"காணாத கண்கள்"
நமது உடலிலுள்ள உறுப்புகளில் கண்கள் மிக முக்கியமானவை. கண்ணின்றி ஒன்றுமில்லை. கண்ணற்றவர்களின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்று அனுபவித்தால்தான் தெரியும். சிலர் பிறவியிலிருந்தே, சில குறைபாடுகளின் காரணத்தால், கண்களால் பார்க்கும் ஆற்றலை இழந்து விடுகின்றனர். சிலருக்கு வயோதிகத்தில் கண் பார்வை தானாகவே குன்றி விடுகிறது. படலத்தினால் கண்ணொளி மறைக்கப்படுகிறது. அறுவைச் சிகிச்சை செய்த பிறகு, மீண்டும் கண்ணொளி பெற்றுப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்த பொழுதும் கண்களின் ஆற்றல் முழுமையாக இருக்காது. குறைந்தே இருக்கும். இவற்றையெல்லாம் இயல்பாகவே கண்ணொளி அற்ற நிலை என்று எடுத்துக் கொள்ளலாம்.
கண்கள் இருந்தும் அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பதையும் நாம் காணலாம். சில நேரங்களில் நம்முடைய கண்கள் ஏதோ ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கும். ஆனால், மனமானது வேறொன்றில் ஊன்றிக் கிடக்கும். கண்கள் திறந்திருந்த நேரத்திலும் அவற்றின் காணும் ஆற்றல் செயல்படுவதில்லை. தெருவிலே நடந்து போய்க் கொண்டிருப்போம். ஏதிரே ஒரு நண்பர் வருவார். ஆனால், நாம் வேறு எதையோ தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டு போய்க் கொண்டிருப்போம். நண்பரைக் கண்கள் பார்க்கின்றன. ஆனால், பார்க்கின்ற இடத்தில் மனம் இல்லை. கண்ணோடு சேர்ந்து மனம் பாராத காரணத்தினால் நாம் அந்த நண்பரைப் பார்க்கவில்லை. நமது ஆழ்ந்த சிந்தனை நாம் பார்க்கும் பொருளுக்கு எதிரே ஒரு மறைப்பாக நின்று விடுகின்றது. அதுபோலவே நம்முடைய கேட்கும் சக்தியும், மனத்துடன் ஒன்றிப் போகாத நிலையில், நிலை நிறுத்தம் செய்வதும், புலன்களும் மனம், புத்தி, சித்தம் போன்ற உட்கருவிகளும் சேர்ந்து தொழிற்படாத பொழுது நாம் முழுமையான அறிவைப் பெறுவதில்லை.
உடலைச் சார்ந்த கருவிகள் நமக்கு ஒருவித அறிவையும் அனுபவத்தையும் கொடுக்கின்றன. வெளிப்புறத்தை நோக்கி நம்முடைய கருவிகள் செயல்படும்போது நமக்கு வெளிப்புறத்திலுள்ள பொருள்களின் மீதான அறிவு கிடைக்கின்றது. இதை விஷயானுபவம் என்பார்கள். நமது பொறிகளும், புலன்களும் சதா வெளிப்புறத்தை நோக்கிச் சென்று விவரங்களைச் சேகரித்து, நமது உட்கரணங்களுக்குத் தருகின்றன. நாம் நம்முடைய கருவிகளின் இயக்கத்தில் ஊறிப்போய் விடுகிற காரணத்தால், அதையே இயல்பான நிலை எனக் கருதுகிறோம்.
