"குருவே சிவம்" தண்ணீரில் ஒரு கல்லைப் போட்டால் ஒன்றன்பின் ஒன்றாய் ஓயாத அலைகளை அது உண்டாக்குவதைப் பார்க்கலாம் முதலில் சிறிய அலைகள், பின்னர் அலைக்கூட்டம், மேலும் காற்

"குருவே சிவம்"

தண்ணீரில் ஒரு கல்லைப் போட்டால் ஒன்றன்பின் ஒன்றாய் ஓயாத அலைகளை அது உண்டாக்குவதைப் பார்க்கலாம். முதலில் சிறிய அலைகள், பின்னர் அலைக்கூட்டம், மேலும் காற்றினால் உந்தப்பட்டுத் தண்ணீர் பரப்பு முழுவதையும், நிரப்பி விடுகின்றது. இதேபோல இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு உயிரும் எண்ணுகிற எண்ணங்கள் எல்லாம், செய்கின்ற செயல்கள் எல்லாம் வினைகளை உருவாக்கி விடுகின்றன. அந்த வினைக்கடலிலே சிக்கி மலைப்புண்டு, துவண்டு பல பிறப்புகளை எடுத்து உயிரானது பல அனுபவங்களில் மூழ்கி இளைத்து நிற்கின்றது.

பாண்டிய மன்னனிடம் மாணிக்கவாசகர் முதன்மந்திரியாகப் பெரும் புகழுடன் பணியாற்றி வந்தபோதும் தனக்குக் கிடைத்திருந்த பெரும் பேற்றினை இறைவனுடைய ஆணையாகத் தலைமேல் கொண்டு, உலக இன்பங்கள் யாவும் அழியும் தன்மை உடையவை என்று உணர்ந்தவராக, எல்லாவற்றிற்கும் மேலான பேரறிவையும், பேரின்பத்தையும் தனது உள்ளத்தின் ஆழத்திலே நாடியவராக உலகப் பொருள்கள் மீது எல்லாப் பற்றினையும் நீக்கி, இறைவனைக் காண வேண்டும் என்கிற ஒரே கருத்துடன் தனது பொறுப்புகளை நிறைவேற்றி வந்தார். அரசன் கட்டளைப்படி திருப்பெருந்துறைக்குச் சென்று குதிரைகளை வாங்கப் பயணத்தை மேற்கொண்டார். திருப்பெருந்துறையை அடைந்தார். அந்தத் தலத்தை அடைந்தபொழுது அவருடைய மனதிலே ஒரு பெரிய சுமை குறைந்ததுபோன்ற இன்ப உணர்வு ஏற்பட்டது. அருகிலே குருந்த மரம் ஒன்றைக் கண்டார். அதனடியில் சிவாகாமத்தை ஓதும் மாணாக்கர்கள் பலர் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு நடுவே சிவபெருமானைப் போனற் திவ்விய ஒளி வடிவம் பெற்ற மாமுனிவர் ஒருவர் வீற்றிருந்தார். அவருடைய திருமேனி மாசற்ற சோதியாக மலர்ந்த மலர்ச்சுடராய் விளங்கியது. அவர் திருக்கையிலே சிவஞானபோதம் என்ற மெய்ந்நூல் காணப்பட்டது. அவரைக் கண்ட மாத்திரத்திலேயே மாணிக்கவாசகர் அதிதீவிர பக்குவமடைந்த காரணத்திலே இறைவனே குரு வடிவமாகி இந்தத் திருமேனி தாங்கிக்கொண்டு வந்தார் என்று உணர்ந்து கொண்டார். அவருடைய கண்களிலே ஆனந்தக் கண்ணீர் பொங்கிற்று. முனிவருடைய திருவடிகளிலே வீழ்ந்தார். தன்னை ஆட்கொள்ளவேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண்டார். தனது உடல், பொருள், ஆவி மூன்றையும் அவருக்கே அர்ப்பணித்தார். அவற்றையெல்லாம் புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்ட மாமுனிவர் மாணிக்கவாசகருக்கு பதி, பசு, பாசம் என்பன பற்றியும், சரியை, கிரியை யோகம் ஆகியவற்றையும் விளக்கிச் சொன்னார். உள்ளக் கண்ணாகிய தனது திருநோக்கினால் மாமுனிவர் மாணிக்கவாசகருடைய மல இருளைச் சிதைக்கும் வகையில் சுட்சுஷ தீட்சை செய்தார். பின்னர் அவருக்கு திருவைந்தெழுத்தைப் பற்றிய உபதேசம் செய்தார். அந்தக் கணமே மாணிக்கவாசகர் மலம் நீங்கி, பாசம் நீங்கி, பசு கரணங்கள் கெட்டு, முன்னம் அறிவினை இழந்து, தன்னுடைய கரணங்களெல்லாம் சிவமயமாகத் தனது உள்ளத்தைச் சார்ந்திருந்த எல்லா மாயையையும் உதறித் தள்ளி சீவன் முத்தரானார். மாணிக்கவாசகருடைய

