நமது பாரத நாட்டின் பெரும்பாலான மக்கள் வேத நெறியைப் பின்பற்றுபவர் என்பதைச் சேக்கிழார் தமது பெரிய புராணத்தின் துவக்கத்தில் "வேத நெறி"தழைத்தோங்க என்று விளக்குகின்றார். வேதம் அனுதினமும் தப்பட வேண்டுமென்கிறார் ஆதிசங்கரர். இதையே தமிழ் மூதாட்டி ஒளவை ஓ தாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம் என்று குறிப்பிடுகின்றனள். ஓதல் என்ற சொல் வேதம் கற்பதற்கே உகந்ததாகும். மற்ற கல்விக்கான நூல்களுக்குப் படித்தல், கேட்டல் என்ற சொற்களே பொருந்தும். வேதம் என்ற சொல் அறிவு என்ற பொருள் கொண்டது. உன்மையில் வேதம் எல்லா வகை அறிவின் பெரும் களஞ்சியமாகும். வேதம் மனிதர்களின் படைப்பல்ல என்பதே பொதுவான கொள்கை. தமிழில் எழுத்தாக்கிழவி என வேதம் போற்றப்படுகிறது. பாரம்பர்ய அபிப்ராயப்படி, வேதம் பரம்பொருளின் மூச்சுக்காற்றாகும். வேதம் என்பதும் ஆகாயவெளியில் நிலவிநிற்கும் ஒலி அலைகள் என்பார் ஆன்றோர். நவீன ஆராய்ச்சியாளர் மானிட இனத்தின் இலக்கியஆதாரமாகத் தோன்றிய முதன் முதலான ஆதாரம் வேதமெனக் கருதுகின்றனர்.
வேதத்தை நான்காக வகுத்தவர் வேதவ் வியாச முனிவர். அவை நான்கு, ருக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் அதர்வண வேதம் எனப்படும். இவை ஒவ்வொன்றிலும், மந்த்ரம் (ஸம்ஹிதை) , ப்ராஹ்மணம் (மந்த்ரங்களையும் அவற்றில் குறிப்பிடப்படும் சடங்குகளையும் விளக்கும் பகுதி) , உபநிஷத் (தத்வவிளக்கம்) , என மூன்று பகுதிகள் கானப்படும்.
ருக் வேதம்:
இதில் 1017 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களில் மொத்தம் 15,000 செய்யுள்கள் உள. இவை 10 மண்டலங்கள் எனும் பகுதிகளாக வகுக்கப்படுகின்றன. ஒவ்வொரு பாடலுக்கும் ஸுத்ரம் எனப் பெயர். பாக்கள் பல விதமான விருத்தங்களில் அமைந்துள்ளன. 24 அக்ஷரபதங்கள் முதல் 104 பதங்கள் வரை கொண்ட செய்யுட்கள் காணப்படுகின்றன. பொதுவாக இவ்வேதப் பாக்கள் பரம்பொருளைப் பற்றியவும், பிற தெய்வங்களைப் பற்றியவுமான துதிகளாகும்.
யஜுர் வேதம்: இவ்வேதத்தில் தற்காலம் இரண்டு பிரிவுகள் வழக்கிலுள்ளன. இவை சுக்ல, க்ருஷ்ண சாகைகள் எனப்படும். இந்த வேதம் பெரும்பாலும் உரைநடையிலுள்ளது. சிற்சில பகுதிகள் பாக்களாக அமைந்துள்ளன. வேள்விகளின் நடைமுறை, ஆங்காங்கு பிரார்த்தனைகள், தைவத் துதிப்பாடல், ருசிகரமான கதைகள் ஆகியவைகள் நிரம்பியுள்ளன.
ஸாமவேதம்: இதில் பல பகுதிகள் ருக்வேதப் பகுதிகளை ஒத்துக் காணப்படும். வேள்விகளிலும் மற்றும் கர்மாக்களிலும், ஸங்கீதபாணியில் ஒத வேண்டிய பகுதிகளும் இதிலடங்கியுள்ளன. மற்றும் ஸங்கீதம் போன்ற கலைகளைப் பற்றிய நுணுக்கங்களும், அவைகளின் வரலாறும் இதில் உள்ளன. இவ்வேதத்தில் பூர்வாசிகா, உத்ரார்சிகா என்ற இரு பகுதிகள் உள. ஒதலுக்கான விதிமுறைகளுடன் தேவர்களைத் துதிக்கும் பல பாடங்களையும் கொண்டுள்ளது.
