"யோக வழியில்"
அன்றாட வாழ்க்கையில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்புகள், ¢ சமாளிக்க வேண்டிய பிரச்சனைகள், நம்முடைய முழு நேரத்தையும், ஆற்றலையும் எடுத்துக் கொள்கின்றன. நாம் யார், நம்முடைய நிலை என்ன என்று சிந்திக்க வாய்ப்பும், நேரமும் கிட்டாமல் வாழ்க்கை முடிந்து விடுகிறது. நம்மைப் பற்றியே கவலைப்பட்டுக் கொள்ளாத நிலையில் எல்லாவற்றிற்கும் மேலான பரம்பொருளைப் பற்றி எங்கே சிந்திக்கப் போகிறோம்? நமக்கெல்லாம் உலகம்தான் கடவுள். இந்த உலகத்தில் வாழ்ந்து வருவதையே குறிக்கோளாக வைத்து இறக்கும் வரை காலத்தை வீணடிப்பதில் நிபுணர்கள் ஆகிவிடுகிறோம். நம்மில் சிலர் இருக்கிறன்றார்கள். அவர்கள் தங்களுடைய உடம்பினையே கடவுள் என்று கருதி, அதை பேணுவதையே முக்கியமான எண்ணமாக வைத்து, வாழ்வை நடத்திப் பின்னர் மறைந்து விடுகின்றார்கள். சற்றுத் தீவிரமாகச் சிந்திப்பவர்கள் மனம் ஒன்று உள்ளத என்பதை உணர்ந்து கொண்டு, அதையே கடவுளாக நினைத்து, அதைக் கட்டுப்படுத்த இயலாமையால் மிக்கத் துன்பத்துடன் வாழ்வைக் கழித்து விடுகின்றார்கள். இன்னும் சிறிது பக்குவம் பெற்ற சிலர் உடலைத் தவிர உயிர் ஒன்று வேறாக உள்ளது என்பதை அறிந்து கொள்கின்றார்கள். உயிரையே கடவுள் என்றும் சொல்லிக் கொள்வார்கள். இத்தகைய வேறுபாடுகள் நிறைந்து கிடக்கும்பொழுது உண்மையான நிலை என்ன என்பதை மக்கள் சரியாக உணர்ந்து கொள்ளவில்லையென்றால் அதில் வியப்பு ஒன்றுமில்லை.
திருமூலர் பெருமானைப் போன்ற ஒப்பற்ற யோகிகள் மெய்ப்பொருளையும், அத்துடன் நமக்கு இருக்கக்கூடிய தொடர்பையும் தம்முள்ளேயே உணர்ந்து யோக நெறி மூலமாக இந்த உண்மையை எல்லோரும் உணரமுடியும் என்று விளக்குகின்றார்கள். அவர்கள் மரணமில்லாப் பெருவாழ்வு பெற்றவர்கள். பூதவுடலைக் கருவியாகக் கொண்டு அவர்கள் யோகத்தின் சிகரத்தை எட்டி, தெளிந்த அறிவு பெற்றவர்களாக, தாம் பெற்ற அனுபவத்தை மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றார்கள்.
இந்த உடம்பானது கருவிக் கூட்டங்களால் ஆனது. உடம்பில் ஐம்பொறிகள் உள்ளன. இவை வழியாக ஐம்புலன்கள் ஓயாமல் மனத்தை உலக வழியில் பாயுமாறு இழுத்துக் கொண்டே இருக்கின்றன. இந்த ஐம்புலன்களின் வழியே சென்றால் பரம்பொருளைப் பற்றிச் சிந்தனை செய்யவோ, நாட்டம் செலுத்தவோ இயலாது. ஐம்பொறிகளுடன் சேர்ந்து இருப்பது மனமாகும். இந்த மனம் ஓடிக்கொண்டே இருக்கும். ஐம்பொறிகள் மனத்தை ஓயாமல் சஞ்சலமடையச் செய்கின்றன. மனமானது காமம், வெகுளி, மயக்கம் ஆகியவற்றால் சதா உந்தப்பட்டு வருகின்றது. அதன் காரணமாக அறியாமை என்கின்ற திரை நம்மிடமிருந்து மெய்ப்பொருளை மறைத்து வைக்கின்றது. இச்சை நிறைவேறாவிடில் கோபம் வருகிறது. கோபம் புத்தியை மயக்குகிறது. விருப்பும் வெறுப்பும் வளருகின்றன. ஆகவே, காமத்தீயினைக் கட்டுப்படுத்தி, மனதை
இறைவன்பால் செல்லும்படி மாற்ற வேண்டும். ஐம்புலன்களையும் ஒரு முகமாக்கி உறுதிப்பாட்டுடன் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். கோபமே தீவினைகளுக்கெல்லாம் வித்தாகும். கோபத்தைத் தணித்து மனத்திலே இறை அன்பை நிரப்பிக் கொள்ள வேண்டும். ஐம்புலன்கள் வழி மனம் செல்வதற்குப் பதிலாக, ஐம்புலன்களை மனத்தின் வழி செலுத்த வேண்டும். அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவரான சண்டேசுவர நாயனார் "தம்மை ஐந்துபுலனும் பின்செல்லும் தகையார்" என்று சிறப்பிக்கப்படுகின்றார். ஐம்புலன்கள் மதம்மிக்க யானைகளைப் போன்றவை. அவற்றைக் கட்டுப்படுத்த அறிவு எனும் விளக்கினைத் தூண்டி வைக்க வேண்டும். திருநாவுக்கரசர் சுவாமிகள் "உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகளியாக - மடம்படும் உணர்நெய்யட்டி உயிரேனும் திரிமயக்கி - இடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில் - கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே" என்பார்.
ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் இதே கருத்துடன் "அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி - ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன்" என்று மொழிகின்றார். இறைவனுடைய அருளே இந்த அறிவாக மிளிர்கிறது. இந்த அறிவே மாயா விளக்காக உள்ளத்தில் பிரகாசிக்கின்றது. அதாவது ஆதி அந்தம் இல்லாத சோதியே அருளளி விளக்காக, அறிவொளியாக மனத்தில் கொழுந்துவிட்டு எரிகின்றது.
"மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினத்து விளக்கிணைச் செல்ல நெருக்கி
அனைத்து விளக்குந் திரியக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே" (திருமந்திரம் - 602)
யோகநெறி பாசப்பற்றை நீக்கி, சிற்றுணர்வைக் கட்டுப்படுத்தி ஐயம் நீங்கப்பெற்றுத் தெளிவான காட்சியைப் பெற பயன்படுகின்றது. ஆகவே, மனத்தைக் கட்டுப்படுத்துவதே யோகமாகும். மனத்தைக் கட்டுப்படுத்த எல்லாம் வல்ல பரம்பொருளாகிய சிவத்தின் மீது அன்பு வைத்துப் பல ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். யோக நெறி என்றால் பொதுவாக மக்கள் அட்டாங்க யோகம் என்று சொல்லப்படும் உடலைப் பற்றிய அப்பியாசங்கள் தொகுக்கப்பட்டுள்ள யோக முறைகளைத்தான் நினைத்துக் கொள்வார்கள். பண்டைக்காலம் முதற்கொண்டே நமது நாட்டில் அட்டாங்க யோகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்து வருகின்றது. ஆனால், திருமூலருடைய உபதேசம் அட்டாங்க யோக சாதனையால் மட்டும் சிவ தரிசனத்தை அடைதல் இயலாது ஒளியைத் தூண்டச் செய்வதே யோக நெறி என திருமூலர் கூறுவார். திருமூலர் ஓர் சிறந்த யோகியாவார். மூவாயிரம் ஆண்டுகள் தவம் இருந்து தனது உடலையும், மனதையும் கட்டுப்படுத்தி உள்ளளியைப் பெருக்கி, இறைவனுடைய திருநடனத்தைத் தம்முள் கண்டு, அதை அனுபவித்து ஆண்டிற்கு ஒரு மந்திரமாக மூவாயிரம் மந்திரங்களை அருளிச் செய்துள்ளார். நீண்ட நெடுங்காலம் அவர்
வாழ்ந்திருந்தார் என்றால் சிறந்ததொரு யோக நெறியில் அவர் முற்றிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்திருந்தார். ஆகவே, திருமந்திரமாலையில் அவர் விளக்கும் யோக நெறி ஓர் மிக முக்கியமான பகுதியாகும்.
