"நமன்வரின்"
ஒரு பெரியவர் சிறந்த சிவபக்தர் என்று ஊர்ப் பொதுமக்களால் போற்றப்பட்டார். தினந்தோறும் காலையில் மாலையிலும் அவர் ஊரிலிருந்த சிவன் கோயிலுக்குச் சென்று சிவலிங்கத்தின் எதிரே நின்று கொண்டு இறைவனைப் போற்றிப் பாடுவார். கண்ணீர் சொரிவார். தியானத்தில் நிற்பார். பல மணி நேரம் மெய் மறந்து இருப்பார். "இறைவா!என்னை ஏன் இந்தப் பூமியில் விட்டு வைத்திருக்கின்றாய்? என்னை உடனே அழைத்துக் கொண்டு போ. உனது திருவடியைச் சேர நான் காத்துக் கொண்டிருக்கின்றேன். என்னைச் சோதிக்காதே!" என்றெல்லாம் தனக்குத்தானே பேசிக்கொள்வார். ஒருநாள் அந்தக் கோயில் அர்ச்சகர் அந்தச் சிவபக்தருடைய உண்மை அன்பினைச் சோதிக்க விரும்பினார். சிவலிங்கத்தின் பின்னால் ஒளிந்து கொண்டார். வழக்கம்போல சிவபக்தர் கோயிலுக்குள் வந்து இறைவனைத் துதித்துப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார். "அப்பனே!என்னை எப்பொழுது உனது திருவடிகளில் இணைத்துக் கொள்ளப் போகிறாய்?" என்று கேட்டார்."பக்தா, உன்னுடைய அன்பை மெச்சினோம். உன்னை அழைத்துக் கொண்டு போகத் தயாராக இருக்கின்றோம். எமது தூதன் சில நிமிடங்களில் உன்னை வந்து அடைவான். c அவனுடன் புறப்பட்டு வந்து விடுவாயாக" என்று ஒரு குரல் சிவலிங்கத்தின் பின்புறமிருந்து எழுந்தது. நமது பக்தரைப் பார்க்க வேண்டுமே!அவர் உடல் நடுங்கிற்று. அவரது உள்ளத்தைப் பெருத்த அச்சம் பற்றிக் கொண்டது. தவித்தார் அந்தச் சிவபக்தர். ஓடி ஒளிந்து கொள்ள இடம் தேடினார். 'இறைவா!இன்னும் சிறிது காலமாவது விட்டு வையப்பா!' என்று வேண்டத் தொடங்கினார். வெறும் அர்ச்சகருடைய குரல் அவருடைய மனநிலையையே மாற்றி விட்டது. அவர் உருவத்தில்தான் சிவபக்தர். உள்ளத்தில் அன்று. உள்ளம் உலகத்தில் ஊன்றி நின்றது. உலகப்பற்று இருக்கும்வரை இறப்பைப் பற்றிய அச்சம் தொடரும். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆயினும் நாம் பற்று அற்றவர்கள் போல் நடிக்கின்றோம். இந்தப் பொய்யுலகில் வாழ்க்கை என்னும் மேடையில் சதா நடந்து கொண்டிருக்கும் நாடகத்தில் இறைவனுடைய அடியார்கள்போல நடிப்பது மிகவும் வெறுக்கத்தக்கது. தானே இதைச் செய்து வருவதாகத் தன்னையே நொந்து கொள்கின்றார் மாணிக்கவாசகப் பெருமான்.
"நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து, நான் நடுவே வீடு
அகந்தே புகுந்திடுவான், மிகப்பெரிதும் விரைகின்றேன்;"
(திருச்சதகம் - அறிவுறுத்தல்)
அச்சம் பல வகை. சிலர் விலங்குகளைக் கண்டு பயப்படுகின்றார்கள். வேறு சிலர் மனிதர்களைக் கண்டு பயப்படுகின்றார்கள். மற்றும் சிலர் தங்களைப் பற்றியே பயந்து கொள்கின்றார்கள். தங்களுக்கு, உடலுக்கு, பதவி, பட்டம், அந்தஸ்து, போன்றவற்றிற்கு முடிவு வந்து விடுமே என்கிற பயம் அரித்துத் தின்கிறது.
