திருக்கோளிலி

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

திருக்கோளிலி

திருக்குவளை

இது மக்கள் வழக்கில் திருக்குவளை என்று வழங்கப்படுகிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் நெல்மலையை எடுத்துச் செல்ல ஆள்வேண்டிப் பாடிய சிறப்புக்கு உரியதாய் விளங்குவது இத்தலம். திருவாரூர் எட்டிக்குடி சாலையில் எட்டிக்குடிக்கு முன்னால் உள்ள தலம். திருவாரூரிலிருந்து 19 A.e. தொலைவில் உள்ளது. திருவாரூரில் இருந்து அடிக்கடி பேருந்து உள்ளது. நேரே செல்லாம்.

திருவாரூருக்கு அடுத்தபடியாக தியாகேசப் பெருமான் இத்தலத்தில் சிறந்த விளங்குகிறார். இந்தத் தேவஸ்தானம் ஸ்ரீ தியாகராஜ சுவாமி தேவஸ்தானம் என்று வழங்குகிறது. சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. (அவனி விடங்கத்தலம், பிருடங்கநடனம்) பிரமன் வழிபட்ட தலம். அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது. பகாசுரனைக் கொன்றதனால் உண்டான பாவத்தை (பிரமகத்தித்தோஷம்) வீமன் இங்குப் போக்கிக் கொண்டான் என்பது வரலாறு. முன்கோபுரத்தில் பகாசூரன் உருவமும் பிரமகத்தி உருவமும் உள்ளது.

இறைவன் - பிரமபுரீசுவரர், கோளிலிநாதர், கோளிலி நாதேஸ்வரர், (திருவாரூரில் பெருமான் புற்றிடங் கொண்டவராக விளங்குதல் போல இங்கு இறைவன்) வெண்மணலால் ஆன சிவமூர்த்தமாக காட்சி தருகிறார்.


இறைவன் - வண்டமர் பூங்குழலி.


இறைவி - பிரமதீர்த்தம். கோயிலுக்கு எதிரில் உள்ளது.


தலமரம் - 'தேற்றாமரம்'.


மூவர் பாடல் பெற்ற தலம்.

இத்தலத்திற்குப் பிரமதபோவனம், கதகாரண்யம் (தேற்றாமர வனம்.) புஷ்பவனம், தென்கயிலை எனப்பல பெயர்களுண்டு. நவக்கிரகங்கள் முதலியோர்க்கு உண்டாய குற்றங்களை நீக்கி அருள் புரிந்தமையால் கோளிலி என்று பெயர் பெற்றது. "கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமாள்" - ஞானசம்பந்தர் வாக்கு. இங்குள்ள தியாகராஜப் பெருமானின் பெயர் - ஊழிப்பரன், அவனிடங்கத் தியாகர். அம்பிகை - நீலோற்பலாம்பாள். விநாயகர் - தியாகவிநாயகர், முருகன் - சுந்தரவடிவேலர்.

இத்திருக்கோயில் ஊரின் மத்தியில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய சந்நிதி. அழகான ராஜகோபுரம். உள்ளே நுழைந்தால் வடபுறம் வசந்த மண்டபம். துவஜஸ்தம்பம் தாண்டி இரண்டாம் கோபுரத் திருவாயில். உள்பிராகாரத்திற்கு எதிரே சுவாமி சந்நிதி. தென்பால் தியாகேசர். எதிரே சுந்தரர் உற்சவமூர்த்தியாகப் பரவையாருடன் காட்சி தருகின்றார். பிராகாரவலம் வரும் போத தென் மேற்கில் தியாவிநாயகரும், அடுத்து விசுவநாதர் இலிங்கமூர்த்தமும், வாகன மண்டபமும், வரிசலாட்சி, இந்திரபுரீசர் முதலிய சந்நிதகளும் உள. முருகப்பெருமானுக்கு அழகான சந்நிதி வடபால் சொக்கலிங்கம், அண்ணாமலையார் இலிங்க வடிவங்கள், தொடர்ந்து நால்வர், மகாலட்சுமி மூர்த்திகள் உள. அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியது, தனிக்கோவிலாகவுள்ளது.

