"திருக்கூத்து தரிசனம்"
நாம் பொறிகள், மனம், புத்தி, சித்தம் போன்ற கருவிகளைக் கொண்டு உலகத்தைப் பார்க்கின்றோம். விஷயங்களை அனுபவிக்கின்றோம். அறிவைப் பெற்று அகங்காரத்தை வளர்க்கின்றோம். இன்பத் துன்பங்களில் ஈடுபட்டு பெற்ற அறிவே முடிவானது என்று கருதி வாழ்க்கையை நடத்தி வருகின்றோம். இந்த அறிவினால் நமக்குக் கிடைக்கும் சாதனைகள் நமக்கும், நம்முடைய உள்ளத்துக்கும் இடையில் ஓர் திரையைப் போட்டு உண்மையை மறைத்து விடுகின்றது. அறிவுக் கண்களால் நாம் பார்க்க முயல்வது இந்த விளைவை நமக்குத் தருகின்றது. "இவ்வளவு காலம் அறிவுக் கண்களால் பார்த்தேன், அருட்கண்களால் பார்க்கவில்லையே!" என்கிறார் வள்ளலார். "நூல் அறிவு பேசி நுழைவு இலாதார் திரிக!" என்கிறார் காரைக்கால் அம்மையார், திருஞானசம்பந்தப் பெருமானோ,
"ஏதுக்க ளாலும் எடுத்தமொழி யாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா;சுடர்விட்டுளன் எங்கள் சோதி;"
என்பார். அருட்கண்கள் என்று உண்டு. அவற்றைத் திறக்க நாம் பயில வேண்டும். அருட்கண்கள் திறக்கும்பொழுது பேரறிவினை நம்முள்ளேயே உணர்வுமயமாக அனுபவிக்க இயலும். இந்த உணர்வானது சொல்லுக்கும், இலக்கியத்திற்கும், இலக்கணத்திற்கும் அப்பாற்பட்டது. நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்ற அருவாளர்கள், தெய்வச் சான்றோர்கள் இந்த ஒப்பற்ற உணர்விலே மூழ்கித் திளைத்தவர்கள். சுந்தரமூர்த்தி நாயனார் தில்லைப்பெரும் கோயிலில் நடராசப் பெருமானின் ஆனந்த நடனத்தைத் தரிசித்து "பேரின்ப வெள்ளத்தில் திளைத்த மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்" என்று சேக்கிழார் பிரான் கூறுகின்றார்.
அருளாளர்களுடைய உணர்வில் இறைவன் ஆடவல்லானாகக் காட்சியளிக்கிறான். அவர்களுடைய கண்களுக்கு அண்டங்களின், பிரபஞ்சங்களின், பிண்டங்களின் அசைவுகள் இறைவனுடைய தனிப்பெரும் கூத்தாக, ஆனந்தக் கூத்தாகத் திகழ்கின்றன. என்னே இறைவனுடைய அருள் என்று வியக்கின்றார்கள். ஆனந்த எல்லைக்குச் சென்றுவிடுகின்றார்கள். நடப்பதும் நிற்பதும் எல்லாமுமே இறைவனுடைய அருள் என்கின்ற உண்மை அவர்களுடைய உள்ளத்தில் நிரம்பி நிற்கின்றது. எங்கும், எதிலும் இறைவனுடைய பேரறிவு, பேராற்றல் ஆகியவற்றின் இயக்கத்தை உணர்ந்து மகிழ்கின்றார்கள். எங்கும் தங்கும் இறைவன் தனது அருட்சக்தியுடன் உயிர்கள் உய்ய இயக்கத்தை நடத்தி வருவது அவர்களுடைய அருட்கண்களுக்கு இறைவனுடைய ஒப்பற்ற திருக்கூத்தாக, விளையாட்டாகப் படுகின்றது.
