திருவண்ணாமலையில் அருளிய
திருவெம்பாவை
(சத்தியை வியந்தது)
திருச்சிற்றம்பலம்
1
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்
சோதியை யாம்படக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே ! வளருதியோ ? வன்செவியோ நின்செவிதான் ?
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
விதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே ! என்னே !
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய் !
ஒளிபொருந்திய அகன்ற கண்களையுடைய பெண்ணே!தோற்றமும் இறுதியும் இல்லாதவன் சிவ பெருமான்;அரிய பேரொளியயானவன். அவனைப் பாடுகின்றோம்;அந்தப் பாடலைக் கேட்டபின்னும் c உறங்குகின்றாயோ?உன் செவி என்ன, கேளாதவன் செவியா?தேவதேவனை, கழலணிந்த அவன் திருவடிகளை நாங்கள் வாழ்த்துகின்ற ஒலி வீதியெல்லாம் நிறைந்தது. இதைக் கேட்ட ஒருத்தி பக்தி மேலீட்டால் விம்மி விம்மி மெய்ம்மறந்தாள்;மலர்ப் படுக்கையிலிருந்து புரண்டு விழுந்தாள்;எதற்கும் பயன்படாதவள். போல் நினைவற்றுக் கிடக்கிறாள்!அவள் அல்லவா இறைவனிடம் அன்புடையவள்!எங்கள் தோழியாகிய நீயோ உறங்குகின்றாய். என்னே உன் தன்மை!
2
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ ? நேரிழையாய் ! நேரிழையீர் !
YY இவையுஞ் சிலவோ ? விளையாடி
ஏகம் இடமீதோ ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய் !
எழுப்புபவர்
சிறந்த அணிகலன்களையுடைய பெண்ணே!இரவும் பகலும் நாம் பேசும்போதெல்லாம் "யாவும் கடந்து நிற்கின்ற ஒளிவடிவினனாகிய இறைவனுக்கே என் அன்பு"என்று சொல்லுவாய்!அந்த அன்பை இந்த மலர்ப் படுக்கையின் மீது எப்போது வைத்தாய்!
உள்ளே இருப்பவர்கள்
சிறந்த அணிகலன்களை நான் மட்டும் அணிந்திருக்கவில்லை!நீங்களும்தான் அணிந்திருக்கிறீர்கள், தோழிகளே!சீ, சீ!நாங்கள் பேசிய இவை கொஞ்சமா?விளையாடி ஏசிக் கொள்ளும் இடம் இதுவா?
எழுப்புபவர்
தேவர்களும் வணங்குதற்கு அரியதாகி, அவர்கள் தங்கள் நிலைமைக்கு இரங்கிக் கூச்சப்படுகின்றவாறு உள்ளவை அவன் திருவடிகள். ஒளிமயமான அவன், அந்தத் திருவடிகள் இந்த மண்ணில் படும்படி வந்தருளி நாம் காணுமாறு தந்தருள்வான். அவன் சிவலோகன், திருச்சிற்றலம்பத்தில் எழுந்தருளியிருப்பவன் நாம் யார்?அவன் அடிமைகளே!
3
முத்தன்ன வெண்ணகையாய் ! முன்வந் தெதிர்எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் !
பத்துடையீர் ! ஈசன் பழவடியீர் ! பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ ?
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ ?
சித்தம் அழகியார் பாடாரோ ? நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய் !
எழுப்புபவர்
முத்தினைப் போன்ற வெண்மையான பற்களை உடையவளே!முன்பெல்லாம் c, எங்களுக்கு முன் எழுந்து எங்கள் எதிரே வந்து "என் அப்பனே!ஆனந்தனே!அமுதனே!"என்று வாயூறி இனிக்க இனிக்க இறைவனைப் புகழ்வாய்!எழுந்து வந்து உன் வாசற் கதவைத் திற!
உள்ளே இருப்பவள்
நீங்கள் இறைவனிடம் பற்றுடையவர்கள்;இறைவனுடைய பழைய அடியார்கள்;அவனைப் புகழும் முறைமை பெற்றவர்கள். நான் புதிய அடிமை!உங்கள் பெருமையால் என்னுடைய சிறுமையை நீக்கி ஆட்கொள்ளலாகாதோ?
எழுப்புபவர்
உன் அன்புடைமை எங்களுக்குத் தெரியாதா?அதை எல்லோரும் அறிவோம். அழகிய மனமுடையவர்கள் நம் சிவபெருமானைப் பாடாமலிருப்பரோ?உன்னை எழுப்ப வந்தோமே நாங்கள், எங்களுக்கு இவ்வளவு பேச்சும் வேண்டியதுதான்!
4
ஒண்ணித் திலநகையாய் ! இன்னும் புலர்ந்தின்றோ ?
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ ?
எண்ணிக்கொ டுள்ளவா கொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே !
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய் !
எழுப்புபவர்
ஒளி பொருந்திய முத்தினைப் போன்ற பற்களை உடையவளே!இன்னும் பொழுது விடியவில்லையா?
