"அறம் அறியாரே!"
நான் பள்ளிச் சிறுவனாக இருந்த காலம். எனது ஆசிரியர் ஒருவர் திருவாரூர் மனுநீதிச் சோழனுடைய வரலாற்றை அறவாழ்விற்கு உதாரணமாக அடிக்கடி எடுத்துக்காட்டுவார். அந்த ஆசிரியர் வறுமை நிலையிலே எளிய வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். ஆனால், அவர் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டிருந்தார். எளிமையும், தூய்மையும் நிறைந்த அவர் மனுநீதிச் சோழனின் வரலாற்றைக் கேட்போர் மனம் உருகும் வகையில் எடுத்துச் சொல்லுவார். எனது உள்ளத்தில் நீங்காத இடத்தைப் பெற்ற அந்த வரலாற்றைப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்தில் மனுநீதிச் சோழன் தனது எண்ணத்தால், வாக்கால், செய்கையால் ஒரு மிகப் பெரிய புரட்சியைச் செய்திருந்தான் என்று என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அந்தப் புரட்சியின் விளைவாக அறத்திற்கு இலக்கணம் வகுத்துத் தந்த மாபெரும் மன்னனாக மனுநீதிச் சோழன் எனது சிந்தையில் திகழ்ந்தான்.
அது என்ன புரட்சி? மனுநீதிச் சோழனின் அருமை மகன் ஒரு நாள் தேரிலேறி அரசுலாத் தெருவில் நகர்வலஞ் சென்றான். ஒரு இளைய பசுக்கன்று திடீரென்று தேர்க்காலின் இடைப் புகுந்து இறந்து விட்டது. தாய்ப்பசு கண்ணீர் வடிய அரசனுடைய மாளிகைக்கு முன் வந்து ஆராய்ச்சி மணியை அடித்தது. அரசனுடைய அமைச்சர்கள் அவனுக்கு ஆறுதல் தரும் நோக்கத்துடன், பசுவதைக்குப் பிராயச்சித்தம் செய்யும் வகையில் வழி வழியாக வந்த முறைகளைக் கையாளலாமென அறிவுரை வழங்கினார்கள். உலகியல் வழக்கிலே இதுபோன்ற குற்றம் முன்பும் நிகழ்ந்திருக்கிறது என்றும், தொன்று தொட்டு நடைமுறையில் இரந்து வரும் பிராயச்சித்த முறைகளைச் செயல்படுத்துவதன் மூலம் அரசன் தனக்கு நேர்ந்த குற்றத்தை தவிர்த்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்கள். இதைக் கேட்ட மன்னன் சினம் கொண்டான். தன்னுடைய கடமைகளையும், பொறுப்புகளையும் முற்றிலும் உணர்ந்தவன் அவன். ஓர் அரசனுக்குரிய அறம், நிலத்தில் வாழும் பல உயிர்களைத் தன்னாலும், தனது பரிசனங்களாலும், பகைவர்களாலும், கள்வராலும், ஏனைய உயிர்களாலும் இடையூறு நேராமல், தருமம் தவறாமல் பாதுகாப்பதே ஆகும். இதை மனுநீதிச் சோழன் நன்கு உணர்ந்திருந்தான். "மெய்வண்ணந் தெரிந்துணர்ந்த மனுவென்னும் விறல்வேந்தன்" என்கிறார் சேக்கிழார் பெருமான். அமைச்சர்கள், தொன்றுதொட்டு வரும் பழக்கத்தை அறமாகக் கொண்டு, அதன் அடிப்படையில் அரசன் தனக்கு ஏற்பட்ட இழுக்கை நீக்கிக் கொள்வதற்காகப் பிராயச்சித்த வழிகளை எடுத்துக் கூறும்போது மன்னன் அவர்களுக்கு அளித்த பதில் சிந்திக்கத்தக்கது. "அமைச்சர்களே, நீங்கள் சொல்லும் விதிகள் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், அறத்தின் சிறந்த உண்மைத் தன்மையை நீங்கள் புரிந்து கொள்ளாமல் பேசுகின்றீர்கள். அந்த உண்மைத் தன்மை தான் என்ன? எந்த உலகில், எந்த ஒரு பசு துன்பத்தால் கதறி வந்து அரண்மனையின் ஆராய்ச்சி மணியை அசைத்து, வீழ்ந்து பதறிற்று? அத்தகைய பசுவினுடைய துன்பத்தை நீக்கக் கடமைப்பட்டவன் அல்லவா? அதுவும் அந்தப் பெரும் துன்பம் என்னால், என் மகனால் அப்பசுவிற்கு நேரிட்டதென்றால் அந்தத் துன்பத்தை நானே தாங்கிக் கொள்வது தான் அறம் அல்லவா? என்று அரசன் சொல்லியது அறத்தின் உண்மைப் பெருமையை நிலை நாட்டுகிறது. "அறநெறியின் செவ்விய உண்மைத் திறம்" அதுவே
"அவ்வுரையில் வருநெறிகள் அவை, நிற்க, அறநெறியின்
செவ்விய உண்மைத்திறம் ஓர் சிந்தைசெய்யாது உரைக்கின்றீர்
எவ்வுலகில் எப்பெற்றம் இப்பெற்றித்தாம் இடரால்
வெவ்வுயிர்த்துக் கதறிமணி எறிந்து விழுந்தது.