கண்களிலே ஆனந்தக் கண்ணீர் பெருகிற்று. உடம்பெல்லாம் மயிர்க்கூச்செறிந்தது. அவருடைய முன்னை வினைகள் ஒழிந்தன. பின்னம் வினையைப் பிடித்துப் பிசையும் தகுதியைப் பெற்றார். இறைவன் குருந்த மரத்தடியில் குரு உருவமாக வந்து எளியனான தன்னை ஏற்றுக்கொண்ட அருமையைப் பற்றி எண்ணி எண்ணி வியந்தார்.

"....வல்வினையேன் றன்னை

மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்

புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி

மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை

மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்

கலந்தவன் பாகிக் கசிந்துள் குருகும்

நலந்தா னிலாத சிறியேற்கு நல்க

நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேனார் அமுதே சிவபுரனே

பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே". (திருவாசகம் சிவபுராணம்)

மாணிக்கவாசகருடைய வரலாற்றில் அவர் உபதேசம் பெறும் பகுதி மிகவும் முக்கியமானது. அவர் பல பிறவிகளில் செய்த புண்ணியங்களின் காரணமாகச் சிவனெறியிலும், சிவயோகத்திலும் சிறந்த முன்னேற்றம் அடைந்திருந்ததை அந்தப் பகுதி சுட்டிக் காண்பிக்கின்றது. உலகத்தில் ஏற்படும் இன்பங்கள், துன்பங்கள் ஆகியவற்றை ஒரே கண்ணோடு பார்க்கும் தகுதியை அவர் பெற்றிருந்தார். விருப்புகள், வெறுப்புகள், போன்றவை அவரை விட்டு அகன்றன. தொன்றுதொட்டு அவருடைய உயிரைத் தழுவி நின்ற ஆணவ மலத்தின் தன்மை குறைந்து, மாயை அகன்ற நிலையில் இறைவனுடைய அருட்சக்தி அவர் மீது பதிந்து அவர் பேரறிவு பெறும் நிலையில் இருந்தார். அவர் அப்பொழுது இருந்த நிலை இருவினை ஒப்பு எனப்படும். அதாவது நல்வினை, தீவினை என்னும் இரண்டு வகை வினைகளும் இரண்டுவிதமான விலங்குகளைப் போலவேதான் என்கிற உணர்வு ஏற்படுகிறது. அப்பொழுது கெட்ட குணங்கள் உயிரைவிட்டு நீங்கி விடுகினற்ன. இவையெல்லாம் உயிரின் முயற்சியினால் ஏற்பட்டாலும் அந்த நிலையும் இறைவனுடைய அருட்சக்தியாலேதான் ஏற்படுகிறது. உள்ளத்தில் ஞான விளக்கம் ஏற்படுவதும் இறைவனுடைய அருளாலேதான். ஆனால், அந்த இறைவனுடைய அருள் நமக்கு வந்து சேருவதும் குருவின் மூலமாகத்தான் என்பதையும் உணர வேண்டும். தகுந்த நேரத்தில் சிவபெருமான் குருவாக வந்து குற்றங்கள் யாவற்றையும் நீக்கி ஞானத்தை வழங்க அந்த உயிரானது பற்றற்ற நிலையை அடைகிறது. இதைச் செய்வதும் சிவபெருமானே.