உள்ளே இருப்பவள்
அழகிய கிளிபோல மொழி பேசும் நம் தோழியர் அனைவரும் வந்து விட்டனரோ?
எழுப்புபவர்
எண்ணிப் பார்த்து உள்ளபடி சொல்கின்றோம்;ஆனால் நேரமாகும். அதுவரையும் கண் உறங்கிக் காலத்தை வீணாக்காதே!தேவர்களுக்கு ஒப்பற்ற அமுதமானவனை, மறைகள் பேசுகின்ற மேலான பொருளை, கண்களுக்கு இனியவனைப் பாடி மனம் கசிந்து, உள்ளம் உடைந்து நின்று உருகுகின்றோம். ஆதலால் நாங்கள் எண்ணிக் கூற இயலாதவர்களானோம். நீயே வந்து எண்ணிக்கொள்!எண்ணிக்கை குறைந்தால் மீண்டும் போய் உறங்கு!
5
மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் !
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நன்மையாட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே ! சிவனே ! என்று
ஒலம் இடினும் உணராய் உணராய்காண் !
ஏலக் குழலி பரிசேலார் எம்பாவாய் !
எழுப்புபவர்
இறைவன் எல்லையற்ற அருள்மலை;அந்த மலை திருமாலால் அறிய முடியாதது;நான்முகனால் காண இயலாதது. அந்த மலையை நாம் அறிந்துவிட முடியும் என்பதுபோல் மற்றவர்கள் நம்பும்படியான பொய்யை, பாலும் தேனும் ஒழுகப் பேசிய வாயினையுடைய வஞ்சகியே!வாசல் கதவைத் திற!இறைவன் மண்ணுலகினராலும், விண்ணுலகினராலும், பிற உலகினராலும் காணுதற்கு அருமையானவன், அவனுடைய திருக்கோலத்தையும், எளியவர்களாகிய நம்மை ஆட்கொண்டு அருளிக் சீராட்டுகின்ற, எளிவந்த பெருங்குணத்தையும் பாடுகின்றோம்;"சிவனே!சிவனே!"என்று உரக்கப் பாடுகின்றோம். இந்த ஒலி கேட்டும் c உணர்ந்தாயில்லை!உணர்ந்து விழித்தாயில்லை!மணம் பொருந்திய கூந்தலை உடையவளே!இதுதான் உன் தன்மை போலும்!
6
மானே ! c நென்னலை நாளைவந் துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ !
வானே நிலனே பிறவே அறிவரியான்
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்படி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய் !
எழுப்புபவர்
மான்விழி போன்ற மருட்சியுடைய விழிகளையுடையவளே!"நாளைக்கு நானே வந்து உங்களையெல்லாம் எழுப்புவேன்"என்று நேற்று c சொன்னாயே!உனக்கு வெட்கமில்லையா?அந்தச் சொல், எந்தத் திசையில் போயிற்று என்பதைச் சொல்!இன்னும் பொழுது விடியவில்லையா?வானுலகத்தாரும் நிலவுலகத்தாரும் பிறவுலகத்தாரும் அறிதற்கரியவன் இறைவன். அவனுடைய மேலான கழலணிந்த திருவடிகள் எளியவர்களாகிய நமக்குத் தானாகவே வந்து நமைக்காத்து ஆட்கொண்டு அருள்வன. அந்தத் திருவடிகளைப் பாடிவந்த எங்களிடம் வாய்திறந்து பேசினாயில்லை;உன் உடல் உருகினாயில்லை. உனக்குத்தான் இந்நிலை பொருந்தும். எங்களுக்கும் மற்றவர்களுக்கும் தலைவனாகிய சிவபெருமானைப் பாடுவாயாக.
7
அன்னே ! இவையுஞ் சிலவோ ? பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவன்என்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என் அரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய் !
எழுப்புபவர்
தாயே!நாங்கள் இதுகாறும் கூறியவை கொஞ்சமோ?இறைவன் தேவர்கள் பலராலும் நினைத்துப் பார்க்கவும் அரியவன்;ஒப்பற்றவன்;பெரும் புகழுடையவன். விடியற்காலத்தில் அவனுடைய திருச்சின்னமாகிய இசைக்கருவிகளின் ஒலிகேட்ட அப்பொழுதே "சிவசிவ"என்று வாய் திறப்பாயே!"தென்னா!"என்று அவன் திருப்பெயரைச் சொல்லும் முன்பே தீயை நெருங்கிய மெழுகுபோல் உள்ளம் உருகுவாயே!அத்தகைய c, நாங்கள் எல்லாரும் சேர்ந்தும், தனித்தனியாகவும் "என் தலைவனே!என் அரசனே!இனிய அமுதனே!"என்று சொல்வதைக் கேட்ட பின்னும் உறங்குகின்றாயே!இரக்கமற்ற நெஞ்சமுடைய அறிவிலி போல் வாளாக் கிடக்கின்றாயே!உன் உறக்கத்தின் தன்மை தான் என்னே!
8
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ ?
