"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்"
சைவ சமயத்தின் மறுபெயர் திருத்தொண்டுநெறி எனலாம். கைம்மாறு கருதாது மக்களுக்குப் பணி செய்து கிடப்பதே தொண்டு நெறியாகும். எறும்பு முதல் யானை ஈறாக எல்லா உயிர்கட்கும் உதவி செய்தலும் தொண்டாகும். ஒரு பயனைக் கருதிச் செய்யும் பணி தொண்டாகாது. தொண்டேனும் உணர்வு அன்பு நிறைந்த உள்ளத்தின் வெளிக்காட்டாகும். இறைவனின் திருவடிகளிலே தன்னை அர்ப்பணித்து, எல்லாம் அவன் செயல் என்கின்ற நினைப்பில் வேற்றுமை மறந்து உயிர்களையெல்லாம் ஒன்றாகக் கருதித் தன் அறிவையும் ஆற்றலையும் பிறருக்கு எந்த வகையிலும் பயன்படுத்தலே தொண்டாகும்.
திருநாவுக்கரசர் பெருமான் தொண்டுநெறிக்கு ஓர் இலக்கணமாக வாழ்ந்தார். "தன்கடன் அடியேனையும் தாங்குதல்;என்கடன் பணிசெய்து கிடப்பதே" என்கிற ஒலியை எழுப்பினவர் அப்பர்பெருமான் ஆவார். அடிகள் கையில் உழவாரப்படை ஏந்தித் திருக்கோயில்களிலும், திருவீதிகளிலும் துப்புரவப் பணிகள் செய்தார். மக்கள் உய்வடைய பல அருள்வாக்குகள் வழங்கினார். பதிகங்கள் பாடினார். ஞானசம்பந்தப் பெருமானுக்குப் பல்லக்குத் தாங்கினார். பாம்பால் மாண்ட அப்பூதியடிகளின் சிறுவனை எழுப்பினார். திருவீழிமிழலையில் மழையின்றி வறுமையால் வாடிய மக்களுக்குச் சிவனருள் துணைகொண்டு உணவு அளித்தார். இப்பூவுலகில் எண்ணில் கோடி மக்கள் பெரும்பாலும் தன்னலத்திற்கே அரும்பாடுப்பட்டுத் தங்களது அறிவையும், ஆற்றலையும் வீணாக்குகின்றனர். பயனற்ற வாழ்வை நடத்தி வரும் மக்களிடையே இறை எண்ணத்தை வித்திட்டு, அந்த வித்தானது தன்னலமற்ற உள்ளமாக வளர்வதற்காக அருள்மழையை என்றும் பொழிந்து கொண்டிருக்கும் இறைவன் வழியைத்தொண்டுநெறி மூலமாகத் தெளிவாக எடுத்துக்காட்டித் தன்னையே தொண்டு நெறி மூலமாகத் தெளிவாக எடுத்துக்காட்டித் தன்னையே தொண்டுமயமாக்கிக் கொண்டவர் அப்பர் பெருமான்.
