"உள்நின்ற சோதி" ஒரு காலத்தில் பிரம்மனும் திருமாலும் தங்களுடைய வலிமையால் செருக்கடைந்தார்கள் பிரம்மனும், திருமாலும் மற்ற தேவர்களும் ஆணவப் போக்கில் நிற்கும் தன்மையை ந

"உள்நின்ற சோதி"

ஒரு காலத்தில் பிரம்மனும் திருமாலும் தங்களுடைய வலிமையால் செருக்கடைந்தார்கள். பிரம்மனும், திருமாலும் மற்ற தேவர்களும் ஆணவப் போக்கில் நிற்கும் தன்மையை நீக்கியவர்கள் அல்லர் என்று புராணங்கள் கூறுகின்றன. அவர்களிடையே யார் பெரியவர் என்கின்ற போட்டி உண்டாயிற்று. விவாதம் தொடங்கியது. விவாதம் முற்றிப் போரில் முடிந்தது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பரம்பொருளாகிய சிவபெருமான் அவர்கள் முன் ஓர் அனல் பிழம்பாய்க் காட்சியளித்தார். அந்தத் தீப்பிழம்பு ஆகாயத்திலும் எல்லா அண்டங்களிலும் பரவி நின்றது. "நானே கடவுள், நானே கடவுள்" என்று போர் புரிந்து பிரம்மனும் திருமாலும் அந்தச் சோதிப் பிழம்பைப் பார்த்து அதனுடைய அடியையும், முடியையும் காண்பவர்களே அவர்களில் முதல்வரானார் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆணவ மிகுதியால் தங்களை முழுமுதற் கடவுள் என்று நினைத்திருந்ததைத திருமூலர் பேதைமை என்று விளக்குகின்றனர். திருமால் வராக வடிவம் கொண்டு, நிலத்தைப் பிளந்து பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாதாளத்தில் பல பாகங்களுக்குச் சென்று அந்தச் சோதிப் பிழம்பின் அடியைக் காண முற்பட்டான். கடைசியில் திருமாலுக்குத் தோல்வியே கிட்டியது. தான் தோற்றதாகத் திருமாலும் ஒப்புக் கொண்டான். திருமால் செல்வத்திற்கு இருப்பிடம். ஆகவே, செல்வத்தால் மட்டும் இறை அனுபவத்தை அடைய முடியாது. இறைவனைப் பெற முடியாது. பிரம்மனோ அன்னப்பறவை உருவம் எடுத்துப்பல்லாயிரம் ஆண்டுகள் அந்தச் சோதிப் பிழம்பின் முடியைக் காண வேண்டும் என்கிற நோக்கத்துடன் முடியை நோக்கிப் பறந்து கொண்டே இருந்தான். ஆயினும் அந்த முடியைக் காணவில்லை. முடியைக் காணாதவன் தனது இயலாமையை ஒப்புக் கொண்டிருக்கலாமோ? ஆணவமலத்தால் கட்டுப்பட்டு, உண்மை அறிவு மறைக்கப்பட்ட நிலையில் அவன் இதைச் செய்யவில்லை. அவனுடைய மனத்தில் இருந்த ஒரே ஆசை திருமாலுக்கு முன் தான் சாதித்துவிட வேண்டும் என்பதே. எனவே, தான் முடியைக் கண்டுவிட்டதாகப் பிரம்மனே பொய் கூறினான். பிரம்மன் கல்விக்கும், நூல் அறிவுக்கும் இருப்பிடம். மிகுந்த கல்வி கற்றவர்கள். நூல் அறிவினால் ஓங்கியவர்கள் தத்துவங்களைக் கரைத்துக் குடித்து விட்டுச் சில நேரங்களில் தாங்கள் சொன்னதுதான் சரி என்று பொய்யாக்கூடச் சாதிப்பது உண்டு. ஆனால், இறைவனை இப்படியெல்லாம் பொய் சொல்லி அடைந்து விட முடியுமா?

"அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்

படிகண் டிலர்;மீண்டும் பார்மிசைக் கூடி

அடிகண் டிலேன்என் றச்சுதன் சொல்ல

முடிகண்டேன் என்றயன் பொய்மொழிந் தானே" (திருமந்திரம் - 88)

பிரம்மன் பொய் கூறியது சிவபெருமானுக்குப் பொறுக்கவில்லை. அக்னி தம்பத்தை பிளந்து கொண்டு சிவபெருமான் உக்கிர ரூபத்துடன் காட்சியளித்தான்.

