அருளாளர்கள் துன்பம் கலந்த இன்பத்தை நாடாமல் எல்லாவற்றிற்கும் மேலான பேரின்பத்தை, சிவானந்தத்தை நாடிப்பெறுவர். இதனினும் சிறந்த இன்பம் வேறில்லை. இதுவே முடிவான இன்பமாகும். இந்த நிலையில் உயிருக்குப் பரிபூரண அமைதி கிடைத்து, அந்த அமைதியிலே உயிர் நிலைத்து நிற்கும். இதுகாறும் சிற்றின்பத்தை நாடிவந்த
உயிரானது இப்போது பேரின்பத்தில் திளைத்து நிற்கும். இப்பேரின்பம் தடையற்றதாய், நிலையானதாய், எல்லை இல்லாததாய் இருக்கும். இத்தகைய இன்பத்திற்கு இருப்பிடம் இறைவன் ஆதலால் இறை அனுபவம் பெற்ற அருளாளர்கள் இறைவனுக்கும், இன்பத்திற்கும் இடைவெளியைக் காண்பதில்லை. இறைவனையே இன்பமாகக் கருதுவர். "தேனையும், பாலையும், கன்னலையும் ஒத்த இனிய கோன் அவன்" என்பார் மணிவாசகப் பெருமான். இந்த இன்ப நிலையே அன்பு நிலையுமாகும். இறை இன்பத்தை அனுபவிப்பதும், அன்பு செலுத்தும் பண்பும் ஒன்றேயாகும். "ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடைய அன்பே" என்பார் மாணிக்கவாசகர். அன்பின் முதிர்ச்சியில் இறை இன்பத்தை அருளாளர் காண்பர்.
"இன்பில் இனி (து) என்றல் இன் (பு) உண்டேல் இன்புண்டாம்
அன்பு நிலையே அது". (திருவருட்பயன் - 80)
அருளாளர்கள் பெறும் இன்பம் இறைவனை அறிந்து கொள்வதால் கிடைக்கின்றது. இறை அருளால் அவர்கள் முதலில் ஆன்மபோதம் பெறுகின்றனர். அதாவது பக்குவமடைந்த உயிர்கள் தம்மைப் பற்றித் தெரிந்து கொள்கின்றன. இது ஆன்ம விளக்கமாகும். இத்தோடு நின்று விட்டால் மட்டும் போதாது. இறைவனைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அறிந்து கொள்ளும் பொழுதுதான் ஆன்ம அறிவு இறை அறிவோடு ஒன்றி நின்று "கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்" நலத்தை உயிரானது பெறும். இதுவே ஆனந்த விளக்கம் எனப்படும். சத்திய ஞானானந்தம் என்றும் கூறுவர். இந்த நிலையை அடையத் தகுதி பெறும் சீவர்களுடைய உடல் முழுவதிலும், உள்ளத்திலும் மயிர்க்கால்தோறும் பாலுடன் தேனும், பழத்தின் சாறும், தூய்மையான அமுதத்தின் சுவையும்போல ஒருவித இன்பம் பெருகி நிற்கும். இது திருமூலரின் அனுபவமாகும்.
"பாலொடு தேனும் பழத்துள் இரதமும்
வாலிய பேரமு தாகும் மதுரமும்
போலுந் துரியம் பொடிபட வுள்புகச்
சீல மயிர்க்கால் தொறுந்தேக் கிடுமே". (திருமந்திரம் - 2831)
நாம் உடலையும், கருவி கரணங்களையும் பயன்படுத்தி இன்பத் துன்பங்களைப் பெறுகின்றோம். அருளாளர்கள் இறை அறிவு பெற்றவர்கள். கருவி கரணங்களால் அவர்கள் இறைவனைப் பற்றிய ஞானத்தை அடையவில்லை. இறைவனுடைய திருவருளாலே அவன் வழங்கி அருளும் ஞானத்தைப் பெற்று எல்லாவற்றையும் அறிந்து கொள்வார்கள். அதனால் பேரின்பம் பெறுவார்கள். இந்த இன்பத்தை அனுபவித்தவர்களுக்கே அதன் தன்மை விளங்கும். பிறர் அதன் தன்மையை அறிய மாட்டார்கள். அருளாளர்கள் இறைவனோடு ஒன்றிப்பெரும் இன்பத்தை அவர்களே அறிவர். உடல் முதலிய கருவிகளின் துணையைக் கொண்டு உலகியற் பொருட்களை அறிந்து கொள்ளலாம். உயிரின் தன்மையையோ இறைத் தன்மையையோ அவற்றால் அறிந்து கொள்ள முடியாது. அவ்வாறு அறிந்து கொள்வதாக நம்மில் சிலர் நினைத்தாலும் அது கற்பனையே ஆகும். இறை ஞானம் பெற்றவரே முழுமையான அறிவினைப் பெற்றவர்கள். அவர்களே வீட்டின்பம் பெறுவர். மற்றவர்களுடைய வினை நீங்குவதில்லை. ஆணவம் அகலுவதில்லை.