"எனமொழிந்து மற்றிதனுக்கு இனி இதுவே செயல் இன்ஆன்
மனம் அழியும் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும் இது
தனதுறுபேர் இடர்யானும் தாங்குவதே தருமம் என
அனகன்அரும் பொருள் துணிந்தான் அமைச்சரும் அஞ்சினார் அகன்றார்"
(பெரிய புராணம் - திருநகரச் சிறப்பு)
எவ்வுரையும் தனது உயிராக உணர்ந்து கொள்வதே அறத்திற்கு அடிப்படையாக அமைகிறது. அந்த உணர்வே அன்பிற்கு அடிப்படையாகும். ஆகவே, அன்பும், அறமும் இணைந்து நிற்பன. உள்ளத்தில் அன்பு பெருக்கெடுக்கும் போது, அந்த உள்ளம் அறவழியில் இயல்பாகவே செல்லும், "தருமம் தன் வழிச் செல்கை" என்கிறார் சேக்கிழார் பெருமான். ஆனால், புறத்தோற்றங்களின் மாயப்பொலிவில் நாம் ஈடுபடும்போது, அறமானது நமது உள்ளத்தின் இயல்பான தன்மையாகும் என்கிற உண்மை நம்மிடமிருந்து மறைக்கப்படுகின்றது. திருவருளே அந்த மறைக்கும் சக்திக்குக் காரணமும் ஆகும். இந்த மறைப்புச் சக்தியால் உந்தப்பட்டு, உயிரானது ஐம்புலன்கள் வழி ஓடி, இன்ப துன்பங்களை மாறி மாறிப்பெற்று, கடல் போன்று வினைகளைக் கூட்டிக் கொண்டு, இறப்பு, பிறப்பு என்கிற மாயச் சூழலுக்குச் சதா வித்திட்டு வருகிறது இது உண்மை. இந்த நிலையில் நாம் அறத்தை நாடுவதில்லை. பொய்ம்மையைப் பெருக்கி, பொழுதினைச் சுருக்கிப் பயனற்று வாழ்ந்து, செத்து மறைகின்றோம்.
ஆகவே, அறத்தின் ஆழ்ந்த தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் நாம் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இறைவனுடைய அருளால் நம்மைப் பற்றித் தெரிந்து கொண்டவர்கள், இறைவனுடைய திருவடியைச் சார்ந்து இயல்பாகவே அறம் செய்யும் நெறியிலும் நிற்பார்கள். இறைவனைப் பற்றி உண்மையையும் அவர்கள் அறிந்து கொள்கின்றார்கள். அவ்வாறு நம்மை முற்றிலும் அறிந்து கொள்வோர் இறைவனுக்குச் சமமாகவும் உள்ளனர்.
"தாம் அறிவார் அண்ணல்தான் பணிவார் அவர்
தாம் அறிவார் அறந்தாங்கி நின்றார் அவர்
தாம் அறிவார் சில தத்துவராவர்கள்
தாம் அறிவார்க்குத் தமர்ப்பர னாமே". (திருமந்திரம் - 251)
தன்னைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியமாகிறது. எல்லா உயிர்க்கும் இறைவன் ஒருவனே என்ற உணர்வு மனதில் வலுவாகப் பதிய வேண்டும். அந்த அறிவே மனிதர்கள் அறவழி நடத்தும். ஏனெனில், அந்த அறிவினால் அன்பு பெருகும். தீயது மறையும். அறம் வளரும். மறம் அழியும். இதை உணராத மனிதர்கள் சுயநலக் குப்பையிலே உழன்று, உடலைப் பேணி, மனதைச் சுருக்கி, பிறரை மதியாமல் தனது நலத்தைப் பெருக்கி, உள்ளத்தை மாயையிலே தள்ளி, பிறவிக் கடலிலே மீண்டும் மீண்டும் மூழ்கி அழிவர்.
