திருவிளநகர்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

திருவிளநகர்

மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் பொறையாறு சாலையில் 6 A.e. தொலைவில் உள்ளது. பேருந்து செல்கிறது. அருள்வித்தன் என்னும் அந்தணன் நாடொறும் இறைவனக்கு மாலை கட்டிக் கொடுக்கும் தொண்டினைச் செய்து வந்தான். இவனுக்கு அருள விரும்பிய இறைவர், ஒருநாள் அவன்தன் தொண்டில் நின்று ஆற்றைக் கடக்கும் போது, வெள்ளம் பெருகி, வாயளவாய் பெருகிட, அப்போதும் அவ்வந்தணன் மலர்க் கூடையை இருகைகளால் நீந்த முடியாமலும், மலர்க் கூடையை விடாமலும், பற்றியவாறே விரைந்து வந்து கொண்டிருந்தான். அவனுடைய உறுதியையும், அன்பையும் கண்ட இறைவன் அவனுக்கு அருள் சொரிந்து துறைகாட்டி அவனைக் கரையேறச் செய்தார். பின்னர், திருஞானசம்பந்தர் 'திருக்கடைமுடி' வணங்கி, மயிலாடுதுறை வந்து மயூரநாதரை வணங்க விரும்பி, ஆற்று வெள்ளங்கண்டு அஞ்சி, கடக்கமுடியாது வருந்தி நின்று, 'துறை காட்டுவார் எவரேனும் உளரோ' என்று உள்ளத்து உன்னினார். அப்போது இறைவனே வேடனாக வந்து தோன்றித் தாம் அழைத்துப் போவதாகச் சொல்லி அழைத்துச் சென்றான். காவிரி வெள்ளமும் ஞானசம்பந்தரின் பாதத்து அளவே ஆயிற்று. கரையேறிய ஞான சம்பந்தர், தன்னை அழைத்து வந்த வேடன் மறைந்தது கண்டு அதிசயித்து, வந்தவர் இறைவனே என்றுணர்ந்து, 'துறைகாட்டுமூ வள்ளலோ' என்று வணங்கிப் போற்றினார் இவ்வரலாற்றை ஞான சம்பந்தர் தேவாரம் நன்கு விளக்கும்.

இறைவன் - துறைகாட்டும் வள்ளல், உசிரவனேஸ்வரர்.

இறைவி - வேயுறுதோளி.

தீர்த்தம் - மெய்ஞ்ஞான தீர்த்தம்.

சம்பந்தர் பாடல் பெற்றது.

ஊருக்கு 'விழல்' என்று பெயர். இதுவே பின்னர் (விழல் நகர்) விளநகர் என்றாயிற்று. உசிரம் - விழல்.

கபித்தன் என்னும் மன்னன் வழிபட்டுப் பிரமகத்திதோஷம் நீங்கப் பெற்ற தலம்.

இத்திருக்கோயிலுக்குத் தலபுராணம் உள்ளது. இக்கோயிலுக்கு நான்கு பக்கங்களிலும் நான்கு (இறைவர்) வள்ளல்களாக வீற்றிருப்பதாகத் தலபுராணம் கூறும். அவை - மயூரநாத வள்ளல், மயிலாடுதுறையில் நடுவில் வீற்றிருக்க, கிழக்கே திருவிள நகரில் துறைகாடடும் வள்ளல், தெற்கே பெருஞ்சேரியில் மொழிகாட்டும் வள்ளல், மேற்கே மூவலூரில் வழிகாட்டும் வள்ளல், வடக்கே உத்தர மயிலாடுதுறையில் கைகாட்டும் வள்ளல் (தட்சிணாமூர்த்தி) என நால்வர் இறைவர் உள்ளனர் என்பதாகும்.

தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருக்கோயில். பூஜைகளும் வழிபாடுகளும் விழாக்களும் முறையாக நடைபெறுகின்றன. தஞ்சை நாய்க்கர் மன்னன் அச்சுதப்ப நாய்க்கர் காலத்தில் கோயலில் பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. கல்வெட்டில் இறைவன் 'துறைக்காட்டுத் தம்பிரானார், 'துறைநாட்டுவான்' எனும் பெயர்களால் குறிக்கப்படுகின்றார். உத்தமச்சோழன் மனைவி இக்கோயிலின் அர்த்த சாமக்கட்டளைக்கு நிவந்தம் வைத்து செய்தியைக் கல்வெட்டொன்று தெரிவிக்கின்றது.

கையிலங் கிய வேலினார் தோலினார் கதிகானார்

பையிலங்கர வல் குலாள் பாகமாகிய பரமனார்

மையிலங் கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்

மெய்யிலங்கு வெண்ணீற்றினார் மேயது விளநகரதே (சம்பந்தர்)

-தேயா

"வளநகர் என்றெவ்வுலகும் வாழ்த்தப்படுஞ்சீர்

விளநகர் வாழ் எங்கண் விருந்தே." (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. உசிரவனேஸ்வரர் திருக்கோயில்

திருவிளநகர்

(வழி) மனனம்பந்தல் - 609 305

மயிலாடுதுறை வட்டம் -நாகப்பட்டின மாவட்டம்.




















 


 


 





















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is மயிலாடுதுறை
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருப்பறியலூர்
Next