"... .... .... ... ... ...
கன்னிகைதான் காமரதம் காணாள்;
மருவிஇரு வரும்புணர வந்தஇன்பம்
வாயினால் பேசரிது;மணந்தவர்தாம் உணர்வர்;
உருவின்உயிர் வடிவதுவும் உணர்ந்திலர் காண்;சிவனை
உணராதார் உணர்வினால் உணர்வதுகற் பனைகாண்;
அருள்பெறின்,அவ் இருவரையும் அறிவுஇறந்து அங்கு அறிவர்
அறியாரேல்;பிறப்பும் விடாது!ஆணவமும் அறாதே."
(சிவஞானசித்தியார் - 288)
உலகப் பொருட்களை அனுபவிக்க நமது உடல பயன்படுகிறது. உடலின் வேட்கைகளைத் திருப்தி செய்து அதனால் இன்பம் அடையும்பொழுது அநத் உடலே நமக்கு இன்பத்தைத் தருவது போன்ற ஒரு மயக்கம் ஏற்படுகிறது. உடல் முழுவதுமே கரும்பும், தேனும் கலந்திருப்பது பொருள்கள்தாம். ஆனால், அவற்றைவிட மேலானதொரு இன்பத்தைத் தரக்கூடிய ஒரு பொருள் உண்டு. அதுவே சிவபரம்பொருளாகும். இறைவன் திருவருளால் அந்தச் சிவபரம்பொருளை, நமச்சிவாயக் கனியை நாடுகின்ற ஆர்வம் நம்முடைய உள்ளத்திலே தோன்றத் தொடங்கிவிட்டால் அதைவிடக் கூடுதலான ஆனந்தம் வேறு எந்த வழிகளிலும்ட பெற இயலாது. உள்ளத்தினுள்ளே அரும்புகின்ற சிவானந்தத்தை உணர்வு நிலையில் நாம் பெறும்பொழுது, உடலும் அதனால் பெறக்கூடிய இன்பங்களும், சுவைகளும் "Y" எனப் புளித்துவிடும். இதுவும் திருமூலரின் அனுபவமாகும்.
"கரும்புந் தேனுங் கலந்ததோர் காயத்தில்
அரும்புங் கந்தமு மாகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்புங் கைத்தது தேனும் புளித்ததே" (திருமந்திரம் - 2976)
இந்தச் சிவானந்தத்தைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் தெளிந்த சிந்தையுடன் இருக்க வேண்டும் என்கிறார் திருஞானசம்பந்தர். இறைவன் அப்பாலுக்கு அப்பாலாய் நிற்பவன். ஐம்பூதங்களையும் தம்முள் அடக்கி வைத்துக் கொண்டிருப்பவன். சந்திரனைத் தலையிலே அணிந்து கொள்ள வல்லவன். அத்தகையவன் எல்லோருடைய உள்ளத்திலும் குடிகொண்டிருக்கிறான். அவனுடைய குடியிருப்புத் தெளிவாக இருக்க வேண்டும். தூய்மையாக இருக்க வேண்டும். மாசு மறு நீங்கி இருக்க வேண்டும். ஆசைகளாலும் தீய குணங்களாலும் அழுக்கடைந்து கலங்காமல் இருக்க வேண்டும். தூய்மையான் உள்ளத்துடன் இறைவனுக்கு இன்பம் தரும் பணியை நாள்தோறும் செய்ய வேண்டும். அது என்ன பணி? சிவபெருமானைத் தினந்தோறும் நாடிச் செல்ல வேண்டும். சென்று அவன் புகழைப் பாடித் துதிக்க வேண்டும். அவனுடைய குணங்களையும் புகழையும் உலகுக்கு எடுத்துக்கூற வேண்டும். அவ்வாறு செய்தால் குறைகள் முற்றும் ஒழிந்து இறைவனைச் சந்திக்கலாம். தெளிந்த சிந்தையுள் சந்திக்கலாம். அவன் அங்கே எவ்வாறு இருப்பான்? "தேனுமாய் அமுதாகி நின்றான்" என்பார் திருஞானசம்பந்தர். தேனும் அமுதமும் தரக்கூடிய இன்பத்தைச் சிவபெருமான் தெளிந்த சிந்தையுள் நின்று நமக்குக் கொடுத்துக் கொண்டேயிருப்பான்.