திருமந்திரத்தில் கூறுப்படும் நெறி அட்டாங்க யோகம் எனப்படும். அதாவது இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்கிற எட்டுப் பகுதிகளை இந்த யோக நெறி கொண்டுள்ளது. இந்த எட்டு வழிகளையும் தனக்கு இறைவனே போதித்தான் என்று திருமூலர்பிரான் கூறியுள்ளதால் அவை மிக முக்கியமாகும். இந்த நெறியில் பொருந்தி நின்றவர்களக்குப் பிறவியில்லை என்று திருமூலர் எடுத்துரைக்கின்றார். இவையெல்லாம் பலவித ஒழுக்க நிலைகளாகும். யோக நெறிக்கு ஒழுக்க சூழ்நிலை இன்றியமையாதது. "ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்" என்பது குறளின் அறிவுரையாகும். ஆன்மீகப் பற்று பெற விரும்பும் ஒவ்வொருவரும் தன் உள்ளத்திற்கு மாறான ஒழுக்கம் கெட்ட பாதையில் செல்லாமல் காத்துக்கொள்வது மிகவும் முக்கியம். இயமமாவது தீயவைகளைச் செய்யாதிருத்தல் ஆகும். கொல்லாதிருத்தல், பொய் கூறாமை, திருடாமை, ஆராய்ச்சி செய்யும் மனப்பான்மையுடைமை, நல்ல அடக்கமும், பண்பும் உடைமை, cF வழுவாத நெறியில் செல்லுதல், குற்றங்கள் புரியாமை, கள்ளையும், காமத்தையும் அகற்றுதல், மற்றும் பிறருக்குப் பகிர்ந்துண்ணும் தன்மை முதலியவை இயமமாகும். நிமயத்தில் நிற்பவர் தூய்மை, கருணை, பொறுமை, நேர்மை, வாய்மை போன்ற கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பவர். மிதமான உணவு உண்பர். தவம், செபம், போதும் என்கின்ற மனம், கடவுளிடம் நம்பிக்கை, விரதங்களை அனுசரித்தல், உண்மை கேட்டு உணர்தல், தெய்வ பூசை செய்தல் போன்றவற்றைக் கொண்டவர்களாவர். நல்ல பழக்கங்கள் கடவுள் மீது நம்பிக்கையை வளர்க்கும் தீயழுக்கம் கடவுள் நம்பிக்கைக்கு உலை வைத்துவிடும். ஆகவே, ஆன்மீக நெறியில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள விரும்புபவர்கள் இயமங்களைக் கட்டுப்பாட்டுடன் அனுசரிக்க வேண்டும்.
அடுத்த யோக முயற்சிகளுக்கு முன்பு ஓர் நல்ல இடத்தில் அமைதியான சூழ்நிலையில் அமர்ந்து கொண்டு இறைவனை மனத்தில் வைப்பது ஆசனத்தில் பொருந்துவதாகும். நெடுநேரம் ஓரிடத்தில் இருந்து கொண்டு இறைவனைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமென்றால் அதற்குத் தகுந்தவாறு கை, கால், உடல் உறுப்புகளை லகுவான முறையில் வைத்துக் கொள்வதே சிறந்த ஆசனமாகும்.
அடுத்து வருவது பிராணாயமப் பயிற்சியாகும். இது மனத்தைக் கட்டுப்படுத்துபவர்களுக்கு இன்றியமையாததாகும். பிராணவாயுவம் மனமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. பிராணவாயுவை வசம் செய்யாமல் மனமானது வசமாகாது. பிராணவாயுவை கட்டுப்படுத்திப் பின்னர் மனத்தைத் தன்வசம் ஆக்கிக் கொள்ள வேண்டும். சுவாசமானது இடகலை, பிங்கலை என்று கூறப்படும் இரண்டு நாடிகள் வழியாக மாறி மாறி உட்சென்று வெளிச் செல்கின்றது. இவற்றை ஒன்றுபடுத்த வேண்டும். குதிரையை அடக்கிவிடாது. வகையாகக் கடிவாளத்தைக் குதிரையின் வாயிலிட்டு அதை மாறி மாறி இழுத்தும், நிறுத்தியும், ஓட்டியும்
முயன்றால் குதிரை அடங்கும். இவ்வாறே பிராணாயாமத்தால் மனத்தை வேகம் கெடுத்து ஆளலாம். இதைத் திருஞானசம்பந்தர் "ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி" என்பார். பிராணாயாமப் பயிற்சியை முறைப்படி குருவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் நல்லது. அவ்வாறு செய்தால் சுவாச கதிகள் முறைப்படுத்தப்பட்டு மனத்துடன் ஒன்றி நிற்கும். இதைத் திருமூலர் "மனம் எங்குண்டு வாயுவும் அங்கு உண்டு" என்பார். மனமும் வாயுவும் லயப்படுவதன் மூலமாகத்தான் மேற்கொண்டு தியான சாதனை புரிய இயலும்.
