திருப்புனவாயில்

திருமுறைத்தலங்கள்

பாண்டிய நாட்டுத் தலம்

திருப்புனவாயில்

திருப்புனவாசல்

மக்கள் வழக்கில் திருப்புனவாசல் என்றாகியுள்ளது. அறந்தாங்கி ஆவுடையார் கோயில், திருவாடானை முதலிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்கு வரலாம். விருத்தபதி, விருத்தகாசி, இந்திரபுரம், பிரமபுரம், வச்சிரவனம், கைவல்யஞானபுரம், தட்சிணசிதம்பரம் என்பன வேறு பெயர்கள். ஊர்ப்பக்கத்தில் பாம்பாறு (சர்ப்பநதி) ஒடுகிறது. பக்கத்தில் கடல் - பாண்டிய நாட்டுத் தலங்கள் 14ம் இங்கிருப்பதாக ஐதீகம். இதனால் கோயிலுள் 14 சிவலிங்கங்கள் உள்ளன. வேதங்கள் வழிபட்ட தலம்.


இறைவன் - விருத்தபுரீஸ்வரர், பழம்பதிநாதர், மகாலிங்கேஸ்வரர்.


இறைவி - பிருகந்நாயகி, பெரியநாயகி.


தலமரம் - 1) சதுரக்கள்ளி 2) குருந்து 3) மகிழம் 4) புன்னை.


தீர்த்தம் - இந்திரதீர்த்தம் முதலாகவுள்ள பத்து தீர்த்தங்கள்.


சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்றது.

மிகப்பெரிய கோயில். ஊர்நடுவில் கிழக்கு நோக்கியுள்ளது. நீண்ட மதில்கள் கிழக்கிலும் மேற்கிலும் வாயில்கள். கிழக்கில் இருவாயில்கள். சுவாமி அம்பாள் சந்நிதிகளுக்கு நேராகவுள்ளன. சுவாமி கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. அம்பாள் எதிரில் உள்ள மொட்டைக் கோபுர வாயிலில் குடவறையில் காளி எழுந்தருளியிருப்பதால், அத்தெய்வம் மிகச்சக்தி வாய்ந்தாகையால் இக்கதவு எப்போதும் மூடப்பட்டிருக்கிறது.

கோயிலுக்கு வெளியில் உள்ள தீர்த்தம் - பிரமதீர்த்தம். அழகான படிகளை நாற்புறமும் பெற்றுள்ளது. உள்ளே முதலாம், ஏழாம் திருநாள் மண்டபங்கள் உள்ளன.கோபுரத்திற்கு வெளியில் தென்பால் வல்லப கணேசர் சந்நிதியும், வடபால் தண்டபாணி சந்நிதியும் இருக்கின்றன. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும் வலப்பக்கம் சூரிய, பைரவர் சந்நிதிகளும், இடப்பால் சந்திரன் சந்நிதியும் மேற்கு நோக்கியுள்ளன. சபாமண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபங்கள் உள்ளன.

மூலவர் சிவலிங்கத் திருமேனி அழகானது. மிகப் பெரியது. தஞ்சை பிரஹதீஸ்வரருக்கு அடுத்தபடி பெரிதாக உள்ள இலிங்க மூர்த்தி இதுவாகும். அதனையட்டி 'மூன்றுமுழமும் ஒருசுற்று முப்பது முழமும் ஒருசுற்று' என்ற பழமொழி வழங்குகிறது. (சுவாமிக்கு 3 முழம், ஆவுடையாருக்கு 30 முழம் ஆடைவேண்டும்) . உயரம் 9 அடி. சுற்றளவு 81/2 அடி. ஆவுடையார் சுற்றளவு 33 அடி. கோமுகி 31/2 அடி நீளம். நந்தியும் பெரியதே. மகாமண்டபத்தில் வடாபல் நடராஜர் உற்சவ மூர்த்தியும், தென்பால் சோமாஸ்கந்தர், நால்வர் சேக்கிழார் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித்தனி கோயில்கள். ஆலயத்தில் ஐந்து விநாயகர்கள், சதுர்முகலிங்கம், கபிலபுத்திரர் ஒன்பதின்மர் ஆகியோரின் உருவங்கள் உள. இந்திரன் வழிபட்ட விநாயகர் "ஆகண்டல விநாயகர்" தனியே உள்ளார். (ஆகண்டலன் = இந்திரன்) கோஷ்ட மூர்த்தமாக நிருத்த கணபதியும் தட்சிணாமூர்த்தியும் உளர்.

மேற்கு பிராகாரத்தில் குருந்த மரமுள்ளது. மதிலையட்டி அகத்தியலிங்கம் (முனீசுவரர்) உள்ளது. இவருக்குத் திங்கட்கிழமைகளில் மட்டமே பூஜை. கோஷ்ட மூர்த்தமாகப் பொதுவாக ஆலயங்களில் (கர்ப்பக்கிருக்ப் பின்சுவரில்) இடம் பெறும் இலிங்கோற்பவருக்குப் பதிலாக இங்கு திரமாலும் அநுமனும் காட்சி தருகின்றனர். நான்முகன் சந்நிதியும் உள்ளது. அம்பாள் ஆலயம் தனிக்கோயில்.

