"வென்ற ஐம்புலனால் மிக்கீர்" பல பிறவிகளை எடுத்து, இன்பத் தன்பங்களை நுகர்ந்து, பல அனுபவங்களைப் பெற்று, வினைகளுக்கு ஏற்ப உயிர் படிப்படியாகப் பக்குவ நிலையை அடைந்து, காலப்ப

"வென்ற ஐம்புலனால் மிக்கீர்"

பல பிறவிகளை எடுத்து, இன்பத் தன்பங்களை நுகர்ந்து, பல அனுபவங்களைப் பெற்று, வினைகளுக்கு ஏற்ப உயிர் படிப்படியாகப் பக்குவ நிலையை அடைந்து, காலப்போக்கில் மலங்களின் வலிமை குறைந்து, இறைவனை நாடி, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளத் தொடங்குகின்றது. "எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்" என்கிறார் மாணிக்கவாசகப் பெருமான். ஏதோவொரு காலக்கட்டத்தில் உயிரானது உலக அனுபவங்களை அறவே வெறுத்து, உள்ளத்தின் அனுபவங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது. மாயத்திரை விலகுகிறது. அருள் வீழ்ச்சி தொடங்குகிறது. இதுவரை கருவி கரணங்களே எல்லாமும் என்றும், அவற்றைத் தவிர வேறொன்றும் இல்லை என்றும் கருதி வந்த உயிரானது இன்று அவற்றிற்கு அப்பால் இருக்கக்கூடிய அகக்காட்சியை உற்றுநோக்க ஆயத்தமாகிறது. இறைவனுடைய மறைப்புச் சக்தி அருட்சக்திக்கு இடம் கொடுக்கிறது. அருட் சக்தியானவள் உயிருக்குத் தெளிவினைப் பிறப்பித்து, தன்னை நாடி இன்பமடையும் பாதையின் முதற்படியில் ஏற்றி வைக்கிறாள்.

இதெல்லாம் என்ன அவ்வளவு எளிதாக நடந்து விடுகின்றதா? நம்மைப் பொறுத்த வரை மேலே கூறப்பட்ட உணர்வுகள் ஏதோ புராணக்கதையில் படிப்பது போல் தோன்றுகின்றதேயழிய இயலாத நிலையில் நாம் எல்லோரும் இருக்கின்றோம். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் உயிரைத் தொன்றுதொட்டு கட்டுப்படுத்தி வருகின்ற மூலமலமாகிய ஆணவ மலம் என்று அருளாளர்கள் நமக்கு விளக்குகின்றார்கள். ஆணவ மலம்தான், தனது என்கிற உணர்வை உருவாக்கி உண்மையை மறைக்கச் செய்கின்றது. உயிரை இறைவனிடமிருந்து பிரித்து வைக்கின்றது. உயிருக்கு முன்னே ஒரு மாயத் திரையைப் போட்டு, உயிரை இறை அனுபவத்திலிருந்து நீக்கி விடுகின்றது. உயிரானது, உடல், உடலைச் சார்ந்த கருவிகள் ஆகியவற்றுடன் சேர்ந்து சகல நிலை பெற்றிருக்கும்போது ஆணவ மலம் உடலும், உடலைச் சார்ந்த கருவிகள் தவிர வேறில்லை என்கிற விபரீத உணர்வை ஏற்படுத்தி விடுகின்றது. பொறிகளும், புலன்களும் செல்லும் வழியே உண்மை, மற்றவையெல்லாம் பொய் என்கின்ற ஒரு தவறான கருத்தை ஆணவ மலம் உள்ளத்திலே பதித்து விடுகிறது. பொறிகளும் புலன்களும் ஏதோ தானே இயங்கும் ஆற்றல் பெற்றவை என்கிற ஒரு மயக்கம் உயிரைச் சூழ்ந்து கொள்கிறது. உயிருக்கு இருப்பதோ சிற்றறிவு. தானே அறிந்து கொள்ளும் நிலையில் இல்லை. இறைவன் அறிவித்தால் தான் அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்ற நிலையில் உள்ளது. மேலும், எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டது. இத்துடன் ஆணவ மலத்தால் அறியாமை என்கிற ஒரு இருள் உயிரைச் சூழ்ந்து, படர்ந்து கிடக்கின்றது. உயிரின் சிற்றறிவு ஆட்டிச் செல்வார் வழி நின்று ஆடுகிறது. ஐம்பொறிகளும், ஐம்புலன்களும் புறப்பொருள்களோடு ஒன்றிக்கொள்ளும்பொழுது அந்த அனுபவத்தால் உயிர்க்குக் கிடைக்கும் பொருள் ஞானம் பரம்பொருள் ஒன்று இருப்பதை மறைத்து விடுகின்றது. இந்த நிலையில்