"தாம் தவம் செய்தான் செய்தவத்து அவ்வழி
மான்தெய்வமாக மதிக்கும் மனிதர்கள்
ஊன்தெய்வமாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான்தெய்வமென்று நமன் வருவானே".
அறம் இறைவனுடன் சம்பந்தப்பட்டதாகும். சிவபெருமானுக்கு அறவன் என்ற ஒரு திருநாமமும் உண்டு. இறைவன் அறத்திற்கு இருப்பிடமாவான். காரைக்கால் அம்மையார் கைலாயத்திற்குச் சென்று இறைவனைக் கண்டு, களித்து, தனக்குப் பிறவாமை வேண்டுமென்றும், பிறப்புண்டேல் இறைவனை மறவாமை வேண்டுமென்றும், இறைவனுடைய திருநடனத்தை என்றும் தரிசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கேட்டு "அறவா c ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க" என்றார்.
சிவபெருமானுடைய வாகனமாகிய இடபம் அறத்தின் வடிவாகும். அறமே இடபமாக இறைவனைத் தாங்குகின்றது. இறைவனை வழிபடும் போது, அறத்தையும் வழிபட வேண்டும். ஏனென்றால், அறமே அன்பர்களையும் பாதுகாக்கின்றது. அறமே எல்லா நலன்களையும் தந்து, இறைவன் திருவடியில் சேர்க்கும். இறைவனுக்கு வாகனமாக இருக்கும் அறனே அன்பர்களையும் தாங்கும். "தன் கடன் அடியேனையும் தாங்குதல்" என்பார் திருநாவுக்கரசர். "தருமமே போற்றிடின் அன்பு சார்ந்திடும்" என்று அறிவிக்கின்றது கந்தபுராணம். எனவேதான், நீதிநூல் கூற வந்த ஒளவைப் பிராட்டியாக முதலாவதாக "அறம் செய விரும்பு" என்றார்.
நான் பேசும் அறமானது தெளிந்த சிந்தையும், தூய்மையான உள்ளமும் கொண்டவர்களுடைய அறிவிலிருந்து தோன்றக்கூடிய பண்பாடாகும். அத்தகைய அறம் ஓர் குறிப்பிட்ட காலத்தையோ, இடத்தையோ, மக்களையோ சார்ந்ததல்ல. திருக்குறள் மனதில் மாசுபடாது இருத்தலே அறம் என்பதை "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்" என்று கூறுகின்றது. அந்த அறநெறி எல்லாக் காலத்திற்கும், எல்லா இடத்திற்கும், எல்லா மக்களுக்கும் பொருந்தும். மனிதனுடைய மனம், வாக்கு, காயம், ஆகியவற்றை அடிப்படையில் ஒழுங்குபடுத்துவது அறமாகும். ஆகவே, அறம் வாழ்வுடன் கலந்ததாக இருக்கின்றது. மனம் ஒன்று நினைத்து, வாய் வேறொன்று பேசி, உடல் மற்றொன்றைச் செய்வது அறமாகாது. அந்தச் செய்கையால் இன்பமும் பயக்காது.
அறத்தின் உண்மை நிலையை அறிந்தவர்கள் அறவழியில் செல்வதைத் தமது இயல்பாகக் கொள்வர். அவ்வாறு சென்று இறைவனுடைய திருவடியை அடையும் திறத்தையும் பெற்றவராவர். இதற்கு மாறாகப் பொய்ம்மொழி கேட்டு மறத்தை அறிந்து, விரும்பத்தகாத செயல்களிலே ஈடுபடுபவர்கள் பிறவிக் கடலிலே மூழ்குகிறார்கள்.