வெளிப்புற விஷயங்களையே நாம் நமது கருவிகள் மூலம் பற்றிக் கொள்வதால், நமக்கென்று ஒரு உட்புறம் இருப்பதை நாம் அறிந்து கொள்வதில்லை. நாம் கணவு காணும்பொழுது நமக்குக் கிடைப்பது உட்புற அனுபவம். உட்புற அனுபவம் பெறுவதற்கு நாம் உள்நோக்கிப் பார்க்க வேண்டும். உள்நோக்கி பார்த்தலாவது நம்மை நாமே விசாரித்துக் கொள்ளுதலாகும். நம்மைப் பற்றியும், நமது உடலைப் பற்றியும், கருவி கரணங்களைப் பற்றியும், நாம் பெற்றிருக்கும் அறிவின் தன்மையைப் பற்றியும் சிந்திக்கும் நோக்கத்துடன் நமது
அறிவாற்றலை அவற்றின் மீது செலுத்துவதே உட்புறத்தை நோக்குவதாகும். விஷய அனுபவங்களின் தாக்குதல் இருக்கும்வரை, நம்முடைய கருவி கரணங்கள் உட்புறத்தை நோக்கா. அந்த நிலையில் நாம் நமது உடலையும் கருவிகளையும் பயன்படுத்தி வினைப்பொதியை வளர்த்துக் கொண்டே போகிறோம். இவ்வாறு நாம் செய்வதன் நோக்கம் இன்பத்தைப் பெறுவது, துன்பத்தைத் தவிர்ப்பது. இந்த நோக்கத்துடன் உலகத்தின் சுகதுக்கங்களில் நாம் நம்முடைய உடலையும் அதன் கருவிகளையும் முழுமையாகச் செலுத்தும்பொழுது நாம் வேறு, நமது உடலும் அதன் கருவிகளும் வேறு என்கிற உணர்வைப் பெறுவதில்லை. நாம்தான் அவை, அவைதான் நாம் என்கிற நினைப்பே தலைதூக்கி நிற்கின்றது. உலக விஷய அனுபவங்கள் நமக்கு ஒரு மலைப்பை, மயக்கத்தைத் தந்து, உண்மையை மறைத்து விடுகின்றன. நமது உடலின் கருவிகள் தத்தம் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அவற்றின் இயக்கம் மயக்கம் என்கிற சூழலில் நடைபெறுகின்றது. இதை அறியாமை என்கிறோம். நமது உயிரோடு அனாதியே கலந்து வரும் ஆணவ மலத்தின் மறைப்புத் தன்மையே இதற்கு காரணமாக இருக்கிறது. அதே நேரத்தில் நாம் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். இறைவன் படைத்த படைப்பிற்கு நோக்கம் இல்லாமல் இருக்க முடியாது. இறைவன் எல்லா உயிர்களுக்கும் உடலைக் கொடுத்து, பொறி, புலன்களைக் கொடுத்து, நமக்கு எல்லாவிதமான அனுபவத்தையும் கொடுக்கின்றான். கருவிகள் மூலமாக மயக்கத்தைக் கொடுப்பவனும் அவனே. மயக்கம் தீர மருந்தைக் கொடுப்பவனும் அவனே. அதுவே அவனுடைய பெரும் கருணையாகும். "பெருமானே!எத்தனைவிதமான அனுபவங்களைப் பெற்று நான் உன்னை அடைகின்றேன். அதுவல்லவா உன்னுடைய பெரும் கருணை!" என்று பட்டினத்து அடிகள் நினைக்கின்றார். நாம் பெறும் அனுபவங்கள் பல்வேறானவை. சில இன்பத்தைத் தருகின்றன. பல துன்பத்தைத் தருகின்றன. சில இறைவனை அடையும் வழிகளைக் காட்டுகின்றன. பல நம்மை இறைவனிடமிருந்து வெகுதூரத்திற்குக் கொண்டு செல்லுகின்றன. ஆனால், இவையெல்லாம் இறைவனுடைய கருணையால் நேருகின்றன என்றால் அதை ஏற்றுக்கொள்ளலாமா?
