மஹா சிவராத்திரி பூஜை எ ல்லாம் வல்ல பரம் பொருளாகிய ஸர்வேஸ்வரனான ஜோதிஸ்வரூபமாக இருக்கின்ற பரமேஸ்வரன் பரம கருணையோடு உலகத்தில் இருக்கின்ற ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு ல

மஹா சிவராத்திரி பூஜை

ல்லாம் வல்ல பரம் பொருளாகிய ஸர்வேஸ்வரனான ஜோதிஸ்வரூபமாக இருக்கின்ற பரமேஸ்வரன் பரம கருணையோடு உலகத்தில் இருக்கின்ற ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு லிங்க ரூபமாக காட்சி தந்து அருள் பாலித்து வருகிறார். அந்த லிங்கமானது மாசி மாதத்தில் கிருஷ்ணபக்ஷ சதுர்தசி தினத்தில் இரவு மூன்றாவது ஜாமத்தில் தோன்றியது. அப்படித் தோன்றிய காலமே லிங்கோத்பவ காலம் அதுவே மஹாசிவராத்திரி தினமாகும். அந்த சிவராத்திரியானது சாந்ர சௌரமான மாதங்களில் ஒன்றான மாசி மாதத்தில் கிருஷ்ணபக்ஷ சதுர்தசி மூன்றாவது ஜாமத்தில் இருக்கும்பொழுது மஹாசிவராத்திரி புண்ய தினமாகும்.

அந்த மஹா சிவராத்திரி புண்ய தினம் முழுவதும் உபவாஸமாக இருந்து தூங்காமலும் இருந்து பரம்பொருளான ஸ்ரீசிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு பதினாறு பேறுகளுடனும் இகபர சௌபாக்யமும் கிடைக்கும். ( உபவாஸம் என்பது உணவு அற்ற நிலையையும் மற்றும் அன்றைய தினம் முழுவதும் மனதினாலேயும் சரீரத்தினாலேயும் ஸர்வேஸ்வரனை தியானம் செய்து பரமேஸ்வரனுடைய அருகிலேயே இருப்பது உபவாஸம் என்பதாகும்) .

சிவராத்திரி பூஜையானது பன்னிரெண்டு மாதங்களிலும் செய்ய வேண்டும். ஆனால் மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரியானது மஹா சிவராத்திரியாகும். பன்னிரெண்டு மாதங்களிலேயும் விரதம் இருந்து பூஜை செய்ய முடியாதவர்கள் மஹா சிவராத்திரி தினத்தன்று விரதமிருந்து பூஜை செய்வார்களேயானால் அவர்களுக்கு பன்னிரெண்டு மாதமும் சிவராத்திரி பூஜை செய்த பலனானது கிடைக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

மஹாசிவராத்திரி தினத்தன்று ஸந்த்யா வந்தனம் முதலான நித்யானுஷ்டானங்களைச் செய்து நித்யா பூஜைகளை செய்து உபவாஸமாக இருக்க வேண்டும். மாலையில் ஸ்நானம். ஸந்த்யா வந்தனம் முதலான அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு இரவில் நான்கு ஜாமத்திலேயும் நான்கு கால பூஜை செய்ய வேண்டும். முதல் ஜாமத்தில் முதற்கால பூஜையில் 108 கலசங்களை வைத்து ஸ்நபன பூஜைகள் செய்து சந்தனாதி தைலம், அரிசி மாவு, நெல்லிமுள்ளி, பஞ்சாமிருதம் இவைகளை அங்க மந்திரங்களைச் சொல்லி அபிஷேகம் செய்ய வேண்டும். மஞ்சள் பொடியை அஸ்த்ரமந்திரங்களைச் சொல்லி அபிஷேகம் செய்ய வேண்டும். பால், இளநீர் இவைகளை பஞ்சப்ரும்ம ஷடங்க மந்திரங்களை சொல்லி அபிஷேகம் செய்ய வேண்டும். மூலமந்திரத்தினால் சந்தனாபிஷேகமும், ஸ்நபனாபிஷேகமும் செய்ய வேண்டும். பதமந்திரத்தினால் சங்காபிஷேகம் செய்ய வேண்டும். பின்பு ஆடை ஆபரணங்களினால் அலங்காரம் செய்து சந்தனம் சாற்றி அகில், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ முதலியவைகளால் முறைப்படி அர்ச்சனை செய்ய வேண்டும். முதற்காலத்திற்கு மல்லிகைப் புஷ்பம், வில்வம், அருகம்புல், அக்ஷதை ஆகியவைகளால் நன்கு பூஜிக்க வேண்டும்.

