கங்கை சுரக்கும் திருவடி : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

தாமரை என்றால் அதிலிருந்து தேன் சுரக்க வேண்டும். பகவானின் பாத தாமரையிலிருந்து எந்த தேன் சுரக்கிறது?

திவ்யதுநீ மகரந்தே

‘மகரந்தம்’ என்றால் தேன்’. ‘துநீ’ என்றால் நதி. ‘திவ்யதுநீ’ என்றால் தேவ லோகத்து நதி. கங்கைதான் ஆகாசத்திலும் பூமியிலும் பாதாளித்திலும் மூன்று பெயர்களில்* பாய்கிற நதி. மஹாபலி சக்ரவர்த்தியின் யாகத்தில் பகவான் குட்டை ப்ரம்மசாரியாக வந்து அப்புறம் விச்வாகாரமாக த்ரிவிக்ரமாவதாரம் செய்து ஒரே காலால் தேவலோகம் முழுதையும் அளந்தார் அல்லவா? அப்போது அந்தப் பெரிய பாதம் தேவலோகத்தை எட்டியபோது ப்ரம்மா ஓடோடி வந்து அந்த திவ்ய சரணத்துக்கு அபிஷேகம் பண்ணினார். அப்படிப் பண்ணிய ஜலமே மந்தாகினி என்ற பெயரில் ஆகாச கங்கையாகிவிட்டது. அதுதான் ‘திவ்ய துநீ’.

பகவானின் மஹா பெரிய பாத பத்மத்திலிருந்து அபிஷேக ஜலம் கங்கையாகப் பாய்வதைப் பார்க்கிறபோது வெளியிலிருந்து ப்ரம்மா அதில் ஜலத்தைக் கொண்டுவந்து வார்த்து, அந்த ஜலம் வழிகிற மாதிரி இல்லை. பெரிய தாமரைப்பூ மாதிரி இருக்கிறதே இந்தப் பாதம், இந்தத் தாமரையேதான் அந்த கங்கையான தேனைத் தன்னிலிருந்தே பொழிய விடுவதுபோல் இருக்கிறது – திவ்ய துநீ மகரந்தே.

பகவானின் பாத தாமரை ஸுகந்தம் வீசுகிறது. நாமெல்லாம் ஸெண்ட் போட்டுக்கொண்டால் தான் வாஸனை. பகவான் ஸ்வாபாவிகமாகவே (இயற்கையாகவே) திவ்ய வாஸனை வீசுகிற தேஹம் கொண்டவன். ’ஸுகந்திம்’, ‘கந்த த்வாராம்’ என்றெல்லாம் வேதத்திலேயே தெய்வ மூர்த்திகளைச் சொல்லியிருக்கிறது.


*ஆகாயத்தில் மந்தாகினி என்ற பெயர், பூமியில் பாகீரதி, பாதாளத்தில் போகவதி.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is திருமகளும் தாமரையும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஸம்ஸாரம் நீக்கி ஸதாநந்தம் அருளும் அடி
Next