பிரம்மனுக்கு எங்கும் கோயில் உண்டாகாதவாறு சபித்தான். பிரம்மதேவன் பதைபதைத்து, அஞ்சி மன்னிப்புக் கேட்டான். திருமாலும் பிரம்மனும் மீண்டும் மீண்டும் சிவபெருமானுடைய பெருமையைப் பாடித் துதித்து, பூசித்து வழிபட்டார்கள். அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று இறைவன் மக்கள் வழிபாட்டுக்குரிய இலிங்க வடிவமாகக் காட்சியளித்தான். இதுவே இலிங்கத் தோற்றத்திற்கு மூலமென்று இலிங்க புராணம் விளக்கிக் கூறுகின்றது. இதைத்தான் "திருமாலும் பன்றியாய்ச் சென்று உணராத் திருவடி" என்று மாணிக்கவாசகர் பாடுகின்றார்.

"அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து

பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ"

என்பதும் திருவாசகமாகும்.

சேக்கிழாரும் இந்த இலிங்க புராண வரலாற்று உண்மையைத்

"தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத்தொழார்

வழுவான மனத்தாலே மாலாய மாலயனும்

இழிவாய கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை

விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்துய்ந்த படிவிரித்தார்"

என்று விளக்கியுள்ளார். இறைவன் எங்கும் நிறைந்தவன். சர்வ வியாபி. அணுவிற்கு அணுவாயும், அப்பாலுக்கு அப்பாலாயும் நிற்பவன். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பார் தாயுமானவர். "அங்கு இங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி, அருளடு நிறைந்தது எது? என்பதும் அவருடைய திருவாக்காகும்.

எண்ணிய எல்லாவற்றையும், விரும்பியது எல்லாவற்றையும் அளிக்கத்தக்க அருள்நிறைந்த ஒளியே அருட்பெரும் சோதியாகும் என்று வள்ளலார் பாடுகின்றார்

"எனைத்தும் துன்பிலா இயல்பளித்து எண்ணிய

அனைத்தும் தரும்சபை அருட்பெருஞ் சோதி".

ஆயினும், வெறும் செல்வத்தாலும், கல்வி அறிவாலும் இறைவனைப் புரிந்து கொள்ள இயலாது. நூல்களைப் படித்து, சாத்திரங்களைப் பேசி இறைவனைக் கண்டுகொள்ளுதலும் கடினம். தர்க்கவாதங்களும், ஆராய்ச்சிகளும் நம்மை இறைவனிடம் சேர்த்துவிடா. இறை அனுபவம் என்பது இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது. இறைவன் எப்பொழுதும் சுடர்விட்டுக் கொண்டே உள்ளான். அவனைப் புரிந்து கொள்ள வேறுவிதமான வழிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பார் திருஞானசம்பந்தர்.

"ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்

சோதிக்க வேண்டா;சுடர்விட்டுளன் எங்கள் சோதி;

மாதுக்கம் நீங்க லுறுவீர்;மனம்பற்றி வாழ்மின்"

திருநாவுக்கரசர் இறைவனைச் "சொற்றுணை வேதியன் சோதி வானவன்" என்று குறிப்பிடுகின்றார்.

