திருஞானசம்பந்தர் தேவாரத் திருப்பதிகங்கள் மூன்றாந் திருமுறை 1, கோயில், காந்தாரபஞ்சமம் ஆடினாய், நறூநய்யடு, பால், தயிர்! அந்தணர் பிரியாத சிற்றம்பலம் ந

திருஞானசம்பந்தர் தேவாரத் திருப்பதிகங்கள்

மூன்றாந் திருமுறை

1, கோயில், காந்தாரபஞ்சமம்

ஆடினாய், நறூநய்யடு, பால், தயிர்! அந்தணர் பிரியாத சிற்றம்பலம்

நாடினாய், இடமா! நறுங்கொன்றை நயந்தவனே!

பாடினாய், மறையோடு பல்கீதமும்! பல்சடைப் பனி கால் கதிர் வெண்திங்கள்

சூடினாய்!--அருளாய், சுருங்க எம தொல்வினையே! 1

கொட்டமே கமழும் குழலாளடு கூடினாய்! எருது ஏறினாய்! நுதல்--

பட்டமே புனைவாய்! இசை பாடுவ பாரிடமா,

நட்டமே நவில்வாய்! மறையோர் தில்லை, நல்லவர், பிரியாத சிற்றம்பலம்

இட்டமா உறைவாய்!--இவை மேவியது என்னை கொலோ? 2

நீலத்து ஆர் கரிய மிடற்றார், நல்ல நெற்றிமேல் உற்ற கண்ணினார், பற்று

சூலத்தார், சுடலைப் பொடி-நீறு அணிவார், சடையார்,

சீலத்தார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால், கழல் சேவடி கைதொழ,--

கோலத்தாய்!--அருளாய்! உன காரணம் கூறுதுமே. 3

கொம்பு அலைத்து அழகு எய்திய நுண் இடை, கோல வாள்மதி போலும் முகத்து இரண்டு

அம்பு அலைத்த கண்ணாள் முலை மேவிய வார்சடையாந்-

கமபலைத்து எழு காமுறு காளையர் காதலால் கழல்சேவடி கைதொழ,

அம்பலத்து உறைவாந்-அடியார்க்கு அடையா, வினையே. 4

தொல்லையார் அமுது உண்ண, நஞ்சு உண்டது ஓர்

தூ மணிமிடறா! பகுவாயது ஓர் பல்லை ஆர் தலையில் பலி ஏற்று உழல் பண்டரங்கா!--

தில்லையார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால், கழல்சேவடி கைதொழ,

இல்லை ஆம் வினைதாந்-எரிய (ம்) மதில் எய்தவனே! 5

ஆகம் தோய் அணி கொன்றையாய்! அனல் அங்கையாய்! அமரர்க்கு அமரா! உமை

பாகம் தோய் பகவா! பலி ஏற்று உழல் பண்டரங்கா!

மாகம் தோய் பொழில் மல்கு சிற்றம்பலம் மன்னினாய்! மழுவாளினாய்! அழல்

நாகம் தோய் அரையாய்!--அடியாரை நண்ணா, வினையே. 6

சாதி ஆர் பலிங்கி (ன்) னொடு வெள்ளிய சங்க வார்குழையாய்! திகழப்படும்

வேதியா! விகிர்தா! விழவு ஆர் அணி தில்லை தன்னுள்

ஆதியாய்க்கு இடம் ஆய சிற்றம்பலம் அம் கையால்-தொழ வல் அடியார்களை

வாதியாது அகலும், நலியா, மலி தீவினையே. 7

வேயின் ஆர் பணைத்தோளியடு ஆடலை வேண்டினாய்! விகிர்தா! உயிர்கட்கு அமுது

ஆயினாய்! இடுகாட்டு எரி ஆடல் அமர்ந்தவனே!

தீயின் ஆர் கணையால் புரம்மூன்று எய்த செம்மையாய்! திகழ்கின்ற சிற்றம்பலம்

மேயினாய்!--கழலே தொழுது எய்துதும், மேல் உலகே. 8

தாரின் ஆர் MK கொன்றையாய்! மதி தாங்கு நீள்சடையாய்! தலைவா! நல்ல

தேரின் ஆர் மறுகின் திரு ஆர் அணி தில்லைதன்னுள்,

சீரினால் வழிபாடு ஒழியாதது ஓர் செம்மையால் அழகு ஆய சிற்றம்பலம்

ஏரினால் அமர்ந்தாய்!--உன சீர் அடி ஏத்துதுமே. 9

வெற்று அரை உழல்வார், துவர் ஆடைய வேடத்தார், அவர்கள் உரை கொள்ளன்மின்!

மற்று அவர் உலகின் (ன்) அவலம் (ம்) அவை மாற்றகில்லார்;

கற்றவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் காதலால் கழல்சேவடி கைதொழ

உற்றவர், உலகின் உறுதி கொள வல்லவரே. 10

நாறு பூம்பொழில் நண்ணிய காழியுள் நால்மறை வல்ல ஞானசம்பந்தன்,

ஊறும் இந்தமிழால், உயர்ந்தார் உறை தில்லை தன்னுள்

ஏறு தொல்புகழ் ஏந்து சிற்றம்பலத்து ஈசனை, இசையால் சொன்ன பத்து இவை

கூறும் ஆறு வல்லார், உயர்ந்தாரொடும் கூடுவரே. 11