தொண்டுநெறிக்கு அடிப்படை தன்னலமற்ற உள்ளமாகும். நான், எனது என்கிற நினைப்பு மாற வேண்டும். இந்த உடலை, அதனுடன் சேர்ந்துள்ள கருவிகளை, நான், எனது என்று கருதிக்கொண்டிருக்கும் வரை தன்னலமற்ற தன்மை நமது உள்ளத்திலே புகாது. இந்த அறியாமையை போக்க இறைவன் அருள் வேண்டும். நமது எண்ணங்களும் உணர்வுகளும் புறப்பொருள்கள் மீது உள்ள பற்றினை நீக்கி, நம்முள்ளேயே குடிகொண்டுள்ள பேரறிவுப் பிழம்பை நெருங்க முயல வேண்டும். நெருங்க நெருங்க அறியாமைத் திரையாக இயங்கி வருகின்றது என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மனித உள்ளம் இரண்டு நிலைகளில் இயங்குகின்றது. ஒன்று அறிவுநிலை. மற்றது உணர்வு நிலை. அறிவுநிலையில் நின்று ஒன்றை ஆராய நாம் முற்படும்போது அதன் தன்மையைப் பாகுபடுத்தி, பல பிரிவுகளாக்கி அவற்றுள் உட்புகுந்து அப்பொருளின் அடிப்படையில் உண்மையைப் பெற முயலுகின்றோம். அதேபொருளை உணர்வுநிலையிலிருந்து பார்க்கும் பொழுது அது இது என்று பாகுபடுத்திப் பேசாமல் அப்பொருளின் முழுமைத் தன்மையைக் காண விழைகின்றோம். அறிவு பாகுபடுத்தும். உணர்வு சேர்த்துத் தரும். அறிவு ஒரு பொருளின் பகுதித் தன்மையைக் காண்பது. உணர்வு அப்பொருளின் முழுமைத் தன்மையை அடைய முற்படுவது தமிழகத்தின் சான்றோர்கள், வாழ்வின் உண்மையில் இந்த முழுமையைக் கண்டார்கள். சீவராசிகளின் ஒருமைப்பாட்டை இந்த முழுமையின் விளக்கமாகக் கண்டார்கள். சங்கத்தமிழ் காலம் முதற்கொண்டே தமிழர்களின் வாழ்வும் நெறியும் இந்த முழுமையின் அடிப்படையில் அமைந்துள்ளது. "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்றார் சங்கத்தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனார். எல்லா ஊரும் எமது ஊரே, எல்லா மனிதரும் எமது உறவே என்கிற எண்ணம் அன்பு நிறைந்த நெஞ்சத்திற்குத்தான் வரும். அறநெறியில் நிற்கும் நெஞ்சம் தான் இதன் உண்மையை உணரும். அப்போது நன்மை செய்தவர் நண்பர் தீமை செய்தவர் பகைவர் என்ற மனப்பாங்கிற்கு இடமில்லை. பூவலகில் பிறந்த ஒவ்வொரு உயிரும் இறப்பது இயற்கையே. இன்பம் வந்திடினும், துன்பம் நேர்ந்தபொழுதும் ஆற்றோடு போகும் தெப்பம்போல ஊழ்வினை உயிரைச் செலுத்துவதால் நடுநிலைமை கொண்டு, விவேகத்துடனும், பக்குவத்துடனும் தம் பணிகளைச் தொடர்ந்து செய்து வரும் மக்களின் வாழ்க்கையே அமைதி பெற்று முழுமையுடன் விளங்கும். இதுவல்லவோ முறை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் சான்றோர் மேற்கொண்ட சென்நெறிக்குப் பெயரே மெய்யறிவு என்றும் அந்த மெய்யறிவினால் நாம் பெறும் நிலைமை நடுவு நிலைமை என்றும் தமிழர் உள்ளத்தில் ஊறிக்கிடந்த உயர்ந்ததோர் உண்மையை ஓர் சிறந்த பாடலின் மூலம் கணியன் பூங்குன்றனார் விளக்கும் அழகே அழகு.