அறம் அறியார் அண்ணல் பாதம் நினையும்
திறம் அறியார் சிவலோக நகர்க்குப்
புறம் அறியார் பலர் பொய்மொழி கேட்டு
மறம் அறிவார் பகை மன்னி நின்றாரே (திருமந்திரம் - 262)
திருமூலர் பெருமான் மேலும் சொல்வதைக் கேளுங்கள். "நீங்கள் பெரிய செல்வர்களாக இருக்கலாம். மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும், பணியாளர்களும், வாகனங்களும் உங்களுடைய சொத்தாக இருக்கலாம். மக்கள் உங்களது செல்வத்திற்காக உங்களைப் போற்றிப் புகழுவார்கள். நல்ல உடற் கட்டுடன் இளமை பொங்கி எழும் வயதில் நீங்கள் செல்வத்தையும், இளமையையும், அதனால் கிடைக்கக்கூடிய இன்பத்தையும் நுகரத் துடித்துக் கொண்டிருப்பீர்கள். ஏன், நீங்கள் நல்லவர் என்று கூடப் பேரும் பெற்று இருக்கலாம். ஆனால், சர்வ வல்லமை படைத்த காலன் இவற்றை எல்லாம் பொருட்படுத்தப் போகின்றானா? உங்களுக்கு வேளை வரும் போது உங்களுடைய உயிரை உடலிலிருந்து பிரித்துச் செல்லப் போகின்றானா? உங்களுக்கு வேளை வரும் போது உங்களுடைய உயிரை உடலிலிருந்து பிரித்துச் செல்லப் போகின்றான். பறக்கின்ற ஒன்று, கண் சிமிட்டுவதற்கு முன்பு எங்கோ பறந்து சென்று விடும். அது பயன் அடைய வேண்டுமென்றால் உங்களுடைய உயிர் உடலில் இருக்கும்போதே நல்ல தவத்தைச் செய்யுங்கள். நல்ல அறத்தைச் செய்யுங்கள்".
"தன்னை அறியாது தான் நலன் என்னாது
இங்கு இன்மை அறியாது இளையர் என்று ஓராது
பன்மையில் வந்திடும் கூற்றம் படுமுன்னம்
தன்மையின் நல்ல தவஞ் செய்யும் நீரே". (திருமந்திரம் - 255)
திருமூலர் பெருமான் மேலும் கூறுவார்-
"அவ்வாறு செய்யாமல் நமது வாழ்நாள் முழுவதிலும் காமம், வெகுளி, மயக்கம் போன்ற அழுக்கினை உள்ளத்துடன் சேர்த்துக் கொண்டே போகின்றோம். அதை அகற்றுவதற்கான அறிவையும் பெருக்குவதில்லை. செல்வமும் செழிப்பும் உங்களுக்கு உதவும் போது நீங்கள் பிறருக்குத் தருமம் செய்ய வேண்டுமென்கிற ஒரு எளிய சிந்தனைக்குச் சிறிது இடம் கூடக் கொடுப்பதில்லை. காலத்தை வீணாகக் கழித்து என்ன செய்யப் போகின்றீர்கள்? ஒன்றினை நாம் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். நமது செய்கைகள் எல்லாம் நம்முடைய வினைக்
கடலின் அளவைக் கூட்டிக் கொண்டே போகின்றன. பல பிறப்புகளைப் பெற்றுப் பாவம், புண்ணியம் இரண்டையும் செய்து அதனால் ஏற்படும் இன்பத்துன்பங்களைத் தங்கி, இளைத்துக் கொண்டே போவதில் பயனில்லை. இந்த வினைக் கடலை விரைவில் தாண்டுவதற்கு வேண்டிய முயற்சிகளில் நாம் உடனடியாக ஈடுபட வேண்டும். அந்த வினைக்கடலில் இருந்து நம்மைக் கரையேற்றுவதற்கான தோணி ஒன்று உள்ளது. அதற்கு இரண்டே அம்சங்கள் உண்டு. ஒன்று, அழியாப் புகழினை உடைய பரம்பொருளைப் பற்றி நின்று செய்யும் தவம், இரண்டு, இவ்வாழ்க்கையில் நின்று பற்றற்ற நிலையில் மேற்கொள்ளும் அறம். இவற்றை விட்டால் வேறு வழி இல்லை".
"அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமுஞ் செய்யீர்
விழித்திருந் தென்செய்வீர் வெம்மை பரந்து
விழிக்கவன் றென்செய்வீர் ஏழைநெஞ் சீரே". (திருமந்திரம் - 254)
"திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்குந் தனக்கும் அக் கேடில் புகழோன்
விளைக்குந் தவம் அறம் மேற்றுணை யாமே". (திருமந்திரம் - 258)
திருமந்திரம் அன்பையும், அறத்தையும் இறை சிந்தனைக்கு அடிப்படையாக வைக்கின்றது. சிறந்த இல்வாழ்க்கையை நடத்துபவர்கள், அரும் தவம் செய்த பேற்றினைப் பெறுவார்கள். "மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்" என்கிறார் திருமூலர். அத்தகைய இல்வாழ்க்கையில் நின்று எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டும் மக்கள் இறைவனுடைய திருவடியைக் காண்பர். தம் செல்வத்தைப் பிறருக்குப் பங்கிட்டு, அதனால் அடையும் இன்பத்தையும் மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து வாழ்பவர் இம்மையிலும் மறுமையிலும் ஓங்கி நிற்பார்கள்.
உலகிலுள்ள எல்லா அறங்களையும் தன்னகத்தே கொண்டு சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது திருக்குறள். அறத்திற்கு இலக்கணம் தருவது திருக்குறள். திருவள்ளுவர் பெருந்தகை அறத்தைப் பல துறைகளாகப் பிரித்து பல அதிகாரங்களில் விளக்கிக் கூறுகின்றார். திருமூலர் பெருமானும் திருமந்திர மாலையின் முதல் தந்திரத்திலேயே அறத்தின் பல துறைகளையும் விளக்கி விடுகின்றார். உடல் நிலைப்பதில்லை. பொருட் செல்வம் ஒரு வெறும் மாயை. இளமை போன்ற உடல் நிலைகள் நாம் அறியாமலேயே மாறி விடுகின்றன. உயிரை நம்மால் உடலுக்குள் செலுத்த இயலாது. உடலில் இருந்து அது எப்போது வெளிப்படும் என்றும் தெரியாது. இந்த நிலையில் வஞ்சனை பேசிப்பிறருடைய பொருளைக் கவர்ந்து கொடிய வாழ்வை வாழ்ந்து நம்முடைய அழிவை நாமே தேடிக் கொள்ளாமல் அறம்பட வாழ வேண்டும் என்பதே திருமந்திரத்தின் சிறந்த உபயோகமாகும்.
"அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாப் பிறர்பொருள் வவ்வன்மின்" (திருமந்திரம் - 196)
கொல்லாமை வேண்டும். பிற உயிர்களை நமது உயிர்களாக நினைக்கும் பாங்கினில் கொலை என்கின்ற எண்ணம் தோன்றுவதற்கே இடமில்லை.
புலாலைத் தவிர்க்க வேண்டும். மற்ற உயிரினங்கள் பால் நாம் செலுத்த வேண்டிய அன்பே இதற்குத் தத்துவமாக உள்ளது. தூய இல்வாழ்க்கை நடத்த வேண்டும். ஒருவன் ஒருத்தி என்கின்ற உணர்வைப் பேணுதலே தூய இல்வாழ்க்கை ஆகும். அறவழியில் மட்டுமே கணவனும் மனைவியும் இன்பத்தைப் பெற முயல வேண்டும். மனம் போகிய போக்கில் சென்று இந்த இன்பத்தின் நோக்கத்தை நழுவ விடக்கூடாது. பிறருடைய பொருளைக் களவு செய்யும் மனப்பான்மையை அகற்ற வேண்டும். களவு பொல்லாது. ஆன்மீகத்தை அழித்து விடும். காமம் அதைவிடக் கொடியது. காமத்தின் வழி ஒருவனுக்கு இழிவினைத் தேடித் தரும். காமம் உடல் இன்பத்தைச் சார்ந்தது. அதை வளர்க்க வளர்க்க b போல் வளர்ந்து தன்னையே எரித்து விடும். உள் ஒன்று வைத்துப்புறமொன்று பேசுதல் அறத்திற்கு மாறுபட்டதாகும். தன்னை அறியாதவர்கள் பொய் பேசுவர். பொய் பேசுவதன் மூலம் சுய நலத்தை வளர்த்து, ஆன்மீகத்திற்குத் தேவையான அன்பினை மறப்பர். திருமூலர்பெருமான் கொலை களவு, கள்காமம், பொய்கூறல் ஆகியவற்றை மலையான பாதகம் என்று கூறுகின்றார். அவற்றை நீக்கி இறைவனுடைய திருவடியிலேயே எப்போதும் தனது சிந்தனையை வைத்துக் கொண்டிருந்தால் துன்பங்கள் கழிந்து விடும். அத்தகையர்வகளுக்குப் பேரின்பம் தானாகவே கிட்டும்.
