இறைவன் நமக்கு உடலை அளித்து, உடலுடன் பொறிகளையும் பொருத்தி, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அந்தக் கரணங்களையும் சேர்த்து, உயிரையும் இணைத்து வாழ்வெனும் பாதையில் நடக்க விடுகின்றான். நாம் செய்யும் நல்வினை, தீவினைகளுக்க ஏற்ப மேலும் இன்ப துன்பங்களை அனுபவிக்கவும் நமக்கு வழிவகை செய்கின்றான். இதனுடைய நோக்கம் என்ன? உயிரானது பல பிறவிகளில் பல்வேறு அனுபவங்களைப் பெற்று, சிறிது சிறிதாக, மெல்ல மெல்ல முதிர்வடைந்து ஆன்மிகப் பேறு அடைந்து இறைவனுடைய திருவடிகளைச் சேர்வதே இந்த இயக்கத்தின் நோக்கமாக இருக்க முடியும். அவரவர்களுடைய வினைப்பயன் படி, ஆன்மிக முதிர்வினை மக்கள் அடைவார்கள். இதில் சந்தேகம் இல்லை. இதை உணர்ந்து கொள்ளாத மனிதர்கள் உடலும், உடலைச் சார்ந்த கருவிகளையும் புறத்தில் கிடைக்கும் இன்பத்தை அடைவதற்கு மட்டுமே பயன்படுத்த முற்படுவார்கள். ஐங்கருவிகளும், ஐம்புலன்களும் அந்தக்கரணங்களும் தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்குகின்றன. இதற்காகவா இறைவன் நமக்கு இவற்றையெல்லாம் அளித்தான்? இல்லை என்கிறார் நாவுக்கரசர் பெருமான். இறைவனை என்றும் வாழ்த்தவே நாம் வாய் என்னும் கருவியைப் பெற்றிருக்கிறோம். நமது நெஞ்சு அவனைப் பற்றி நினைக்கவே அளிக்கப்பட்டிருக்கின்றது. நமது தலை நன்றியுடன் அவனை வணங்குவதற்காகவே உடலில் பொருத்தப்பட்டுள்ளது.
"வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தந்த தலைவன்"
என்கிறார் அப்பர்பெருமான்
இறைவன் காண்பதற்கு அரியவன் என்று மக்கள் கருதுகின்றனர். ஆனால், அவன் நினைத்தோர் மனத்தில் தன்னைத் தொழுது அன்பு செய்வோர் நெஞ்சத்தில் என்றும் நுகரவல்ல இன்பப் பொருளாக இருக்கின்றான். எல்லோர்க்கும் எளிதாகக் கிடைக்கும் பொருளாக, தேனைப்போல, பாலைப் போல இனிக்கின்றான். அத்தைகய அனுபவப் பொருளைப் பற்றிப் பேசுவதற்காகத் தானே இந்த வாய் இருக்கிறது!
நமக்கென கிடைத்திருக்கும் வாழ்நாட்களும் இறைவனைப் பற்றிப் பேசிப் பயனடைவதற்காகத் தானே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது!அவ்வாறு பேசாத நாளெல்லாம் வாழாத நாளல்லவா? பிறவாத நாளல்லவா? இந்தச் சிந்தனைகளை அப்பர்பெருமான் சிதம்பரத்திற்குச் சென்று நடராசப் பெருமானைத் தரிசிக்கும்போது தனது உள்ளத்தில் பெறுகின்றார். சிறந்த அருளாளர் அவர், ஆகவேதான், அத்தகைய உயர்ந்த எண்ணங்கள் அவருடைய மனத்திலே தோன்றுகின்றன.
"அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழ் ஒளியைத் தேவர்கள்தம் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே".