"யாதும் ஊரே;யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே;வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்,
இன்னாது என்றலும் இலமே;'மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்
முறைவழிப் படூஉம்" என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை வியத்தல் அதனினும் இலமே." (புறநானூறு - பாடல் - 192)
நடுவு நிலைமை அடைவது எளிதன்று. இறைவன் அருளாலேயே அது நடக்கும். "நடுவு நின்றார் சிலர் ஞானிகளாவர்;நடுவு நின்றார் சிலர் தேவருமாவர்" என்பார் திருமூலர். இறை அன்பின்றி நடுவு நிலைமை கைகூடல் கடினமாகும். இறை அன்பு உள்ளத்திலே நிரம்ப வழிந்து மற்றுமுள்ள எல்லாச் சீவராசிகளையும்
தன்னுள் அழுத்திக் கொள்ளும்போது ஒருமைப்பாட்டு உணர்வு உள்ளத்திலே வியாபமாக நிற்கும். பிற்படும் துன்பம் நமது துன்பமே என்னும் நினைப்பு அத்தகைய உள்ளத்திற்கே தோன்றுகிறது. மனிதர்கள் என்ன, விலங்குகளும் பறவைகளும் இறையின்ப வெள்ளத்தில் மூழ்கிப்பிறர்பால் தம் அன்பினைச் செலுத்திய நிகழ்ச்சிகள் பலவற்றைத் திருவிளையாடல் புராணத்தில் காணலாமே! அத்தகைய அன்பிற்கு ஈடாக ஈசன் அருளும் கிட்டும் என்பதும் தெளிவாகிறது. நாரைக்கு முக்தி கொடுத்த வரலாற்றில் அன்பின் அடிப்படையில் அமைந்த பறவைகளின் ஒருமைப்பாட்டு உணர்வு வியக்கத்தக்கதல்லவோ
"தன்கிளை யன்றி வேற்றுப் பறவைக ள் தாமும் தன்போல்
நன்கதி அடைய வேண்டிற் றேகொல் இந்நாரை செய்த
அன்பினில் வியப்போ? ஈசன் அருளினில் வியப்போ? அன்பர்க்கு
இன்புருவான ஈசன் அருள் அன்பர்க்கு எளிதே ஐய"
விலங்குகளும் பறவைகளும் ஒன்றையன்று நேசித்து உதவி செய்து கொள்வது கற்பனை அன்று. அன்றாட நிகழ்ச்சியாகவும் இதைப் பல இடங்களில் காணலாம். அவற்றை ஒன்றுசேர வைக்கும் உணர்வு நம்மால் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். ஆனால், மனுநீதிச் சோழன் உள்ளத்திலே பிறந்த அந்த ஒப்பற்ற தியாக உணர்ச்சியை ஒருவரும் மறுக்க முடியாது. ஏதோ ஒரு சூழ்நிலையில் ஒரு கன்று தனது அரசு இளங்குமாரன் ஏறிச் சென்ற தேர்க்காலில் பட்டு இறந்ததால் ஏற்பட்ட தாங்கவொணாத துன்பத்தைத் தாய்ப்பசு திருவாரூரை ஆண்ட சோழ மன்னனிடம் தெரிவித்தபொழுது அந்தத்துன்பத்தைப் போக்க வெறுமனே அந்தணர்கள் விதித்த முறை வழியில் நிற்பது மட்டுமே போதாது என்கிற எண்ணம் மன்னனின் உள்ளத்திலே தோன்றியது. அவன் எல்லா உயிர்களையும் ஒன்றாகவே கருதினான் என்கிற உண்மை நன்கு விளங்கும். பசுவின் துன்பத்தைத் தான் நீக்க இயலாதவன் ஆயினும் அதைத் தானும் தாங்குவதே பொருத்தமாகும். அதுவே தருமம் என்று கூறி மன்னவன் தேர்க்காலில் தனது மகனைக் கிடத்தி அவன்மேல் தேரைச் செலுத்தினான்.
"எனமொழிந்து மற்றதனுக்கு இனி இதுவே செயல் இவ்ஆன்
மனம்அழியும் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும்இது
தனதுறுபேர் இடர்யானும் தாங்குவதே தருமம்என
அனகன்அரும் பொருள் துணிந்தான் அமைச்சரும்
அஞ்சினர் அகன்றார்". (பெரிய புராணம்)
இவ்வாறு செய்து அறநெறிக்கு ஓர் புதிய விளக்கத்தை மனுநீதிச் சோழன் உலகத்திற்கு அளித்துள்ளான். பிற உயிர்கள் படும் துன்பத்தைப் போக்க முயலுதலும், அது இயலாதபொழுது அந்தத் துன்பத்தைத் தானே ஏற்று அனுபவித்தலும் அறநெறியின் உயர்ந்த படியாகும். பசுங்கன்றாயினும் வேறு எந்த விலங்காயினும் அது இறைவன் உறையும் இம் என்கிற மனப்பான்மை, தனக்கும்
மற்ற உயிர்களுக்கு மிடையே அடிப்படையான வேற்றுமை ஒன்றுமில்லை என்கிற உணர்வு. அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் எல்லாம் இறைவனுடைய பேரறிவும் பேராற்றலும் இயங்கும் மாபெரும் மேடை என்கிற கொள்கையில் தீவிர நம்பிக்கை ஆகியவை மெய்யுணர்வு பெற்றவர்களுடைய அனுபவச் சின்னங்களாகும்.