வாழியீ தென்ன உறக்கமோ ? வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடலோர் எம்பாவாய் !
எழுப்புபவர்
கோழி கூவ, எங்கும் சிறு பறவைகள் ஒலிக்கின்றன நாதசுரம் ஒலிக்க, எங்கும் வெண்சங்குகள் ஒலிக்கின்றன. நாங்கள் தனக்குவமையில்லாப் பேரொளியை, ஒப்பற்ற பேரருளை, மேலோன்றில்லாத மெய்ப்பொருளைப் பாடினோம். உனக்குக் கேட்கவில்லையா வாழ்வாயாக உன் உறக்கம்தான் எப்படிப்பட்டதோ வாய்திறந்து ஒரு வார்த்தை சொல். அருட்பெருங் கடலாகிய எம்பெருமானுக்கு அன்பு செய்யும் முறை இப்படித்தானோ ஊழிக்காலத்தில் தனி முதல்வனாய்த் திகழும் ஒப்பற்ற தலைவனை, உமையரு பாகனையே பாடுவாயாக.
9
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருவே !
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே !
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் ;
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம்ஏலோர் எம்பாவாய் !
எல்லாரும் சேர்ந்து பாடுதல்
முன்னே தோன்றிய பழைமையான எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டிருக்கும் பழைமையான மூலப்பொருளே!அவ்வாறே, பின்னே தோன்றும் புதுமைகளுக் கெல்லாம் புதுமையாக மீண்டும் தோன்றும் தன்மையனே!உன்னைத் தலைவனாகப் பெற்ற நாங்கள், உன் சிறந்த அடியார்களானோம். ஆதலால், உன் தொண்டர்களின் திருவடிகளை வணங்குவோம்;அங்ஙனமே அவர்களுக்கே உரிமையுடையவர்களாவோம்;அவர்கள் எங்கள் கணவர்கள் ஆவர். அவர்கள் விரும்பிக் கூறும் முறையிலேயே அடிமையகிப் பணி செய்வோம். எங்கள் தலைவனே!இந்த வகையான வாழ்க்கையையே எங்களுக்கு c வழங்கவாயானால், எந்தக் குறையும் இல்லாதவர்களாவோம்!
10
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே !
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஒதஉலவா ஒரு தோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்தன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ? ஏதவன்பேர் ? ஆர்உற்றார் ? ஆர்அயலார் ?
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய் !
சிவபெருமான் திருக்கோயிலைச் சார்ந்து வாழும் குற்றமற்ற குலத்தில் தோன்றிய கோயிற் பணிப்பெண்களே!பாதாளம் ஏழுக்கும் கீழே, சொற்களைக் கடந்த எல்லையில் உள்ளன. இறைவன் திருவடி மலர்கள். மலர்களை நிறையச் சூடிய அவன் திருமுடி, எல்லாப் பொருள்களும் கீழ்ப்பட மேற்பட்டுள்ளது. அவன் உமையை ஒரு பாகத்தில் உடையவன்;அதனால் ஒரே திருமேனியுடையவனல்லன். அவன் மறைகளுக்கு முதல்வன்;விண்ணகத்தாரும், மண்ணகத்தாரும் அளவிறந்த காலமாக எந்தெந்த முறையில் பரவிப் புகழந்தாலும், வரையறுத்துப் புகழ முடியாத உயிர்த்துணைவன்;தொண்டர்கள் உள்ளத்தில் உறைபவன்!அவன் ஊர் யாது?அவன் பேர் யாது?அவனுக்கு உறவினர் யார்?அயலார் யார்?அவனைப் பாடும் தன்மை எப்படி?கூறுவீர்களாக!
11
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா ! வழிஅடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யா ! வெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா !
ஐயா ! c ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்
நெருப்பைப் போன்ற செம்மை நிறமுடைய சிவபெருமானே!பெண்மையையுடைய திருநீற்றை அணிந்தவனே!எல்லாச் செல்வங்களையும் உடையவனே!சிறிய இடையினையும் மைதீட்டிய அகன்ற கண்களையும் உடைய உமாதேவியின் மணாளனே!ஐயனே!வழிவழியடிமைகளாகிய நாங்கள், வண்டுகள் மொய்க்கின்ற அகன்ற பொய்கையிலே "முகேர்"என்று மூழ்கிக் கைகளால் நீரைக் குடைந்து குடைந்து, கழலணிந்த உன் திருவடிகளைப் புகழ்ந்து பாடி, வாழ்ந்தோம். எங்கள் தலைவனே!நீ ஆட்கொண்டு அருளும் திருவளையாடலின் வழிப்பட்ட அடியார்கள் செல்லும் நெறியெல்லாம் நாங்களும் சென்று முடித்தோம். நாங்கள் இளைத்து விடாமல் காப்பாயாக.
12
ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் ! நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன் ! இவ் வானுங் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திசுழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய் !