இறைவனுடைய திருவடிப் பேற்றினைப் பெறுவதே நமது தலையாய நோக்கமாக இருக்க வேண்டும். இந்த நோக்கத்தை அடைவதற்காக நமது மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்து வரும்போது நமது உடலுக்குள் உயிருக்குயிராய் நின்று அறிவிக்கும் இறைவன் நமது உணர்வு நிலைகளுக்கு ஏற்ப அவ்வப்போது நமக்கு நன்னெறியை உணர்த்தி வருவான். அந்த நன்நெறியைக் கடைப்பிடிப்பதன் மூலம் மேலும் நம்முடைய குறிக்கோள், இறையுணர்வில் நாட்டம் போன்றவை வலுவடைகின்றன. இத்கைய நிலையை அடைய நீண்ட காலம் ஆகலாம். பல ஊழிகள் மாறலாம். பல பிறப்புகள் எடுக்க நேரிடலாம். ஆயினும் வாய்ப்புக் கிடைக்கும் இறைவன் அச்சிந்தனையில் வெளிப்பட்டு அருளுவான். எனவே, "நான் நின்று தொழுவேன், எனது அழகிய பெருமானைக் கிடந்து தொழுவேன், எழில்மிக்க பரஞ்சோதியாகிய பெருமானைப் பொருத்தமான மலர்கொண்டு என்னைப் போல நீங்களும் தொழுது வழிபடுங்கள். அவ்வாறு செய்யும்போது இயல்பாகவே, இறைவன் உங்களுடைய சிந்தயில் வெளிப்பட்டு அருள்புரிவான்" என்கிறார் திருமூலர்.
"நின்று தொழுவள் கிடந்தெம் பிரான்தன்னை
என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியைத்
துன்று மலர்தூவித் தொழுமின் தொழுந்தோறுஞ்
சென்று வெளிப்படுந் தேவர் பிரானே". (திருமந்திரம் - 1500)
இறைவனை எவ்வாறாயினும் தொழலாமே!உலகத்தில் நமக்கு ஏற்படும் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளப் பலரை அண்டி, பலவிதமாகப் புகழ்ந்தும், போற்றியும், பணிந்தும், அவர்களிடமிருந்து உலகியலுக்கான பயன்களைப் பெற முயல்கின்றோம். அப்படி நமக்கு உதவுபவர்கள் நம்மிடமிருந்து எதையாவது பிரதிபலனாக எதிர்பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெற்றுக்கொள்கின்றோம். ஆனால், இறைவனுடைய வழிபாடு அத்தகையதன்று. அவன் நமக்கெல்லாம் தந்தையானவன். அப்பா என்று அழைத்தாலே போதும், நமக்கு அப்பனாகி விடுவான். "தன்னை அப்பா எனில் அப்பனுமாய் உளன்" என்பார் திருமூலர். அவன் தெவிட்டாத அமுதன் போன்றவன். ஒப்பற்றவன். நாம் வேண்டுவது யாது என்று நமக்கு அறிவித்து, நாம் வேண்டுவதையும் நமக்கு அருளிச் செய்வான். ஊழிகளுக்கும், காலங்களுக்கும்
அப்பாற்பட்டவன். ஆனால், நினைப்பதற்கு எளியவன். அவனை நாம் எவ்வழியிலும் தொழலாம். அவ்வாறு தொழும்போது அவனுடைய அருளையும் பெறலாம்.
"அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே". (திருமந்திரம் - 36)
இறைவன், மனிதர்கள் தன்னை அனுபவித்து இன்புறும் பொருட்டு மூவகைத் திருமேனிகளைக் கொள்கின்றான். அவை உருவம், அருஉருவம், அருவம் எனப்படும். நாம் கண்டு மகிழக்கூடியது இனிது விளங்கும் உருவத் திருமேனியேயாகும். உருவத் திருமேனியை வாழ்த்தலும், வணங்களும், தொழலும் புறவழிபாடுகளாகும். உருவத் திருமேனியை வழிபடுவதன் மூலமாகவே இறைவனையே வழிபடுகின்றோம். வழிபாட்டு நேரத்தில் எங்கும், எதிலும் நிறைந்துள்ள பரம்பொருளை உருவத் திருமேனியில், நம்முடைய இன்பத்திற்காக, சிறிது நேரமாகவது தங்கியிருக்க வேண்டிக் கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறு வேண்டிக் கொண்டு உருவத் திருமேனியில் வீற்றிருக்கும் இறைவனைப் பல வழிகளிலே போற்றி வணங்குகின்றோம். அத்தகைய வழிபாட்டினைச் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனப் பெரியவர்கள் முறைப்படுத்தியுள்ளார்கள். இந்த நெறிகளுக்குள் நாம் ஆழமாகப் போக வேண்டியதில்லை. முதலிலே, இறைவனுடைய திருமேனி எந்தத் திருக்கோவிலில் வீற்றிருந்தாலும் அந்தக் கோவிலுக்குச் சென்று, இறைவனைப் பாடிப் பணிந்து வணங்க வேண்டும். அவ்வாறு வணங்குபவர்களுடைய உள்ளத்தையே இறைவன் கோவிலாகக் கொள்வான்.