"ஆரிய னல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே" (திருமந்திரம் - 565)
பிராணாயமப் பயிற்சியால் உடலிலுள்ள எல்லா நாடிகளும் தூய்மை அடையும். மனம் தெளிவடைந்து புறக்கண்கள் வழியாகச் செல்வதை விட்டுவிட்டு அகக்கண்கள் வழியாகப் பார்க்கத் தொடங்கும். ஐம்புல உணர்வுகள் நீங்கிப் போகும். வெளி உலக விஷயங்களைப் பற்றிய நாட்டமும், அறிவும் குறைந்துவிடும். ஐம்புலன்களின் நாட்டம் புறப்பொருள்களை விட்டுப் பரம்பொருளின் மீது செல்லும். சோர்வு தவிர்க்கப்படும். பிராணவாயுவைக் கட்டுப்படத்துவதால் உடலாகிய வீட்டிற்கு விரைந்து அழிவில்லை என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இறைசிந்தனையும் வலுவடையும். அப்பொழுது நான் என்கிற நினைவு குறையும் மனமானது இறைவனைத் தவிர வேறொன்றையும் நாடாத நிலையில் அமரும் இந்த நிலையை மாணிக்கவாசகப் பெருமான் "ஊன்கெட்டு உயிர்கெட்டு உணர்வுகெட்டு என் உள்ளமும் போய் - நான் கெட்டவா" என்று திருத்தெள்ளேணத்தில் பாடுகின்றார்.
"நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவனவ னாமே" (திருமந்திரம் - 604)
பிராணன் என்கிற குதிரையைக் கட்டுப்படுத்துவதால் நமக்குக் கிடைக்கும் புத்துணர்வைத் திருமந்திரம் அழகாகப் பின்வருமாறு விளக்குகின்றது.
"புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்
கள்ளுண்ண வேண்டாந் தானே களிதருந்
துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே" 9திருமந்திரம் - 566)
உள்ளத்தைச் சொல்லிவிட்டோம் என்று திருமூலர் கூறுகின்றார். இன்பம் வேண்டும் இன்பம் வேண்டும் என்று ஆசையை வளர்த்துக் கொண்டு பல தீய வழிகளை மேற்கொள்ளும் நாம் இதைக் கேட்டாவது உடலுக்கும் உள்ளத்திற்கும் வலிவு கொடுக்கும் ஓர் நெறியை மேற்கொள்ள இன்னும் தயங்க வேண்டுமா?
யோக நெறியில் செல்ல விரும்புபவர்கள் தன்னை அறியவும், இறைவனை அறியவும் முற்படுகிறார்கள். தனக்கும் இறைவனுக்கும் விளக்கமாக நமது உடல் இயங்குகின்றது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நமது உடலிலே பல ஆற்றல்கள் இருக்கின்றன. உண்மையில் இந்த ஆற்றல்கள் இறைவனுடைய அம்சமாகிய தேவர்களுடைய இருப்பிடமாக விளங்குகின்றன என்று யோகிகள் கூறுகின்றார்கள். இந்த ஆற்றல்கள் இருக்குமிடங்கள் ஆதாரங்கள் எனப்படும். உடம்பில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, என்று ஆறு ஆதாரங்கள் உண்டு. இவற்றிற்கும் மேலானது சகஸ்ரதளம். மூலாதாரம் என்பது அடிநிலை ஆதாரமாகும். இந்த ஆதாரச் சக்திகள் பூவிதழ்களின் அமைப்பைக் கொண்டவை என்றும், பல நிறங்களைக் கொண்டவை என்றும் யோக நூல்களில் கூறப்படுகிறது. மூலாதாரம் நான்கு இதழ்களையும் நான்கு எழுத்துக்களையும் கொண்டது. செவ்வோளி நிறமுடையது. நாற்கோணத்தில் முக்கோண வடிவமுடையது. குதத்திற்கும் குய்யத்திற்கும் இடையில் உள்ளதாகக் கருதப்படுகிறது இறைவன் பெரும் ஆற்றலாகச் சீவராசிகளிடையே சக்தி எனும் வடிவில் தோன்றி எழும்புவது குண்டலினி சக்தி என்கின்ற பேருடன் விளங்கும் இடம் இதுவே. பிரபஞ்சம் இயங்குவதற்கு அடிப்படையாக உள்ள நிலை மூலாதாரமாகும். விஷய அனுபவங்களைப் பெறுவதற்குப் புலன்களைத் தூண்டிவிடும் இடம் இதுவே.
