திருவேள்விக்குடி

திருமுறைத்தலங்கள்

சோழ நாட்டு (வடகரை) த் தலம்

கோயில்

திருவேள்விக்குடி

குத்தாலத்திற்குப் பக்கத்தில் உள்ளது. மயிலாடுதுறை - மகாராஜபுரம் சாலையில் உள்ளது. சிவபெருமானின் திருமணவேள்வி நடந்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. இறைவிக்குக் கங்கணதாரணம் செய்தபடியால் இதற்குக் "கௌதுகாபந்தன க்ஷேத்திரம்" என்று பெயர். நீண்டநாள் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து கல்யாணசுந்தரரை வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது இத்தலச் சிறப்பு. மணவாளேஸ்வர சுவாமி திருமணக் கோலத்துடன் திகழ்கிறார்.

இறைவன் - கௌதகேஸ்வரர், கல்யாணசுந்தரேஸ்வரர், மணவாளேஸ்வரர்.

இறைவி - பரிமளசுகந்த நாயகி, கௌதகேசி, நறுஞ்சாந்து நாயகி,

தீர்த்தம் - கௌதகாபந்தன தீர்த்தம்.

சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற தலம். இத்தலம் திருத்துருத்தியோடு சேர்த்துப் பாடப்பட்டுள்ளது. அரசகுமாரன் ஒருவனுக்கு மணம்புரிய நிச்சயித்திருந்த பெண்ணை, மணம் நிறைவேறு முன் அவள் பெற்றோர் இறக்கவே, அவள் சுற்றத்தார் கொடாது மறுத்தனர். அரசகுமாரன் இறைவனைநோக்கித் தவஞ் செய்து வேண்டினான். இறைவன் அப்பெண்ணை ஒருபூதத்தின்மூலம் கொண்டுவந்து அவனுக்குத் திருமணவேள்வி செய்தருளியதாக வரலாறு சொல்லப்படுகிறது.

திருக்கோயில் ஊர்நடுவே உள்ளது. கோபுரம் கிழக்கு நோக்கியது. கர்ப்பக்கிரகம் அர்த்தமண்டபம் மகாமண்டபம் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்காளக இலிங்கோற்பவரும், அர்த்தநாரீஸ்வரரும், சந்திரசேகரரும், தட்சிணாமூர்த்தியும் உள்ளனர். அர்த்த மண்டபத்தில் அகத்தியர் சிலையும், நடராசர், பிள்ளையார் திருமேனிகளும் உள்ளன. முதல் பிராகாரத்தில் அம்பாள் கோயில் தெற்கு நோக்கியுள்ளது. இதன்பின் புறத்தில் ஈசானமூர்த்தி கோயில்' உள்ளது. இக்கோயில் முதற்பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டதென்பர். கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் மணவாளநம்பி, மங்கலநக்கர், திருவேள்விக்குடி உடையார். என்னும் பெயர்களால் குறிக்கப்பட்டுள்ளது.

புரிதரு சடையினர் புலியுரி யரையினர் பொடியணிந்து

திரிதரு மியல்பினர் திரிபுர மூன்றையுந் தீவளைத்தார்

வரிதரு வனமுலை மங்கைய டொருபக லமர்ந்த பிரான்

விரிதரு துருத்தியாரிர விடத்துறைவர் வேள்விக்குடியே". (சம்பந்தர்)

"பேருமோர் ஆயிரம் பேருடையார் பெண்ணோ டாணும் அல்லர்

ஊரம தொற்றியூர் மற்றையூர் பெற்றவா நாம் அறியோம்

காருங் கருங்கடல் நஞ்சமுதுண்டு கண்டங் கறுத்தார்க் (கு)

ஆரம் பாம்பாவதறிந்தோமேல் நாமிவர்க் காட்படோமே" (சுந்தரர்)

-மன்னர்சுக

வாழ்விக்குடிகளடிமண் பூசலாலென்னும்

வேழ்விக்குடி யமர்ந்த வித்தகனே. (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

திருவேள்விக்குடி - குத்தாலம் அஞ்சல்

குத்தாலம் R.M.S. - 609 801

மயிலாடுதுறை வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.


 





















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருஅன்னியூர் (பொன்னூர்)
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி)
Next