அதர்வண வேதம் : இதன் பெரும் பகுதி செய்யுள்களாகும். ஒரு சிரு பகுதி உரைநடையிலுள்ளது. பத்யமாக உள்ள பாகத்தில் சுமார் 731 பாடல்கள் உள. இவை 10 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மூலிகைகளின் மூலமாகவும் மந்த்ரங்களாலும் நோய்களைத் தீர்க்கும் முறைகள், பேய்கள், பிசாசுகளால் ஏற்படும் இன்னல்களை நீக்கும் வழிகள், பல தத்வ போதனைகள், கலைகள் பற்றிய விவரங்கள் முதலியன இவ்வேதத்தில் காணப்படுபனவாம்.
குறிப்பு: ஆசானால் வாயினால் (புத்தகம் பாராது) ஒதப்பட்டு மாணாக்கனால் கேட்கப்பட்டு, மனப்பாடம் செய்யப்படுவதே வேதம் கற்கும் முறையாக தொன்றுதொட்டு
இன்றுவரை இருந்து வருகிறது. மந்த்ரங்களின் அக்ஷரங்களின் சரியான ஸ்வரம் (ஒலி) கொண்டு ஒதுவதே வேதம் கற்பதின் அடிப்படை அம்சமாகும். இத்தகைய சரியான உச்சரிப்பு, அதற்குக் காரணமாக அக்ஷரங்களின் ஒலி, மனித உடலின் உட்பகுதியில் எந்தெந்த இடங்களில் எழும், மற்றும் உச்சரிக்கும் போது ஒரு அக்ஷரத்தின் ஒலிக்கும் அடுத்து வரக்கூடியதற்குமிடையே ஏற்படக்கூடிய இடைவேளி (மாத்ரை) , ஆகிய அவசியமான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
வேத மந்த்ரங்கள் எப்படி உலக வாழ்க்கையை ஒட்டியுள்ளன என்பதைக் காண்போம்.
ஒரு மந்த்ரம் தேவர்களை மனிதர் வேண்டுகின்றதாகும்.
ஏ தேவர்களே நாங்கள் எப்போதும் நல்லவற்றினையே காதினால் கேட்கவேண்டும். நல்லவற்றினையே கண்களால் பார்க்கவேண்டும். வலிமையுடன் கூடிய உடலைப் பெற்று, உங்களைத் துதித்து வணங்கும் வாய்ப்பை நல்குவீர்களாக. அதனால் நான்முகன் அளித்த நீண்ட ஆயுளைப்பெற்று வாழ வேண்டும்.
மற்றொறு மந்த்ரத்தின் கருத்து
வாயு மண்டலத்திலிருந்து வீசும் காற்று நன்மையைக் கொடுக்கட்டும். சூரியன் (வெப்பத்தால் தீங்கு விளைவிக்காது) நன்மை நல்கும் கதிர்களையே அளிக்கவேண்டும். பகலும் இரவும் ஸுகத்தைத் தர வேண்டும்.
பிற ஒன்றின் பொருளாவது:
நமக்குத் தேவை ஏற்படும் பொதெல்லாம் மழை பொழிய வேண்டும். பயிர்கள் யாவும் செழித்து வளர்ந்து மனித சமுதாயத்திற்குப் பயன் அளிக்கவேண்டும். அரிய பொருள்கள் கிடைக்கவேண்டும். கிடைத்த பொருட்கள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். எல்லாம் வல்ல இறைவன் இவ்விருப்பங்களை நிறைவேற்றுவானாக.