பின்பு தூபதீபம் காட்டி வெண்பொங்கல், பக்ஷணம், பழம், தாம்பூலம் ஆகியவைகளை வைத்து நிவேதனம் செய்து ஹோசோபசார தீபராதனைகள் செய்து அக்னியில் ஸமித்து, நெய், அன்னம், எள்ளு, நெற்பொறி இவைகளை கொண்டு மூலபஞ்ச ப்ரும்ம ஷடங்க மந்திரங்களினால் ஹோமம் செய்ய வேண்டும். பின்பு பலி தானம் கொடுத்து பரமேஸ்வரனிடத்தில் ஹோம விபூதியை அர்ப்பணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும்.

இரண்டாவது ஜாமத்தில் இரண்டாவது கால பூஜை செய்ய வேண்டும். இரண்டாவது காலத்திற்கு 49 கலசங்களை வைத்து ஸ்நபன பூஜை செய்ய வேண்டும். முதற்காலம் போல் அபிஷேகங்கள் செய்து அலங்காரங்கள் செய்து தாமரை, வில்வம், நீலோத்பலம் போன்ற புஷ்பங்களினால் அர்ச்சனை செய்து பாயஸம், க்ருசரன்னம், (எள்ளு, வெல்லம், நெய் கலந்த அன்னம்) பக்ஷணம், பழங்கள், தாம்பூலம் இவைகளை நிவேதனம் செய்து முதற்காலம் போல் பூஜா ஹோம பலி தானங்களை செய்து நமஸ்கரிக்க வேண்டும்.

மூன்றாவது ஜாமத்தில் மூன்றாவது பூஜை செய்ய வேண்டும். 25 கலசங்களை வைத்து ஸ்நபன பூஜை செய்ய வேண்டும். முதற்காலம் போல் அபிஷேகங்கள் செய்து அலங்காரங்கள் செய்து ஜாதிபுஷ்பம், வில்வம், அருகம்புல்லினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், பக்ஷணம், பழங்கள் தாம்பூலம் இவைகளை நிவேதனம், உபசாரம் பூஜா ஹோம பலிதானங்களை செய்து நமஸ்கரிக்க வேண்டும்.

நான்காவது ஜாமத்தில் நான்காம் கால பூஜை செய்ய வேண்டும். 9 கலசங்களை வைத்து ஸ்நபன பூஜை செய்ய வேண்டும். முதற்காலம் போல் அபிஷேகங்கள் செய்து அலங்காரங்கள் செய்து அடுக்கு நந்தியாவட்டை, வில்வம், அருகம்புல், அக்ஷதையினால் அர்ச்சனை செய்து சுத்தான்னம், பக்ஷணம், பழங்கள் தாம்பூலம் இவைகளை நிவேதனம் செய்து உபசாரம், பூஜா ஹோம பலிதானங்களை செய்து நமஸ்கரிக்க வேண்டும்.

