திருவெண்காடு

திருமுறைத்தலங்கள்

சோழ நாட்டு (வடகரை) த் தலம்

கோயில்

திருவெண்காடு

சுவேதாரண்யம், சுவேதவனம் என்றும் பெயருடைய தலம்.

மயிலாடுதுறையிலிருந்து பேருந்துவசதியுள்ளது. மயிலாடுதுறை - மங்கை மடம் செல்லும் நகரப் பேருந்து திருவெண்காடு வழியாகச் செல்கிறது. இந்திரன் வெள்ளையானை வழிபட்ட தலம். அச்சுத களப்பாளர் மூலமாக மெய்கண்டார் அவதாரத்தை நாட்டுக்களித்து நலம் செய்த முக்களநீர் உள்ள பதி.

பெரிய கோயில். சுற்று மதில்களுடன் நன்குள்ளது. நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது. மூன்று தலமரங்கள், மூன்று அம்பிகைகள், மூன்று தீர்த்தங்கள் ஆகியவற்றைப் பெற்றுள்ள தலம். (சுவேதாரண்யர், அகோரர், நடராசர் - வட ஆலமரம் கொன்றை, வில்வம் - பிரம்மவித்யாநாயகி - துர்க்கை காளி - சூரிய சந்திர, அக்கினி தீர்த்தங்கள்.)

இத்திருக்கோயிலில் உள்ள முக்குளத்தில் (வெண்காட்டுமுக்குள நீர்) நீராடி இறைவனை வழிபடின் நினைத்த செயல் கைகூடும் என்பது ஞானசம்பந்தர் அமுதவாக்கு.

'பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடுள்ள நினை

வாயினவே வரம் பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்

வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்

தோய் வினையாவரவர் தம்மைத் தோயாவாந் தீவினையே".

இதுதவிர பின்வரும் பழைய தாலாட்டுப் பாட்டும் இக்குளச் சிறப்பை

விளக்கும் -

"சங்குமுகம் ஆடி சாயாவனம் பார்த்து

முக்குளமும் ஆடி முத்திபெற வந்தானோ".

ஊர் சிறியது - கோயில் பெரியது.

இறைவன் - சுவதோரண்யேஸ்வரர், வெண்காட்டு நாதர்.

இறைவி - பிரமவித்யாநாயகி

தலமரம் - வடஆலமரம்.

தீர்த்தம் - முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்) .

இம்மூன்று திருக்குளங்களும் வெளிப்பிராகாரத்தில் உள்ளன. முதலில் அக்கினி தீர்த்தம், பிறகு சூரிய தீர்த்தம் இறுதியாக சந்திர தீர்த்தம் என்ற வரிசையில் நீராடுவர்.

மூவர் பாடல் பெற்ற தலம்.

ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. கிழக்கு வாயிலில் பக்கத்தில் தேவஸ்தானம் நடத்தும் மெய்கண்டார் பாடசாலையுள்ளது. உள் இடம் பரந்த இடப்பரப்பு. உள்நுழைந்ததும் இடப்பால் முக்குளத்துள் ஒன்றான அக்கினி தீர்த்தம் உள்ளது. கரையில் விநாயகர், மெய்கண்டார் சந்நிதிகள் உள்ளன. பிராகாரத்தில் பக்கத்தில் அடுத்த திருக்குளமாகிய சூரியதீர்த்தமுள்ளது. கரையில் சூரிய தீர்த்தலிங்க சந்நிதி உள்ளது. சுப்பிரமணியர் மண்டபம் ஆறுமுகர் சந்நிதி ஆகியவற்றை அடுத்து அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. முகப்பில் 'புதன்' சந்நிதியும் எதிரில் அடுத்த தான 'சந்திர' தீர்த்தமும் உள்ளது. இத்தலம் புதனுக்குரிய தலமாதலின் புதனை வலம் வந்து வழிபட்ட பின்னரே இங்குத் தரிசனம் பூர்த்தியாகும். புதன் சந்நிதிக்குப் பக்கத்தில் முன் இல்லாத வில்வ மரம் உள்ளது.

இதன் பக்கத்தில் பிரமபீடம் உள்ளது. வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள். ஆதலின் அம்பாளுக்குப் பிரமவித்யாம்பிளை என்று பெயர் வந்தது.

அம்பாள் சந்நிதிக்குள் வலப்பால் பள்ளியறை. நேரே அம்பாள் தரிசனம். உள்பிராகாரத்தில் பிள்ளை இடுக்கி அம்பாள் என்ற பெயரில் நின்ற திருமேனியன்றும் சுக்கிரவார அம்மன் சந்நிதியும் உள்ளன.