"நாடு நகரமும் நற்றிருக் கோயிலுந்
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே". (திருமந்திரம் - 1445)
திருக்கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கும்போது முதலாவதாக நமது சித்தமெல்லாம் அவன்பால் நிற்க வேண்டும். உள்ளத்திலே அன்பு நிரம்பி இருக்க வேண்டும். நமது பேச்சிலே இறைவனுடைய பெருமை வெளிப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு வழிபடுபவர்களே புண்ணியம் செய்தவர்கள். அவர்களுடைய பூசைக்கு நிதியோ, பொருளோ, விளம்பரமோ தேவையில்லை. அவர்களுக்குத் தேவைப்படுவது பூவும், நீரும்தான். பச்சிலை கிடைத்தாலே போதும். "யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை" என்பார் திருமூலர். இவ்வாறு அன்பும், ஆர்வமும் கொண்ட மனத்துடன் இறைவனை வணங்குவார்களுக்கு அவனுடைய அருள் என்றும் தங்கி நிற்கும். இதை அறியாத மக்கள் தங்களுடைய
காலத்தை வீணே கழித்து, தம்மை உய்வித்துக் கொள்ளக் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடுகின்றனரே என்று திருமூலர் அங்கலாய்க்கின்றார்.
"புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை யீசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றாரே" (திருமந்திரம் - 1828)
இறைவனுடன் ஒன்றிப் போனவர் சுந்தரமூர்த்தி நாயனார். திருமூலர் பெருமான் எடுத்துக் காட்டிய அத்தனை அடையாளங்களும் அவரிடம் இருந்தன. சிதம்பரத்தில் தில்லைப் பெருமானின் திருக்காட்சியில் அவர் தன்னை முழுமையும் பறிகொடுத்து நின்ற ஓர் ஒப்பற்ற நிலையைச் சேக்கிழார் பெருமான் நெஞ்சுருகும் வகையில் விளங்குகின்றார். சுந்தரருடைய கண்கள் இறைவனைப் பற்றி இருந்தன. மற்ற பொறிகள் வேலை செய்யவில்லை. அவருடைய சிந்தனை இறைவனைச் சார்ந்து இருந்தது. மற்றக் கரணங்கள் சக்தி இழந்து இருந்தன. சத்துவ குணம் மேலோங்கி நின்றது. மற்ற தாமத, இராசதக் குணங்கள் ஒடுக்கி நின்றன. இறைவனை அவர் புறக்கண்கள் கொண்டு மட்டும் பார்க்கவில்லை. அகக்கண்களாலேயே பார்த்தார். அவற்றின் வாயிலாக தில்லைப் பெருமான் அவருடைய உள்ளத்தில் புகுந்தான். அவ்வாறு அவன் புகுந்ததன் காரணமாகச் சுந்தரமூர்த்தி நாயனார் சொல்லொணா மகிழ்ச்சியில் திளைத்து நின்றார்.
"ஐந்துபே ரறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே ஆக
இந்துவாழ் சடையான் ஆடும்ஆனந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்". (பெரிய புராணம்)
இத்தகைய வழிபாடு உயர்ந்த யோகமாகும். ஏனென்றால், இது ஒரு தன்னலமற்ற நிலை. தன்னிலை மறந்த ஓர் சாதனை. அன்போடு இறைவனுடன் கலந்திருக்கும் ஓர் உணர்வு. உடலும், உள்ளமும் தூய்மை பெற்று மெய்ப்பொருள் அவற்றுள் பரவி இருக்கக்கூடிய ஓரு அனுபவம். அதுவே சமாதி நிலை. அந்த நிலையையே சன்மார்க்கம் என்று திருமூலர் அழைக்கின்றார்.
"பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிக்
கசியாத நெஞ்சங் கசியக் கசிவித்
தொசியாத வுண்மைச் சொருபோ தயத்துற்
றசைவான தில்லாமை யானசன் மார்க்கமே". (திருமந்திரம் - 1486)
திருக்கோவிலுக்குச் சென்று திருவலகிடுதல், மெழுக்கிடுதல், விளக்கிடுதல், நந்தவனம் வைத்துப் பராமரித்தல், மாலை தொடுத்துக் கொடுத்தல், திருப்பாடல்களைப் பண்ணோடும் பாடி போற்றுதல், திருமுறை நாள்தோறும் ஓதுதல், அடியார்களை அன்போடு வணங்கி, உண்ண உணவும், இருக்க இடமும் தந்து வழிபடுதல், இறைவனருள் பெற்ற ஆசிரியர்களுக்குத்தன்னாலான எல்லா உதவியையும் செய்தல் போன்றவை வழிபாட்டு முறைகளாகும். இவற்றிற்கு முன்னோடியாகப் புறத்தூய்மையையும், அகத்தூய்மையையும் கொள்ள வேண்டும். இந்திரிய சுகங்களில் நாட்டத்தைக் குறைத்துத் தனது மனம், வாக்கு, காயம் போன்றவைகள் வழியாகத் தன்னை இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய முயல வேண்டும். இறைவழிபாட்டினை உள்ளன்புடன் வாழ்வை நடத்திச் செல்ல வேண்டும். இறைவனை முறைப்படி அர்ச்சிக்க வேண்டும். இறைவனுடைய நாமத்தைக் குற்றமறச்செபிக்க வேண்டும். வாய்மையுடன் வாழ்வை நடத்திச் செல்ல வேண்டும். இறைவனுக்குச் செய்யப்படும் நைவேத்தியம் அன்பு மிகுந்து இருக்க வேண்டும். வண்டானது எப்போதும் தேனைச் சேகரிப்பதை ஒரே நோக்கமாகக் கொண்டு பல மலர்களை நாடி அலைகின்றது. வெள்ளை அன்னமானது குளத்தில் பல இடங்களுக்குச் சென்று வந்தாலும் தாமரையை விட்டு அகலுவது இல்லை. அதே போல உள்ளன்புடன் இறைவனை வழிபாடு செய்யும் ஒரே மனத்துடன் நறுமலர்களைக் கொய்து அவனுக்கு அளிக்க முற்பட வேண்டும். இது எத்தகைய சிறந்த அறநெறியாகும். ஆனால், மக்கள் இதைச் சாராது பிற வழியில் சென்று கெடுகின்றாரே!
"அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும்
மறுகா நரையன்னந் தாமரை நீலங்
குறுகா நறுமலர் கொய்வன கண்டுஞ்
சிறுகால் அறநெறி சேரகி லாரே". (திருமந்திரம் - 1497)
பொய்ம்மையே பேசி, வஞ்சகத்தில் நின்று, மனத்திலே கருப்பு வைத்துப், பிறரை ஏமாற்றுபவர் தூய்மையான இறை வழிபாட்டிற்குத் தகுதி பெறமாட்டார்கள். "வஞ்சம் இன்றி வணங்குமின் வைகலும்;வெஞ்சொல் இன்றி விலகுமின் வீடுற"என்று திருநாவுக்கரசர் கேட்டுக்கொள்கின்றார். வழிபாடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. வஞ்சகத்துடன் இறைவனை வணங்க முற்படுவது பயனற்றதாகும். வினைகளைக் கூட்டிக் கொள்ளத்தான் உதவும். முழு நம்பிக்கை இல்லாவிடில் பூசை செய்யத் தேவையில்லை. இந்த வஞ்சக நாடகத்தைப் பற்றி பட்டினத்தார் அழகாகப் பாடுகின்றார்.
"கைஒன்று செய்ய விழிஒன்று நாடக்
கருத்தொன்று எண்ணப்
பொய்ஒன்று வஞ்சக நாஒன்று பேசப்
புலால்கமழும்
மெய்யன்று சாரச் செவியன்று
கேட்க விரும்புமியான்
செய்கின்ற பூசைஎவ் வாறகொள்
வாய்வினை தீர்த்தவனே ".
