தனித்து நிற்பது ஆத்மாவே : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

தனியாகத் தானாக அதைப் பிரித்துப் பார்க்கவே முடியாது. ஆகையால் மனஸை ஒருமுகப்படுத்தி தன்னிலேயே நிறுத்துவது என்பது வாஸ்தவத்தில், தனி ஸ்வரூபமே இல்லாத மனஸில் நிறுத்துவதாக இல்லாமல், எந்த வெளி ஸம்பந்தமும் இல்லாமல், இந்த மனஸின் ஸம்பந்தமும் கூட இல்லாமல் தன்னில் தானேயாய் நிறைந்திருக்கும் நிஜ நாமான ஆத்மாவில் நிற்பதுதான். மனோதீதமான ஆத்மாவை மனஸால் அநுபவிக்க முடியாது. ஆத்மாவை ஆத்மாவாலேயேதான், ஆத்மா ஒன்றால் மட்டுமேதான், அநுபவிக்க முடியும். மனஸின் ஸ்வபாவமும் ஆத்மாவின் ஸ்வபாவமும் ஒன்றுக்கொன்று முழுக்க ஆப்போஸிட்டாக இருக்கிறது. மனஸுக்குத் தன்னைத் தெரியாது; தனக்கு வேறான வஸ்துக்கள்தான் அதற்குத் தெரியும். ஆத்மா தன்னை மட்டுமே தெரிந்துகொண்டிருப்பது; வேறு வஸ்துக்களே அதற்குத் தெரியாது. மனஸ் த்வைதம்; ஆத்மா அத்வைதம்.

ஆனாலும் ஆத்மா இல்லாமல் மனஸ் இல்லை. ஆத்மாவே ஒருத்தனின் நிஜ ஸவ்ரூபமான ‘தான்’ என்றால், அந்தத் ‘தானை’ ஆச்ரயிக்காமல் ஜீவனிடம் எதுவாவது இருக்க முடியுமா என்ன? தானே இல்லாத ஒருத்தனிடம் மனஸ் என்று ஒன்று எப்படியிருக்க முடியும்? ஆத்மாதான் மாயையால் மனஸாகியிருக்கிறது. அதாவது, மனஸையே ‘தான்’ என்று நினைக்கிற ஜீவனாக ஆகியிருக்கிறது என்று அத்வைத சாஸ்த்ரம் சொல்கிறது. இப்படி அநேக ஜீவர்களாகவும் ஒரே ஆத்மாதான் ஆகியிருக்கிறது என்று சொல்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is மனஸ் தனிப்பட்டு இராது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மின்ஸார உபமானம்
Next