"அறிவுதயம்"
என்னுடைய சொந்த ஊர் ஒரு சிறு கிராமம். அந்தக் கிராமத்தின் நடுவில் ஓர் அழகிய குளம் இருந்தது. அந்தக் குளத்தில் எப்பொழுதும் நீர் நிரம்பி நிற்கும். தாமரை மலர்கள் பூக்கும் தடாகம் அது. அக்குளத்தில் மீன்களும் தவளைகளும் சேர்ந்து வாழ்ந்தன. குளத்தின் கரையில் ஒரு பெரிய அரச மரம் இருந்தது. அந்த அரச மரத்தின் நிழலில் பல ஆண்டுகளாக ஒரு பிள்ளையார் அமர்ந்திருந்தார். குளத்தில் குளிக்க வந்தவர்கள் எல்லோரும் குளித்து விட்டு அந்தப் பிள்ளையாரைத் தரிசித்து வலம் வந்து வணங்கிப் போவது வழக்கம். குளத்திற்குச் சற்று தூரத்தில் காவிரி ஆறு பரந்த மணற்பரப்பில் ஓடியது.
அந்தக் குளத்தில் பல நாட்களாக ஓர் தவளை தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தது. குளத்திலுள்ள எல்லா உயிரினங்களையும் நன்கு தெரிந்திருந்தது. குளத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் சென்று பார்த்து, அந்தக் குளத்தைப் பற்றிய முழுமையான அறிவைப் பெற்றிருந்தது. வயதான தவளையாதலால் அதற்கு அந்தக் குளத்தில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளும் நன்கு தெரியும். சொல்லப்போனால் குளத்தைப் பற்றிய எல்லா அறிவும் இந்தத் தவளை பெற்றதாக இருந்தது. தானுண்டு, தனது குடும்பம் உண்டு. அந்தக் குளமும் உண்டு என்கிற உணர்வின் அடிப்படையில் அந்தத் தவளை வாழ்ந்து வந்தது. அந்தத் தவளையிடம் போய் "தவளையே, இந்த மாயையான வாழ்க்கையை இன்னும் எவ்வளவு நாட்கள் வாழ்ந்து காட்டப்போகின்றாய்?" என்று கேட்டால் அந்தத் தவளைக்குப் புரியமா?
குளக்கரையில் இருந்த அரச மரத்தில் ஒரு காக்கை ஒரு நல்ல கூட்டைக்கட்டி வைத்திருந்தது. அந்தக் கூட்டில் காக்கை முட்டையிட்டு, குஞ்சுகளைப் பொரித்து, குஞ்சுகளுக்குப் பறக்கும் சக்தி வரும் வரை அவற்றிற்கு உணவைச் சேகரித்துக் கொண்டு போய் கொடுக்கும். ஒரு நாள் அந்தக் கூட்டில் காக்கையின் குஞ்சுகள் இல்லாத போது ஒரு குயில் தன்னுடைய முட்டையை அங்கே விட்டுச் சென்றது. காக்கை திரும்பி வந்து அந்த முட்டையைப் பார்த்தது. ஆனால், அது குயிலினுடைய முட்டை என்று அடையாளம் கண்டுகொள்ள காக்கைக்குப் போதிய அறிவு இல்லை. காக்கையும் அந்தக் குயிலினுடைய முட்டையை அடைகாத்துக் குஞ்சு பொரித்து, குயிற் குஞ்சு முட்டையிலிருந்து வெளிவந்த பிறகு கூடக் காக்கைக்கு வேற்றுமையை அறிந்து கொள்ள இயலவில்லை. தன்னுடைய குஞ்சைப்போல குயிற்குஞ்சையும் வளர்த்தது. ஏன் என்று கேட்கவில்லை. தனதில்லை என்று உணர்ந்து கொள்ளவில்லை. மயக்கத்தால் காக்கை அக்குயிற்குஞ்சை வளர்த்தது.
"குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக்கூட் டிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லைப் போக்கில்லை யேனென்ப தில்லை
மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே" (திருமந்திரம் - 488)
குளக்கரையில் வீற்றிருந்த பிள்ளையார் ஒரு நாள் அந்தக் குளத்தைப் பற்றி எல்லாம் அறிந்திருந்த தவளையிடம் பேச்சுக் கொடுத்தார். "உனக்கு இந்தக் குளத்தைப் பற்றி எல்லாம் தெரியும் அல்லவா?"