எதையெடுத்தாலும் பயந்து, ஒவ்வொரு விநாடியும் சாகும் மனிதர்களையும் நாம் பார்க்கின்றோம். உயிர் போனால் எல்லாம் போய்விடும்.
"குடமுடைந்தால் அவை ஓடு என்று வைப்பர்;
உடல் உடைந்தால் இறைப்போதும் வையாரே!"
என்பார் திருமூலர். எனவே, இறப்பைப் பற்றிய பெரும் அச்சம் மனிதனைச் சதா வாட்டுகிறது.
நமது வாழ்க்கை, உடல், உடலைச் சார்ந்த கருவிகள், உட்கருவிகள் போன்றவற்றை மையமாக வைத்து இயங்கி வருகின்றது. நமது உடலைப் பற்றிய சிந்தனைகளே நமது மனதை நிரப்பி, நமது எண்ணங்களையும் கருத்துக்களையும் பொறிகள் வழியே கொண்டு செல்கின்றன. நாம் பெறம் அறிவும் அனுபவமும் இவற்றின் அடிப்படையிலேயே அமைகின்றன. பொறிகளுக்கும் புலன்களுக்கும் அப்பாலுள்ளவை நமக்குத் தெரிவதில்லை. மனிதர்கள், தேவர்கள், வானவர்கள் எல்லாருமே இந்தக் குறைப்பாட்டிற்கு ஆளானவர்கள். மரணமற்ற வாழ்வு வாழ வேண்டுமென்று தேவர்கள் விரும்பினார்கள். ஆனால், அவர்கள் முன்தோன்றியது அமிர்தமன்று. ஆலகால விஷம். தேவர்கள் பயந்து மூலைக்கொருவராக ஓடினார்கள். இறைவன் அந்த விஷத்தைக் கண்டத்தில் அடக்கி அவர்களுடைய பயத்தைப் போக்கினான். உடல் இன்பமே பெரிதென்று நினைத்து ஆசைகளை வளர்த்ததனால் வந்த விளைவு இது.
கிழக்கே எழுந்த சூரியன் மேற்கே மறைகின்றது. கன்று சில மாதங்களில் பெரிதாகி, எருதாகி, மூத்து பின்னர் விழக்கண்டும் நாம் நமது உண்மை நிலையை அறிந்து கொள்வதில்லை. நம்முடைய தாய் தந்தையரை இயற்கையாகவே வயோதிகத்தில் இழக்கின்றோம். சிறிது காலம் மிக வருந்துவோம். பின்னர் அந்த நினைவுகள் போய் நாம் மீண்டும் வாழ்க்கைச் சூழலில் புகும் நாளை எதிர்பார்த்து நிற்கின்றோம். பிறருக்கு எது வந்தாலும் அது நம்மைப்பாதிப்பதில்லை. ஆனால், நமக்கு மிகச் சிறிய துன்பம் வந்தாலும் நமது கண்களுக்கு அது ஒரு பெரிய மலை போல் தென்படுகிறது. அதே நேரத்தில் உடலின் அடிப்படையில் எத்தனை இன்பங்கள் பெற்றாலும் அவை நமக்குப் போதவில்லை. ஆசைத் தீயை மேலும் மேலும் வளர்த்து வருகின்றோம். செல்வத்தை நாடி வாழ்க்கையை மையமாக வைத்து நாம் பெற்ற ஆற்றல் அனைத்தையும் இம்மைச் சுகங்களுக்கே செலவழித்து வருகின்றோம். ஆகவே, நாம் இறக்க விரும்பவில்லை. இறக்க அச்சப்படுகின்றோம். ஆனால், கூற்றுவனார் தனது பணியைச் செய்யத்தான் போகின்றார். சூலத்தைக் கையில் வைத்துக் கொண்டு காலத்தை எதிர்பார்த்து நிற்கின்றார். ஞானசம்பந்தப் பெருமான் மனத்தைப் பார்த்துக் கேட்கின்றார் "ஏழை நெஞ்சே, எந்த நாளில் வாழ்வதற்காக இவ்வாறு மனத்தை வைத்துக் கொண்டிருக்கின்றாய்"
..... ..... ..... ..... .....