உலக இயக்கமே உண்மை. மற்றதெல்லாம் பொய் என்கிற தவறான கருத்து நமது மனிதல் புகுந்து அந்த உலக இயக்கத்தை வலுப்படுத்தும் எல்லா முயற்சிகளையும் எடுக்கத் தோன்றுகிறது. நாம் பொறி, புலன்களை நடத்திச் செல்வதற்குப் பதிலாக அவை நம்மை நடத்திச் செல்வதே நம்முடைய வாழ்நாள் அனுபவமாகின்றது. இதை நாம் தவறாக எடுத்துக் கொள்வதில்லை. இவ்வாறு செய்வது தான் உலக நாகரிகம் என்றும், உலக வளர்ச்சி என்றும் தவறாகப் புரிந்து கொள்ளும் தன்மை நம்மை ஆட்டிப் படைக்கின்றது. புலன்களை வெல்லும் ஆற்றலைத் தானே பெறவில்லை என்கிறார் திருமூலர் பெருமான். "வெல்ல கில்லேன் புலன் ஐந்துடன் தன்னையும்." 'என்னே இம்மாயையின் கீழ்மை' என்பார் திருமூலர் பெருமான். குயிலொன்று தனது முட்டையைக் காக்கைக் கூட்டினில் இட்டது. காக்கைக்குத் தன் முட்டை என்றும், குயிலின் முட்டை என்றும் வேற்றுமை பார்க்கத் தெரியவில்லை. அதனுடைய அறியாமையே அதற்குக் காரணம். குயில் முட்டையையும் பேணிக் குஞ்சு பொரித்து குயிற் குஞ்சைக் காத்து வருகிறது. அறியாமையே இந்த மயக்கத்திற்குக் காரணம்.

"குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்

அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்

இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை

மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே". (திருமந்திரம் - 488)

