‘ஸத்’தான ஆத்மா : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

புத்திக்கும் ஆதாரமான ஆத்மாதான் உச்சி, உசந்தவற்றிலெல்லாம் உசந்தது. அதைத்தான் ‘தத்ஸத்’ என்பதில் ‘தத்’ என்பது.

எது ‘ஸத்’? என்றைக்கும் மாறுதல் என்பதே இல்லாமல் உள்ளபடி இருப்பதுதான்.

உள்ளபடி இருப்பதுதான் உண்மை. அந்த உண்மை, ஸத்யம், (அல்லது ஸத் என்றாலே போதும்) அது ஆத்மாதான்.

‘தத்’ என்றால் ‘அது’. ஆண் பெண் என்று அவனாகவோ, அவளாகவோ இல்லாமல் ‘அது’வாக இருப்பது ஆத்மா.

அந்த “அதை”யேதான் ஈச்வரன் என்று சொல்லும்போது “அவன்” என்கிறோம் – ஆண்பாலில் சொல்கிறோம். ரொம்பவும் அம்பாள் பக்தர்களாக இருப்பவர்கள் வேண்டுமானால் ‘அவள் ஸங்கல்பம் எப்படியோ, அப்படி’ என்று சொல்லலாமே தவிர, பொதுவில் ‘அவன்’ என்பதுதான் வழக்கம். ‘அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது’ என்றே வசனம். ஆழ்வாரும் (நம்மாழ்வாரும் திருவாய்மொழியை) ஆரம்பிக்கும்போதே, ‘உயர்வற உயர்நலமுடையவன் எவன் அவன்’ என்றுதான் சொல்கிறார். இங்கிலீஷிலும் காபிடல் H போட்டு He என்று புருஷனாகச் சொல்வது பரமாத்மாவைத்தான். ஸம்ஸ்க்ருதத்தில் ‘ஸ:’ என்றால் ‘அவன்’. பரமாத்மாவை ‘ஸ:’ என்றே குறிப்பிடுவார்கள். ‘ஸோஹம்’ ‘ஸோஹம்’ என்பதாகப் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே என்று அத்வைத உபாஸனை செய்வதுண்டு. ‘ஸ: அஹம்’ என்பதுதான் ‘ஸோஹம்’ என்றாவது. ‘அஹம்’ என்றால் ‘நான்’ – அதாவது உபாஸகனான ஜீவாத்மா. ‘ஸ:’ என்று இங்கே ‘அவ’னாகக் குறிப்பிடப்படுவதுதான் பரமாத்மா. ‘தத்’ என்று அஃறினையில் சொல்கிற அந்த ஸத்ய வஸ்துவை ஆண்பாலாக ‘ஸ:’ என்றும் குறிப்பிடுவதுண்டு என்பதற்காகச் சொன்னேன். “புருஷ ஸூக்தம்” என்கிறோமே அங்கே ‘புருஷன்’ என்று ஆணாகச் சொல்வது பரமாத்ம வஸ்துவைத்தான். ஸாங்க்ய சாஸ்த்ரத்தில் ஆத்மா என்பதையே ‘புருஷன்’ என்று தான் சொல்லியிருக்கிறது. மாயையை ப்ரக்ருதி என்று அதில் சொல்வார்கள். எதிலும் பட்டுக்கொள்ளாத ஆத்மா புருஷன். அந்த ஆத்மாவிலிருந்தே இந்த ஜகத், ஜீவன், ஜீவனுடைய இந்த்ரியாதிகள் எல்லாவற்றையும் கொண்டு வரும் சக்தியான மாயை அல்லது ப்ரக்ருதி என்பது பெண்பால். (புருஷன், ப்ரக்ருதி என்ற) இந்த இரண்டையுமே தான் சிவம், சக்தி என்று ஆண் பெண்ணாக சொல்வதும்.

க்ருஷ்ண பரமாத்மா புத்திக்கும் மேலான ஆத்மாவை ‘ஸ:’ என்றே “அவ”னாகச் சொல்கிறார், ‘புத்தே: பரதஸ்து ஸ:’ – புத்திக்கும் உசந்தவனாயிருப்பவன் ஆத்மா என்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is இந்த்ரியத்துக்கும் உயர்வுண்டு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  படிப்படியாய் ஆத்ம நிலைக்கு
Next