..... ..... ..... ..... .....
கொந்தவேல் கொண்டு ஒரு கூற்றத்தார் பார்க்கின்றார்;
கொண்டு போவார்;
எந்த நாள் வாழ்வதற் கேமனம் வைத்தியால்?
ஏழை நெஞ்சே!
..... ..... ..... ..... .....
நமக்கு வாழ்நாழ் போவதும் தெரிவதில்லை. சாகும் நாள் வருவதும் தெரிவதில்லை. நாம் செய்யும் வினைகள், அவற்றால் வரக்கூடிய விளைவுகள், தொடர்ந்து வரும் பாசங்கள், நம்மைப் பிடித்து ஆட்டும் பந்தங்கள் இவற்றைப் பற்றியும் நினைப்பதில்லை.
"c நாளும் நன்னெஞ்சே,
நினைகண்டாய்;யார்அறிவார்
சாநாளும் வாழ்நாளும்?"
ஆனால், மரணம் வருவது உறுதி. ஒரு நாள் புலன் ஐந்தும் கலங்குகின்றன. பொறிகள் நிலை கெட்டு விடுகின்றன. அறிவு அழிகின்றது. நெறி மயங்குகின்றது. கபம் தொண்டையை அடைக்கின்றது. நமது மனம் நம் வசமின்றிச் சுழலுகின்றது. உயிர் போகும் நேரம் நெருங்கி விடுகின்றதே! அப்போதும் நம்முடைய மனத்திலே இருக்கும் எண்ணமெல்லாம் நம்மைப் பற்றியே. அஞ்சாதே என்று அருள் செய்யும் இறைவனைப் பற்றியா நாம் நினைக்கப் போகின்றோம்?
"புலன்ஐந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவுஅழிந்திட்டு ஐம்மேல் உந்தி
அலமந்த போதாக, அஞ்சேல்என்று
அருள்செய்வான் அமரும் கோயில்
தன்னிலை கெட்டு, கதிகலங்கி மயங்கிக் கிடக்கும்பொழுது நம்மைப் பாதுகாப்புச் செய்யும் அரண் ஒன்றேதான். அது இறைவனைப் பற்றிய நினைவாகும். அவனுடைய அருளாலேயே இறைவனை நினைக்க வேண்டும் என்கின்ற எண்ணம் மனத்திலே உதிக்கின்றது. அது ஒரு நீண்டகாலப் பயிற்சி. மரணம் நெருங்கும்போது மட்டும் இறைவனை நினைக்க வேண்டும் என்று ஓர் ஆவல் எழுந்தாலும் அது நிலைக்காது. ஆயிரத்தில் ஒருவர் இறைவனை நினைத்துக் கொண்டே உடலை விட்டு நீங்குவார். அவர் அருள் பெற்றவர். இறைவனுடைய அருள் அவருக்கு முழுமையாக இருப்பதால் அவர் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. தனது மனத்தைப் பக்குவப்படுத்தி மரணம் வரும்காலத்தை எதிர்நோக்கி, தனது பந்த பாசங்களையெல்லாம் களைந்து, இறைவன் நடமாடும் திருவீதியில் அவர்களும் நடக்கத் தொடங்கிய பிறகு அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. இது ஞானசம்பந்தப் பெருமானுடைய திருவாக்காகும். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மலங்கள் உயிருக்கு வினைக்கடலைச் சேர்க்கின்றன. இறப்புக்கும் பிறப்புக்கும் வித்திடுகின்றன. எல்லாவிதச்
செல்வங்களையும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் தலைப்பட்டு நிற்கின்றன. ஆனால், செல்வம் நிலையற்றது. செல்வத்தை நீக்கி இல்லத்தை அடைய வேண்டும் என்கிற உணர்வு இறைவன் அருளால் உள்ளத்திலே எழத்தொடங்கிய போது, செல்வத்தின் மீது உள்ள பற்றினால் நமது மனத்திலே எழும்பும் பய உணர்வும் நீங்குகின்றது. நமது நோக்கத்தைப் பற்றி நம்முள் தெளிவு ஏற்படும்பொழுது புலன்களின் தன்மை மாறுகிறது. புறப்பொருள்களின் ஆதிக்கம் குறைகின்றது. அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. எமன் வந்தாலும் புறப்படத் தயாராக இருக்கின்றோம். திருமந்திரத்தின் தெளிவு மனத்தில் அமைதியைத் தோற்றுவிக்கின்றது.