"தெரியும் சுவாமி"
"இந்த குளத்தைவிடப் பதின்மடங்கு நீர்ப்பரப்பைக் கொண்ட ஒன்று இருக்கின்றது. அது உனக்குத் தெரியுமா?" பிள்ளையார் வினாவினார்.
"அது எப்படி இருக்க முடியும்? சுவாமி. நான் இருக்கும் குளத்தை விடப் பெரியதாக ஒன்று இருக்கும் என்று நான் நம்பவில்லை" என்று தவளை பதில் கூறியது.
"அப்படி ஒன்று இருக்கின்றது என்பதை நான் காண்பிக்கின்றேன், பார்" என்று பிள்ளையார் சொல்லி அந்தத் தவளையைத் தன்னுடைய ஆற்றலினால் குளத்தில் இருந்து தூக்கி விண்வழியாகக் காவிரி ஆற்றைப் பார்க்கச் செய்தார். கடலைப் பார்க்கச் செய்தார். திருப்பித் தவளையைக் கொண்டு வந்து குளத்திலேயே விட்டு விட்டார்.
"என்ன இப்போதாவது நம்புகிறாயா?" என்று பிள்ளையார் கேட்டார். தவளைக்கு நா எழவில்லை. பயத்திலும், வியப்பிலும், ஆச்சரியத்திலும் தவளை மூழ்கி இருந்தது. குளம் குளம்தான். கடல் கடல்தான் என்கிற உணர்வில் தவளையின் எண்ணம் அழுந்தியிருந்தது. கிணற்றைப் பற்றிய அறிவு சிற்றறிவாகும். கடலைப் பற்றிய அறிவு பேரறிவாகும். சிற்றறிவிலே ஈடுபட்டுத்தன்னைப் பற்றிப் பெரிதாக நினைத்துக் கொண்டிருந்த தவளை பேரறிவை எதிர்நோக்கியவுடன் அடித்துக் கொண்டு வரும் ஆற்று வெள்ளத்தில் அகப்பட்டது போல நின்றது. அதனுடைய சிற்றறிவு பேரறிவில் அடங்கியது. அதற்கான வழியை அந்தப் பிள்ளையாராகிய குருவே தவளைக்குக் காட்டி, பேரறிவின் உண்மை இயல்பை விளக்கினார்.
உயிர்களுடைய நிலையும் இப்படியேதான். இறைவனுடைய அருளால் உயிர்கள் ஐம்பூதங்களால் ஆன உடல்களைப் பற்றுகின்றன. இது அவைகளுடைய வினைக்கேற்ப நடைபெறுகிறது. ஐம்பொறிகளும், ஐம்புலன்களும், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்களும் சேருகின்றன. தான் என்கின்ற நினைப்பு உயிர்களிடையே தோன்றுகின்றது. ஐம்புலன்களுடைய சேர்க்கையால் விஷய வாசனைகள் உயிரை வந்து அடைகின்றன. அறிவு பிறக்கின்றது. குழந்தை முதலில் தாயை அறிந்து கொள்கின்றது. பின்னர் தந்தையைத் தெரிந்து கொள்கின்றது. பின்னர் உலகத்தைத் தெரிந்து கொள்கின்றது. மனிதன் வளர வளர அறிவும் வளருகின்றது. இந்த அறிவின் வளர்ச்சி மனிதனைப் பல சாதனைகள் செய்ய தூண்டுகின்றது. பிரமிக்கத்தக்க முறையில் விஞ்ஞான சாதனைகள் பெருகுகின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு காணாத விஞ்ஞான அதிசயங்களை இப்பொழுது நாம் கண்டு வியக்கின்றோம். மனிதனால் முடியாத காரியமே இல்லையென்று சொல்லுமளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து வருகின்றது.