நன்மை செய்யும் தில்லைச் சிற்றம்பலத்திலே, ஒரு திருக்கரத்தில் தீயை ஏந்தி ஆடுகின்றான் கூத்தப் பெருமான். நம்மைப் பிணித்துள்ள பிறவித்துன்பம் கெடும்படி, நாம் மகிழ்ச்சியுடன் துள்ளி ஆடுதற்குரிய ('மொய்யார் தடம் பொய்கை'என்ற) தீர்த்த வடிவமாக அவன் விளங்குகின்றான். அவன் இந்நிலவுலகத்தையும், வானத்தையும், நம் எல்லோரையும் படைத்தும், காத்தும், அழித்தும் விளையாடுகின்றவன். (ஐந்தொழிலும் விளையாட்டே) அந்தப் பெருமானுடைய பொருள்சேர் புகழைப் பேசிக் கொண்டு, கை வளையங்கள் ஒலிக்கவும், இடையில் அணிந்துள்ள மேகலைகளின் ஒலி துள்ளவும் மலர்கள் சூடிய கூந்தலின் மேல் வண்டுகள் ஒலிக்கவும், தாமரை பூத்த பொய்கை நீரைக் குடைந்து, நம்மை உரிமையாகவுடைய தலைவனது பொன் போன்ற திருவடிகளைத் துதித்துப் பெரிய கனைநீரில் நாம் ஆடுவோமாக.
13
பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்த் தாடேலோர் எம்பாவாய்
(1) பைங்குவளைக் கார் மலரால் எங்கள் பிராட்டி போன்று இசைந்த பொங்குமடு. (2) செங்கமலப் பைம்போதால் எங்கோன்போன்று இசைந்த பொங்குமடு. (3) அங்கு அம்-அவ்விடத்தில் அழகிய;குருகு இனத்தால் பறவைக் கூட்டத்தாற் நிறைந்த பொங்குமடு. அம்பிகையின் (அங்கம்) திருமேனியுள் திருக்கைகளில் வளையற் கூட்டத்தால் எங்கள் பிராட்டியை போன்று இசைந்தது. அங்கு உருகு இனத்தால் அங்காங்கே அன்பு மிகுதியால் உருகுகின்ற தொண்டரினத்தால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த பொங்குமடு. (4) பின்னும் அரவத்தால் - பாம்பொடு பாம்பு பின்னுதலால் (பாம்பணிந்தைமயால்) ;பின்னும் பின்னும் தொடர்ந்து அலையும் திரையலியால் எம்கொனும் போன்று இசைந்த பொங்குமடு. (5) தங்கண் (தம்கண்) தங்கள் மலம் (உடம்பழுக்கைக்) கழுவுவார் வந்து சார்தல் எங்கள் பிராட்டிக்கும் எங்கோனுக்கும் பொங்கு மடுவுக்கும் பொது. மலம்-அழுக்கு, உடம்பழுக்கு. ஆணவம் முதலிய மும்மலமும் உயிரழுக்கு. 'குவளைக் கண்ணி கூறன் காண்க'. 'செங்கமல மலர்போல் ஆர்உருவாய் என் ஆரமுதே'"அலங்கந்தாமரை மேனியப்பா" (திருவாசகம்) . பொங்குமடுவிற் புகப் பாய்ந்து பாய்ந்து, நம் வளையல்கள் சிலம்பவும் காற்சிலம்புகள் கலந்து ஆரவாரம் செய்யவும் கொங்கை பூரிப்படையவும், குடைகின்ற (பொய்கை) நீர் மேலேறவும் தாமரைப் பூங்குளத்து நீரில் பாய்ந்து ஆடுவோம்.
(தனிதனியாய்) அம்மையப்பர் திருவுருத்துக்கும் மடுவுக்கும் சிலேடை. ஒன்றான அர்த்தநாரீசுவரர் திருமேனியை நோக்கியதன்று.
14
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்
பெண்களே!நம் செவிகளில் அணிந்த தோடுகள் ஆட உடம்பில் அணிந்த பசும் பொற்கலன்கள் ஆட, கூந்தலாட, அக் கூந்தலிற் சூடிய மலர் மாலைகள் ஆட, அந்த மாலைகளில் மொய்க்கின்ற வண்டின் கூட்டம் எழுந்து ஆடக் குளிர்ந்த நீரில் மூழ்குவோம்!எம்பெருமான் ஆடும் திருச்சிற்றம்பலத்தைப் பாடி, மறைப்பொருளைப் பாடி, அம்மறைப் பொருள் ஆமாறு (ஆம் வண்ணம்) பாடி, முச்சுடர்க்கும் ஒளி வழங்கும் ஒளியாகிய இறைவன் திறங்களைப் பாடி, அவன் திருமுடியைச் சூழந்துள்ள கொன்றை மாலையைப் பாடி, அவன் எல்லாப் பொருளுக்கும் இறைவனாய் விளங்கும் முதன்மையையும் (அவனது முழு முதன்மையையும்) முடிவிலா முடிவையும் பாடி, ஏனைய உயிர்களினும் நம்மை வேறுபடுத்திச் சிறப்புற வைத்துந மேல் நிலையில் வைத்து அருள்கின்ற, வளையல்கள் அணிந்த திருக்கரங்களையுடைய, இறைவியின் திருவடிச் சிறப்பையும் பாடி நீராடுவோமாக.
