“பால சந்த்ரன்” : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

‘பனிஷ்மென்டை’ இவ்வளவு ‘கன்டோன்’ பண்ணினது (குறைத்தது) போதாதென்று, மிகவும் அருள் நெஞ்சோடு சந்த்ரனுக்குச் சில ‘ப்ரிவிலேஜ்’களும் கொடுத்தார். பெரிய ‘ப்ரிவிலேஜ்’ என்னவென்றால் பிறைச் சந்திரனைத் தூக்கிப் பிள்ளையார் தம் கிரீடத்திலேயே சூட்டிக்கொண்டதுதான்!

பரமேச்வரனைப் போலவே, அம்பாள் விக்நேச்வரர் ஆகிய இரண்டு பேருக்கும் தலையில் சந்த்ரகலை உண்டு.

இதனால் பிள்ளையாருக்கு “பாலசந்த்ரன்” என்றே ஒரு பெயரிருக்கிறது. அவருடைய ஷோடச நாமாக்களிலேயே* இது ஒரு பெயர். Baala-Chandran, அதாவது ‘குழந்தை சந்த்ரன்’ என்று ரொம்பப் பேர் இதைத் தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். Baa இல்லை. அது தப்பு Bhaa என்பதே ஸரி. pa, pha, ba, bha என்று ஸம்ஸ்க்ருதத்தில் நாலு இருப்பதில் நாலாவதான bha – காரம் போட்டு Bhaala – Chandran என்று சொல்ல வேண்டும். Bhaalam என்றால் நெற்றி அல்லது முன்தலை. முன்னந்தலையில் எவர் சந்த்ரனை தரித்துக் கொண்டிருக்கிறாரோ அவர் Bhaalachandran. அல்லது இரண்டாவது ‘ப’-வாக Phaala என்று சொல்லாம். அப்படிச் சொன்னால் கேசத்தில் இரண்டு பக்கங்களில் ஒன்று. ஈச்வரன் ஜடாபாரத்தில் நேராகச் சந்த்ரனை வைத்துக் கொள்ளாமல் இடது பக்கமாகச் சாய்த்து வைத்துக் கொண்டிருப்பதாக அநேக சில்ப சித்ரங்களில் பார்க்கிறோமல்லவா? அங்கே பரமசிவன் Phaala Chandran-னாகவே இருக்கிறார். ஆனால் பாலசந்த்ரன் என்ற பேர் முக்யமாகப் பிள்ளையாருடையதுதான்.

ஏனென்றால் பரமேச்வரன் சந்த்ரன் பண்ணின தப்பை க்ஷமித்தது பெரிசில்லை. சந்த்ரன் ஈச்வரனிடமே நேராகத் தப்புப் பண்ணவில்லை. பத்னிகளுக்குத்தான் தப்புப் பண்ணினான். அவர் தண்டித்தார். அவன் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். அவரும் மன்னித்துவிட்டார்.

பிள்ளையாரிடமோ சந்த்ரன் நேராகவே அபசாரப்பட்டு விட்டான். அவரையே தான் அவன் பரிஹாஸம் பண்ணினது. அப்படிப் பண்ணினவனை அவர் க்ஷமித்ததுதான் பெரிசு.

ஒருத்தரை ரொம்பவும் ஸ்தோத்திரித்தால், “என்ன தலைக்கு மேலே தூக்கி வெச்சுண்டு கூத்தாடறே?” என்று கேட்கிற வழக்கமிருக்கிறது. தன்னைப் பரிஹாசம் செய்த சந்த்ரனிடம் பரிவு கொண்ட கணபதி அவனை நிஜமாகவே தூக்கித் தலை மேல் வைத்துக்கொண்டு ஆனந்தமாகக் கூத்தாடினார். ‘ந்ருத்த கணபதி’, ‘கூத்தாடும் பிள்ளையார்’ என்று அவருக்குப் பெயர்.

‘எத்தனை பார்த்தாலும் தெவிட்டாதது’ என்ற பெருமை யானை, சந்த்ரன் இரண்டுக்கும் உண்டு. இப்போது இவற்றில் ஒன்று மற்றொன்றின் தலையில் போய் உட்கார்ந்துவிட்டது, பரஸ்பரம் அழகுக்கு அழகு செய்துகொள்கிற மாதிரி!


* முதல் உரையான “பெரிய இடத்துப் பிள்ளை”யில் கடைசிப் பகுதியான “முருகனும் மூத்தோனும்” பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is சாப விமோசனம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஸங்கடஹர சதுர்த்தி
Next