"கொலையே களவுகட் காமம் பொய்கூறல்
மலையான பாதக மாம் அவை நீக்கித்
தலையாஞ் சிவனடி சார்ந்தோர்க்
கிலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே". (திருமந்திரம் - 200)
குறிப்பாகத் திருமூலர் கள்ளுண்போரை வன்மையாகக் கண்டிக்கின்றார், "கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறியாரே" என்பார். "காமமு கள்ளும் கலரி (கீழ் மக்கள்) கட்கேயாகும்" என்பார். கள் உண்பவர்கள் ஒழுக்கத்திலிருந்து நீங்கி விடுவார்கள். கள் வாய்மையை அழிக்கும். மது உண்பர் தம்மை மறந்து தமது அறிவுச் சக்தியை இழப்பார்கள். மோகமுற்று, மூடனாகித் தன் நிலையறியாது கலங்குவர். இதற்கு மாறாக, சிவானந்த தேனை உண்பதே பேரின்ப நிலையை அளிக்கும் என்பார் திருமூலர். தினந்தோறும் பசு மாட்டிற்கு அரிசி கழுவிய நீரை அளித்தால் பிற குளங்கள் நீர் நிலைகள் ஆகியவற்றை நாடி நீர் அருந்தப் பசுமாடு செல்லாது. அதேபோல வாழ்விற்கு வளமை தரும் நீர் இறைவனுடைய சிந்தனையாகிய தேனாகும். அந்தத் தேனினை உண்டு திளைத்திருப்பவர்கள் நீர்மயமான கள்ளின் அருகில் செல்ல மாட்டார்கள். சிவானந்தத் தேன் தத்துவங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கக்கூடிய இறை நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும், மருளைப் போக்கும். பொய்த்தவ வேடத்தைக் கலைத்து
விடும். சிந்தனையை உண்மையான இறை அனுபவத்தில் புகுத்தும். உலக வாழ்க்கையின் மாய நிலையை மாறச் செய்யும். எல்லாவற்றிற்கும் மேலான இறை உணர்வை அடைய வழிகாட்டும்.
"தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாகிப்
பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போக்கியே
மெய்த்த சகமுண்டு விட்டுப் பரானந்தச்
சித்திய தாக்குஞ் சிவானந்த தேறலே". (திருமந்திரம் - 334)
செய்யத் தகாதவற்றை எடுத்துக்கூறிய திருமூலர். பின்னர் எது செய்யத் தக்கவை என்று விரித்துக் கூறுகின்றார். அறத்திற்குச் சிகரமாக விளங்குவது தானம் செய்யும் பண்பு. உடம்பை வருத்தும் பசியைப் போக்குவது உயிர் கொடுத்தது போலாகும். "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்று புறநானூறு கூறுகிறது. பசி யாருக்கும் பொதுவானது. பசிக்கு அன்னமிடும் போது வேறுபாடு செய்வது அறமாகாது. விருந்தினர்கள் வருகிறார்களா என்று பார்த்து அவர்களுடன் சேர்ந்து உண்பதே மேலான தருமமாகும். செல்வம் பல காலமாகச் சேர்க்கப்பட்டிருந்தாலும் அதைத்தான் சேர்த்தது என்று எதையும் பங்கிட்டுக் கொடாமல் இருப்பது பண்பாகாது. அவ்வாறு நினைப்பவர்களுடைய செல்வமானது நொடிப்பொழுதில் மறைந்துவிடும். ஏனென்றால், செல்வம் நாமாகச் சேர்த்தன்று. இறைவன் திருவருளால் பெறப்பட்டது. இறைவன் இந்தச் செல்வத்தைப் பலருக்கும் பயன்படும்படி ஓரிடத்தில் வைத்திருக்கின்றான். ஏழைக்குத் தானம் செய்யும்பொருட்டு அதைச் செல்வர்களிடம் விட்டு வைத்திருக்கின்றான். "இரப்பவர்க்கு ஈய வைத்தார்" இதை உணர்ந்து கொள்ளாமலும், பிறருக்குக் கொடுக்காமலும் மறைத்து வைத்திருப்பவர்களுக்காகவே இறைவன் கடுநரகங்களை வைத்தாக அப்பர் பெருமான் கூறுகின்றார்.