இந்தக் கேள்விக்கே இடமில்லை என்கிறார் காரைக்கால் அம்மையார். அறிவைப் பயன்படுத்தி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரும் நிலையைக் கடந்தவர் அம்மையார். அறிவு எனும் திரை அவரது கண்களை மறைக்கவில்லை. இறைவனுடைய அருளையே துணை கொண்டு மெய்ப்பொருளை ஆராயும் பண்பினைப் பெற்றவர். ஆகவே, அவருடைய உள்ளத்தில் வேறுவகையான அனுபவம் தோன்றுகிறது. நாம் காணும் காட்சியெல்லாம் இறைவனுடைய வடிவம் என்றும், நாம் புரியும் செயல்களெல்லாம் இறைவனுடைய அருட்பிரசாதம் என்றும் மகிழக் கூடியவர் காரைக்கால் அம்மையார். அவருடைய உள்ளம் தெளிந்த நிலையில், உடலாலும் கருவிகளாலும் கிடைக்கக்கூடிய அனுபவங்களின் தன்மை குறைந்து அவை தரும் மயக்கத்திற்கு அப்பாற்பட்டவர். எனவே,
"அருளே உலகெலாம் ஆள்விப்ப (து) , ஈசன்
அருளே பிறப்பறுப்பது, ஆனால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன், எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ (து) எனக்கு". (அற்புதத் திருவந்தாதி)
என்று கூறுகின்றார்.
எங்கும், எதிலும், எப்பொழுதும் இறைவனது அருள் தோய்ந்து நிற்கும். இதை நாம் உணர்ந்து கொள்வதில்லை. இதற்குக் காரணம் நமது உயிருடன் அநாதியே கலந்து வரக்கூடிய ஆணவ மலம்தான். இது உயிர்களைச் சேர்ந்த குற்றமாகும். ஆணவ மலம் மெய்ப்பொருளை உயிரிடமிருந்து மறைக்கின்றது. நமது கண்களை மறைக்கும் இருளைப் போன் தன்மையுடையது. "இருள் ஒளிர இருண்ட மோகம் ஆய்" என்கிறது சிவப்பிரகாசம். நாம் இருண்ட இடத்தில் இருக்கும்பொழுது இருளைப் பற்றிய நிலையை உணர்ந்து கொள்கிறோம். ஆனால், ஆணவ மலம் தன்னையும் காட்டிக் கொள்வதில்லை. மெய்ப்பொருளைப் பற்றிய உண்மையையும் மறைக்கின்றது. ஆகவே, ஆணவமலம் இருளினும் கொடியது என்கிற பொருளுடன் சிவப்பிரகாசம் பேசுகிறது. ஆணவ மலம் மூல மலம் என்பது சித்தாந்தக் கோட்பாடாகும். இது அநாதி முதல் உயிருடன் சேர்ந்து இருப்பதன் காரணத்தினால் இது சகஜமலம் என்றும் சொல்லப்படுகிறது. ஆணவ மலம் உயிரின் அறிவு முழுதினையும் மறைக்கும் என்று கூறுகிறது சிவப்பிரகாசம். அதே நேரத்தில் ஆணவ மலம் உயிரினுடைய குணமாகாது. உயிரினுடைய குணம் அறிவேயாகும். ஆணவ மலம் ஒரு சட்பொருள். உயிரின் குணம் சடமாக ஒருபொழுதும் இராது. உயிரின் தன்மையான அறிவை எவராலும் அழிக்க இயலாது. அநாதியிலே உயிர்களை அணுத்தன்மைப்படுத்தி நிற்பதனால் இம்மலம் ஆணவமலம் எனப்படலாயிற்று. அதன்விளைவாக உயிரானது தன் நிலையிலேயே நின்று பிறவற்றை வேறுபடுத்திப் பார்த்து உயிருக்கு உயிராக நிற்கும் இறைவனைப் பார்க்காது பார்முதல் பூதங்களின் சேர்க்கையினால் கிடைக்கும் அவத்தைகளில் மூழ்கிப் பரத்தை மறந்து நிற்கும்.
