"மனவாலயம்" இறைவன் திருவருளால் பிரபஞ்ச இயக்கம் நடைபெறுகிறது உயிர்கள் உடலோடு சேர்ந்து, வாழ்க்கை அனுபவம் பெற்று வினைப்பயன்களை நுகர்கின்றன பல பிறவிகள் எடுத்த பின்ன

"மனவாலயம்"

இறைவன் திருவருளால் பிரபஞ்ச இயக்கம் நடைபெறுகிறது. உயிர்கள் உடலோடு சேர்ந்து, வாழ்க்கை அனுபவம் பெற்று வினைப்பயன்களை நுகர்கின்றன. பல பிறவிகள் எடுத்த பின்னர் உயிர்கள் தங்களைக் கட்டி நிற்கும் பாசத் தளைகளைத் தளர்த்திக் கொள்கின்றன. இவற்றிற்கெல்லாம் மூல காரணம் இறைவனது அருளே. இறைவன் உயிர்களுக்கு அப்பாற்பட்டு இருப்பதோடு, அவற்றை நடாத்தியும் செல்கின்றான். உயிருக்கு உயிராக நின்று அதற்கு இயங்கும் தன்மையினை வழங்குகின்றான். இறைவனுடைய அருளால் உயிருடைய அறிவாற்றல் செயல்படுகின்றது. இந்த உண்மை நிலையினைத் திருவருளால் கண்டு உணர்வதே அகப் பூசையாகும். இதைக் கண்டு உணர்தல் மனவாலயத்தில் நடைபெறுகின்றது. அந்த உணர்வினால் உள்ளளி பெறுகின்ற அறிவானது தன் நிலையைப் புரிந்துகொள்கிறது. இறைவனுக்கும் தனக்கும் உள்ள தொடர்பினைத் தெரிந்து கொள்கின்றது. இறைவன் திருவடிகளிலே தன்னை அர்ப்பணித்துக் கொள்வதையே பெரிய பேறாகக் கருதுகின்றது. இறை அருள் நிரம்பிய உள்ளம் அன்புமயமாகின்றது. அந்த அன்பு ஈசனுக்கு மட்டுமல்லாது, எல்லா உயிர்களையும் தொட்டுத் தன்னுள் அடக்கிக் கொள்கின்றது. இந்த ஒப்பற்ற நிலையே ஞான நிலையாகும். பக்குவமடைந்த உயிரானது இந்த நிலையிலே ஊன்றி நிற்பது ஞான பூசையாகும். திருவருளைத் தவிர வேறொன்றுமில்லை என்கிற அறிவு உள்ளத்திலே ஆழமாகப் பதிந்து, அதைப்பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க உள்ளத்திலே தேனினும், பாலினும், கரும்பினும் மிக்க இன்பம் நிரம்பி வழிந்தோடுகிறது. அரன் மீது அன்பு வைக்கும் பண்பு தானாகவே, இயல்பாக உள்ளத்தில் எழுந்து, உயிரினை அருளுடைய பொருளாக்குகின்றது.