"இருவி னைநேரொப்பில் இன்னருட் சக்தி

குருவென வந்து குணம்பல நீக்கித்

தருமெனு ஞானத்தால் தன்செய லாற்றல்

திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே". (திருமந்திரம் - 1527)

மலபரிபாகம் ஏற்படும்போது, இறைவனுடைய அருட்சக்தி பக்குவமடைந்த உயிரைப் பற்றும்பொழுது அந்த உயிரானது ஞானத்தை உணரும் தகுதி பெறுகிறது. பல பிறவிகளாக நடந்து வரும் இந்த இயக்கத்திற்குக் காரணமாக நிற்பவன் இறைவன். ஒரு பளிங்குக் கல்லிலே மாசு படிந்திருந்தால் தனது ஒளியை அது முழுவதும் வெளிக்காட்டாது. அதேபோல், மலங்கள் கூடியிருக்கும் உயிருக்குள் இருக்கும் உள்ளளி வெளிப்படாது. ஆயினும் இறைவன் அந்த உயிருக்குயிராய், பாலினில் நெய் போல மறைந்து நின்று, அந்த உயிர் நாளடைவில் பக்குவம் பெறுவதற்காகத் தனது அருளை வழங்கிக் கொண்டே இருப்பான். பின்னர் நமது பக்குவ நிலைக்கேற்ப சிவபெருமான் குருமூர்த்தியாக எழுந்தருளி நமது மலங்களைப் போக்கி அருளுகின்றான். நமது உயிருக்குயிராக நின்ற இறைவன் இப்பொழுது குருவின் உருவத்தில் வந்து நமது ஞானக்கண்ணைத் திறக்கச் செய்கின்றான். இதற்குக் குருவின் உதவி மிகவும் அவசியம். ஒரு நோயாளிக்கு நோய் வரும்பொழுது உணவின் மீது விருப்பம் இல்லை. நோய் அகன்ற பிறகு பசி உண்டாகிறது. ஆனால், உணவு உடனே வந்துவிடாது. உணவை ஒருவர் ஆக்கி அளிக்க வேண்டும். அதன் பின்னரே அவர் அந்த உணவை உண்டு பசியைப் போக்கிக் கொள்ளவேண்டும் அதன் பின்னரே அவர் அந்த உணவை உண்டு பசியைப்போக்கிக் கொள்ளவேண்டும். இவ்வாறேதான் நம்முடைய ஞானப்பசியைத் தீர்க்க இறைவன் குரு உருவமாக நம்மிடையே தோன்றவேண்டி உள்ளது.

நமது வீட்டில் உள்ள இளம் குழந்தைக்குக் கல்வி தொடங்கும் பருவம் வருகின்றது. அதாவது கல்வி கற்கும் பருவம் வருகின்றது. ஆனால், அது உடனே கல்வியைப் பயிலும் ஆற்றலைப் பெறுவதில்லை. ஆசிரியர் ஒருவர் கற்பிக்க அந்தச் சிறு குழந்தை கல்வியைப் பெறுகிறது.

ஒரு அரசனுடைய மகன் ஒருவன் குழந்தைப் பருவத்தில் காட்டில் செல்லும்பொழுது வேடர்கள் கையில் அகப்பட்டுக் கொண்டான். வேடர்களுடன் சேர்ந்து, வாழ்ந்து, வளர்ந்து வந்தவன் அவர்களுடைய பழக்க வழக்கங்களைத் தனதாக்கிக் கொண்டான். அரச குலப் பழக்க வழக்கங்களையும், பண்பாடுகளையும் மறந்தான். இவ்வாறு மயக்கமுற்ற நிலையில் பல ஆண்டுகள் அவன் வேடர்களுடன் வாழ்ந்து வந்தான். அரசனும் பல ஆண்டுகள் தனது மகனைத் தேடி, அவன் வேடர்களுடன் வாழ்வதைப் பற்றிக் கேட்டறிந்து காட்டிற்குப் போய் அரசிளங் குமாரனைச் சந்தித்து "c என் மகன்" என்று அவனுக்கு அறிவுறுத்தி அவனைத் தன்னுடன் அழைத்துச் சென்றான். அரச குடும்பத்தில் சேர்ந்து, அரசனின் மகன் வேடர்களின் தீய பழக்கங்களை மறந்து அரசனின் பண்பாடுகளை மீண்டும் பெற்றான். அரசனின் மகனுக்குத் தனது உண்மையான நிலையைப் பற்றிய அறிவு பெறுவதற்கு அரசனின் உதவி தேவைப்பட்டது.