ஆழ்ந்து பார்த்தால் நமது கல்வி, கலை, நாகரிகம், வளர்ச்சி போன்றவையெல்லாம் உடலையும், உடல் அனுபவங்களையும் மையமாக வைத்தே உயிருக்கு விஷய அனுபவங்களை அள்ளித் தருகின்றன. இது தேவைதானா என்று நாம் ஒரு போதும் சிந்தித்துப் பார்ப்பது இல்லை. ஆணவ மலம் தனது வலிமையால் அது போன்ற சிந்தனை எழுவதற்கே இடமில்லாமல் செய்து விடுகின்றது. இவற்றைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டுமென்றால் அருள் உணர்வு பிறந்தால் தான் முடியும். தாயின் உடலில் கருவாகி, இந்தப் பூமியிலே பிறந்தது முதல் இந்த உடலை விடும் வரை எத்தகைய ஆபத்துக்களிலிருந்து தப்பிப் பிழைத்து வர வேண்டியிருக்கிறது என்று மாணிக்கவாசகர் போன்ற அருளாளர்கள் தான் நமக்கு நயம்படத் தெரிவிக்க முடியும். "கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும், செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும், நல்குரவு என்னும் தொல்லிடம் பிழைத்தும், புல் வரம்பு ஆய பல்துறை பிழைத்தும்" என்பார் மாணிக்கவாசகப் பெருமான். நம்மைப் போன்றவர்கள் பிறப்பையே ஒரு பேறு என்று கருதும் பொழுது மாணிக்கவாசகப் பெருமான் பிழைத்தலையே திருவருளின் பரிசு என்று கருதுகின்றார். ஆணவத்தால் கட்டுப்பட்ட உயிருக்கும், மலம் நீங்கிய உயிருக்கும் உள்ள வேற்றுமையை இங்கே நாம் தெள்ளத் தெளிவாகப் பார்க்கின்றோம். ஆணவத்தால் கட்டுண்ட உயிருக்கு அதன் வினைக்கேற்ப இறைவன் உடலையும், உடலைச் சார்ந்த கருவிகளையும் கொடுக்கின்றான். உயிருக்கு உடல் அனுபவமே பிரதானமாகக் தென்படுகிறது. ஆணவ மலம்தான் என்ற எழுச்சியைக் கொடுத்து விடுகிறது. மாயா சக்தி பிரபஞ்சத்தைத் தோற்றுவித்து, அந்தத் தோற்றத்தை உயிருக்குச் சுட்டிக் காட்டுகின்றது. இப்பிறவியில் அனுபவிக்க வேண்டிய வினைப்பயன்களும் சேர்ந்துகொள்கின்றன. உயிரின் குணாதிசயங்கள் நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன. உடலின் ஆதிக்கம் கருவிகளின் இயக்கத்தை வலுப்படுத்துகிறது. புறப்பொருள்களும், இந்திரியங்களும், புலன்களும் ஒன்றையன்று முந்திக்கொண்டு உயிரைத் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்கின்றன. விளைவு, பொருள்கள் மீது ஆசை வளருகின்றது. உள்ளத்திலே ஒரு பொருளின் மீது ஆசை பிறக்கும்பொழுது அந்தப் பொருளை எவ்வாறாயினும் அடைந்துவிட வேண்டும் என்கிற எண்ணம் தோன்றுகின்றது. எண்ணம் நிறைவேறாத பொழுது சினம் பிறக்கின்றது. மனிதனை ஆட்டிப் படைக்கின்றது. சினம் அறிவினை அழிக்கின்றது. மயக்கத்தைக் கொடுத்து உண்மையை மறைக்கின்றது. அதனால் உயிர்கள் உண்மை நிலையை அறியாது மருளில் ஆழ்ந்து துன்பப்பட்டு நிற்கின்றன. காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று குற்றங்கள் உயிரை மருளில் ஆழ்த்தி மீண்டும் மீண்டும் பிறப்புக்குக் காரணமாகின்றன. ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய நியதிக்கு ஆட்படுகின்றன. மனத்திலிருந்து வெளிப்படும் ஆசைகள் நமது உடலில் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. மனத்தில் ஆசைகள், வாக்கில் இன்னாத சொல், பொய், புறங்கூறல், உடலின் செயல் அழுக்கு ஆகியவை உயிருக்கு வினைக்கடலைச் சேர்த்து, இறப்பையும், பிறப்பையும் மாறித் மாறித் தருகின்றன. ஆகவே, பிறவிக் கடலைத் தாண்ட வேண்டுமானால் காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று குற்றங்களிலிருந்தும் தன்னை விடுபடுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் துன்பம்தான்.

"மூன்றுள குற்ற முழுது நலிவன

மான்றிருள் தூங்கி மயங்கிக் கிடந்தன

மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்

மூன்றினுட் பட்டு முடிகின்ற வாறே".

ஆணவ மலத்தின் வலிமையைக் குறைத்திட இறைவன் நம்மை வினைப்பயன்களை அனுபவிக்க வைக்கின்றான். மாயா காரியமாகிய பிரபஞ்சத்தைச் சேர்த்து வைக்கின்றான். ஆணவ இருளிலிருந்து தப்பி வருவதற்கு வினையும், மாயையும் ஓரளவு பயன்பட வேண்டுமென்று விரும்புகின்றான். உண்மைதான். ஆணவ இரளில் மூழ்கித் தன்னைத் தவிர வேறொன்றும் இல்லை என்று எண்ணியும், தனக்காகத்தான் உலகமும், மற்ற பொருள்களும் அமைந்திருக்கின்றன என்று நினைத்தும் நிற்கிற உயிருக்கு, வினைகளும் மாயா காரியமும் ஒரு சிறிய விளக்கினை ஏற்றியது போல இருக்கும். கலையும், கல்வியும், மனமும், உணர்ச்சிகளும் உயிர்க்கு ஒருவித அறிவைக் கொடுத்து, அந்த அறிவின் சிந்தனைகள் சித்தத்தைத் தூண்டி, சித்தமும் நல்லது இது, கெட்டது இது என்று பாகுபடுத்தி, தன்னைத்தானே நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவாவை உள்ளத்தில் வைப்பதற்கு உதவுகின்றன. அந்த அளவுக்கு கலைகளோடு கூடிய உயிர் ஆணவ மலத்தின் தளையைத் தளர்த்திக்கொள்ள ஒரு வாய்ப்பினைப் பெறுகிறது. இருந்தாலும், ஆணவ மலம் அவ்வளவு எளிதாக இறங்கி விடுவதில்லை. மேலும், கலைகளோடு கூடிய நிலையில் ஆசைகள் வளருகின்றன. உடலும், உடலைச் சார்ந்த கருவிகளும் ஆசைத்தீக்கு நெய்யிட்டு, அத்தீயை வளர்க்கின்றன. புலன்களை அடக்கிக்கொண்டால் ஆசைகளை அடக்கிவிடலாம் என்று நினைக்கலாம். இந்திரியங்களை அடக்கி வைப்பது அவ்வளவு எளிதன்று. தேவர்களுக்கும் ஆசை உண்டு. அவர்கள் தேவர்களாக இருக்கின்றார்கள் என்கிற காரணத்தால், அவர்கள் புலன்களை அடக்கி விடுவார்கள் என்று நினைப்பது சரியன்று. அத்தகைய தேவர்களைக் காண்பதும் அரிது என்று திருமூலர் கூறுகிறார். புலன் இயக்கத்தை முழுமையாக நிறுத்திவிட்டால், புலன்கள் உடலோடு சேர்ந்திருப்பதன் நோக்கம் நிறைவேறாது. அவற்றை இறைபணியில் ஈடுபடுத்த முடியாது. ஆகவே, புலன்களைக் கட்டுப்படுத்த ஒரு "அஞ்சு அடக்கா அறிவு" தேவை என்கிறார் திருமூலர் பெருமான்.