"தேற்றித் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே. (திருமந்திரம் - 172)
இறவாத இன்ப அன்பினால் இந்த அமைதியைப் பெற்றவர் காரைக்கால் அம்மையார். இறைவனிடம் பிறவாமை வேண்டுகின்றார். அதே நேரத்தில் இறப்பும் பிறப்பும் தான் செய்த வினைப்பயனையட்டி உள்ளது என்பதை அறிந்து கொண்டவர். ஆகவே, ஒருவேளை மீண்டும் பிறக்க வேண்டியிருந்தால் "இறைவா உன்னை நான் என்றும் மறக்காமல் இருக்க வேண்டும்" என்று வேண்டுகிறார். காரைக்கால் அம்மையார் புத்திசாலி. அவர் உள்ளத்திலே தெளிவான குறிக்கோளை உடையவர். இறைவனிடம் என்ன கேட்க வேண்டுமென்று தெளிவாகத் தெரியும். மேலும் கேட்கின்றார்.
"இறைவா!நீ ஆடும்பொழுதெல்லாம் நான் உன் திருவடிக் கீழ் மகிழ்ந்து பாடி இருக்க வேண்டும்" என்று வேண்டுகின்றார். ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன் உயிர்கள் உய்வடைவதற்காக ஆதியும் அந்தமும் இல்லாமல் திருநடனம் புரிகின்றான். அம்மையாரும் ஆதியும் அந்தமும் இல்லாமல் அவன் திருவடிகளின் கீழ் அமர்ந்து அந்த இன்பத்தைப் பருகிக் கொண்டிருக்கின்றார். யாருக்காக அவர் அச்சப்பட வேண்டும்?
அடியார்களுடைய இயல்பு இதுவே. இறைவனுடைய ஆணைவழியே இயங்கி வரும் ஐம்பெரும் பூதங்களும் ஒருவேளை தன் நிலையில் கலங்கினாலும் சிவபெருமானுடைய மலர்த் தாளினைத் தம் மனத்திலிருந்து ஒருபோதும் மறத்தல் இல்லாதவர்கள். இறைவன் மீது உள்ள ஒப்பற்ற காதலால் அந்த நிலையை அவர்கள் அடைந்தவர்கள். குற்றமற்ற குணமலை போன்றவர்கள். சேக்கிழார் பெருமான் திருக்கூட்டத்தினரின் சிறப்பை எடுத்துரைக்கும் சொற்கள் அச்சமின்மைக்கு ஒரு விளக்கமாகும்.
