இடும்பாவனம்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

இடும்பாவனம்

1) முத்துப்பேட்டை - வேதாரணய்ம் பேருந்துச் சாலையில் உள்ள தலம்.

2) திருத்துறைப்பூண்டியிலிருந்து - தொண்டியக்காடு செல்லும் டவுன்பஸ் ஏறி இத்தலத்திற்கு வரலாம்.

3) முத்துப்பேட்டையிலிருந்து வரவும் பேருந்து உள்ளது. கோயில் பேருந்துச் சாலையின் அருகில் உள்ளது.

இடும்பன் வழிபட்ட தலம். இடும்பனின் சகோதரி இடும்பையை வீமன் மணந்து கொண்டதால் வியாசமுனிவர் பாண்டவர்களைப் பார்த்து "இடும்பைக்கு அருள் செய்த இப்பதி இன்றுமுதல் இடும்பாவனம் என்று வழங்குவதாகுக" என்றமையால் இப்பதி .இடும்பாவனம் என்று பெயர் பெற்றது என்பது புராண வரலாறு. இடும்பனின் ஊர் இத்தலத்திற்குப் பக்கத்தில் உள்ள குன்றளூர் என்பர். அகத்தியருக்குத் திருமணக்கோலம் காட்டியருளிய தலம். சுவாமிக்குப் பின்னால் மணவாளக்கோலம் உள்ளது. வில்வவனம், சற்குணேச்சபுரம், மங்கலநாயகிபுரம், மணக்கோலநகர் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள். பிரமன், அகத்தியர், எமன், இராமர் ஆகியோர் வழிபட்டது.


இறைவன் - சற்குணேஸ்வரர், சற்குணநாதர், மணக்கோல நாதர், கல்யாணேஸ்வரர், இடும்பாவனேஸ்வரர்.


இறைவி - மங்களவல்லி, மங்களநாயகி, கல்யாணேஸ்வரி.


தலமரம் - வில்வம்.


தீர்த்தம் - பிரம திர்த்தம், அகத்தியதீர்த்தம், எமதீர்த்தம். (எதிரில் உள்ளது) .


தலவிநாயகர் - வெள்ளை விநாயகர்.


சம்பந்தர் பாடல் பெற்றது.

இத்தலம் பிதிர்முத்தித் தலங்களுள் ஒன்றாகும். ஆகவே பிதிர் வழிபாடுகளைச் செய்வதற்கு இத்தலம் மிகவும் விசேஷமானது. மூன்று நிலை ராஜகோபுரம். வாயிலில் விநாயகர், முருகன் காட்சியளிக்கின்றனர். எதிரில் குளம், கொடிமரம், நந்தி பலிபீடமுள்ளன. பிராகாரத்தில் சூரியன், அகத்தியர், இடும்பை, விநாயகர், சனீஸ்வரர், கஜலட்சுமி, முருகுன், பைரவர் சந்நிதிகள் உள்ளன. தலவிநாயகர் மகாமண்டபத்தில் காட்சி தருகிறார்.

அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி , லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். வைகாசியில் விழா நடைபெறுகிறது. அருகில் உள்ள தலம் கடிக்குளம். மராட்டிய மன்னர்கள் இக்கோயிலுக்கு அளவற்ற மான்யங்களை அளித்துள்ள செய்தியைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.


"நீறேறிய திருமேனியர் நிலவும் உலகெல்லாம்

பாரேறிய படுவெண்டலை கையிற் பலிகொள்ளா

கூறேறிய மடவாளடு பாகம் மகிழ்வெய்தி

ஏறேறிய இறைவர்க்கிடம் இடும்பாவனம் இதுவே". (சம்பந்தர்)


-பொங்குபவ

அல்லல் இடும்பாவ நத்தமட்டொளி செய்கின்ற திரு

மல்லலிடும் பாவனத்து மாட்சிமையே. (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. சற்குணேஸ்வரர் திருக்கோயில்

இடும்பாவனம் - அஞ்சல் - 614 735

திருவாரூர் மாவட்டம்.





Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is கடிக்குளம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருவுசாத்தானம்
Next