ஆசை அறுமின்கள்!ஆசை அறுமின்கள்!
மாணாக்கன் - ஐயா, இதுவரை பலவற்றைக் கூறினீர்கள். இப்பொழுது மனிதனுடைய ஆசா பாசங்களைப் பற்றி விளக்குவீர்கள் என்று நம்புகின்றேன். மிக்க மகிழ்ச்சி. ஆனால், "ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள்" என்கிற தலைப்பைப் பார்த்தாலேயே பயமாக இருக்கின்றதே!இது என்ன சாத்தியமா?
ஆசிரியர் - நல்ல கேள்வி ஒன்றைக் கேட்டுள்ளாய். உண்மையில் உனக்கு இருக்கின்ற ஐயப்பாட்டை நான் நீக்க முயல வேண்டும். முயலுகின்றேன். பொதுவாக ஒரு பொருளைப் பற்றி நாம் நன்கு தெரிந்து கொள்ளாத நிலையில் அதைப் பற்றிய பல சந்தேகங்கள் நம்முடைய மனத்தில் தானாகவே எழுகின்றன. உதாரணமாக இருட்டில் பாம்பைப் போன்ற ஒன்றை நாம் பார்க்கின்றோம். பல சந்தேகங்கள் நம்முடைய மனத்தில் எழுகின்றன. உடனே அங்கே விளக்கைப் போட்டுப் பார்க்கும்பொழுது அது கயிறு என்று தெரிகிறது. எல்லா ஐயங்களும் உடனே நம்மை விட்டுச் செல்கின்றன. ஆகவே, ஒரு பொருளைப் பற்றி நாம் ஆழமாகத் தெரிந்து கொண்டால்தான் அந்தப் பொருளினுடைய உண்மைகள் நமக்கு நன்கு புலப்படும். இதை மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஆசை என்கின்ற ஒன்றைப் பற்றி நாம் ஆராயலாம்.
மாணாக்கன் - ஆசை என்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதானே? நாம் பிற பொருள்கள் மீது ஆசை வைக்கின்றோம். அவற்றை விரும்புகின்றோம். எப்படியாவது அடைய முயற்சிக்கின்றோம். முயற்சியில் தோல்வி அடைந்தால் வேதனைப்படுகின்றோம். துன்பப்படுகின்றோம். துன்பம் வரும் என்று தெரிந்து கொண்டும் பொருள்களைப் பற்றி நிற்கின்றோம். இந்த உலகத்தில் பிறந்த எல்லா உயிர்களுடைய இயல்பும் அதுவாகத்தானே இருக்க முடியும்?
ஆசிரியர் - நன்கு சொன்னாய். பிற பொருள்கள் மீது நாம் ஆசைப்படுவது நமக்கு இயற்கையாகவே தோன்றுகிறது. ஏன்? சற்று ஆராய்ந்து பார்த்தால் நாம் நம் மீது வைக்கும் ஆசையின் காரணமாகத்தான் பிற பொருள்களை நாடுகிறோம் என்று சொல்வது சரியல்லவா?
மாணாக்கன் - தாங்கள் சொல்லுவது புரிகின்றது. ஆனால், அதை மேலும் விளக்க வேண்டுகின்றேன்.
ஆசிரியர் - முதலில் நம்முடைய உடலை நாம் என்று நினைத்துக் கொள்கின்றோம். அது தவறு. அதைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கின்றேன். நமது உடல் ஒரு ஜடப்பொருள். உடல் ஐந்து பூதங்களால் ஆனது. பல கருவிகளைக் கொண்டது. ஆனால், அவற்றையெல்லாம் இயக்குவது உடலை இருப்பிடமாகக் கொண்ட உயிராகும். புலன்கள் ஐந்து. பூதங்கள் ஐந்து. ஞானேந்திரியங்கள் ஐந்து. கன்மேந்திரியங்கள் ஐந்து. அவற்றையெல்லாம் மேய்த்துச் சொல்லுகின்ற உயிர் ஒன்று. இந்த உடலுக்குப் போக்குவரத்தும் செய்ய ஒன்பது வழிகள் உண்டு. உயிர் உடலின் மீது ஆட்சி செலுத்தும் தன்மை புரிகிறதல்லவா? இதைத்தான் திருமந்திரமும் பின்வருமாறு சொல்லுகின்றது.
