துருக்கர், வெள்ளையர் ஆட்சிகளில் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

வெள்ளைக்காரர் ஆட்சிக்கு முன் நடைபெற்ற துருக்கர் ஆட்சி ஸமாசாரம் என்னவென்றால் : முகாலயர்களும், மற்ற அநேக ஸுல்தான்களும் அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களுடைய மதத்தில் நிரம்பப் பற்றுக் கொண்டிருந்தவர்கள். நம்மைப் போலவே அவர்களுக்கும் சட்டப் புஸ்தகமே மத ப்ரமாணமுள்ளதுதான். ஷாரியத் என்று அதற்குப் பேர். அதன்படிதான் அவர்கள் தீர்ப்புப் பண்ணியது. ஆனாலும் அது நம்முடைய தர்மசாஸ்த்ர ஸம்பந்தமில்லாதது. நம்முடைய தர்ம ஆசரணைகளையும் அநுஷ்டானங்களையும் முடிந்த மட்டும் அழிப்பதுதான் அவர்களுடைய எண்ணமாயிருந்ததால் பெரும்பாலான ஹிந்து ஸமூஹத்தைப் பொறுத்தமட்டில் ராஜாங்க நிர்வாஹம் அவைதிகமாகத்தான் நடந்தது.

இதைச் சொல்லும்போதே இன்னும் இரண்டு விஷயங்களைச் சொல்லவேண்டும். வேத விரோதமான முறை ரொம்பவும் காரமாகப் போய்விடாமல் இரண்டு ஸ்பூன் நெய்விட்டது போன்ற இரண்டு விஷயங்கள், ஒன்று – பலாத்கார மதமாற்றம் நடக்கத்தான் செய்தது என்றாலும், மதம் மாறாமல் இருந்த ஹிந்து ஸமூஹமானது பெரும்பாலான பிரச்னைகளைத் தங்கள் ஜாதி நாட்டாண்மைகளின் மூலமே தீர்த்துக்கொள்ளும்படி அப்போதும் விட்டிருந்தார்கள். இந்த அளவுக்கு நம்முடைய பூர்விகர்களின் முறையே தொடர்ந்து அநுஸரிக்கப்பட்டது. அக் காலங்களில் அந்தந்த ஸமூஹ நாட்டாண்மையே அந்தந்த ஜனங்களின் பிரச்னைகளையும் வழக்குகளையும் விசாரித்து முடிவுகள் எடுப்பதுதான் அதிகம். ராஜ ஸமூஹத்தின் விசாரணைக்கும் ராஜாங்க நீதிஸ்தலங்களுக்கும் போன கேஸ்கள் குறைச்சல். இந்த நாட்டாண்மை எடுபடாமல் பழையபடி நடந்தவரைக்கும் அந்த அளவுக்கு தர்மசாஸ்த்ர விதிகளில் ராஜாங்கச் சட்ட திட்டங்களின் குறுக்கீடு குறைக்கப்பட்டிருந்தது. இன்னொன்று – விக்ரஹங்களை உடைப்பது, கோவிலை அழிப்பது என்றெல்லாம் அவர்கள் பண்ணினாலும்கூட, ஹிந்து ஸமூஹத்துக்காக சட்டம் போடும்போது பஹிரங்கமாக நம்முடைய சாஸ்த்ரிய வாழ்முறையை பாதிக்கும்படியாகவோ, தர்ம சாஸ்த்ர விதிகளுக்கு விருத்தமாகவோ போட்டதில்லை. பலாத்காரமாகப் பலரைத் தங்கள் மதத்துக்கே மாற்றிக் கொண்டு அப்படி மாறியவர்கள் தங்களுடைய மதக் கொள்கைப்படியே நடக்கவேண்டுமென்று நிர்பந்தித்தாலும், இப்படி மாற்றாமல் விட்டு வைத்திருந்த ஸமூஹம் அதன் தர்மப்படியே நடப்பதை ஆக்ஷேபிக்கவில்லை; அதன் தர்ம விதிகளை அரசாங்கச் சட்டத்தால் மாற்றவுமில்லை. (உதாரணமாக ஹிந்து ஸ்த்ரீகள் விவாஹரத்து செய்துவிட்டு இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ளலாம், ஹிந்து ஸ்த்ரீகளுக்கு ஸொத்தில் பங்கு தரவேண்டும் என்றெல்லாம் அவர்கள் சட்டம் கொண்டுவரவில்லை.)