ஆனாலும் மனிதன் எவ்வளவு சாதித்தாலும் அவனுக்கு இருப்பது சிற்றறிவுதான். அவன் அறியாதவைகளே அதிகம். "கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு". உயிரினுடைய அறிவின் தன்மையை உடையது. அதே நேரத்தில் அநாதியானது. "அறிவு அறிவு என்ற அறிவு அநாதி" என்பார் திருமூலர். ஆனால், அறிவாகிய உயிர் எப்போதும் ஒன்றைச் சார்ந்தே இருக்கும் இயல்பைக் கொண்டது. இப்போது நமது உயிரானது உடம்பைச் சார்ந்துள்ளது. ஆகவே, நம்முடைய உடம்பின் வழியாகக் கருமங்கள் நிறைவேறுகின்றன. இதனால் சிறிதளவு நமக்கு அறிவு விளக்கம் கிடைக்கின்றது. உயிரினுடைய அறிவானது பற்றப் பற்றப் பொருள்களில் அழுந்தும் இயல்பு உடையது. பளிங்கின் முன்னால் மாணிக்கத்தை வைத்தால் பளிங்கு மாணிக்கத்தின் நிறத்தைப் பெற்று விளங்குகின்றது. வேறொரு நிறம் கொண்ட பொருளை அதன் முன்பு வைத்தால் அந்தப் பொருளின் நிறத்தினைக் கொண்டு விளங்குகின்றது. ஆகவே, உயிரினுடைய அறிவின் தன்மையானது தான் சார்ந்த பொருளின் தன்மையைப் பின்பற்றி இருக்கும். நாம் கண்ணால் பார்க்கிறோம். ஆனால் இருளில் பார்க்க முடிவதில்லை. கண்ணினுடைய இயல்பு இருளில் அழுந்து இருள்மயமாகி விடுகிறது. கண்ணாடிக்குப் பிரதிபலிக்கும் தன்மை உண்டு. ஆனால் கண்ணாடி முழுவதிலும் மாசு படிந்திருந்தால் கண்ணாடி பிரதிபலிப்பதில்லை. ஆகாயம் பகலில் சூரியனோடு கூடி இருக்கும் பொழுது ஒளி பெற்று விளங்குகின்றது. இரவு இருளில் தானும் இருள்மயமாகக் கிடக்கின்றது. அதேபோல உயிரின் அறிவும் சார்ந்த பொருளின் தன்மையைப் பெற்றிருக்கும். உமாபதி தேவநாயனார் இதனை "இருளில் இருளாகி எல்லிடத்தில் எல்லாம் பொருள்கள் இலதோ புவி" என்று திருவருட்பயனில் கூறுகின்றார்.
பொறிகளும், புலன்களும் உடலுக்கு வெளியேயுள்ள பொருள்களை அந்தக் கரணங்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றன. அந்தக் கரணங்கள் வழியாக உயிரானது வெளிப்பொருள்களைப் பற்றிய அறிவினைப் பெறுகிறது. ஆனால், பொறிகள், அந்தக்கரணங்கள் போன்றவை சடப்பொருள்களாகும். தாமாக மற்றவைகளை அறியும் திறனை அவை பெறவில்லை. அறியும் திறமை உயிரிடம் மட்டுமே உள்ளது. ஆனால், உயிரோ சார்ந்த பொருள்களையே அறிந்து கொள்கிறது. இதன் காரணமாக உயிர் விஷய அறிவிலேயே அழுந்திக் கிடக்கிறது. விஷய அனுபவங்கள் உயிருக்கு இன்பத்தையும் துன்பத்தையும மாறி மாறித் தருகின்றன. நல்வினையும், தீவினையும் சேர்ந்து கொண்டு வருகிறது. வினைக்கூட்டங்களின் விளைவாக இறப்பும், பிறப்பும் மாறி மாறி வருகின்றன. ஒவ்வொரு பிறப்பிலும் உயிர்கள் எத்தனையோ துன்பங்களை அனுபவிக்கின்றன. "எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்" என்பார் மாணிக்கவாசகர். ஆயினும், போகங்களைத் தவிர்த்து இறைவனைப் பற்ற வேண்டும் என்கின்ற நாட்டம் உடனுக்குடன் ஏற்படுவதில்லை.
