சாபத்தின் உட்கிடை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

‘ரொம்பவும் அழகாக இருக்கிறோம், ப்ரமாதமாக அலங்காரம் பண்ணிக்கொண்டிருக்கிறோம்’ என்று அஹம்பாவப்படுபவர்களுக்குப் பெரிய ‘பனிஷ்மென்ட்’ அவர்களை யாரும் ஏறெடுத்தும் பார்க்காமல் அலட்சியப்படுத்தும்படி செய்வதுதான். அதனால்தான் பிள்ளையார் இப்படிச் சாபம் கொடுத்தார். சந்திரனுக்கே நேரே ஹானி உண்டாகும்படியாக, “உன் கண் அவியணும்”, “நீ கல்லாகப் போகணும்” என்ற மாதிரிச் சாபம் தராமல் அவனைப் பார்க்கிறவர்களுக்கு அபவாதம் உண்டாகும்படியாகச் சபித்தார். இவர் அவனை சபிக்காவிட்டாலும், அவனைப் பார்த்துவிட்டு அபவாதப்படும் அத்தனைபேரும், “இந்த பாழாய்ப் போகிற சந்திரனை பார்த்துத்தான் நமக்கு இந்தக் கஷ்டம் வந்தது” என்று வயிறெரிந்து சபிப்பார்களல்லவா?

இன்றொன்றுகூடச் சொல்லலாம். ஒருத்தன் எத்தனைதான் குணஹீனனாக இருந்தாலும், அவனுக்கு அழகோ, அதிகாரமோ இருந்துவிட்டால் அவனை மெச்சி ஸலாம் போடும் லோக வழக்கத்தைக் கண்டிக்கவும் பிள்ளையார் இப்படிச் செய்திருக்கலாம்.

ரூபத்தினால் கர்வப்படுபவனுக்குத் தான் ‘இக்னோர்’ செய்யப்படுவதுதான் ஸரியான தண்டனை. குணத்தைப் பார்க்காமல் ஒருத்தனுடைய ரூபத்தை மாத்திரம் பார்த்து ஸ்தோத்ரம் செய்பவர்களுக்கு, அவர்களுடைய குணத்துக்கே தோஷம் கற்பித்து உண்டாக்கும் அபவாதம்தான் ஸரியான தண்டனை.

தன்னை இனிமேல் யாரும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டார்களே என்பதில் அவமானம், தப்பித் தவறிப் பார்த்து விட்டால் அப்புறம் அபவாதத்துக்கு ஆளாகிக் கரித்து கொட்டுவார்களே என்பதில் பயம்-இரண்டும் சேர சந்த்ரன் தான் உதித்த ஸமுத்ரத்துக்குள்ளேயே போய் ஒளிந்து கொண்டுவிட்டான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is சந்திரனின் கர்வ பங்கம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  சாப விமோசனம்
Next