"பூத மைந்து நிலையிற் கலங்கினும்
மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்
ஓது காத லுறைப்பி னெறிநின்றார்
கோதி லாத குணப்பெருங் குன்றனார்" (பெரிய புராணம் - 142)
இறைவனுடைய பேரருள் வெள்ளத்தில் ஊறித் திளைத்தார் திருநாவுக்கரசர். இறைவன் அவருக்குச் சூலை நோயைக் கொடுத்து ஆட்கொண்டான். நாவுக்கரசரும் இறைவனது பெரும் கருணைக்கடலுள் மூழ்கித் திளைத்தார். ஆனாலும், பல்லவ அரசனுடைய உதவியுடன் வஞ்சகர் நாவுக்கரசரை வருத்த வேண்டி அவர் மீது பல கொடிய செயல்களைப் புரிந்தவர். அவரைப் பல்வேறு சோதனைகளுக்கு ஆளாக்கினர். நாவுக்கரசர் தளர்ந்தாரில்லை. சிவபிரானுக்கு ஆளாவர். வேறொருவருக்கும் ஆளாகமாட்டார். இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு அரும்பொருளை உடலிடம் கொண்டபின் வேறொருவருக்கும் பணிசெய்து கிடக்க வேண்டியதில்லை. அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. நமனைக் காலால் உதைத்த இறைவனை அடைந்த பின்னர் நமனை அஞ்ச வேண்டியது இல்லை, ஒருவருக்கும் பணிவதில்லை. நாவுக்கரசரின் திருத்தாண்டகத்தைப் படித்தாலே இயமபயம் பறந்தோடிவிடும்.
"நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்;
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்;
ஏமாப்போம் பிணியறிவோம் பணிவோ மல்லோம்;
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை;
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்று மீளா ஆளாய்க்,
கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே"
இறைவனுடைய அருளால் இவ்வுலகில் பிறவி எடுக்கின்றோம். இது நம்முடைய வினைக்கேற்ப நடக்கின்றது. "வினைக்கு ஈடாய் மெய்கண்டு" என்பார் திருமூலர். ஆனால், நாம் இவ்வுலகில் பிறந்ததன் நோக்கம் இறைவனுடைய பேரருளைப் பெற்று அவனுடைய திருவடிகளைச் சேருவதேயாகும். அவரவர் வினைக்கேற்ப இந்த முயற்சி ஒரு பிறவியில் முடியலாம் அல்லது பல பிறவிகள் தேவைப்படலாம். ஆனால், நம்முடைய குறிக்கோள் தெளிவாக இருக்க வேண்டும். "வில்லி இலக்கு எய்த விற்குறிபோல்" என்கிறது திருமந்திரம். நமது நோக்கம் நிறைவேற இந்தப் பிறவியைப் பயன்படுத்த வேண்டும். இது முள்ளை முள்ளாலே எடுப்பது போலாகும். ஆனால் நம்முடைய வினைகளின் காரணமாக அவ்வாறு செய்யாமல் மீண்டும் மீண்டும் பிறவிகள் தொடர்ந்து வரும் முயற்சிகளிலே ஈடுபட்டிருக்கின்றோம். ஆனால், அடியார்கள் இறைவனுடைய திருவடிகளைச் சதா மனத்தால் நினைத்தும், வாயினால் புகழ்ந்தும், உடம்பினால் வணங்கியும், தங்கள் உடல், பொருள், ஆவி மூன்றையும் இறைவனுக்கு அர்ப்பணித்தும் அவனுடைய திருத்தாள் சேர்ந்தவர்கள். காரைக்கால் அம்மையார் அத்தகையவர். "இறைவனுடைய திருத்தாளினை அடைந்தோம். நமக்கு இனி ஒரு துன்பமும் இல்லை. கர்மங்களுக்கு வலிமையைச் சேர்க்கும் பிறவிக் கடலை நிந்தி விட்டோம்" என்று தன் நெஞ்சிடம் சொல்லிக் கொள்கின்றார்.