"புலம் ஐந்து புள் ஐந்து புட்சென்று மேயும்
நிலம் ஐந்து நீர் ஐந்து நீர்மையும் ஐந்து
குலமொன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலம்வந்து போம்வழி யன்பது தானே". (திருமந்திரம் - 2025)
உடம்பாகிய காட்டில் இந்திரியங்களாகிய ஐந்து சிங்கங்கள் வாழ்கின்றன என்று திருமூலர் கூறுகின்றார். அவை சதா புறத்தே சென்று புறப்பொருள்களைப் பற்றிய விஷய ஞானத்தைச் சேகரித்து உடலிடம் வைப்பதாகக் கூறுகின்றார். "அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன அஞ்சும் போய் மேய்ந்தும் அஞ்சுக மேபுகும்". உடலைச் சார்ந்த கருவிகளை மதம் பிடித்த யானைகளுக்குத் திருமூலர் பெருமான் ஒப்பிடுகின்றார். யானைகளுக்கு மதம் பிடிக்கும்பொழுது அவைகளை ஊருக்கு வெளியே உள்ள, மக்கள் நடமாட்டம் இல்லாத, கோட்டைப் பகுதியிலே விட்டுவிடுவார்கள். அதேபோல நமது இந்திரியங்கள் பொருள்கள் மீது நாட்டம் கொண்டு செல்ல முயலும்போது, அவற்றை நமது அறிவால் அடக்கி வைக்க முயலுகின்றோம். ஆனால், அவை தப்பி ஓடி வெளியே வந்து விடுகின்றன. உடம்பையே அழித்துத் திமிர் கொண்டு அலைகின்றன என்றும் திருமூலர் பெருமான் கூறுகின்றார்.
"முழக்கி யெழுவன மும்மத வேழம்
அடக்க அறிவென்னுங் கோட்டையை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
கொழுத்தன வேழங் குலைக்கின்ற வாறே". (திருமந்திரம் - 2034)
மாணாக்கன் - எவ்வளவு அழகாக அந்த யோகியார் படம் பிடித்துக் காட்டுகின்றார்!எனினும், அதற்கும் இப்பொழுது தாங்கள் விளக்கப் போகும் ஆசைகள் என்னும் பொருளுக்கும் என்ன தொடர்பு என்று தெரிய வில்லையே? ஆசிரியர் - கூறுகின்றேன் கேள். இந்திரியங்கள் சேகரிக்கும் விஷய அறிவு நமது மனத்தை வந்து சேர்கிறது. அங்கே அது ஆசைக்கு வித்திடுகின்றது. மனமாகிய நிலத்தில் பல பிறவிகள் தோறும் எண்ணங்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. அவை ஆசைகளைத் தூண்டி விடுகின்றன. மனமானது ஓர் அழுக்குத் துணியைப் போல. பிறவிதோறும் அழுக்குச் சேர்ந்து கொண்டே வருகின்றது. ஆசைகள்
அழுக்கைப் போலவே உண்மையை, தூய்மையை மறைத்து விடுகின்றன. ஆசைகள் வலிமை பொருந்தியவை. இந்திரியங்களின் வயப்பட்டு ஆசைகளை வளர்த்து வருட்ம மனம் அங்கும் இங்கும் அலைந்து சுற்றி வருகின்றது. அதை வெல்லும் ஆற்றலைத்தான் பெறவில்லை என்கின்றார் திருமூலர். "வெல்ல கில்லேன் புலன் ஐந்துடன் தன்னையும்". ஆசைகள் காமத் தீயை வளர்க்கின்றன. காமம் என்பது பொருள்கள் மீது நாம் சதா வைக்கும் பற்றாகும். காமம் நிறைவேறாதபொழுது சினம் பிறந்து மனிதனை ஆட்டி வைக்கின்றது. சினம் அறிவை அழிக்கின்றது. மயக்கத்தைக் கொடுத்து உண்மையை மறைக்கின்றது. அதனால் உயிர்கள் உண்மை நிலையை அறியாது மாயையாகிய இருளில் ஆழ்ந்து துன்பப்பட்டு நிற்கின்றன. காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று குற்றங்களும் உயிரை இருளில் ஆழ்த்திப் பிறப்புக்குக் காரணமாகின்றன. ஆசைகள் வளர வளர உயிரானது பல பிறப்புகள் எடுத்து அவற்றை நிறைவேற்றிக்கெள்ள வேண்டிய கட்டாயத்தில் தம்மை வைத்துக் கொள்கின்றன. மனத்திலிருந்து நிரம்பி வழியும் ஆசைகள் நமது வாக்கிலும் உடலிலும் வெளிப்படுகின்றன. மனத்தில் ஆசைகள், வாக்கில் இன்னாச் சொல், பொய், புறம் கூறல், உடலில் செயல் அழுக்கு ஆகியவை உயிருக்கு வினைக்கடலைச் சேர்த்து இறப்பையும் பிறப்பையும் மாறி மாறித் தருகின்றன. காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று குற்றங்களிலிருந்து விடுபட்டவர் பிறவிக் கடலைத் தாண்டுவர். மற்றவர் துன்பத்தில் மூழ்கி அழிவர்.