"அஞ்சு மடக்கடக் கென்பர் அறிவிலார்

அஞ்சு மடக்கும் அமரரும் அங்கிலை

அஞ்சு மடக்கில் அசேதன மாமென்றிட்

டஞ்சு மடக்கா அறிவறிந் தேனே". (திருமந்திரம் - 2033)

புலன்களை அழிக்க முடியாதது. இல்லாமல் செய்ய முடியாது. ஆனால், அவற்றை அடக்க முடியும் அல்லது பக்குவப்படுத்த முடியும். "என் புலன் ஐந்தும் வென்றானை" என்கிறார் திருஞானசம்பந்தப் பெருமான். புலன்களை மாற்றி, அவற்றைப் பயன்படுத்திக்கொண்டே அடைய வேண்டிய நோக்கத்தை அடைய வேண்டும். அதற்காகத் தான் இறைவன் நமக்குப் புலன்களைக் கொடுத்துள்ளான். உலக நலன்களைக் கொடுத்துள்ளான். அவற்றை அனுபவிக்க வேண்டிய வாய்ப்பையும் நமக்குக் கொடுத்தான். அவ்வாறு அனுபவிப்பதால் நமக்கு என்ன பயன் என்று அறிந்து கொள்ளும் அறிவையும் கொடுத்திருக்கின்றான். இந்த ஆராயும் அறிவைப் பயன்படுத்தாமல் புலன் வழியிலேயே போய்க்கொண்டிருப்பது வாழ்க்கையின் பயனை நமக்குச் சேர்க்காது. உயிரானது உடலுடன் சம்பந்தப்பட்ட நிலையில் இந்திரியங்களால் தூண்டப்பட்டு உடலில் வேட்கைகள் தோன்றுகின்றன. அவை மனத்திலே பரவுகின்றன. அவற்றை நாம் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கின்றோம். சில ஆசைகளை நிறைவேற்றிக் கொள்கின்றோம். அப்பொழுது நமக்கு இன்பம் கிடைக்கின்றது. பல ஆசைகளை நம்மால் நிறைவேற்ற முடிவதில்லை. துன்பப்படுகின்றோம். துன்பங்களாகிய பேரலைகளும் நடுநடுவே சிற்றலைகளைப் போலத் தோன்றி மறையும் இன்பங்களும் உயிர்களை அங்குமிங்கும் தள்ளிச் செல்கின்றன. ஆழ்கடலில் துணை ஒன்றுமின்றி, பற்றுவதற்கு ஒன்றுமின்றித் தனியாக நின்று நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. அப்பொழுதாவது ஆசைகள் நம்மை விடுமா என்றால் அதுவுமில்லை. மாணிக்கவாசகர் போன்ற அருளாளர்கள்கூட இந்த உட்போராட்டத்தை அனுபவித்திருக்கின்றார்கள். அவர்களுடைய உள்ளங்களிலே பல சஞ்சலங்கள் தோன்றி இருக்கின்றன. மாணிக்கவாசகர் பெருமான் புலன்கள் தம்மைத் துன்புறுத்திய அனுபவத்தைப் பல பாடல்களில் பாடுகின்றார். புலன்களுடைய தாக்குதல் காரணமாக உடலும், உள்ளமும் அடைந்த கீழ்மை நிலையைப் பற்றி எடுத்துக்கூறி வருந்துகின்றார். புலன்களைப் பின்பற்றும் மனதின் போக்கைப் பற்றித் துயரப்படுகின்றார். அதனால் தனக்கு இறை அனுபவம் கிடைக்காமல் போய்விடுமோ என்றும் அச்சப்படுகிறார். புலன்கள் தன்னுடைய அறியாமையை வலுப்படுத்தின என்பதை "வஞ்சனை செய்தன" என்கிற சொற்கள் தெளிவுபடுத்துகின்றன.