"இனியோநாம் உய்ந்தோம் இறைவன்தாள் சேர்ந்தோம்;
இனிஓர் இடர்இலோம் நெஞ்சே!- இனிஓர்
வினைக்கு உடலை ஆக்குவிக்கும் மீளாக்
கனைக்கடலை நீந்தினோம் காண்" (அற்புதத் திருவந்தாதி)
திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகருக்கு இறைவன் ஞானகுரு வடிவில் வந்து சிவஞான உபதேசம் செய்கின்றான். சிவதரிசனம் பெற்றார் மணிவாசகப் பெருமான். இறைவனுடைய பேரருள் அவருக்குக் கிட்டியது. சித்தமலம் நீங்கிச் சிவமாம் தன்மை பெற்றார். பேரறிவான சோதியைத் தமது சிந்தையிலே உணர்ந்தார். தெய்வம் என்பதோர் சித்தம் அவருடைய உள்ளம் புகுந்தது. இறைவன் அருக்காகப் பல அற்புதங்களை நிகழ்த்தினான். எல்லாவற்றிற்கும் மேலாக ஊனினை உருக்கி உள்ளளி பெருக்கும் திருப்பாடல்களைப்பாடும் ஓர் அருமையான ஆற்றலைச் சிவபெருமான் அவருக்கு அருளித் தந்தான். இத்தகைய பேறு பெற்ற மணிவாசகப் பெருமான் எதற்கு அஞ்ச வேண்டும்? இறப்புக்கா பிறப்புக்கா? வேட்கை இருந்தால்தானே இறப்பும் பிறப்பும்? மணிவாசகப் பெருமானா இம்மையிலும் மறுமையிலும், வானிலும் மண்ணிலும் கிடைக்கும் நிலையற்ற இன்பங்கள் மீது தனது நாட்டத்தைச் செலுத்த போகின்றார்.
"தான் வரைவு அற்றபின் யாரை வரைவது?
தான் அவன் ஆனபின் யாரை நினைவது
காமனை வென்ற கண்கள் யாரை உகப்பது?" (திருமந்திரம்)
ஆனாலும் அத்தகைய பெரியார் வேண்டுவது ஒன்றே. சிவபெருமானின் அருளில் மூழ்கித் திளைத்தவர் மீண்டும் மீண்டும் அந்த அருள் என்று வரும் என்று வருந்துவார்.
"யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு அதனுக்கு என் கடவேன்?
வானேயும் பெறில் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன்
தேன் ஏயும் மலர்க் கொன்றைச் சிவனே!எம்பெருமான்!எம்
மானே!'உன் அருள்பெறும்நாள் என்று? என்றே, வருந்துவேனே."
(திருவாசகம் - திருச்சதகம்)
திருமூலர் ஓர் தவராஜ யோகியார். மூவாயிரம் ஆண்டுகள் யோகத்தில் அமர்ந்து மூவாயிரம் திருமந்திரங்களை உலகிற்கு அருளிச் செய்தார் என்பது தெய்வச் சேக்கிழார் நமக்குத் தந்த செய்தியாகும். பிறப்பிற்கும் இறப்பிற்கும் காரணமானவற்றை வென்றவர். எனவே, "இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி;இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே" என்று அருளிச் செய்கிறார். பரம்பொருளாகிய சிவபெருமானைக் கண்டார். பேரருள் பெற்றார். அதனால்
பிறப்பு நீங்கப் பெற்றார். பாசங்கள் அவரை அகன்று நின்றன. சீவ கரணங்கள் சிவகரணங்களாகிக் கடவுளுடன் ஒன்றி நின்றார். "மீண்டும் இப்பிறப்பை வேண்டேன்" என்றும் சொல்லுவார்.
"ஒழிந்தேன் பிறவு யுறவென்னும் பாசங்
கழிந்தேன் கடவுளும் நானுமொன் றானேன்
அழிந்தாங் கினிவரு மாக்கமும் வேண்டேன்
செழுஞ்சார் புடைய சிவனைக்கண் டேனே" (திருமந்திரம் - 2958)
தவத்தால், யோகத்தால் என்றும் மாறாத அன்பினால் கிடைக்கப்பெறும் பேரறிவு அனுபவம் ஞானியர்களின் உள்ளத்திற்கு தளராத உறுதியைத் தருகின்றது. அந்த உறுதி பிறவிக்கடலைத் தாண்டத் தோணி போன்று உதவுகிறது. பழைய வினைகள் அகலுகின்றன. வெளியில் வெளி போய் அடங்குகின்றது. அச்சம் நீங்குகிறது. ஞான வாளுக்கு நிகராக வேறு எந்த ஆயுதமும் இல்லையே!
"நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நானுடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன்
தவம்வருஞ் சிந்தைக்குத் தானெதி ராரே". (திருமந்திரம் - 2968)