இதுவும் இறைவன் அருளன்றோ!"அருளே எல்லாம்" என்பது சிவஞானசித்தியார் வாக்கு. போகத்தை நுகர்வதற்கான சக்தியையும், சூழ்நிலையையும் கொடுத்து உதவுவதே அந்த அருள்தான். அந்த இறையருள் இன்றி ஒன்றும் நடக்காது. அநாதியே உயிருடன் சேர்ந்து நிற்பது ஆணவமலமாகும். அந்த நிலையில் உயிர்களுடைய அறிவு மறைப்புண்டு கிடக்கின்றது. உயிருடன் உடல் சேர்ந்தபொழுது உயிரின் அறிவு விரிவடைகின்றது. எனினும், அந்த அறிவு சிற்றறிவே ஆகும். சிற்றறிவின் மூலமாக நாம் அடைய வேண்டியது முற்றறிவாகும். முற்றறிவு என்பது தன்னைப் பற்றிய, தன்னைக் கட்டி நிற்கின்ற பாசங்களைப் பற்றிய, இறைவனைப் பற்றிய உணர்வு நெறியிலுள்ள அறிவாகும். ஐம்புலன்களின் சேர்க்கையில் கிடைக்கும் அறிவு ஆராய்ச்சி அறிவாகும். ஆனால் முற்றறிவானது அனுபவத்தின் அடிப்படையில் கிடைக்கின்றது. அது இறைவனுடைய அருளாலே கிடைக்கின்றது. சிற்றறிவைப் பயன்படுத்தும் பொழுது உயிரானது அறிவினாலே, ஆராய்ச்சியாலே பார்க்கிறது. "முகத்தின் கண்கொண்டு பார்க்கும் மூடர்காள்" என்பார் திருமூலர். முற்றறிவினாலே செயல்படும்பொழுது அருளாலே எதையும் பார்க்கும் தன்மை வெளிக்கிளம்புகிறது. "அகத்தின் கண்களால் காண்பதே ஆனந்தம்" என்பார் திருமூலர். முற்றறிவும் அருளும் ஒன்றே. அருள் தோன்றத் தொடங்கும் பொழுது முற்றறிவு உயிர்களிடத்தில் விளங்கத் தொடங்குகின்றது. தாயுமானவர் இந்தக் கருத்தை வெகு அழகாகச் சொல்லுகின்றார்.
"அருளால் எவையும்பார் என்றான் - அதை
அறியாம லேஎன்றன் அறிவாலே பார்த்தேன்;
இருளான பொருள்கண்ட தல்லால் - கண்ட
என்னையும் கண்டிலேன் என்னேடி தோழி"
"அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே" என்பதும் அப்பர் திருவாக்காகும்.
காரைக்கால் அம்மையார் விஷய அனுபவங்களால் கிடைக்கும் அறிவால் ஆராயும் நிலையைக் கடந்தவர். அருளே உலகுக்குக் காரணமானது என்று அவருக்கு நன்கு தெரியும். அதைவிட முக்கியமானது தான் மெய்ப்பொருளைக் கண்டு கொண்டது இறைவனுடைய அருளாலே என்றும் உணர்ந்து கொண்டவர். சிற்றறிவைவிட்டு முற்றறிவைப் பெற்றவர். உயிரின் அறிவுத் திறமை இறைவனைச் சார்ந்துவிட்டதன் காரணமாக, உயிரின் அறிவு முழுமையும் அருளாக அவர் கண்களுக்குத் தென்படுகின்றது.
"அருளே உலகெலாம் ஆள்விப்ப (து) , ஈசன்
அருளே பிறப்பறுப்பது;ஆனால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன், எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ (து) எனக்கு".
உயிருக்கு அறியும் திறமை இருந்தும் அதைத் தானாக அறிந்து கொள்வதில்லை. "கண்ணொன்று பல காணும், தனைக் காணா" என்னும் திருமந்திர அடி இந்தக் கருத்தை விளக்குகின்றது. உயிர் குடிபுகுந்துள்ள உடலும், அதைச் சார்ந்த கருவிகளும் ஜடப்பொருளாகும். உயிரானது இந்தத் தத்துவங்களுடன் பொருந்தாதபொழுது அவை அறிவில்லாதவை என்பது புலப்படும். அவ்வாறு இருந்தும் உயிரின் கண்களுக்கு இது புலப்படுவதில்லை. உயிரின் தன்மையை உணர்த்துவதும் இறைவனுடைய அருளாகும். அருளானது உயிரின் மீது பதியும்பொழுது உயிருக்குத் தன்னுடைய உண்மை அறிவுத் தன்மை வெளிப்படுகின்றது. அறிகின்றவன் உயிர் என்பது அப்பொழுது தெளிவடைகனிற்து. அதாவது தன்னைப் பற்றியே அறியாமை நிலையில் இருந்த உயிருக்குள்ள அறியும் சக்தி இறைவனுடைய அருளால் வெளிக்கொணரப்படுகிறது. "பளிங்கில் பவளம் பதித்தான் பதியே" என்பது திருமந்திரம்.