"மூன்றுள குற்ற முழுது நலிவன
மான்றிருள் தூங்கி மயங்கிக் கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றினுட் பட்டு முடிகின்ற வாறே". (திருமந்திரம் - 2435)
மாணாக்கன் - ஆசைக்கு அத்தனை வலிமையா?
ஆசிரியர் - ஆம், தேவர்களும் ஆசைகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். ஆசைகள் இந்திரிய அனுபவத்துடன் சேர்ந்து வருவன என்பது மட்டுமன்று. ஆசைகளுக்கு மூல காரணம் அநாதியே உயிர்களின் அறிவாற்றலை விபரீதமாகக் கொண்டு செல்வது பாச வேலை. பாசத்தின் கூறுகளே ஆணவம், கன்மம், மாயை ஆகியவை. ஆசைகள் வழியாக உயிர்களை அறியாமையாகிய மருள் நிலையில் வைக்கின்றன. "பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப் பசுக்களைக் கட்டிய பாசம் மூன்றுண்டு" என்பார் திருமூலர். இந்திரியங்களின் சேட்டைகளை அடக்கிவிட்டால் ஆசைகளை அடக்கி விடலாம் என்று நினைக்கலாம். ஆனால், இந்திரியங்களை அடக்கி வைப்பத அவ்வளவு எளிதன்று. இந்திரியங்களை முழுமையாக அடக்கி ஆளும் தேவர்களைக் காண்பதும் அரிது என்று திருமூலர் கூறுவார். இந்திரிய ஓட்டத்தை முழுமையாக நிறுத்தி விட்டால் அவை அறிவற்ற சடப்பொருள் ஆகிவிடும். அவற்றை வேறு பணிகளில் ஈடுபடுத்த முடியாது. எனவேதான்.
"அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை" (திருமந்திரம் - 2033)
என்கிறார் திருமூலர்.
மாணாக்கன் - தாங்கள் சொல்வதிலிருந்து மனத்தில் தோன்றும் ஆசைகளுக்கு அடிப்படைக் காரணம் அநாதியாக நின்று உயிர்களைக் கட்டுப்படுத்தும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மலங்கள் என்று ஓரளவு உணர்ந்து கொள்கின்றேன். அப்படியென்றால் ஆசைகள் உயிரின் இயற்கைத் தன்மைக்கு ஒப்பவே தோன்றி வருகின்றன என்றும அதில் ஒரு குற்றமும் இல்லை என்றும் ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது?
