திருநீலக்குடி

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

திருநீலக்குடி ( தென்னலக்குடி)

மக்கள் 'தென்னலக்குடி' என்று வழங்குகின்றனர். கும்பகோணம் காரைக்கால் சாலையில், கும்பகோணத்தை அடுத்துள்ளது. ஆடுதுறையிலிருந்தும் தென்னலகுடிக்கு வரலாம். சாலையோரத்தில் கோயில் உள்ளது. பாற்கடலில் அமுதுகடைந்த காலத்தில் தோன்றிய நஞ்சையுண்டு இறைவன் நீலகண்டராக எழுந்தருளி விளங்கும் தலமாதலின் திருநீலக்குடி என்றாயிற்று.

பஞ்சவில்வாரண்யக்ஷேத்திரம். வசிட்டர், காமதேனு, தேவமாதர் மார்க்கண்டேயர் வழிபட்ட சிறப்புடையது. திருவாவடுதுறை ஆதீனத்துக் திருக்கோயில். அப்பர் வாக்கில் 'நெல்லுநீள் வயல் நீலக்குடி' என்று வருவதற்கேற்ப சுற்றிலும் வயல்கள் உள்ளன.

இறைவன் - மனோக்ஞ நாதசுவாமி, வில்வாரண்யேசுவரர் பிரமநாயகர், நீலகண்டேஸ்வரர், தைலாப்பியங்கேசர் காமதேனுபுரீஸ்வரர்.

இறைவி - அநூபமஸ்தனி (திருமணக்கோலம்) பக்தாபீஷ்டதாயினி (தவக்கோலம்)

தலமரம் - பஞ்சவில்வம்.

தீர்த்தம் - 1) தேவி தீர்த்தம் (எதிரில் உள்ள குளம்)

2) பாரத்வாஜதீர்த்தம் (வெளியில் உள்ள குளம்.)

3) மார்க்கண்டேய தீர்த்தம் (உட்கிணறு)

4) பிரம தீர்த்தம் (கிணறு)

5) க்ஷீரகுண்டம் (காவிரிக் கரையோரம்)

அப்பர் பாடல் பெற்றது.

சாலையோரத்தில் கோவிலுள்ளது. முகப்பு வாயிலைக் கடந்ததும் நேரே மூலவர் தரிசனம். உட்பிரகாரத்தில் சூரியன், பிரம்மா வழிபட்ட பிரம்மலிங்கம், விநாயகர், சுப்பிரமணியர், ஷண்முகர், விசுவநாதர், மகாலட்சுமி, தெய்விகப்பலாமரம், நவக்கிரகம், பைரவர் சந்நிதிகள் உள்ளன. இக்கோயிலில் இரு அம்பாள் சந்நிதிகள் அடுத்தடுத்து உள்ளன. மூலவர் - சிறப்பான, அதிசயமான மூர்த்தி.

இங்கு மூலவருக்குத் தைலாபிஷேகம் (எண்ணெய் அபிஷேகம்) விசேஷம். எவ்வளவு எண்ணெய் வார்த்துத் தேய்த்தாலும் அவ்வளவும் பாணத்திற்குள்ளேயே சுவறிப்போகுமூ, வெளியே வழியாது. தவமிருக்கும் அம்பாளே, சுவாமிக்குத் தைலாபிஷேகம் செய்வதாக ஐதீகம். ஆகவே அம்பாள் முன் எண்ணெய் வைத்துப் பின்பு எடுத்துச்சென்று சுவாமிக்குத் தேய்ப்பர். சித்திரை, மாசி, கார்த்திகையில் இந்த அபிஷேகம் செய்வது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

இங்குள்ள பலாமரம் தெய்விகமானது. காய்க்குங் காலத்தில் நித்யபடியாக பலாச்சுளை நிவேதனமுண்டு. நிவேதித்த பலாச்சுளையைச் சாப்பிடுவது நல்லது. ஆனால் நிவேதிக்காமல் பலாப்பழத்தையே வெளியில் எடுத்துக் கொண்டு போனால் நிச்சயமாக அப்பலாப்பழத்தில் வண்டுகள் உண்டாகிப் பழம் கெட்டுப் போவது இன்றும் கண்கூடானதொன்றாகும். என்று சொல்லப்படுகிறது. மேலும் இத்தலம் சிறந்த பிரார்த்தனையிடமாகும். மரணபயம், எமபயம் உடையோர் இத்தலத்திற்கு வந்து பெருமானைத் தொழுது எருமையோடு, நீலப்பட்டுத் துணி எள் முதலியவற்றைத் தானம் செய்தால் அப்பயம் நீங்கும். அவ்வாறே ராகு தோஷமிருந்தால் உளுந்து, நீலவஸ்திரம் வெள்ளி நாகர், வெள்ளிப் பாத்திரம் முதலியவைகளை இத்தலத்தில் தானம் செய்தால் அத்தோஷம் நிவர்த்தியாகும் இத்தலத்திற் நடைபெறும் சித்திரைப் பெருவிழா சிறப்புடையது. இவ்விழாவில் பன்னிரண்டாம் நாளில் சுவாமி பல்லக்கில் புறப்பட்டு ஏழூர் சென்று வருவது அற்புதமான காட்சியாகும். (ஏழூர்களாவன -இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேச்சுரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடீ, திருநீலக்குடி) . இத்தலத்தில் பெருமான் மார்க்கண்டேயருக்கு அருள்புரிந்திப்பதால் திருவிழாக்காலத்தில் சுவாமிக்கு மன்னால் எதிர்முகமாக மார்க்கண்டேயர் செல்கின்றார். (மார்க்கண்டேயர் உற்சவமூர்த்தி உள்ளார்) .

நாடொறும் நான்கு கால வழிபாடுகள் - குருக்கள் இல்லம் கோயிலின் பக்கத்தில் உள்ளது.

"கல்லினோடு எனைப்பூட்டி அமண்கையர்

ஒல்லை நீர் புகநூக்க என் வாக்கினால்

நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன்

நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே". (அப்பர்)

-புன் குரம்பை

ஏலக்குடி புகுந்த எம்மனோர்க்கு உண்மைதரு

நீலக்குடி விலங்கு நிஷ்களமே. (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. மனோக்ஞ நாதசுவாமி திருக்கோயில்

திருநீலக்குடி - அஞ்சல் - (வழி) கும்பகோணம்

திருவிடைமருதூர் வட்டம் - தஞ்சை மாவட்டம் - 612 108.














 


 


 





















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is தென்குரங்காடுதுறை
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  வைகல் மாடக் கோயில்
Next