அரசிளங் குமாரனைப் போலவே உயிரானது ஐம்புலன்களின் ஆதிக்கத்தில் வளரும்பொழுது அவற்றால் மயங்கி அறியாமையில் மூழ்கி நிற்கின்றது. மும்மலங்கள் உயிரினுடைய உண்மைத் தன்மையை மறைக்கின்றன. சரியான நேரத்தில் உண்மையை அறிவிக்க இறைவனே குருவடிவாய் எழுந்தருளுகின்றான். அக்கணமே உயிரானது ஐம்புல வேடர்களைவிட்டு நீங்கி இறைவனோடு வேறற்ற தன்மையில் நிலைபெற்று, இறைவனின் திருவடிகளை அடைகின்றது. "குருவன்றியே இறைவனைக்கூடவொண்ணாது" என்கிற கருத்தை சிவஞானபோதம் எட்டாம் சூத்திரம் அழகாக விளக்குகின்றது.

"ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்

தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு

அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே".

இறைவனே குருவாக எழுந்தருளி, சித்தத்தைத் தெளிவித்து, சிவமாக்கி ஆட்கொண்ட நிலையினை மாணிக்கவாசகர் பின்வருமாறு விவரிக்கின்றார் -

"இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய்

அந்தரமே திரிந்துபோய் அருநரகில் வீழ்வேற்கு

சிந்தைதனைத் தெளிவித்து, சிவமாக்கி யெனையாண்ட

அந்தமிலா ஆனந்த மணிகொள்தில்லை கண்டேனே". (திருவாசகம்)

சிவகுருவாக எழுந்தருளி வருபவர் சிவபிரானே ஆவர். உயிர்களது தளையாகிய பாசத்தைக் குருவானவர் தனது உபதேசத்தால் மாற்றி அருளுவர். மலங்களைப் போக்கி உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவர். உயிரை ஐம்புலன்களாகிய வேடர்களிடமிருந்து காப்பாற்றுவர். திருவடி தீட்சையினைச் செய்தருள்வர். அதனால் உயிரானது திருவடிப் பேரின்பம் பெறும். குருவினால் நமக்கு ஏற்படும் இந்தப் பேற்றினை ஞானக்கண்ணால் உணர வேண்டும். அப்படியின்றி ஊனக்கண்ணால் மட்டும் பார்க்கும்பொழுது அந்தக் குருவும் நம் போல ஒருவராகத் தோன்றுவர். மூடர்கள் குருவை நம்மில் ஒருவராகவே எண்ணுவர். ஆனால், மெய்யுணர்வு பெற்ற புண்ணியர் குருவைச்சிவனே என்று அறிந்து அவரது திருவடிகளை வணங்கி நிற்பர்.

"சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய்

தத்தனை நல்கருள் காணா அதிமூடர்

பொய்த்தகு கண்ணால் நமர்என்பர்;புண்ணியர்

அத்தன் இவனென் றடிபணி வாரே". (திருமந்திரம் - 1578)

உயிர்களுக்குக் குருவானவன் செய்வதென்ன? அவன் உயிர்களிடையே மெய்ப்பொருளின் மீது அன்பை உண்டாக்குகின்றான். எல்லோராலும் போற்றி வணங்கப்படும் இறைவனுடைய திருவடியைப் பற்றிக் கொள்ளும் சாதனங்களைக் கற்பிக்கின்றான். அவனுடைய மொழியே வாய்மை, தூய்மை நிறைந்ததும்கூட. குற்றம் அற்றதாக இருக்கும். குருவின் சொல்லைக் கேட்டாலே சந்தேகங்கள் தீர்ந்துவிடும். சத்து, அசத்து, சதசத்து ஆகிய மூன்று பொருள்களின் இயல்பையும் நன்கு உணர்ந்தவன். சீடர்களுக்குச் சந்தேகமின்றி உணர்த்தும் ஆற்றலைப் பெற்றவன். அத்தகைய செயலைச் செய்யும் ஒரு சிவத்தன்மை பெற்றிருப்பதால் அவரையே சிவமென்றும் அழைப்பது பொருந்தும்.

