ஆயுர் வேதம் பசி ஆபிஸில் மும்மரமாக வேலையில் மூழ்கியுள்ளோம், அல்லது நீண்ட தூர பயணம் செய்கிறோம் அல்லது முக்கியமான ஒரு மீட்டிங்கில் அமர்ந்திருக்கிறோம்,

ஆயுர் வேதம்

பசி

ஆபிஸில் மும்மரமாக வேலையில் மூழ்கியுள்ளோம், அல்லது நீண்ட தூர பயணம் செய்கிறோம். அல்லது முக்கியமான ஒரு மீட்டிங்கில் அமர்ந்திருக்கிறோம், இப்படி பல்வேறு நிலைகளில் பசியைக்கூட சிலர் மறந்து வேலையை தீவிரமான கவனத்துடன் செய்வார்கள், முன் உண்ட உணவு முழுதும் ஜீர்ணமாகி குடல், வயறு காலியாக இருக்கும் போது, வாயுகுடலில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஊறி வரும் பித்த நீரை வாயுதான் உந்தல் சக்தி மூலமாக இரைப்பைக்கு கொண்டு வருகிறது. சாப்பிட வேண்டும் என்ற அவா நமக்கு எழுந்தாலும் சூழ்நிலை மற்றும் வேலைபளு காரணமாக குறித்த நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ள முடியாமற் போகிறது. பசியை அடக்குவது என்ற செயலை தொடர்ந்து செய்யவேண்டிய சூழ்நிலையில் உள்ளவருக்கு கீழ்காணும் தொந்தரவுகள் ஏற்படக்கூடும்.

1. உடல் முழுவதும் வலி, 2. ருசியின்மை 3. உடல் தளர்ச்சி, உடல் இளைப்பு 4. வயிற்றில் வலி 5. தலைச்சுற்றல்

பசி ஏற்பட்டவுடன் உணவை உண்ணும் வழக்கம் சரியாக அமையுமானால் மேற்குறிப்பிட்ட உபாதைகள் தோன்ற வழியில்லை. பசி வந்து அடங்கி விட்டது, நீண்ட நேரம் கழித்து வீட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும் சப்பாத்தி குருமா, அல்லது ஆறிப்போன ரசம் சாதம் ஆகியவற்றை சிறிய டிபன் பாக்ஸை திறந்து சாப்பிடுவதை காண்கிறோம். இது மிகத் தவறாகும். சூட்டை தக்க வைக்கும் புதிய அழகான வடிவங்களில் டிபன் பாக்ஸ்கள் அறிமுகமாகியுள்ளன. அவைகளை உபயோகிப்பதே நல்லது. ஆயினும் பசி அடங்கிவிட்ட நிலையில் எளிதில் ஜீரணிக்க முடியாத கோதுமை உணவை தவிர்த்தலே நலம்தரும்.

ஒரு சமயம் பேருந்தில் காஞ்சிபுரம் செல்லும்போது அருகில் பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார். பேருந்து நல்லது வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. தன் கைப்பையிலிருந்து சிறிய டிபன் பாக்ஸை அதில் நான்காக மடித்து வைத்திருந்த சப்பாத்தியை சாப்பிட ஆரம்பித்தார். பார்த்த நமக்கு ஆச்சர்யம் எத்தனை தூசி. டீசல் புகை. காற்றிலுள்ள கிருமிகள் ஆகியவை சப்பாத்தியில் படிகின்றன. குலுங்கிச்செல்லும் பேருந்தில் உணவை உட்கொணடால் ஜீரணகோசங்களில் பாதிப்புகள் எவ்வளவு? என்பதை அறியாமல் பக்கத்தில் மனிதர்கள் அமர்ந்திருக்கிறார்களே என்ற கவலை ஏதுமில்லாமல் ஒரு அம்மணி பேருந்தில் உண்கிறார் என்றால் அது காலத்தின் கட்டாயிமல்லாமல் வேறு என்னவாக இருக்கக்கூடும்? அவசர கதியில் வேலைக்கு செல்வோரின் அவல நிலை இன்று இப்படித்தான் இருக்கிறது. இருப்பினும் அவர்களும் உணவில் சிரத்தையோடுதான் இருக்கவேண்டும், ஆபிஸுக்குச் செல்வதால் பணம் சம்பாதிக்கலாம், அதற்காக கண்ட நேரத்தில் உணவு உட்கொண்டால் தர்மார்த்த காமமோக்ஷங்களுக்கு ஆதாரமான ஆயுஸ்ஸை சம்ரக்க்ஷணம் செய்யமுடியாமல் போய்விடும்.

