கீழ்க்கோட்டூர் மணியம்பலம்

திருவிசைப்பா

கீழ்க்கோட்டூர் மணியம்பலம்

கோட்டூர்

கோட்டூர் சோழநாட்டு (காவிரி) த் தென்கரைத் தலம்

திருமுறைத்தலம். கோட்டூர், 1) மேலக்கோட்டூர் 2) கீழ்க் கோட்டூர் என இரு பிரிவாகவுள்ளது. மேலக்கோட்டூரிலுள்ள திருக்கோயில் திருமுறைப் பாடல் பெற்றது. கீழ்க்கோட்டூரில் உள்ள திருக்கோயில்தான் திருவிசைப்பாத் தலம். இதுவே மணியம்பலம் எனப்படும். ஐராவதம் வழிபட்ட பெருமையுடையது மேலக்கோட்டூர்ச் சிவாலயம். அந்த ஐராவதத்தின் மணி விழுந்ததால் கீழ்க் கோட்டூர்ச் சிவாலயம் மணியம்பலம் என்று பெயர் பெற்றது.

திருத்துறைப் பூண்டி - மன்னார்குடிப் பாதையில் "திருப்பத்தூர் பாலம்" என்னுமிடத்தத் தாண்டி மேலும் 1 A.e. சென்றால் கோட்டூர்த்தலத்தை அடையலாம்.

முதலில் வருவது திருமுறைப்பாடல் பெற்ற ஆலயம்தான். (மேலக்கோட்டூர்) கோயிலன் முன்பு வளைவு உள்ளது. அதைத்தாண்டி சற்று உள்ளே சென்றால் கீழ்க்கோட்டூர் மணியம்பலம் கோயிலை அடையலாம். வழி விசாரித்துச் செல்ல வேண்டும். கருவூர்த்தேவரின் திருவிசைப்பா பதிகம் பெற்றது.


இறைவன் - மணியம்பலநாதர், அமுதலிங்கேஸ்வரர்.


இறைவி - மணியம்பலநாயகி, அமுதாம்பிகை, மதுரவசனாம்பிகை.


தலமரம் - வன்னி.


தீர்த்தம் - வன்னி.


பிரமன், ஐராவதம் வழிபட்ட தலம்.

ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. முன்புள்ள பலி பீடமும் நந்தியும் தரிசனம் தர, உட்சென்று வெளவால் நெத்தி மண்டபத்தில் நின்று பார்த்தால் நேரே மூலவர் காட்சியளிக்கிறார். வலப்பால் மதுரவசனாம்பிகையின் அழகிய கோலம்.

மூலவர் சிறிய அழகான மூர்த்தி. உள்ளங்குளிரத் தரிசித்து மணியம்பலத்தாடும் மைந்தனோடு மனங்கலந்து மெய்ம்மறக்கின்றோம். மெள்ளவே அவன் பேர் விளம்பி மேனிசிலிர்க்க வழிபடுகிறோம்.

சிறிய கோயில். பிராகாரத்தில் விநாயகர் சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. தலமரம் வன்னி உள்ளது.

நித்திய வழிபாடுகள் முறையாக நடைபெறுகின்றன.

நவராத்திரி, சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விசேஷகால வழிபாடுகளும் நடைபெறுகின்றன.


"தளிரொளி மணிப்பூம் பதஞ்சலிம்பு அம்பலச்

சடைவிரித்து அலையெறி கங்கைத்

தெளிரொளி மணிநீர்த் திவலைமுத்து அரும்பித்

திருமுகம் மலர்ந்து சொட்டு அட்டக்

கிளரொளி மணவண்டு அறைபொழிற் பழனம்

கெழு வுகம்பலை செய்கீழ்க் கோட்டூர்

வளரொளி மணியம்பலத்துள் நின்றாடும்

மைந்தன் என் மனங்கலந்தானே."


"துண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும்

சுழியமும் சூலமும் நீல

கண்டமும் குழையும் பவளவாய் இதழும்

கண்ணுதல் திலகமும் காட்டிக்

கெண்டையும் கயலும் உகளுநீர்ப் பழனங்

கெழுவு கம்பலை செய்கீழ்க் கோட்டூர்

வண்டறை மணியம்பலத்துள் நின்றாடும்

மைந்தன் என் மனங்கலந்தானே."


அஞ்சல் முகவரி-

அருள்மிகு. மணிம்பலநாதர் திருக்கோயில்

கீழ்கோட்டூர் - கோட்டூர் அஞ்சல் - 614 708,

(வழி) திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி வட்டம்

திருவாரூர் மாவட்டம்.


 

Previous page in  கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is களந்தை ஆதித்தேச்சரம்
Previous
Next page in கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is  திருமுகத்தலை
Next