சுவாதிட்டானம் சிவப்பு நிறம் கொண்ட ஆறு இதழ்களையும், ஆறு எழுத்துக்களையும் கொண்டது. இங்கிருந்தே யோகப் பயிற்சியின் மூலம் மூலாதாரச் சக்தி மேலெழும்புவதாக யோகிகள் கூறுவர்.
மணிபூரகம் பத்து இதழ்கள், பத்து எழுத்துக்களைக் கொண்டு மூன்று வட்டங்களுடன் நாபித் தானத்தில் அமைந்துள்ளது. அனாகதம் இருதய ஸ்தானத்தில் பன்னிரண்டு இதழ்களையும், பன்னிரண்டு எழுத்துக்களையும் கொண்டுள்ளது.
அடுத்து கழுத்துப் பகுதியில் இருப்பது பதினாறு இதழ்களையும் பதினாறு உயிரெழுத்துக்களையும் கொண்ட விசுத்தியாகும். உயிர்களுடைய சாதாரண உணர்ச்சிகள் குறைந்தும், அறிவு உதிக்கும் இடமாகவும் இது உள்ளது. இரண்டு இதழ்களையும், இரண்டு எழுத்துக்களையும் கொண்ட ஆக்ஞை என்கின்ற இடம் புருவத்தின் நடுவில் உள்ளது. அறிவின் நிலைக்களமாக அமைந்துள்ளது. "வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு" என்பார் திருமூலர். இங்கு உலக அறிவு மங்கி, இறைவனைப் பற்றிய அறிவு பிரகாசமடைகின்றது.
மனமானது உலக விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கும்போது முதல் மூன்று தானங்களில் சஞ்சரிக்கின்றது. உயர்ந்த மனோபாவங்கள் ஏற்படுவதில்லை. அலை அலையாக ஆசைகள் தோன்றிக் கொண்டே இருக்கும். அந்த நிலையின் உயிரானது உலக மயமாக குறைந்த ஒளியுடன் குணமாற்றங்களுக்கு உட்பட்டதாய், பாசங்களுடன் பிணைக்கப்பட்டதாய் நிற்கின்றது. இந்த மூன்று தானங்களிலும் மனத்தை அடக்கி ஒரு முகப்படுத்திப் பழக வேண்டும். அப்படிச் செய்யாவிடில் மனமானது பாசத்தில் உழலும். ஆனால் இந்தச் சாதனை எளிதன்று. மணிபூரகத்தானம் வரை எழும் உணர்ச்சிகளை அடக்குவது மிகுந்த அவசியமாகிறது. இதுவே அகப்பூசையில் முதலாவது கட்டமாகும்.
அடுத்து நாபிக்கு நால்விரல் மேலே உள்ள இதயத் தானத்தில் மனதை லயிக்கச் செய்ய வேண்டுமென்று யோகிகள் கூறுவர். ஆன்ம எழுச்சி ஏற்படும் முதல் ஸ்தானம் என்று இதயம் கருதப்படுகின்றது. கழுத்துப் பகுதியிலுள்ள விசுத்தித் தானத்திற்கு ஓர் சிறப்பு உண்டு. இது சொற்கள் உருவாகும் இடம். இங்கிருந்து சொல்லை வெளிப்படுத்தும் ஆற்றலுக்கு வாணி என்ற பெயர் உண்டு. தியானத்திற்குச் சிறந்த இடமாகும்.
இருதயத்தில் இறைவனைப் பூசிக்க வேண்டுமென்று திருமூலர் கூறுவார். அப்படிச் சாதகர்கள் இறைவனை ஞானத்தால் சிந்திக்கச் சிந்திக்க உயிரிடத்திலிருந்து பாசங்கள் நீக்கப்படுகின்றன. மனத்திலே அமைதி கலந்த இன்பம் ஏற்படும். "சடலத் தலைவனைத் தாமறிந்தாரே" என்பார் திருமூலர்.