"எங்குந் திருமேனி எங்குஞ் சிவசத்தி
எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம்
எங்குஞ் சிவமா யிருத்தலால் எங்கெங்குந்
தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டாதே" (திருமந்திரம் - 2722)
நம் போன்றவர்களுக்கு இந்த உணர்வு ஏற்படுவதில்லை. எனவே, இதன் உண்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. எல்லா இயக்கங்களும் இறைவனின் பேராற்றலை வெளிப்படுத்துகின்றது. என்று நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால், இன்றைய விஞ்ஞானம் இந்த விஷயத்தில் சற்று முன்னேறி உள்ளது. இப்பிரபஞ்சத்தில் உள்ள அசையும் பொருள், அசையாப் பொருள் எல்லாவற்றிலும் நிரம்பியுள்ள அணுக்களைக் கூறிட்டுக் கொண்டே போனால் அவற்றின் உட்பகுதிகளில் நுண்ணியப் பொருள்கள் வெகுவேகமாக, நினைக்க முடியாத அளவுக்குத் தோன்றி மறைகின்றன என்றும், அவையெல்லாம் ஒரு பெரும் இயக்கத்தில் ஈடுபட்டுள்ளன என்றும், அந்த இயக்கத்திற்கு அடிப்படையாக இருப்பது ஒரு பெரும் ஆற்றல் என்றும் இன்றைய விஞ்ஞானம் கூறுகின்றது. இநத் ஆற்றலை, அதன் அடிப்படையில் நடக்கும் இயக்கத்தைப் பேரருளாளர்கள் அன்றே உணர்ந்தனர். தம்முள் கண்டு கொண்டனர். வெளியில் அனுபவித்தனர். தாங்கள் கண்டதைத் திருக்கூத்தென்று பெயரிட்டனர். இந்த அரும்பெரும் தாண்டவம் உயிர்கள் உய்வதற்காக நடக்கின்றது என்பதை மக்களுக்குப் போதிக்கவும், இந்தத் தாண்டவத்தின், அருட்சக்தியின் பெருமையை நாம் நமது மனத்தில் வைத்துப் போற்றி வழிபாடு செய்வதற்கு அருளாளர்கள் நமக்க வழங்கியுள்ளது எல்லையில்லாத இன்பத்தை என்றும் அளிக்கவல்ல நடராச திருவடிவமாகும்.
கைலாயத்தில் இறைவனைக் கண்ட காரைக்கால் அம்மையார் "c ஆடுகின்ற போது தான் மகிழ்ந்து பாடிக்கொண்டு உன் திருவடியின் கீழ் இருத்தல் வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார். இறைவனும் அவரை திருவாலங்காட்டிற்கு அழைத்து அவனுடைய பெரு நடனத்தை அவர் கண்டு ஆனந்தித்து எப்பொழுதும் பாடிக் கொண்டிருக்கலாம் என்று அருள்புரிந்தான்.
திருவாலங்காட்டு இரத்தின சபையில் இறைவன் புரிவது ஊர்த்துவ தாண்டவம். சிதம்பரத்தில் இருப்பது கனகசபை. ஆடுவது ஆனந்தத் தாண்டவம். மதுரையில் வெள்ளியம்பலம், இங்கே இறைவன் பாண்டிய மன்னன் விருப்பத்திற்கேற்ப கால் மாறி ஆடுகின்றான். திருநெல்வேலியில் இறைவன் நடனமிடும் இடம் தாமிர சபையாகும். திருக்குற்றாலத்தில் இறைவனுடைய திருக்கூத்து சித்தி சபையில் நடைபெறுகிறது.
ஊர்த்துவ தாண்டவம் புரிந்தருளும் இறைவனைக் காரைக்கால் அம்மையார் பார்க்கின்றார். அவன் ஆடும் ஆட்டம் உலகத்தையே கிடுகிடுக்க வைக்கின்றது. "இறைவனே நீர் வேகமாக ஆடினால் பாதாளம் பெயர்ந்து போகும். உனது திருமுடி அசைந்து ஆடும் போது எல்லாத் திசைகளும் பெயர்ந்து மாறி விடும். பிரபஞ்சமாகிய இந்த அரங்கு உனது ஆட்டத்தைத் தாங்காது. இதை அறிந்து ஆடும்." என்கிற வகையில் சுபை படக் காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதியில் பாடுகின்றார்.
"அடிபேரின் பாதாளம் பேரும்;அடிகள்
முடிபேரின் வான்முகடு பேரும்;- கடகம்
மறிந்தாடும் கைபேரில் வான்திசைகள் பேரும்;
அறிந்தாடும் ஆற்றாது அரங்கு."