"பத்தி பணித்து பரவும் அடிநல்கிச்

சுத்த உரையால் துரிசறச் சோதித்துச்

சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால்

சித்தம் இறையே சிவகுரு வாமே". (திருமந்திரம் - 1573)

மேலும், ஒரு சீடனுக்கு ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றின் உண்மையான இயல்புகளைச் சுட்டிக் காட்டுவார். அவற்றிலிருந்து விடுவித்துக்கொள்ளும் வழிகளையும் சொல்லிக் கொடுப்பார். உடலானது உயிரன்று

என்னும் உண்மையை விளக்கி, உடல் மீது நமக்குள்ள ஆசையை மாற்றுவார். நமது அறியாமையைக் குறைத்து, பொய்ம்மையைக் காண்பித்து, நம்முடைய உள்ளத்திலே உண்மைக்கு வித்திடுவார். இத்தனையும் நமக்காகச் செய்யும் ஞானாசிரியன் உண்மையில் மக்களோடு மக்களாக வாழ்ந்துகொண்டிருப்பான். ஆனால், அவனை நமக்கு அருள்புரிந்து நிற்கும் சிவமாகவே நாம் உள்ளத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

"பாசத்தைக் காட்டியே கட்டுப் பறித்திட்டு

நேசத்த காயம் விடுவித்து நேர்நேரே

கூசற்ற முத்தியிற் கட்டலால் நாட்டகத்

தாசற்ற சற்குரு அப்பா மாமே" (திருமந்திரம் - 1574)

சிவகுரு சீடனுக்குச் சிவஞானத்தைப் போதிப்பது மட்டுமன்று. குருவின் அருளால் சீடனுக்குப்பிற பயன்கள் பலவும் கிடைக்கின்றன. இறை அன்பு அவனுடைய உள்ளத்திலே பொங்கி எழுகின்றது. பலவகை மந்திரங்களை ஒதுவதற்குரிய வல்லமையைச் சாதகன் பெறுகின்றான். அதோடுகூட மந்திரங்களின் சக்தியால் பல்வேறு சித்திகளும் கைகூடுகின்றன. சாதகனுக்கு மேற்படி சித்திகள் முக்கியமன்று. சித்திகள் அவனுடைய ஆன்மீகப் பலத்தைச் சுட்டிக் காட்டும். அதே நேரத்தில் சாதகன் இறைவனுடைய திருவடியைப்பெறுவதே குறிக்கோளாகக் கொண்டிருப்பதால் அவன் சித்திகளில் நேரம் செலுத்தாது மனத்தை அடக்கி, ஐம்புலன்களை வென்று மேலும் செல்ல வேண்டும். குரு உபதேசத்தால் சீடன் யோகத்தில் நின்று உறுதிப்பாட்டுடன் மாயையை அகற்ற இயலும். இவ்வழியாக அருட்சக்தியாக நின்று அருளுகின்ற சிவஞானமும் சீடனுக்குக் கிடைக்கும். அந்த ஞானமே சிவம் என்று ஆன்மா உணரும் பொழுது கிடைக்கும் முத்தியும் குருவாக நின்ற இறைவனுடைய அருள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

"சித்திகள் எட்டொடும் திண்சிவ மாக்கிய

சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச்

சத்தியும் மந்திர சாதக போதமும்

பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே". (திருமந்திரம் - 1575 )

குருவாய் நின்று அருள்புரியும் சிவபெருமான் சீடனிடம் மிகுந்த அன்பு கொள்கின்றன. உலகிலுள்ள எல்லாவற்றையும் பதி, பசு, பாசம் ஆகிய மூன்று பொருள்களில் அடக்கி அவற்றின் உண்மையை உணர வைக்கின்றான். அந்த உணர்வு உள்ளத்திலே பாயும்பொழுது பாசத்தை நீக்க உயிர் முற்படுகின்றது. இதற்குக் காரணகர்த்தாவும் இறைவனேயாகும்.