பசியை அடக்குவதால் மேற்குறிப்பிட்ட பிணிகள் தோன்றினால் சீக்கிரத்தில் ஜீரணிக்கக்கூடிய ஆகாரத்தை சூடாக சாப்பிடவேண்டும். சூடான பால். நெய் கலந்த கஞ்சி முதலியவைகளை சிறிய அளவில் கொடுக்க வேண்டும். பட்டினி அதிக நாளிருந்தால் ஜீர்ண சக்தி குறைந்திருக்கும், அதிக அளவில் உணவை அச்சமயத்தில் உபயோகித்தால் ஜீர்ணமாகாததுடன் பல நோய்களும் உண்டாகும், எப்படி சிறிய அளிவிலருக்கும் நெருப்பை, தேங்காய் நார், விராட்டி, பிறகு சிறிய விறகுக் குச்சிகள் முதலியவைகளைக் கிரமமாகப் போட்டு பெரிய அளவிற்கு பற்ற வைக்கிறோமோ அதே போன்றுதான் பசித்தீயையும் பெரிது படுத்த வேண்டும். இதற்கான வழிகளை ஆயுர்வதேம் கீழ்காணும் விதம் சிறப்பாக எடுத்துரைக்கிறது.

மண்டம் - இது இருவகை - பருக்கையை நீக்கித் தெளிவாக எடுத்துக்கொள்வது அஸிக்த்தமண்டம் (அஸிக்த்த - பருக்கையற்றது) . பருக்கையை நீக்காமல் கலக்கி எடுத்துக்கொள்வது ஸஸிக்த்த மண்டம் (ஸஸிக்த்த -பருக்கையுள்ளது) . மண்டம் என்றால் திரவாம்சம் அதிகமாயுள்ளதெனப் பொருள். இதைத் தயாரிக்கும் வழி - வறுத்த முழு அரிசி 1 பங்கு, ஜலம் 20 பங்கு, இந்த ஜலத்தில் கால் பங்கு சுண்டும் வரை கொதிக்க விட்டு இறக்கிக்கொள்ளவும். முன் கூறியபடி பருக்கை நீக்கி இதை உபயோகிக்க மிக எளிதில் ஜீர்ணமாகும். பருக்கையை நீக்காமல் கலக்கிக் குடிக்க இதுவும் லேசானதே. ஆனால் பருக்கையற்றதை விட இது சற்று கடினமானது.

பேயா - மண்டத்தைவிட சற்று நீர் தடித்த கஞ்சி இது. வறுக்காத அரிசியின் பெருங்குருணை 1 பங்கு, ஜலம் 16 பங்கு, ஜலத்தில் சரிபாதி சுண்டக்காய்ச்சி வெந்த குருணையையும் திரவத்தையும் சேர்த்தே சாப்பிடவேண்டும்.

விலேபீ - பேயாவை விட சற்றுத் தடித்த கஞ்சி இது. வறுக்காத அரிசியின் சிறுகுறுணையைக் கொண்டு இதைத் தயாரிக்கவேண்டும். அரிசிக்குருணை1 பங்கு, ஜலம் 12 பங்கு, ஜலத்தில் சரிபாதி சுண்டக்காய்ச்சி அப்படியே கலக்கிச் சாப்பிட வேண்டும். இந்தக்கஞ்சி கெட்டியானது. அதிக சத்துள்ளது.

மேற்குறிப்பிட்ட வகையில் கிரமமாக கஞ்சிகளை இருவேளையோ மூன்று வேளையோ சாப்பிட்டு வர பசித்தீக்கு அதுவே அருமருந்தாகி சிறிது சிறிதாகக் அதன் ஜீவாலை பெரிதாகி குறிப்பிட்ட நேரத்தில் பசி எடுக்கத் தொடங்கும். நன்கு பசி எடுக்கத் தொடங்கியதும் மறுபடியும் அதை அடக்கும் பழக்கத்தை விட்டு, சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளும் வழக்கத்தை ஒவ்வொருவரும் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, தொடர்பு கொள்க:
- ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை, நசரத்பேட்டை-602 103. Tel : (044) 26272162, 26491823, Email: sjcac@vsnl.net