சந்திரதீர்த்தத்தின் கரையில் வடகால (வட ஆல) மரமுள்ளது. மிகப்பெரய மரமாகத் தழைத்து விளங்குகின்றது. ஆங்காங்கே விழுதுகள் ஊன்றி அவை அவை தனித்தனி மரமாகக் கிளைத்து விசாலமாகத் தழைத்துள்ளது. மரத்தினடியில் விநாயகரும், அவருக்கெதிரில் ருத்ரபாதம் என்னும் பெயரில் இருதிருவடிகள் செதுக்கப்பட்டும் உள்ளன. சந்திரன் வழிபட்ட லிங்கமும் உள்ளது. வெளிவலம் முடித்து, கொடிமரம் தொழுது உட்சென்றால் வலப்பால் உற்சவ மண்டபம் உள்ளது. பக்கத்தில் அலுவலகம். வாயில் முகப்பில் மேலே வண்ணச் சுதையில் திருக்கல்யாணக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. வாயிலைக் கடந்து உட்சென்றால் பிராகாரத்தில் சோமாஸ்கந்தர் தரிசனம். அறுபத்துமூவர் மூல உற்சவத் திருமேனிகள் இருவரிசைகளில் முன் பின்னாக அழகுறக் காட்சி தருகின்றன. (மூலத் திருமேனிகள் பின் வரிசையாகவும் உற்சவத் திருமேனிகள் முன் வரிசையாகவும் இரு வரிசைகளில் வைக்கப்பட்டுள்ளன.) அடுத்துப் பத்திரகாளி சந்நிதி உள்ளது. (அகோரமூர்த்தி உள்ள தலமாதலின் இங்குப் பத்திரகாளி சந்நிதி உள்ளது.)

அதை அடுத்து வீரபத்திரர், இடும்பன், சுகாசனமூர்த்தி, நாகலிங்கம், விநாயகர், நால்வர், விஸ்வேஸ்வரர் முதலிய திருமேனிகள் ஒரு மண்டபத்தில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. கஜலட்சுமி தரிசனைத்தையடுத்த இத்தலத்துக்குரிய சிறப்பு மூர்த்தியாகிய அகோரமூர்த்தி நின்ற மேனியராய், சூலத்தை இருகைகளிலும் சாய்த்துப்பிடித்து, எண்கரங்களுடையவராய்ச் சற்றுத் தலைசாய்த்து, முன்பின்னாகத் திருவடிகளை வைத்து மிக்க அழகாக - உண்மையிலேயே அகோரராக - அற்புதமூர்த்தியாகக் காட்சி தருகின்றார். கண்களுக்குப் பெருவிருந்தாகக் காட்சிதரும் அகோரமூர்த்தியை விட்டுப் பிரிந்து வரவே மனமில்லை. சலந்தரன்மகன் மருத்துவன். இவன் இறைவனை நோக்கித்தவம் செய்தான். இறைவன் காட்சிதந்து சூலத்தைத்தந்து அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தி அருள் செய்தார். ஆனால் மருத்துவனோ அதைத் தேவர்களைத் தவம் செய்யவொட்டாதவாறு துன்புறுத்தப் பயன்படுத்தினான். இதை அறிந்த இறைவன் சினந்து நந்தியை அனுப்பினார். போர் தொடுக்கையில் மருத்துவன் மாயச் சூலத்தை அவர்மீது ஏவ, அச்சூலம் நந்தியின் உடலை ஒன்பது இடங்களில் துளைத்துவிட்டுப்போயிற்று. இஃதையறிந்து இறைவன் தாமே அகோரமூர்த்தியாக வடிவு கொண்டு வந்து அவனை அழித்தார் என்பது வரலாறு. அவ்வாறு அழித்தநாள் ஞாயிற்றக்கிழமை பூரநட்சத்திரம். (மாசி மகத்து மறுநாள்) இதனால் இன்றும் இத்திருக்கோயிலில் ஞாயிற்றக்கிழமைகளில் இரவு 10 மணிக்குமேல் (இரண்டாங்கால முடிவில்) அகோரமீர்த்திக்குச் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. திருவெண்காடு வருவோர், ஞாயிறு நாளாக அமைந்தால் அன்றிரவு தங்கி, ஆலயத்தில் இவ்வழிபாடு நடைபெறும் சரியான நேரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு கட்டாயம் இவ்வழிப்பாட்டைத் தரிசிக்கவேண்டும். இவ்வரலாற்றையட்டிச் சுவாமி சந்நிதிக்கு எதிரில் வெளியே உள்ள நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் இருப்பதை இன்றும் காணலாம்.

மூல அகோர மூர்த்தியின் பக்கத்தில் உற்சவ அகோர மூர்த்தி காட்சி தருகின்றார். அற்புதமான வேலைப்பாடு. காணக்காணத் தெவிடடவில்லை. திருவடியில் ஒருபுறம் மருத்துவன் இழிந்து தலைசாய்த்து விழும் அமைப்பும் மறுபுறம் நந்தியும் உள்ளது. காணத்தக்கது.