"உறை சேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம்
நிறை சேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே
நின்றான்"
என்று ஞானசம்பந்தப் பெருமான் அருளுகின்றார்.
இந்தக் காட்சி அனுபவத்தை நேரில் பெற்றுப் பேரானந்த வெள்ளத்தில் திளைத்து நின்றவர் திருநாவுக்கரசர் நாயனாராவார். கைலை மலையில் இறைவனுடைய திருக்கோலத்தைக் காண ஆவலுடையவராகச் சென்ற அப்பர் பெருமான் இறைவனுடைய அருள் ஆணையின்படி பொய்கையுள் மூழ்கித் திருவையாற்றில் ஒரு வாவியின்மேல் வந்து எழுந்தனர். கரையேறித் திருக்கோவிலை அடையுமுன்னர் நாயனார் "காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன" கண்டார். சரம், அசரம் ஆகிய எல்லாப் பொருட்களுட்ம ஆண், பெண் என்கிற பகுப்பில் கண்டு அவற்றில் "சத்தியும் சிவமும் சரிதை" கண்டு, அப்பர்பெருமான் இறைவனுடைய திருப்பாதம் காண்கின்றார். கண்டு அறியாதன காண்கின்றார்.
"மாதர் பிறைக்கண்ணி யானை மலையான் மகளடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடுப டாம லையா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்;
கண்டே னவர்திருப் பாதங்;கண்டறி யாதன கண்டேன்".
நாவுக்கரசர் பெருமான் அகில சராசரமும் சிவமும் சக்தியுமாக நிற்கக் கண்டார். முதலில் கண்ட வேற்றுமைகள் மறைகின்றன. காண்பிப்பானும் காணப்படும் பொருளும் இணைந்து நிற்கும் நிலை காண்பான் தனித்து நின்று பார்க்கும் நிலையாகும். பரம்பொருளின் திருப்பாதங்களின் காட்சி பெறும்பொழுது அந்தக் காட்சியின் ஐக்கிய நிலை மேலான சிவதரிசன அனுபவத்தைக் காண்பானுக்கு அளிக்கும்பொழுது உள்ளம் முழுமை பெறுகிறது. "கண்ட ஆனந்தக் கடலினைக் கண்களல் முகந்துகொண்டு" என்று அப்பர் பெருமானுடைய நிலையைச் சேக்கிழார் விளக்குவார்.
உள்ளத்தில் இறை உணர்வு நிரம்பி நிற்கும்பொழுது, சித்தம் சிவமாகி இருக்கும்பொழுது, "தெய்வம் என்பதோர் சித்தமுண்டாகி" உயிரானது சிவமாம் தன்மை பெறும்பொழுது வேற்றுமைக்கு இடமில்லை. இவ்வுலகத்தின் இயக்கம் பரம்பொருளின் அருட்சக்தியால் நடைபெறுகின்றது. அந்தச் சக்தியை அனுபவித்து
அருள் கடலில் மூழ்கி, அருளானந்தத்தை அனுபவித்து வரும் எல்லா உயிரினங்களும், உயிரற்றவையும் ஒரே குலத்தைச் சேர்ந்தவை. அங்குப் பல குலங்களுக்கு, பிரிவுகளுக்கு இடம் கிடையாது. நமது முதிர்ச்சிக்கேற்ப இறைவனைப் பல வழிகளில் வழிபாடு செய்கின்றோம். பல உருவங்களில் பரம்பொருளைக் காண விழைகின்றோம். நூறாயிரம் உருவங்கள் படைத்து நாமங்கள் சாற்றி அவனை நாம் போற்றிச் செய்தாலும் இறைவன் ஒருவனே, அவனைச் சார்ந்த உயிர்க் கூட்டங்கள் ஒன்றே. அவனுடைய அருள் சாதி, குலம் என்று எண்ணாது மக்களுடைய வினைக்கேற்ப அவைகளை அழைத்துச் செல்லும்.