15
ஒரோருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஒவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைதான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல் பாய்ந்து ஆடலோர் எம்பாவாய்
கச்சு உருவுமாறு அழகிய அணிகலன்களைப் பூண்ட முலையுடைய பெண்களே!இவள் ஒவ்வொரு காலத்தும் "எம்பெருமானே!எம்பெருமானே!"என்று வாய் ஓயாது அரற்றுகிறாள்;ஒரு சமயம் நம் மகாதேவன் சீரை, வாய் ஓயாமல் பேசுகிறாள் அதனால் ஏற்பட்ட மனமகிழ்ச்சியால் அவள் கண்கள் அருவியைப்போல் நீரைச் சுரக்கின்றன. நிலத்தில் விழுந்து இறைவனை வணங்கியவள் அப்படியே தன்னை மறந்து கிடக்கிறாள்;மற்ற தேவர்களை இவள் வணங்கவே மாட்டாள். பேரரசனாகிய இறைவனுக்குப் பித்தாகும் தன்மை இப்படித்தான் போலும்!இவ்வண்ணம் ஆட்கொள்ளும் அந்த ஒருவர் யார்?ஞானமே வடிவமான இறைவனே அவன்!அவன் திருவடிகளை வாயாரப் பாடி அழகே வடிவமான மலர்கள் நிறைந்த நீரில் பாய்ந்து ஆடுவோமாக (பேரரையன்-பேரரசன்)
16
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கும் முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய் !
மேகமே!நீ கடலினை நெருங்கி அதன் நீரை முகந்து அக்கடலைக் குறைத்து, எங்களை ஆளாக உடையவளாகிய உமாதேவியின் சிற்றிடையைப்போல மின்னிப் பொலிவுற்று, எம்பெருமாட்டியின் திருவடிகளில் அணியப்பெற்ற பொற்சிலம்பைப் போலச் சிலம்பி, திருப்புருவம் எனும்படி வானவில் குலவி நம்மையெல்லாம் அடிமையாக உடைய எம்பெருமாட்டியை விட்டுப் பிரியாத எம்பெருமான் அன்பர்களுக்கும் அருள முற்பட்டவள். நமக்கும் முந்தி வந்து நெருங்கிச் சொரிகின்ற அன்னையின் இனிய அருளைப் போலப் பொழிவாயாக!
17
செங்க ணவன்பால் திசை முகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நம்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடலோர் எம்பாவாய் !
மணம் பொருந்திய கூந்தலை உடையவளே!திருமால், நான்முகன், தேவர்கள் ஆகியவரிடத்தும், வேறு எங்கும் இல்லாத இன்பம் நம்மிடத்ததாக அவன் நம்மைக் குற்றங்கள் நீக்கிக் குணம் கொண்டு கோதாட்டுவான். இவ்வுலகில் நம் வீடுகள்தோறும் எழுந்தருளி வந்து, தன்னுடைய செந்தாமரை போன்ற பொன்மயமான திருவடிகளை வழங்கியருளினான். அந்தச் சேவகனை, அருள் கனிந்த கண்களையுடைய அரசனை, அடிமைகளாகிய நமக்குத் தெவிட்டாத தெளிந்த அமுதமானவனை, நம்முடைய சிவபெருமானைப் பாடி மங்களம் பெருகி விளங்கத் தாமரை மலர்கள் நிறைந்த நீரிலே பாய்ந்து ஆடுவோமாக!
18
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர்ம முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணோர் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகமலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே ! இப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்
பெண்ணே!திருவண்ணாமலையில் இறைவன் பேரொளிப் பிழம்பாக இருக்கின்றான். அவன் திருவடித் தாமரையில் விழுந்து தேவர்கள் வணங்கும்போது அவர்களுடைய மகுடங்களில் பதிக்கப்பெற்றுள்ள பலவகை இரத்தினங்களின் தொகை, இறைவன் திருவடிப் பேரொளியின் முன் ஒளியிழந்து மறைந்து விட்டன. பொழுது விடிந்து விட்டது. இறைவன் பெண், ஆண், அலி மூன்றுமானவன்;ஒளிதரும் கதிரவனும் மதியும், சுடர்களும் பொருந்திய வானமானவன்;மண் ஆனவன்;இவற்றுக்கு வேறாக உள்ள அனைத்துமானவன். அவன் நம் கண்முன்னே காட்சி தரும் நிறைந்த அமுதமாகி நின்றான். அவனுடைய திருவடிகளைப் பாடி மலர் நிறைந்து விளங்கும் இந்த நீரிலே பாய்ந்து ஆடுவோமாக!
19
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கு அப்பழஞ்சொற் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றரைப்போம்கேள் !
எங்கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க ;
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க ;
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றுங் காணற்க ;
இங்கிப் பரிசே எமக்குஎங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய் !
