கோட்டாறு

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

கோட்டாறு

கொட்டாரம்

மக்கள் வழக்கில் இவ்வூர் 'கொட்டாரம்' என்று வழங்கப்படுகிறது.

1) காரைக்கால் - கும்பகோணம் சாலையில் திருநள்ளாறு தாண்டி, அம்பகரத்தூர் சென்று, காளிகோயிலை அடைந்து, அவ்விடத்திலிருந்து பிரிந்து செல்லும் பாதை வழியாக - வயல் வழியாக 2 A.e. நடந்து சென்று இக்கோயிலை அடையலாம்.


2) கொல்லுமாங்குடியிலிருந்து நெடுங்காடு வழியாகத் திருநள்ளாற்றுக்குப் போகும் மயிலாடுதுறை - காரைக்கால், கும்பகோணம் - காரைக்கால் பேருந்துகளில் சென்று 'கொட்டாரம் கூட்ரோடில்' இறங்கி 1 A.e. நடந்து இவ்வூரை (இக்கோயிலை) அடையலாம்.

இறைவன் - ஜராவதீஸ்வரர்.

இறைவி - சுகந்தகுந்தளாம்பிகை, வண்டமர் பூங்குழலி.

தலமரம் - பாரிஜாதம், தற்போது இல்லை.

தீர்த்தம் - வாங்சியாறு, மற்றொன்றாகிய சூரிய தீர்த்தம்.

கோயிலின் முன்பு உள்ளது. சம்பந்தர் பாடல் பெற்றது.

பழைமையான கோயில், வெள்ளையானை (ஐராவதம்) வழிபட்ட தலம். இத்தலத் தேவாரத்தில்.

"நின்று மேய்ந்து நினைந்து மாகரி நீரொடும் மலர்வேண்டி வான்மழை

குன்றின் நேர்ந்து உகுத்திப் பணி செய்யும் கோட்டாறு"

என வரும் தொடரால், வெள்ளை யானை வழிபட்ட தலம் என்னும் குறிப்பு பெற்றபடுகிறது. வெள்ளை யானை தன் கோட்டினால் மேகத்தை இடித்து மழையை ஆறு போலச் சொரிவித்து வழிபட்டதால் இத்தலம் கோட்டாறு எனப் பெயர் பெற்றதென்பர்.

கோடு - கரை. (வாஞ்சி) யாற்றின் கரையில் இருத்தலாலும் இப்பெயர் பெற்றதென்பர். திருவிளையாடற்புராணத்துள் சொல்லப்படும் வரலாறாகிய 'வெள்ளையானை சாபம் நீங்கியது' தொடர்பாக - (வெள்ளையானை துர்வாச முனிவரின் சாபப்படி காட்டானையாகிப் பல தலங்களுக்கும் சென்று இறைவன் வழிபட்டு இறுதியில் மதுரையில் இறையருளால் பழைய வடிவம் பெற்றது.) வெள்ளையானை (ஐராவதம்) சென்று வழிபட்ட பல தலங்களுள் இதுவும் ஒன்று என்பர்.

கோயில் கிழக்கு நோக்கிய சந்நிதி. உள்ளே நுழையும் நம்மை மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரம் வரவேற்கின்றது. உள்ளே சென்றதும் நேரே சுவாமி சந்நிதி தெரிகிறது. வலமாக வரும்போது விநாயகர் சந்நிதியுள்ளது. விசாலமான வெளிச்சுற்று. நடராச சபைக்கான பக்க வாயில். கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், பிரம்மா, விஷ்ணு, உருவங்களும் உள்ளன.

மூலவர் சந்நிதியில் முன்னால் தேன்கூடு உள்ளது. இக்கூடு பல்லாண்டுக் காலமாக இருந்து வருகின்றது என்று சொல்கின்றனர். இத்தேன் கூட்டைப் பற்றிச் சொல்லப்படும் செவி வழிச் செய்தி வருமாறு - சுபமகிரிஷி என்பவர் நாடொறும் வந்து இப்பெருமானைத் தரிசித்து ¢ வந்தார். ஒருநாள் அவர் வருவதற்கு நேரமானதால் கோயில் கதவு சார்த்தப்பட்டது. அதைக் கண்ட 'சுபர்' தேன் வடிவம் கொண்டு உள்ளே சென்று பெருமானை வழிபட்டார். அதுதுமல் அங்கேயே தங்கிவிட்டார். அக்காலந் தொடங் ¤கி மூலவர் சந்நிதியில் தேன்கூடு இருந்து வருகிறது." தரிசிக்கச் செல்வோர் அக்கூட்டைத் தொடாது எட்டி நின்று பார்ததவிட்டு வரவேண்டும். ஆண்டுக்கொருமுறை இக்கூட்டிலிருந்து தேனையெடுத்துச் சுவாமிக்குச் சார்த்துகிறார்களாம். மீண்டும் கட்டப்படுகின்றதாம். இம் மகரிஷியின் - சுபமகிரிஷியின் உருவமே வெளிச் சுற்றில் பின்புறத்தில் உள்ளது.

அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். ஆருத்ரா, வைகாசி விசாக விழா இங்குச் சிறப்பானவை.

கல்வெட்டுக்களில் இவ்வூர் "இராஜஇராஜப் பாண்டி நாட்டு உத்தமச்சோழ வளநாட்டு நாஞ்சில் கோட்டாறான மும்முடிச்சோழ நல்லூர்" என்று குறிக்கப்படுகிறது. இக்கோயிலைக் கட்டுவித்தவன் 'சோழ மண்டலத்து மண்ணி நாட்டு முழையூர் உடையான் அரையன் மதுராந்தகனான குலோத்துங்க சோழ கேரள ராஜன்" ஆவான். (காலம் A.H. 1253) , கல்வெட்டில் இறைவனின் பெயர், "இராஜேந்திர சோழீசுவரமுடைய மகாதேவர்" என்று காணப்படுகிறது.

"வேதியன் விண்ணவர் ஏத்த நின்றான் விளங்கும் மறை

ஓதிய ஒண் பொருளாகி நின்றான் ஒளியார்கிளி

கோதிய தண் பொழில் சூழ்ந்தழகார் திருக் கோட்டாற்றுள்

ஆதியையே நினைந்தேத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே." (சம்பந்தர்)

-தெள்ளாற்றின்

"நீட்டாறு கொண்டரம்பை நின்று கவின்காட்டும்

கோட்டாறு மேவும் குளிர் துறையே." (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. ஐராவதீஸ்வரர் திருக்கோயில்

கொட்டாரம் - அஞ்சல் - 609 703

தஞ்சை மாவட்டம்.































 


 


 





















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருநள்ளாறு
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  அம்பர்பெருந்திருக்கோயில்
Next