நான்கு கால பூஜைகளிலேயும் ஐந்து முகத்திற்கும் விசேஷ நிவேதனங்களும் செய்யலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. அவையான ஈசான முகமான ஊர்த்வ மேல் முகத்திற்கு வெண்பொங்கல் நிவேதனமும், தத்புருஷ முகமான கிழக்கு முகத்திற்கு சுத்தான்னமும், அகோரமுகமான தெற்கு முகத்திற்கு பாயஸமும், வாமதேவமுகமான வடக்கு முகத்திற்கு சர்க்கரைப் பொங்கலும் ஸத்யோஜாத முகமான மேற்கு முகத்திற்கு க்ருசரன்னமும் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறாக பிரதி காலமும் விஷேச நிவேதனம் செய்யலாம் என்று காரணா கமத்தில் கூறப்பட்டுள்ளது.

மேற் கூறிய வண்ணம் சிவராத்திரி பூஜையை தானும் தன் குடும்பமும் நலம் பெறுவதற்காக ஆத்மார்த்த லிங்கத்திற்கு விஷேச பூஜைகள் செய்யலாம். இவ்வாறாக பிறருக்காகவும், லோக க்ஷேமத்திற்காகவும், ஆலயங்களில் இவ்வாறாக வழிபாடு செய்யலாம். அப்படி வழிபாடு செய்பவர்கள் பாவங்கள் நீங்கியும், நீண்ட ஆயுளும், பதினாறு வகையான செல்வங்களும், வெற்றியும், யார் யார் என்னென்ன விரும்புகிறார்களோ அவைகளும் மோக்ஷ சாம்ராஜ்யமும், இகபர சௌபாக்யமும் பெற்று பெரு வாழ்வு வாழ்வார்கள்.

முன்னொரு காலத்தில் சிவராத்திரி தினத்தன்று காட்டிலே ஒரு வில்வ மரத்தடியில் ஒரு லிங்கமானது இருந்தது. அந்த மரத்தின் மேலே ஒரு குரங்கு இருந்தது. அந்த குரங்கு அந்த மரத்திலுள்ள பூச்சிகளை பிடித்து தின்பதற்காக ஒவ்வொரு வில்வதளமாகப் பிடுங்கி பூச்சியை தின்றது. பூச்சி இல்லாத வில்வதளத்தை லிங்கத்தின் மேல் போட்டது. ஆனால் அன்றைய தினம் மஹாசிவராத்திரி தினமாகும். மஹாசிவராத்திரி தினத்தன்று வில்வங்களை லிங்கத்தின் மேல் போட்டதனால் மறு ஜென்மத்தில் அந்தக் குரங்கு சக்கரவர்த்தியாகப் பிறந்து வளர்ந்து சக்ரவர்த்தியாகவே இருந்தது.

அந்த சக்கரவர்த்தியின் பெயர் '' முசுகுந்த சக்கரவர்த்தி ''. அறியாமலேயே மஹாசிவராத்திரி தினத்தன்று லிங்கத்தின் மேல் வில்வங்களை போட்டதனால் மறுஜென்மாவில் சக்கரவர்த்தியானது குரங்கு.

ஆறு அறிவு படைத்த நாம் தத்துவங்களை அறிந்து மஹாசிவராத்திரி தினத்தன்று உபவாசத்துடன் கண் விழித்தும் வில்வம் புஷ்பங்களினால் லிங்கத்தை அர்ச்சித்தும் தியானித்தும் பரமேஸ்வரனை வழிபாடு செய்யும் பொழுது நமக்கு என்னென்ன பேரின்பங்கள் கிடைக்கும் என்பதை யோசித்து பார்த்து மஹாசிவராத்திரி பூஜைகளை மனம் நிறைவுற செய்து ''அவன் அருளாளே அவன்தாள் வணங்கு''என்பதன் ப்ரகாரம் அவன் அருளாளே பதினாறு செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ உமையரு பாகனின் திருத்தாள் வணங்கி ப்ரார்த்திக்கிறேன்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

வில்வ மரம் பிரதக்ஷிணம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

* கங்கை போன்ற புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்

* காசி முதல் இராமேஸ்வரம் முடிய உள்ள சிவ ஸ்தலங்களை தரிசனம் செய்த பலன் கிடைக்கும்.

* மூன்று ஜென்மங்களில் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும்.