சபாநாதர் தரிசனம் அழகானது. நவக்கிரகங்கள் ஒருமுகமாகத் தென்திசையை நோக்கி விளங்குகின்றன. சுவாமி கர்ப்பக்கிருஹத்தில் வடபுறம் அர்த்தநாரீசுவரர், பிரம்மா, துர்க்கை, உமாமகேசுவரர் தென்புறம் தேவகோஷ்டங்களில் முறையே நடராஜர், நர்த்தணகணபதி, பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி மூர்த்தங்களும் உள்ளன. மேற்பால் சங்குசக்கரத்துடன் திருமால் உருவமுள்ளது. பிராகாரத்தின் கீழ்ப்புறம் சந்திர சூரியர் உருவங்களும் ,இரண்டாம் கோபுர தென்மதிலில் பஞ்சபாண்டவர் பூஜித்து வழிபடும் கோலமும், பிரமன் வழிபடுவதும் கல்லில் பொறிக்கபப்ட்டுள்ளன.

சுவாமி, அம்பாள் கோயில்களுக்கு நடுவில் அகத்தியர் பூஜித்த இலிங்கமுள்ளது. அது தனி கர்ப்பக்கிருக, அர்த்தமண்டபத்துடன் உள்ளது. சண்டீசர் சந்நிதியும் உளது. ஆலயத்திருப்பதிகங்கள் பொறிக்கப்பட்ட சலவைக்கற்கள் சுவாமி சந்நிதியில் பதிக்கப் பெற்றுள்ளன.

ஆலயத்திற்கு அண்மையில் சந்திரநதி கிழக்கு நோக்கி ஒடுகிறது. கோயிலுக்கு எதிரில் பிரமதீர்த்தமும், தென்புறம் இந்திரதீர்த்தமும், மேற்புறம் அகத்தியர் தீர்த்தமும் உள்ளன. அம்பாள் சந்நிதியில் கிணறு வடிவில் சத்திதீர்த்தம் உள்ளது. புனிதமான இந்நீரே அபிஷேகத்திற்குப் பயன்படுகிறது. ஆலயத்திற்குத் தென்மேற்கு மூலையில் சிவலோக விநாயகர் (ஹேமகாந்த மன்னனுக்குச் சிவலோகம் காட்டியவர்) சந்நதி உளது. இத்தலத்தில் பிரமன், திருமால், இந்திரன், அகத்தியர், முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், ஹேமகாந்த மன்னன் முதலிய பலர் வழிபட்டுப் பேறடைந்துள்ளனர்.

இத்தலத்தின் வடபால் அருகில் குண்டையூரும் வலிவலமும், தென்பால் முருகன் தலமான எட்டுக்குடியும், மேற்கில் கச்சனமும், கிழக்கில் சந்திரதீர்த்தம் கடலொடு சங்கமமாகுமிடமான காமேசுரமும் உள்ளன. இது நீராடும் துறையாக விளங்குகிறது. தை, ஆடி, மஹாளய பட்ச அமாவாசைகளில் மக்கள் இத்துறையில் நீராடுகின்றனர். இங்கு நடைபெறும் முக்கிய விழாக்கள் - மாசிமகத்தில் 'நெல்அட்டிச்செல்லும் விழா, கார்த்திகை ஞாயிறு நாள்கள், முசுகுந்த அர்ச்சனை, வசந்த உற்சவம், தைப்பூசம் முதலியன. உற்சவ காலங்களில் - தியாகராஜத் தலங்களில் சந்திரசேகரர் உற்சவமூர்த்தியாகப் புறப்பாடாவது அறியத்தக்கது.