எனவே, புராணங்களிலிருந்தும் அருளாளர்களுடைய திருவாக்கிலிருந்தும் இறைவன் சோதிமயமானவன் என்று நன்கு தெரிந்து கொள்ளலாம். இந்தச் சோதியை நாம் எப்படிக்கண்டு அனுபவிப்பது? நமது உடலானது பூதங்கள், இந்த்ரியங்கள், புலன்கள், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்கிற நான்கு அந்தக் கரணங்கள் ஆகியவற்றின் சேர்க்கையாகும். இவற்றைக்கொண்டே நாம் அனுபவத்தைப் பெறுகின்றோம். அறிவை வளர்க்கின்றோம். இன்பத்துன்பங்களைப் பெறுகின்றோம். இந்தக் கருவிகள் தூல நிலையிலும், சூக்கும நிலையிலும் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இந்தக் கருவிகளோடு நமது உயிரானது ஒன்றிப் போயிருப்பதால், இந்தக் கருவிகளால் கிடைக்கும் அனுபவம்தான் நமது உயிரைத் தாக்குகின்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ளவில்லை. உயிரையும், உடலையும் ஒன்றாக நிலைத்தே வாழுகின்றோம். உண்மையில் உடலும் அதனைச் சார்ந்த கருவிகளும் சடப்பொருள்களாகும். எல்லா அனுபவங்களையும் உயிரே பெறுகிறது. அந்த அனுபவங்கள் வாயிலாக உயிரே மீண்டும் மீண்டும் பிறவிகளை எடுத்து வினைக்கடலை வளர்த்துக் கொள்கின்றது. புறக்காட்சிகளைச் சதா அனுபவித்துக் கொண்டிருக்கும் உயிரானது அகக்காட்சிகளை அறிந்து கொள்ள பொதுவாக முற்படுவது இல்லை. உயிரினுடைய வினைக் கூட்டங்களின் அழுத்தமே இதற்குக் காரணமாகும். புறக்கருவிகள் எப்பொழுதும் புறத்தே சென்று கொண்டிருக்கின்றன. "கண்ணொன்று பல காணும்;தனைக்காணா" என்பார் திருமூலர். இது உயிருடைய இயல்பாகும். தான் சார்ந்திருக்கும் பொருளையே பற்றி நிற்கும். அந்த நிலையில் பிரபஞ்சம் எங்கும் பரவி நிற்கும் பரம் சுடரைப் பார்ப்பதற்கான தகுதி பெறாததன் காரணத்தால் அந்தப் பரம்சுடரை உயிரானது காண்பதில்லை. ஆனால், உண்மையில் இறைவன் எப்படி இருக்கின்றான்? அவன் "நிலமுழு தண்டத்துள் நீளியன்". மண்ணும் விண்ணும் பரந்து நிற்பவன். பல உடம்புகளாக நிற்கின்றான். அவற்றில் உள்ள உயிர்களுக்குள் உயிராய் நிற்கின்றான். அந்த உயிர்களின் அறிவு ஒளியாக நிற்கின்றான். தனது எல்லையற்ற பேராற்றலால் சூரிய, சந்திர மண்டலங்களைக் கடந்து, அண்டங்கள் முழுவதும் ஊடுருவ நிற்கின்றான். பிரம்மன், திருமால் போன்றவர்கள் கண்களுக்கு அழல் பிழம்பாகக் காட்சியளிக்கின்றான்.

"ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ்

சேணாய்வா னோங்குந் திருவுரு வேஅண்டத்

தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந்

தாண்முழு தண்டமு மாகிநின் றானே" (திருமந்திரம் - 374)

அதாவது, உடலும் உடலைச் சார்ந்த கருவிகளும் பிற பொருள்களை அறிகின்றன. தம்மை அறிந்து கொள்வதில்லை. உயிரானது உடலையும், கருவிகளையும் பயன்படுத்திப் பிற பொருள்களைப் பற்றித் தெரிந்து கொள்கின்றது.

தன்னைப் பற்றித் தெரிந்து கொள்வதில்லை. இறைவன் அண்டமெல்லாம் பரந்து உயிருக்கு உயிராயும் நிற்கின்றான். ஆனால், உயிர்கள் தம்முள் இருக்கும் இறைவனைப் பற்றித் தெரிந்து கொள்வதில்லை. இதற்குக் காரணம் இறைவனுடைய மறைப்புச் சக்தியாகிய திரோபவமாகும். இதுவும் அறியாமையும் ஆகும். இந்த அறியாமையின் சேர்க்கை காரணமாக உயிருக்குயிராய் நிற்கும் இறைவனைப் பற்றி நாம் உணர்ந்து கொள்ள முற்படுவது இல்லை. உண்மையில் இறைவன் உள்ளத்தினுள்ளேயே நிற்கின்றான். உயிரினிடத்தே சோதியாகப் பிரகாசிக்கின்றான். உயிருக்கும் அவனுக்கும் இடையே சிறிது இடைவெளி கூடக் கிடையாது. இதை உயிர் உணர்ந்து கொள்வதில்லை. இதற்குக் காரணம் உயிரானது வெளிப்புறப் பொருட்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதுதான். தன்னுள் இருக்கும் இறை உண்மையை அறிந்து கொள்ளாத நிலை அறியாமை எனப்படும்.

"உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை

உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை

உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்

உள்ளம் அவனை உருவறி யாதே" (திருமந்திரம் - 431)

இதுவே உயிர் அனுபவிக்கும் மருள் நிலையாகும். இந்த நிலையும் ஓர் இருண்ட நிலைதான். வெளிச்சம் சற்று காணப்படுகின்றது. ஆனால் இந்த வெளிச்சம் விஷய அனுபவங்களுக்கே பயன்படுத்தப்படுகின்றது. இந்த நிலை நீங்கி உயிர் தூய ஒளியிலே தன்னை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான அருளைப் புரிவதும் இறைவனே ஆவான். பல பிறவிகளைப் பெற்று, பல இன்பதுன்பங்களை அனுபவித்து இறைவனுடைய பேரருளால் உயிர் தன்னுடைய வினைக்கூட்டங்களை குறைத்துக் கொள்கின்றது. மலங்களுடைய தன்மை குறைகின்றது. அறிவுதயம் ஏற்படுகின்றது. அப்பொழுது உயிரானது தனது உண்மை நிலையை அறிந்து கொள்கின்றது. தனக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பைப் பற்றித் தெரிந்து கொள்கின்றது. அப்பொழுது உயிர் தன்னுள் இறை எனும் சோதியை உணர்ந்து கொள்கின்றது. இதுவே உள்ளத்து இருள் நீங்கிய நிலையாகும். பகலில் சூரியனும், இரவில் சந்திரனும் தோன்றிப் பிரகாசிப்பதன் மூலமாக நாம் பெறும் ஒளியானது புறத்தே உள்ள ஒளியாகும். இந்த ஒளி உள்ளத்தைச் சூழ்ந்துள்ள இருளை நீக்கும் ஆற்றலைப் பெற்றதில்லை. திருவருளே உள்ளத்திற்கான விளக்கத்தைத் தரும்.

"தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம்

அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானும்

சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும்

இருளும் அறநின் றிருட்டறை யாமே" (திருமந்திரம் - 435)

திருமூலர் பெருமான் திருவருளை முழுமையாகப் பெற்றவர். உள்நின்ற

சோதியை உணர்ந்தவர். விண்ணில் அமரர்கள் இறைவனை இன்பப் பொருளாக விரும்புகின்றனர். மண்ணில் மக்கள் இறைவனைப் புகழ்ந்து திருக்கோலத்தைக்காண ஆவல் கொள்கின்றார்கள். ஆனால், திருமூலரோ இறைவனை உயிருக்குள் கண்ணிலுள்ள கருமணியைப் போல் காண்கின்றார். இறைவன் மண்முதலாகிய ஐம்பூதக் கூட்டங்களிலே பரந்து நிற்கின்றான். அதேநேரத்தில், உயிரின்கண் நிற்கின்றான். உயிரை ஆட்டுவிக்கின்றான். இந்த நிலைமை திருமூலர் உள்ளத்தில் எப்படி விளங்குகின்றது தெரியுமா? இறைவன் உயிருடன் கலந்து நிற்கும் தன்மை, நீரில் கலந்த பால் போல் இருக்கின்றது. நீரில் பால் போல் கலந்து நிற்பது ஒர் நுட்பமான நிலையாகும். உயிருக்குயிராக இறைவனும் கலந்து நிற்பது அதிநுட்பமான நிலை ஆகும். இந்த உண்மையைக் கண்டு கொண்டால் உள்ளத்திலே பேரின்பத்தைப் பற்றி விவரிக்க இயலுமா? அந்த உணர்வினைத் திருமூலர் "சோரமற்காணும் சுகம்" என்கின்றார்.இதை "அறிந்தேனே" என்று அவர் கூறுவது அவர் பெற்ற அனுபவத்தைக் குறிக்கும். இந்த அனுபவம் நூலறிவால் ஏற்பட்ட அனுபவம் அன்று. இந்த அனுபவம் இறைவனுடைய பேரருளால் உள்ளத்தே தோன்றி, எழுந்து, நிரம்பி நிற்கும் அனுபவமாகும்.

"ஆரும் அறியாத அண்டத் திருவுருப்

பார்முத லாகப் பயிலுங் கடத்திலே

நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்

சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே" (திருமந்திரம் - 450)

காரைக்கால் அம்மையாரும் இத்தகைய அனுபவம் பெற்றார்கள். ஒன்று இறைவனைத் திருமூர்த்தமாகத் தரிசிக்கலாம். மற்றொன்று அன்பினால் இறைவனை நமக்குள் எண்ணி, அனுபவித்து இன்பமடையலாம். ஆனால், அகக்கண் கொண்டு பார்ப்பவருக்கு இறைவன் அவர்களுடைய சித்தத்தில் சோதிமயமாகக் காட்சியளிப்பான் என்று கூறுகின்றார்.