"அறிவொன் றிலாதன ஐயேழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியா திருந்தேன்
அறிகின்றாய் நீயென் றருள்செய்தார் நந்தி
அறிகின்ற நானென்று அறிந்துகொண் டேனே" (திருமந்திரம் - 2181)
ஒவ்வொரு பிறவியிலும் உயிர் ஓரளவு பக்குவததைப் பெறுகின்றது. ஒவ்வொரு பிறவியிலும் இறைவன் உயிரின்பால் கருணை கொண்டு, அதை நன்னெறியில் செலுத்துதல் வேண்டி அந்த உயிரின் மீது இரக்கம் வைக்கின்றான். இறை இரக்கமே சத்திநிபாதம் எனப்படும். முகத்தின் கண்களுக்குப் பதிலாக அகத்தின் கண்களை விழிப்படையச் செய்வது அந்தச் சத்திநிபாதமாகும். ஒரே நிலையைக் குறிக்கின்றன. இந்த நிலையை அடைவதற்கு முன்னோடியாக இருப்பது சரியை, கிரியை, யோகம், ஞானம் முதலியவையாகும். உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்துவது சரியை, கிரியை, யோக வழிகளாகும். ஐம்புலன்களுடைய சேர்க்கையால் கூடிக்கிடக்கும் வெளிப்புற அனுபவங்களை வலுவற்றவைகளாகச் செய்து, உடலையும் உள்ளத்தையும் இறையுணர்வு பெறுவதற்குத் தயாராக்கிக் கொள்வதே சரியை. கிரியை, யோகம் போன்றவற்றின் முக்கிய கொள்கையாகும். இவற்றுடன் நிற்பது ஞானம். ஞானம் என்பது ஒரு பாதையாகவும், அந்தப் பாதையின் முடிவுமாகவும் உள்ளது. ஞான சாதனைகளைச் செய்வதன் மூலமாகவும் உள்ளத்தில் தூய்மையைப் பெறலாம். அந்தத் தூய்மையின் அடிப்படையில் சிற்றறிவு நீங்கி, முற்றறிவைக் காண வாய்ப்பும் நிகழலாம்.
உயிர் தங்கும் உடலானது ஐம்பூதங்களால் ஆனது. புலன்களும், இந்திரியங்களும் உடலுடன் சேர்ந்து நிற்கின்றன. அத்துடன் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கு அந்தக்கரணங்களும் சேர்ந்தே உள்ளன. மனம் புலன்கள் வழிச் சென்று விஷய வாசனைகளில் ஈடுபடுகிறது. அதற்குப்புத்தியும் அகங்காரமும் உதவுகின்றன. இவற்றால் நமக்குக் கிடைக்கக்கூடிய பேரறிவு ஒன்று இருக்கின்றது. இது நமக்கு இறைவன் அருளால் கிடைக்கின்றது. ஆகவே, அருளே முதலாகும். அதை உணர்ந்தவுடன், எவற்றாலும் விவரிக்க முடியாத அடக்கம் ஒன்று உயிருக்குக் கிடைக்கின்றது. அகங்காரம் அல்லது நான் என்று வலியுறுத்தும் நிலைமை வலிவு இழக்கத் தொடங்குகின்றது. மனத்திற்கு ஒரு அடக்கமும் அமைதியும் வந்து சேருகிறது. அப்பொழுது உள்ளத்திலே சொல்லொணா அன்பு பெருகுகின்றது. இந்த அறிவையும், அடக்கத்தையும், அன்பையும் ஒன்றுசேரக் கூடி நீங்காதிருக்கின்ற நிலைமையை உள்ளம் பெறுகின்றது. உள்ளமானது இறைவன் வீற்றிருக்கக்கூடிய கோவிலாகின்றது. எப்பொழுதும் இறைவனுடைய
ஒலிக்கின்ற கழல்களை அணிந்து கொண்டிருக்கும் திருவடிகளை என்றுமே மறவாத ஓர் ஒப்பற்ற ஞானத்தினை உயிரும் பெறுகின்றது.
"அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன்
குறியுங் குணமுங் குரைகழல் நீங்கா
நெறியறி வார்க்கிது நீர்த்தொனி யாமே" (திருமந்திரம் - 1471)
சரியை, கிரியை, யோகம் இம்மூன்றும் நம்மை பேரறிவுப் பாதையில் அழைத்துச் செல்லுகின்றன. அதாவது நாம் உடலும் உடலைச் சார்ந்த கருவிகள் மட்டுமே என்கின்ற நினைப்பு நீங்குகின்றது. ஆணவம், கன்மம், மாயை என்கின்ற மலங்கள் நம்மைக் கட்டுப்படுத்துகின்றன என்கிற உணர்வும், அதுவும் இறைவனுடைய அருள் என்பதும், அவற்றை அவிழ்ப்பதே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும் என்பதும், அவைகளின் உண்மையான தன்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதும் நம்முடைய உள்ளத்திலே தோன்றத் தொடங்கிய பின்னர் மெய்ப்பொருளைப் பற்றிய அறிவு உதயமாகிறது. மெய்ப்பொருளை உணர்வதே ஞானமாகும். "சன்மார்க்க சாதனம்தான் ஞானம், ஞேயமாம்" என்பார் திருமூலர். அந்த நிலையில் எல்லாமே மெய்ப்பொருள் என்கின்ற உணர்வு உள்ளத்தில் பெருக்கெடுத்து ஓடுகின்றது. மாணிக்கவாசகப் பெருமான் இதையே "ஒன்று c அல்லை அன்றி ஒன்று இல்லை" என்று பாடுகின்றார். "மற்று ஒருபொருளும் இன்றி c நின்றமையால்" என்ற திருவாய்மொழியின் கருத்தும் இதுவே. எல்லாமே சிவனுடைய உடைமை, அடிமை என்கிற உணர்வும் தோன்றுகின்றது. எல்லாமே அவனுக்கே உரித்தாதல் என்கிற எண்ணமும் தலைநிமிர்ந்து நிற்கின்றது. "என் தாயோடு என் அப்பன் ஏழேழு பிறவியும் அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்" என்று திருமூலர் எடுத்துக் காட்டுகின்றார். இத்தகைய ஞானம் பெற்ற ஞானிகள் இறைவனிடத்தில் நீங்காத அன்பு வைக்கின்றார்கள். அவனுடைய திருவருளின் தன்மையைப் பற்றி வியக்கின்றார்கள். அவனுடைய திருவடிகளைப் பெறுதலையே சிவபாவனையாகக் கிடைக்கப் பெறுவர். அந்த ஞானமாவது உள்ளத்திலே ஆழப்புகும் போது இறைவன் என்கிற பேரறிவை முற்றிலும் அறிந்து அதிலேயே அழுந்தி விடுவார்கள்.
"தன்பால் உலகும் தனக்கு அருகாவதும்
அன்பால் எனக்கு அருளாவதும் ஆவன
என்பார்கள் ஞானமும் எய்துஞ் சிவோகமும்
பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே" (திருமந்திரம் - 1469)
உயிர் அறிவுமயமானது. ஆனால் ஆணவத்தின் வலிமையால் உயிருடைய தன்மை உயிரிடமிருந்து மறைப்புண்டு கிடக்கின்றது. சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவை உயிருக்கு அதனுடைய உண்மைத் தன்மையை இறைவனுடைய அருளால் சுட்டிக் காட்ட உதவுகின்றன. முக்கியமாக ஐம்புலன்களை நமது கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும். அவை போகும் வழியே மனமும் செல்லக்கூடாது. ஐம்புலன்களும் மதம் கொண்ட ஐந்து யானைகளைப் போன்றவை. அவற்றை அடக்கி உள்ளத்தில் ஞானத்திரியைத் தூண்டி அகக்கண்களால் அறிவைக் காண முயல வேண்டும். அவ்வாறு செய்பவர்களுக்கு உயிரானது சோதி வடிவாகத் தோன்றும். உள்ளத்தில் வியாபித்துக் கொண்டிருக்கக் கூடிய பேரறிவின் தன்மை புலப்படும். இறைவனுடைய திருவடிகளைச் சேருதலும் சுலபமாகி விடுகிறது.