இங்கேதான் இறைவனுடைய கருணை தெரிகின்றது. உயிர்களுடைய அறிவு முழுவதும் ஆணவத்தால் கட்டுண்டு செயலற்றுக் கிடக்குமாயின் அவைகளுடைய அறிவு என்றுமே விளக்கம் பெறாமல் போய்விடும். உய்தி பெறுவதற்கும், இறைவனுடைய திருவடிகளை உணருவதற்கும் வாய்ப்புகள் கிட்டாமலும் போய்விடும். உயிர்களுக்கோ ஆணவமலத்தின் தன்மையைக் குறைப்பதற்கு ஆற்றல் இல்லை. உயிர்களுடைய அறிவாற்றல் செயல்பட வேண்டுமென்றால், அதற்காக உயிர்கள் இச்சைப்பட வேண்டும். செய்வதற்கான செயல்களைப் பற்றி அறிவு கிட்ட வேண்டும். செயல்களைப் புரியும் ஆற்றலும் வர வேண்டும். இந்த ஆற்றல்களைத் தானே இயக்கிக் கொள்ளக்கூடிய திறமையும் உயிர்களுக்குச் சொந்தமாக கிடையாது. இந்த நிலையில்தான் செயலற்றுக்கிடக்கும் உயிர்களிடம் இறைவன் தனக்கான முழு இரக்கத் தன்மையினால் கருணை காட்டத் தொடங்குகின்றான். அதுவே இறைவனின் அருள் இயல்பு ஆகும்.
இறைவன் உயிர்களுக்கு மாயையாகிய உடலையும், கருவி கரணங்களையும் கொடுத்து அருளுகின்றான். உயிர்களை அவற்றுடன் சேர்த்து இயக்கச் செய்கின்றான். இன்பம் பெறுவதற்குரீய பிறவியைத் தந்தருளுகின்றான். அந்தப்
பிறவியிலேயே இன்பத்தோடு துன்பங்களைத் தரக்கூடிய பந்த பாசங்களை உயிர்களுக்கு அமைத்து அருளுகின்றான். வினைகளைச் செய்ய வைக்கின்றான். உடலின் கூறுகளெல்லாம் வினைகளைப் புரிவதற்காகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறாக உயிர்கள் பல பிறவிகள் பெற்றெடுத்து, மலபரிபாகம் நிகழ்த்த, தூய்மைப்பட்டு முக்தி நிலையை அடையச் செய்வதும் இறைவனுடைய பேரருளாகும்.
"இன்பப் பிறவி படைத்த இறைவனுந்
துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன்
என்பிற் கொளுவி இசைந்தறு தோற்றசை
முன்பிற் கொளுவி முடிகுவ தாக்குமே" (திருமந்திரம் - 432)
உயிர்கள் பக்குவம் பெற மாயையும் கன்மமும் தேவைப்படுகின்றன. உயிரின் அறிவை மறைத்து நிற்பது ஆணவம். ஆகவே, இது இருளாகும். அந்த இருளைச் சிறிது சிறிதாகப் போக்கி உயிரானது உடல் கருவிகள் மூலமாக சுயானுபவம் பெற உதவுவது மாயையாகும். மாயை உயிருக்கு விளக்கம் தருகின்றது. எனவே, சிவப்பிரகாசம் மாயையை ஒளி எனவும் குறிப்பிடுகிறது. மாயையுடன் கலந்த உயிர் ஒருவித மயக்கத்தால் வினைகளைப் புரிகின்றது. இந்த மயக்கத்தைத் தெளியவைப்பது இறைவனுடைய அருட்சக்தியாகும். பாம்பு தீண்டிய ஒருவனுடைய உடலில் பாம்பின் விஷம் முழுவதும் பரவ அவன் மயக்கம் அடைகின்றான். மந்திரவாதி கருட மந்திரத்தைக் கூறி மயக்கத்தைச் சிறிது சிறிதாக நீங்கச் செய்து விஷத்தை முறிவு செய்யும் மருந்தினையும் பியோகிக்கின்றான். மயக்கம் தெளிந்த பின்னர் அவன் மருத்துவமிருத்துவனைத் தெரிந்து கொள்கின்றான். பாராட்டுகின்றான். அதுபோலவே இறைவன் மாயை, கன்மரீதியான மயக்கத்தை உயிர்களுக்கு அளித்து தனது அருளினால் உயிர்களை அவற்றிடமிருந்து மீளவும் செய்கின்றான்.