இதனால் மெய்ப்பொருள் இன்னது என்று விளங்குகின்றது. இதுவரை மெய்ப்பொருளை உணரவிடாது உயிரை மாயையில் அடக்கி வைத்திருக்கும் பொய்ப்பொருள்களின் தன்மை நீங்குகின்றது. மெய்ப்பொருள் நிலைபெற்று நிற்கின்றது. பேரறிவான சிவம் உயிருக்குயிராய் இருந்து, அருளினைப் புரிந்து, பலவதிமான மயக்கங்களையும் நீக்கும் ஆற்றலும் குருவினால் சீடனுக்கு உணர்த்தப்படுகின்றது. குரு அருளின்றி இவற்றையெல்லாம் ஒருவராலும் அறிய இயலாது. "நானார் என் உள்ளம் ஆர் ஞானங்கள் ஆர் என்னை யார் அறிவார், வானோர்பிரான் என்னை ஆண்டிலனேல்" என்பார் மாணிக்கவாசகர்.

"உண்மையிற் பொய்ம்மை ஒழித்தலும் உண்மைப்பார்

திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன்

வண்மையும் எட்டெட்டுச் சித்தி மயக்கமும்

அண்ணல் அருளன்றி யாரறி வாரே". (திருமந்திரம் - 1579)

குருவின் ஆசியுடன் சீடன் மேலும் பெறுவது ஞானம் எனப்படும் பேறும் முக்தியாகிய பயனும், மெய்ப்பொருளை என்றும் உணர்வில் கொண்ட அருளின் நிலையும், மாயையின் தன்மை நீக்கமும், வேதத்தில் கண்டுள்ள உண்மைப் பொருளின் விளக்கமும், இறைவன் மீது அன்பும், அந்த அன்பினால் இறைவனுக்குச் செய்ய வேண்டிய சரியை, கிரியை நியதிகளும், ஞான உணர்வும், அதனால் தோன்றும் வைராக்கியமாகிய இருவினை ஒப்பும் ஆகும்.

குருவினுடைய திருக்கரங்கள் சீடனின் தலையில் பட்டாலே போதும். சீடன் சிவமயமான உணர்வைப் பெறுகின்றான். தனது உண்மையான நிலையை அறிகின்றான். ஞானம் பெறுகின்றான். பாசங்களின் வேகத்தைக்கெடுத்து ஆளுகின்றான். உடலும், உடலால் கிடைக்கும் அனுபவங்களும் தாண்டப்பட்டு சீடன் சிவனேயத் தன்மை பெறுகின்றான்.

குருவின் அருளால் சீடனின் வினைகள் நீங்குகின்றன. ஏற்கனவே செய்யப்பட்ட வினைகளால் வரும் தீமையும் சீடனை அணுகுவதில்லை ஏன் எமனும் அவன் தூதரும் சீடனை அணுகாமல் இருக்கவும் குருவானவன் அருளவல்லவன். ஆதலின் சீடனுடைய பிறவித் துயரையும் போக்கவல்லவன்.

"தவிரவைத்தான் வினை தன்னடி யார்கோள்

தவிரவைத்தான் சிரத்தோடு தன் பாதந்

தவிரவைத்தான் நமன் தூ துவர் கூட்டந்

தவிரவைத்தான் பிறவித் துயர் தானே". (திருமந்திரம் - 2050)

குருவின் அருள் இறைவன் அருளுக்குச் சமானமானது. ஆற்றலைச் கொண்டது. குருவின் திருக்கரங்கள் பட்ட சீடன் மும்மலங்களும் நீங்கிச் சிவகதி பெறுவான். அது எப்படியென்றால், பழைய காலத்தில் யோகிகள் இரும்பையும் மற்ற உலோகங்களையும் பொன்னாக்கும் இரசவாத முறையை அறிந்திருந்தனர். இரும்பில் மருந்து பட்ட இடமெல்லாம் பொன்னாகுமாம் அதேபோல குருவின் திருவடி பட்ட சீடன் மலம் நீங்கி உயர்ந்த தன்மையைப் பெறுவான். இரும்பு பொன்னான பிறகு மீண்டும் இரும்பாகாது. அதேபோல் பக்குவம் வந்தபின் குரு அருள் பெற்ற சீடன் மீண்டும் பிறவிக் கடலை வந்து சேரமாட்டான்.

