சித்தம் சிவன்பால் உறைவதும், சிவம் சித்தத்தை விழுங்குவதும் யோகம் எனப்படும். யோகம் எனும் சொல் ஒரு வடமொழிச் சொல். அதற்கு இணைதல், சேருதல் என்று பொருள். பல ஆயிரம் ஆண்டுகளாக நமது ஞானிகளும், அருளாளர்களும் யோக மார்க்கத்தின் உண்மைகளைக் கண்டறிந்து தங்களுடைய அனுபவங்களை உலக ஆன்மீக வாழ்க்கைக்கு ஒப்பற்ற பரிசாக வழங்கியுள்ளனர். யோகம் ஓர் சிறந்த அருள் நிலை ஆகும். அருள் நிலை என்பது "சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற" நிலையாகும் சிவபரம்பொருள் சிந்தையுள்ளே நின்ற நிலையை உணர்ந்து, அகமகிழ்ந்து, பேரானந்தத்தில் திளைத்து நிற்கும் நிலையே யோக நிலையாகும். இதுவே சிவயோகம் எனப்படும். சுந்தரமூர்த்தி நாயனார் தில்லையில் இறைவனைத் தரிசித்தபொழுது பெற்ற பேரின்பத்தைப் பேரின்ப வெள்ளம் என்றும், மாறிலா மகிழ்ச்சி என்றும் சேக்கிழார் பெருமான் விவரித்து மகிழ்கின்றார். வன்தொண்டர் தில்லையில் நடராஜப் பெருமானின் பெரும் கூத்தினைக் காண்கின்றார். அதாவத அந்த நிலையில் அவருடைய பொறிகள் அனைத்தும் கண்ணாகிய ஒரு பொறி வழியே மட்டும் செயல்படுகின்றன. அவருடைய உணர்வுகளெல்லாம் ஒருமுகப்படுத்தப்பட்டன. அவருடைய மனம், புத்தி, சித்தம் ஆகிய உக்ரவிகள் தனித்தனியே செயல்படாது சிந்தை வழியே செயல்பட்டன. இறைவனின் திருக்கூத்து அவருடைய சிந்தையை நிரப்பி நின்றது. அவருடைய குணங்களைப் பொறுத்தவரை, எல்லாக் குணங்களும் சாத்துவிகத்துள் அடங்கி நின்றன. ஆகவே, பிறப்பினைச் சேர்க்கும் எல்லாக் கருவிகளும் சிவன்பால் நின்று, தங்களுடைய இயல்பான போக்கினை அடக்கிக் கொண்டு, சிவத்தின்பால் அமைந்திருந்தன. கருவிகள் தங்கள் இயல்புப்படி தத்தம் வழியே செல்லும் நிலை இங்கு இல்லை. "தானே புலனைந்தும் தன்னில் மடைமாறும்" என்பார் திருமூலர்.
"மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழி அடைத்த அமுதே
ஊறி நின்று என்னுள் எழும் பரஞ்சோதி..."
என்னும் திருவாசகப் பாடலும் இந்தப் பொருளையே உணர்த்துகின்றது.
சுந்தரமூர்த்தி நாயனார் பெற்ற சிவானந்த அனுபவம் சிவ யோகத்தின் முடிவு என்றும், எல்லை என்றும் கருதலாம். இதைப் பற்றித் தத்துவங்கள் பல பேசலாம். விளக்கங்கள் கொடுக்கலாம். நூல்கள் பல எழுதலாம். ஆனால், சிவயோக நிலை ஓர் அனுபவ நிலையாகும். சொற்களுக்கு அப்பாற்பட்டது. இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே. சாதாரணமாக உடலோடு சேர்ந்து இயங்கும் புறக்கருவிகளும், அகக்கருவிகளும் புறத்தோற்றத்தை நாடிச் செயல்படுகின்றன. அவ்வாறு செயல்படும் வரை அவை உயிரின் உண்மை நிலையை அறிந்து கொள்ள தகுதியற்ற நிலையில் உள்ளன. திருவருளால் இதிலே ஒரு மாற்றம் ஏற்படுகிறது. கருவி, கரணங்கள் தத்தம் தொழிலிலே தொடர்ந்து ஈடுபடுகின்றன. ஆனாலும், உள்ளுணர்வு சிவானுபவத்தில் திளைக்கத் தொடங்குகின்றது. இந்த
ஒரு மகத்தான மாற்றம் என்றாவது ஒரு நாள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடந்தே தீரும். இறைவன் நமக்கு அருளிச் செய்துள்ள சுதந்திரத்தை, உரிமையை, ஆற்றலை, அறிவைப் பயன்படுத்தி சிவானுபவத்தை அடைவதற்கான வழிகளிலே ஈடுபடுவதே நமது தலையாய குறிக்கோளாகும்.