எங்கள் பெருமானே!"உன் கையில் உள்ள பிள்ளை உனக்கே அடைக்கலம்"என்ற சொல் பழமையானது. அந்தச் சொல்லைப் புதுப்பித்துக் கூற வேண்டிய அச்சம் எங்களுக்குத் தோன்றியிருக்கிறது. உனக்கு ஒரு விண்ணப்பம் சொல்கின்றோம். அதனைக் கேட்டு அருள்!எங்கங்கள் கொங்கைகள் உன் அன்பர் அல்லாதார் தோளைத் தழுவாதொழிக. எங்கள் கைகள் உனக்கு அல்லாமல் வேறு எநதப் பணிகளையும் செய்யா தொழிக. எங்கள் கண்கள் இரவும் பகலும் வேறொன்றையும் காணாதொழிக. எங்கள் தலைவனாகிய c, எங்களுக்கு இந்தவண்ணம் இங்கு அருள்புரிந்தாயனால், கதிரவன் எத்திசையில் உதித்தாலும் எங்களுக்கென்ன குறை?
20
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய் !
திருவெம்பாவையின் முதலில் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி என்றருளினார். இம்முடிவில், அப்பெருஞ்சோதி ஐந்தொழில் புரியும் பொருட்டுத் திருவுள்ளங் கொண்டருளுவதால் ஆதியாயிற்று. ஐந்தொழில் செய்து முடித்ததால் அந்தம் ஆயிற்று. ஆதி முதல் அந்தம் - முடிவு. முதலும் முடிவும் நேர்கின்றன ஐந்தொழில் புரிதலால், அத்தகைய ஆதியும் அந்தமும் திருவடிகளே. அவை நம்மைக் காத்தருள்க. தோற்றம் (படைப்பு) போகம் (காப்பு) , ஈறு (அழிப்பு) காணாமை (மறைப்பு) , ஆட்கொண்டருளல் (அருள்வு) எல்லாம் எல்லாவுயிர்க்கும் பொது. ஐந்தொழிலும் திருவடிகளே செய்யும். காணாமை அடிமுடி தேடிய வரலாற்றாற் குறிப்பித்தது. உய்தல் எல்லாவுயிரொடும் நமக்கும் உரித்து. ஏழடியிலும் திருவடிகள் காத்த்ல் வேண்டும் என்றபடி. ஈற்றடியில் மார்கழி நீர் ஆடல், என்னும் தொல் வழக்கம் கூறப்பட்டது. (1) தோற்றம் துடியதனில், (2) தோயும் FF அமைப்பில் (3) சாற்றியிடும் அங்கியிலே சங்காரம், (4) ஊற்றமாய் ஊன்றும் மலர்ப்பதத்தே உற்ற திரோதம் (5) முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு. இவ்வுண்மை விளக்கத்தை திருவெண்பாவிற் கைகள் முத்தொழிற்கு இடமாக கூறப்படினும், இத்திருவாசகம் உணர்த்தும் வண்ணம் திருவடிகளேயாகக் கொள்க. அருவம் அருவுருவம் உருவம் மூன்றும் கடந்த ஞான சொரூபத்தில் எவ்வுறுப்பபும் ஞானபாவனையாகத்தான் அமையும்;உண்மையில் உருவமில்லை. ஞானமே அம்பலம். ஆனந்தமே திருக்கூத்து.
திருச்சிற்றம்பலம்
மாணிக்கவாசக ஸ்வாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய
திருப்பள்ளி யெழுச்சி
1
போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே !
புலர்ந்தது ; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் ;
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே !
ஏற்றுயர் கொடியுடையாய் ! எமை உடையாய் !
எம்பெருமான் ! பள்ளி எழுந் தரு ளாயே
என் வாழ்விற்கு மூலப்பொருளே!வணக்கம்!சேற்றில் நின்று தாமரைகள் இதழ் விரிக்கும் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் அமர்ந்த சிவபெருமானே!உயர்த்திய எருதுக்கொடியுயைடவனே!என்னை அடிமையாக உடையவனே!எம்பெருமானே வணக்கம்!பொழுது விடிந்தது. உன் அழகிய திருவடிகள் இரண்டுக்கும் ஒன்றற்கொன்று ஒத்த மலர் கொண்டு தூவினோம்;எங்களுக்கு அருள்புரியும் பொருட்டு உன் திருமுகத்தில் மலரும் அழகிய புன்னகையை எங்கள் உள்ளத்தில் நிறுத்தி, உன்னுடைய திருவடியை வணங்குகின்றோம். பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக.
2
அருணன் இந்திரன்திசை அணுகினான் ; இருள்போய்
அகன்றது ; உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கூடி மலர, மற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன ; இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே ;
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையரே ;
அலைகடலே பள்ளி எழுந்தரு ளாயே !
திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவ பெருமானே!திருவருட் செல்வத்தை வழங்கவரும் இன்பமலையே!அலைகடலே!அருணோதயம் கிழக்கில் அணுகிற்று. இருள் அகன்று போயிற்று. உன் திருமுகம் ஆன உதயகிரியில் உன் கருணையாகிய சூரியன் மேலே எழுந்தோறும் அண்ணலாகிய தேனை நாடும் (அடியார்களாகிய) வண்டுகளின் திரள்கள் முறையே தோத்திர முழக்கம் செய்கின்றன. இவற்றை உணர். திருப்பெருந்துறையில் திருக்கோயில் கொண்டெழுந்தருளிய சிவபெருமானே, அருளாகிய செல்வத்தைத் தருகின்ற ஆனந்த மலையே!அலைகடலன்ன கருணையே!திருப்பள்ளி எழுந்தருள்வாயாக!
3
கூவின பூங்குயில் ; கூவின கோழி ;
குருகுகள் இயம்பின ; இயம்பின சங்கம் ;
ஒவின தாரகை ஒளி ; ஒளி உதயத்து
ஒருப்படு கின்றது ; விருப்பொடு நமக்குத்
தேவ் நற் செறிகழற் றாளினை காட்டாய் ;
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே !
யாவரும் அறிவரி யாய் ; எமக் கெளியாய் ;
எம்பெரு மான் ; பள்ளி எழுந்தரு ளாயே !
மகாதேவா!திருப்பெருந்துறையுறை சிவ பெருமானே!எவராலும் அறிதற்கு அரியவனே!எங்களுக்கு, அறிந்து அனுபவித்தற்கு எளிமையானவனே!அழகிய குயில் கூவின;கோழிகள் கூவின;பறவைகள் ஒலித்தன;சங்குகள் முரன்றன;விண்மீன்கள் ஒளி குன்றின. உதயக் கதிரொளி தோன்றுகிறது. எம்பெருமானே, பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக!திருவுள்ளத்தில், விருப்பம் கொண்டு எங்களுக்கு நல்ல வீரக்கழல் அணிந்த உன் திருவடி இரண்டினையும் காட்டுவாயாக!
4
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே !
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே !
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!இனிமையான இசையைப் பொழிந்து கொண்டிருக்கும் வீணையுடையவர்களும் யாழினை உடையவர்களும் ஒரு பக்கம்;வேத மந்திரங்களுடன் துதிப்பாடல்களையும் ஓதிக் கொண்டிருப்பவர்கள் ஒருபக்கம்;நெருங்கத் தொடுக்கப்பட்ட மலர்மாலைகளை ஏந்திய கையுடையவர்கள் ஒருபக்கம்;தலைவணங்கித் தொழுபவர்களும், அன்பு மேலீட்டால் அழுபவர்களும், மெய்யம் மறந்து துவள்பவர்களும் ஒருபக்கம்;தலையின்மீது இரு கைகள் குவித்து அஞ்சலி செய்பவர்கள் ஒரு பக்கம்;இவ்வாறு அடியார்கள் உன் திருச்சந்தியில் விளங்குகின்றனர். ஒரு தகுதியும் இல்லாத அடியேனையும் ஆட்கொண்டு இனிய அருள் வழங்கும் எம்பெருமானே!பள்ளியெழுந்து அருள்வாயாக!
5
" பூதங்கள் தோன்றுநின் றாய் " எனின் அல்லால்
" போக்கிலன் வரவிலன் " எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா !
சிந்தனைக் கும்அரி யாய் எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே !
குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் அரசனே!உன்னை ஞானியர்கள், பூதங்கள் எல்லாவற்றிலும் கலந்து நிற்கின்றாய் என்கின்றனர்;அதுமட்டுமல்லாமல் பிறப்பில்லாதவன் இறப்பில்லாதவன் என்று இசைப்பாடல்கள் பாடுகின்றனர் ஆடுகின்றனர்;ஆனால, உன்னை நேரே கண்டு அறிந்தவர்களை நாங்கள் காதால் கேட்டும் அறிந்திலோம். c, சிந்தனைக்கும் எட்டாதவனாய் நிற்கின்றாய்!எங்கள் கண் முன்னே வந்து திருக்காட்சி வழங்கி எங்கள் குற்றங்களையெல்லாம் நீக்கி எங்களை அடிமையாக ஏற்று அருள்செய்கின்ற எம்பெருமானே!பள்ளியெழுந்து அருள்வாயாக!
6
பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுந் தூர்அவர் பலரும்
மைப்புறு கண்ணியார் மானுடத் தியல்பின்
வணங்குகின்றார், அணங்கின் மணவாளா !
செப்புறு கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே !
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் ; பள்ளி எழுந்தரு ளாயே !
உமாதேவியின் மணவாளா!செம்மை நிறம் பொருந்திய தாமரை மலர்கின்ற குளுமையான வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையிலே எழுந்தருளியுள்ள பெருமானே!பரபரப்பை அறவே விட்டு உட்காட்சியில் உன்னையே கண்டுணரும் மெய்ஞ்ஞானியர் பலரும், இந்த மண்ணுலகிற்கு வந்து பாசக்கட்டுக்களை அறுத்தவர் பலரும் மனித இயல்பிலே நின்று மைதீட்டிய கண்களையுடைய தலைவியர் போல உன்னைத் தலைவனாகக் கொண்டு வணங்குகின்றனர். இந்தப் பிறவியை நீக்கி எங்களை ஆட்கொண்டு அருள்புரியும் எம்பெருமானே!பள்ளி நீங்கி எழுந்தருள்வாயாக!