"தேனு மாய்அமு தாகிநின் றான்தெளி சிந்தையுள்;
வானு மாய்மதி சூடவல் லான்மங்க லக்குடிக்
கோனை நாள்தொறும் ஏத்திக் குணங்கொடு கூறுவார்
ஊனம் ஆனவை போய்அறும்;உய்யும் வகைஅதே".
இறைவனுடைய அருளால் அருளாளர்களுடைய தெளிந்த சிந்தையில் வைரமணி போன்ற இறைவனைக் கண்டறிந்த - மாத்திரத்திலேயே அன்பர்களுடைய உள்ளத்தில் தனிப்பெரும் இன்பம் பொங்குகின்றது. இந்த இன்பத்திற்கு முன், இந்த உலகத்திலுள்ள மற்ற சுவைதரும் பொருள்களெல்லாம் சுவையற்றுப் போகின்றன. முருகப்பெருமான் மீது அளவிலாப் பற்று வைத்து ஆழ்ந்த இன்பம் பெற்ற ஒப்பற்ற அனுபூதிமானாகிய அருணகிரிநாதரும் திருமூலரைப் போலவே உவகை பொங்கப்பாடுகின்றார்.
"பெரும்பைம் புனத்தினுள் சிற்றேனல்
காக்கின்ற பேதைகொங்கை
விரும்பும் குமரனை மெய்யன்பி
னால்மெல்ல மெல்லஉள்ள
அரும்பும் தனிப்பர மானந்தம்
தித்தித் தறிந்த அன்றே
கரும்பும் துவர்த்துச்செந் தேனும்
புளித்தறக் கைத்ததுவே".
சிவானந்தத் தேனைப் பருகி, அந்த இன்பத்திலே மூழ்கித் திளைத்து நிற்பவர் மாணிக்கவாசகப் பெருமான். "நானேயோ தவம் செய்தேன்?" என்று கேட்பவர் சிவன் அவன் சிந்தையுள்ளே புகுந்த நிலையைக் கண்டு, எண்ணி எண்ணி வியப்பு மேலிட்டு நிற்பவர். தேனாய் இன் அமுதமாய்ச் சிவபெருமான் தித்திக்கும் தன்மையை உள்ளத்திலே கண்டவர். பூவினுள் இருக்கும் தேன் அவரை ஈர்க்குமா? ஈர்க்காதே. ஆனால் சாதாரணத் தும்பிக்கு சிவானந்தத் தேனின் அருமை எவ்வாறு தெரியும்? பூக்களிலுள்ள தேனையும் நறுமனத்தையும் மட்டுமே நாடிச் சென்று சுற்றித் திரிகின்றது. இது என்ன பயனற்ற பணி என்று நினைக்கிறார் மணிவாசகப் பெருமான். பூவிலுள்ள தேனுக்காகச் சுற்றாமல் நாள்தோறும் நினைக்கும்பொழுதெல்லாம், காணும்பொழுதெல்லாம் எப்பொழுதுமே தன் நெஞ்சம் உருக உருக திருக்கூத்துடையானை அடைந்து அவனைப் பாடித் திரிவதால் கிடைக்கும் ஆனந்தத் தேனினைப் பருகி, இன்பம் எய்துவது சாலச்சிறந்தது என்றும், ஆகவே அதைத் தும்பி செய்ய வேண்டும் என்றும் மாணிக்கவாசகப் பெருமான் தும்பியைக் கடிந்து கொள்கின்றார். உலகோரிடம் பாசம் வைக்காமல், தெய்வத்தின் மீது பற்றை வைக்கும்பொழுது உயிருக்குக் கிடைக்கும் ஆனந்தமே எல்லாவற்றிற்கும் மேலானதாகும் என்கிற கருத்தை மாணிக்கவாசகர் தெளிவுபடுத்துகின்றார்.