மேற்கண்ட மூன்றும் மானிடர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது இறைவனின் அருள் என்பதில் நம்பிக்கையைக் காட்டுகின்றது. மேலும் ஒருவனுக்கு மட்டுமில்லாது சமுதாயத்திற்கே நன்மை வேண்டப்படுவதும் தெளிவு. வேதம் பொதுவுடமைக் கொள்கையைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, அதிக விரிவான முறையில் போதித்துள்ளது என்பது, திருமண மந்த்ரம் ஒன்றில் காணப்படுகிறது. அதில் நான்கு கால் பிராணிகளுக்கும் நலம் வேண்டப்படுகிறது. எவ்வளவு பரந்தநோக்கு. அறிவு என்ற வேதமென்ற சொல்லிற்கேற்ப வேதத்திலிருந்து தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் எண்ணற்றவையாம்.
உபவேதங்கள்:
ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தர்வவேதம், அர்த்த சாஸ்திரம் என நான்கு துணை வேதங்கள் உண்டு. ஆயுர்வேதமென்பது ஆரோக்கிய வாழ்வு, நோய்கள், அவைகளுக்கான மருத்துவம் என்பவை பற்றியது. தனுர்வேதம் ஆயுர்வேதப் பயிற்சி, போர் முறைகள் பற்றியது. காந்தர்வ வேதம் இசை, நாட்டியம், பிற கலைகளைப்பற்றிய விஷயங்களைக் கொண்டது. அர்த்த சாஸ்திரம் பொருளியல், அரசியல் முறைகள் பற்றிக் கூறுவதாகும்.
வேதாங்கங்கள்:
வேதங்களுடன் தொடர்பு கொண்டு, வேதத்தின் உறுப்புகளாக அமைந்துள்ளவை வேதாங்கங்கள் அவை சி¬க்ஷ, (உச்சரிப்பு) , ஜோதிடம், நிருக்தம் (சொல்லிலக்கணம்) , வ்யாகரணம் (இலக்கணம்) , சந்தஸ் (செய்யுள் இலக்கணம்) , கல்பம் மதஸம்பந்தமான கிரியைகளின் செயல்முறை இவை ஆறும் ஷடங்கங்கள் (ஆறு வேத உறுப்புகள்) எனப்படும். சடங்கு என்ற தமிழ் சொல் ஷடங்கம் என்பதின் திரிபு எனலாம்.
உபநிடதங்கள்:
உபவேதங்கள், வேதாங்கங்கள் போலல்லாது உபநிடதங்கள் வேதங்களின் பகுதிகளேயாகும். உபநிடதங்களில் தோய்ந்து கிடக்கும் அறிவு பல
பெயர்களால் அழைக்கப்படும். வேதங்களின் சிரம் அல்லது ரஸம் உபநிடதம் என்பர். தத்வ அறிவுப் பொக்கிஷங்களாக விளங்குவதன்றி இவை இலக்கியச்சுவை நிறைந்தவை. உபநிஷத் (உபநிடதம்) என்ற சொல்லிற்கு, பரம்பொருளின் அருகே கொண்டு செல்வது
என்பது பொருள். உபநிடதங்களின் எண்ணிக்கை 108. இவற்றுள் முக்கியமானவை பத்தாகும். அவை.
1. ஈச (ஈசாவாஸ்ய என்றும் கூறப்படும்)
2. கேன்.
3. கட.
4. ப்ரசன.
5. முண்டக,
6. மாண்டூக்ய.
7. தைத்ரிய,
8. ஐத்ரேய,
9. சாந்த்தோக்ய,
10. ப்ருஹதாரண்யக.
அனேகமாக பெரும்பாலான உபநிடதங்கள் ஏதேனும் ஒரு வேதசாகையுடன் தொடர்புள்ளதாகும். ஐதரேய உபநிஷத் ருக் வேதத்தைச் சார்ந்தது. ஈச, ப்ருஷதாரண்யகம் சுக்ல யஜுர் வேதத்தையும், கட தைத்திரிய உபநிஷதங்கள் க்ருஷ்ண யஜுர் வேதத்தையும், கேனமும், சாந்த்தோக்யமும், ஸாம வேதத்தையும், ப்ரச்ன, முண்டக, மாண்டூக்யம் ஆகியவை அதர்வண வேதத்தையும் சார்ந்தவை. எஞ்ஞான்றும் திகழக்கூடிய அறிவுறைகளையும், ஒழுக்க முறைகளையும், கொண்ட பல கதைகள் உபநிடதங்களில் காணப்படுகின்றன.