காரைக்கால் அம்மையார் ஒர் ஒப்பற்ற உணர்வாளர் ஆவார். இறைவன் அவரை "அம்மையே" என்று அழைத்து அருளிய பெருமை பெற்றவர். தேவர்களும் மக்களும் இறைவனைப் பலவாறு வழிபடுவதை அம்மையார் பார்க்கின்றார். எல்லோரும் ஒரே நோக்கத்துடன் இறைவனை வழிபடுவதில்லை. சிலர் தங்கள் குறைகள் நீங்க வேண்டுமென்று இறைவனை வழிபடுகின்றனர். வேறுசிலர் இறைவழிபாட்டால் உலகில் தங்களுக்குப் பல வசதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். மற்றும் சிலர் தங்களுடைய பதவிக்கும், பெயருக்கும், பெருமைக்கும், பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க இறைவனை வேண்டுகின்றனர். பக்தர்கள் பலவிதம். தங்கள் எண்ணம் நிறைவேற எவ்வாறாயினும் இறைவனைத் தங்கள் வலைக்குள் கொண்டுவர நினைக்கின்றனர். காரைக்கால் அம்மையார் யோசிக்கின்றார். அவருக்கு மக்களைப் பற்றி மட்டுமல்ல, வானவர்களைப் பற்றியும் நன்கு தெரியும். தேவலோகத்திலும் இதே நிலைதான். பணக்காரர்கள் பயனை வேண்டி ஆடம்பரமாக இறைவனுக்குப் பூசை செய்வதை அவர் பார்த்திருக்க வேண்டும். அதேபோல, தேவலோகத்தில் தேவர்கள் தங்கள் நலனைக் கருதி இறைவனுடைய திருவடிகளை நீண்ட மாலைகளால் அலங்காரம் செய்கின்றனர். ஆயினும், அவர்களுடைய நெஞ்சம் இறைவனுடைய திருவடிகளில் பொருந்தவில்லை. தயங்கித் தயங்கித் தேவர்கள் இறைவனைப் பூசை செய்கிறார்கள். முழுமையான ஈடுபாடு அங்கு இல்லை. பூசையின் நோக்கம் சுயநலமே. ஆனாலும் காரைக்கால் அம்மையாருக்கு ஐயம் ஏற்படுகிறது. இவ்வாறு தேவர்கள் பெரிய மலர் மாலைகளைப் புனைந்து உன்னை வழிபடுகின்றனரே. நான் அவ்வாறு செய்யவில்லை. எனது மனத்தை மட்டும் உன்னிடம் வைத்திருக்கின்றேன். எனக்கு c என்ன செய்யப் போகின்றாயோ என்பது போலப் பேசுகின்றார்.அம்மையாருக்கு இத்தகைய ஏக்கம் ஏற்படத் தேவையில்லை. கட்டாயம் இறைவன் அம்மையாருக்கு அருள்புரிவான். எத்தகைய வழிபாடாயினும் அதற்கு அன்பாகிய அடிக்கல் வேண்டுமென்பதே அம்மையாருடைய பாட்டின் பொருளாகும். அந்தப் பாட்டைக் கேளுங்கள்.
"நினைந்திருந்த வானவர்கள் நீள்மலரால் பாதம்
புனைந்தும் அடிபொருந்த மாட்டார் - நினைந்திருந்து
மின்செய்வார் செஞ்சடையாய், வேதியனே, என்கின்றேற்கு
என்செய்வான் கொல்லோ இனி?" (அற்புதத் திருவந்தாதி 15)
அன்போடு உருகி இறைவனை வழிபடுதல் தொண்டுநெறி எனவும் அழைக்கப்படும். அதைத் தாச மார்க்கம் என்று கூறுவார்கள். தாச மார்க்கமாவது அடிமை நெறியாகும். இறைவன் விரும்பும் எளிய காரியங்களை மனநிறைவுடனும், ஈடுபாடுடனும் செய்வது தொண்டு நெறியாகும். திருக்கோவில்களில் விளக்கேற்றல், பூக்கொய்தல், அன்போடு மெழுகுதல், திருக்கோவில்களில் உள்ள இடங்களில் அசுத்தங்களைப் போக்கல், இறைவனை வாயார வாழ்த்துதல், கோவிலின் பூசை நேரங்களில் மணியைப் பற்றி அடித்தல், திருமஞ்சனம் போனற் தொழில் செய்தல் போன்றவை தொண்டு நெறியாகும். இவற்றை முழுமனதுடன் செய்து வாழ்பவர்கள் இறைவன் அருள் பெறுவர் என்பதில் ஐயமில்லை.