ஆசிரியர் - இது நல்ல கேள்வி. நன்கு சிந்தித்திருக்கின்றாய். அதற்கு விடையளிக்கும் முன்னர் ஆசையைப் பற்றி நாம் மேலும் புரிந்து கொள்ளவேண்டும். உயிரானது உடலுடன் சம்பந்தப்பட்ட நிலையில் இந்திரியங்களால் தூண்டப்பட்டு உடலின் வேட்கைகளைத் தீர்த்துக் கொள்ள ஆசைகள் நம் மனத்திலே தோன்றுகின்றன. அவற்றை நாம் தீர்த்துக் கொள்ள முயலுகின்றோம். சில ஆசைகள் நிறைவேற்றப்படுகின்றன. அப்பொழுது நமக்கு இன்பம் ஏற்படுகின்றது. பல ஆசைகளை நம்மால் நிறைவேற்ற முடிவதில்லை. துன்பப்படுகிறோம். துன்பங்களாகிய பேரலைகளும், நடுநடுவே சிற்றலைகளைப் போல தோன்றி மறையும் இன்பங்களும் உயிர்களை அங்கும் இங்கும் தள்ளிச் செல்கின்றன. வாழ்க்கை என்னும் ஆழ்கடலில் துணை ஒன்றுமின்றி, பற்றுக் கோடின்றித் தனியாக நின்று நம்மைச் சும்மா விடுமா என்றால் அதுவும் இல்லை. மாதர் மீதுள்ள மயக்கம் ஓரு சூறாவளிக் காற்றைப் போல் நம்மைத் தாக்க, நமது மனம் தடுமாற்றம் அடைந்து கொந்தளிக்கும் கடலிலே தத்தளிக்கின்றது. அது மட்டுமா, பெரிய சுறா மீன்கள் நம்மை நோக்கி வந்தடைகின்றன. காமமாகிய இந்தச் சுறா மீன்கள் நம்மைக் கவ்விச் செல்லப் பார்க்கின்றன. இவற்றால் நமக்குக் கடைசியில் கிடைப்பதெல்லாம் துன்பமேயன்றி வேறில்லை. இவ்வாறு கூறுவது நமது மாணிக்கவாசகப் பெருமான். அந்தப் பெருந்தகை ஆசைச் சுழலின் வலிமையைப் பற்றித் திருச்சதகத்தில் கூறும் திருவாக்கை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
"தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்
தடந்திரையால் ஏற்றுண்டு பற்றொன் றின்றிக்
கனியைநேர் துவர்வாயார் என்னுங் காலாற்
கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்
டினியென்னே யுய்யுமா றென்றென் றெண்ணி (திருவாசகம்)
தாயுமான சுவாமிகள் இன்னும் அழுத்தமாகவே இதுபற்றிப் பாடுகின்றார். ஆசை என்னும் பெரும் காற்றில் சுற்றி அலையும் இலவம் பஞ்சு போல் தனது மனம் திரிவதாகக் கூறுகின்றார்.
"ஆசைஎனும் பெருங்காற்றூடு இலவம்பஞ்சு
எனவும்மனது அலையும் காலம்
மோசம்வரும்;இதனால் கற்றதும்கேட்
டதும்தூர்ந்து, முக்திக்கு ஆன
நேசமும்நல் வாசமும் போய்ப் புலனாய் இல்
கொடுமைபற்றி நிற்பர்;அந்தோ
தேசுபழுத்து அருள்பழுத்த பராபரமே
நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ?".
மாணாக்கன் - சுவாமி, தாங்கள் சொல்வதைக் கேட்கக் கேட்க எனது மனத்தில் புரியாத ஓர் பயம் தோன்றுகின்றது. அழியும் பொருட்கள் மீது ஆசை வைத்து நம்மையும் அழித்துக் கொள்வது தேவைதானா என்கிற எண்ணம் ஏற்படுகின்றதே!ஒன்றும் புரியாத நிலையில் நிற்கின்றேன் தாங்கள் மேலும் அருள்புரிய வேண்டும்.
ஆசிரியர் - உனது நிலையைப் புரிந்து கொண்டேன். உடலை விட்டு உயிர் பிரியும் பொழுது இதுபோன்ற நிலையும் ஏற்படுவதுண்டு. பொறிகளும், புலன்களும் கலங்கி, மயங்கி நிற்கும். செல்லும் நெறி இன்னது என்று தெரியாது. அறிவானது மங்கிக் கிடக்கும். பற்றக்கோடு ஒன்றும் இல்லாத நிலையில் உயிர் எந்த இடத்திற்குச் செல்வது என்று அறியாமல், திசை தெரியாமல் நிற்கும். அதேபோலத்தான் நமது மனமும் உண்மையில் நமது மனம் ஒரு குரங்கைப்போல, குரங்கு மழையைக் கண்டு அஞ்சும். மழை வராத போதே மழையைப் பற்றி நினைத்துக் கொண்டு பயப்படும்.