"கறுத்த இரும்பே கனம தானான்

மறித்திரும் பாகா வகையது போலக்

குறித்த அப்போதே குருவருள் பெற்றான்

மறித்துப் பிறவியில் வந்தணு கானே" (திருமந்திரம் - 2051)

"பரிசன வேதி பரிசித்த தெல்லாம்

வரிசை தரும்பொன் வகையாகு மாபோற்

குருபரி சித்த குவலயம் எல்லாந்

திரிமலந் தீர்ந்து சிவகதி யாமே". (திருமந்திரம் - 2054)

மெய்ப்பொருளை உணர விரும்பும் சாதகன் சிறந்த குருவின் அருளாலும், தன்னுடைய பயிற்சியாலும் இறை அனுபவத்தைப் பெற்று அதிலே திளைத்து நிற்கின்றான். ஆனால், குரு என்று தம்மைப் பற்றிக் கூறிக் கொள்ளும் பலரும் சற்குரு ஆகமாட்டார்கள். சாதகனின் நோக்கம் தனது உள்ளத்திலே படிந்துகிடக்கும் அறியாமை என்னும் இருளைப் போக்குவதாகும். குரு என்றாலே இருளைப் போக்குபவர் என்று பொருள். சமுதாயத்தில் பல பேர்கள் தங்களைக்குரு என்று கூறிக்கொண்டு இருளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டிருப்பதையும் காண்கின்றோம். அவர்களை நாடினால் நம்முடைய அறியாமை அதிகரிக்கும். "குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்" என்பார் திருமூலர். அஞ்ஞான இருளை நீக்கும் முறைகளைத் தெரிந்துகொள்ளாத ஒருவரைக் குருவாக ஏற்றுக்கொண்டால் எப்படியிருக்கும்? ஒரு குருடனை மற்றொரு குருடன் அழைத்துச் செல்வது போலல்லவா இருக்கும். அந்த இரண்டு குருடர்களும் தங்களுடைய அறியாமையைப் போக்கிக் கொள்ளாமல் மாயக்குழியில் விழுந்தே மடிவர். ஆகவே, பக்குவமடைந்த சாதகன் உண்மையான குருவினையே நாடுவான்.

"குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்;,

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்;

குருடுங் குருடும் குருட்டாட்டம் ஆடிக்

குருடுங் குருடும் குழிவிழு மாறே". (திருமந்திரம் - 1680)

போலிக்குருவை எவ்வாறு அறிந்துகொள்வது? திருமூலர் தெளிவாகப்பதில் அளிக்கின்றார். அத்தகையவர்கள் இறை உணர்வு இல்லாதவர்களாக இருப்பார்கள். மெய்ப்பொருளை ஆராய்ந்து இருக்கமாட்டார்கள். வேதங்கள், உபநிடதங்கள், ஆகமங்கள் ஆகியவற்றின் உண்மைகளை உணர்ந்து, சிக்கலின்றிப் பிறருக்கு உணர்த்தும் ஆற்றலைப் பெற்றிருக்க மாட்டார்கள். அடக்கமின்றி இருப்பார்கள். பிறரை நிந்திப்பார்கள். தான் என்கின்ற நிலையில் மூழ்கிக் கிடப்பார்கள். பேரினபத்தை அடைவதற்கான உபாயங்களை அறியாதவர்களாக இருப்பார்கள். அறிவில்லாமலும், அறிவில்லாத செயல்களில் ஈடுபட்வர்களாகவும் இருப்பார்கள். காமம் முதலிய உணர்ச்சிகளிலிருந்து விடுதலை பெறாத நிலையில் கீழ்த்தன்மை பொருந்திக் கற்பிப்பார்கள். உலக போகங்களை உணர்த்தும் இத்தகையவர்களுக்குச் சிவத்தியானம் விளையாது. மந்திரங்களிலும், தந்திரங்களிலும் யோகத்திலும் ஞானத்திலும் ஆற்றல் படைத்தவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்கள் அவற்றை உபதேசம் செய்தலை வயிற்றுப்பாட்டுக்காக ஒரு தொழிலாக வைத்துக் கொண்டிருப்பர். இத்தகையர்வகள் அசற்குரு ஆவர். இவர்களை நாம் நீக்க வேண்டும்.