"நாண்பார்க்கும் காணலாம் தன்மையனே;கைதொழுது

காண்பார்க்கும் காணல்ஆம்;காதலால் - காண்பார்க்குச்

சோதியாய்ச் சிந்தையுடனே தோன்றுமே, தொல்உலகுக்கு

ஆதியாய் நின்ற அரன்." (அற்புதத் திருவந்தாதி)

"இது அன்றே மின்னும் சுடர் உருவாய் மீண்டு ஆய்என் சிந்தனைக்கே

இன்னும் சுடர்கின்றது இங்கு" (அற்புதத் திருவந்தாதி)

இறைவனாகிய திருவிளக்கு உள்ளத்தின் நின்று, சுடர்விட்டுப் பிரகாசித்துப்பல ஆற்றல்களைப் புரிவதை நமச்சிவாயமாகிய ஐந்தெழுத்தென உணர்ந்த திருநாவுக்கரசர் இவ்விளக்கின் அருமையைப் பற்றிப் பின்வருமாறு பாடுகின்றார்.

"இல்லக விளக்கது விருள்கெ டுப்பது

சொல்லக விளக்கது சோதியுள்ளது

பல்லக விளக்கது பலருங் காண்பது

நல்லக விளக்கது நமச்சி வாயவே". (நமச்சிவாயத்திருப்பதிகம்)

இறைவனை "உள்ளத்து ஒடுங்கும் புறத்துளும் கள்ளத் தலைவன் கமழ்சடை நந்தி" என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இதே கருத்தை "உள்ளத்தினுள்ளே உளப்பல தீர்த்தங்கள்", "தெள்ளத்தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்", "தேயமும் நாடும் திரிந்து எங்கள் செல்வனைக் காயம் இந்நாட்டிடைக் கண்டு கொண்டேனே" போன்ற திருமந்திர அடிகள் நமது உள்ளத்தில் மேலும் பதிய வைக்கின்றன.

இந்தக் கருத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய கட்டம் நமக்கு இப்பொழுது வந்து விட்டது. நமக்கு முகம் இருக்கின்றது. முகத்தில் இரு கண்கள் இருக்கின்றன. இந்த முகத்தின் கண்களால் நாம் பார்க்கின்றோம். காணும் வெளிப்புறக் காட்சிகள் நமது மனதை வந்தடைந்து உள்ளத்தில் அனுபவங்களை வாரி வழங்குகின்றன. அறிவைத் தருகின்றன. இந்த அறிவு முடிவான அறிவு அல்ல. நிலையான அறிவை, பேரறிவை நாம் பெற வேண்டும். அதற்கு முகத்தின் கண்களால் மட்டும் பார்த்தால் போதாது. நமக்கு உள்ளும் புறமும் உண்டு. உள்ளமாகிய அகத்திற்கும் காணும் சக்தி உண்டு. அந்தச் சக்தி நம்மிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் இறைவனுடைய அருளே. அவனுடைய அருளாலேயேதான் இந்த மறைப்புத்திரை நீக்கப்பட வேண்டும். புறத்திலுள்ள கண்கள் அறிவு பெறுவது புறத்தே உள்ள ஒளியால், அகத்திலுள்ள கண்கள் இப்பொழுது இறைவனுடைய அருளால் ஒளிபெற வேண்டும். எனவேதான் திருமூலர்

"முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்

அகத்திற் கண்கொண்யடு காண்பதே ஆனந்தம்" (திருமந்திரம் - 2944)

என்கிறார்.