"தினைத்தனை உள்ளது ஓர் பூவினில் தேன் உண்ணாதே,
நினைத்தொறும், காண்தொறும், பேசும்தோறும், எப்போதும்
அனைத்து எலும்பு உள்நெக, ஆனந்தத்தேன் சொரியும்
குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய்;கோத்தும்பீ'
(திருவாசகம் - திருக்கோத்தும்பி - 217)
உலகப்பொருட்கள் மீது பாசத்தை வளர்க்க உதவுவது நமது உடலும், உடலைச் சார்ந்த கருவிகளும் கரணங்களும் ஆகும். கருவி கரணங்கள் ஜடப்பொருள்கள் ஆகும். நமது உயிரே அவற்றைப் புறப்பொருட்கள் மீது செலுத்துகின்றது. ஆனால், இறை அனுபவம் பெற்ற அருளாளர்களுக்கு இதே கருவி கரணங்கள் சிவானந்தத்தில் அருளாளர்கள் தொடர்ந்து திளைத்து நிற்க உதவும் கருவிகளாகத்தன்மை மாறிவிடுகின்றன. அவற்றைக் கொண்ட அருளாளர்கள் சிவானுபவத்தில் இருந்து கிடைக்கும் பேரின்பத்தை மேலும் மேலும் பருகி அமைதி அடைய பயன்படுத்திக் கொள்கிறார்கள். உயிர் ஒரு பக்கம், உடல்
ஒரு பக்கம் என்று இருவிதப் பாதைகளிலே அவை செல்லாமல் சித்தத்தைச் சிவமாக்கும் பாதையிலே அவற்றைச் செலத்திப் பேரின்பம் அடைகின்றார்கள். தன்னை ஆட்கொண்ட பிரானை "பித்தன் இவன்" என அழைத்தார் சுந்தரமூர்த்தி நாயனார். ஆட்கொள்ளப்பட்ட காரணத்தால் அவருடைய சீவன் சிவமாம் தன்மையைப் பெற்று விட்டது. அந்த நிலையில் அவர் தில்லையம்பதியில் நடராஜப் பெருமானைத் தரிசிக்கும் போது அவருடைய கருவி கரணங்கள் எல்லாம் சிவானுபவத்தில் மூழ்கிப் பேரின்பத்தில் திளைத்து நின்ற ஒர ஒப்பற்ற காட்சியைச் சேக்கிழார் பெருமான் தனது அகக்கண்களால் கண்டு தெய்வமணம் வீசும் வாசகமாக நமக்கு அருளித் தந்துள்ளார். அருளாளர்களுடைய சித்தமெல்லாம் தெய்வமாகிய காரணத்தினால் அவர்கள் புறத்தே தெய்வீகக் காட்சியில் ஈடுபடும்பொழுது தங்கள் கருவி கரணங்களைத் தம் வசமே ஒடுக்கிச் சிவத்தை நோக்கிச் செலுத்தி இன்பம் அடைகின்றார்கள். அவர்களுடைய உள்ளத்திலே இறை அனுபவம் நிரம்பி நிற்க மற்றவர்கள் மனதிலே படியாத புறக்காட்சிகள் அருளாளர்களுடைய உள்ளத்திலே மாறிலா மகிழ்ச்சியைத் தந்து விடும்.