"உணர்வொன் றிலாமூடன் உண்மையோ ராதோன்

கணுவின்றி வேதா கமநெறி காணான்

பணிவொன் றிலாதோன் பரநிந்தை செய்வோன்

அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே". (திருமந்திரம் - 2044)

இறைவன் அருளால்தான் உண்மையான குருவைப் பெற இயலும். நம்முடைய மனப்பக்குவமே இறைவனுடைய அருளுக்கு எடுத்துக்காட்டாகும். நமது மனமானது மாயையாகிய கண்ணாடி போன்றது. பக்குவம் பெறாதபோது அந்தக் கண்ணாடியானது ஆணவ மலத்தால் பொருள்களைப் பெரிதாகக் காட்டி நம்மை ஏமாற்றும் வஞ்சனை கண்ணாடியாக உள்ளது. கல்வி, கேள்வி இவற்றால் நமது அறிவை வளர்த்துக்கொண்டு இந்த வஞ்சனையைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டும். பக்குவ உள்ளங்கள் இதை உணர்ந்து கொள்ளும். பக்குவமில்லாத உள்ளங்கள் பிறர் விளக்கிச் சொன்னாலும் இதை ஏற்றுக்கொள்ளா. அந்த நிலையில் உண்மைக் குரு இவர்களுடைய வாழ்வில் திருவடி எடுத்து வைக்க மாட்டார். இவர்கள் இன்னும் வினைப்பயனை அனுபவிக்க வேண்டி உள்ளது.

"மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி;

நினைப்பின் அதனில் நிழலையும் காணார்

வினைப்பயன் போக விளக்கியும் கொள்ளார்;

புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே" (திருமந்திரம் - 1681)

பக்குவமில்லாத உள்ளம் எப்படியிருக்கும் என்றும் திருமூலர் விளக்குகின்றார். பக்குவமற்றவர்களுடைய வாய் ஒன்று சொல்லும், மனம் ஒன்று சிந்திக்கும். உடல் ஒன்று செய்யும். இவை மூன்றும் ஒரே வழிப்பட நில்லாது வெவ்வேறு வழிகளில் செயல்படும். இதைத் திருமூலர் "பஞ்சத் துரோகம்" என்கறரிர். மேலும் இவர்கள் மலங்களின் தன்மையை உணர்ந்து அவற்றை மாற்றும் வழிகளில் ஈடுபட மாட்டார்கள். காமம் போன்ற மயக்கங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.

இதற்கு மாறாகப் பக்குவ நிலையில் உள்ளவர் நல்ல குருவைத் தேடி அவரிடமிருந்து அறிவினைப் பெறத் துடிப்பர். சத்துவ குணம் மிக்கவராய் இருப்பர். பரம்பொரளை அடையும் எண்ணம் மனதிலே நிறைந்து நிற்பர். அறநெறியில் தளரமாட்டார். அவர்களுக்கு ஞானத்தின்கண் விருப்பம் நாளுக்கு நாள் வளரும். அவர்களுடைய உள்ளமாகி நிலத்தில் நல்ல விதைகளை விதைக்கின்றார். ஐம்புல ஆசைகள் அந்த நிலத்தில் வாழும் கிருமிகளைப் போன்றவை. அவைகளை விட்டால் விதைகளை வளரவிடாது அழித்துவிடும். ஆனால் நல்ல சாதகர் அந்தக் கிருமிகளை யோக முயற்சியாலும், மெய்யுணர்வாகிய வெப்பத்தாலும் அழித்துவிடுவர். எனவே, சிவஞானம் என்னும் விதை அவர்களுடைய உள்ளத்திலே ஆழ்ந்து, ஊன்றி வளர்ந்து பேரின்பத்தைக் கொடுக்கும்.

"பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை

விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச்

சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி

இசைக்கின்ற அன்பருக் கீயலு மாமே". (திருமந்திரம் - 1692)

கடைசியில் திருமூலர் நமக்கெல்லாம் உபதேசிப்பது, "சிறந்த குருவினைக் கொள்ளுங்கள், அவருக்கு உடல், பொருள், ஆவியை அர்ப்பணியுங்கள், அவருடன் ஒன்றி நின்று அவர் கூறும் உபதேச மொழியினை ஆழ்ந்து சிந்தித்து, தெளிந்து அதனால் சிவபதம் என்னும் பயனைப் பெறுங்கள்" என்பதாகும்.

"கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக;

உள்ள பொருள்உடல், ஆவி யுடன் ஈக;

எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று

தெள்ளி அறியச் சிவபதந் தானே". (திருமந்திரம் - 1693)