திருநாவுக்கரசர் நடராசப் பெருமானைத் தரிசிக்க வேண்டி திருத்தில்லை நகர் வந்தடைந்தார். திருக்கோயிலைச் சேர்ந்து, கோபுரத்தின் கீழ் விழுந்து, பணிந்து, கனகசபையினைக் கண்டு இறைவனுடைய திருநடனக் காட்சியின் எழிலில் மூழ்கினார். அப்போது அவருடைய கைகள் தலையின்மீது அஞ்சலிக்காகக் குவிந்தன. கண்கள் மழை பொழிந்தன. உட்கரணங்கள் உருகின. அன்பு பெருகிற்று. திருமேனி நிலத்தில் பல முறைகள் வீழ்ந்து எழுந்தது. இறைவனுடைய நடனத்தைக் கும்பிடும் அவருடைய ஆர்வம் அளவிடக் கூடாததாயிற்று. "இறைவனை ஒன்றியிருந்து நினைமின்கள், கரணங்களை ஒருமுகப்படுத்துங்கள், அழுந்தி அறியுங்கள், காலனைக் கடிந்தவனை என்றும் தொழுமின்கள். இறைவனுடைய ஒப்பற்ற உருவத்தைக் கண்டு இன்பமடையுங்கள். இந்த மனிதப் பிறவியில் இதைவிட வேண்டுவதற்கு வேறொன்றுமில்லை. மீண்டும் இறைவனுடைய திருவுருவைக் காண வாய்ப்புக் கிடைக்குமாயின் இம்மண்ணுலகில் மற்றொரு முறை பிறந்தாலும் குறைவில்லை" என்று பாடுகின்றார்.
திருத்தில்லையில் நடராசப் பெருமானைத் தரிசித்த சுந்தரமூர்த்தி நாயனாரின் அனுபவமும் அப்பேர்ப்பட்டதே. அவருடைய ஐந்து பேரறிவுகளில் கண்களே செயல்பட்டன. கரணங்கள் எல்லாம் சிந்தையில் குவிந்தன. அகங்காரம் மறைந்தது. குணங்களில் சாத்துவிக குணமே முன் நின்றது. கைகளைக் குவித்துக் கண்களில் ஆனந்தமாரி பெருக அவர் இறைவனைப் பாடினார். பரவினார். பணிந்தார். அவரது மனம் பேரின்ப வெள்ளத்தில் மூழ்கியது. இதுபோன்ற ஒப்பற்ற அனுபவங்களை அன்பர்களுக்கு நடராசப் பெருமான் வாரி வழங்குகின்றான். அவனுடைய மலர்ப் பொற்பாதத்தில் அன்பு வைப்பவர்களுக்குக் காதலால் மிக்க மகிழ்ச்சி ஏற்படும். உடனே தம்மை அறியாமலேயே அவர்கள் மனத்தில் இறைவனுடைய நடனத்தை அனுபவித்த உடனேயே புறப்பொருள்கள் மீது பற்று அறுந்து விடும். சித்தமானது புறப்பொருள்களைச் சீர்தூக்கிப் பார்க்கும் செயலை விட்டு விட்டுச் சும்மா நிற்கும். உடனேயே சோர்ந்த உடலானது மீண்டும் புத்துயிர் பெற்று நிற்கும். ஆசை உண்டாகாது. உள்ளத்தில் ஆனந்தம் பெருகும். இறைவனுடைய நடனத்தை மேலும் மேலும் பார்க்க வேண்டும் என்று ஆசை பொங்கி எழும்.