சில சுவைமிக்க கதைகளை காண்போம்:
எவ்வளவு மேன்மையும், வலிமையும் கொண்டு வாழ்ந்தாலும், கர்வமுடையோர் அவமதிப்படைவதுடன் ஆன்மிக அறிவும் அடையமுடியாது. என்பதை கேனோபநிஷத்திலுள்ள ஒரு கதை விளக்குகின்றது.
ஒருமுறை தேவர்களும் அரக்கர்களும் போர் மூண்டதில் தேவர்கள் வென்றனர். தமது வீரத்தால் வென்றதாகக் கர்வம் கொண்டு, பாராட்டு விழா நடத்தினர். பரம்பொருள் இவர்களின் கர்வத்தை அடக்க எண்ணி, இன்னதென்று புலப்படாத பெரிய பொருளாய் (யக்ஷஸாக) வானளாவி நின்றது. யாரென்றறிய இந்திரனால் அனுப்பப்பட்ட அக்னிதேவன் அதனருகில் சென்றார். இது நீயாரென்று கேட்டபோது, உலகிலுள்ள எப்பொருளையும் எரிக்கும் ஆற்றலுள்ளவனென்று தன் சக்தியைக் கூறினான். உடனே அந்த யக்ஷஸ் ஒரு சிறு துரும்பைக் கீழே போட்டு அதனை எரிக்குமாறு கூறியது. தன் வலிமை முழுதும் செலுத்தியும் எரிக்க முடியாமற்போகவே வெட்கத்துடன் தலைகுனிந்து திரும்பினான் அக்னிதேவன்.
பிறகு வாயுதேவன் சென்று பார்த்தான். உலகிலுள்ள எப்பொருளையும் அசைக்கச்செய்யும் ஆற்றலுடையவனென்றும் தன்னை மாதரிச்வா என்று அழைப்பரென்றும் தன் பெருமையை கூறினான். அந்த யக்ஷன் தன்முன் கிடைத்த அத்துரும்பை அசைக்குமாறு கூறியது. தன் வலிமை முழுவதையும் திரட்டிச்செலுத்தியும் அதனை வாயுவானால் அசைக்க முடியவில்லை. ஆகவே வாயுதேவனும் தோல்வியுடன் திரும்பினான்.
பிறகு இந்திரன் தானே நேரில் சென்றான். அவன் அங்கு சென்றதும் யக்ஷஸ் மறைந்துவிட்டது. அக்னி. வாயு. இருவருக்கும் கானக்கிடைக்காத வாய்ப்புக்கூட தனக்குக் கிடைக்கவில்லையென இந்திரன் வருந்தி நின்றான். அப்போது ஆத்மவித்தையே உமாஸ்வரூபமகக் காட்சியளித்தது, கர்வத்தை அடக்கவே, இந்த நிகழ்ச்சி நடந்தது என்று கூறி தத்வோபதேசம் செய்தாள் தேவி எனும் பராசக்தி.
பரம்பொருளின் அருகிற்சென்று உரையாடும் பேறு பெற்றதனாலேயே தேவர்களுள் அக்னி, வாயு, இந்திரன் ஆகிய மூவரும், முக்கியமானவர்களாகவும் அதிக வன்மை படைத்தவர்களாகவும் விளக்குகின்றார்.
நசிகேதஸின் கதை மிகவும் அதிகமாகத் தெரிந்தது .
