திருமயேந்திரப் பள்ளி (மகேந்திரப்பள்ளி)

திருமுறைத்தலங்கள்

சோழ நாட்டு (வடகரை) த் தலம்

கோயில்

திருமயேந்திரப் பள்ளி ( மகேந்திரப்பள்ளி)

இன்று மக்கள் வழக்கில் மகேந்திரப்பள்ளி என்று வழங்குகிறது.

பேருந்துகளிலும் மகேந்திரப்பள்ளி என்ற பெயரே இடம் பெற்றுள்ளது.

பண்டைநாளில் (மன்னன் ஆண்ட பகுதி) இருந்த பெயர் கோயிலடிப்பாளையம் என்பது. ஞானசம்பந்தரின் பாடலில் மயேந்திரப்பள்ளி என்றே வருகிறது. இத்தலத்திற்கு 2 A.e. தொலைவில் கடல் உள்ளது.

சிதம்பரம் - சீர்காழிச் சாலையில் கொள்ளிடம் புதிய பாலத்தைத் தாண்டி, கொள்ளிடம் ஊரை அடைந்து மெயின்ரோடில், வழிகாட்டிப் பலகையுள்ள இடத்தில் அது காட்டும் பாதையில் இடப்புறமாக 8 A.e. செல்ல ஆச்சாள்புரம் வரும். இதைத் தாண்டி மேலும் 3 A.e. சென்று, நல்லூர் - முதலைமேடு தாண்டிச் செல்ல, மயேந்திரப்பள்ளியை அடையலாம். குறுகலான தார்ச்சாலை. கோயில்வரை வாகனம் இருப்பதால் அங்கங்கே நின்று கேட்டுச் செல்லுதல் நல்லது. ஊர்க்கோடியில் கோயில் உள்ளது.

தஞ்சையிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் மகேந்திரப்பள்ளிக்கு பேருந்து செல்கிறது.

சிதம்பரம், சீர்காழியிலிருந்து (ஆச்சாள்புரம் வழியாக) நகரப் பேருந்துகள் செல்கின்றன. இந்திரன், மயேந்திரன், சந்திரன் ஆகியோர் வழிபட்ட தலம்.

இறைவன் - திருமேனியழகர், சோமசுந்தரர்.

இறைவி - வடிவாம்பாள், வடிவாம்பிகை, வடிவம்மை.

தலமரம் - கண்டமரம், தாழை.

தீர்த்தம் - மயேந்திரதீர்த்தம். கோயில் எதிரில் உள்ளது. கரைகள் செம்மையாக இல்லை.

சம்பந்தர் பாடல் பெற்றது. சிறிய ஊர். பழமையான கோயில். கிழக்கு நோக்கிய வாயில். மூன்று நிலைகளையுடைய சிறிய ராஜகோபுரம். வெளிப் பிராகாரத்தில் விநாயகர், காசிவிசுவநாதர், திருமால் தேவியருடன், சிவலிங்கம், பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகள் உள்ளன.

வலம் முடித்து, முன்னுள்ள வெளவவால் நெத்தி மண்டபத்தையடைந்தால் வலப்புறம் அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். உள்ளே சென்றால் வலப்பால் நடராசசபை, சிவகாமியும் மாணிக்க வாசகரும் உடன் காட்சியளிக்கின்றனர். நேரே சிவலிங்கத் திருமேனி மூலவர் தரிசனம்.

ஆங்கிலேயர் ஆட்சியில், கிளைவ், இங்கு மன்னன் ஒருவன் ஆண்டு வந்த பகுதியைக் குண்டுவைத்துத் தகர்த்ததாகவும் அப்பகுதி இன்றும் தீவுக்கோட்டை என்று வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இவ்விடம் 1 A.e. தொலைவில் உள்ளது. ஒரு சில வீடுகள் உள்ள இங்குப் பழமையான கொடிக்கம்பம், கொடிமேடை முதலிய சின்னங்கள் உள்ளன. இங்கு மிக அழகான மூர்த்தத்தையுடைய விஜயகோதண்ட ராமசாமிப் பெருமான் கோயில் உள்ளது. இத் தீவுக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட நடராசத் திருமேனிதான் இக்கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலுக்கும், தீவுக்கோட்டை நடராசருக்கும் தனித்தனியே அரசால் மோகினிப் பணம் தரப்பட்டு வருகின்றது. இவ்வூரில் யாத்திரிகர்கள் தங்குவதற்கு எவ்வித வசதியும் இல்லை. குருக்கள் வீடு கோயிலுக்குப் பக்கத்தில் உள்ளது.

கோயிலில் நித்தியப்படி மட்டுமே நடைபெறுகின்றது. நாடொறும் நான்கு கால பூஜைகள். இத்தலத்திற்குப் பக்கத்தில் நல்லூர்ப்பெருமணம் உள்ளது. ஆண்டுதோறும் இன்றும் பங்குனிச் திங்களில் ஒரு வாரம் சூரியஒளி சுவாமி மீது படுகிறது. இதைச் சூரிய வழிபாடாகக் கொண்டாடுகின்றனர்.

'சந்திரன் கதிரவன் தகுபுகழ் அணனொடும்

இந்திரன் வழிபடஇருந்த எம் இறையவன்

மந்திர மறைவளர் மயேந்திரப் புள்ளியுள்

அந்தமில் அழகனை அடிபணிந்துய்ம் மினே.' (சம்பந்தர்)

"-சொல்லுந்

தயேந்திர ருள்ளத் தடம் போலிலங்கு

மயேந்திரப்பள்ளி இன்பவாழ்வே."

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. திருமேனியழகர் திருக்கோயில்

மகேந்திரப்பள்ளி - அஞ்சல் (வழி) ஆச்சாள்புரம்.

சீர்காழி வட்டம். நாகப்பட்டினம் மாவட்டம். 609 101.







 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருநல்லூர்ப் பெருமணம் (ஆச்சாள்புரம்)
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  தென்திருமுல்லை வாயில் (திருமுல்லைவாசல்)
Next