"விம்மும் வெருவும் விழும்எழும் மெய்சோருந்
தம்மையுந் தாமறி யார்கள் சதுர்கெடுஞ்
செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்
அம்மலர்ப் பொற்பாதத் தன்புவைப் பார்கட்கே" (திருமந்திரம் - 2744)
"தேட்டறுஞ் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்
வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்
ஓட்டறும் ஆசை அறும் உளத்தானந்த
நாட்ட முறுக்குறு நாடகங் காணவே" (திருமந்திரம் - 2745)
திருக்கயிலையில் திருநந்திதேவரது அருள் பெற்றுப்பல ஆண்டுகள் யோகம் புரிந்து திருமூலர் என்று பின்னர் பெயர் பெற்ற யோகியார் தன்னுடைய நண்பரான அகத்திய முனிவருடன் சில நாட்கள் இருப்பதற்கெண்ணித் தென்னாட்டிற்கு வந்த போது பல திருத்தங்களில் இறைவனைத்தரிசித்து, வழிபட்டு சிதம்பரத்தை வந்தடைந்தார். அங்கே தூக்கிய திருவடிகளை உடைய கூத்தபிரானை அன்பு பொருந்தி வணங்கினார். மனத்தில் மகிழ்ச்சி பொங்கியது. இவ்வானந்த அனுபவத்தில் அழுந்தி தன்வசமற்று நின்றார். ஐந்தொழில்களுக்கும், பிரபஞ்ச இயக்கத்திற்கும் காரணமாக இருக்கின்ற அருட்கூத்தினைக் கண்டு தற்போதும் இழந்து, இறைவனுடைய மெய்யுணர்வுடன் கூடி இருந்தார். அந்த இடத்தைவிட்டு நீங்க மனம் வராமல் அங்கேயே சிறிது காலம் விரும்பித் தங்கியிருந்தார் என்றும் சேக்கிழார் பெருமான் கூறுகின்றார்.
"எவ்வுலகும் உய்ய எடுத்தருளிய சேவடியாரைச்
செவ்வியவன் புறவணங்கிச் சிந்தை களிவரத் திளைத்து
வவ்வியமெய் யுணர்வின்கண் வரும் ஆனந்தக் கூத்தை
அவ்வியல்பிற் கும்பிட்டு அங்கு ஆராமை அமர்ந்திருந்தார்".
(பெரிய புராணம் - 3570)
திருமூலர் ஓர் சிறந்த யோகியார் ஆவார். இறைவனுடைய அருளால் மெய்யுணர்வைத் தம்முள்ளேயே பெறுகிறார். உலக இயக்கமாகிய தனிப்பெரும் கூத்தைச் சிதம்பரத்தில் கண்டது மட்டுமின்றித் தன் உள்ளத்திலும் காண்கின்றார். கண்டபின்னர், பல காலம் யோக நிலையில் இருந்து மக்கள் உய்ய திருமந்திரம் அருளிச் செய்தார். அவருடைய உயிரானது உடம்பில் இருந்தாலும், உடம்போடு ஒட்டாத நிலையில் பன்னெடு நாள் இருந்தார்.
"தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில் எழுகோடி யுகம்இருந் தேனே" (திருமந்திரம் - 74)
இது எத்தகைய திருக்கூத்து? அது நிகரற்ற அருள்வெளியில் நடக்கும் திருக்கூத்து என்கிறார் திருமூலர். அந்தத் திருக்கூத்தைப் புரிபவன் மாணிக்கம் போன்ற ஒப்புயர்வற்ற தன்மையைப் பெற்றவன். அவனே சிவன் எனும் செம்மேனி அம்மான். அந்தப் பேரின்ப நடனத்தைப் பார்த்து இரசிப்பவர் அருட்சக்தியாகிய உமையாவாள். சீவராசிகளுடைய வினைக்கேற்ப அவர்களுக்கு அருளைப் புரிந்து வரும் ஆதிபரன் தனது திருக்கூத்தாகிய பேரியக்கத்தின் மூலம் பல்வேறான செயல்களைப் புரிந்து வருகின்றான். சிவமும் சக்தியும் சேர்ந்தே இந்தத் தொழில் நடைபெறுகிறது. மாணிக்க மணிக்குள்ளே மரகதம் ஒளி வீசுவதுபோல் இருக்கின்றது இந்தக் காட்சி. மற்றும் மரகத மண்டபத்தில் செவ்வொளி பொருந்திய
மாணிக்கம் வீற்றிருப்பது போலவும் இருக்கின்றது. இந்தச் சிவன், சக்தி சேர்க்கையால் ஆகிய இயக்கம், திருக்கூத்து மாற்றுக் குறையாத பசும்பொன்னாலாகிய திருவம்பலத்தில் நடைபெறுவதைக்காண, அனுபவிக்க எவ்வளவு கொடுத்து வைக்க வேண்டும்? அத்தகைய பேற்றினை அன்பவர்கள் பெறுகிறார்கள். திருமூலர் இந்தப் பெருமையைப் பெற்றவர். அவருடைய உணர்வுகள் ஊற்றுப் பெருக்கெடுத்து ஓடுகின்றன.
"எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வா றருட்செய்வன் ஆதியரன் தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகான ஆடிடுஞ்
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே" (திருமந்திரம் - 130)
"மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே" (திருமந்திரம் - 131)
நடராசப் பெருமானைத் தன் மனக்கண்களால் பார்க்கின்றார். உடுக்கை பொருந்தியது வலக்கை. உடுக்கையிலிருந்து எழும் ஒலி உற்பத்திக்கு ஆதாரமாக அமைகின்றது. இடக்கை வீசிய நிலையில் உள்ளது. அவற்றின் நடுவே அபயமளிக்கும் கை காத்தல் தொழிலைச் சுட்டிக் காட்டுகிறது. மற்றொரு இடக்கை அனலை ஏந்தி உள்ளது. சங்காரத் தொழிலைக் காண்பிக்கின்றது. முயலகன் ஆணவத்தின் வடிவம். அவனை மிதித்த திருவடி மறைத்தல் தொழிலைக் காட்டுகிறது. தூக்கிய திருவடி அனுக்கிரகத்தைச் செய்கின்றது. இந்த அற்புதமான திருக்கூத்து இறைவன் பேரானந்தத்துடன் நடத்தி வரும் ஐந்தொழில்களை எடுத்துக்காட்டும். இது உயிர்களுடைய மேம்பாட்டிற்கே நடைபெறுகிறது என்பதையும் உணருதல் வேண்டும். திருவைந்தெழுத்தும் இந்த ஆனந்தக் கூத்தையே எடுத்துக் காட்டும். உடுக்கையைப் பற்றிய கை "C" என்ற எழுத்தைக் குறிக்கும். எடுத்து வீசிய கரம் "வா" ஆகும். அஞ்சல் அளிக்கும் அபயக் கரம் "ய" ஆகும். b ஏந்தி நிற்கும் இடக்கரம் "ந" காரமாகும். முயலகன் மீது ஊன்றிய திருவடி "ம" காரமாகும். சகல தத்துவங்களையும் தன்னுள் அடக்கி நிற்கும் இறைவன் உடுக்கையால் தோற்றத்தையும் அபயக் கரத்தால் காத்தலையும், c ஏந்திய இடக்கையால் அழிப்பினையும், ஊன்றிய திருவடிகளால் மறைப்பையும், தூக்கிய திருவடியால் அனுக்கிரகத்தையும் செய்தருளுகின்றான்.
"மருவுந் துடியுடன் மன்னிய வீச்சு
மருவிய அப்பும் அனலுடன் கையுங்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் சிவாய நமவென வோதே" (திருமந்திரம் - 2798)
"அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம்
அரன் அங்கி தன்னில் அறையிற்சங் காரம்
அரனூற் றணைப்பில் அமருந் திரோதாயி
அரனடி யென்றும் அனுக்கிரகம் என்னே" (திருமந்திரம் - 2799)
இறைவனுடைய நடனம் உயிர்களைப் பல வகைகளில் ஆனந்தத்தில் அழுத்தி வைக்கும் செயல் உடையது. ஆகவே, அது ஆனந்தக் கூத்தாயிற்று. திருவருள் நிலையே ஆனந்தக் கூத்தாகும். இறைவன் பேரினப் உருவினன் அவனுடைய பேரறிவும், பேராற்றலும் உயிர்களுக்குச் சதா இன்பமளிப்பதற்கே பயன்படுகின்றன. இதுவே சிவானந்தக் கூத்தாகும். அன்பர்களுக்குப் பேரின்பம் விளைவிக்கும் நடனமாகும். பரம்பொருள் ஞானத்திற்கு இருப்பிடம், உயிர்களுக்கு அன்பு செய்யும் சக்தி ஆற்றலுக்கு இருப்பிடம். இவை இரண்டும் சேர்ந்து புரியும் ஆனந்த நடனம் உயிர்களுக்குப் பேரின்பத்தைத் தருகின்றது. உருவமில்லாத பெருமான் உயிர்கள் பொருட்டு ஐந்தொழில்களை நடத்துவதற்காக உமையுடன் சேர்ந்து புரியும் இந்தத் திருக்கூத்து இறைவனின் ஒப்பற்ற அருட்தன்மையை விளக்கிக் காட்டுகிறது. இந்தத் திருக்கூத்தே வேதங்களின் மெய்யுண்மைகளிலும், ஆகம அறிவிலும், கீதங்களின் உணர்வுகளிலும், அண்டங்கள் பலவற்றிலும், ஐம்பூதங்களின் சேர்க்கையிலும், எல்லாவிதமான புவனங்களிலும் விரிந்து நடந்து இறைவனின் மெய்யுண்மையைப் புலப்படுத்தும்.