"மலம்சோரும் ஒன்பது வாயிற் குடிலை

மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்

கலந்தஅன் பாகிக் கசிந்துருள் உருகும்

நலந்தான் இலாத சிறியேன்". (திருவாசகம்)

திருவாசகப் பாடல்கள் பல காமத்தின் வலிமையை நன்கு எடுத்துக்காட்டுகின்றன. மாதர் மீதுள்ள மயக்கம் ஒரு சூறாவளிப் காற்றைப் போல் தாக்குகின்றது. மனம் தடுமாற்றம் அடைகின்றது. கொந்தளிக்கும் கடலிலே தத்தளிக்கின்றது. காமமாகிய சுறா மீன்கள் நம்மை நோக்கி வந்தடைகின்றன. நம்மைக் கல்விச் செல்லப் பார்க்கின்றன. இவற்றால் நமக்குக் கிடைப்பதெல்லாம் துன்பமேயன்றி வேறில்லை. காமத்தின் வலிமை முன் உயிரானது செயலிழந்து அழிய நிற்கிறது. இந்த அழிவிலிருந்து தப்பி வர வேண்டுமே, தன்னைக் காப்பாற்ற ஒருவரும் வர மாட்டாரா என்றெல்லாம் மாணிக்கவாசகப் பெருந்தகை வருந்தி நிற்கின்றார். ஐந்தெழுத்தைப் பற்றிக்கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று உணருகிறார்.

"தனியனேன் பெரும்பிறவிப் பௌவத்து எவ்வத்

தடந்திரையால் எற்றுண்டு பற்றொன் றின்றிக்

கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால்

கலக்குண்டு காமவான் சுறாவின் வாய்ப்பட்டு

இனிஎன்னே உய்யுமாறு என்றென்று எண்ணி

அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனை..." (திருவாசகம்)

ஆசைகளின் வலிமையைக் குறைக்க முடியுமா? முடியும் என்கிறார்கள் அருளாளர்கள். கருணை மிக்க இறைவன் அதற்காக நமக்கு வழியைக் காட்டுகின்றான். நமது மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை அவை போகும்

போக்கில் உபயோகித்தால் வினைகள் மூளும். அதே மனமும், வாக்கும், காயமும் உலகத்தைப் பற்றாது இறைவனைப் பற்றி நின்றால் வினைகள் நம்மை வந்தடையா. மெய்யுணர்வாளர்கள் தங்களது மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை இறைவனிடம் செலுத்தி தங்களை வினைகள் பற்றாது பார்த்துக் கொள்வர்.

"மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்

மனவாக்கு நேர்நிற்கில் வல்லினை மன்னா

மனவாக்குக் கெட்டவர் வாதனை தன்னால்

தனைமாற்றி யாற்றத் தகுஞானி தானே". (திருமந்திரம் - 2612)

உலகத்தின் மிது பற்றை வளர்த்தால் உலகத்தைப் பற்றிச் சிந்தனையும் அவாவுமே அதிகமாகும். அதற்கு மாறாகப் பரம்பொருளைச், சிவபிரானை மனிதல் வைத்தால் உலகப் பொருள்கள் மீது உள்ள நாட்டம் குறைந்துவிடும். இதை நாம் தீவிரமாகச் சிந்தித்துப் பார்த்தால் நமது சித்தம் தெளிவாகும். நம்மையெல்லாம் ஆளும் சிவபெருமான் தெளிவான சிந்தையில் புகுந்து சித்தத்தை தனதாக்கிக் கொள்வான்.

"பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென்

விரித்த பொருட்கெல்லாம் வித்தாவ துள்ளம்

பெருக்கிற் பெருக்குஞ் சுருக்கிற் சுருக்கும்

அருத்தமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே" (திருமந்திரம் - 2036)

இறைவன் ஒருவனே நமக்கு உள்ள ஒரு பற்றுக்கொண்டு என்கிற சிந்தனையை வளர்க்க வேண்டும். மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை இறைவனோடு பொருத்தி இயக்குகின்ற வகையில் நம்முடைய தியானத்தைச் செலுத்த வேண்டும். பிற பொருள்கள் மீது உள்ள பற்றினை மெதுவாக ஒடுக்க வேண்டும். நம்முள்ளேயே இருக்கும் இறைவன் மீது நம்முடைய நாட்டத்தைச் செலுத்த வேண்டும். அப்பொழுது சிந்தை தெளிந்து இறைவனை நாம் மனக்கோவிலிலேயே நிறுத்தலாம்.

"நடக்கின்ற நந்தியை நாடோறு முன்னில்

படர்க்கின்ற சிந்தையைப் பைய வொடுக்கிக்

குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்

வடக்கொடு தெற்கு மனக்கோயி லாமே" (திருமந்திரம் - 2039)

சிவபெருமான் உலகப் பற்றுக்களை விட்ட ஞானிகள் யாவரும் பற்றி நின்ற பரம்பொருள் ஆவான். ஞானிகளுக்கு அவன் மீது தான் எல்லா நாட்டமும் செல்லும். மெய்ஞ்ஞானத்தைப் பெற்றவர்கள் சிவபெருமானை விரும்பி நிற்பர். எல்லாக் கல்விகளின் முடிவுகளை உணர்ந்தவர்கள் சிவசோதியைத் தன்னுள் பெற்று நிற்பர். அந்த நிலையில் பேச்சற்று நிற்பர். ஆகவே, நாம் விரும்ப வேண்டியது இறைவனுடைய திருவடிகள். அறுக்க வேண்டியது நமக்கு மயக்கத்தைத் தரும் ஐம்புல பாசங்கள். தொடர வேண்டியது மனக்கலக்கத்தைப் போக்கக் கூடிய சிவபரம்பொருள். அவ்வாறு செய்தால் நமது சிந்தை சிவத்துடன் கலந்துவிடும்.

"மயக்கிய ஐம்புல பாசம் அறுத்துத்

துயக்கறுத் தானைத் தொடர்மின் தொடர்ந்தால்

தியக்கஞ்செய் யாதே சிவனெம் பெருமான்

உயப்போ எனமனம் ஒன்றுவித் தானே". (திருமந்திரம் - 2608)

பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்

கற்றற் றவர்கற்றுக் கருதிய கண்ணுதல்

கற்றற் றவர்சுற்றி நின்றஎன் சோதியைப்

பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே". (திருமந்திரம் - 2865)

புலன்களை வென்ற அடியார்களில் தலைசிறந்து நின்றார் திருநீலகண்ட நாயனார். குயவர் குலத்திலே பிறந்து, தமது குலத்தொழிலை விடாது செய்து வந்தாலும் அறவழியிலே வாழ்ந்து சிவனடியார்களுக்காகப் பணிவிடை செய்து, எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு, தூய அன்பிலே அவர் நின்றார். பருவம் காரணமாக அவர் சிற்றின்பத் துறையிலே ஒரே ஒரு முறை தவறிவிட்டதன் காரணத்தினால் அடியார்தம் மனைவியார் ஆண்டவன் மீது இட்ட ஆணையை ஏற்றுக்கொண்டு, வயதில் சிறியவராக இருந்தாலும், ஒழுக்கத்தில் பெரியவர் என்கின்ற நிலையில் மாதர் ஒருவரையும் மனத்தினும் நீண்டேன் என்று விரதம் பூண்டார். அந்த விரதப்படியே தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். வெளி உலக மக்கள் அறிந்துகொள்ளாவண்ணம் ஒரே வீட்டிலேயே உடன் வாழ்ந்து நாயனாரும் அவரது மனைவியாரும் இல்லறம் நடத்திக் கொண்டு வந்தனர். இந்த நிலையைச் சேக்கிழார் பெருமான் உள்ளன்போடு விளக்குகின்றார்.