"பலவுருவந் தன்னுருவே யாய பெருமான்'
"தாயுந்தந்தை பல்லுயிர்க்குந் தாமே யாய தலைவன்'
"எல்லார்க்கும் இல்லை என்னாது அருள் செய்வார்'
என்பது சுந்தரமூர்த்தி நாயனார் திருவாக்கு.
காணும் இடமெல்லாம் சிவபெருமானைப் பார்க்கின்றார் திருமூலர். யாரைப் பார்க்கினும், எதனைப் பார்க்கினும் பரம்பொருளாகிய சிவபெருமான் வியாபித்துள்ளதைத் திருமூலர் காண்கின்றார். அவனுடன் சேர்ந்து சிவசக்தியும் தன் இயக்கத்தை அகண்டமாய் நடத்தி வருவதைக் காண்கிறார். இறைவனுடைய திருக்கூத்து அகில சராசரங்களிலும் அணுவுக்கு அணுவாக உயிருக்குயிராக நடைபெறுவது அவருடைய மெய்யுணர்வின் தலையாய அனுபவமாக நிற்கின்றது. சிவனும் சக்தியும் எங்கெங்கும் தங்கித் தங்களுடைய விளையாட்டை நடத்தி வருகின்றனர். பிரபஞ்ச இயக்கத்திற்கு அவர்களுடைய விளையாடல் காரணமாக இருக்கின்றது. "ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார், இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்" (திருமந்திரம் - 396) பரம்பொருள் யாவற்றிலும் பொருந்தி ஐம்பெரும் தொழில்களைத் தனது சக்தியாலே செய்து உயிர்களுக்கு அருள் பாலிக்கின்றான்.
"எங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி
எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம்
எங்குஞ் சிவமா யிருத்தலால் எங்கெங்குந்
தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டதே". (திருமந்திரம் - 2722)
இறைநிலை எங்கும் ஊடுருவி நிற்கின்றது. மக்கள் அவரவர்களுடைய உணர்வுக்கேற்ப வெவ்வேறு உருவங்களில் இறைவனை வழிபட்டாலும் இறைவன் அவர்களுக்கு அந்தந்த உருவங்களில் நின்று அருள்பாலித்தாலும் இறை என்பது ஒன்றே. அந்த நிலையை மெய்யுணர்வு பெற்றவர்கள் முழுதும் அறிந்து கொள்வார்கள். அவர்களுடைய திருவாக்கு உண்மையின் முழுமையை நமக்குத் தெள்ளத் தெளிவாக்குகின்றது.
காரைக்கால் அம்மையார் இந்த உண்மையை,
"எக்கோலத் (து) எவ்வுருவாய் எத்தவங்கள்
அக்கோலத்து அவ்வுருவே ஆம்" (அற்புதத்திருவந்தாதி)
என்று விளக்குகின்றார்.
இந்த ஒருமைப்பாட்டு அனுபவத்தை உள்ளத்திலே கொண்ட வள்ளலார்.
"பொங்கும் சமயமெனும் நதிகளெலாம்
புகுந்து கலந்திட, நிறைவாய்ப்
பொங்கி ஓங்கும் கங்குகரை காணாத கடலே"
என்று இறைவனைப் புகழ்கின்றார்.