உயிரானது உள்ளளி பெற்றுத் திருவருளை உணர்ந்துகொண்டு, திருவருளோடு தன்னை இணைத்துக் கொள்வது ஞான வழிபாடாகும். இதனைத் திருஞானசம்பந்தப் பெருமான் "ஞான மாமலர்" என்பார். அவர் பாண்டி நாட்டில் உள்ள தலங்களுக்குச் சென்று வழிபட்டபோது திருக்கானப்பேர் என்கிற திருத்தலத்திற்கு வந்தார். இப்பொழுது இந்தத் தலம் காளையார் கோவில் எனப் பெயர் பெற்றுள்ளது. இந்த இடத்தைப் பற்றிய புராணச் செய்தி ஒன்று உண்டு. இந்திரனுடைய யானைஐராவதமாகும். ஒரு காலத்தில் ஐராவதம் சாபம் பெற்று, காட்டு யானையாகி இத்தலத்திற்கு வந்து, சிவபூசை செய்து முன்னிலை பெற்றது. திருஞானசம்பந்தப் பெருமான் இந்தச் செய்தியைக் கேள்வியுற்றார். காட்டு யானை ஒரு பெண் யானையுடன் வந்து, இறைவனுக்குத் தலைவணங்கிய இடம் என்பதை அவருடைய கற்பனையில் வைத்தார். பெரிய யானை இடத்தைச் சுத்தம் செய்கின்றது, பெருக்குகின்றது. இரண்டு யானைகளும் இறைவனை மலர்களால் பூசிக்கும் ஒரு காட்சி அவருடைய மனத்திலே மேலும் சிந்தனையைப் பெருக்குகின்றது. யானையை ஆணவத்திற்கு அறிகுறியாகச் சொல்லுவது வழக்கம். மதம்மிக்க யானைகளை உடலிலே இயங்குகின்ற இந்திரியங்களுக்கு ஒப்பாகவும் சொல்லுவதுண்டு. "ஆக மதத்தன ஐந்து களிறுள" என்பார் திருமூலர். இந்த ஐந்து யானைகளை அடக்கி, ஞானத் திரியைத் தூண்டுவது உயிரின் நோக்கமாகும்.

"ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவென்னும்

ஞானத் திரியைக் கொளுவி"

இந்திர லோகத்தில் ஆணவத்தால் செருக்குற்ற ஐராவதம், சாபக்கேட்டினால் திருக்கானப்பேருக்கு வந்து, இறைவனை அர்ச்சித்துத் தலைகுனிந்து நடந்து, தனது சாபத்தைப் போக்கிப் கொள்கிறது. திருக்கானப்பேருக்கு வந்து இறைவனைத் தொழும் ஒவ்வொரு மனிதனும், பிறப்பின் குறிக்கோளை அடையலாம். உடம்பிலுள்ள குறைகளை நீக்கிக் கொள்ளலாம், நோய்களைத் தீர்த்துக் கொள்ளலாம். உள்ளத் தூய்மையைப் பெறலாம். பாசத் தளைகளிலிருந்து விடுபடலாம். எப்போது? இறைவனை ஞான மாமலர் கொண்டு வழிபடும்பொழுது என்றார் திருஞானசம்பந்தர். மலர்களில் சிறந்தது ஞான மாமலர். புறப்பூசைக்கு இயற்கையிலே கிடைக்கும் பலவகையான பூக்கள் பயன்படும். அகப்பூசைக்குப் பயன்படுவது உள்ளளி. "உணரும் ஒளிவிளக்கு". அதுவே "வீறாமலர்".

"மானமா மடப்பிடி வன்கையால் அலகிடக்

கானமார் கடகரி வழிபடும் கானப்பேர்

ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடஎண்ணின்

ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே" (திருஞானசம்பந்தர் தேவாரம்)

ஞான மலர் அர்ச்சனைக்கு அன்பல்லவா அடிப்படை!அப்பர் பெருமான் வேகமாகப் பேசுகின்றார். புறத்தூய்மை மட்டும் போதாது. அகத்தூய்மையும் வேண்டும் என்பார்கள். பல திருத்தலங்களுக்குச் சென்று தீர்த்தங்களிலே நீராடி, புறத்தூய்மை பெறலாம். ஆனால், அவற்றால் மட்டும் அகத்தூய்மை கிடைக்காது. அகத்தூய்மைக்கு அன்பு மிகத் தேவை. இறைவனிடத்தில் அன்பு செலுத்தாவிடில், அகத்தூய்மை கிட்டாது. அன்பின்றிச் செய்யும் பணிகளெல்லாம், தண்ணீரை ஓட்டைக் குடத்தில் சேமித்து வைப்பது போலாகும் என்கிறார் திருமூலர். ஞானத்தினால் அன்பும், அன்பால் ஞானமும் உலகத்தில் தோன்றுகின்றன. அன்பும் ஞானமும் இரண்டல்ல, ஞானம் பெற்றார் அன்புடையவராவர். அன்பெனும் பண்பை உடையவர்கள் ஞானம் பெற்றவர்களும் ஆவார்கள்.