"நடலித்த நாபிக்கு நால்விரன் மேலே
மடலித்த வாணிக் கிருவிரல் உள்ளே
கடலித் திருந்து கருதவல் லார்கள்
சடலத் தலைவனைத் தாமறிந் தாரே" (திருமந்திரம் - 616)
பிரத்தியாகாரத்தில் மனம் புலன்வழிச் செல்லாமல் தடுத்து நிறுத்தப்படுகின்றது. கீழ்நோக்கிச் செல்லாமல் மேல்நோக்கிச் செல்ல உதவுவது தாரணையாகும். இவ்வாறு செய்தால் பல காலம் வாழலாம் என்கின்றார் திருமூலர். ஒரு பொருளைப் பற்றி மாறி, மாறி, விட்டு விட்டு மனமானது சிந்திக்கும் தன்மையை உடையது. தியான சாதனை வெற்றி பெறவேண்டுமென்றால் மனம் இந்த நிலையிலிருந்து விடுபட்டு வெளி வர வேண்டும். ஒரு குறிக்கோளை எண்ணி எண்ணி நீண்ட நேரம் அதிலேயே நிலைத்து இருக்க வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது தான் மனம் புலன்களைப் பற்றிய சிந்தனைகளை விட்டு இறைவனுடைய அருளைப் பற்றி நினைக்கத் தொடங்கும். இந்தப் பயிற்சியில் ஈடுபட ஈடுபட மனம் தூய்மை அடைகிறது. சத்துவமயமாகிறது. மனம் நினைக்கப்படும் பொருளின் மீது நிலைபெற்று விடுகிறது. ஒன்றி விடுகிறது. தாரணையின் முதிர்ச்சி தியானத்தில் கொண்டு விடுகின்றது.
தியானமாவது உள்முகப் பயிற்சியாகும் மனமும் சித்தமும் வெளிச் செல்லாமல் இருக்க வேண்டும். பழைய பழக்கங்கள் நீங்கி விட வேண்டும். ஐம்பூதங்கள், ஐம்புலன்கள், நான்கு அந்தக்கரணங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொண்டு உள்முகமாகத் திருப்பிக் கொள்ள வேண்டும். அது மட்டும் போதாது. இந்தத் தியானம் இறைவனைப் பற்றிய தியானமாக இருக்க வேண்டும். அதற்கு இறைவனுடைய அருளும் தேவை. உயிர்களுக்கு எப்பொழுதுமே துணையாக இருந்துவரும் சிவபரம்பொருள் தன்னையே தியானித்துக் கிடக்கும் பக்குவ நிலையை உண்டாக்கும். மேலும் அந்தத் தியானத்திற்கான ஆற்றலையும் வழங்கும். இறைவனுடைய திருமேனி குருவின் கண் தங்கும் என்பது திருமூலருடைய உபதேசம் குருவின் உருவைத் தியானத்தின் இதயத்தில் வைத்துச் செய்ய வேண்டும் என்று திருமூலர் கூறுவார்.
"உருவாய சக்தி பரத்தியான முன்னுங்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே" (திருமந்திரம் - 598)
தியானத்தில் ஆழ்ந்து செல்லச் செல்ல பரம்பொருளைப் பற்றிய அறிவும் வளரும். ஆகவே, தியானமானது அகப்பூசையில் முக்கிய கட்டமாகும். முகக்கண்களையே பயன்படுத்தி வெளிப்பொருட்கள் காட்சியை அனுபவிக்க வேண்டும் என்கிற ஆவல் குறைந்து, அகக்கண்கள் வழியாக இறைவனின் அருளைப் பற்ற வேண்டும் என்கின்ற விருப்பம் எழும். இதுவே அகக்கண் பார்வை எனப்படும். திருமூலர் இதனை "ஒண்ணா நயனம்" என்பார். அதன்மூலமாகக் காணப்படுவது பரம்பொரளின் சோதியாகும். பரம்பொருளின் சோதியைத் தன்னுள் உணர்வதே தியானத்தின் முடிவாகும். கண்ணப்ப நாயனார் வரலாற்றைக் கூறும் சேக்கிழார் பெருமான். கண்ணப்பர்பெருமான் யோக நிலையில் முடிவை அடைந்தபொழுது "அங்கணர் கருணைகூர்ந்த அருள்திரு நோக்க மெய்தித் - தங்கியபவத்தின் முன்னைச் சார்பு விட்டகல நீங்கிப் - பொங்கிய ஒளியின் நிழல் பொருவுஇல் அன்பு உருவம் ஆனார்" என்றார்.
"ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே" (திருமந்திரம் - 600)
யோக மார்க்கத்தின் முடிவான அங்கமே சமாதி எனப்படும். தியானத்தின் முதிர்ச்சி சமாதியாகும். காய் முற்றினால் சுவைமிக்க கனியாவது போல இந்த நிலைமை இருக்கும். வெள்ளரிக்கொடி தரையில் படருகிறது. கொடியுடன் சேர்ந்திருக்கும் வெள்ளரிக்காய் முற்றிப் பழுக்கும்பொழுது கொடியை விட்டு விடுகிறது. கொடிக்கு ஆதாரமாக உள்ள தரையையே தானும் பற்றிக்கொள்கிறது. புளியங்காய் முற்ற முற்றப் பழமாகித்தான் பற்றிக் கொண்டிருக்கம் ஓட்டினைவிட்டு ஒட்டாமல் நின்றுவிடுகின்றது. சமாதியில் நிலைத்து நிற்கும் யோகியானவன் சிற்றுணர்வுகளிடமிருந்து தன்னை விடுபடுத்திக்கொள்கின்றான், ஆதாரத்தோடு லயித்துவிடுகின்றான். பாண்டவர்கள் எவ்வளவு துன்பங்களை அனுபவித்தபோதும் கண்ணனை ஒருபோதும் மறவாது, அவனிடமே எல்லாவற்றையும் ஒப்படைத்து நிம்மதியாக வாழ்ந்தனர். இதுவே சமாதி நிலையாகும். சிவத்தை நாடி சிவத்துடன் கூடும் நிலையே சமாதி நிலை என்பார் திருமூலர். "பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக் கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே" என்பது திருமூலரின் திருவாக்கு. யோகியர் புறப்பற்றினை முதலில் நீக்குவர். பிறகு சிவபெருமானுடைய உருவத் திருமேனியை நெஞ்சிலே தியானிப்பர், பிறகு நாபி, இருதயம், புருவ மத்தி ஆகிய இடங்களில் பரம்பொருளுக்கு அகப்பூசை செய்வர். இவ்வாறு அகப்பூசை செய்து பேறு பெற்றவர் திருமயிலாப்பூர் வாயிலார் நாயனார் ஆவார். இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். அவர் யோக நிலையில் பெற்ற அனுபவத்தைச் சேக்கிழார் பெருமான்.
"மறவாமை யானமைத்த மனக்கோயி லுள்ளிருத்தி
உறவாதிதனை யுணரும் ஒளிவிளக்குச் சுடரேற்றி
இறவாத ஆனந்தம் எனும் திருமஞ் சனமாட்டி
அறவாணர்க் கண்பென்னும் அமுதமைந்தர்ச் சனைசெய்தார்" என்று கூறுவார்.
மனிதனை ஆசாபாசங்கள் ஆட்டி வைக்கின்றன. உடலின் நிலையற்ற தன்மை தெரிவதில்லை. ஐம்பொறிகள் காட்டும் அனுபவமே பிரதானமாகத் தெரிகிறது. உடலும், உடலைச் சார்ந்த இயக்கங்களும், எண்ணங்களும் மனிதனுக்குத் தான் என்கிற எழுச்சியைக் கொடுத்து தன்னுள் இயங்கும் உண்மைச் சக்தியை மறைத்து விடுகின்றன. ஆனால் இறைவன் உடலில் இயங்கும் எல்லா அணுக்களிலும் படர்ந்துள்ளான். இதைப் பற்றிய அறிவே மேலான அறிவாகும். சமாதி நிலை இந்த அறிவினை அடையச் செய்கின்றது. இந்த அறிவு பெற்ற உயிரானது பொறி வழி செல்லாது நின்று விடுகின்றது. யோகியர் மனத்தை ஒவ்வொரு ஆதாரமாக ஏற்றிக் கீழுள்ள சக்திகளின் தன்மையைக் குறைக்கின்றார்கள். சீவபோதம் குறைந்து சிவபோதம் வெளிப்படுகின்றது. மனமானது புருவ நடுவில் நின்று விடுகின்றது. இதுவே சந்திர மண்டலம் எனப்படும். இத்துடன் மனமானது நின்றுவிடக் கூடாது. இதையும் கடக்க வேண்டும். ஆதியும் அந்தமும் இல்லாத பேரொளியை நாட வேண்டும். அப்போது பேரறிவு உதயமாகிறது. இந்த நிலையை அடைந்தவர்கள் சிவனார் என்று அழைக்கப்படுவர். இவர்களைத் திருமூலர் "ஏழும்பர் சென்றனர்" என்பார்" தோட்டத்தில் ஓர் நல்ல மாமரம் இருக்கின்றது. அதன் உச்சியில் தேமாங்கனிகள் பழுத்துத் தொங்குகின்றன. அந்த மாமரத்தின் உச்சியில் சென்று, பழுதுபடாவண்ணம், தித்திக்கும் மாம்பழத்தைப் பறித்துச் சுவைத்து உண்பதே ஆனந்தமாகும். இதைவிடுத்துச் சந்தையிலே ஈ மொய்த்துக் கிடக்கும் மாம்பழத்தை நாடிச் செல்வது பேதமையாகும். "ஒன்று கண்டீர் உலகுக்கு ஓர் கனி, நன்று கண்டீர் நல் நமச்சிவாயக் கனி" என்பார் திருமூலர். இந்தக் கனியைக் கவரவேண்டும். காயைக் கவரக்கூடாது. "கனியிரப்பக்காய் கவர்ந்தற்று". நமது உடம்பே தோட்டம். மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரை சென்று நிற்பது மாமரமாகும். இந்த மாமரத்தைப் பற்றி மேற்சென்று பரவெளியிலே காட்சி அளிக்கம் சிவம் எனும் மாம்பழத்தைப் பறிக்க வேண்டும். பறித்து உண்பதே யோகத்தின் தலையாய அனுபவமாகும். அப்பொழுது சிவம் வெளிப்படும். இத்தகைய நிலையைத் திருமூலர் "தூங்கலும்" என்பார். "தூங்கிக் கண்டார் நிலை சொல்லுவதும் எவ்வாறே" என்றும் சொல்லுவார்.