இந்தக் குறிக்கோள் நம்முடைய கண்களுக்குத் தென்படுவதில்லை. ஆணவம் நமது கண்களை மறைக்கின்றது. ஒரு வகை இருள் நிலையிலேயே வாழ்ந்து வருகிறோம். எப்பொழுதும் நமது உயிருடன் சேர்ந்து கிடக்கும் ஆணவ மலம் உயிரை அதன் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ளா வண்ணம் மறைத்தலாகிய தொழிலைச் செய்கிறது. ஆகவே, உயிருக்குத்தான் யார், தனது இருப்பிடம் எது, தனது நோக்கம் என்ன என்ற ஒரு அறியாத நிலையே படர்ந்து கிடக்கின்றது. உயிர் என்ற ஒன்றுண்டு. இறைவன் தனது பெருங் கருணையால் உயிரானது அருள் நிலையைப் பெற வேண்டுவதன் பொருட்டு, அதற்கு உடலையும் கருவிகளையும் வழங்குகின்றான். வினைக்கீடாய் மெய்கண்டு - என்றது திருமந்திரம்.
உயிர் ஆணவ மல மறைப்பிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள வேண்டும். இதற்காகவே இறைவைன் அருளால் பொறி, புலன்கள் உயிருக்கு அளிக்கப்படுகின்றன. உயிரானது சகல நிலையைப் பெறுகிறது. இது புணர்ச்சிக்கு ஏதுவான நிலை. உயிருக்கு அறிவு உண்டு. ஆனால், இது முழுமையான அறிவன்று. இறைவனுக்கு மட்டுமே பேரறிவும், பேராற்றலும் உண்டு. உயிர் பெற்றுள்ளது வெறும் சுட்டறிவு, சிற்றறிவு மட்டுமே. அந்த அறிவும் உடலுடன் கூடிய பொறி, புலன்கள் செலுத்தும் வழியிலேயே செல்கின்றது. அதனால், வினை வளருகிறது. வினை வளர்ந்தாலும் உயிருக்குச் சற்று விளக்கம் கிடைக்கின்றது. உயிர் இப்பொழுது தனது கருவியைச் சார்ந்து நிற்கின்றது. உயிருடைய அறிவானது கருவிகள் மூலமாகக் கிடைக்கும் புறத்தேயுள்ள அனுபவங்களை மட்டுமே பெறுகின்றது. இதனால் உயிரானது தன்னிலை உணராதுதான் உடலென்றே, உடலைச் சார்ந்த கருவிகள் என்றே கருதிக் கொள்ளுகின்றது. இருந்தாலும், இந்தக் கருவிகள் தேவைப்படுகின்றன. தத்துவங்கள் தேவைப்படுகின்றன. அவற்றின் வழியாகவே சிறிது சிறிதாக உயிருக்குத தனது அறிவு, ஆற்றல் ஆகியவற்றின் விளக்கம் கிடைக்கின்றது. திருவருள் சேர்க்கயை £ல் தத்துவங்கள் யாவும் நம்முடைய வளர்ச்சிக்குப் பயன்பட்டு நல்லுணர்வையும், நல் விருப்பத்தையும், நற்செயலையும், நல்ல பண்பாட்டையும் வழங்குவதற்கு ஆதாரமாகவும் உள்ளன.