"வேதங்க ளாட மிகுஆ கமமாடக்
கீதங்க வாடக் கிளரண்டம் ஏழாடப்
பூதங்க ளாடப் புவன முழுதாட
நாதங்கொண் டாடினான் ஞானானந்தக் கூத்தே" (திருமந்திரம் - 2729)
அவ்வாறே ஐம்பூதங்கள், ஐம்பொறிகள், பல கலைகள், காலம், பல ஊழிகள், அண்டங்கள், பலவகைப்பட்ட அறிவுகள் ஆகிய எல்லாவற்றிலும் இறைவன் கலந்திருப்பதால், அவைகளுடைய இயக்கம் இறைவனுடைய திருக்கூத்தினை வெளிப்படுத்துவதாகும்.
இறைவன் ஆடும் திருநடனத்தைத் திருமூலர் சிவானந்தக் கூத்து, சுந்தரக் கூத்து, பொற்பதிக்கூத்து, பொற்றில்லைக் கூத்து, அற்புதக் கூத்து என்று வகைப்படுத்துகின்றார். அண்டங்கள், பிண்டங்கள், உயிர்களின் உள்ளங்கள், உடல்களின் பல நிலைகள் ஆகியவற்றின் இயக்கங்களையே இவ்வகைக் கூத்துகளாகத் திருமூலர் விளக்குகின்றார்.
இறைவனுடைய நடனம் எல்லாத் திசைகளிலும் பரவி நிற்கின்றது. அருவ நிலையில் இருக்கக்கூடிய இறைவன் அருவுருவ நிலையிலும் பொருந்தி ஐந்தொழிலை நடத்துவான். இந்த அருவுருவ நிலையில் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, உச்சி ஆகிய அற்புதமான ஐம்முகங்கள் அமைந்துள்ளன. அவையே அகோரம், வாமதேவம், தற்புருடம், சத்தியோஜாதம், ஈசானம் எனப்படும். இந்த எல்லாப் பகுதிகளிலும் இறைவன் பொருந்தி ஒப்பற்ற நடனத்தைப் புரிந்து அருளுகின்றான். அதாவது ஐந்தொழில் இயக்கத்தை நடத்துகின்றான்.
"தெற்கு வடக்குக் கிழக்குமேற்கு உச்சியில்
அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில்பே ரின்பத்து உபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடஞ் செய்யுமே" (திருமந்திரம் - 2739)
இறைவன் ஆகாயத்தில் நடனம் புரிகின்றான். அன்புகலந்த அடியார்களாகிய உத்தமர்களிடையே நடனம் புரிகின்றான். சீவராசிகளைக் காக்கும்பொருட்டு அவர்களுடைய மனவெளிகளில் தங்கி ஆடிக்கொண்டிருக்கின்றான். உயிர்களோடு நெருங்கிக் கலந்துள்ளான். அவைகளின் உணர்வில் உள்ளான். அவைகளின் உணர்விற்கு அன்பால் தன்னந்தனி நிலையிலும் இருப்பான். இவ்வாறெல்லாம் பல வகைகளில் திருக்கூத்துப்புரியும் சிவபெருமானைத்தான் இன்புறு நாடித்தனது உள்ளத்தில் வைத்ததாகத் திருமூலர் கூறுகின்றார்.