அவர்களுடைய உள்ளெண்ணம் எதுவாயிருந்தாலும், மிகப் பெரிய மெஜாரிட்டியான ப்ரஜைகளின் அத்ருப்தியையும் விரோதத்தையும் ஸம்பாதித்துக்கொண்டு ஆட்சி நடத்த முடியாது என்பதை உத்தேசித்தாவது அவர்கள் இந்த இரண்டு அம்சங்களை அநுஸரிக்க வேண்டியதாயிருந்தது.

வெள்ளைக்காரர் ஆட்சியிலும் இந்த இரண்டும் தொடர்ந்தது. ஆனால் முன்னாலே இருந்தவர்கள் அடி, பிடி என்று பலாத்காரமாகவே போவது அதிகமாகவும் தந்த்ரமாக ஏமாற்றிச் செய்வது குறைவாகவும் இருந்தது என்றால், இவர்களோ அதைத் திருப்பி வைத்து வெளியிலே பலாத்காரம் அதிகம் தெரியாமலே நயவஞ்சகமாகப் பண்ணி ஹிந்து தர்மத்தை உள்ளூர உளுத்துப்போகச் செய்தார்கள். ஆகையால் விக்டோரியா பிரகடனத்திலிருந்து நேரடியாக மத விஷயங்களில் ப்ரவேசிக்காதது போலத்தான் சட்டங்கள் செய்தார்களென்றாலும், நேர் அடியைவிடப் பலமாக உள்ளே போய்த் தாக்குகிற தந்த்ர அடியாகத் தங்கள் உத்யோகங்களைக் காட்டி, அதற்குத் தேர்ச்சி பெறுவதற்காக ஒரு கல்விமுறையையும் காட்டி, அந்தக் கல்வி முறையால் ஹிந்துக்களே ஹிந்து தர்ம சாஸ்த்ரவிதிகளில் நம்பிக்கை இழந்துவிடும்படியாகப் பண்ணினார்கள். புதிய அரசியல் கொள்கைகள், ஸமூஹக் கொள்கைகள், சரித்ர ஆராய்ச்சி, பாஷை ஆராய்ச்சி, சாஸ்த்ர ஆராய்ச்சி என்றெல்லாம் ரொம்ப ‘இம்பார்ஷிய’லாகச் செய்கிறாற்போலவே பலவற்றைக் கொஞ்சங் கொஞ்சமாக நம்முடைய ஸமூஹ அமைப்பு, சாஸ்த்ராபிமானம் எல்லாம் கலகலத்துக்கொண்டே வரும் படியாகக் ‘கைங்கர்யம்’ பண்ணினார்கள். ஹிந்து என்பவன் இன்னொரு மதத்துக்கு மாறவேண்டுமென்பதில்லை, ஹிந்துவாக இருப்பது போல இருந்துகொண்டே அந்த மத சாஸ்த்ரங்களில் அடியோடு நம்பிக்கையில்லாதவனாக, அடியோடு, அவைதிகமாக ஆகும்படி பண்ணிகாட்ட முடியுமென்று நிரூபித்துவிட்டார்கள். ஜனங்களில் ஒரு பகுதியை நேராக அவர்களுடைய மதத்துக்குள்ளும் இழுத்துக் கொண்டார்கள்.