"ஐந்துபே ரறிவும் கண்களே கொள்ள
அளப்பருங் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக் குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே ஆக
இந்துவாழ் சடையான் ஆடும்ஆ னந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்". (பெரியபுராணம்)
இறை அனுபவத்தால் மெய்ஞ்ஞானம் கிட்டுகிறது. மெய்ஞ்ஞானமாவது எல்லா ஞானங்களையும் தன்னுள் அடக்கியுள்ள சிவபரம்பொருளைப் பற்றிய பரஞானமாகும். திருவருளால் உயிர் மெய்ஞ்ஞானம் பெற்றவுடன், மெய்ஞ்ஞான நிறைவில் ஒப்பற்ற சிவானந்தத்தை அனுபவிக்கின்றது. சிவ பரம்பொருளோடு ஒன்றி நிற்கும் அனுபவமே சிவானந்த அனுபவமாகும். இது உள்ளத்திலே எழுவது. வழிந்தோடுகிறது. கருவி கரணங்கள் அவற்றால் பாதிக்கப்படுகின்றன. இறைவனுடைய பெரும் கருணை அருளாளர்களுடைய ஐம்பொறிகளின் செய்கைகளில் வெளிப்படுகிறது. கண்கள் களிப்படைகின்றன. வாய் இன்னிசை பாடுகின்றது. கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர்மழை பொழிகின்றது. மனதிலே இறைவனைப் பற்றியே நினைப்பு. உடல் ஆனந்தக் கூத்தாடுகின்றது. திருஞானசம்பந்தருக்க இந்த நிலை திருச்சிற்றம்பலத்திலே ஏற்படுகின்றது. பெருமானார் அதனைக் கண்டு வியக்கின்றார். இறைவனுடைய ஒப்பற்ற கருணையைப் போற்றுகின்றார். "எம்பெருமானே!சிவபோகம் என்பது என் உள்ளே நேருகின்றது அந்த அனுபவத்தை ஐம்பொறிகளின் அளவிலேயும் எளிதில் வரும்படி அருளினாயே. உன் பெரும் கருணையை எவ்வளவு போற்றினாலும் போதாதே" என்பார்.
"அண்ண லார்தமக்கு அளித்தமெய்ஞ் ஞானமே யான அம்பலமும்தம்
உண்ணி றைந்தஞா னத்துஎழும் ஆனந்த ஒருபெருந் திருக்கூத்துங்
கண்ணின்முன் புறக்கண்டுகும்பிட்டு எழுங்களிப்பொடும் கடற்காழிப்
புண்ணி யக்கொழுந் தனையவர் போற்றுவார் புனிதரா டியபொற்பு. (பெரிய புராணம் - 2058)
"உணர்வி னேர்பெற வருஞ்சிவ போகத்தை யழிவின்றி உருவின்கண்
அணையும் ஐம்பொறி யளவினும் வெளிவர அருளினை யெனப்போற்றி
இணையில் வண்பெருங் கருணையேயேத்தி, முன்னெடுத்தசொற்பதிகத்திற்
புணரு மின்னிசை பாடின ராடினர் பொழிந்தனர் விழிமாரி ; (பெரிய புராணம் - 2059)
சிவானந்தத்தைப் பற்றிப் பேசுகின்றோம். அதைப் பெற்ற அருளாளர்களின் நிலை என்ன என்று ஓரளவு விளக்கலாம். ஆனால், சிவானந்தம் இத்தகையது என்று நம்மால் சொல்ல முடியாது. வேண்டுமானால் யாவற்றினும் மேம்பட்ட இன்பம் ஒன்று மட்டுமே சொல்லலாம். சிவானந்தம் தனக்கு மேல் சிறந்தது ஒன்று இல்லாத பேரின்பமாகும் என்றும் ஒப்புக் கொள்ளலாம். அது அனுபவித்தவர்களுக்கே தெரியும். "எங்ஙன் இருந்ததென்று அவ்வண்ணஞ் சொல்லுகேன் அங்ஙன் இருந்ததென்று உந்தீபற" என்கிறது திருவுந்தியார். இதனைப் "பேச்சற்ற பேரின்பம்" என்பார் திருமூலர். இறைவனுடைய பெரும் கருணையால் அவனுடைய அருட்கடலில் மூழ்கினோம். எல்லாவிதப் பாசத் தொடர்புகளைக் களைந்து கொண்டோம். மாயையிலிருந்து விலகிக்கொண்டோம். இறைவனுடைய பேரருள் உண்மையைப் புகட்டிச் செயலற்று இருக்கும்படி செய்து விட்டது. இதுவே சோதனையாகும் என்கிறார் திருமூலர்.
"பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்
தம்மா னடித்த தருட்கடல் ஆடினோம்
எம்மாய மும்விடுத் தெம்மைக் கரந்திட்டுச்
சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமே". (திருமந்திரம் - 2635)
உள்ளத் தூய்மையில் இறைவனுடன் ஒன்றியிருந்து, ஒப்பிலாத ஆனந்தம் பெற்ற "செப்பு அரிய சிவம் கண்டு தான் தெளிந்து" இறையுணர்வாளர்கள் சிவமாகவே விளங்கி நிற்பர். ஒருவர் நமக்கு உதவி செய்தால் அவருக்கு நாம் நன்றி செலுத்துகின்றோம். அனுபூதிமான்கள் இறைவனுக்கு எவ்வாறு நன்றி செலுத்தப் போகின்றார்கள்? அதற்கு ஒரேஒருவழிதான் உண்டு என்பதையும் உணருகிறார்கள். தங்களை இறைவனுக்கே அர்ப்பணித்து விடுகின்றார்கள். அவனன்றி வேறில்லை என்கிற உணர்வில் தமது உடல், பொருள், ஆவி, உடைமை யாவற்றையும் இறைவனுடைய திருவடிகளிலே காணிக்கையாகச் செலுத்தி விடுகின்றார்கள். இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் இறைவனுக்கு அடிமைகளாகிறார்கள். அவனுக்கு ஆளாய்விடுகிறார்கள். தங்களுக்கென்று ஒரு உரிமையும் இல்லை என்பதை உள்ளத்தில் தெரிந்து கொள்கின்றார்கள்.
எல்லாம் அவன் அருளால் நடக்கின்றது. எல்லாம் அவனுடைய உடைமைகள் என்கிற உணர்வு சிவபோகத்தில் ஏற்படுகிறது. இந்த உலகில் ஒருவரும் மற்றொருவருக்கு அடிமையாகச் செல்ல விரும்புவதில்லை. அடிமையாவதில்லை. நிர்பந்தத்தால் அடிமையாக்கப்படலாம். ஆனால், மெய்ஞ்ஞானம் பெற்ற அனுபூதிமான்கள் இறைவனுக்கு அடிமையாவதைத் தவிர வேறு வழி இல்லை என்கிற ஒப்பற்ற நிலைக்கு வந்து விடுகிறார்கள். அந்த எண்ணமே அவர்களுக்குப் பேரானந்தத்தைக் கொடுக்கின்றது. தங்கள் நினைப்பெல்லாம் இறைவன்பால், தங்கள் செய்கையெல்லாம் இறைவனுக்கு இனியவை, தங்கள் உணர்வெல்லாம் இறைவனுக்குக் காணிக்கை என்று அருளாளர்கள் தங்களை
இறைவனுக்கு உடைமையாக்கிக் கொள்கின்றார்கள். இந்த நிலையை அவர்கள் தாமாகவே விரும்பிப் பெற்று சொல்லொணா இன்பம் அடைகின்றார்கள். இறைவனை அனுபவித்தோம் என்பது மட்டும் அவர்களுக்கு இன்பத்தைக் கொடுப்பதில்லை. இறைவனுக்கு ஆட்பட்டோம். அடிமையானோம் என்கிற நினைப்புப் பன்மடங்கு அதிகமான ஆனந்தத்தைத் தருகிறது. அடிமை என்றால் இன்று நேற்று அன்று. மெய்ஞ்ஞானம் பெற்ற அடியார்கள் பன்னெடுங்காலம் தங்களுடைய உயிர் இறைவனோடு பிணைக்கப்பட்டிருக்கின்றது என்பதைக் கண்டறிந்தார்கள். அந்த உண்மைத் தொடர்பு மாயையால் மறைக்கப்படுகிறது. மாயை நீங்கியவுடன் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டமை உள்ளத்திலே