"பூட்டொத்து மெய்யிற் பொறிப்பட்ட வாயுவைத்
தேட்டற்ற வந்நிலஞ் சேரும் படிவைத்து
நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்
தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே" (திருமந்திரம் - 624)
மாணிக்கவாசகப் பெருமான் யோகத்தில் சிறந்த சாதனை புரிந்தவர். யோகத்தால் இறைஞானம் பெற்றவர். சிறந்த அமைச்சர் பதவியைத் துறந்து ஒப்பிலாத் தொண்டர் பதவியைப் பெற்றவர். திருப்பெருந்துறையிலே இறைவனே இவரை ஆட்கொள்ளும் நோக்கத்துடன் குருந்த மரத்தடியில் குருவாக அமர்ந்து மெய்ஞ்ஞான போதத்தை விளக்குகின்றார். இவர் பெற்ற சிவஞானம் இறைவனிடத்திலிருந்து குரு வழியாக வந்த மாசிலா ஞானமாகும். ஞானகுருவானவர் மாணிக்கவாசகருக்கு யோகத்தை விளக்குகின்றார். மூன்று குணங்களையும், ஐம்புலன்களையும் அடக்க வேண்டும். மூலாதாரத்திலிருந்து பிராணவாயுவை எழுப்பி, கட்டுப்பாட்டுடன் சுழுமுனை வழியாக மேலும் மேலும் உயர்த்த வேண்டம். இறைவனின் திருநடனச் சிலம்பொலியுடன் போய்ச் சேர வேண்டும். அவ்விடத்தில் ஐந்து எழுத்துக்களும், ஒரே எழுத்தாகின்ற தன்மையைக் கண்டு, இறைவனுடைய அருளைப் பெற்று இறைவனுடைய உருவத்தையும் பெற வேண்டும். எவ்வாறு என்றால் புழுவானது குளவி உரு ஆவது போல, திருப்பெருந்துறை குருவானவர் மாணிக்கவாசகருக்கு இவ்வாறு விளக்கியதாகக் கடவுள் மாமுனிவர் திருவாதவூரர் புராணத்தில் பின்வருமாறு அருளிச் செய்கின்றார்.
"முக்கு ணம்புலம் ஐந்துடன் அடக்கி
மூலவ வாயுவை யெழுப்பிஇரு வழியைச்
சிக்கெ னும்படி யடைத்தொரு வழியைத்
திறந்து தாண்டவச் சிலம்பொலி யுடன்போய்த்
தக்க வஞ்செழுத் தோரெழுத் துருவாந்
தன்மை கண்டரு டரும்பெறு வெளிக்கே
புக்க அழுந்தினர் எமதுறுப் பெறுவார்
புவியில் வேட்டுவன் எடுத்தமென் புழுப்போல்".
திருமந்திர மணிமாலையில் மூன்றாம் தந்திரத்தில் யோகம் முழுமையாக விளக்கப்படுகிறது. யோக நெறியைக் கடைப்பிடிப்பதால் கிடைக்கும் பலன்கள் கூறப்படுகின்றன. உடம்பை வளர்க்கும் உபாயத்தைப் பெற்றவர் உடம்பை வளர்ப்பர். உயிரை வளர்ப்பர். அதன் விளைவாக இறை அனுபவத்தைப் பெறுவர் என்னும் கருத்துடன் திருமூலர்பெருமான் யோக நெறிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அனுபவம் பெற்ற பெரியோர்கள் தரும் உபதேசத்தின் துணைக்கொண்டு, இந்த நெறியை மேற்கொள்ள வேண்டும்.