உலகில் தோன்றிய ஒவ்வொருவரும் தமது கருமங்களை முடிக்க வேண்டும். அதற்கு மாயையின் சேர்க்கை தேவை. மாயையாலே மாயையை வெல்ல வேண்டும். மாயையை வெல்வது என்றால், உயிரானது தன்னிலை விளக்கம் பெற வேண்டும். தான் உடம்பல்ல, உடம்பின் கருவிகள் அல்ல என்று தெரிந்து கொள்ள வேண்டும். உயிரற்ற உடம்பு ஏதும் செய்யலாகாது. உயிரோடு கூடிய உடம்புதான் உயிரின் அறிவு, ஆற்றல் ஆகியவற்றால் செயல்படுகிறது. உயிரில்லாவிடில் உடலும், கருவிகளும் வெறும் சடமே. இவ்வுயிரானது உடம்புக்கு வெளியே இருப்பதன்று. அகத்தே இருப்பது என்றும் தெரிந்துகொள்ளவேண்டும். இதையே திருமூலர் "உடலோடு உயிரை ஒருபொழுது உன்னார்" என்றார்.
உயிர் எப்பொழுதும் ஒன்றைச் சார்ந்தே நிற்பது. அறிவு குன்றிய நிலையில் புறத்தேயுள்ள பொருள்களைச் சார்ந்து நிற்கின்றது. இன்பம் அடைகின்றது. துன்பமும் அடைகின்றது. உயிரின் அனுபவங்கள் உடலுடைய அனுபவங்களாகத் தவறாகக் கருதப்படுகின்றன. உண்மையில் இவையெல்லாம் உயிரின் அனுபவங்களே. இவ்வாறு உயிர்க்கு இந்த அனுபவங்களைச் சேர்க்கின்றவன் வேறொருவன். உடம்பு சடப்பொருள். உடம்பினால் மட்டும் அனுபவம் கிடைக்காது. உயிர் சத்துப்பொருள். அறியும் தன்மையுடையது. ஆனால் உயிரின் அறிவு வியாபகமுடையது. அன்று. இதன் விளைவாக உயிர் தன்னை உடலுடன் சேர்த்துத் தனது இயக்கத்திற்குக் காரணமாக உள்ள இறைவனுடன் தனக்குள்ள தொடர்பினை அறிந்து கொள்ளாமல் உலக அனுபவங்களுக்குத் தன்னை அடிமையாக்கி அறியாமையில் கிடக்கின்றது. உயிரின் அறிவுக்குள் அறிவாய் அமர்ந்து, உயிரினை அதனுடைய விருப்பம்போலே நடத்திப் பல அனுபவங்களுக்கு உயிரை உள்ளாக்கி, முடிவில் உண்மை உணர்வு பெறச் செய்கின்ற பேரறிவுப் பொருளாகிய பரம்பொருள் ஒன்று உண்டு. அந்தப் பொருள் எங்கும் நிறைந்துள்ளது. அந்தப் பொருளே உடலுக்குள், உயிருக்குள் நிறைந்துள்ளது. அந்தப் பொருளே உயிரை நடத்திச் செல்லுகின்றது. இதுவே சிவம் எனப்படுவதாகும். இந்தச் சிவமானது உயிருக்கு ஒன்றாய், வேறாய், உடனாகவும் செயல்பட்டு வருகின்றது. இதை நாம் அறிவதில்லை. "உயிருள் சிவனை ஒருபொழுதும் உன்னார்" என்றார் திருமூலர்.