இவையெல்லாம் இறைவன் செயல் என்று கூட நாம் உணராத அளவுக்கு ஆணவமலத்தின் மறைப்புத்திறன் செயல்புரிகின்றது. இதையும் செய்பவன் இறைவன் அல்லவா இறைவனுடைய சக்தி இவ்வகையில் திரோதான சக்தி எனப்படும். ஒரு குழந்தைக்கு நோய் வருகின்றது. நோயைத் தீர்ப்பது தாயின் பொறுப்பாக அமைகின்றது. இந்தப் பொறுப்பினைத் தாயானவள் இயல்பாகவே நிறைவேற்றுகின்றாள். குழந்தையின் மேல் அன்பு கொண்ட காரணத்தினால் குழந்தை நோய் நீங்கிச்சுகம் பெற வேண்டும். என்கிற எண்ணத்துடனேயே குழந்தை அழுதாலும், குழந்தையைச் சற்றுக் கட்டுப்படுத்திச் சில வேளைகளில் கொடுமையான நடத்தையுடன் குழந்தைக்குக் கசப்பான மருந்தை ஊட்டிச் சிகிச்சை அளிக்கிறாள். குழந்தை குணமடைந்ததும் அதைத் தூக்கி வைத்துக் கொஞ்சிக் குலாவுகின்றாள். முதலில் கொடுமையான நடத்தையால் பாதிக்கப்பட்ட குழந்தைக்குத் தாயின் செய்கைகள் புரியாமல் இருக்கலாம். அவ்வாறே இறைவன் திரோதான சக்தி வழியாய் ஆணவமலத்தை இயக்கி உயிர்களை அவத்தைகளுக்கு உட்படுத்தி, மலபரிபாகம் அடையச் செய்து, பேரருள் காட்டி கட்டிக்கொள்கின்றான்.
ஆணவமலத்தின் மறைக்கும் சக்தியாக இயங்கிய திரோதான சக்தி மலபரிபாக நிலையில் ஒளிநிலையாக விளங்குகின்றது. திரோதான சக்தியும் அருட்சக்தியே ஆகும். திரோதான சக்தி வேறு அருட்சக்தி வேறு என்பதில்லை. திரோபவத்தை மறக்கருணை என்றும் கூறுவதுண்டு. திருமூலர் இதை "அரைக்கின்ற அருள்" என்று குறிப்பிடுகின்றார். இதை "அரிக்கின்ற அருள்" என்று அழைத்தாலும் சிறக்கும். இறைவனின் தரோதான சக்தி உயிரைச் சார்ந்த ஆணவ மலத்தின் மறைத்தல் தன்மையை இயக்கி உயிரைக் கன்மம், மாயை ஆகிய மலங்களில் ஈடுபடச் செய்கின்றது. இவ்வாறு உயிரை ஈடுபடுத்தியே இறைவன் அது உய்வதற்கான பாதையை விளக்குகின்றான்.
இறைவனுடைய மறக்கருணை திரோதான சக்தியாக நின்று இருவினைப் பயனை ஊட்டுவிக்கின்றது. உயிரைப் பேதிக்கின்றது. உலக வழியிலே போகச் செய்கின்றது. ஆயினும் கடைசியில் இறைவனுடைய திருவடி தரிசனத்திற்கு வித்திடுகிறது. "பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளையாள் பாதத்திறம் பாடி ஆடலோர் எம்பாவாய்" என்கிறார் மணிவாசகப் பெருமான்.