நசிகேதஸ் என்பவன் ஒரு மிகக் கற்றறிந்த இளைஞன். அவனுடைய தந்தை ஒரு வேள்வி நடத்தினார். அவ்வேள்வியினை, பல தேவர்களும் அறிஞர்களும் வருகைதந்து, சிறப்பித்தனர்.முடிவில் அவர் தேவர்களும், அறிஞர்களும், பல்வகைப் பொருள்களைத்
தானம் செய்கிறார். தன்னுடைய பிரியமான மகனான நசிகேதஸை யமனுக்குத் தானம் செய்தார். தன் வலிமையால் நசிகேதஸ் தன் பூத உடலுடன் செல்லலானான். யமலோகத்தை அடைந்த வாலிபன், உணவின்றி, மூன்று நாட்களை எமனின் வீட்டில் கழித்தான். அந்நாட்களில் எமன் எங்கோ வெளியே சென்றிருந்தான். அறக்கோட்பாடுகளை செவ்வனே
அறிந்து அவைகளை முறைப்படி கடைபிடிப்பதில் தவறாதவனாதலால் யமனுக்கு தர்மராஜன் என்ற புகழ் பெயர் உண்டு. நீதிவழுவா யமன் வீடு தரும்பியபோது, இல்லத்திற்க்கு விருந்தினராக வந்த ஒருவன் பட்டினியால் வாடிக்கிடப்பதைக் கண்டு நடுங்கி, நசிகேதஸை வணங்கினான். விருந்தினன் எந்த வீட்டில் கவனிக்கப்படாது பட்டினியாகக் இருக்கின்றானோ, அவ்வீட்டில் செல்வங்கள் அழிவதுடன், மக்களுக்கு தீங்கு நேரிடும் என்பதை உணர்ந்த யமன், மூன்று நாட்கள் தன் வீட்டில் உணவின்றி தங்கிய நசிகேதஸைப் பார்த்து அன்ப!. மூன்று தினங்கள் இங்கு c பட்டினி கிடந்தால், அதற்கு நான் வருந்துகிறேன். அந்த பாவத்தைப் போக்கிக் கொள்ளும் வகையில் உனக்கு மூன்று வரங்கள் தருகின்றேன். c விரும்புவதைக் கேள், எனத் துயரத்துடன் கூறினான்.
இந்த பூதவுடலுடன் என்தந்தையுடன் நான் போய்ச்சேரவேண்டும், அவர் என்னிடம் கோபம் கொள்ளாதிருக்க வேண்டும் என்பது எனக்கு முதல் விருப்பம். ஸ்வர்கத்தையடையக் காரணமாயுள்ள நாசிகேதசயனம் என்ற வேள்வியைப் பற்றி எனக்கு உபதேசம் செய்தலை இரண்டாவதாக வேண்டுகிறேன். மூன்றாவதாக ஆத்மதத்வ அறிவை எனக்கு அளிக்க வேண்டும், என மூன்று வரங்களை நசிகேதஸ் வேண்டினான். முதல் இரண்டு வரங்களை வழங்கிவிட்டு, யமன் ஆத்ம தத்வத்தை விளக்க மறுத்து, நசிகேதஸை பல விதமான ஆசைகளை காட்டி மயக்க முயன்றான். நசிகேதஸ் சிறிதும் மனம் சலிக்காது. பிடிவாதமாக ஆத்மதத்வ அறிவைத் தவிர வேறேதும் வேண்டாமென்று கூறி விட்டான். இளைஞனின் உறுதிப்பாட்டை உணர்ந்து, உண்மை வழுவா யமதர்த்தன், நசிகேதஸுக்கு ஆத்ம தத்வ ஞானத்தை உபதேசித்தான். பெருமகிழ்ச்சியுடன், யமலோகத்திலிருந்து நசிகேதஸ், பூதவுடலுடன் பூவுலகில் உள்ள தன் தந்தையிடம் திரும்பி வந்தான். விருந்தோம்பலின் பெருமையையும், மானிடனின் ஆசைகளமைய வேண்டிய முறையையும் இக்கதை விளக்குகின்றதன்றோ.
3. முயற்சி திருவினையாக்கும் என்ற தத்துவத்தை விளக்க ஒரு உபநிடதத்தில் ஒரு கதை கூறப்படுகின்றது.