7
அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார் ;
இதுஅவன் திருவுரு, இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தரகோச
மங்கையுள் ளாய் ! திருப் பெருந்துறை மன்னா !
எதுஎமைப் பணிகொளும் ஆறு ? அது கேட்போம் ;
எம்பெரு மான் ! பள்ளி எழுந்தரு ளாயே !
தேன்சொரியும் மலர்ச்சோலை சூழ்ந்த திருவுத்தரகோச மங்கைத் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனே!திருப்பெருந்துறை அரசே!உன் தன்மையாகிய அது பழச்சுவை எனவும், அமுதம் எனவும் அறிந்துகொள்ள முடியாதது எனவும் தேவர்களும் அறியமாட்டார்கள். ஆனால், "இதுவே அவனுடைய திருவுருவம், இவனே அந்தச் சிவபெருமான்"என்று நாங்கள் சுட்டிக்காட்டிச் சொல்லும்படி எளிவந்த கருணையுடன் எங்களை அடிமையாக ஏற்றுக்கொண்டு இந்த மண்ணிலே எழுந்தருள்வாய்!நீ எங்களை ஏவல் கொள்ளும் முறைமை எது?அந்த முறைமையைக் கேட்டு அவ்வாறே ஒழுகுவோம்!எம் பெருமானே!பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக!
8
முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர், யாவர்மற்று அறிவார் ?
பந்தணை விரலியும், நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந் தருளியபரனே !
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய் !
ஆரமு தே ! பள்ளி எழுந்தரு ளாயே !
எங்கும் நிறைந்த அமுதமே!அனைத்துக்கும் முற்பட்ட முதலும், நடுவும், முடிவும் ஆனவனே!பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரும் உன்னை அறிய முடிந்தவர் அல்லர் வேறு யார் அறிவர்?இத்தகைய அருமையுடைய c, பந்து வந்து அணைகின்ற விரல்கள் யுடைய உமாதேவியடும், உன் அடியவர்களின் பழைய குடிசைதோறும் எழுந்தருளியிருக்கிறாய்!பரம்பொருளே!சிவந்த தழல் போன்ற உன் திருமேனிக் காட்சி தந்து, திருப் பெருந்துறையில் c அமர்ந்த திருக்கோயிலையும் காட்டி, என் குருமூர்த்தியாக அந்தண வேடத்தையும் காட்டி, வலிய வந்து, என்னை அடிமையாக ஏற்றாய்!பள்ளி நீங்கி எழுந்தருள்வாயாக!
9
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளே ! உன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச் செய்தானே !
வண்திருப் பெருந்துறை யாய்வழி அடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே !
கடலமு தே ! கரும்பே ! விரும்படியார்
எண்ணகத் தாய் உலகுக்குயி ரானாய்
எம்பெரு மான் ! பள்ளி எழுந்தரு ளாயே !
வானுலகில் உள்ள தேவர்களும் நெருங்கவும் முடியாத மேலான மெய்பொருளே!இந்த மண்ணுலகில் வந்து, உன்னுடைய அடிமைகளாகிய எங்களை வாழச் செய்தவனே!வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் அமர்ந்தவனே!பரம்பரை அடிமைகளாகிய எங்களுடைய கண்களுக்குள்ளே நின்று, காணும் பொருளில் எல்லாம் நின் வடிவம் காட்டிக் களிப்பை வழங்கித் தித்திக்கின்ற தேனே!பாற்கடலில் தோன்றிய அமுதமே!நெஞ்சில் இனிக்கும் கரும்பே!அன்பு செய்யும் தொண்டர்களின் எண்ணத்துள் நிறைந்தவனே!உலகம் அனைத்துக்கும் உயிரானவனே!எம்பெருமானே!பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக!
10
" புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின் றோம்அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று " நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய் ! திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியுற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தே பள்ளி எழுந்தரு ளாயே ;
எங்கும் நிறைந்த அமுதமே!சிவபெருமான் உயிர்களுக்கெல்லாம் ஈடேற்றம் வழங்கி ஏற்றுக்கொள்வது, இந்த மண்ணுலகத்தின் வழியாகவே என்னும் உண்மையைத் திருமாலும், நான்முகனும் கண்டனர். மண்ணுலகத்தில் நாம் போய்ப் பிறக்காததால் வாழ்நாளையெல்லாம் வீணாகக் கழிக்கின்றோமே என்று, அவர்கள் இருவரும் ஏங்குகின்றனர்;இப்படி, திருமால் விரும்பும் படியாகவும், நான்முகன் ஆசைப்படும்படியாகவும், உன் மலர்ந்த மெய்க் கருணையும் நீயுமாக இம்மண்ணுலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனே!பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக!