திருவோத்தூர் - திருவத்திபுரம், செய்யாறு

திருமுறைத்தலங்கள்
தொண்டை நாட்டுத் தலம்

திருவோத்தூர்

திருவத்திபுரம், செய்யாறு

காஞ்சிபுரத்திற்குப் பக்கத்தில் உள்ளது. மக்கள் வழக்கில் செய்யாறு. திருவத்திபுரம், திருவத்தூர் என்றெல்லாம் வழங்கப் படுகின்றது. காஞ்சியிலிருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. வந்தவாசி, திருவண்ணாமலை, போளூர், ஆரணி முதலிய ஊர்களில் இருந்தும் இவ்வூருக்கு வரலாம். பேருந்து நிலையம் உள்ள பகுதி செய்யாறு. கோயில் சற்றுத் தள்ளி ஊருக்குள் உள்ளது. அப்பகுதி திருவத்திபுரம் என்றழைக்கப்படுகிறது.ஓத்து வேதம். இறைவன் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலின் ஓத்தூர் - 'திரு' அடைமொழி சேர்ந்து 'திருஓத்தூர்' - திருவோத்தூர் என்றாயிற்று. கோயில் சேயாற்றின் கரையில் உள்ளது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம். இப்பெருமான் அருளால் ஆண்பனை, பெண்பனையான தலம். ஆலயத்துள் வெளிப் பிரகாரத்தில் பனை மரங்கள் உள்ளன.

இறைவன் - வேதபுரீஸ்வரர், வேதநாதர்.

இறைவி - பாலகுஜாம்பிகை, இளமுலைநாயகி.

தலமரம் - பனை.

முகப்பு வாயில் கிழக்கு நோக்கி ஆறு நிலைகளுடன் காட்சி தருகிறது - சுதை வேலைப்பாடுகள். ஊரின் நடுவில் கோயில் இருப்பதால், சுற்றிலும் கடைகள் உள்ளன. உள் நுழைந்தால் விசாலமான இடம். வலப்பக்கம் ஒரு மண்டபம், ஒருகாலத்தில் வாகன மண்டபமாக இருந்திருக்கக்கூடும். இடப்புறம் திருக்குளமும் அடுத்து நந்தவனப் பகுதியும் உள்ளன. உயரமாக அமைந்த பலிபீடம். நந்தி சுவாமியை நோக்கியிராமல் முன் கோபுரத்தைப் பார்த்த வண்ணம் உள்ளது. இது குறித்துத் தலபுராணத்தில் சொல்லப்பட்டுள்ள வரலாறு இதன் இறுதியில் தரப்பட்டுள்ளது. முன்னால் உள்ள மண்டபத்தின்மீது புதிதாகச் சுதை வேலைப்பாடு அமைந்த சிற்பங்கள் - முருகன், விநாயர், நடராஜர் - ஞானசம்பந்தரும் பனைமரமும் - உள்ளன. ஆலயத்துள் நுழைந்தால் வலப்பக்கம் அம்பாள் சந்நிதி. நேர் எதிரில் இடப்பக்கம் அம்பாளுக்கு சிம்மம், கொடிமரம் உள்ளன. இவற்றுக்குப் பக்கத்தில் தலத்து ஐதீகமான பனைமரம், ஞானசம்பந்தர், சிவலிங்கம் கல்லில் (சிலா ரூபத்தில்) அமைக்கப்பட்டுள்ளன.

இடப்பக்கமாக வெளிப்பிரகாரத்தில் வலம் வரும்போது, உற்சவ மூர்த்தி மண்டபம் உள்ளது. தலமரமான, 5 பனை மரங்கள் உயர்ந்தோங்கி உள்ளன. சிவலிங்கமும் உள்ளது.

பஞ்சபூதத் தலங்களை நினைவூட்டும் வகையில், தனித்தனி சிவலிங்கத் திருமேனிகள், தனித்தனி சந்நிதிகளாக - திருச்சிற்றம்பலவன், திருக்காளத்தியார்,
திரு ஆனைக்காவுளார், திருவண்ணாமலையார், திருவேகம்பன் சந்நிதிகளாக அமைந்துள்ளன.

சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது. - ஒரு காலை மடக்கி, ஒரு காலைத் தொங்கவிட்டு, ஒரு கையில் மழுவுடன், ஒரு கையை மடக்கிய காலின் தொடை மீது வைத்தவாறு காட்சி தருகின்றார்.

தீர்த்தக்கிணறு உள்ளது. யாகசாலையும், அலங்கார மண்டபமும் உள்ளன. வெளிப்பிரகார வலம் முடித்து, படிகள் ஏறினால் விநாயகரும், முருகனும், துவார பாலகர்களும் தரிசனம் தருகின்றனர். கோடியில் உயரமான பீடத்தில் நாகலிங்கம் உள்ளது. உள்ளே நுழைவோம். இருபுறங்களிலும் உற்சவத் திருமேனிகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

உள் பிரகாரத்தில் வலம் வரும்போது அறுபத்துமூவர் மூலத்திரு மேனிகள் - சப்தமாதாக்கள் தரிசனம். கோஷ்ட மூர்த்தமாக விநாயகரும், தனிக் கோயிலாகத் தக்ஷிணாமூர்த்தியும், துர்க்கையும் காட்சி தருகின்றனர். பெருமாள் கோயிலொன்று புதிதாகச் சிறியதாகத் தற்காலத்தில் கட்டப்பட்டுள்ளது.

சண்முகர் வள்ளி தெய்வயானையுடன் கூடியுள்ளார். பைரவர், சூரியர் சந்நிதிகள் உள்ளன.

உள்ளே கருவறையில் வேதபுரிஸ்வரர் - சிவலிங்கத் திருமேனி, கிழக்கு நோக்கிய சந்நிதி. மேலே விதானம் உள்ளது. சதுர ஆவுடையார். மூலவரைத் தரிசித்து வெளியே வந்து இடப்பால் உள்ள வழியாக வெளிச்சென்று, சண்டேஸ்வரரைத் தரிசித்து வெளி வரலாம். பாலகுஜாம்பிகை தரிசனம் தனிக்கோயில். பிராகாரம் உள்ளது. நின்ற பழைய திருமேனி. வணங்கி வெளியில் வரும்போது இடப்பால் நவக்கிரகங்கள் உள்ளன. இத்தலத்துப் பெருவிழா தை மாதத்தில் நடைபெறுகிறது.

கோயிலுக்கு எதிரில் வெளியே தேர் மேடை சிதைந்துள்ளது. சிறிய தேர் உள்ளது. கல்வெட்டில் இறைவன் 'ஓத்தூர் உடைய நாயனார்' என்று குறிக்கப்படுகின்றார். இராசாதிராசன், குலோத்துங்கன், இராசேந்திரன், விக்ரமசோழன் முதலியோர் காலத்திய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. வழிபாட்டிற்கும், நிவேதனத்திற்கும், அர்ச்சகர்க்கும் நிலம் விடப்பட்ட செய்திகள் இக்கல்வெட்டுக்களால் தெரிய வருகின்றன.

நந்தி பற்றியத் தலபுராணச் செய்தி வருமாறு-

விசுவாவசு என்னும் மன்னனின் வலிமைக்கு ஆற்றாது தோற்று, ஓடி, காட்டில் திரிந்த தொண்டைமான் வேதபுரீஸ்வரரைத் துதித்து வணங்கினான். இறைவன் காட்சி தந்து, அவனுக்கு அதிக பலத்தையும் சேனைகளையும் அருளி, விசுவாசுவுடன் போரிட்டு மீண்டும் தன் அரசை எய்துமாறு பணித்தார். இதைக் கேட்ட மன்னன் 'எங்ஙனம் போரிடுவேன்' என்று அஞ்சியபோது, 'நந்தி உனக்குப் படைத் துணையாக வருவார், c அதற்கு முன்பாக யாம் கொடுத்த சேனைகளோடு சென்று போரிடுவாயாக' என்றார். மேலும், "நாம் கூறியதில் உன் மனத்திற் சந்தேகமிருப்பின் சாட்சி காட்டுகின்றோம். c போய்ப்பார். அந்த நந்திதேவன் கீழ்த்திசை நோக்கியிருக்கின்றார்', என்றார், அவ்வாறே தொண்டைமான் வந்து பார்க்க, (அவனுக்குப் படைத்துணையாகும் நிலையில்) மேற்கு நோக்கியிருந்த நந்திதேவர் கீழ்த்திசையில் திரும்பியிருப்பதைக் கண்டு பயம் நீங்கினான்.

இறைவன் நந்தியைத் தளபதியாக்கி, சிவகணங்களைக் குதிரைகள் யானைகள் தேர்களைச் சேனைகளாகச் செய்து தந்து, தொண்டைமானைப் போர்க்கு அனுப்ப, அவனும் அவ்வாறே சென்று, விசுவாவசுவை வென்று நாட்டாட்சியை அடைந்தான்.

(திருவோத்தூர்த் தலபுராணம் - தொண்டைமானுக்குப் படைத்துணைபோன சருக்கம் - இயற்றியவர் - கருணாகரக் கவிராயர்)

"பூத்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி

ஏத்தாதார் இல்லை யெண்ணுங்கால்

ஓத்தூர் மேய ஒளிமழுவாள் அங்கைக்

கூத்தீரும்ம குணங்களே."

"குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்

அரும்பு கொன்றையடிகளைப்

பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல்

விரும்புவார் வினை வீடே."

(சம்பந்தர்)

திருவோத்தூர்த் திருப்புகழ்

தவர்வாள் தோமர சூலம் காதிய சூருந்

தணியாச் சாகர மேழும் - கிரியேழும்

சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலும் நீலம்

தரிகூத் தாடிய மாவுந் - தினைகாவல்

துவர்வாய்க் கானவர் மானும் அரநாட்டாளடு தேனும்

துணையாத் தாழ்வற வாழும் - பெரியோனே

துணையாய்க் காவல்செய்வாயென் றுணராப்பாவிகள்பாலும்

தொலையாப் பாடலை யானும் - புகல்வேனோ

பவமாய்த் தானது வாகும் பனைகாய்த் தேமணம் நாறும்

பழமாய்ப் பார்மிசை வீழும் - படிவேதம்

படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள் கேசம்

பறிகோப் பாளிகள் யாரும் - கழுவேறச்

சிவமாய்த் தேனமு தூறும் திருவாக் காலொளி சேர்வெண்

திருநீற் றாலம ராடும் - இறையோனே

செழுநீர்ச் சேய்நதி யாரங் கொழியாக் கோமளம் வீசும்

திருவோத் தூர்தனில் மேவும் பெருமாளே.

- ஓகையிலா

வீத்தூர மாவோட மெய்த்தவர்கள் சூழ்ந்த திரு

வோத்தூரில் வேதாந்த உண்மையே."

- (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அ.மி. வேதபுரீஸ்வரர் திருக்கோயில்

திருவத்திபுரம் - 604 407 செய்யாறு வட்டம்

திருவண்ணாமலை மாவட்டம்.

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is மாகறல்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  வன்பார்த்தான் பனங்காட்டூர் - திருப்பனங்காடு
Next