இத்தலத்தல் திருமால், பிரமன், இந்திரன், சூரியசந்திரர், எமன், ஐராவதம், வசிட்டர் முதலிய முனிவர்கள், அகத்தியர், சௌந்திரபாண்டியன் முதலியோர் வழிபட்டுப் பேறடைந்துள்ளனர். சக்தி வாய்ந்த குடவறைக் காளியை யட்டி இப்பகுதியில் பெரும்பாலோர்க்கு காளியப்பன், காளியம்மால் எனும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. இத்திருக்கோயிலில் உள்ள நடராஜ சபை சிவஞான சபை எனப்படுகிறது.

தீர்த்தங்களின் பெயர்களும் இருக்குமிடங்களும்-

1) இந்திரதீர்த்தம் - கோயில் சந்நிதிக்கு எதிரில் சற்று தொலைவில்

2) பிரம தீர்த்தம் - கோபுரவாயிலுக்கு வெளியில் தென்பால்

3) சக்கர தீர்த்தம் - தெற்கு மேற்கு வீதிகள் கூடுமிடம்.

4) சூரிய தீர்த்தம் - அம்பாள் சந்நிதிக் கிழக்கில்

5) இலக்குமி தீர்த்தம் - சூரிய தீர்த்தத்திற்கு மேற்கில்

6) சந்திர தீர்த்தம் - பிரமதீர்த்தத்திற்கு கிழக்கில்

7) பாம்பாறு - கோயிலுக்குத் தென்பால் ஓடம் ஆறு (நாகநதி, அரவநதி, சர்ப்பாறு)

8) வருணதீர்த்தம் - ஊருக்குப் பக்கத்திலுள்ள "தீர்த்தாண்ட தானம்" என்னும் ஊருக்கருகிலுள்ள கடல்.

9) கல்யாண தீர்த்தம் - ஊருக்குச் சற்றுத்தூரத்தில் உள்ள கல்யாணபுரத்தில் உள்ளது.

10) சிவகங்கைத் தீர்த்தம் - தெற்கு, கீழவீதிகள் கூடுமிடம்.


தலமரங்களுள் -1) புன்னை, மகிழ், குருந்து ஆகியவை கோயிலுக்குள்ளும்,

2) சதுரக்கள்ளி குடவறைக்காளியின் சந்நிதியின் பக்கத்திலும் உள்ளன. அம்பாளுக்கு அழகிய சிறியதேர் உள்ளது.

இத்தலபுராணம் திருவாரூர் தியாகராஜ கவிராயரால் பாடப்பட்டுள்ளது. பாண்டிய மன்னர்களின் காலத்திய கல்வெட்டுக்கள் ஐந்து இத்தலத்தில் கண்டெடுக்ப்பட்டுப் படியெடுக்கப்பட்டுள்ளன. நித்திய பூஜைகளும் உற்சவங்களும் முறையாக நடைபெறுகின்றன. இறைவனைக் கல்வெட்டுச் செய்தி "திருப்புனவாசலுடைய நாயனார்" என்ற பெயரால் குறிக்கின்றது. 5.9.1998ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.


'மின்னியல் செஞ்சட வெண்பிறையன் விரிநூலினன்

பன்னிய நான்மறை பாடியாடிப் பல வூர்கள் போய்

அன்னம் அன்னந் நடை யாளோடம் அமரும் இடம்

புன்னை நன்மாமலர் பொன்னுதிர்க்கும் புனவாயிலே.' (சம்பந்தர்)


"சித்த c நினை என்னொடு சூளறும் வைகலும்

மத்த யானையின் ஈர்உரி போர்த்த மணாளன் ஊர்

பத்தர் தாம் பலர் பாடி நின்றாடும் பழம்பதி

பொத்திலாந்தைகள் பாட்டறாப் புனவாயிலே (சுந்தரர்)


"அத்தனே போற்றி அகில காரணமாம்

அம்பிகை பாகனே போற்றி

முத்தனே போற்றி ஐந்தொழிலினையும்

முடித்திடு மூலமே போற்றி

நித்தனே போற்றி அறிவினுக்கறிவாய்

நிறைந்தருள் நிமலனே போற்றி

மத்தனே போற்றி வச்சிர வனத்தின்

வாழுமா இலிங்கமே போற்றி." (தலபுரணாம்)


"நயந்தரு பரையாய் ஆதியாய் இச்சை

ஞானமாய்க் கிரியையாய் நம்பற்

கியங்குறுமேனி யணி படைக் கலமற்

றெவையுமாய் மூவகை யாகத்

தயங்கு மான் மாவின் வாழ்க்கைமுன்முத்தி

தமக்குமோர் காரணமாகி

வயங்குறு புனவைப் பெரியநாயகி நின்

மலரடித் துணை மனத் துணையே." (தலபுராணம்)


'கார் கொண்ட பைங்குழற் கணை கொண்ட துணைவிழிக்

கமலை பணி விமலை யம்பொன்

வார் கொண்ட கும்பமுலை மலைவல்லி படர்பவன

வரைதந்த தந்தி வதனன்

சீர்கொண்ட தேவர்பணி மூவரும் பணிவிடைகள்

செய்யவரு உய்ய புகழ்சேர்

பார்கொண்ட தென்புனவை ஆகண்டலப்பிள்ளை

பாதமுடி மீது புனைவாம்' (தலபுராணம்)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில்.

திருப்புனவாசல் - அஞ்சல் 614629.

(வழி) பொன் பேத்தி

ஆவுடையார் கோயில் - வட்டம்

புதுக்கோட்டை மாவட்டம்.





 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருப்புத்துழர்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  இராமேஸ்வரம்
Next