சிவனடியார்கள் சிவானுபவத்தை எங்கும் பெறுகிறார்கள். எதிலும் பெறுகிறார்கள். காவிரி பாயும் நாட்டின் பெருமையை அருமையாகப் பாடி வரும் சேக்கிழார் அடிகள் வளம் மிக்க நெல் வயல்களைக் காண்கின்றார். மணி நிறைந்த முதிர்ந்த கதிர்கள் வரிசை வரிசையாக, நெருக்கமாக நின்று வளைந்துகொடுக்கும் காட்சி சேக்கிழார் பெருமானுடைய பார்வைக்கு, அன்பின் வசப்பட்டு இறைவனுக்கு ஆட்செய்யும் அன்பர்கள் கூடி நின்று ஒருவருக்கொருவர் தலைவணங்கி இருப்பதைப் போல் தோன்றுகின்றது. மெய்ஞ்ஞானம் நிரம்பிய அன்பர்கள் அடக்கமே உடைமையாகக் கொள்வர். அப்பொழுது அவர்கள் தலைவணங்கியே நிற்பர். நெற்கதிர்கள் நின்ற காட்சி, சேக்கிழார் அடிகளுக்கு இறை அன்பர்கள் இறைவனுக்கு வணங்கி நின்று அன்பு செய்வதை நினைவூட்டுகின்றது. அடிகளுடைய உள்ளமெல்லாம் சிவமயமாக இருப்பதே இதற்குக் காரணம்.
தில்லைத் திருக்கோவில், அதற்கு வெளிப்பக்கத்தே மலைபோர் உயர்ந்த மதில்கள். அவற்றைச் சுற்றி ஆழ்ந்த அகழி. அகழியிலே தாமரை மலர்ந்துநின்ற ஒரு காட்சி தாமரை மலர்களில் தேன் உண்ணும் வண்டுகள் மகரந்தத் தூள்களின் படுக்கையில் புரண்டு விளையாடும்பொழுது அந்த மகரந்தத் தூள் வண்டுகளுடைய உடல்களை வெண்மையாக்குகின்றது. இதை நாம் காணும்பொழுது ஓர் இயற்கைக் காட்சி என்று மட்டும் நினைத்து விட்டுவிடுவோம் அல்லது கவனிக்கவும் மாட்டோம். ஆனால் தில்லை நகரை அடைந்து இந்தக் காட்சியைக் கண்ணுற்ற சுந்தரமூர்த்தி நாயனாருக்கு வேறுவிதமான எண்ணம் தோன்றுகிறது. மகரந்தத் தூளிலே படிந்து, உடல் முழுவதும் வெண்மை நிறத்தோடு தேன்வண்டுகள் இருந்த தோற்றம் புனிதமான திருநீறு பூசிய சிவனடியார்களைப் போன்ற தோற்றமாக ஆளுடை நம்பிகள் மனத்திலே நிறைந்த அன்பினைத் தருகின்றது. இதைக் கவிதை வடிவாக்கும் சேக்கிழார் பெருமானுடைய உயர்ந்த உள்ளத்தைப் பற்றியும் நம்மால் சொல்ல இயலுமா?
"மன்று ளாடுமது வின்னசை யாலே
மறைச்சு ரும்பறை புறத்தின் மருங்கே
குன்று போலுமணி மாமதில் சூழுங்
குண்ட கழ்க்கமல வண்டலர் கைதைத்
துன்று நீறுபுனை மேனிய வாகித்
தூய நீறுபுனை தொண்டர்க ளென்னச்
சென்று சென்றுமுரல் கின்றன கண்டு
சிந்தை யன்பொடு திளைத்தெதிர் சென்றார்" (பெரியபுராணம் - 242)
"எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான்' --- எவ்வுருவும்
தானேயாய் நின்றளிப்பான் தன்னில் பிறிதுருவம்
ஏனோர்க்கும் காண்பரிய எம்பெருமான்"
என்று சேரமான் பெருமான் திருக்கைலாய ஞானஉலாவில் பாடுகின்றார்.
