கொடுங்குன்றம்

திருமுறைத்தலங்கள்

பாண்டிய நாட்டுத் தலம்

கொடுங்குன்றம்

பிரான்மலை

தற்போது மக்கள் வழக்கில் 'பிரான்மலை' என்று வழங்கப்படுகிறது. மதுரையில் உள்ள அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டுப் பொன்னமரவாதி செல்லும் பேருந்துகள் பிரான்மலை வழியாகச் செல்கின்றன. மதுரையிலிருந்து சிங்கம்புணரி, மேலூர் ஆகிய ஊர்களுக்குச் சென்றால் அங்கிருந்து பிரான்மலைக்குப் பேருந்துகள் உள்ளன. மதுரையிலிருந்து சிங்கம்புணரி சென்றால் அங்கிருந்து பிரான் மலைக்கு அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன.

சம்பந்தர் பாடல் பெற்ற தலம்.

பிரான் மலை - மலையின் சரிவில் கோயில் உள்ளது. கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள பெரிய குளம் "அடையாளஞ்சான் குளம்" என்று கொச்சையாக வழங்கப்படுகிறது. கோயிலின் முன் மண்டபம் உள்ளது. தெற்கு நோக்கிய நுழைவு வாயிலின் உள் புகுந்து படிக்கட்டுகள் ஏறிக் கோயிலை அடையவேண்டும். வலம்புரி விநாயகரைத் தரிசித்து உட்சென்றால் நடராஜ மண்டபம் உள்ளது.


இறைவன் - உமாமகேஸ்ரர், மங்கைபாகர்.


இறைவி - தேனாம்பிகை, தேனாம்பாள்.


மேலேயுள்ள மூலவர் உருவங்கள் கல்யாண கோலத்தில் உள்ளன. இவை குகையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. எதிரில் சிறிய சிவலிங்கம் உள்ளது. இதை 'உடையவர்' என்றழைக்கின்றனர். பெருமானைத் தரிசித்து வெளி வந்து கீழிறங்கின் வலப்பால் தனியே பைரவர் சந்நிதி உள்ளது. துவாரபாலகர்கள் இருபுறமும், மூலவரான பைரவர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். உற்சவ (பைரவர்) த் திருமேனியும் உள்ளது. விசுவநாதர் விசாலாட்சி சந்நிதி உள்ளன. பைரவர்கோயிலை வலமாக வந்து, மலைக்கற்கள் மீதேதறி வெளி வலமாக வரலாம்.

கீழிறங்கி வரும்போது வலப்பால் 'கடோரகிரீஸ்வரர்' சந்நிதி உள்ளது.


இறைவன் - கொடுங்குன்றநாதர், கடோரகிரீஸ்வரர்.


இறைவி - குயிலமுதநாயகி, அமிர்தேஸ்வரி.


கிழக்கு நோக்கிய சந்நிதி. பாடல் பெற்ற சந்நிதி இதுவே.

கடோரகிரீஸ்வரர் மூலவர் - மிகச் சிறிய லிங்கம். வலமாக வரும்போது அறுபத்துமூவர் மூலமூர்த்தங்களும், விநாயகர், அம்மையப்பர், சந்நிதிகளும் உள்ளன. அம்பாள் சந்நிதி - நின்றகோலம், நவக்கிரக சந்நிதிகளில் அனைத்தும் அமர்ந்த நிலையில் உள்ளன. கோயில் மண்டபங்கள் முழுவதும் நன்கு கட்டமைந்துள்ளன.

இக்கோயிலில் மேற்புறம், நடுப்புறம், இடப்புறம் ஆகிய மூன்று அமைப்புக்கள் சொர்க்கம், அந்தரம், பூமி என்றழைக்கப்படுகின்றன சொர்க்கத்தில் மங்கைபாகரும், அந்தரத்தில் பைரவரும், பூமியில் கடோரகிரீஸ்வரரும் எழுந்தருளியுள்ளனர். முறையாக பூஜைகள் நைடெபறுகின்றன. மேலே காரணாகம முறையிலும் கீழே காமிகாகம முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன.

இக்கோயிலுக்குரிய தீர்த்தம் - தேனாழி தீர்த்தம் - கோயிலுள்ளே உள்ளது. தலமரமாக இரண்டு மரங்கள் சொல்லப்படுகின்றன. 1) உறங்காப்புளி. இது கோயிலுள் உள்ள தீர்த்தத்தின் கரையில் உள்ளது. 2) பெயரில்லா மரம், இம்மரம் மலைமீது சுவாமி (மங்கை பாகர்) சந்நிதிக்குப் பக்கத்தில் மலைக்கற்களின் இடுக்கில் உள்ளது. இதற்குப் பெயர் தெரியவில்லை. இதுகாறும் எவராலும் பெயர் தெரிந்து சொல்லப்படாமையால் இதைப் 'பெயரில்லாமரம்' என்றே அழைக்கின்றனர்.

இத்திருக்கோயில் குன்றக்குடி (திருவண்ணாமலை) ஆதீனத்தின் ஆளுகைக்கு உட்பட்டதாகும். இப்பதி பாரிவள்ளலின் பறம்பு மலையாகும். சித்திரைத் திங்களில் நடைபெறும் பெருவிழாவில் ஏழாம் திருவிழாவன்று 'பாரிவிழா' மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது.


"கைம்மா மதகரியின்னினமிடியின் குரலதிரக்

கொய்ம்மா மலர்ச்சோலைபுக மண்டுங் கொடுங்குன்றம்

அம்மானெனவுள்கித் தொழுவார்கட்கருள் செய்யும்

பெம்மானவனிமையோர் தொழமேவும் பெரு நகரே." (சம்பந்தர்)


-"பூமீதின்

நற்றவருங்கற்ற நவசித்தரும் வாழ்த்தி

உற்றகொடுங் குன்றத்தெம் ஊதியமே". (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. உமாமகேஸ்வரி திருக்கோயில்

பிரான்மலை - அஞ்சல் - 624 503.

பசும்பொன் சிவகங்கை மாவட்டம்.



 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருஏடகம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருப்புத்துழர்
Next