"உம்பரிற் கூத்தனை உத்தமக் கூத்தனைச்
செம்பொற் றிருமன்றுட் சேவகக் கூத்தனைச்
சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை
இன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனே" (திருமந்திரம் - 2742)
சிவன் நடனம் செய்தமையால் பிரிவின்றி நிற்கும் சக்தியும் ஆட, அதனால் சகல தத்துவங்களும் ஆட, சதாசிவம் ஆட, உயிர்களுடன் ஒட்டி நிற்கும் சித்தமும் ஆட, அசைவன, அசையாதன ஆகிய எல்லாம் ஆட, உடலிலே உள்ள ஆதாரங்கள் ஆட, நான்மறைகளும் ஆட சிவபெருமான் ஆனந்தக் கூத்து ஆடி அருளுகின்றான்.
"தத்துவம் ஆடச் சதாசிவந் தானாடச்
சித்தமும் ஆடச் சிவசக்தி தானாட
வைத்த சராசரம் ஆட முறையாட
அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே" (திருமந்திரம் - 2789)
இந்த ஆனந்த நடனத்தைத் தம்முள் கண்டவர்கள் திருமூலரைப் போன்ற யோகிகள், உயிர்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து, மலங்களை நீக்கி, ஞானத்தைக் கொடுத்து முக்தி இன்பத்தை வழங்குவதே இறைவனுடைய அருட்சக்தியாகும். இதையே நடனமாகக்கண்டு, இந்த நடனத்தைத் தம்முள் சூக்கும நிலையில் யோகிகள் உணர்ந்து கொள்வார்கள். இந்த ஞானம் நடனம் நம்முடைய உடலிலேயே ஏழு ஆதாரங்களில் நடைபெறகின்றது என்று நம்நாட்டுச் சித்தர்கள் கண்டறிந்தார்கள். நம்முடைய உயிர்ப்பின் அசைவிலே இந்த உண்மையை அவர்கள் தெரிந்து கொண்டார்கள். பிராணாயாமம், யோகம், தியானம், சமாதி போன்றவைகளைக் கடைபிடித்து, உயிர்ப்பினை ஒடுக்கி, ஐம்புலன்களைக்
கட்டுப்படுத்தி, உள்ளத்தைத் தெளிய வைத்து, களிம்புகள் நீங்கிய நிலையில் அருளாளர்கள் மெய்ப்பொருளின் அற்புத ஆற்றலைத் தம்முள் கண்டு கொண்டார்கள். சிவபெருமானுடைய ஆடும் திருவடியையும், அந்த ஆட்டத்திலிருந்து உதிக்கும் நாகத்தையும், அந்த நாதத்திலிருந்து வெளிப்படும் ஓசைகளையும், ஒலிகளையும், பற்பல அசைவுகளையும் தனது உள்ளத்தில் கண்டதாகத் திருமூலர் கூறுகின்றார். அதேமாத்திரத்தில், வினையும், வினையால் வரும் பிறவித் துன்பமும் தன்னை நீங்கி நிற்பதையும் திருமூலர் கண்டறிந்தார்.
"ஆடிய காலும் அதிற்சிலட்ம போசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமுங்
கூடிய கோலங் குரூபரன் கொண்டாடத்
தேடிய ளேகண்டு தீர்ந்தற்ற வாறே". (திருமந்திரம் - 2760)
இறைவன் ஆடும் நடன அரங்கை வெளியே போய்த்தேட வேண்டியதில்லை. இந்த உடலிலேயே இருக்கின்றது என்பார் திருமூலர். இறைவனை நம்முள் தியானிக்கும் இடம் நெற்றிக்கு முன் புருவத்தின் மையமாகும். அங்கே மனத்தைப் பொருத்தி, தியானம் செய்து இறைவனை நாட வேண்டும். அந்த இடமே உயிரானது பற்றுவதற்குரிய இடமாக விளங்குகின்றது என்றால் அது இறைவன் வீற்றிருக்கும் இடமாகும். அதுவே திருச்சிற்றம்பலம். அவ்விடத்தைத் தீவிரமாகத் தியானிப்பவர்களுக்கு, உற்று உற்றுப் பார்ப்பவர்களுக்கு அது ஒளி விடும் மந்திரமாக விளங்கும். இதை அனுபவித்தவர் திருமூலர்.
"நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி
உற்றுற்றுப் பார்க்க வொளிவிடு மந்திரம்
பற்றுக்குப் பற்றாய்ப் பரம னிருந்திடஞ்
சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே" (திருமந்திரம் - 2770)
சாதகர்களுக்கு இந்த அனுபவம் ஒப்பற்ற அறிவைத் தருகின்றது. சிவபிரானும், சக்தியும் உயிர்களோடு கலந்து, உயிருக்குயிராய் நின்று, இயங்கிக் கொண்டிருக்கும் உண்மை வெளிப்படுகின்றது. சீவகோடிகளுக்கு இறைவனே ஆதாரம். அவானாலேதான் அவையெல்லாம் ஆட்டி வைக்கப்படுகின்றன. எண்ணற்ற உயிர்கள் இறைவனுடைய அருளால் படம் போன்று மடிந்தும், ஒடுக்கப்பட்டும், விரிக்கப்பட்டும் இருக்கின்ற நிலைமை தெள்ளத்தெளிவாகின்றது. சிவபெருமானும் சக்தியும் உயிர்களையெல்லாம் இவ்வாறு அவைகளுடைய வினைக்கேற்ப ஆட்டுவிக்கும் அருட்சக்தியின் திறமையையும் தான் அறிந்து கொண்டதாகத் திருமூலர் கூறுகின்றார். இநத் நிலையே பேரறிவுமாகும்.
"இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்
அடங்கலுந் தாமாய்நின் றாடுகின் றாரே" (திருமந்திரம் - 2768)
இவ்வாறு திருக்கூத்தின் உண்மைப் பொருளைத் தமக்குள் உணர்ந்தவர்கள் பேறு பெற்றவர்கள். தம்முள்ளேயே சுரக்கும் சிவானந்தத் தேனினைப் பருகி இன்புற்றவர்கள். இன்பம் மேலிட்டு அவர்களுடைய கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் நிரம்பி வழியும். நெஞ்சு உருகி நிற்கும். மேலும் மேலும் திருக்கூத்தைத் தரிசிக்கத் தோன்றும். சுவையுள்ள உணவுப் பொருளை நினைத்தபொழுதே நாவில் நீர் சுரப்பதுபோல, அன்பர்களுடைய உள்ளம் திருக்கூத்தின் காட்சியால் மெய்மறந்து நிற்கும்.
"புளிக்கண் டவர்க்குப் புனலூறு மாபோற்
களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க் கெல்லாம்
துளிக்கும் அருட்கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்
ஒளிக்குள் ஆனந்தத்து அமுதூ றும் உள்ளத்தே" (திருமந்திரம் - 2778)
சான்றோர்கள் தங்கள் அனுபவத்தில் கண்ட இந்த மகத்தான உண்மையை நாம் காண விரும்பினால் அந்த விருப்பம் நிறைவேறுவதற்கு இப்பூவலகில் தில்லைத் திருத்தலத்தைத் தவிர வேறு இடத்தைக் காண முடியாது. ஏனென்றால் அங்கேதான் ஆதியாய், நடுவாய், அளவிலா அளவுமாகிச், சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகி, ஏகம் ஆகி, ஆணாகிப் பெண்ணுமாகி இறைவன் திருநடனம் புரிகின்றான். அவன் கற்பனை கடந்த சோதி, கருணையே உருவமானவன். மனத்தாலும் வாக்கினாலும் இன்னதென்று சொல்ல இயலா அனுபவத்தைத்தருபவன். ஞானத்திற்கு இருப்பிடம். தில்லைத் திருச்சிற்றம்பலத்திலே எழிலுடன் திருக்கூத்துப் புரிகின்ற அந்த இறைவனுடைய திருவடிகளைப் பேணி, திருமூலர் போன்ற ஞானிகள் பெற்ற பேரின்பத்தை நாமும் பெறலாம். சேக்கிழார் பெருமானுடைய அற்புதமான திருப்பாடல் இதோ -
"கற்பனை கடந்த சோதி கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்து ணின்று
பொற்புட னடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி".
(பெரிய புராணம் - 351)