இதே திரோதான சக்தியை அருட்சக்தியாக்கி நமக்கு உதவுவதும் இறைவனாகும். ஆணவ மலம் உயிர் மெயய்றிவைப் பெற முடியாதவாறு ஒரு மறைப்பினைச் செய்கிறது. உயிர் இறைவனருள் பெற்றவுடன் இந்த மயக்கமானது நீங்குகின்றது. மறக்கருணை இறைவன் திருவருளால் அறக்கருணையாக மாறுகிறது. இதைக் "கருணைகூர்ந்த அருள்திரு நோக்கம்" என்பார் சேக்கிழார்பெருமான், கண்ணப்ப நாயனார் வரலாற்றில் நாயனார் காளத்திநாதரைக் காணும் நேரத்திலேயே மறக்கருணை அறக்கருணையாக மாறும் ஒரு ஒப்பற்ற நிகழ்ச்சியைக் காண்கின்றோம். காளத்திநாதரின் கருணைகூர்ந்த அருள்திரு நோக்கம் கண்ணப்பநாயனார் மீது பதிந்த மாத்திரத்திலேயே தத்துவங்கள் என்னும் பெருகுசோபானத்தை நாயனார் கடந்தவரானார். அநாதியே தொடர்ந்துவந்த, நாயனாரைச் சார்ந்து நின்ற மலங்கள் அவரைவிட்டு நீங்குகின்றன என்கிறார் சேக்கிழார் பெருமான். கண்ணப்பநாயனார் ஒப்பற்ற அன்பு உருவமாயினார். அன்பே சிவமாதலால் நாயனாருடைய தவத்தினால் தூய்மை பெற்ற உயிரானது சிவமாம் தன்மையைப் பெற்றது.
"திங்கள்சேர் சடையார் தம்மைச் சென்றவர்காணா முன்னே
அங்கணர் கருணை கூர்ந்த அருட்டிரு நோக்க மெய்த்
தங்கிய பவத்தின் முன்னைச் சார்புவிட்டகல நீங்கிப்
பொங்கிய வொளியின் நீழற் பொருவில் அன்புருவ மானார்"
(திருத்தொண்டர் புராணம் - 753)
திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகப் பெருமான் ஞானகுருவைக் கண்டு சரணடைந்த மாத்திரமே அளுணர்வினைப் பெறுகின்றார். உயிர் வாழ்க்கை வெறுத்தது. தனது சொந்த முயற்சியின்றி இறைவன் தன் உள்ளத்தின் இருளை மாற்றி ஒளியினைத் தந்த பாங்கினைக் கண்டு வியக்கின்றார்.
"நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம வெனப்பெற்றேன்
தேனாயின் னமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான்
தானேவந் தென துள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான்
ஊனாரு முயிர்வாழ்க்கை யறுத்தன்றே வெறுத்திடவே"
(திருவாசகம் - 553)
திரோபவம் நீங்குவதும் அருளுணர்வு பிறப்பதும் இறைவனின் செயல்களாகும் ஒன்று மறைந்து மற்றது தோன்றப் பிறக்கும் தெளிவில், உலகமெனும் நாடக மேடையில், நாம் நடிக்கும் நாடகம் உயிர் உய்வதற்கு உதவாது என்றும் அறிவு உருவாகிறது. சித்தவிகாரக் கலக்கம் திரோபவ நிலை.
இறையருளே அதைத் தெளிவிக்கவும் செய்யும்.
"வைத்த GF, பெண்டிர், மக்கள், குலம், கல்வி, என்னும்
பித்த உலகில், பிறப்போது இறப்பு, என்னும்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவர்க்கே - சென்று - ஊதாய், கோத்தும்பீ" (திருவாசகம் - 220)
அருளாளர்கள் உள்ளளி பெற்றவர்கள். ஆணவமலத்தின் மறைத்தலாகிய சக்தியின் வலிமை குன்றி, அகத்தே சிவ ஒளி விளங்கி நிற்கும் தன்மையைப் பெற்றவர்கள். ஞானப்பால் உண்டு சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் பெற்றார் என்பதில்லை. ஆளுடைய பிள்ளையார் சீர்காழியில் பிறக்கும் முன்னரும் இறையடி வழுவாத பண்பினராக இருந்தார். ஆயினும், இறைவன் ஒருவகை மயக்கத்தைச் செய்தவன் என்றும் அவனே பிள்ளையாரை இப்பிறவியில் மண்ணின்மேல் பிறக்குமாறு காட்டினான் என்றும் ஞானசம்பந்தப் பெருமான் அருளுகிறார். இந்தக் கருத்துடன் திருத்துருத்தியில் ஆளுடைய பிள்ளையார் பாடிய திருப்பதிகம் சிந்தனைக்குரியது.
"துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் நின்னடி
மறக்கிலாத என்னை மையல் செய்திம் மண்ணின்மேல்
பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்பு விட்டு
இறக்குமாறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே"
"என்னை மையல் செய்து இம்மண்ணின்மேல் பிறக்குமாறு காட்டினாய்" என்கிறார் திருஞானசம்பந்தர். "ஏன் இவ்வாறு செய்தாய்?" என்று இறைவனைக் கேட்பது போலவே இது அமைந்துள்ளது. திருஞானசம்பந்தப் பெருமானுக்கு முற்பிறவியிலும் இப்பிறவியிலும் இறைவனைப் பற்றி மயக்கமில்லை. ஆயினும், இறைவன் தன்னை மையல் செய்தான் என்கிறார். பெருமானின் வியப்பினை இது காட்டுகின்றது. இறைவன் தனது மறைப்புச் சக்தியில் சிறிதைக் காட்டியுள்ளான். ஆனால், ஞானசம்பந்தர் தமக்கு இவ்வாறு செய்ததை ஒரு குற்றமாகக் கொள்ளவில்லை. இம்மண்ணில் பெருமானுக்குத் திருநெறியாகிய திருத்தொண்டினைப் புரிய வேண்டிய பொறுப்பு இருந்த காரணத்தால் பெருமானை இவ்வுலகிற்கு வரவழைத்து அவர் அப்பணியை மேற்கொள்ளுமாறு அருள்புரிகின்றான் என்பதே சான்றோர்களின் கருத்தாகும்.
திருவருள் வரபெற்று இறையுணர்விலே திளைக்கும் அடியார்களுடைய உள்ளம் முழுமையும் இறைஞான்மி நிரம்பப்பெற்றிருக்கும் காரணத்தினால், அவர்களுடைய கருவி கரணங்கள் இறைவனுடைய சித்தத்தின்படியே செல்கின்றன. மலங்கள் நீங்கிய நிலையில் உயிரானது கருவி கரணங்களை இறைவன்பால் இயல்பாகவே செலுத்துகின்றன.
"தானே புலன்ஐந்துந் தன்வச மாயிடும்;
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்;
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்;
தானே தனித்தெம் பிரான்தனைச் சந்தித்தே" (திருமந்திரம் - 139)
சிவமாம் தன்மை பெற்ற உயிரானது எங்கும் எதிலும் சிவபரம்பொருளையே காண்கிறது. இறைவனுடைய மறைப்புச் சக்தி ஆணவமலத்தின் மூலமாக செயல்படும்பொழுது ஊனக்கண்ணானது பலவற்றைக் கண்டாலும் தன்னையும் தனது தலைவனையும் தெரிந்து கொள்வதில்லை. "காட்டிய கண்ணே தனைக்காணா;கண்ணுக்கு காட்டிய உள்ளத்தை கண்காணா - காட்டிய உள்ளம் தனைக்காணா" என்பது மெய்கண்டதேவரின் திருவாக்கு. உள்ளத்தில் இருள் நீங்கி ஒளிபெற்ற பின் கண்ணானது அகத்திலும் புறத்திலும் பரம்பொருளின் பேரியக்கத்தைக் காணும் ஆற்றலைப் பெறுகிறது. "மறைத்தலைச் செய்கின்ற இறைவன் என்னோடு உடனாய் நிற்கின்ற அருள் தொடர்பினை என் உள்ளத்திலே உணர்ந்து கொண்டேன். எனவே, அவன் எனது உள்ளும் புறமும் நிரம்பி அருள்செய்து கொண்டே இருப்பான். அதை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் நீங்களும் இறைவனை உள்ளத்தில் வைத்து வெளியே புறப்பட்டு ஓடாது நிறுத்திக் கொள்ளலாம்" என்று கூறுவார் திருமூலர்.
"ஒளித்துவைத் தேன்உள்ளுற உணர்ந்து ஈசனை
வெளிப்பட்டு நின்று அருள் செய்திடு மீண்டே
களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சியு மாமே" (திருமந்திரம் - 437)