உயிர் உடலுக்கு மாறுபட்டது என்று உணர்வது முதல் கட்டம். உயிருக்கு உயிராய் நிற்பது பேரறிவாகிய சிவபரம்பொருள் என்று எண்ணிக்கொள்வது இரண்டாவது கட்டம். சிவபரம்பொருள் நமது சிந்தனைக்குள் வீற்றிருக்கின்றான். ஊனாகி, உயிராகி நிற்கின்றான். "நினைப்பவர்கள் மனம் தன்னுள் நினைவேதானாய் நிற்கின்றான்". நமது கருவி, கரணங்களை இயக்குவிக்கும் ஆற்றலை உயிருக்குக் கொடுக்கின்றான். கரணமெல்லாம் c என்று அருளாளர்கள் கூறுகின்றனர். உண்மையில் நான் என்றும், எனது என்றும் ஒன்றுமில்லை. எல்லாம் அவன் தன் விருப்பம் அன்றே. சிந்தையிலே வீற்றிருக்கும் பேரறிவுப் பொருள் அவன். மனம் போன போக்கே சிந்தை செயல்படாது, தன்னுள் அறிவுக்கு அறிவாய் வீற்றிருக்கும் பரம்பொருளை உணர்ந்துகொள்வது மூன்றாம் கட்டம். தான் உடலில்லை என்றும், அறிவிப்பொருள் என்றும், பேரறிவாகிய இறைவனால் இயக்கப்படுபவன் என்றும் நினைந்து, சிந்தையிலே தெளிவுபடுவது உயிர்களின் கடமையாகும். இதை அறியாத நிலையில் "ஒருபொழுது உன்னார் சிவன் உறை சிந்தையை" என்றார் திருமூலர். நற்கதி பெறுவதற்குத் தனக்கு நிலைத்த ஆதாரம் கடவுள்தான் என்கிற நினைப்பு வர வேண்டும். தன்னுள் வீற்றிருக்கும் சிவத்தை விட்டு உயிரானது தனித்து நிற்க முடியாது என்கிற உறுதியும் எழ வேண்டும். இந்த உறுதியில் சிறிதளவும் தளர்வு கூடாது. திருவடி ஞானமே நாம் பெறத்தக்க ஒன்று என்று அதைப் பெறும் முழு முயற்சியிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தன்னைத் தான் உணர்ந்து கொள்வது அறிவு நிலையில் ஒரு முன்னேற்றம் தான். ஆனால், அத்துடன் நின்று விடக்கூடாது. அதையும் கடக்க வேண்டும்.
எல்லாம் திருவருட் செயல் என்று எண்ணி நின்றிடல் வேண்டும். அருளைப் பற்ற வேண்டும். அருளிலே அழுந்திவிட வேண்டும். ஊஞ்சல் விட்டத்தைச்
சங்கிலியால் பற்றியுள்ளது. ஊஞ்சல் ஆடுகின்றோம். கயிறு அறுந்தால் ஊஞ்சல் தரையில் விழுந்து விடுகின்றது. முதலில் ஊஞ்சல் சங்கிலியால் விட்டத்தைப் பற்றியிருந்தது. இப்பொழுது நிலையாகத் தரையில் அமர்ந்துவிடுகின்றது. கருவி கரணங்களைச் சார்ந்து உயிரானது உலக மேடையில் நடை போடுகின்றது. கருவி கரணங்கள் புறப் பற்றினை நீக்கி இறை நாட்டம் செலுத்தும்போழுது சிவமாகிய பரம்பொருள் உயிருக்கு ஆதாரமாகி விடுகின்றது. இதைத் திருவுந்தியார் "நம் செயலற்று இந்த நாம் அற்ற பின் நாதன் செயல் தானே" என்கிறது. இவ்வாறு உயிரின் சிற்சக்தியை, சிற்றறிவை இறையருட் சக்தியுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். இதுவே யோகம் எனப்படும். இயல்பாகப் பாசத்தை வளர்க்கும் கருவி, கரணங்கள் இயக்கம் உடலின் கீழ்ப்பகுதியில் அறிவையும், ஆற்றலையும் திருப்புகிறது. இதைச் செய்யாமல் கருவிகளின் இயக்கம் உயிரின் இயல்பை மேல்நிலைக்கு எடுத்துச் செல்வது