ஞானசம்பந்தர், தம் திருப்பதிகத்தில், கோள்களின் தீமையகலும் குறிப்பினையும், மார்க்கண்டேயன், சண்டீசர்க்கு அருள் செய்தது. பாண்டவர்கள் வழிபட்டது, பாணபத்திரர்க்கு, அருச்சுனனுக்கு, நமிநந்தியடிகளுக்கு, இராவணனுக்கு அருள்புரிந்தது போன்ற குறிப்புகள் உள்ளன. நாவுக்கரசரின் திருப்பதிகத்தில், (திருக்குறுந்தொகை) உபமன்யு முனிவர்க்கும் பாற்கடலீந்த வரலாறு சொல்லப்படுகிறது.

சுந்தரருக்கு நெல் அனுப்ப இயலாது வருந்திய குண்டையூர்க் கிழார்க்கு இறைவனருளால் நெல்மலை கிடைத்தது. அதை 'சுந்தரர் கோளிலியப்பரை வேண்டி ஆள்பெற்றுத் திரவாரூருக்கு கொணர்வித்தார் என்ற செய்திக் குறிப்புடையது' நீள நினைந்தடியேன் எனும் சுந்தரர் பதிகம். தியாகராஜர் உலா உள்ளது. இயற்றியவர் பெயர் தெரியவில்லை. இக்கோயிலில் 19 கல்வெட்டுகள் - சோழர், பாண்டியர் காலத்தியவை, கண்டெடக்கப்பட்டுள்ளன. இதில் 'திருக்கோளிலி உடைய நாயானர்' என்றும், தியாகேசர் 'அவனிவிடங்கத் தியாகர்' என்றும் குறிக்கப்படுகிறார். இக்கோவிலின் வடக்குவீதி 'திருமறைக்காடன் திருவீதி' எனப்படுகிறது.

இத்திருக்கோயில் தருமையாதீனத்தின் அருளாட்சிக்குட்பட் திருக்கோயிலாகும். நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது. சுவாமி அம்பாளுக்கு ஏராளமான ஆபரணங்களும் தியாகராஜவுக்கு வெள்ளி சிம்மாசனமும் செய்யப்பட்டுள்ளது. 1999 ஜனவரியில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.


"நாளாய போகாமே நஞ்சணியும் கண்டனக்கே

ஆளாய அன்பு செய்வோ மடநெஞ்சே அரன்நாமம்

கேளாய நம் கிளை கிளைக்கும் கேடுபடாத் திறமருளிக்

கோளாய நீக்குமவன் கோளிலி யெம்பெருமானே." (சம்பந்தர்)


"ஆவின் பால்கண்டள விலருந்தவப்

பாலன் வேண்டலும் செல்லென்று பாற்கடல்

கூவினான் குளிரும் பொழிற் கோளிலி

மேவினானைத் தொழவினை வீடுமே." (அப்பர்)


"நீளநினைந்தடியேன் உமைநித்தலும் கைதொழுவேன்

வாளன கண்மடவாள் அவள் வாடிவருந்தாமே

கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்

ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே." (சுந்தரர்)


'கோளிலியப்பர் குணமூன்று டையார் தம்

தோளிலுலாமாலை சூட்டுவதற்கு - வாளவுணன்

கற்பக வேல் தொட்ட கடவுட்கு முன்வந்த

கற்பகத்தின் பொற்கழல்கள் காப்பு."

(திருக்குவளை தியாகராஜசுவாமி உலா - விநாயகவணக்கம்)


-"நெற்சுமக்க

ஆளிலை என்று ஆரூரனார் துதிக்கத் தந்தருளுங்

கோளிலியின் அன்பர் குலங்கொள் உவப்பே". (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. கோளிலி நாதேஸ்வரர் திருக்கோயில்

திருக்குவளை - அஞ்ல் 610 204

திருவாரூர் வட்டம் - மாவட்டம்.















Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is கைச்சினம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருவாய்மூர்
Next