"எளியனல் தீப மிடல்மலர் கொய்தல்
அளிதின் மெழுக லதுதூ ர்த்தல் வாழ்த்தல்
பளிமணி பற்றல் பன்மஞ் சனமாதி
தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே". (திருமந்திரம் - 1502)
இறைவழிபாட்டில் பாடலுக்கு முக்கியமான இடமுண்டு. இறைவனுக்கு வேள்வி செய்யலாம். நிவேதனம் அளிக்கலாம். இறைவன் அவற்றை ஏற்றுக்கொள்வான். ஆனால், நம்மில் பலருக்கு வேள்விகளையும், யாகங்களையும் நடத்தவோ பலவிதமான நிவேதனங்களை அளிக்கவோ வசதி இல்லாமல் போகலாம். அந்த நேரத்தில் நமக்குள் இறைவனைத் துதித்துப் பாடிக் கொண்டிருந்தாலே போதும். அது அவனை மகிழச் செய்யும். அதுவே அவனுக்குச் சிறந்த உணவுமாகும். அன்புடன் தன்னைப் பாடுபவர்களுக்கு இறைவன் எப்போதும் அருள் புரிவான். ஆகவே, திருமுறைகளைப் படித்து மனப்பாடம் செய்து அவற்றைப் பாடிக்கொண்டிருப்பதன் மூலமாகவே இறைவன் வேண்டும் வழிபாட்டினைச் செய்யலாம். இவ்வாறு செய்து இறைவனுடைய திருவடிப் பேற்றினைப் பெற்றவர் ஆனாய நாயனார் ஆவார். அவர் தனது குலத்தொழிலாகிய பசுக் காத்தலைச் செய்யும் பொழுது தனது சூழலில் சிவபெருமானைப் பற்றி அன்பு பொருந்திய இசையை வாசித்து மகிழ்வார். விலங்குகளும் அவருடைய இசையில் மெய்மறந்தன. அவருடைய இசையில் இனிமைக்கு இறைவன் விலக்கல்லன். இறைவன் "இசை விரும்பும் கூத்தனார்" எனச் சேக்கிழார் அழைக்கின்றார். ஆனாய நாயனாருக்கு இறைவன் எதிர்நின்று காட்சி அளிக்கின்றான். குழலோசை கேட்டு மகிழ்ந்து, நாயனாருடைய மெய்மறந்த நிலையைக் கண்டு பாராட்டும் வகையில் அந்த நிலையிலேயே தன்னிடம் வந்து நாயனார் அணைந்து நிற்க வேண்டும் என்கின்ற கருத்துடன் "இந்நின்ற நிலையேநம் பாலணைவாய்" என்று அருள்புரிவார். இந்த வகையிலேயே திருமந்திரம் இறைவனை மகிழச் செய்யும் பாடல்கள் அவனுக்குத் தொண்டர்கள் அளிக்கும் பால் நிவேதனம் ஆகும் என்று வலியுறுத்துகின்றது.
"வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் நாமிலம் காலையும் மாலையும்
ஊட்டு அவியாவன உள்ளங் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பால் அவியாமே". (திருமந்திரம் - 1824)
நாயன்மார்கள் இறைவழிபாட்டினை உள்ளும் புறமும் அன்போடு உருகிச் செய்து இறைப் பேற்றினைப் பெற்றவர்கள். அவர்களுடைய வரலாறு இறைவழிபாட்டிற்குச் சான்றாக, எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இறைவழிபாட்டினை உயிரைவிட அருமையாகப் போற்றியவர்கள் அவர்கள். கருவூர் நகரத்தில் வாழ்ந்த எறிபத்த நாயனார் ஒரு ஒப்பற்ற சிவனடியார் ஆவார். ஒரு நாள் அவ்வூரில் வாழ்ந்த சிவகாமி ஆண்டார் என்னும் பெரியவர் தான் மிக்க அன்புடன் விதிப்படி பூக்களைப் பறித்து, கட்டிய மாலையை இறைவனுக்குச் சாத்துவதற்காக எடுத்துக்கொண்டு போனபோது, அவ்வழியே வந்த பட்டத்து யானை அந்த மாலையைப் பிடுங்கி கீழே சிந்த, சிவகாமி ஆண்டார் மிகுந்த வருத்தம் கொண்டவராக இருந்த நிலையில், வெகுண்ட எறிபத்த நாயனார் அந்தப் பட்டத்து