திருநெல்வாயில் அரத்துறை-திருவரத்துறை (திருவட்டுறை)

திருமுறைத்தலங்கள்
நடுநாட்டுத் தலம்

திருநெல்வாயில் அரத்துறை- திருவரத்துறை (திருவட்டுறை)

தற்போது திருவரத்துறை என்றும் திருவட்டுறை என்றும் வழங்குகின்றது.தொழுதூர் விருத்தாசலம் பேருந்துச் சாலையில் தொழுதூரிலிருந்து 20 A.e. தொலைவில் உள்ளது. சாலையில் 'கொடிகளம், என்னும் இடத்திலிருந்து பிரிந்து செல்லும் மண் சாலையில் சுமார் 1.A.I. சென்றால் இத்தலத்தையடையலாம். காரில் செல்வோர் கோயில் வரை செல்லலாம்.

நிவா நதியின் கரையில் உள்ள இத்தலத்தில்தான் திருஞான சம்பந்தருக்கு இறைவன் முத்துச் சிவிகையும் முத்துக் குடையும் சின்னங்களும் அருளினார். ஊர் - நெல்வாயில், கோயில் - அரத்துறை.

இறைவன் - ஆனந்தீஸ்வரர், தீர்த்தபுரிஸ்வரர், அரத்துறைநாதர்.
இறைவி - ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி.
தலமரம் - ஆலமரம்.
தீர்த்தம் - நிவாநதி.
மூவர் பாடல் பெற்ற தலம்.

வான்மீகிமுனிவர், அரவான் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது. முகப்பு வாயில் கடந்து உட்சென்றா ¢ வலப்பால் விநாயகர், சமயக்குரவர்கள் நால்வர், வான்மீகிமுனிவர். சப்த கன்னியர்கள், பூத, பவிஷ்ய, வர்த்தமான லிங்கங்கள், மகாவிஷ்ணு, ஜோதிலிங்கம், முதலிய சந்நிதிகள் உள்ளன. அடுத்து அண்ணாமலை, ஆதிசேஷன், வள்ளி தெய்வயானை சமேத முருகன், தண்டாயுதபாணி சந்நிதிகளையும் சேர சோழ பாண்டிய மன்னர்கள் பெயரில் உள்ள இலிங்க மூர்த்திகளையும் தரிசிக்கலாம். காசி விசுவநாதரும் விசாலாட்சியுடன் காட்சி தருகிறார். கஜலட்சமி, சந்தான குரவர்கள், பைரவர், சூரியசந்திரர் சந்நிதிகளும் அடுத்துள்ளன.

வெளிச் சுற்றில் தரிசித்துக்கொண்டு உள்ளே சென்றால் இடப்பால் நவக்கிரக சந்நிதி, சனிபகவானுக்குச் சந்நிதி உள்ளது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித்னியே கொடிமரமும் பலிபீடமும் நந்தியும் உள்ளன.

நிவா நதியில் வெள்ளப் பெருக்கெடுத்தபோது, அதனாற் சேத முண்டாகாதிருக்க நந்தி தலையைத் திரும்பிப் பார்க்க வெள்ளம் வடிந்ததாம்.

அதனால் நந்தியின் தலை சற்றுத் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. கோஷ்ட மூர்த்தங்களாக விநயாகர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா உள்ளனர். நடராசர் சிவகாமி தரிசனம், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், சண்டேஸ்வரர், பைரவர் மூர்த்தங்களைத் தரிசித்தவாறே சென்றால் மூலவரைத் தொழலாம்.

மூலவர் சுயம்பு. கிழக்கு நோக்கிய சந்நிதி. இத்தலத்திற்குத் 'தீர்த்தபுரி' என்ற பெயரும் இருப்பதால் இறைவன் தீர்த்தபுரீஸ்வரர் என்ற பெயரையும் பெறுகிறார்.

நாடொறும் நான்கு கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. தலபுராணம் ஏதுமில்லை.

"எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்றேத்திச்

சிந்தை செய்பவர்க் கல்லால் சென்று கைகூடுவ தன்றால்

கந்த மாமலர் உந்திக் கடும்புனல் நிவாமல்கு கரைமேல்

அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே

(சம்பந்தர்)

"புனல்ஒப்பானைப் பொருந்தலர் தம்மையே

மினலொப்பானை விண்ணோரும் அறிகிலார்

அனலொப்பானை அரத்துறை மேவிய

கனலொப்பானைக் கண்டீர்நாம் தொழுவதே."

(அப்பர்)

"கல்வாயகிலுங் கதிர்மாமணியுங்

கலந்துந் திவருந்நிவாவின் கரைமேல்

நெல்வாயில் அரத்துறை நீடுறையுந்

நிலவெண்மதி சூடிய நின்மலனே

நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்

நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்

சொல்லாய்க் கழிகின்றது அறிந்தடியேன்

தொடர்ந்தேன் உய்யப் போவதோர்சூழல் சொல்லே"

(சுந்தரர்)

'சோதிமுத்தின் சிவிகைசூழ் வந்துபார்

மீதுதாழ்ந்து வெண்ணீற் றொளிபோற்றி நின்று

ஆதியார் அருளாதலின் அஞ்செழுத்து

ஓதி ஏறினார் உய்ய உலகெலாம்"

(திருஞானபெரிய.புரா.)

தீங்காற் புறதெய்வத் தீங்குழியில் வீழ்ந்தவரைத்

தாங்கா அரத்துறையில் தாணுவே."

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அ.மி. ஆனந்தீஸ்வரர் (அரத்துறைநாதர்) திருக்கோயில்

திருவட்டுறை - அஞ்சல்

திட்டக்குடி வட்டம் - கடலூர் மாவட்டம் - 606 111

(வழி) விருத்தாசலம் R.M.S.


Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருஅரசிலி - ஓழிந்தியாப்பட்டு
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  பெண்ணாகடம் (பெண்ணாடம்)
Next