கரப்பவர் தங்கட்கு எல்லாம்
கடு நரகங்கள் வைத்தார்
எனவே, தான் பெற்ற செல்வத்தைப் பிறருடன் சேர்ந்து அனுபவிப்பதே அறமாகும். இறைவனுடைய படைப்பில் காக்கை போன்ற ஒரு எளிய பறவை கூட இதைச் செய்கின்றதே!காக்கை, தன் இனத்தைக் கூவி அழைத்துக் கூட்டமாகச் சேர்ந்து உண்பதைப் பார்க்கின்றோமல்லவா? இதை ஆறறிவு மனிதன் செய்யக்கூடாதா?
"ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணுங் காலம் அறிமினே". (திருமந்திரம் - 250)
அறம் செய்யும் மனப்பான்மையை எப்போதும் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இது கடினமானதன்று. பிறர்பால் அன்பு கொள்ளும் உள்ளம் தான் தேவைப்படுகிறது. அதுவே அறத்திற்கு மையமாகவும் அமைகிறது. இறைவன் நம்மிடம் உள்ள செல்வத்தைக் கேட்கவில்லை. நமது மனதிலுள்ள தூய்மையையும், உண்மை அன்பையுமே கேட்கிறான். அத்தகைய நிலையில் ஒரு பச்சிலையைக் கொண்டு பூசித்தாலே அந்த அன்பை மெச்சுவான். நாம் உண்ணும்போது வாயில்லாத சீவராசிகளையும் கருத்திற் கொள்ள வேண்டும். நாமும் பல பிறப்புகளில் இதுபோன்ற நிலைகளில் இருந்து இருக்கலாம். மனிதர்கள் தங்களுடைய வேட்கைகளையும், ஆசைகளையும் அறிந்து வார்த்தைகளால் நமக்கு எடுத்துச் சொல்லித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர் ஆனால், பேசாத நிலையில் உள்ள உயிர்களுக்கு நாம் அளிக்கும் உதவியானது உண்மையிலேயே இறைவனுடைய நெஞ்சத்தையும் தொடக்கூடிய ஒன்றாகும். அதேபோல, உண்ணும்பொழுது ஒரு கைப்பிடி உணவைப் பிறருக்குத் தந்துவிட்டுப் பிறகு உண்பது மிகவும் எளிதல்லவா? இத்தனைக்கும் மேலாக, பிறருடன் பேசும்பொழுது இனிமையாகப் பேசக்கூடாதா? பிறருக்குத் துன்பம் பயக்காத வகையில் பேசலாமே. அன்புடன் பேசும்பொழுது பகைவர்களும் நண்பர்களாவர். இன்சொல் கூறுபவர்களைக் கண்டு காலனுடைய தூதர்களும் அஞ்சுவர் என்று ஞானசம்பந்தப் பெருமான் கூறுகின்றார். மனத்தூய்மையுடன் வாழும்பொழுது இறைவனுடைய அருளால் மாசில்லாத சொற்களைக் கூறுவது எளிதாகும். இந்த எளிய அறங்களை யாவரும் மேற்கொள்ளலாமே!
"யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம் உண்ணும் போதோரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே". (திருமந்திரம் - 252)
தானத்தில் சிறந்தது அடியார்களுக்கும் தொண்டர்களுக்கும் செய்யும் தானம் என்று திருமந்திரம் கூறுகின்றது. இதுவே மகேசுவர பூசை ஆகும். திருக்கோவிலிலுள்ள இறைவனுக்கு நைவேத்தியம் முதலியன செய்யலாம். இறைவன் அதை ஏற்றுக்கொள்ளுவான். அதே நேரத்தில் இறை அடியார்களுக்கும் நாம் ஏதேனும் கொடுக்கும்பொழுது இறைவன் பதின்மடங்கு திருப்தி அடைகின்றான். காரணம், அடியார்கள் நடமாடும் கோவிலாகத் திகழ்கிறார்கள். படமாடும் கோவில்களை விட உயர்ந்தவர்கள் இறை நிலையில் நிற்பவர்கள். அவர்களுக்கு உணவளிக்கும்போது எல்லாப் புவனங்களும் தாங்கள் உணவருந்திய மகிழ்ச்சியைப் பெறுகின்றன என்று இறைவனே கூறியதாகத் திருமூலர் எடுத்துக் காட்டுகின்றார். செல்வராகிய நீங்கள் உங்கள் பெயர் வரலாற்றில் நிலைக்கும்பொருட்டுப் பலவிதமான தானங்களைச் செய்து வருகின்றீர்கள். அந்தணர்களுக்கும், கற்றோர்களுக்கும் கிராமங்களை எழுதி வைக்கின்றீர்கள். நிலங்களைத் தருகின்றீர்கள். இறைவனைத் திருப்தி செய்யும் நோக்குடன் பல திருக்கோவில்களைக் கட்டுகின்றீர்கள். குடமுழுக்கு விழா நடத்துகின்றீர்கள்.