யானையையும், பாகர்களையும் கொன்று விடுகின்றார். இந்த வரலாற்றைக் கூற வரும் சேக்கிழார் பெருமான் மூன்று பாடல்களில் சிவகாமி ஆண்டாரின் தூய வழிபாட்டு முறையினை அழகாக விளக்குகின்றார். அந்தப் பெரியவர் விடியற்காலையில் எழுந்து வெளியில் போய், குளிர்ந்த நீரில் மூழ்கி, வாயையும் கட்டிக்கொண்டு, பூப்பறிப்பாராம். நல்ல மனமுள்ள மலர்களை அவர் கைகளால் தெரிந்துகொண்டு அவற்றைப் பறிப்பார். இறைவனுக்காகப் பூப்பறிக்கும்போது வாயைக் கட்டிக்கொள்வது ஒரு சிறந்த மரபாக இருந்தது. பூக்களைத் தரையிலிருந்து எடுக்கக்கூடாது. செடிகொடிகளிலிருந்து எடுக்க வேண்டும். புதிதாக மலர்ந்திருக்க வேண்டும். அவை வீசும் மணம் முழுமையும் இறைவன் திருமுடியிலே கமழ்வதாக இருக்க வேண்டும். இவ்வாறு அவரும் பருவமுடைய அரும்புகளைக் கொய்து பூக்கூடையில் வைத்து அப்பூக்கூடையைத் தண்டில் தொங்கவிட்டு, அந்தத் தண்டைத் தாங்கிக் செல்ல வேண்டும். இந்தத் தண்டிலிருந்து தொங்கும் கூடையானது தாங்கிச் செல்வோருடைய இடைக்கு மேலே இருக்க வேண்டும். இத்துணை செய்கைகளையும் சிறந்த அன்புடன் சிவகாமி ஆண்டார் செய்து வந்தார் என்று சேக்கிழார் எடுத்துக்காட்டுகின்றார். இவையெல்லாம் நாம் இன்றும் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகளாகும்.
முருக நாயனார் என்னும் அடியார் மேற்படி பூசையினை ஒருநாளும் வழுவாது செய்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார். அவர் செய்த பணி நந்தவனங்களில் பூக்கொய்து, மாலைக் கட்டி, அன்போடு சார்த்தி, அர்ச்சனையை முறைப்படி செய்து வந்ததுதான். அவருடைய வழிபாட்டை "ஆளான மெய்ம்மைத் தவத்தால்" என்று சேக்கிழார் பெருமான் புகழ்கின்றார். அத்தகைய பெரியார் திருஞானசம்பந்தருக்கு நண்பராகும் பெருமையையும் பெற்றவர். திருஞானசம்பந்தருடைய திருமண நாளில் அவருடன் சிவபெருமானது திருவடியைச் சாரும் பேற்றிணையும் அடைந்தார்.
இறைவழிபாடு உள்ளத்தில் தோன்றும் அன்பின் வெளிக்காட்டாக இருக்கும்போது உள்ளத்தை உய்விக்கின்றது. இறைவனடியை நெருங்கச்
செய்கின்றது. திருமூலர் இதை உணர்ந்து கொண்டவர். "நான் எப்பொழுதும் இறைவனுடைய திருவடியை எனது தலையில் சூடிக்கொள்வேன். மனதில் வைத்து போற்றி வணங்குவேன். இறைவா என்று உள்ளம் உருகப் பாடுவேன். பல சிறந்த மணமுள்ள மலர் கொண்டு பூசை செய்து, இறைவனுக்கு அதுகு செய்து, அந்த அழகிலே நிலைத்து நிற்பேன். அன்பெனும் உணர்வினால் உந்தப்பட்டு, இறைவனைப் போற்றி வணங்கி ஆடுவேன். அவனன்றி வேறொன்றுமில்லை என்று என் மனதை அவளிடம் பறிகொடுப்பேன். இன்று நான் செய்வதும், நாளை செய்யப் போவதும் இவை மட்டும்தான்" என்று கூறுகின்றார் .
"குடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான் என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்
றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்று
நாடுவன் நானின் றறிவது தானே". (திருமந்திரம் - 50)