திருக்கோவில் பெண்கள் நடனமாடி வருகின்றார்கள். மிருதங்கம் ஒலிக்கின்றது. மிருதங்கச் சத்தத்தைக் கேட்டுக் குரங்கு இடியை நினைத்து மழை என்று அஞ்சி மனம் கலங்கி மரத்தின் மீது ஏறி மேகத்தைப் பார்த்து நிற்கின்றது. இந்த இடம் திருவையாற. திருவையாற்றில் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே. குரங்கைப்போல் கலங்கி நிற்கும் உயிரின் முடிவான பற்றுக்கோடு ஆவான். எதற்கும் பயப்படாதே என்று அருள் புரிபவனும் அவனே ஆவான் என்று திருஞானசம்பந்தர் வெகு அழகாகப் பாடுகின்றார்.
"புலன்ஐந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவுஅழிந்திட்டு ஐம்மேல் உந்தி
அலமந்த போதாக, அஞ்சேல்என்று
அருள்செய்வான் அமரும் கோயில்;
வலம்வந்த மடவார்கள் நடம்ஆட
முழவுஅதிர மழை என்று அஞ்சிச்
சிலமந்தி அலமந்து மரம்ஏறி
முகில்பார்க்கும் திருஐ யாறே".
இப்பொழுது c முதலில் கேட்ட கேள்விக்கு விடை கூற விழைகின்றேன்.
உடலுக்கென்று சில தேவைகள் உண்டு. அவற்றைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டியதுதான். ஆனால், ஆசைகளை நாம் துரத்தித் துரத்திச் செல்வதும், நம்மை ஆசைகள் துரத்தித் துரத்தி வருவதும் அறியாமையால் ஏற்படும் நிகழ்ச்சிகளாகும். இந்த அறியாமையை நாம் முதலில் நீக்க வேண்டும். ஆனால், அந்த அறியாமையோ நம்மோடு தொன்றுதொட்டு நிற்கும் ஆணவ மலத்தின் முதல் தன்மையாக இருக்கின்றது. ஆகவே, ஆசைகளின் வலிவைக் குறைக்க வேண்டுமென்றால் ஆணவ மலத்தின் சக்தியைக் குறைக்க வேண்டும். கருணைமிக்க இறைவன் அதற்கான வழியை நமக்குக் காட்டுகின்றான். நமது மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை அவை போகும் போக்கில் உபயோகித்தால் வினைகள் மூளும். அதே மனமும், வாக்கும், காயமும் உலகத்தைப் பற்றாது இறைவனைப் பற்றி நின்றால், வினைகள் நம்மை வந்து அடையா. இதுவே ஒர பெரும் சாதனையாகும். மெய்யுணர்வாளர்கள் தங்களது மனம், வாக்க, காயம் ஆகியவற்றை இறைவனிடம் செலுத்தித் தங்களை வினைகள் பற்றாது பார்த்துக் கொள்வர்.
"மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்
மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
மனவாக்குக் கெட்டனர் வாதனை தன்னால்
தனைமாற்றி யாற்றத் தகுஞானி தானே". (திருமந்திரம் - 2612)
இதைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பேசிக் கொண்டு போகலாம். கானல் நீரைப் போன்று தோன்றி மறையும் உலகை நினைத்து என்ன பயன்? உலகத்தின் மீது பற்றை வளர்த்தால் உலகத்தைப் பற்றிய சிந்தனையும் அவாவுமே அதிகமாகும். அதற்கு மாறாகப் பரம்பொருளை, சிவத்தை மனத்தில் வைத்தால் உலகப் பொருள்கள் மீது உள்ள நாட்டம் குறைந்து விடும். இதை நாம் தீவிரமாகச் சிந்தித்துப் பார்த்தால் நமது சித்தம் தெளிவாகும். நம்மையெல்லாம் ஆளும் இறைவனும் தெளிவான சிந்தைகளில் புகுந்து சித்தத்தைச் சிவமாக்குவான்.