இதிலே ஒரு வேடிக்கை! அவர்களுடைய தேசங்களில் மதபீடத்துக்கும் ராஜபீடத்துக்கும் ஓயாமல் பலப் பரீக்ஷை நடந்து, முடிவில் இரண்டையும் தனித்தனியாக எல்லை வகுத்துப் பிரித்து, ராஜாங்கச் சட்டமுறையைப் பெரும்பாலும் மத ஸம்பந்தமில்லாததாகத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ரோமன் காதலிக் மதம், லூதரனிஸம் என்கிற மாதிரி ஒன்றை State Religion என்று அநேக ஐரோப்பிய நாடுகளில் வைத்தக்கொண்டிருந்தபோதிலும் இப்படி இருக்கிறது. பிஷப்புகளிலேயே ஒரு பிரிவை இங்க்லாண்டில் ராஜா நியமிப்பது, அவர்களுக்கும் House of Lords -ல் (ப்ரபுக்கள் ஸபையில், நம் தேச ‘மேல் ஸபை’ மாதிரியானதில்) ஸ்தானம் தருவது, ஆர்ச்பிஷப் ஆஃப் காண்டரிபரிதான் ராஜாவுக்கு ‘காரணேஷன்’ (பட்டாபிஷேகம்) பண்ணுவது – என்றெல்லாமிருந்தாலும், நேராக ஸமய விஷயமாயில்லாத ஸமூஹச் சட்டம் எல்லாமே அரசியல் கருத்துக்களின் மேலேயே பண்ணுவதாகத்தான் இருக்கிறது. ஷாரியத் மாதிரி கிறிஸ்துவ மதச் சட்ட புஸ்தகம் என்ற ஒன்று எப்போதுமே இருந்ததில்லை. கிறிஸ்துவுக்கு முன்னாலிருந்த ஹீப்ருக்களுக்கு நம் தர்ம சாஸ்த்ரங்களைப் போலவும் ஷாரியத் போலவும் மத ப்ரமாணமுள்ள சட்டமுறை இருந்தாலும் பிற்பாடு ஹீப்ரு ஸமூஹமானது கிறிஸ்துவம், யூத மதம் என்று உடைந்தபோது கிறிஸ்து தம்மை அநுஸரிப்பவர்களுக்கு அநேக ஒழுக்கங்களையும், வாழ்முறை நியமங்களையும் உபதேசித்தாரென்றாலும், சட்ட சாஸ்த்ரம் என்று சொல்லுமூபடியாக codify செய்து ஒன்றும் கொடுக்கவில்லை. அதனால் அப்புறம் போப்புகளுக்கும் ராஜாங்கங்களுக்கும் நித்ய யுத்தமாக இருந்து, முடிவில் மத பீடம் ராஜாங்க பீடம் இரண்டும் தனித்தனி அமைப்புக்களாக ஆகி, ராஜாங்கங்களால் ‘ஜூரிஸ்ப்ரூடன்ஸ்’ (நீதி சாஸ்த்ரம்) ஏற்படுத்தப்பட்டபோது அவற்றில் மத ப்ரமாணத்துக்கு அதிகமாக இடமே இல்லாமல் ‘ஸெக்யுலர்’ என்று சொல்லும்படிதான் அமைந்தது. ஸயன்ஸும் இந்த ஐரோப்பிய நாடுகளில்தான் தோன்றி அபிவ்ருத்தி கண்டது. அதிலே கண்ட உண்மைகள் அவர்களுடைய மதக் கொள்கைகளுக்கு ரொம்பவும் வித்யாஸமாகயிருந்தவனவாதலால் அவர்களுக்கு மதாபிமானம், மதாநுஷ்டானம் ஆகியன துருக்கர்களோடு ஒப்பிட்டுப்பார்க்கும்போது ரொம்பக் குறைவாக ஆயின.

நான் வேடிக்கை என்று சொல்ல வந்தது எதையென்றால், இப்படி அவர்களே ஸ்வமத அபிமானம் குன்றி, ஸயன்ஸிலும் நாகரிக இந்த்ரிய ஸுகத்திலும் அதிகமாக விழுந்த போதிலும்கூட, ‘நம்முடைய ஆட்சிக்குக் கீழே வந்துவிட்ட இந்த இந்தியா தேசத்துக்கு இப்படி மஹோந்நதமாக ஹிந்துமதம் என்று ஒன்று இருப்பதா?’ என்று மட்டும் கருந்திருக்கிறது! அதனால் இங்கே அவர்களுடைய மதத்தை வேர் பிடிக்கப் பண்ணவும், நம்முடைய மதத்தின் வேரை அரிக்கப் பண்ணவும் என்னவெல்லாம் தந்த்ரமாகச் செய்யலாமோ அத்தனையும் செய்தார்கள். இருந்தாலும் சட்டம் என்று செய்யும் போது நம்முடைய மத சாஸ்த்ர விதிகளை நேராக பாதிக்கும்படியாத் துணிந்து எதுவும் செய்யாமலேதான் இருந்தார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is உறவினர் உதவாது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  'ஸொந்த' ஸர்க்காரின் அத்துமீறல்!
Next