இந்த அகவழி என்பது என்ன? முதலில் இந்த்ரியங்களையும், புலன்களையும் அவை வழி போகாது தடுத்த நிறுத்த வேண்டும். மனத்தை ஒடுக்கி, சித்தத்தை அடக்கி, புத்தியை நெறிப்படுத்தி, உலகப் பொருள்கள் மீது உள்ள பற்றினைக் குறைத்துக் கொண்டு சரியை, கிரியை, யோகம் போன்ற பாதைகளால் இறை சிந்தனையையும், நாட்டத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இறைவனை அன்புற நாட வேண்டும். இறைவனுடைய பேரறிவு, பேராற்றல் இவற்றின் மன்பு உயிரினுடைய சிற்றறிவிற்கும், சிறு ஆற்றலுக்கும் இடமில்லை என்கின்ற அடக்க உணர்வை வளர்க்க வேண்டும். சகல சீவராசிகளின்பால் ஆழ்ந்த அன்பினைச் செலுத்தித் தற்போதம் என்கின்ற தன் நினைப்பு வலிமை இழக்கும் வகையில் நம்முடைய வாழ்வினை அமைத்துக் கொள்ள வேண்டும். இவையே அறம் என்றும், தவம் என்றும் சொல்லப்படும். இந்தப் பாதைகளிலே தீவிரமாகச் சாதகம் செய்யச் செய்ய உடல்தான் என்கின்ற நினைப்புக் குறைந்து உயிரைப் பற்றிய

அறிவு மிகும். ஆனால் அத்துடன் நின்றால் போதாது. உயிர் இறைவனாகாது. இறைவன் என்றும் கருதும் போதும் நம்மை அறியாமை என்கின்ற இருள் மூடிக்கிடக்கின்றது. இறைவனுடைய அருளால் நம்முடைய வினைகளின் வலிமை நீங்கி மலபரிபாகம் ஏற்படும்போது உள்ளத்தில் ஒளி தோன்ற ஆரம்பிக்கின்றது. இறைவனுடைய அருளால் நம்முடைய வினைகளின் வலிமை நீங்கி மலபரிபாகம் ஏற்படும் போது உள்ளத்தில் ஒளி தோன்ற ஆரம்பிக்கின்றது. உடலைப் பற்றிய நினைவுகள் அகன்று விடுகின்றன. ஞாயிறு எழும்பொழுது இருள் நீங்குவது போல உண்மை புலரத் தொடங்குகின்றது. இதைத்தான் "ஊனினை உருக்கி உள்ளளி பெருக்கி" என்பார் மாணிக்கவாசகர் பெருமான். உலகை நோக்காது நிற்கும் நிலை உண்மை நிலையாகும். இந்த உண்மை நிலையில் இறைவனுடைய பொன்னடிகள் காணப்படுகின்றன. திருவருள் மலங்களின் செயலாற்றலை ஒடுக்குகின்றது. இந்த இயக்கமும் உள்நின்றே நடக்கின்றது. இவ்வாறு நடைபெறுவதை ஆனந்தக்கண் என்கின்றார் திருமூலர். இதுவே அருட்கண் எனப்படும். ஞானக்கண்ணும் இதுவே. இதையே அறிவால் பார்க்காமல் அருளால் பார்க்கும் நிலை என்றும் அருளாளர்கள் கூறுவார்கள். இந்த அருமையான இயக்கத்திற்கு மூலகாரணமாக இருப்பது இறைவனுடைய அருட்சக்தி. உயிர்களை உய்விக்கும்பொருட்டு, பல பிறவிகளில் உடல்களைச் சேர்த்து அவற்றை நடத்திச் சென்று பின்னர் அருள்பாவித்து அவையோடு ஒட்டியிருக்கும் மலங்களைத் தனது அருளால் நீக்கி, தனது திருவடியை என்றும் சிந்தையுள்ளே நிலைக்கச் செய்வதும் இறைவனுடைய அருட்செயலே ஆகும். உயிர் பளிங்கு போன்றது. இதுவரை விஷய அனுபவங்களைச் சார்ந்து இருந்தது. இனிமேல் இறை அனுபவத்தைச் சாரும் இதை "பளிங்கில் பவளம் பதித்தான் பதியே" என்கிறார் திருமூலர்.

"விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு

தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து

உண்ணின் றுருக்கிய ரொப்பிலா ஆனந்தக்

கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே". (திருமந்திரம் - 113)

இதுவே அருள்நிலை, அறிவுநிலை, இருள் நீங்கி உள்ளளி பரவிய நிலை. இந்த நிலையில் உடல் நினைவு மறையும். பிறப்பு அறுக்கப்படும். அருளளியில் இறைவனுடைய உண்மை உணரப்படுகிறது. இறைவனுடைய ஆற்றலால் தீயும், சூரியனும், சந்திரனும் ஒளி பெறுவது உண்மைதான். அதேபோல இறைவனுடைய அருளால் உயிரும் மலம் நீங்கச் சிவ ஒளியைப் பெற்று விளங்குகின்றது.