"ஆணைகள் ஐந்தும் அடக்கி அறிவென்னும்
ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்
கூனை இருளற நோக்கும் ஒருவற்கு
வானக மேற வழியெளி தாமே" (திருமந்திரம் - 2316)
உயிர் பொறிகள், கரணங்கள் இவற்றுடன் சேர்ந்திருக்கும்பொழுது உயிரினுடைய அறிவு விஷய அனுபவங்களைச் சார்ந்து நிற்கின்றது. பின்னர் இறைவனுடைய அருளால் உயிர் தன்னை முழுமையும் அறிந்து கொண்ட பின்னர் தானும் அறிவுமயம் என்று உணர்ந்து கொள்கின்றது. இதனை திருமூலர் "தன்னை அறியும் அறிவு" என்று கூறுகின்றார். உயிர் அறிவு வடிவுமே என்கின்ற உண்மையும் புலப்படுகின்றது. அதாவது, பொறிகள், கருவிகள் இல்லாமல், இறைவனைச் சார்ந்திருந்தபொழுது எதையும் தன்னாலே அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உண்டு என்பது தெளிவடைகின்றது. உயிர் அறிவுவடிவம் என்கின்ற உண்மை இறைவனுடைய கருணையால் உணர்த்தப்படுகின்றது. அந்த உண்மை உள்ளத்திலே பதியும் பொழுது உயிரும் தன்னை அறிவுவடிவம் என்று தெரிந்து கொள்கின்றது. இதையெல்லாம் உணர்த்துவது திருவருளேயாகும். அத்தகைய அறிவுக்கு அழிவில்லை, ஆக்கமும் இல்லை. அந்த அறிவுக்குப் பேரறிவான சிவமே ஆதாரப் பொருளாகும். உயிராகிய அறிவு தனது அறிவினாலே சிவமாகிய பேரறிவை அறிந்து கொள்ள முற்படுகிறது. அறிவு உதயமாகிறது. இதுவே வேதங்களின் முடிவான உபநிடதங்கள் கூறும் உண்மையும் ஆகும்.
"அறிவு வடிவென்று அறியாத என்னை
அறிவு வடிவென் றருள்செய்தான் நந்தி
அறிவு வடிவென் றருளால் அறிந்தே
அறிவு வடிவென்று அறிந்திருந் தேனே" (திருமந்திரம் - 2357)
"அறிவுக் கழிவில்லை ஆக்கமும் இல்லை
அறிவுக் கறிவல்லது ஆதாரம் இல்லை
அறிவே யறிவை யறிகின்றது என்றிட்டு
அறைகின் றனமறை யீறுகள் தாமே" (திருமந்திரம் - 2358)
அத்தகைய அறிவைப் பெறுவதே அறிவென்றும் மற்றவை அறியாமை என்றும் திருமூலர் கூறுகின்றார். விஷய வாசனைகளும், விஞ்ஞான அறிவும் வளர வளர அவற்றின் சாதனைகளை அறிவின் சாதனைகள் என்று பெருமிதம் கொள்கின்றோம். இறுமாப்பு அடைகின்றோம் ஆனால், அது உண்மையான அறிவல்ல. மெய்ப்பொருளை அறிவதே உண்மையான அறிவாகும். மற்றதெல்லாம் அறியாமையாகும். ஆனால், இதை நம்முடைய சாதனைகளுடைய பெருமையில் அழுந்தியிருக்கும்பொழுது அதைத் தவிர வேறொன்றும் இல்லை என்கின்ற தவறான எண்ணத்தில் மூழ்கிக் கிடக்கின்றோம். இந்த அறிவு என்னும் அறியாமையை ஒருவன் கடக்கும்பொழுது, உண்மையான அறிவினைப் பெறும்பொழுது, உலகத்தைப் பற்றிய அறிவைவிட அறியாமையே அழகிய தன்மையுடையது என்பதையும் உணருகின்றான்.
"அறிவறி வென்றங் கரற்றும் உலகம்
அறிவறி யாமை யாரும் அறியார்
அறிவறி யாமை கடந்தறி வானால்
அறிவறி யாமை யழகிய வாறே" (திருமந்திரம் - 2362)
திருமூலர் கூறுகின்றார்:"ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றால் கட்டுண்டு வெகுகாலம் நான் என்னை அறிந்து கொள்ளவில்லை. உனது அருளால் நான் என்னை அறிந்துகொண்ட பின்னர் என்னைச் சுற்றியிருந்த இருள் அகன்றது. ஆனால், உன்னையே அறிந்த பிறகு வேறொன்றின் மீதும் மனம் செல்லவில்லை. அவ்வாறு என்னை அறியச் செய்வதும், தொடர்ந்து கைவிடாது எனக்குப் பேரின்ப அறிவினைப் புகட்டி வருவதும் எனது உயிருக்குயிராய் நிற்கும் இறைவனே."
