வெஞ்சமாக்கூடல்

திருமுறைத்தலங்கள்

கொங்கு நாட்டுத் தலம்

வெஞ்சமாக்கூடல்

வெஞ்சமாங்கூடலூர்

மக்கள் வழக்கில் வெஞ்சமாங்கூடல், வெஞ்சமாங்கூடலூர் என வழங்குகிறது.

1) கரூர் - அரவக்குறிச்சி சாலையில் 13 கி.மீ.சென்று, சீத்தப்பட்டி (அ) ஆறுரோடு பிரிவில் 8 A.e. செல்ல வேண்டும்.

2) கரூர் -ஆற்றுமேடு நகரப் பேருந்து வெஞ்சமாங்கூடல் வழியாக செல்கிறது.

3) இதுதவிர, கரூரிலிருந்து திண்டுகல்லுக்குப் போகும் இருபேருந்துகளும் இந்தக் கிராமம் வழியாகப் போகின்றன. தனிப் பேருந்தில், காரில், வேனில், செல்வோர் கோயில் வரை செல்லலாம்.

வேடசந்தூர் பக்கத்திலுள்ள அணைக்கட்டு உடைந்து, குடகனாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்ததனால் இக்கோயில் கருங்கற்கள் 2 A.e. தூரம் அடித்துச் செல்லப்பட்டன என்பதிலிருந்தே வெள்ளப் பெருக்கின் நிலைமையை உணரலாம். ஊரும் அழிந்தது. இந்நிலை நேர்ந்த பல்லாண்டுகட்குப் பின்பு, 5-582ல் ஈரோடு அருள் நெறித் திருக்கூட்டத்தார் இக்கோயில் திருப்பணியைத் தொடங்கி, பெருமுயற்சி செய்து, பல லட்சங்கள் திரட்டி, திருக்கோயிலைப் புதியதாக எடுப்பித்து, 26-2-1986 அன்று (குரோதன ஆண்டு மாசி 14 - புதன்கிழமை) மகா கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்துள்ளனர் - பெருஞ்சாதனை.

இத்தலம், வெஞ்சமன் என்னும் வேட்டுவ மன்னன் ஆண்டதாலும், அமராவதியின் கிளை நதியான சிற்றாறு, அமராவதியுடன் கூடுமிடத்தில் உள்ளதாலும் (கூடல்) வெங்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது. கோயிலுக்குப் பக்கத்தில் ஓடும் ஆறு, குடகனாறு, குழகனாறு, குடவன் ஆறு எனப்பலவாறு அழைக்கப்படுகிறது. இத்தலத்துள்ள இறைவன் ஒரு சமயம், உமையே ஒரு முதிர்ந்த கிழவியாக வடிவு கொண்டு வீற்றிருக்க, சுந்தரர் பாட்டிற்கு மகிழ்ந்து தன் பிள்ளைகளை அக்கிழவியிடம் ஈடு காட்டிப் பொன் வாங்கிச் சுந்தரருக்கு அளித்தார் என்ற செய்தியைக் கொங்கு மண்டலச்சதகச் செய்யுள் தெரிவிக்கிறது.

இச்செய்தி பெரிய புராணத்துள் இல்லை. அச் சதகப் பாடல் வருமாறு-

"கிழவேதி வடிவாகி விருத்தையைக் கிட்டி என்றன்

அழகாகும் மக்கள் அடகு கொண்டு அம்பொன் அருளாதி என்று

எழுகாதலால் தமிழ்பாடிய சுந்தரர்க்கு ஈந்தஒரு

மழுவேந்திய விகிர்தேசுவரன் வாழ் கொங்கு மண்டலமே."


இறைவன் - கல்யாண விகிர்தேஸ்வரர், விகிர்தநாதேஸ்வரர்.


இறைவி - மதுரபாஷிணி, பண்ணேர்மொழியம்மை, விகிர்தநாயகி.


தீர்த்தம் - குடகனாறு.


சுந்தரர் பாடல் பெற்ற தலம்.


அருணகிரிநாதரின் திருப்புகழும் உள்ள தலம். இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறது. விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. உள்ளே நுழைந்ததும் வலப்பால் சூரியனும் இடப்பால் சந்திரனும் உளர். வெளிச்சுற்றில் பஞ்சலிங்கங்கள் உள்ளன. வள்ளி தெய்வயானை உடனாக ஆறுமகப் பெருமாள் மயிலின் மீது காலை வைத்துன்றிய நிலையில் காட்சிதருவது தரிசிக்கத்தக்கது.