"பெருக்கப் பிதற்றிலேன் பேய்த்தேர் நினைந்தென்
விரித்த பொருட்கெல்லாம் வித்தாவது உள்ளம்
பெருக்கில் பெருக்கும் சுருக்கில் சுருக்கும்
அருத்தமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே". (திருமந்திரம் - 2036)
இறைவன் ஒருவனே நமக்கு உள்ள ஒரு பற்றுக்கோடு என்கிற சிந்தனையை வளர்க்க வேண்டும். மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை இறைவனோடு பொருத்தி இயக்குகின்ற வகையில் நம்முடைய தியானத்தைச் செலுத்த வேண்டும். பிற பொருள்கள் மீது உள்ள பற்றினை மெதுவாக ஒடுக்க வேண்டும். நம்முள்ளேயே இருக்கும் இறைவன் மீது நம்முடைய நாட்டத்தைத் திருப்ப வேண்டும். அப்பொழுது சிந்தை தெளிந்து இறைவனை நாம் மனக்கோவிலிலேயே நிறுத்தலாம்.
"நடக்கின்ற நந்தியை நாடோறு முன்னில்
படர்க்கின்ற சிந்தையைப் பைய வொடுக்கிக்
குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்
வடக்கொடு தெற்கு மனக்கோயி லாமே".
சிவபெருமான் உலகப் பற்றுகளை விட்ட ஞானிகள் யாவரும் பற்றி நின்ற பரம்பொருள் ஆவான். ஞானிகளுக்கு அவன் மீதுதான் எல்லா நாட்டமும் செல்லும். மெய்ஞ்ஞானத்தைப் பெற்றவர்கள் சிவபெருமானை விரும்பி நிற்பர். எல்லாக் கல்விகளின் முடிவுகளை உணர்ந்தவர்கள் சிவசோதியைத் தன்னுள் பெற்று நிற்பர். அந்த நிலையில் பேச்சற்று நிற்பர். ஆகவே, நாம் விரும்ப வேண்டியது இறைவனுடைய திருவடிகள். அறுக்க வேண்டியது நமக்கு மயக்கத்தைத் தரும் ஐம்புல பாசங்கள். தொடர வேண்டியது மனக்கலக்கத்தைப் போக்கக்கூடிய சிவபரம்பொருள். அவ்வாறு செய்தால் நமது சிந்தை சிவத்துடன் கலந்து விடும்.
"மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத்
துயக்கறுத் தானைத் தொடர்மின் தொடர்ந்தால்
தியக்கஞ்செய் யாதே சிவனெம் பெருமான்
உயப்போ எனமனம் ஒன்றுவித் தானே". (திருமந்திரம் - 2608)
"பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்
கற்றற் றவர்கற்றுக் கருதிய கண்ணுதல்
சுற்றற் றவர்சுற்றி நின்றஎன் சோதியைப்
பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரன்றே". (திருமந்திரம் - 2865)
மாணாக்கன் - சுவாமி, தெய்வீகப் பெரியார்களுடைய மேற்கோள்களைக் காட்டித் தெளிவடையச் செய்தீர்கள். இந்தப் புலன்களை மடைமாற்றம் செய்ய மேலும் என்ள செய்ய வேண்டும்?
ஆசிரியர் - உலகப் பொருள்கள் மீது உள்ள ஆசையைக் குறைத்துக் கொள்ள வேண்டும். பாசத்தின் உண்மைத் தன்மையை அறிந்து கொண்ட பின்னர் பாசத்தை வளர்க்கும் பொருள்களுக்கு மதிப்புக் கொடுக்கக்கூடாது. இறைவனுக்கு உள்ளும் புறமும் சதா பூசை செய்ய வேண்டும். ஐந்தெழுத்தாகிய நமச்சிவாயத்தை ஒப்பற்ற காதலுடன் மனத்தில் என்றும் நினைத்து வரவேண்டும். ஆன்மிக உணர்வினை வளர்த்து இம்மைக்கும் மறுமைக்கும் நலன்களை அளித்து, வீடு பேற்றினை அளிக்கவல்ல திருமறைகளை என்றுமே ஓதி வரவேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் உன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ள உனக்கு ஒரு தகுதியும் இல்லை. இதை நமக்குத் தெளிவாக எடுத்துரைப்பது குருஞானசம்பந்தர் என்கிற அருளாளர்.