இவையெல்லாம் போற்றத்தக்கவைதான். ஆனால், சொல்லப்போனால், நீங்கள் அன்புடன் ஈகை உணர்வுடன் தெய்வ சிந்தனை மிக்க ஞானி ஒருவருக்கு ஒரு வேளையாகினும் அளிக்கும் உணவினால் கிடைக்கக்கூடிய பயனுக்கு வேறு எந்தக் காரியங்கள் செய்தாலும் ஒப்பாகாது என்பதே உண்மை. இந்தத் தெளிவை அளிப்பது கீழ்க்கண்ட மந்திரங்கள்:
"படமாடக் கோயில் பகவற்கொன் றீயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்
படமாடக் கோயில் பகவற்க தாமே". (திருமந்திரம் - 1957)
"அகரம் ஆயிரம் அந்தணர்க் கீயிலென்
சிகரம் ஆயிரஞ் செய்து முடிக்கிலென்
பகரு ஞானி பகலூண் பலத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயந் தானே". (திருமந்திரம் - 1860)
நாயன்மார்கள் பலர் மக்கள் தொண்டினைச் செய்தே இறைவனின் அன்பினைப் பெற்றார்கள். தன்னலமற்ற தொண்டு அறத்திற்கு முத்தாய்ப்பு வைத்தது போலாகும். இளையான்குடி மாறன் நாயனார், அமர்நீதி நாயனார். அப்பூதி அடிகள் போகின்றவர்கள் மக்கட்குப் பசியைத் தீர்ப்பதே பெரிய தொண்டாகக் கருதினார்கள். பசியால் வருந்தின அனைவர்க்கும் சோறிட்டார்கள். "மெய்யடியார்கட்கு ஆன பணி செய்யும் விருப்பில் நின்றார்" என்று சேக்கிழார் பெருமான் திருநீலகண்டரைப் போற்றுகின்றார். "வேண்டும் யாவையும் இல்லை என்னாது கொடுக்கும் இயல்பில் நின்றவர்" என்று இயற்பகையாரின் பெருமையை விளக்குகின்றார். திருவீழிமிழலையில் பஞ்சம் தீர்க்கும் பணியில் திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டனர். திருநாவுக்கரசரின் உழவாரப் பணியின் மேன்மையை உலகுக்கு எடுத்துக்காட்டும் வண்ணம் இறைவன் ஞானசம்பந்தருக்கு மாற்றுக்குறையும் பொற்காசை வழங்குகின்றார். இதை உணர்ந்த திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரின் தொண்டைப் பாராட்டி இறைவனிடம் வாசி தீரக் காசு நல்கும்படிக் கேட்டுக்கொள்கின்றார். இத்தகைய பெருமை வாய்ந்த அடியார்கள் வாழ்ந்த வாழ்வு முற்றிலும் அற வாழ்வு ஆகும். அதை நாம் அறிந்து நாமும் அவ்வழியிலேயே செல்ல வேண்டும். நமக்கு இருக்கக்கூடிய நாட்கள் மிகக் குறைவு. நமது உடலில் இருக்கும் சத்து மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. விரைவில் பயனற்று விடும். செல்வம் சுருங்கினும் உள்ளம் சுருங்காது இருக்க அறப்பணியை மேற்கொள்ள வேண்டும். இதற்காகவே இறைவன் நம்முடைய வாழ்நாட்களை நீட்டித் தருகின்றான். இருப்பினும், அறத்தின் மேன்மையை நாம் அறியவில்லையே!
"ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை
அழிந்தது கண்டும் அறம்அறி யாரே". (திருமந்திரம் - 281)