"என்னை யறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை யறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
என்னை அறிந்திட்டு இருத்தலுங் கைவிடாது
என்னையிட் டென்னை உசாவுகின் றானே" (திருமந்திரம் - 2366)
இந்த அறிவு "எல்லாம் அறியும் அறிவு" எனப்படும். இந்த அறிவைப் பெற முயற்சி செய்யாமல் மற்றவைகளையெல்லாம் அறிந்தும் பயன் இல்லை. ஆனால், நம்முடைய அறத்தினாலும், அன்பினாலும், தவத்தினாலும், இறைவனுடைய அருளாலும் பேரறிவினைப் பெறக்கூடிய தெளிவினை நம்முடைய உள்ளத்திலே பெற்றால், அந்த அறிவு நம்முடைய உயிருக்குயிராய் நிற்கின்ற இறைவனாகிய பேரறிவினுடைய தன்மையைப் பெற்றது என்றும் உணர்ந்து கொள்ளலாம்.
"எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு
எல்லாம் அறிந்தும் இலாபமங் கில்லை
எல்லாம் அறிந்த அறிவினை நானென்னில்
எல்லாம் அறிந்த இறையென லாமே" (திருமந்திரம் - 2596)
இதே கருத்தை வைத்துத் திருநாவுக்கரசர் பெருமான் பின்வருமாறு பாடுகின்றார்.
"என்னை ஏதும் அறிந்திலேன் எம்பிரான்
தன்னை நானும்முன் ஏதும் அறிந்திலேன்
என்னைத் தன்னடி யானென் றறிதலும்
தன்னை நானும் பிரானென் றறிந்தெனே" (தனித்திருக்குறுந்தொகை)
ஞானத்தின் சிகரமாக விளங்குபவர் மாணிக்கவாசகப் பெருமான் ஆவார். அவர் ஞானத்தின் திருவுரு. இறைவனின் பேரின்ப அருளை முழுவதும் பெற்றவர். தன்னிலை மறந்தவர். சீவ கரணங்கள் முழுவதும் சிவகரணங்களாக்கிக் கொண்டவர். அவருடைய உள்ளத்திலே பிரபஞ்சம் அத்துணையும் இறைவன் மயமாகத் தோன்றுகின்றது. "யானேபொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய்" என்று உடம்பு புளகித்து, நடுநடுங்கி, கண்களிலே ஆனந்தக் கண்ணீர் ததும்பக் கூறிக் கொள்கின்றார். "இறைவா உனது அருளால் என் உயிரைச் சுற்றி மூடிக் கொண்டிருந்த மலங்களாகிய இருள் நீங்கி விட்டது. அறியாமை அகன்றது. அறிவு உதயம் ஆகிவிட்டது. என் உள்ளத்திலே ஞாயிறே போன்று c பிரகாசிக்கத் தொடங்கிவிட்டாய். உனது உண்மைத் தன்மையினை உணர்ந்து கொண்டேன். அந்த நினைப்பு என்றும் என்னை விட்டு நீங்காமல் நிற்கின்றேன். இன்னுமென்ன தெரியுமா? உன்னையன்றி வேறு பொருள் ஏதுமில்லை என்றும் கண்டுகொண்டேன். எல்லாப் பொருள்களும் அணுஅணுவாய் தேய்ந்து உன்னுடன் எப்பொழுதும் ஒன்றிக் கொண்டுள்ள தன்மையைப் பார்த்தேன். திருப்பெருந்துறையிலே வீற்றிருக்கும் சிவனே! என்னுடைய இருள் நீங்கியதன் காரணமாக c அல்லாமல் வேறு எதுவும் இல்லை என்கின்ற ஒப்பற்ற அறிவினைப் பெற்றேன். என்னே உன்னுடைய கருணை!".
"இன்று எனக்கு அருளி இருள் கடிந்து உள்ளத்து
எழுகின்ற ஞாயிறே போன்று
நின்ற நின் தன்மை நினைப்பு அற நினைந்தேன்
c அலால் பிறிது மற்று இன்மை
சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்று ஆம்
திருப்பெருந்துறை உறை சிவனே
ஒன்றும் c அல்லை அன்றி ஒன்று இல்லை
யார் உன்னை அறியகிற்பாரே"
மாணிக்கவாசகர் வியந்து நின்று இவ்வாறு தனது உள்ளக்கிடக்கையை வெளியிடும் பாடல் திருவாசகத்தில் "கோயில் திருப்பதிகத்தில்" வருகின்றது.