சேரமான்பெருமான் அரச மரபில் உதித்தவர். ஆயினும் அரசாளும் உரிமை நேரில் பெற்றவர் அல்லர். ஆட்சி செய்து வந்த மன்னன் துறவு மேற்கொண்ட காரணத்தால் அமைச்சர்கள் இவரை அரச பொறுப்பு ஏற்கச் சொன்னார்கள். திருத்தொண்டுக்கு ஆட்சிப்பொறுப்பு இடையூறாகும் என்று பெருமான் கலங்கினார். இறைவனுடைய திருவருட்குறிப்பை நாடினார். இறைவன் அவரைப் பதவி ஏற்கச் சொன்னது மட்டுமன்று வேறொரு சிறந்த சக்தியையும் அவருக்கு அளித்தான். பல உயிர்கள் தமக்குள் செய்து கொள்கின்ற உரையாடலை உணர்ந்து கொள்ளும் ஆற்றலையும் இறைவன் அவருக்கு அளித்தான். இதையெல்லாம் சேரமான் பெருமான் பெரிதாக நினைக்கவில்லை. அரச பதவியேற்றுப்பட்டத்து யானையில் ஒருநாள் அவர் வந்துகொண்டிருக்கும்போது எதிரே வந்து கொண்டிருந்த வண்ணான் ஒருவனைக் காண்கின்றார். அவனுடைய உடலெல்லாம் உவர்மண் கரைந்து படிந்து வெண்மையாக இருந்தது. யானையிலிருந்து இறங்கிச் சேரமான் பெருமான் வண்ணானை வணங்குகின்றார். பதட்டப்பட்ட வண்ணான், சிந்தை கலங்கி, அரசனை வணங்கி "யார் என்று அடியேனைக் கொண்டது? அடியேன் அடிவண்ணான்" என்கிறான். அதற்குச் சேரமான் பெருமான் அளித்த பதில் உள்ளத்தை உருக்கும்.
"அடிச் சேரன் அடியேன் என்றும் திருநீற்றின்
வாரவேடம் நினைப்பித்தீர் வருந்தாது ஏகும்"
சேரமான் பெருமான் தன்னை வண்ணானிடமிருந்து பிரித்துப் பேசவில்லை. அவருடைய பண்புள்ளம் வண்ணானின் தோற்றத்தில் இறையடியாரின் நெஞ்சத்தைக் காண்கின்றது. இத்தகைய மன்னர்களை மீண்டும் காண்போமா? சமய, சாதி, குல பிரிவுகளை மெய்யுணர்வாளர்கள் ஏற்கவில்லை. ஒரு சமயம் நன்று மற்றது தீது என்கிற வாதத்தை "மாய மனிதர் மயக்க மதுமொழி" என்பார் திருமூலர். அறிவு வளர வளர உணர்வு குறைகின்றது. சமயங்களின் அடிப்படையில் பேசுபவர்கள் இறைவனை உள்ளவாறு உணர்ந்தவர் அல்லர். இறைவன் சமயங்களுக்கு அப்பாற்பட்டவன். ஆகவே அறுசமயங்களால் முடிவான பொருள் என்று கூறப்படும் தன்மை இல்லாதவன், இதைப்பற்றி நாம் ஆராயும்பொழுது கிடைக்கும் தெளிவு நமக்கு, நிலையான வீட்டின்பத்தை அளிக்கும்.
"ஆறு சமயமுங் கண்டவர் கண்டிலர்
ஆறு சமயப் பொருளும் அவனலன்
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
மாறுதல் இன்றி மனைபுக லாமே" (திருமந்திரம் - 1533)
சமயங்களின் நோக்கம் முடிவான பரம்பொருளை அடையும் வழியைத் தொட்டுக் காட்டுவதுதான். அதற்கு மாறாக சமயவாதிகள் தத்தம், சமயங்களே சிறந்தது என்றும் மற்றவை தாழ்ந்தது என்றும் கூறுவார்களேயானால் அவர்கள் குன்றைப் பார்த்துக் குரைக்கும் நாயைப் போல் இருப்பர் என்பது திருமந்திர உண்மை.