நவக்கிரகம், பைரவர், நம்பியாண்டார் நம்பிகள், சேக்கிழார், அறுபத்துமூவர் சந்நிதிகள் உள்ளன. நாயன்மார்களின் மூர்த்தங்களின் கீழ், நாடு, மரபு, காலம், திருநட்சத்திரம் முதலிய விவரங்களும் எழுதப்பட்டுள்ளன.

உற்சவ மூர்த்தங்களுள், சோமாஸ்கந்தர், பல்லக்குச் சொக்கர், சுப்பிரமணியர், முதலியவை தரிசிக்கத்தக்கன. நடராஜதரிசனம் நம்மை மகிழ்விக்க, மேலே சென்றால் மூலவர் சந்நிதி வாயிற் கதவுகளில் கொங்குநாட்டுத் தலங்கள் ஏழிலும் உள்ள மூர்த்தங்கள் செதுக்கப்பட்டுள்ளது. மிகச் சிறப்பாகவுள்ளது. கோஷ்டமூர்த்தங்களகா விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை, உள்ளனர். அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலம். நாடொறும் இரண்டு கால வழிபாடுகள் நடைபெறுகின்றன.

இத்திருக்கோயிலைப் புதியதாக நிர்மாணித்த பெரும்பணிக்குத் துணையான பெருமக்கள் தவத்திரு. சுந்தரசுவாமிகள், திருமுருக கிருபானந்தவாரியார், பொள்ளாச்சி தொழிலதிபர் திரு. என். மகாலிங்கம், ஈரோடு திரு எம். அழகப்பன், திரு. ஏ.வி. இராமச்சந்திர செட்டியார், மற்றும் உள்ளோராவார். மகாகும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம் தொண்டை மண்டலாதீன குருமகாசந்நிதிதானம் 230வது பட்டம், ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிராகாசதேசிக பரமாசாரிய சுவாமிகள், கௌமார மடாலயம் தவத்திரு சுந்தர சுவாமிகள் பேரூர் தவத்திரு.சாந்தலிங்க அடிகளார், தவத்திரு. குன்றக்குடி அடிகளார், திருமுருக கிருபானந்த வாரியார், நெரூர் சூவமிகள் முதலிய பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அருகில் உள்ள திருமுறைத் தலம் 'கருவூர் ஆநிலை' - கரூர் ஆகும். கல்வெட்டில் இறைவன் பெயர் 'வெஞ்சமாக்கூடல் விகிர்தர்' என்றும் இறைவி பெயர் 'பனிமொழியார்' என்றும் குறிக்கப்பட்டுள்ளது.


"பண்ணேர் மொழியாளை யர் பங்குடையாய்

படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய்

தண்ணார் அகிலுந்நல சாமரையும் மலைத்

தெற்று சிற்றாறதன் கீழ் கரைமேல்

மண்ணார் முழவுங் குழலுமியம்ப

மடவார் நடமாடு மணியரங்கில்

விண்ணார் மதிதோய் வெஞ்சமாக்கூடல்

விகிர்தா அடியேனையும் வேண்டுதியே". (சுந்தரர்)


திருப்புகழ்

வண்டுபோற் சாரத் தருள்தேடி

மந்திபோற் காலப் பிணிசாடிச்

செண்டுபோற் பாசத் துடனாடிச்

சிந்தைமாய்த்தேசித் தருள்வாயே

தொண்டராற் காணப் பெறுவோனே

துங்கவேற் காணத் துறைவோனே

மிண்டராற் காணக் கிடையானே

வெஞ்சமாக் கூடற் பெருமாளே.


-"தங்குமன

வஞ்சமாக்கூடல் வரையாதவர்சூழும்

வெஞ்ச மாக்கூடல் விரிசுடரே". (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. விகிர்தநாதேஸ்வரர் திருக்கோயில்

வெஞ்சமாங்கூடலூர் - அஞ்சல் - 639 109

(வழி) மூலப்பட்டி - அரவக்குறிச்சி வட்டம் - கரூர் மாவட்டம்.


Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is கொடிமாடச் செங்குன்றூர்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருப்பாண்டிக்கொடுமுடி
Next