"விளங்கொளி யங்கி விரிகதிர் சோமன்

துளங்கொளி பெற்றன சோதி யருள

வளங்கொளி பெற்றதே பேரொளி வேறு

களங்கொளி செய்து கலந்துநின் றானே" (திருமந்திரம் - 2683)

இதுவே தெளிந்த நிலையுமாகும். சித்தம் என்றும் சிவன் என்றும் வெவ்வேறு நிலைகள் இல்லை என்று திருமூலர் கூறி, மனத்திலே தெளிந்த நிலை அடைந்தவர்களுக்குச் சித்தத்திலே சிவனும் வெளிப்படும் என்று திருமூலர் கூறுகின்றார் (திருமந்திரம்- 2853) . இந்தத் தெளிந்த சித்தத்தில் மெய்யுணர்வு ஏற்படும். இந்த மெய்யுணர்வைப் பெறும் உயிரானது மலம் நீங்கியதாக ஒளி நிலையைப் பெறும். தன்னுள் இறைவன் உள்ளான் என்கின்ற நிலையும் மறையும். சிவத்தை உள்ளத்தில் கொள்ளுதல் ஒரு கட்டம். சிவத்தில் தான் அழுந்துவது அடுத்த கட்டம். மெய்யுணர்வு பெற்று எல்லாமும் இறவைன் என்கின்ற உணர்வால் அழுந்தப்பட்டு, அந்த உணர்வையே தங்களது அடக்க நிலை என்று கருதிச் சிவன் செயல் யாவையும் நோக்கி நின்று, சிவமாய் எங்கும் தாமாகி இருப்பதே ஓர் ஒப்பற்ற பேறாகும் என்பார் திருமூலர். "உய்யவல்லார்கட்கு ஒடுக்கம் பிரணவம்" என்பது திருமந்திரம். இதுவே "இழவு வந்து எய்திய சோம்பா"கும். சிவமாகிய பேரொளியில் உயிராகிய சிற்றொளி சேர்ந்து விடும். "சுத்த வெளியில் சுடரில் சுடல் சேரும்" (திருமந்திரம் - 134) . குற்றமற்ற பாலினில் நெய் கலந்து நிற்பதுபோல் எல்லையற்ற அகண்ட இறை வியாபகத்தில் உயிர் கலந்து நிற்கும். பிரம்மனும் திருமாலும் அகண்ட சோதியைக் கண்டு அதன் முடியையும், அடியையும் காணாமல் தோல்வியுற்றார்கள். அந்தச் சோதிக்குள்ளே அவர்காளல் புக இயலவில்லை அவர்களுடைய ஆணவச் செருக்கின் காரணமாக அந்தச் சோதியும் அவர்களைத் தன்னுள் சேர்க்கவில்லை. ஆனால் எங்கும் வியாபகமாக நின்று, அறியாமை இருளைப் போக்கவல்ல இறைவனாகிய ஒப்பற்ற அகண்ட சோதியில் தன் வாழ்நாளிலேயே சேர்ந்த பேர் பெற்றவர் சீர்காழிப் பிள்ளையார் திருஞானசம்பந்தர் ஆவார். அவருடைய திருமணத்தன்று திருஞானசம்பந்தர் "நல்லூரில் மேவும் நம்பனே உன் பாதம் சேரும் பருவமிது" என்று நெஞ்சுருகப் பாடி சிவபெருமான் அருள்பெற்று, அங்கே எழுந்த மாபெரும் சோதியில் கூடியிருந்த தொண்டர்கள் அனைவருடன் உட்புகுந்தார். சோதியும் அடங்கியது. மீண்டும் பழைய திருமணக் கோவில் அந்த இடத்தில் தோன்றியது. மக்கள் பிறவிப் HE தீரவும், உலகம் உய்யும் பொருட்டும், தீந்தமிழில் திருஞானசம்பந்தர் பாடி அருளிச் செய்துள்ள திருப்பதிகங்கள் இன்றும் நமக்கு அந்த அகண்ட சோதியை உள்ளத்திலும், புறத்திலும் கண்டு. கலந்து பேரின்பம் அடைய வழிவகை செய்ய நம்மிடையே கிடக்கின்றன. அவற்றைப் படித்து, தெளிந்து, உணர்ந்து உய்வோமாக.