யோகமாகும். இதை யோக நூல்கள் பலவாறாக விளக்குகின்றன. மூலாதாரத்தில் அடங்கிக் கிடக்கும் உயிரின் சிற்சக்தியை தியான சாதனை அடிப்படையில் மேலெழுப்பி அருட்சக்தியோடு கலக்கச் செய்வது யோகமாகும். இதனை அறிந்து முயற்சிகளை மேற்கொள்ளுதல் நான்காம் கட்டமாகும். இதனை "ஒருபொழுது உன்னார் சந்திரப் பூவையே" என்றார் திருமூலர். தியான சாதனையின் நான்கு கட்டங்களையும் தெளிவாக விளக்கி விடுகின்றது. பின்வரும் திருமந்திரம் -
"ஒருபொழுது உன்னார் உடலோ (டு) உயிரை;
ஒருபொழுது உன்னார் உயிருள் சிவனை;
ஒருபொழுது உன்னார் சிவன்உறை சிந்தையை;
ஒருபொழுது உன்னார் சந்திரப் பூவையே". (திருமந்திரம் - 601)
ஆகவே, உண்மை யோகம் நன்குணர்ந்த உயிரானது சிவானுபவத்தில் திளைத்து நிற்பதே ஆகும். மனம் செல்லும் போக்கே போகாது மனதை அடக்கப் பயில வேண்டும். மனம் புறத்தே போகாது அடங்கி, ஒரு குறியில் நின்று சிவத்தின் தோற்றத்தையும் சிந்திக்க வேண்டும். அந்தச் சிந்தனை இடைவிடாமல் இருக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பழைய வினைகளின் வலிமை காரணமாக மனம் அவ்வப்பொழுது செம்பொருளைப் பற்றிய சீரிய சிந்தனையிலிருந்து விலகி, உலகத்தின் மீது தனது நாட்டத்தைச் செலுத்தும். அவ்வாறு இல்லாமல் அதற்குத் தடை போட வேண்டும். மேலும் மேலும் தியான மூர்த்தத்தின் பால் மனதைச் செலுத்த முயல வேண்டும். இது நினைத்தமாத்திரத்திலேயே நடந்து விடாது. திருவருளே மனத்திற்கு பக்குவத்தையும், வலிமையையும் கொடுக்கும். உலகப் பொருட்களின் மீது பற்றினைப் படிப்படியாகக் குறைத்து, அவற்றின் மீது சாராமல் தான் வணங்கும் உருவத் திருமேனியைத் தியானத்தில் வைத்து நிற்பது ஒரு படியாகும். கடவுளை உணரவொட்டாமல் தடுக்கும் கவலைகள் தியானத்திற்கு ஊறு விளைவிக்கும். ஆனால், அதற்காகத் தளர்ந்துவிடாமல் ஒரே குறிப்பாக நிற்க வேண்டும். திருவடி ஞானத்தையே தலையாய கோட்பாடாக உள்ளத்தில் வைத்து இடைவிடாமல் நிற்கும்பொழுது கருவி, கரணங்கள் உலகப் பற்றினை நீக்கிக்
கொண்டு, தியான மூர்த்தியின் திருவுருவில் அழுந்தும் என்று அருளாளர்கள் கூறுகின்றார்கள். இயமம் முதல் எல்லாவித வாழ்க்கைக் கோட்பாடுகளையும் அனுசரிக்க வேண்டும். திருவடி ஞானத்தையே தலையாய கோட்பாடாக உள்ளத்தில் வைத்து இடைவிடாமல் நிற்கும்பொழுது கருவி, கரணங்கள் உலகப் பற்றினை நீக்கிக் கொண்டு, தியான மூர்த்தியின் திருவுருவில் அழுந்தும் என்று அருளாளர்கள் கூறுகின்றார்கள். இயமம் முதல் எல்லாவித வாழ்க்கைக் கோட்பாடுகளையும் அனுசரிக்க வேண்டும். தொடர்ந்து சிவபரம்பொருள் மீது அசையாத, மாறாத பற்றினைக் கொள்ளும்பொழுது உயிர் சமாதி நிலைக்குச் செல்லுகின்றது. பல தடைகளைத் தூக்கி எறிந்து, தொடர்ந்து உயிரானது பரம்பொருளை நாடும் நிலை ஆதார யோகம் என்று கூறப்படுகிறது.
"சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின் என்றமையால்
சார்புணர்தல் தானே தியானமுமாம் - சார்பு
கெடஒழுகின் நல்ல சமாதியுமாம் கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று. (திருக்களிற்றுப்படியார் - 34)
ஆதார யோகமாவது சிறு குழந்தையின் தாயார் குழந்தையின் கையைத் தூக்கி, அந்தக் கையாலேயே வானத்தில் உள்ள சந்திரனைக் காட்டுவது போலாகும். கண்ணிற்கு உடனடியாகப் படாத ஒரு நட்சத்திரத்தைக் கிட்டத்தில் தெரியும் மரக்கிளை ஒன்றைக் காட்டி அதன் வழியே தெரிவிப்பது போலாகும். ஆதார யோகத்தில் உயிரின் அறிவு பயன்படுகின்றது. கருவிகளை நீக்கிக் கரணங்களோடு நின்று செல்வது. ஆனால், அந்த உயிரைப் பற்றிய நினைப்பும் நீங்க வேண்டும். சிவத்தைப் பற்றிய எண்ணம் உயிருக்குள் நிரம்பி நிற்க வேண்டும். எங்கும் வியாபகமாய் உள்ள சிவத்தினுள் உயிர் அடங்கி நிற்க வேண்டும். உயிரை ஆதாரமாகக் கொள்ளாமல், அல்லது உயிரினுடைய நினைப்பை நிலைப்படுத்தும் தியானமூர்த்தத்தின் ஆதாரமில்லாமல், சிவமாகிய பரம்பொருளைக் கொண்டு, ஆதாரமாக வைத்து, அந்த அறிவினைத் தான் மறைத்துவிடுவது நிராதார யோகமாகும். கருவி, கரணங்கள் அனைத்தும் நீங்கித் திருவருட் குணத்தால் செய்வது யாதொருவிதமான ஆதாரத்தையும் பற்றாமல் சிவாதாரமாய், சிவஞானத்தால் ஒன்றுபட்டு நிற்கும் முறை நிராதார யோகமாகும். "நிற்கும் பொருளுடனே நிற்கும் பொருளுடனாய் நிற்கை நிராதாரமாம்" என்பது திருக்களிற்றுப்படியார்.
சீவன் முக்தர்களான அவர்கள் வாழ்நாள் முழுவதும் இறைவன்தான் பற்றி, சிந்தையை அவ்வாறே நிரப்பி, வீடு பேறு பெற்ற செல்வர்கள் என்று திருத்தொண்டர் திருவந்தாதி கூறுகின்றது. "நாதாந்த தாரணையால் சிவத்தடைந்த சித்தத்தார்" என்கிறார் சேக்கிழார் பெருமான். இவர்கள் அடைந்திருப்பது ஞான யோக நெறியாகும். அதாவது தங்களுடைய சிந்தையிலே சிவத்தை உணர்ந்து, கலந்து, தன்னை மறந்திருக்கும் நிலையாகும். இத்தகைய சிவ யோகமே மெய்ம்மை என்கிறது திருக்களிற்றுப்படியார். அவர்களே போற்றுதலுக்குரியவர்கள்.
"காரணபங் கயமைந்தின் கடவுளர்தம் பதங்கடந்து
பூரணமெய்ப் பரஞ்சோதி பொலிந்திலங்கு நாதாந்தத்
தாரணையாற் சிவத்தடைந்த சித்தத்தார் தனிமன்றுள்
ஆரணகா ரணக்கூத்த ரடித்தொண்டின் வழியடைந்தார்".
(பெரியுபுராணம் - 4157)