டிட்டிப என்ற சிறு குருவி இனத்தைச் சேர்ந்த இரு பறவைகள் (ஆணும் பெண்ணும்) கடலோரமாகவுள்ள ஒரு பெரிய மரத்தின் வேர்ப்பகுதியில் உள்ள பொந்தில் வாழ்ந்து வந்தன. ஒரு சமயம் பெண்பட்சி சில முட்டைகளை இட்டது. ஒரு நாள் காலை ஆண், பெண் பறவையை உணவுதேட வெளியேபோக அழைத்தது. பெண் இன்று வேகமாக காற்று வீசுகிறது. கடல் அலைகள் எழுந்து பொந்தில் உள்ள முட்டைகளை கடத்திவிடலாம். ஆதலால் நான் இங்கேயே இருந்து, அலையெழும்பினால் மரத்தின் மேல்கிளைக்குக் கொண்டு சென்று பாதுகாத்துக் கொள்கிறேன். c போய் உணவு தேடி வா என்றது. ஆண்பறவை சினங்கொண்டு உன் முட்டைகளை கடல் அடித்துச் சென்றால் நான் போராடி மீட்டுத் தருகிறேன் வா போகலாம் என்றது. பெண்பட்சியும் அதனுடன் சென்றது. சிறிது நேரம் சென்றபின் வலுவான காற்று வீசவே, அலைகள், மேலெழுந்து வர, மரப்பொந்தில் கடல் நீர் நிரம்பியதால் முட்டைகள் அடித்துச் செல்லப்பட்டன. மதியம் இருபறவைகளும் திரும்பிவந்து முட்டைகள் அடித்துச் செல்லப்பட்டதை அறிந்தன. துயரமும் கோபமுங் கொண்ட பெண்ணை, ஆண் பட்சி தேற்றி, நாம் இக்கடல் நீரை உறிஞ்சி முட்டைகளைப் பெறலாம் எனக் கூறியது. பெண் பட்சி போதும் உன் மடமை, முட்டைகள் போனதுமன்றி நாமும் மடியவேண்டாம், என்றது. பிடிவாதமாக ஆண் இருக்கவே பெண்பட்சி மனமில்லாமல் அதனுடன் கடல் நீரை இரண்டும் தம் அலகுகளால் சிறு திவலைகளில் உறிஞ்சி, கடற்கரை மணலில் தெளிக்களாயின.
சிறிது நேரம் சென்றபின் பல சிறு பட்சிகள் அங்கு வந்து, அவ்விரு பறவைகளின் சோகக் கதையையும், அவைகளின் முயற்சியைப் பற்றியும் தெரிந்து கொண்டு தாமும் அவைகளுடன் சேர்ந்து தண்ணீரை உறிஞ்சலாயின. பின்னர் அவ்வழியே சென்ற பெரிய பறவைகளும் செய்தி கேட்டு, இனம் இனத்தைச் சேரும் என்ற முதுமொழிக் கேற்ப கேலிக்கிடமான கார்யத்தில் குதித்தன. பிற்பகலில் அவ்வழியே ஆகாய வீதியில் சென்று கொண்டிருந்த நாரத முனிவர் கீழே கடற்கரையில் அநேக பட்சிகள் தண்ணீரை உறிஞ்சி மணலில் தெளிப்பதை பார்த்து வியந்து, கீழிறங்கி வந்து, பறவைகளின் நோக்கம் யாது என வினவி, அதனை அறிந்து, அவைகளின் முயற்சி பயனளிக்கவல்ல உபாயம் ஒன்றினைக் கூறினார். சிறிய மூக்குகளையுடைய உங்களால் கடல் நீரை வற்றச் செய்து, முட்டைகளைப் பெறுவது இயலாது. உங்கள் அரசான கருட பகவானைக் குறித்துத் துதி செய்து, அவனது உதவியால் உங்களது விருப்பத்தை அடையுங்கள், இப்படிக்கூறிவிட்டு முனிவர் விண்ணுலகிற்கேகி பறவைகளின் பரிதாபமான நிலையைத் தேவர்களுக்குத் தெரிவித்தார். கருடன் பூவுலகிற்க்கு வந்து அக்கடற்கரையை யடைந்தான். இரு குருவிகளின் கதையைக் கேட்டான். எல்லாப் பட்சிகளும் கருடனைத் துதித்து வேண்டி நின்றன. கருடன் தன் மாபெரும் அலகினால் கடல் நீரை இழுக்க கடல் வற்றத் தொடங்கியது. கடலரசன் மானிட உருவில் தோன்றி கருடன் செய்யும் கார்யத்தின் காரணத்தை அறிந்து, குருவியின் முட்டைகளை அக்கருடனின் காலடியில் வைத்துச் சென்றான். குருவித் தம்பதிகள் மகிழ்ச்சியடைந்தன. கருடனும் பிற பட்சிகளும் தன் இருப்பிடம் சென்றன.