"கற்புறு மனைவி யாரும்

கணவனார்க் கான எல்லாம்

பொற்புற மெய்யு றாமல்

பொருந்துவ போற்றிச் செய்ய

இற்புறம் பொழியாத் தங்கண்

இருவரும் வேறு வைகி

அற்புறு புணர்ச்சி இன்மை

அயலறி யாமை வாழ்ந்தார்." (பெரிய புராணம்)

இவ்வாறு பல ஆண்டுகள் கழிந்தன. இருவருக்கும் மூப்பு வந்தடைந்தது. அவர்களுடைய உடல் தளர்ந்தது. ஆயினும் அவர்களுடைய இறை அன்பு வளர்ந்தது. அவர்களுடைய பெருமையை இறைவன் உலகுக்கு உணர்த்த விரும்பினான். திருநீலகண்டரோ தமக்கும் தமது மனைவியாருக்கும் உள்ள உறவினை உலகிற்கு அறிவிக்க விரும்பவில்லை. எல்லாம் இறைவன் செயல். சிவபெருமான் சிவயோகியாக உலகிற்கு வந்து திருவிளையாடல் புரிகின்றார். என்ன நாடகம்!திருநீலகண்டரின் பெருமை வெளி வருகின்றது. நாயனாருக்கும் அவருடைய மனைவியாருக்கும் காட்சி தந்தருளி "ஐம்புலனும் வென்று மிக்கீர்களே!இளமையோடு என்றும் என்னுடன் இருப்பீர்களாக!" என்று அருள் புரிகின்றார். நாயனாரும் அவர்தம் மனைவியாரும் ஐம்புலன்களை அடிமைப்படுத்தி, அவற்றை தம்வழி நிறுத்தி வாழ்க்கை நடத்திய காரணத்தால் அத்தகைய பெருமையைப் பெற்றனர்.

"மன்றுளே திருக்கூத் தாடி யடியவர் மனைக டோறுஞ்

சென்றவர் நிலைமை காட்டுந் தேவர்க டேவர் தாமும்

'வென்றவைம் புலனான் மீக்கிர் விருப்புட னிருக்க நம்பா

லென்றுமிவ் விளமை நீங்கா' தென்றெழுந் தருளினாரே"

(பெரிய புராணம்...401)

ஐம்புலன்களுடைய அதிகாரம் தம்மிடம் செல்லாது என்று உறுதிப்பாட்டோடும், நம்பிக்கையோடும் கூறுபவர் திருநாவுக்கரசர் ஆவார். புலன்களை அவர் தன் வழி கொண்டு வந்ததன் காரணத்தால் தைரியத்துடன் பேசுகின்றார். "இறைவன் வானவர்களைத் தாங்கும் தூணாக இருக்கலாம். பாதாளத்தின் மூலமான பொருளாக இருக்கலாம். நான் நேரில் பார்த்ததில்லை. இப்பிரபஞ்சம் முழுமையும் அவனுடைய ஆட்சியில் இருப்பதை அறிந்துகொண்டேன். அவனுடைய அருளாணையைத் தெரிந்து கொண்ட பிறகு வேறொன்றையும் பற்ற மாட்டேன். அவனை அடைந்துகொண்ட நிலையில் உங்களுடைய அதிகாரத்திற்கு அடிமையாக மாட்டேன். என்னை நீங்கள் அலைக்க முடியாது. இனி நீங்கள் என் பக்கம் வராதீர்கள்." என்று உயிர்களிடம் சென்று, பொருந்தி தங்கள் வஞ்சகத் தொழிலை நடத்த முயலும் ஐந்து இந்திரியங்களை நோக்கிக் கூறுகின்றார் அப்பர் பெருமான்.

"மூள்வாய தொழிற்பஞ்சேந் திரிய வஞ்ச

முகரிகாள்!முழுதும்இவ் வுலகை ஓடி

நாள்வாயும் நும்முடைய மம்மர் ஆணை

நடாத்துகின்றீர்க்கு அமையாதே;யானேல், வானோர்

நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற

நெடந்தூணைப் பாதாளக் கருவை ஆரூர்

ஆள்வானைக் கடுகச்சென்று அடைவேன்;நும்மால்

ஆட்டுணேன்;ஓட்டந்தீங்கு அலையேன் மின்னே".