"ஆசையறாய் பாசம்விடாய் ஆனசிவ பூசைபண்ணாய்
நேசமுடன் ஐந்தெழுத்தை c நினையாய் - Y Y
சிவமே தவிராய் திருமுறைகள் ஓதாய்
மனமே உனக்கென்ன் வாய்".
மாணாக்கன் - நன்கு உணர்த்தினீர்கள் சுவாமி. "ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்" என்கிறாரே திருமூலர். அதன் கருத்து என்ன?
ஆசிரியர் - மெய்யுணர்வாளர்களுடைய சாதனையின் சிகரமாக ஏற்படும் மனநிலையைத் திருமூலர் பிரான் இவ்வாறு விளக்குகின்றார். அவர்கள் வேட்கையை விட்டவர்கள். அதன் காரணமாக இறைவன் அவர்கள் உள்ளிலிருந்து கொண்டே அவர்களை இயக்கி முக்தியைத் தந்தருளுகின்றான். "வேட்கை விட்டார் நெஞ்சில் முடத்துளே நின்று முத்தி தந்தானே" (திருமந்திரம் - 2614) . அவர்கள் வேதங்களின் முடிவை உணர்ந்தவர்கள். "வேதாந்தம் ஆவது வேட்கை ஒழிந்திடம்". வேட்கை விட்டவரே உண்மையான வேதாந்திகள் (திருமந்திரம் - 229) . ஞானிகள் ஈசனை வேண்டுவது அவர்களுடைய உயர்வுக்காக அன்று. உலகத்தாரின் நன்மைக்கே. அவர்கள் வீடுபேற்றைக் கூட வேண்டுவது இல்லை. அன்பு செய்வதையே தங்கள் நெறியாகக் கருதுகின்றார்கள். ஏனெனில், அவர்கள் அன்பினில் சிவத்தைக் காண்கின்றார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனுடைய திருவருள் இன்றி ஒரு அணுவும் அசைவதில்லை என்று உணர்ந்தவர்கள். தமக்கென்று ஒரு விருப்பம் இருந்தால் அதுவும் இறைவனுடைய விருப்பமே என்கின்ற உணர்வில் நிற்பவர்கள்.
"வேண்டும் பொருள் ஒன்று உண்டென்னின்
அதுவும் உன்றன் விருப்பன்றே"
என்றார் மணிவாசகப் பெருமான். நம்மால் இவ்வாறு சொல்லிக் கொள்ள முடியுமா?
ஆசைகளை அறுப்பது பற்றி பாமர மக்களுக்கு ஞானிகள் தங்கள் உணர்வினைத் தெரிவிக்கலாம். ஆனால், ஞானிகளே ஆசைப்படக் கூடாது அல்லவா? அவர்கள் உலகப் பொருட்கள் மீது ஆசை வைக்க மாட்டார்கள். ஆனால், இறைவன் மீது அவர்கள் தங்கள் பக்தியினை வளர்க்கின்றார்களே!அதுவும் கூடாது என்பார் திருமூலர் பிரான். தான் சிவத்தை விழுங்குவது ஒருவிதமான அனுபவம். ஆனால், சிவம் தன்னை விழுங்குவது, ஆன்மிகத்தின் உச்சக்கட்டம். இதை அடைய ஞானிகள் முயலுகிறார்கள். அவர்களுடைய ஆன்மிக முயற்சியில் தான் என்னும் முனைப்பு ஒருபோதும் தலைதூக்காமலிருக்க இறைவன் மீதுள்ள பற்றையும் குறைத்துக் கொள்ள வேண்டும். "புத்தரை வழியில் கண்டால் அவரைக் கொலை செய்து விடு" என்பது புத்த சமயப் பழமொழி. அந்த அளவுக்கு நமது அகங்காரத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மாணாக்கன் - சுவாமி, எனக்குத் தெரியாதவைகளைத் தெரிவித்துத் தெளிவடையச்
செய்தீர்கள். ஆசைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பதல்லவோ உண்மை!