"ஒன்றது பேரூர் வழியா றதற்குள
என்றது போல இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயையத் தார்களே". (திருமந்திரம் - 1558)
சாதி, குலம், பிறப்பு ஆகிய பிரிவினைகள் மனிதனால் ஏற்படுத்தப்பட்டவை. அந்தப் பேதங்களில் சிக்குண்டு தடுமாறி அழிந்துபோவதைவிட சிவபரம்பொருளின் முன்னிலையில் சுடர்விடும் சோதியைக் கண்டுகொண்டு, நாம் காண்பவையெல்லாம் இறைவனுடைய செல்வங்கள் என்று உணர்ந்து, நான், எனது என்கிற சொற்களை நமது அகராதியிலிருந்து நீக்கிவிட்டால் இறைவனாகிய பேரழகினைக் காணலாம் என்று வழியைக் காண்பிக்கின்றார் மாணிக்கவாசகப் பெருமான்.
"சாதி, குலம், பிறப்பு என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை, அல்லல் அறுத்து, ஆட்கொண்டு
பேதை குணம், பிறர் உருவம், யான் எனது என் உரை மாய்த்துக்
கோது இல் அமுது ஆனானைக் குலாவு தில்லை கண்டேனே".
ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது உயர்ந்தோர் உணர்வு நிலை. ஓர் அருள் அனுபவமும் ஆகும். சீவராசிகள் பல வடிவங்களில் தோன்றி மறைகின்றன. நாடக மேடையில் நடிகன் ஒருவன் பல வேடங்களைத் தாங்கி நடிப்பது போல் சீவராசிகள் பிறவிதோறும் பல உடல்களையும், அனுபவங்களையும் தாங்கி நிற்கின்றன. ஆனால், அவற்றிற்கு அடிப்படை எங்கும் பரவி ஒளி வீசும் பரம்பொருளேயாகும். "எல்லாம் உடைய ஈசனே இறைவன்" என்பார் சேக்கிழார்பெருமான். இந்த உண்மையை உணர்ந்த சாக்கிய நாயனார் தொடக்கத்தில் பௌத்த மதத்தைச் சார்ந்தவராயினும் அந்த வேடத்தை நீக்காமலேயே சிவ பரம்பொருளைத் தன் உள்ளத்தில் வைத்துச் சங்கரனுடைய திருவடியை மறவாதிருத்தலே உண்மையாகிய உறுதிப்பொருள் என்று துணிந்தவராய் இருந்தார். இதனைச் சேக்கிழார் பெருமான்
"எந்நிலையி னின்றாலு மெக்கோலங் கொ ண்டாலும்
மன்னியசீர்ச் சங்கரன்றாள் மறவாமை பொரு"ளென்றே
துன்னியவே டந்தன்னைத் துறவாதே தூயசிவந்
தன்னைமிகு மன்பினான் மறவாமை தலைநிற்பார் (பெரியபுராணம்)
இறை இன்பத்தில் திளைத்து நிற்கும் உயிர் பிரபஞ்சத்தில் முழுமையைக் காண்கின்றது. ஒளிமயமான உணர்வுநிலையில் பேதங்கள் மறைகின்றன. புல், செடி, கொடிகளிலிருந்து தேவர் வரை இறைவனின் அவருக்கு எடுத்துக்காட்டாகவே தோன்றுகின்றன. இந்த நிலையில் நான், எனது என்கின்ற நினைப்பு நீங்கி நம்மை பிறப்பு, இறப்புச சூழலில் அழுத்தும். வினைப்பயன்களின் தன்மை ஆற்றல் அற்றதாக மாறுகிறது. நாம் காலனுக்கு அச்சப்படவேண்டியதில்லை. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்கிற உணர்வு தானாகவே நம்முள் புகுந்துகொள்கின்றது. இதையே நினைந்து உய்வடையுங்கள்.
"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே" (திருமந்திரம் - 2104)