திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத் திருப்பதிகங்கள்
இரண்டாம் திருமுறை
1, திருப் பூந்தராய் வினா உரை, இந்தளம்
செந்நெல் அம் கழனிப் பழனித்து அயலே செழும்
புன்னை வெண் கிழியில் பவளம் புரை பூந்தராய்
துன்னி, நல் இமையோர் முடி தோய் கழலீர்! சொலீர்
பின்னூசஞ்சடையில் பிறை பாம்பு உடன் வைத்ததே? 01
எற்று திண் திரை ஏறிய சங்கினொடு இப்பிகள்
பொன் திகழ் கமலப் பழனம் புகு பூந்தராய்ச்
சுற்றி, நல் இமையோர் தொழு பொன்கழலீர்! சொலீர்
பெற்றம் ஏறுதல் பெற்றிமையோ? பெருமானிரே! 02
சங்கு செம்பவளத்திரள் முத்து அவைதாம் கொடு
பொங்கு தெண்திரை வந்து அலைக்கும் புனல் பூந்தராய்,
துங்க மால்களிற்றின் உரி போர்த்து உகந்தீர்! சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொடு ஒன்றிய மாண்பு அதே? 03
சேம வல் மதில் பொன் அணி மாளிகை சேண் உயர்
பூ மணம் கமழும் பொழில் சூழ்தரு பூந்தராய்,
சோமனும் (ம்) அரவும் தொடர் செஞ்சடையீர்! சொலீர்
காமன் வெண் பொடி ஆகக் கடைக்கண் சிவந்ததே? 04
பள்ளம் மீன் இரை தேர்ந்து உழலும் பகுவாயன
புள்ளும் நாள்தொறும் சேர் பொழில் சூழ்தரு பூந்தராய்,
துள்ளும் மான்மறி ஏந்திய செங்கையினீர்! சொலீர்
வெள்ள நீர் ஒரு செஞ்சடை வைத்த வியப்பு அதே? 05
மாது இலங்கிய மங்கையர் ஆட, மருங்கு எலாம்
போதில் அம் கமலம் மது வார் புனல் பூந்தராய்,
சோதி அம் சுடர் மேனி வெண் நீறு அணிவீர்! சொலீர்
காதில் அம் குழை சங்க வெண்தோடு உடன் வைத்ததே? 06
வருக்கம் ஆர்தரு வான் கடுவ (ன்) னொடு மந்திகள்
தருக் கொள் சோலை தரும் கனி மாந்திய பூந்தராய்,
துரக்கும் மால்விடைமேல் வருவீர்! அடிகேள்! சொலீர்
அரக்கன் ஆற்றல் அழித்து அருள் ஆக்கிய ஆக்கமே? 07
வரி கொள் செங்கயல் பாய் புனல் சூழ்ந்த மருங்கு எலாம்
புரிசை நீடு உயர் மாடம் நிலாவிய பூந்தராய்,
சுருதி பாடிய பாண் இயல் தூ மொழியீர்! சொலீர்
கரிய மால், அயன், நேடி உமைக் கண்டிலாமையே? 08
வண்டல் அம் கழனி (ம்) மடை வாளைகள் பாய் புனல்
புண்டரீகம் மலர்ந்து மதுத் தரு பூந்தராய்,
தொண்டர் வந்து அடி போற்றிசெய் தொல் கழலீர்! சொலீர்
குண்டர் சாக்கியர் கூறியது ஆம் குறி இன்மையே? 09
மகர வார்கடல் வந்து அணவும் மணல் கானல்வாய்ப்
புகலி ஞானசம்பந்தன், எழில் மிகு பூந்தராய்ப்
பகவனாரைப் பரவு சொல்மாலைபத்தும் வல்லார்
அகல்வர், தீவினை, நல்வினையோடு உடன் ஆவரே. 10