"கோடி தீர்த்தம் கலந்து குளித்து, அவை

ஆடினாலும், அரனுக்கு அன்பு இல்லையேல்,

ஓடும் நீரினை ஓட்டைக் குடத்துஅட்டி

மூடி வைத்திட்ட மூர்க்கனோடு ஒக்குமே" (அப்பர் தேவாரம்)

தொன்மைமிக்க திருமைலாப்புரியில் வாழ்ந்தவர் வாயிலார் நாயனார். அகப்பூசை செய்து சிவனருள் பெற்றார். உயர்ந்த தபோதனர். சிவபெருமானுடைய திருத்தொண்டிலேயே பெருவிருப்பத்துடன் விளங்கினார்.

"நாயனார் திருத்தொண்டில் நயப்புறு

மேய காதல் விருப்பின் விளங்குவார்"

(பெரியபுராணம் - வாயிலார் நாயனார் 7)

அவரும் இறைவனுக்கு அர்ச்சனை செய்வார். அவருடைய மனமே கோயிலாக அமைந்தது. இறைவன் அவருடைய மனத்திலே நிலையாக நின்றான். வாயிலார் நாயனாருடைய உணர்வெல்லாம் சிவபெருமானைப் பற்றியதே. மனக்கோவிலில் ஒளிவீசும் சுடர் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. சிவபெருமானை உணரும் ஞானமே அந்தச் சுடர் விளக்காகும்.

"சிந்தையி னுள்ளே எந்தை திருவடி

சிந்தையும் எந்தை திருவடிக் கீழது

... ... ... ...

... ... ... ... (திருமந்திரம் - 2428)

இறை அன்பினால் நாயனாருடைய உள்ளம் பேரானந்த நிலையில் நின்றது. அந்தப் பேரானந்தமே வாயிலால் மனத்திலே வீற்றிருக்கும் சிவனுக்கு ஆட்டிய திருமஞ்சனம். வாயிலாருடைய பேரன்பே இறைவனுக்கு விரும்பிய திருவமுதாகவும் அமைந்தது. இவ்வாறு வாயிலார் நாயனார் சிவபெருமானை மனக்கோவிலில் இடையறாது நாள்தோறும் வழிபாடு செய்தார். அவருடைய வழிபாட்டிற்கு அன்பே மையமாக விளங்கியது. அந்த அன்பினால் தூய்மையடைந்த உள்ளத்தில், ஞானமாகிய விளக்கு இறைவன் திருவருளால் பிரகாசித்தது. கிடைத்த சிவானுபவம் பேரானந்தத்தை அளித்தது. "இறவாத இன்ப அன்பு" பெற்றார் வாயிலார் நாயனார். இறைவனுக்கான தொண்டினை அவர் மனக்கோவிலிலேயே செய்தார். அகத்தே இறைவன் மீது மறவாத அன்பு கொண்டு பலவழிகளிலும் அர்ச்சனை புரிந்தார். பூசைக்குரிய சாதனங்களெல்லாம் அவருடைய மனத்திலேயே கிடைத்தன. அவருடைய புலன்களும் பொறிகளும் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. வாயிலார் நாயனாருடைய வாழ்க்கை அகப்பூசையின் விளக்கமாகும்.

"மறவாமை யானமைத்த மனக்கோயி லுள்ளிருத்தி

யுறவாதி தனையுணரு மொளிவிளக்குச் சுடரேற்றி

இறவாத வானந்த மெனுந்திருமஞ் சனமாட்டி

யறவாணர்க் கன்பென்னு மமுதமைத்தர்ச் சனைசெய்வார்."

(பெரிய புராணம் - 8)

"அகமலர்ந்த வர்ச்சனையி லண்ணலார் தமைநாளு

நிகழவரு மன்பினா னிறைவழிபா டொழியாமே

திகழநெடு நாள்செய்து சிவபெருமா னடிநிழற்கீழ்ப்

புகலமைத்துத் தொழுதிருந்தார் புண்ணியமெய்த் தொண்டனார்".

(பெரியபுராணம் - 9)

சிவனடியார்களுக்கே உரித்தானது அன்பும் தொண்டும். இந்த அன்பும் தொண்டும் பற்றற்ற நிலையில், நெருப்பிலிட்ட தங்கத்தைப் போல், பிரகாசிக்கின்றன. உலகப் பொருட்கள் மீது பற்றுள்ளவரை இறைவன்பால் அன்பு செலுத்துவதும், இறைவனுக்குத் தொண்டு செய்வதும் மனத்திற்கு இயல்பாக அமையாது. ஒரு தெய்வத்தை வணங்குவது, அர்ச்சிப்பது, வழிபடுவது போன்றவை சடங்காகவே இருக்கும். அல்லது பலனை எதிர்பார்த்தே நடக்கும். புலன், பொறிகளிடமிருந்து விடுபட்ட உள்ளம் இயல்பாகவே இறைவனிடம் அமைதி அடையும். ஊனினை நீக்கி உணர வேண்டும் என்பார் திருமூலர்.

"கானுறு கோடி கடிகமழ் சந்தனம்

வானுற மாமல ரிட்டு வணங்கினும்

ஊனினை நீக்கி யுணர்பவர்க் கல்லது

தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே". (திருமந்திரம் - 1848)

அடியார்கள் இறைவனோடு பின்னிப்பிணைந்து கிடப்பார்கள். அவன் அடியையே பற்றிக்கொண்டிருப்பார்கள். "நன்றே செய்வார் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகனே" என்றிருப்பார்கள். "பாசம் பரஞ்சோதிக்கு என்பாய்" என்று திருவெம்பாவையில் காண்கிறோம். காரைக்கால் அம்மையாரும் "மனக்கு இனிய வைப்பாக வைத்தேன்" என்றார். காரைக்கால் அம்மையார் தேவர்களைப் பார்க்கிறார், மனிதர்களைப் பார்க்கிறார். ஒன்றை எதிர்பார்த்து அவர்கள் இறைவனுக்குச் செய்யும் பூசையைக் காண்கிறார். அபிடேகமும் அர்ச்சனையும் ஆண்டவனுக்கு ஆடம்பரமாக நடக்கின்றன. இறைவன் அவற்றை ஏற்றுக்கொள்வானா? ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று நினைக்கிறார் காரைக்கால் அம்மையார். ஆனால், அதை அவ்வாறு சொல்லவில்லை. "இனி என்ன செய்வானோ?" சந்தேகப்படுபவர் போல கவிதை எழுதுகிறார். வெறும் விளம்பரத்திற்காகச் செய்யும் பூசையை ஆண்டவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று அவருக்கு நன்கு தெரியும். இறைவனுடைய திருவடிகளில் பொருந்தாத மனம் வெளித்தோற்றத்திற்காகச் செய்யும் பூசை இறைவனைச் சேராது. உள்ளத்தை இறைவனுடைய திருவடிகளில் பொருந்தி இடைவிடாமல் அவற்றையே நினைந்திருக்கும் மனமே இறைவனுடைய திருவருளைப் பெறும்.

"நினைந்திருந்து வானவர்கள் நீள்மலரால் பாதம்

புனைந்தும் அடிபொருந்த மாட்டார்- நினைந்திருந்து

மின்செய்வார் செஞ்சடையாய், வேதியனே, என்கின்றேற்கு

என்செய்வான் கொல்லோ இனி?" (அற்புதத் திருவந்தாதி)

கருவூர்த் தேவர் ஓர் சிறந்த இறையுணர்வாளர். ஒரு சிறந்த சித்தரும்ட கூட. சித்தத்தைச் சிவன்பால் வைத்தவர். இறைவனிடம் தனது சிந்தையைப் பறிகொடுத்தவர். அந்த நிலையில் சிந்தையால் நினைப்பதற்குச் சிந்தையும் காணோமே என்கிறார். இறைவனுடைய திருவுருவத்தை மனத்திலே நினைத்துக் கொள்கின்றார். நான் நினைக்கிறேன் என்கிற உணர்ச்சியையும் இழக்கிறார். இறைவன்வயம் ஆகின்றார். இனிச்செய்வது என்ன இருக்கின்றது? திருமூலரைப் போல "நான் அவன் ஆன பின் யாரை நினைவது?" என்கிறார்.

"அந்திபோல் உருவும் அந்தியிற் பிறைசேர்

அழகிய சடையும்வெண் ணீறும்

சிந்தையால் நினையிற் சிந்தையுங் காணேன்,

செய்வ (து) என்?" (கருவூர்த் தேவர் திருவிசைப்பா)

இறைவன் திருவருளில் மனத்தைப் பறிகொடுத்து இறை சிந்தனையில் தன்னையும், தனது மனத்தையும் மறந்துவிடுவது அடியார்களுடைய தன்மையாகும். அதே நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, மனமாகிய கருவியைப் பயன்படுத்தி இறைசிந்தனையைத் தம்முள் நிறுத்தி ஒன்றிப்போவதும் அடியார்களுடைய குணமாகும். திருநாவுக்கரசர் பெருமான் சூலை நோயினால் வருந்துகின்றார். தமக்கையாரிடம் திருநீறு வாங்கி இட்டுக் கொண்டு சிவன் கோவிலில் நுழைகின்றார். அதற்கு முன் சமணராக இருந்த நாவுக்கரசர் பெருமான் சைவத்திற்கு மீண்டார். உடனே பாடும் திருப்பதிகத்தில் பல்லாண்டுகளாகச் சமணராக இருந்தபோதிலும் தான் சிவபெருமானை ஒரு விநாடிகூட மறக்கவில்லை என்று சொல்கின்றார். உள்ளத்திலே சிவபெருமானை ஒரு விநாடிகூட வணங்காமல் இருந்ததில்லை என்றும் அறிவிக்கின்றார். தனது பொறிகள், புலன்கள் சிவசிந்தனையிலேயே ஈடுபட்டிருந்தன என்பதையும் குறிப்பிடுகின்றார். வேறொரு சமயத்திலே அவர் இருந்தாலும், அவருடைய உள்ளம் உண்மையையே நாடிய காரணத்தால் மனத்திலே சிவார்ச்சனை விடாமல் நடைபெற்று வந்தது.

"சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்

தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்

நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்

உன்னாமம் என் நாவில் மறந்தறியேன்" (அப்பர் தேவாரம் )

பூசலார் நாயனார் திருநின்றவூரில் வாழ்ந்தார். பூசலார் நாயனார். சிவன்பால் அன்பு வைத்து, அதனை மேன்மேலும் வளர்த்து, சிவ பரம்பொருளைப் பெறுவதற்காக வேத நீதிக் கலைகளை உணருகின்ற பணியின் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சிவபெருமானுக்குக் கோவில் அமைப்பதற்கான செல்வம் அவரிடம் இல்லை. எனினும், சிவனுக்கு ஓரு கோவிலைக் கட்டி முடிக்க எண்ணினார். மனத்தில் முதலில் GF திரட்ட வேண்டிய பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தேவையான GF கிடைக்கவில்லை. எனவே, நினைவினாலேயே கோவில் கட்ட முடிவு செய்து, அதற்குத் தேவையான நிதியை மனத்தினால் திரட்டிக் கொண்டார். பின்னர் கோவில் கட்டப்பல்வேறு சாதனங்களைத் தேடி மனத்தினால் சேகரித்துக்கொண்டார். தச்சர்களையும், மற்ற பணியாளர்களையும் திருப்பணிக்காகச் சேர்த்து அவர்களுக்குப் பல்வேறு பணிகளை நிறைவேற்ற மனத்திலே கட்டளையிட்டார் இறைவன் மீது உள்ள அன்பினாலே, ஆசை மிகுந்து, ஆகம விதிப்படி, மனத்தினாலேயே பணியாற்றி இரவும் பகலும் கோவில் எடுத்தார். பல சித்திர வேலைப்பாடுகளை மனத்தினாலே செய்து முடித்தார். சிவாகம விதிப்படி விமானமும் சிகரமும் இருக்க வேண்டிய அளவுகளை நிர்ணயித்து அவற்றிற்கேற்ப நினைவிலேயே கட்டி முடித்தார். பின்னர், தூபியை நாட்டி, தீர்த்தக் கிணறுகளைக் கட்டி, கோவிலைச் சுற்றி மதில்களைக் கட்டி, தடாகம் அமைத்து, பலவித சிற்ப அலங்காரங்களைச் செய்து கோவிலைக் கட்டி முடித்தார். இவையெல்லாமே பூசலார் நாயனாருடைய மனதிலே நடக்கின்றன. வேறொன்றையும் சிந்தியாமல் பூசாலார் நாயனாருடைய மனதிலே நடக்கின்றன. வேறொன்றையும் சிந்தியாமல் பூசாலர் நாயனார் இவற்றையெல்லாம் மனத்திலேயே செய்தார் என்றால் இறைவன்பால் அவருக்கிருந்த ஆழ்ந்த அன்பு அவருடைய பணிக்கு உறுதுணையாக இருந்தது என்பது விளங்கும். நாயனாரும் கும்பாபிடேகம் செய்வதற்கான நாளையும் முடிவு செய்தார்.

இந்த நிலையில் அப்போதிருந்த பல்லவ அரசன், காஞ்சியிலே ஏராளமான செலவில் கற்கோவில் எடுத்து இறைவனைப் பிரதிட்டை செய்ய நாளும் குறித்தான். அதற்கு முதல் நாள் இரவில், இறைவன் அவனது கனவில் தோன்றித் திருநின்றவூரில் பூசலார் என்கிற அன்பன் நீண்ட நாட்களாக நினைந்து நினைந்து ஒரு கோவிலைக் கட்டியமையால், அங்குத் தாம் புக வேண்டுமென்றும் பல்லவ அரசன் தனது கோவில் பிரதிட்டைக்கு வேறொரு நாளை நியமித்துக் கொள்ளலாம் என்றும் பணித்தான். இறைவன் தொண்டராகிய பூசலார் நாயனாருடைய அன்புப் பணியை உலகம் அறியும்பொருட்டே இவ்வாறு செய்தான் என்று சேக்கிழார் பெருமான் கருதுகின்றார். அத்தகையதொரு திருப்பணியைத் தானும் கண்ட மகிழ வேண்டும் என்கிற எண்ணத்துடன் அரசன் திருநின்றவூருக்கு வந்தடைந்தான். அங்கே பூசலார் நாயனார் கட்டிய கோவிலைப் பற்றி ஊர் மக்களைக் கேட்டான். அவர்கள் அவ்வாறு செய்யப்பட்ட கோவில் ஒன்றும் இல்லை என்றார்கள். அரசன் மறையோர்களை அழைத்து மீண்டும் கேட்க அவர்கள் பூசலார் ஓர் குற்றமற்ற வேதியர் என்று தெரிவித்தனர். அரசன் பூசலார் ஓர் குற்றமற்ற வேதியர் என்று தெரிவித்தனர். அரசன் பூசலார் இருந்த இடத்திற்குச் சென்றான். அவர் எடுத்த கோயிலைப் பற்றிக் கேட்டான். பூசலாரும் மருண்டு அரசனைப் பார்த்துத் தனக்கு GF கிட்டாமையால் கற்கோவில் கட்ட இயலாத நிலையில், மனத்தினாலே முயன்று, நினைந்து நினைந்து சிந்தனையின் செயலாகத் தான் கட்டிய கோவிலைப் பற்றி விளக்கிக் கூறினார். இதைக் கேட்ட அரசன் மிக்க வியந்து "என்னே! புரையறு சிந்தை அன்பர் பெருமை!" என்று அவரைப் போற்றி, அவர் முன் விழுந்து வணங்கி, அவரை விட்டுப் பிரிந்தான்.

பூசலார் நாயனாரும் தாம் மனத்தினால் அமைத்த ஆலயத்தில் இறைவனை நல்ல வேளையில் தாபித்து, எல்லாவிதமான பூசனைகளையும் மனத்தினாலேயே பல நாட்கள் செய்து இறைவனை திருவடி சேர்ந்தார்.

"அன்பரு மமைத்த சிந்தை யாலயத் தரனார் தம்மை

நன்பெரும் பொழுது சாரத் தாபித்து நலத்தி னோடும்

பின்புபூ சனைக ளெல்லாம் பெருமையிற் பலநாட் பேணிப்

பொன்புனை மன்று ளாடும் பொற்கழ னீழல் புக்கார்"

(பெரியபுராணம் - பூசலார் நாயனார் புராணம் -17)

இறைவன் எங்கும், எதிலும் நீக்கமற நிறைந்து நிற்பன். ஒவ்வொருவர் உள்ளத்தையும் தனது உறைவிடமாகக் கொள்பவன். எனவே, ஞானிகள் இறைவனை நெஞ்சினுள்ளேயே வணங்குவர், வணங்கி இன்பத்தப் பெறுவர்.

"நினைப்போர் நெஞ்சமன்றாக

இன்பக்கூத் தாடவல்ல மணியே"

என்பார் தாயுமானவர். இறைவன் உயிர்கள் மீது அருளினை வாரி வழங்குகின்றான். உயிர்கள் விக்குகின்றன. அருளை விழுங்கித் தன்னை அருள் மயமாக்கிக் கொள்ள முயல்வதில்லை. அதற்கு அன்பின்மை தான் காரணம். இறைவனை வணங்கி, அருளினைப் பெற்றிட அன்பெனும் மலரே போதுமானது. அதுவே மனத்து விளக்கினை ஏற்றி வைக்கும். ஆணவ மலத்தைப் போக்கும் தான் என்கிற நினைப்பினை அழிக்கும். அதுவே ஞானமாக மலர்ந்து, உள்ளத்திலே ஞான ஒளியைத் தூண்டி எங்கும் பரவி நிற்கும் பரம்பொருளை நமக்குக் காட்டும். பரம்பொருளோடு ஒன்றிப் போகும்ட பாதையினை நம்முடைய அகக்கண் முன் நிறுத்தும். ஆகவே, உயிர்கள் மீதும், இறைவன் மீதும் அயரா அன்பைச் செலுத்துவதே ஒப்பற்ற சிவார்ச்சனையாகும். "அயரா அன்பின் அரன் கழல் செலுமே". மாணிக்கவாசகரும் "அன்பினால் அடியேன் ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய்க் கசிந்துருக என் பரம் அல்லா இன்னருள் தந்தாய்" என்பார்.

உள்ளத்திலே அன்பெனும் மலரால் இறைவனைப்பூசை செய்தால் மட்டும் போதாது. அன்புருவம் ஆகிவிட வேண்டும். கண்ணப்ப நாயனார் காளத்தி இறைவனைக் கண்டவுடனேயே அன்பு உருவமானார். தத்துவங்கள் எல்லாம் நிங்கப் பெற்றவராக சிவப்போராளியில் கலந்தார். புண்ணியமென்றும் பாவமென்றும் தெரியாது வேட்டுவர் தொழிலில் ஈடுபட்டிருந்த கண்ணப்பனார் சிவத்தோடு கலந்து ஒப்பற்ற அன்பரானார். அவர் உள்ளமும் உணர்வுகளும் அன்பில் திளைத்து அவருடைய உயிரே இறைவனுக்கு அர்ப்பணம் ஆயிற்று. இறைவனே சிவகோசாரியருக்கு விளக்குகின்றார்.

"அவனுடைய வடிவெல்லா நம்பக்கல் அன்பென்றும்

அவனுடைய அறிவெல்லா நமை அறியும் அறிவென்றும்

அவனுடைய செலயலெல்லா நமக்கு இனியவா என்றும்

அவனுடைய நிலை இவ்வாறு அறி c" என்று அருள் செய்வார்

(பெரியபுராணம் கண்ணப்ப நாயனார் புராணம் - 157)

இறைவனுடைய அன்பினை முழுமையாகச் சுவைத்தவர் மாணிக்கவாசகர். அவருடைய சித்தம் தெய்வத்தின் இருப்பிடம். அவரே கண்ணப்பனாரின் ஒப்பற்ற அன்பினை நினைந்து நினைந்து வியக்கின்றார். அன்புக்கு இலக்கணமாகிய கண்ணப்பருக்குப் பிறகு வேறொருவர் அத்தகைய அன்புக்கு உதாரணமாக முடியாதே என்று நினைத்து, தகுதியற்ற தனக்கும் இறைவன் புரிந்த கருணையை நினைந்து இன்புறுகிறார்.

"கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்,

என் அப்பன், என் ஒப்புஇல் என்னையும் ஆட்கொண்டருளி" (திருவாசகம்)

மணிவாசகப் பெருமான், கண்ணப்ப நாயனார்போல் அன்பு தனக்கில்லை என்று சுட்டிக்காட்டுவது அன்பின் ஆழம் அறியவொண்ணாத நிலையை எடுத்துக்காட்டுகிறது. ஆனால், அந்த அன்பு நிலையை அறிந்துகொள்ளும் ஆற்றல் கண்ணப்பர் ஒருவருக்குத் தான் உள்ளது என்று திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் திருக்களிற்றுப்படியாரில் கூறுகிறார். இந்த அன்பிற்கு நிலைக்களமானவன் சிவபெருமானே. ஆகவே, அன்பின் இயல்பைச் சிவபெருமானும் அறியக்கூடும். காளத்தியாரும் சிவபெருமானும் அன்றி வேறொருவராலும் இந்த அன்பின் ஆழத்தை அறிதல் இயலாது என்கிறது திருக்களிற்றுப்படியார்.

"கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை என்றமையால்

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பதனைக் - கண்ணப்பர்

தாமறிதல் காளத்தி யாரறிதல் அல்லதுமற்

றாரறியும் அன்பன் றது".

இறைவன் பெருமை அளவற்றது. எனினும், அவனுடைய அன்பர்கள் அதனைத் தம்முள் உணர்வர். உணர்ந்து தம்மையே அவனுடைய திருவடிகளில் பூசனை மலர்களாக வைப்பர். கிடைக்கும் பேரின்பத்தில் தம்மை மறப்பர். நினைவை இழப்பர். எந்த மனம் கொண்டு இறைவனைப் பூசிப்பரோ அதே மனத்தை அகண்டமாகிய பெருவெளியிலே வைத்து, பெரும் சுடராகிய பரமனிடம் தமது மனமாகிய சுடரையும் சேர்ப்பர். தானும் தனது மனமும் அழிந்த அறிவின்றி நிற்பர். அவர்களுடைய சாதனையைச் சொற்களால் விளக்க இயலாதே!

"தானும் அழிந்து தனமும் அழிந்துநீ

டூனும் அழிந்து உயிரும் அழிந்துடன்

வானும் அழிந்து மனமும் அழிந்தபின்

நானும் அழிந்தமை நானறி யேன்றே." (திருமந்திரம் - 2951)