பளிச்செனப் புலப்படுகிறது. ஊழி தோறும் ஊழி உயிரானது உலகில் பிறப்பெடுத்து, கன்ம பலன்களை அனுபவித்து இறைவன் திருவடிகளைச் சேரும் வரை இறைவனின் திருவருளே உயிரை நடத்திச் செல்லுகின்றது என்கிற ஞானமே உயிரினை இறைவனுக்கு அடிமையாக்கி விடுகின்றது. இறைவனுக்கு நாம் எல்லோரும் கட்டுப்பட்டவர்கள். அவனுடைய அடிமைகள் என்னும் உண்மை நம்முடைய உயிரின்மேல் ஆணவங்களிலே எழுதவது போல எழுதப்பட்டுள்ளது. அதை எழுதியவன் பிரம்மன். சாட்சியாக நின்றவன் திருமால். நமது பிறப்பும், காப்பும், இறப்பும் இறைவனுடைய கைகளிலே இருக்கின்றது. ஏனென்றால், நாம் எல்லோரும் அவனுடைய அடிமைகள். அவனே நமக்கு இன்பம் அளிப்பவன். அவனுக்கே நாம் ஆட்பட்டோம். வேறு யாவருக்கும் குடியல்லோம் என்றார் திருநாவுக்கரச நாயனார். அடியார்கள் சிவனுக்கு வழிவழி அடிமையானவர்கள். சுந்தரர் வரலாற்றில் சிவபெருமான் இதைத் தெளிவாக்கினார். திருமந்திரம் இதையே படம் பிடித்துக் காட்டுகிறது.
"என்தாயோ டென்னப்பன் ஏழேழ் பிறவியும்
அன்றே சிவனுக் கெழுதிய ஆவணம்
ஒன்றா யுலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில்வண்ணன் நேரெழுத் தாயே". (திருமந்திரம் - 1876)
தன்னை இறைவனுக்கு அர்ப்பணித்துக் கொண்டதில் அந்தம் ஒன்றும் இல்லா ஆனந்தம் பெறுகிறார் மணிவாசகப் பெருமான். அதை அவர் ஒப்புக் கொள்கிறார். உடனே அவருடைய மனதில் ஒரு எண்ணம் தோன்றுகிறது. "நான் என்னை உனக்குக் கொடுத்தேன். நீயோ உன்னையே எனக்குக் கொடுத்துவிட்டாயே சங்கரா, நம்மில் யார் சாமர்த்யசாலி? உன்னைப் பெற்றதால் எனக்கு அளவிலா ஆனந்தம் கிட்டியது. என்னைப் பெற்றதால், உனக்கு என்ன கிடைக்கப்போகின்றது. அதுமட்டுமல்ல என்னுடைய சிந்தையையே c இருப்பிடமாக்கிக் கொண்டார். என்னுடைய உடலில் குடியிருந்தாய். நானல்லவா பாக்கியசாலி. c இவ்வாறு உன்னை எனக்குத் தந்து கொண்டதற்கு நான் எவ்வாறு உனக்குக் கைம்மாறு செய்யப்போகிறேன்" என்கிறார் மணிவாசகப் பெருமான். ஒரு ஒப்பற்ற அருளாளர். அவருடைய திருவாக்கு இந்தப் பூவுலகில் வாழும் எல்லா மக்களின் உள்ளங்களில் இறைவன்பால் எழும் நன்றி உணர்விற்கு இலக்கணமாக அமைகின்றது. a
"தந்தது, உன்-தன்னை;கொண்டது;என் தன்னை;
சங்கரா!ஆர் கொலோ, சதுரர்?
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம்;பெற்றேன்;
யாது c பெற்றது ஒன்று, என்பால்?
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்
திருப்பெருந்துறை உறை சிவனே!
எந்தையே!ஈசா!உடல் இடம் கொண்டாய்
யான் இதற்கு இவன், ஓர் கைம்மாறே!" (திருவாசகம் - 395)