திருச்சேறை

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

திருச்சேறை

1) கும்பகோணத்திலிருந்து செல்லலாம். 15 A.e. தொலைவு திருவாரூரிலிருந்தும் வரலாம்.

2) கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்து உள்ளது.

இத்தலம் சைவம், வைணவம் ஆகிய இருசமயங்களின் சிறப்பும் வாய்ந்தது. இங்குள்ள சராநாதப் பெருமாள் கோயில் மங்களா சாசனம் பெற்றது. மார்க்கண்டேயர், தௌமியமுனிவர் வழிபட்டது.


இறைவன் - செந்நெறியப்பர், சாரபரமேஸ்வரர்.

இறைவி - ஞானவல்லி.

தலமரம் - மாவிலங்கை.

தீர்த்தம் - மார்க்கண்டேய தீர்த்தம்.

சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.

ஊர் பெரியது. செந்நெறியப்பர் கோயிலை மக்கள் வழக்கில் "உடையார் கோயில்" என்று அழைக்கின்றனர். வயல் சூழ்ந்த 'சேற்றூர்'. இச்சொல்மருவி "சேறை" ஆயிற்று. கிழக்கு நோக்கிய கோயில், எதிரில் ஞானதீர்த்ம் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்தால் கொடிமரம் நந்தி பலிபீடங்கள் உள. இரண்டாம் கோபுரம் மூன்று நிலைகளையுடையது. உள்ளே விநாயகர் சந்நிதி, மார்க்கண்டேயர் வழிபட்ட அமுதகடேஸ்வர லிங்கம், அம்பாள் சந்நிதி, சப்தமாதர்கள், நால்வர், முருகன், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி சந்நிதிகளும் உள்ளன. நடராஜ சபை உள்ளது. கடன் தொல்லையிலிருந்து வழிபடுவோரை விடுபடச் செய்யும் "ரிண விமோசன லிங்கேஸ்வரர்" சந்நிதி விசேஷமானது. பைரவரி சிறந்த பிரார்த்தனாமூர்த்தி.

சுவாமி - மூலத்திருமேனி, பெரியபாணம். அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியது. அருகிலுள்ள தலங்கள் அரிசிற்கரைப்புத்தூர், திருநறையூர் குடவாசல் முதலியன.


"முறியுறு நிறமல்கு முகிழ்மலை மலைமகள் வெருவமுன்

வெறியுறு மதகரியதள் படவுரிசெய்த விறலினர்

நறியுறும் இதழியின் மலரொடு நதிமதி நகுதலை

செறியுறு சடைமுடி அடிகள்தம் வளநகர் சேறையே." (சம்பந்தர்)


"நிறைத்த மாமணலைக் கூப்பி நேசமோடு ஆவின்பாலைக்

கறந்த கொண்டாட்டக் கண்டு கறுத்த தன் தாதைதாளை

எறித்த மாணிக்கு அப்போதே எழில்கொள் சண்டீசன் என்னச்

சிறந்தபேர் அளித்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே." (அப்பர்)

-"மடவாட்கோர்

கூறை உவந்தளித்தகோவே யென்றன்பர் தொழச்

சேறை உவந்திரந்த சிற்பரமே" (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. செந்நெறியப்பர் திருக்கோயில்

திருச்சேறை - அஞ்சல் - 612 605

கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம்.










Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is குடவாயில்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  இரும்பூளை
Next