இவ்அகோர மூர்த்திக்கு இக்கோயிற் பெரவிழாவில் ஐந்தாம் நாள் அன்று சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு வீதிஉலா நிகழ்கிறது. இப்புறப்பாட்டின் போது (மாசிப்பூர அபிஷேகத்தின் போது) இம் மூர்த்திக்கு செய்யப்படும் சிறப்புக்கள் பலப்பல. ஆயிரம் புட்டிகள் பன்னீர் அபிஷேகம், எண்ணற்ற ரோஜா மாலைகள், புறப்பாட்டின் போது அடிக்கொரு பட்டு சார்த்தும் சிறப்பு முதலியனவாக எண்ணற்ற சிறப்புக்கள்.

நடராசசபை தில்லையைப்போலச் செப்பறையில் அமைந்துள்ளது. உள்ளே உள்ள ஸ்படிகலிங்கத்திற்குத் தில்லையப்போல் நாடொறும் பூசை நடைபெறுகிறது. சிதம்பர ரஹஸ்யமும் உள்ளது. பைரவரை யடுத்து, காசி துண்டீர விநாயகர், அஷ்டபுஜதுர்க்கைச் சந்நிதிகள் உள்ளன. துர்க்கை மேற்கு நோக்கியிருப்பது இங்கு விசேஷமானது. திருமணமாகாதோர் இச்சந்நிதியில் பிரார்த்தனை செய்து கொள்வது மரபாக இருந்து வருகின்றது.

வலம் முடித்துப்படிகளேறி முன் மண்டபம் அடைந்தால் நேரே மூலவர் காட்சி தருகிறார். உள்மண்டபத்தில் வலப்பால் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

மூலவர் சந்நிதி - சற்றுயர்ந்த பாணம். அழகான திருமேனி. வழிபடுவோர்க்கு வளமும் அமைதியும் நல்கும் சந்நிதானம். உட்புறச்சுவரில் தலப்பதிகக் கல்வெட்டுகள் உள்ளன. சைவ எல்லப்ப நாவலர் இவ்வூர்க்குத் தலபுராணம் பாடியுள்ளார். மாசிமகத்தில் பெருவிழா நடைபெறுகிறது. நாடொறும் ஆறுகால வழிபாடுகள் சுவேதாரண்யேசுவரருக்கு காமிகாமத்தின்படியும் அகோர மூர்த்திக்கு காரணாகமத்தின் படியும் இங்குள்ள நடராசப் பெருமானுக்கு மகுடாகமத்தின்படியும் பூசைகள் நடைபெறுகின்றன.

"நாதன் நம்மை ஆள்வான் என்ற நவின்றேத்திப்

பாதம் பன்னாள் பணியும் அடியார் தங்கண்மேல்

ஏதம் தீரஇருந்தான் வாழும் ஊர்போலும்

வேதத் தொலியால் கிளிசொற் பயிலும் வெண்காடே". (சம்பந்தர்)

"தூண்டுசுடர் மேனித்தூநீறாடிச்

சூலம் கையேந்தியோர் சுழல்வாய் நாகம்

பூண்டுபொறியர வங்காதிற்பெய்து

பொற்சடைகள் அவைதாழப் புரிவெண்ணூலர்

நீண்டு கிடத்திலங்கு திங்கள்சூடி

நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங்கொண்டார்

வேண்டு நடை நடக்கும் வெள்ளேறேறி

வெண்காடுமேவிய விகிர்தனாரே." (அப்பர்)

"காதலாலே கருதுதொண்டர் காரணத்தீராகி நின்றே

பூதம் பாடப் புரிந்து நட்டம் புவனியேத்த ஆடவல்லீர்

நீதியாக ஏழிலோசை நித்தராகிச் சித்தர்சூழ

வேதமோதித் திரிவதென்னே வேலைசூழ் வெண்காடனீரே." (சுந்தரர்)

அகோர மூர்த்தி துதி

"கருநிறமும் மணிமாலை புனையழகும்

வளையெயிறும் கவினைச் செய்ய

எரிசிகையும் நுதல்விழியும் நடைக்கோல

இணையடியும் இலகஎட்டுக்

கரநிலவ மணிபலகை வெண்டலை வாள்

கடிதுடியேர் சூலம்ஏற்று

வெருவ மருத்துவனையடர் அகோரசிவன்

துணைப்பதச்சீர் விளம்புவோமே".

(சைவ எல்லப்ப நாவலர் - தலபுராணம்)

(சலந்தரன் மகன் - மருத்துவன்)

-நல்லவர்கள்

கண்காட்டு நெற்றிக் கடவுளே யென்றுதொழ

வெண்காட்டின் மேவுகின்ற மெய்ப்பொருளே.

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்

திருவெண்காடு - அஞ்சல் - சீர்காழி வட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம் - 609 114.

 
 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருப்பல்லவனீச்சுரம் (   காவிரிப்பூம்பட்டினம்) - பூம்புகார்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  கீழைத்திருக்காட்டுப் பள்ளி (ஆரண்யேசுரர் கோயில்)
Next